Saturday, December 24, 2011

வியாபார உலகம்... உலக வியாபாரம்.

முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக எல்லைகளில் மக்கள் குழுமுதலும் குமுறுதலும் ஒரு பக்கம் நடந்தவாறிருக்க தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் கேரளீயர்களின் நிறுவனங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. இப்படித் தாக்கப் படுவதில் பிரச்சினை சார்ந்த உணர்ச்சி வசப்படுதல் தவிர்த்து பூர்வாங்க உளவியலும் இருக்கிறது.

எங்கிருந்தோ வந்து கண்ணாடி டெகரேட் பண்ணி கல்லாப் போட்டு உக்காந்துருக்காம் பாரு.... என்கிற தரத்திலானது அது. ( மதவெறி/ மொழி வெறி/இனவெறி/ உள்ளூர் வெறிகள் தனி - வல்லம் தாஜூபால்)

தொலைக்காட்சியில் முத்தூட் நிறுவனத்தாரின் கடைகளில் கண்ணாடிகள் உடைக்கப்படுவதை சிலநேரம் பார்த்தேன். நல்லவேளையாக ஊழியர்கள் தாக்கப்படாமல் இருந்தார்கள்: மகிழ்ச்சி.

கலவரத்தைக் காரணம் காட்டி கடையை மூடிவிட்டுப் போய்விட்டார்களேயானால் பெட்டகத்துக்குள் இருக்கும் தங்கங்கள், அவற்றை அடகு வைத்தவர்கள் கதி என்ன? என ஒரு வினாடி திக்கென்று இருந்தது.

கடைகளில் அடகு வைத்தவர்கள் இரிஞ்ஞாலக்குடாவிலிருந்தோ பந்தனம் திட்டாவிலிருந்தோ வந்து வைக்கவில்லை. தமிழர்களுக்குச் சொந்தமான ஆபரணங்கள்.

இத்தகைய செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பெரியபெரிய நகைக்கடைகளின் நிலவரம் பற்றி அறிவதற்கு ஆவல் மேலிட்டு நண்பர் ஒருவருக்கு போன்செய்தேன். என்ன இருந்தாலும் கிராமத்தில் இருந்த பொற்கொல்லர்கள் அவ்வளவு பேரையும் இருந்தஇடம் தெரியாமல் ஆக்கிய மாபெரும் புரட்சியாளர்கள் அல்லவா அவர்கள்?

‘பெரிய கடைகள் எல்லாம் நல்லா பாதுகாப்போட நடக்குது’ - என்றார் நண்பர்.

 ‘’நிறைய போலீசா?”

‘’ஆமா நெறைய போலீஸ்’’

‘’ஆக கடை ஊழியர்களுக்கும் நகைகளுக்கும் ஆபத்தில்லை...’’

‘’ நீங்க வேற சலம்பல் பண்ணினா அங்க இருக்கற செக்யூரிட்டிக பொதுமக்களைப் போட்டெறிஞ்சிருவானுங்க... போலீஸ் பாதுகாப்பு பொதுமக்களுக்குத்தான்.’’

Saturday, December 3, 2011

ஹ்

பரணில் கட்டித் தொங்கவிடப்பட்ட
பலூன் புலியின் வயிற்றிலிருந்து
புலியின் கண்ணுக்குப் பாய்கிறது
டியூப்லைட் அம்பின் பிம்பம் இந்த
மின்சார விழிப்பிரவில்.
(மின் விசிறி ஓடுகிறது).

ஒருவேளை குழந்தைகளின் கண்ணுக்கு
மட்டுமே காணக் கிடைப்பதாயிருக்கலாம்
இக் காட்சி.

எப்போது என்ன செய்வார்கள் எனத்
தெரியாதென்பது
பெற்றோர்களைக் குழந்தைகளுக்கும்,
என்ன செய்தாலும்  முகமாறுதல்
இல்லையென்பது குழந்தைகளுக்குப்
பொம்மைகளையும்
அன்பாக்கி வைத்திருக்கிறது.

Tuesday, November 8, 2011

நிலா நாற்பது -20

வானில் உழுது தேயும்
வட்டக் கலப்பை.
விண்
மீனில் பெற்று மீளும்
விட்ட இழப்பை.

Sunday, November 6, 2011

ஈத் முபாரக்!

பெங்களூரில் இருந்தவாறு பக்ரீத் கொண்டாட்டம். கடந்த ரெண்டுமூணு நாட்களாகவே விதவிதமாகக் கொழுத்த ஆடுகள் காட்சிக்குக் கிடைக்கின்றன. சாலையோரங்களில் புதிதாகப் புல் விற்போர். ஆடுகளைக் கையில் பிடித்தபடி முசல் மான்கள்.

சிலபோது ஆடுகளைக் கயிற்றால் பிடித்தபடி அஞ்சுவயசுப் பிஞ்சுக் குழந்தைகள் நிற்பது அற்புதமான காட்சி. இன்று மழை வெறித்திருக்கிறது: வெய்யில்.

கிராமத்தி்னை நினைவிற்கொண்டுவருமாறு ஆடுகளின் நடமாட்டம் நாளையிலிருந்து கம்மியாகிவிடும். பால் வெள்ளை ஷெர்வானிகளுடன் தலைத் தொப்பிகளுடனும் அத்தர் வாசத்துடன் எம் தெருவைக் கடந்து ஆண்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

அறுநூறு மீட்டர் தொலைவிலாக அடுத்த தெருவில் மசூதி.
இதோ இதோ ஒலிக்குது கேளிர்...
அல்லாஹு அக்பரல்லா....

பக்ரீத் வாழ்த்துக்கள்!

Tuesday, October 4, 2011

சூர்ப்பணங்கு - பெங்களூரில் 6.10.2011

ச. முருக பூபதியின் சூர்ப்பணங்கு என்னும் அரங்க நிகழ்வு 06.10.2011 (வியாழக் கிழமை) மாலை ஆறு மணியளவில் பெங்களூரு டவுன்ஹால் அருகில் உள்ள ‘ரவீந்திர கால க்ஷேத்ரா’வில் நடைபெற உள்ளது.

முருகபூபதியின் வனத்தாதி உள்ளிட்ட முந்தைய ஆக்கங்களைப் பார்த்துள்ளேன். வித்யாசமான அனுபவங்களைத் தரக்கூடியது அவரது நாடகங்கள். தொன்மங்களும் சமகால அல்லது காலகால விஷயங்கள் மயமயப்பான ஒலி நடை முன்புலத்தில் நடைபெறக்கூடியது. சூர்ப்பணங்கினை நானும் பார்க்காததால் ஆவலுடன் இருக்கிறேன் இந்த நிகழ்ச்சிக்காக. நாடகம் பார்த்துவிட்டுத்தான் எழுதவேண்டும்.

பெங்களூர் வாழ்வோரும் அல்லது பெங்களூரை பயண தூரத்தில் எட்டுவதற்கு சாத்தியம் உள்ளவர்களும் கண்டு துய்க்கலாம். கூடுதல் விவரங்கள் அறிய எனது அலைபேசி எண் ; 08050444267.

Saturday, October 1, 2011

இருட்டைச் சூழச் செய்யுதல்

தன் பிரவாகத்திலேயே
ஆதியின் கூற்றில் இருள்
இருந்தது.
படர்ந்தது கனியின் ஒளி
இருப்பிடமறியாத் தேடலினூடே
உயர் துயர் உயிர் தவித்துக்
கண்டடைந்தது நெருப்பினை.
பொருப்பிலும் இருப்பிலும்
தானிருந்த ஒன்றை
கடைந்துரசும் கடுமுயல்வில்
நிலைத்த அது குமிழிற் சேகரமானது.
குமிழிலும் குழலிலும் சேகரமான அதை
மூலத்தின் விருப்ப வேர் தேடி
அணைக்க விரும்புகிறது
அதி ஆதி மனம்.
எதை எதைக் கொண்டு
ஒளியை அணைய.... என
இருட்டில் தவிக்கிறது
இன்றைய மனம்.

Tuesday, September 20, 2011

நிலா நாற்பது - 19

போகிறதா....
வருகிறதா....
அப்படியே போகிறதா...
நிலவே! நிலாவே! நில்லாவே!

Saturday, September 17, 2011

உள் ஆட்சி

இதுகாறும் நடைபெற்றிராத அளவில் இம்முறை தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில்  சுவாரசியமும் ஜனத் தன்மையும் கொப்பளிக்க இருக்கிறது. ‘ டெரிட்டோரியல்’ என்கிற ஆங்கிலப் பதத்திற்கு, ‘தற் புல வரைவு’ என்கிற அளவிற்கு பெயர்ப்பியல் ரீதியாக நெருங்கி வந்துவிட்டேன். இந்தத் தேர்தல் முடிவதற்குள் ஆகச் சரியான - நிகர்த்த சொல் நானல்லாவிட்டாலும்  நண்பர்கள் மூலமாகக் கிடைத்துவிடும் என நம்புகிறேன். (உணர்ச்சிக்கான உரிமையான சொல்லோடு இன்னும் நெருங்கிப் பயணிக்க வேண்டும்.)

தி.மு.க காங்கிரசைக் கழட்டிவிட்டுவிட்டது.(தற்போதைய கைதுகளை மிசா போல உணர்கிறேன் என்றோ அல்லது ஸ்பெக்ட்ரம் அரசியல் ரீதியானது என்று சொல்கிற கணங்களில் - நீ எதிரியா நண்பனா ? ’என்கிற தொனி தவிர்க்க இயலாதது). ஆக காங்கிரஸ் கழலாமலேயே கழன்று கொண்டுவிட்டது.

காங். தனித்துப் போட்டி.

ம.தி.மு.க தனித்துப்போட்டி. -

 ம.தி.மு.க கடைசியாக நடந்த தேர்தலைப் புறக்கணித்ததை  ஒட்டி இது கட்சியா இயக்கமா என்கிற கேள்வியை அனைவருக்கும் விளைத்து விட்டது. அது கட்சிதான் என்பதை வை.கோ நிரூபித்திருக்கிறார்.( தமிழ் நாட்டின் நுண்மைக் கணக்கில்- எனது யூகக் கணக்குக் கூட்டலில்  இது இரண்டு அல்லது இரண்டரை சதவீத இடங்களைக் கைப்பற்றக்கூடும்).

எதிர்க் கட்சியான தே.மு.தி.க தனித்துப் போட்டியிடுகிற சூழலை அ.தி.மு.க ஏற்படுத்தி வருகிறது.. சமச்சீருக்கு வாய்ப்பில்லை. (சமச்சீர்  பம்மாத்தினைஆதரித்து ஒரு சாத்வீகக் குரலும் எழுப்பாது  வாளாவிருந்த அக்கட்சி இப்போது என்ன செய்யப்போகிறது என்பது சோழி உருட்டல்களின் போது தெரிய வரும்)..

தே.மு.தி.க  தனித்துப் போட்டியிடுவது தன்னளவிலான பரிசீலனாச் செயற்பாடுகளுக்கு - வருங்கால வளமை அல்லது வறுமையைக் கண்டடைய அக்கட்சிக்கு உபயோகப் படக்கூடும்..

இரண்டு ‘கழகக்’ கட்சிகளுடன் உறவு வைத்ததற்காக மன்னிப்புக் கோரிய பா.ம.க தனி.

 வலதும் இடதும் தனித்தனி. (கம்யூனிஸ்ட் கட்சியில் மெம்மராவதை விடச் சுலபம் வார்டு மெம்பராவது)

புலிகள். ,சலங்கைகள், புதிய தமிழகங்கள் - ஒதுக்கீடுகள்.....


(தமிழக மேயர் வேட்பாளர் பட்டியலில் அ.தி.மு.க சார்பில் விழுக்காட்டு ரீதியில் அதிக பெண்களைப் பார்த்தது பெருமிதமாக இருந்தது)

இந்தத் தேர்தல் அதி நிச்சயமாகவும் சிறப்பாகத்தான் இருக்கும் போல இருக்கிறது பல கட்சிகளுக்கு தம்மை உணரும் வாய்ப்பு.

மக்களுக்கு இன்னும் அதிக உரிமையியல் வாய்ப்பு.

குறிப்பாக அகில இந்தியக் கட்சிகளான காங்கிரஸ்,  பி.ஜே.பி, பகுஜன் சமாஜ் பார்ட்டி. ஜனதா, ஜனதா தளம்.... நான்... நீ... உங்க அப்பா... எங்க அப்பா...

தாள முடியாவிட்டாலும் இது அவசியம்தான்.

துண்டாடத் தெரிவது கூட துண்டாகத் தெரிந்தால்தான் இருப்பின் கதி.

Saturday, September 3, 2011

நிலா நாற்பது -18

உழைப்பும் களைப்பும்
உள் அழைப்பும்
பிற்றைப் பிறை தோணுதற்
தோன்றுதல்... விதியுமல்ல
நியதியுமல்ல இருப்பெனக் காட்டுதல்
எந்த சஷ்டி கவசம்?

Thursday, August 25, 2011

நேரில் கோர முடியாத மன்னிப்பு...

அன்பினால் விளைகிற அபத்தங்கள் மற்றும் தீங்குகள்  எனக்குப் புதியதல்ல. என்றாலும் புதிதாக ஒன்று விளைகிற போதும் நேர்கிற போதும் அது புதிதேதான்.

இது அசந்தர்ப்பமாக நேர்ந்துவிட்ட (நான்கைந்து பதிவுகளுக்கு முந்தைய) ‘நேரில் பார்த்திராத கனவன்’  பதிவு பற்றிய நனவு நிலை விளக்கங்களும்... பின்னூட்டங்கள் (கண்டனங்கள்) ஆகியனவற்றுக்கான பதிலுமாகும்.

அந்தப் பதிவுக்காக சுரேகா அவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். அய்யா நெல்லைக் கண்ணன் அவர்கள் இதைப் படிக்கும்போது மேலும் சிலதை என் தரப்பில் சொல்லுதல் தகும் என்றே மேற்செல்கிறேன்.

அவரது பேச்சுக்காக காத தூரங்கள் பேருந்திலும் பைக்கிலும் பயணித்து பேச்சைக் கேட்கிற ரசிகன் நான். (தமிழ்ப் பேச்சாளர்கள் பற்றிய முந்தைய பதிவு ஒன்றில்... கடையிலே பொருளில்லை கஜானாவுக்காக அடித்துக்கொள்கிறார்கள் என காங்கிரசில் இருந்துகொண்டே காங்கிரசைக் கடிந்துகொண்டதைக் குறிப்பிட்டிருக்கிறேன்).

தவிரவும் அவரது சமகாலப் பிரக்ஞையும் பழைய கால ஞாபகங்களும் சம எடை வைத்த தராசுத்தட்டுகள். (தேர்தல் அறிக்கையை கதாநாயகி என கருணாநிதி வர்ணித்த காலத்தில் - கலைஞரின்து மேடைப் பண்பாடு பற்றிய விளாசல் ஒரு நல்ல உதாரணம். எனக்கு தினமலரில் படித்ததாக ஞாபகம்).

எனது பிசகு என்னவென்றால், எனது வலைப்பக்கத்தைப் படிக்கும் சம காலத்தவர் அவர் என்பதை மறந்துவிட்டேன். நிச்சயமாக இதை அவர் படிக்கப் போவதில்லை என்பதாகத்தான்  என் நம்பகமும் புரிதலுமிருந்தது.

இது நிற்க,,, பதிவிடும் நாளுக்கு முன்னதாக நெல்லையிலிருந்து எழுத்தாளர் கணபதி அவர்கள் காலமானதைக் கேள்விப்பட்டிருந்தேன். துஷ்டியில் கலந்துகொள்ள முடியாத வருத்தமும் இருந்தது. ஒரு ஒளிவு மறைவு வேண்டாமே என இப்போது அதைக் குறிப்பிடுகிறேன்.

பதிவில் அதைக் குறிப்பிடாத நான் ஒரு கனவினை அப்படியே எழுதியிருக்க வேண்டியதில்லை. குறிப்பாக ஜீவியவந்தராக ஒருவர் இருக்கையில் அவரது மகனைப் பற்றி அவ்விதமாக எழுதினால்... படிக்கும் தந்தையின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை உணரத்தவறிவிட்டேன்.

பதிவின் கனவில் அல்லது கனவின் பதிவில் ‘கண்ணன் அவர்கள்’ வருந்துகிற விதமான  தோற்றத்தில்  சுரேஷ் இல்லை. மரத்தில் கிடந்த சால்வையை எனக்கு முன்னமே எடுக்கிற துடிப்புடன் இருந்தார். அப்புறமும் ‘மகா பாரதத்தைப் பற்றிப் பேச ஆட்கள் அழைத்தபோதும்’ அந்த ஆள் மாதிரியே கொண்டுபோய்யா என்றதும்  அசல் நெல்லைக் குசும்புதான்.

காட்சி முடிவதற்கு முன்னாக என்னோடு சுரேஷ் தேநீர் அருந்திக்கொண்டு நலமாகத்தான் இருந்தார். நலமாகத்தான் இருப்பார். சுகாவைக் கனவில் பார்த்தபோதும் கண்ணனை நான் நினைத்தது ‘வார்த்தை’கள் படித்த ஆதிநாளில் கண்ணனின் மகன் சுகா எனக்கேட்டதும் ஏற்பட்ட புளகாங்கிதத்தின் மிச்சம்.

கனவில் ராஜேந்திர சோழனைப் பார்த்திருந்தாலும் ராஜராஜ சோழனை நினைத்துத்தான் இருப்பேன். தர்க்கங்களற்ற கனவில் சிலவேளை தர்க்கம் ஒளி(ர்)கிறது.

மதிப்பிற்குரிய அய்யா கண்ணன் அவர்களே! நீங்களும் சுகாவும் எனது பல மணி நேரங்களை இன்பமாக்கி அருளியிருக்கிறீர்கள்.

இனியும் ஒரு சுகமான நினைவுகளுடன் கனவில் வர தமிழ்த்தாய் அருளுவாள். அதை எழுதாமலிருக்க வாழ்க்கையும் இருப்பும் போதித்திருக்கிறது. இந்தப் பதிவிற்கு நீங்கள் பதிலிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் இது பற்றி எழுத நேரிடினும் அதன் பெயரும் அனு பந்தம் என்றே இருக்கும்.

கொஞ்சம் தமிழாலும் நிறைய நரம்புத் தளர்ச்சியாலும் இது விளைந்துவிட்டது. 

Sunday, August 21, 2011

உண்ணா ஹசாரே

அன்னா மீண்டும் உண்ணா விரதத்தைத் தொடங்கிவிட்டார். ராம் லீலா மைதானத்தில். ஆர்வ வழிப்பட்ட ஆதுரங்கள் அவர் மீது மலரெனத் தூவப்பட்டுவிட்டன.

தியாகியை அடைப்பதற்கென்று தனி ஜெயில்கள் உருவாக்க முடியாது என்கிற எளிய உண்மையைக் கூட மனம் ஏற்றுக்கொள்ளாமல் ‘இவரைப் போய் திகாரில் அடைப்பதா?’ என்கிற கேள்விகள் எல்லாம் எழுந்தாயிற்று. சிறையில் புனிதர்களும் குற்றவாளிகளும் மனிதர்களும் (சமயங்களில் குற்றமற்றவர்களும்) அடைபடுவதால்தான் சிறை இந்த அமைப்பின் தவிர்க்க இயலாத அம்சம் ஆகிறது.

ஆட்சியில் இருந்த காலத்தில் லோக்பாலை அமல் படுத்தாதவர்கள் எல்லாம் இன்று அன்னாவுக்குக் குரல் கொடுக்கிறார்கள். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் சட்டம் போலவே இதிலும் வெகுபேர் விரும்பாத நுண் அமைவுகள் பலது இருக்கக் கூடுமெனக் கருதுகிறேன். வெகுபேர் என்பதை அரசியலாளர்கள் மற்றும் மக்கள் என இருதரப்பிலுமாகக் குறிப்பிடுகிறேன்.

அன்னா கேட்டது போலவே கொடுத்துவிட்டு அதை எண்ணி எண்பத்தியிரெண்டு மணித்தியாலத்துள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள அரசியலாளருக்கு இயலாததல்ல.

ஆகவே அதனினும் கடந்து அன்னாவின் கோரிக்கைகளில் எதேனும் வலிமை இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

மன் மோகன் மவுன மோகனாக இருந்தாலும் அவ்வப்போது பெரும் கருத்துகளைச் சொல்கிறார். அறப்போர்களின் காலம் முடிவுற்றுவிட்டது என்பது போன்ற செய்திதான் சமீபத்தில் அவர் தந்தது.கொரிக்கை நிமித்தமான  பட்டினி இறப்புகள் என்னமாதிரியான ஆவேசம் அல்லது விளைச்சலைத் தோற்றுவிக்கும் என கற்பனை செய்யுமளவு எனக்கு மனத் திராணி இல்லை.

நாடெங்கிலும் பந்தலிட்டுப் பட்டினியில் அமர்ந்திருக்கிற அன்னாரின் சக போராளிகள் யாரேனும் இறந்துவிடக்கூடாது என்பதே விருப்பமாயிருக்கிறது.

Thursday, August 4, 2011

சதா இக்கட்டிலிருந்து சதானந்தத்துக்கு...

இன்று முதல் கர்நாடகத்தில் புதிய முதலமைச்சரின் கண்பார்வையில் வாழப்போகிறேன். சதானந்த கவுடா பி.ஜே.பிக்காரர்களால் ஏகமனதாக அல்லாமல் ஒரு வழியாகத் தேர்வு பெற்றிருக்கிறார்.

அரியணை ஏறிய நாள் முதலாக அல்லலுற்றும் இக்கட்டுகளின் பாற்பட்டும் ஆட்சி நடத்திவந்த எடியூரப்பாவுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. அவர் விரும்பாத விடுதலை. அண்டை மாநிலமான தமிழ் நாட்டின் ஜெயலலிதா போல ஆறு மாதத்தில் மீண்டும் தானே முடி சூடும் கனவும் எடியூரப்பாவுக்கு இருக்கிறது. அது முச்சூடும் பலிக்குமா எனத் தெரியவில்லை.

தென்னகத்தில் முதன்முதலாக அமைந்த பி.ஜே.பி ஆட்சியை இப்படி அவர் ஆக்கிவைத்தது அந்தக் கட்சிக்கு பாதகம்தான். கர்நாடக முதலமைச்சர் பட்டியலில் ரெட்டி,ஜாட்டி, மொய்லி,பட்டீல்,ராவ்.சிங்.ஹெக்டே,கவுடா, அப்பா.அய்யா,சாமி.... என வினோதம் பலவுண்டு.இப்போது சதானந்த கவுடா. குமாரசாமி கவுடரின் சத்தத்தை இந்த ஏற்பாடு குறைக்குமா எனத் தெரியவில்லை.

மிகச் சிலர் எதிர்பார்த்தது போல சோபா முதலமைச்சர் ஆகவில்லை. அல்லது ஆகமுடியவில்லை. தென்னகத்தார் ஒரு பெண்ணின் தலைமைய அவ்வளவு எளிதில் ஏற்பார்களா தெரியவில்லை. விடுதலைக்குப் பின் அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. அனேகமாக விடுதலைப் பாரதத் தென்னகத்தின் முதல் நூற்றாண்டின் ஏக பெண் முதல்வர் ஜெயலலிதா மட்டுமேயாக அமைந்துவிடுதல் கூடும்.

அனேக வருத்தங்களில் ஒன்றான இதை பிரத்யேக வருத்தம் எனக் கூறமுடியுமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

Wednesday, July 27, 2011

ரவிச் சந்திரன்

நடிகர் ரவிச் சந்திரன் முதுமை மற்றும் நோய்கள் காரணமாக மரணமடைந்திருக்கிறார். சென்ற தலைமுறையினரை தனது செல்வாக்காலும் - ஸ்டைலாலும் ஓரளவு பாதித்தவர் என்றால் அது மிகையில்லை. ரவிச் சந்திரனுக்கு அழகான கண்கள். அதனால்தானோ என்னவோ அதே கண்கள் மற்றும் ஊமை விழிகள் என அவருக்குப் பேர் சொல்லும்படி அமைந்துவிட்டன.

ரவிச்சந்திரன் அறிமுகமானது ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில். ‘விஸ்வநாதன் வேலை வேணும்’ என அவர் போட்ட கெட்ட ஆட்டம் மறக்கமுடியாதது. புகழுச்சிக்குப் பின் கிணற்றில் போட்ட கல்லாக அவரது மௌனம் திரை வாழ்வில் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது. எனினும் தனித்துவமான நடிகர்தான் அவர்.

அவர் சினிமாவில் தேர்வு பெற்றது பற்றி சுவாரசியமான செய்தி ஒன்று உண்டு. எவ்வளவு தூரம் அது மெய் எனத் தெரியவில்லை. அதாவது முதலாம் சந்திப்பில் ’நீங்கள் தேர்வு பெறவில்லை’ என ஸ்ரீதர் சொன்னதும் ‘’அப்படியா’’ என்று கேட்டுவிட்டு சாவதானமாக சிகரெட் பற்ற வைத்திருக்கிறார். அதுதான் டீலிங் முடிஞ்சு போச்சே இனி என்ன மரியாதைகள் வேண்டிக்கிடக்கு என்கிற தொனியில் அவர் சிகரெட் பற்ற வைத்த விதம் ஸ்ரீதருக்கு பிடித்துப்போக அந்தக் கணமே ஒப்பந்தமானார் ரவிச்சந்திரன். ஒருவேளை பொய்யாக இருந்தாலும் இந்தச் செய்தியை அமரர்களான ஸ்ரீதர் மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் ரசிக்கக் கூடும்.

மிக நீண்ட தசாப்தங்களில் ரஜினிகாந்த்தின் தந்தை  வேடத்தில் ரவிச்சந்திரனை யாரும் யோசிக்கவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Wednesday, July 20, 2011

நேரில் பார்த்திராத கனவன்

கனவில் முகம் தெரியாதவர்கள் வருவது இயல்பே. ஆனால் கேள்விப்பட்ட நிலையில் மட்டுமே உள்ள நபர் (அவர் தான் கனவில் வருகிறார் என்று தோன்றும் விதமாக) தோன்றித் தொடர்பு கொண்டது நேற்றைய இரவில் முதல் முறை. நேற்றைய இரவு என்று நாம் உறங்குவதனால் மட்டுமே சொல்கிறோமாயிருக்கும். அனேகமாக முன்னிரவின் கனவுகள் மறந்து விடுவதும் அதிகாலைக் கனவுகள் நினைவில் இருப்பதும் வாடிக்கை. ஒரு வகையில் இது இன்றைய கனவே.

இன்றைய கனவில் தோன்றியவர் சுகா என அறியப்படுகிற சுரேஷ் கண்ணன். மூங்கில் மூச்சு என்ற தொடரை ஆனந்த விகடனில் எழுதி வருகிறார் இவர். ஆனால் அதற்கும் முன்னரே இவரது தொடர் ஒன்றினை வார்த்தை மாத இதழில் வாசித்து வியப்புற்று யாரெனத் தேடிய போது செய்தி அறிந்தேன் திரு. நெல்லை கண்ணனின் மைந்தன் இவரென்று. இது தவிர வேறு பேச்சுத் தொடர்போ சந்திப்போ கிடையாது.

இவர் என் கனவில் என்ன பண்ணினார் என்றால் எங்கள் ஊர் நாடகக் கொட்டகை முன்னால் மைக் போட்டு ஏராளம் கூட்டத்தினர் முன் பேசிக்கொண்டிருக்கிறார். மைக் மட்டும் தானே தவிர மேடையில் இல்லை. ( இது, இப்படித்தான் பேச்சு இருக்க வேண்டும் என்கிற எனது பலகால தத்துவப் பின்புலத்தில் இருந்து விளைந்ததாக இருக்கலாம்.) சுகா விடிய விடியப் பேசுகிறார். அதனால் தமிழ் கூத்து நாடக முறைக்கேற்ற கூட்டத்தின் பாணியில் பார்வையாளர்கள் கலைந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர் அனேகமாக பழைய சினிமாப் பாடல்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அவரது  பேச்சுக்கிடையே ‘நெல்லைக் கண்ணனுக்கு’ என்ன ஆயிற்று என்கிற கேள்வி எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. கடைசியில் விடிந்து விட்டது பத்துப் பதினைந்து பார்வையாளர்களில் உன்னிப்பாகக் கவனிக்கிற ஓரிரு பார்வையாளர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். அவர் உற்சாகமாகப் பேசிக்கொண்டேயிருக்கிறார். திடீரென அவரது சால்வை பறந்து போய் ஒரு டீக்கடையின் அருகில் உள்ள மரத்தில் சிக்கிக் கொள்கிறது. நான் அதை ஏறி எடுக்கத் தொட்டுவிட்டபோது ‘’நானே எடுத்துக்கிறேனே’’ என்று சால்வையை சுகாவே எடுக்கிறார்.

அது 1980க்கு முந்தைய தோற்றமுடைய எங்கள் ஊரின் தேநீர் விடுதி. நானும் அவரும் டீ குடிக்கையில் பக்கத்தில் ஏழெட்டுப் பேர் எங்கள் பக்கத்து ஊர்க்காரர்கள். ஒருவர் படுத்த படுக்கையாய் கிடக்கிறார். எங்கள் ஊரில் பேசு முன்பே அந்தப் படுக்கையாளரிடம் சுகா ‘மகா பாரதம் பற்றி’ப் பேச ஒப்புக்கொண்டதால் அதை நிறைவேற்றிக் கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என பக்கத்து ஊர்க்காரர்கள் வற்புறுத்துகிறார்கள். கிடையாய்க்கிடக்கிறவரோ ஏறக்குறைய மரணப் படுக்கை.

செத்துக்கொண்டிருந்தவனின் காதில் திருவாசகம் ஓதுதல் என்கிற நாஞ்சில் நாடனின் வரி என் மனதுக்குள் ஓடுகிறது. அவரை எப்படி கொண்டு போகிறீர்களோ அதே மாதிரி என்னையும் கொண்டுபோனால் நான் அவரிடம் பேசுகிறேன் என்று சுகா சொன்னதும்....

முதலில் மரணக் கிடக்கையாளரை நான்கைந்து பேர் தூக்கிச் செல்கிறார்கள். அவரையடுத்து சுகாவை. என் அண்ணன் வீட்டுக்குத் தூக்கிச் செல்கிறார்கள்.
அப்புறம் கணத்திற்கும் குறைவான நேரம் இடைவெளி விட்டு சுகா மீண்டும் என்னிடம் வந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான் கனவு முடிந்தது.


சமீபத்தில் நெல்லையில் இருந்து வந்த மரணச் செய்தி இப்படிப் பாதித்துக் கனவைத் தூண்டியிருக்கலாம். ஆனாலும்.... இப்படியாக் கொண்ட கற்பனைகள் எல்லாம் எழுதும் போது ஏன் என்னைக் கைவிடுகின்றன என்பதையே யோசிக்கிறேன்.

Tuesday, July 19, 2011

சில கனவுகள் சமீபத்தியவை

போன வாரத்தில் இரவில் ஒரு கனவு, இரண்டு நண்பர்கள் என்னைச் சந்திக்கிறார்கள்.
ஒருவர், பாம்பு பிசினெஸ் நல்லா இருக்கும் என்கிறார்.அதைச் செய்யலாம் என முடிவெடுத்து மற்றொரு நண்பரிடம் சொல்ல அவரும் நானும் பாம்பினைப் பிடிக்கிறோம்.

 பாம்பை பரிசுப் பெட்டி அளவுக்கு பொதிந்து ஆட்டோவில் ஏற்றினால் பொட்டலம் பெருத்துக் கொண்டே போகிறது. மிலிட்டரிக் காரர்களின் படுக்கையுடன் கலந்த சாமான் பொதி போல வீங்கிக் கொண்டே போகிறது. நல்லவேளையாக அது பெருத்து வெடிப்பதற்குள் விழிப்பு வந்துவிட்டது. விழிப்பு வந்ததற்குப் பிறகு திகைத்துப் போனேன். ஏனெனில் கனவில் வந்த இருவர்... ஒருவர் ப.கவிதா குமார் மற்றவர் பா.ராகவன்.

இனிஷியல்களுக்கும் (பாக்கள் வரும் பாம்பு) கனவுகளுக்கும் சம்பந்தம் உண்டா என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் நேற்றிரவின் கனவில் கலாப்ரியா வந்தார். காலையில் எழுந்து சிற்சில வேலைகள் முடிந்த பின் பகல் தூக்கம் போட்டேன். தூக்கத்துக்கு முன் நாளிதழ் பார்த்து ‘சமச்சீர் கல்வி’ குறித்த ஹை கோர்ட் தீர்ப்பைப் படித்திருந்தேன்.

இன்றைய காலைக் கனவில் ஒரு டுவெண்டி டுவெண்டி மேட்ச் நடக்கிறது. அணிக்கு நாலு பேர். எங்கள் அணி பவுலிங் 16 ஓவர் வரை ஒருத்தரும் அவுட் ஆகவில்லை. என் பள்ளிக் கால நண்பன் பெரிய சாமி மட்டுமே தொடர்ந்து பந்து வீசுவதில் கடுப்பாகி நான் வெளியேருகிறேன். ஒரு மாநாட்டுப் பந்தல் இரண்டு சினிமா தியேட்டர்கள் கடந்து வந்தால் ஒரு சாமியான பந்தலின் கீழ் சோபாவில் கருணா நிதி அமர்ந்திருக்கிறார். அவருக்கு ஐந்தடி தொலைவில் நான் நிற்கிறேன். என்னை எதோ கேட்கிறார். இதற்கிடையில் அவரது போட்டோவை எதோ குறிப்பெழுதும் தாளாகப் பயன் படுத்தி அது நான் கொண்டு போன கச்சாத்துகளில் மேலாகக் கிடக்கிறது. அதை அவர் கவனித்துவிடக் கூடாது எனப் பதைப்புடன் இருக்கிறேன்.

அவர் வலியுறுத்தல் பேச்சின் ஊடாக என் மகள் அவரைப் பற்றி எழுதிய கவிதையைக் காட்டுகிறேன். பசி தாளாமல் கனவின் தொடர்ச்சி கலைந்துவிட்டது. ரிலேட்டடான கனவுகள் வருவது எப்போது நிற்குமெனத் தெரியவில்லை. ஆனால், ‘கலைஞர் முதல் கலாப்ரியா வரை’ என எப்போதோ படித்த தலைப்பு இப்படி மெய்ப்படும் என எதிர் பார்க்கவேயில்லை.

Monday, July 11, 2011

நிலா நாற்பது - 17

கறுப்பு இறகும் வெள்ளை இறகும்
கடிதின் மாற்றிப்
போர்த்திப் போர்த்தி
 கடந்து தவழும்
ககனப் பறவை.

Friday, July 8, 2011

சமச்சீர் - சாமான்ய - மான்ய....

நேற்றைய தினத் தந்தியில் ஒரு விசித்திர செய்தி கண்ணில் பட்டது.திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம் பாறை அருகே வசவ நாயக்கன் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்துக்கொண்டிருப்பதாக.

போன ஆண்டு வரை எட்டாக இருந்த பள்ளியின் மாணவத்தொகை, அனைவரும் சான்றிதழ் வாங்கிக் கொண்டு போய்விட்டதில் ஒன்றில் வந்து நிற்கிறது.

இப்போதைக்கு இந்த ஒருத்திக்காகத்தான் ஒரு ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு சத்துணவுப் பணியாளர், சமையலாளர் எல்லோரும்.... ஆக அனேகமாக தமிழ் நாட்டின் மிகச் செலவு கூடிய தொடக்கப்பள்ளி மாணவி இவளாகவே இருக்கக்கூடும். செய்தியைப் படித்த உடனே இவளைப் பார்க்கவேண்டும் என்று தோன்றிவிட்டது.
இந்த ஒரு மாணவியும் இப்போது சான்றிதழைக் கேட்பதால் அனைவரும் திகைக்கிறார்களாம்.

இந்த குஜிலியம் பாறையைச் சுற்றி கடந்த 5 ஆண்டுகளுக்குள் போடி பட்டி, வாத்தியார் புதூர்,வீ.பாறைப் பட்டி,கருங் குளத்துப் பட்டி, முத்தக்கா பட்டி ஆகிய ஊர்களில் தொடக்கப் பள்ளிகளை மூடியிருக்கிறார்கள்.

எனக்கென்னவோ பள்ளிகள் மூடப் பட்டதற்கான காரணம்,  ‘குஜிலி’யம் பாறை வட்டார மக்கள் குழந்தை உற்பத்தியைக் குறைத்துக்கொண்டிருப்பார்கள் என்கிற காரணத்தினால் இருக்க முடியாது என்றே படுகிறது.

எல்லோரும்  நாலும் அஞ்சும் சம்பளம் வாங்குகிற மெட்ரிக்குலேசன் ஆயா மாரிடம் பிள்ளைகளைப் படிக்கப்போட்டுவிட்டார்கள். எந்தச் சீராக இருந்தாலும் அரசுப் பள்ளிகள் மீது மக்கள் வைத்திருக்கும் அபிமானத்தை இது காட்டுகிறது.

அரசு பள்ளிகளை மொத்தமாக மூடிவிட்டு அனைத்து குழந்தைகளுக்கும் கல்விக்கான மானியத் தொகை வழங்கிவிட்டால் ஒரு தொல்லையும் இல்லை பாருங்கள். மாமா மார் அப்பச்சி மார் நடத்துகிற பள்ளிகளில் படிச்சுக்க வேண்டியது அவரவர் பாடு. படிக்கிறவன் படிச்சுக்கோ பாழாப்போறவன் போய்க்கோ.

Wednesday, July 6, 2011

நடுச் சாமம்

நள்ளெண் யாமம் - என்று தலைப்பிட்ட காலங்களில் பதிவுகள் எழுதிக்கொண்டிருந்த போதெல்லாம் அர்த்த ஜாமங்களில் மட்டுமே எழுதுவதாக சூழல் தகவமைவு அதிகமிருந்தது. நள்ளென் யாமம் என்பது சங்க காலப் பாடல்களில் வருகிற வரி ஆகும்.

ஊருறங்கும் நேரங்களில் காதலர்கள் தூக்கம் பிடிக்காமல் புரளுவதும் (கத்துவேன் கொல் முட்டுவேன் கொல் என்று மனது துள்ளி மறியும்) இடந் தலைப்பட்டு சந்திப்பதும் நள் ளென்று (சிள் வண்டுகள்) ஒலிக்கக் கூடிய இரவுகளில் தான்.
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் நடுச் சாமம்... என்கிற சீர்காழி பாடுகிற பாடல் இந்த மனோ நிலைக்குப் பக்கத்தில் கொண்டு சேர்க்கும்.

ஜாமத்தை எட்டாகப் பிரிக்கலாம். மாலை ஆறு முதல் காலை ஆறு வரையிலான பனிரெண்டு மணி நேரத்தை எட்டாகக் கூறு போட்டு (இரண்டாம் ஜாமங்களின் கதை... பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமமெல்லாம் இதில் அடக்கம்) ஒன்றரை மணிக்கு ஒரு ஜாமமாகக் கூறு போட்டு எட்டில் நடுவாந்திர ஜாமம் என நானாகக் கற்பித்து நள்ளெண் யாமம் (இலக்கண உருவாக்கமும் எனதே) எனப் பேரிட்டிருந்தவனை தமிழினி வசந்த குமார், ஆதிரன் வாயிலாகக் கூறி சரியான பதமான ‘நள்ளென் யாமம்’ என மாற்றக் கட்டளையிட்டார். (கட்டளை என்பது எனது மனங்கொள்ளும் விருப்பக் கற்பிதம்) பொள்ளாச்சி மனங்கவர்ந்த தமிழய்யா அமுதன் அவர்களைக் கேட்டு உறுதி செய்தபின் நள்ளென் யாமம் எனத் தலைப்பாயிற்று.

வலைப் பக்கத்தின் முகப்பை வடிவமைத்த என் எடிட்டர் ஜகநாதன் (காலடி - என்று சங்கராச்சாரியார்  ரேஞ்சுக்கு தலைப்பு வைத்திருக்கிறவர்) மறுபடி ‘எ’ன்’க்காகக் கஷ்டப்பட்டு நாலாம் எழுத்து “ண்’  ணை , ‘ன்’ என்று மாற்றித் தந்தார்.

தலைப்பு அப்படியே இருக்க இதைக் காலை நேரத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். என்றாலும் பதிவிட்ட நேரத்தை இந்த வலைப் பக்கம் இரவென்றே காட்டக்கூடும்.

Sunday, July 3, 2011

பத்ம நாபனும் பாதாம் பருப்பும்

பல செய்திகளை ஏககாலத்தில் கேள்விப்பட்டு இரண்டு செய்திகள் மனதில் நின்றன. ஒன்று திருவனந்த புரம் பத்ம நாப சாமி ஆலயத்தில் ரகசியக் கிட்டங்கியில் கொள்ளைகொள்ளையாக பொக்கிஷம் கிடைத்துக்கொண்டிருப்பது. ஒரே நாணில் அனந்து ‘திருப்பதி பாலாஜியை’ பின்னுக்குத் தள்ளிவிடுவார் போலிருக்கிறது. ஒரு பக்கம் கேரள மிளகு மற்றும் வாசனைப் பொருள்களை நினைத்து மகிழ்வாக இருந்தது. அப்புறம் சம்ஸ்தானத்தின் பக்தி மற்றும் அழகுணர்ச்சி.

லட்சம் கோடி ரூபாய்களை நெருங்கிக் கொண்டிருக்கும் இவற்றின் மதிப்பு உலக வல்லுநர்களையே ஒரு கணம் வியப்பில் ஸ்தம்பிக்க வைத்திருக்கும். எனக்கு வீர பாண்டிய கட்ட பொம்மனில் சிவாஜி கணேசன் பேசுகிற வசனம் நினைவுக்கு வந்துவிட்டது. ‘’ எண்ணி எண்ணி... என்ன மாளது... அது ஒரு ஒரு கோடி இருக்கும் போ... போ... கொண்டு போய்க்....”

இந்த வசனம் நினைவுக்கு வரக் காரணம் இதே நாட்களில் சென்னை தீவுத் திடலுக்கு அருகில் உள்ள மிலிட்டரிக் கேம்பில் பாதாம் பழம் பறிக்கப் போன சிறுவனை துப்பாக்கிக் குண்டு ஒன்று உயிரைப் பறித்த சம்பவம்தான். பதிமூன்று வயது தில்சான். என்ன ஒரு மடத்தனம். ராணுவத்தின் மடத்தனத்திற்கு உதாரணம். மடத்தனம் மற்றும் கொலைவெறி. இப்போது செத்த பயலுக்கு- குடும்பத்துக்கு - ஐந்து லட்சம்.
இந்தியா பணக்கார நாடு என்பதற்கு பதம நாபன் ஆலயம் சாட்சி.

கோயிலின் பொக்கிஷ வகையை எப்படிக் காவல் காப்பது என்று ஐயம் எழுந்துள்ளதாம். அது இனி தினமும் பத்து லட்சம் பெறுமானமுள்ள பாதுகாப்பு ஏற்பாட்டினைக் கோரக் கூடும். இவ்வளவு பலமான மிலிட்டரி இருப்பதால் நாம் நகைகளின் பாதுகாப்பு பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

மற்றபடி பத்ம நாபன் ரட்சிப்பான். சென்னையில் செத்துப்போன சிறுவனை நினைத்து வேகாளமும் கண்ணீரும் வருகிறது. மலையாளப் பழமொழி ஒன்றும் நினைவுக்கு வருகிறது.(மனம் என்னேரமும் பொருத்தப்பாடுகளுடன் செயல் பட்டும் கருவியுமல்ல) - ‘ மரிச்சவண்டெ பாடு ரக்ஷப்பட்டு.’

Thursday, June 30, 2011

சமகால நகைச்சுவைப் படம்

போன வாரத்தில் பிராஞ்சியேட்டன் ( பிரான்சிஸ் சேட்டன்) என்கிற மலையாளத் திரைப்படம் பார்த்தேன். பார்த்தவுடன் சிரிப்பு வராமல் காட்சிகள் கடந்துபோனபின் சிரிப்பு வருவது இந்தப் படத்தின் சிறப்பு.
தொழிலதிபரும் அரிசிக்கடை அதிபருமான மம்முட்டியை ஊரார் விளிப்பது அரி(சி)ப் பிராஞ்சி என்றுதான்.

இந்த அவப்பேரைப் போக்கிக்கொள்ள சங்கத்தில் பிரசிடெண்டாகப் போட்டியிடுவது பத்மஸ்ரீ பட்டத்துக்கு முயற்சிப்பது என பலவேலைகள் செய்து கை நஷ்டப்படுகிறார். கடைசியில் பத்ம ஸ்ரீ என்ற பெயரை உடைய ப்ரியா மணி அவர் வாழ்வில் இடறுவதால் சுபத்தை நோக்கித் திரைக்கதை செல்கிறது.

பொருட்செலவு குறைவாகவே பிடிக்கும் இந்தப் படத்தை தமிழில் சத்ய ராஜ் முயன்றால் எப்படி இருக்கும் என யோசித்தபோது இன்னும் சுவாரசியமாக இருந்தது. 

Tuesday, June 21, 2011

தொலைத்த ஒரு கவிதை

கவிதைக்குள் போகுமுன்னரே அதைப் பற்றிய விவரத்தைச் சொல்லிவிடுதல் உத்தமம். பெயரில்லாமல் ஒரு கவிதை பிரிண்ட் அவுட் வடிவில் என்னிடம் கிடக்கிறது. சொந்தப் பைகளில் பழைய பேப்பர் பொறுக்குவதில் கிடைத்தது.கவிஞர் யாரென யூகிப்பதில் மொழி சார்ந்து அல்லாமல் வாழ்வியல் தொடர்பு சார்ந்து அது   ‘தூரன் குணா’அவர்களின் கவிதை என ஆலோசிக்கிறேன்.

வளர்சிதை மாற்றங்கள் பெற்ற நிலையில் இன்றைய அவரது கவிதைகள் இதுபோல இல்லை. இதுபோன்ற தருணங்களும் அவருக்கு வாய்க்கும் நிலையிலுமவர் இப்போது இல்லை. அவரது சேமிப்புக் கோப்பில் இல்லாமல் என்னிடம் இது தங்கியிருப்பின் இது பேறு.

தொலைந்த ஒரு மணி நேரம்
_________________________________

பொங்கல் அவ்வருடம் திங்கட்கிழமை
வேறு மாநிலத்திலிருக்கும் எனக்கோ
விடுமுறை இல்லை

இரு தினங்கள் விடுப்பெடுத்துக் கொண்டு
நிரம்பி வழியும் பலபஸ்கள்
மாறி வீடு சேர்ந்தேன்

தந்தை இல்லாத மாலையின்
ஒரு மணி நேரத்தை
எனக்களிப்பதாய் சொல்லியிருந்தாய்

புன்னகையின் தீபமேந்தி வந்திருந்தாய்

வேலையைப் பற்றி
இரவை உண்ணும் கொசுக்கள் பற்றி
ஒவ்வாமல் போகும் உணவு பற்றி
அறை நண்பர்களின் குறட்டை பற்றி
மாதக் கடைசியின் பற்றாக்குறை பற்றி
பயணக் களைப்பைப் பற்றி

இலையுதிர் காலத்து மரத்தளவு
வார்த்தைகளை உதிர்த்தபடி இருந்தேன்

சிரித்தபடி கரங்களை
கன்னங்களில் தாங்கிக் கொண்டு
கேட்டுக் கொண்டிருந்தாய்

மெள்ள இரவு தூவப்படுகையில்
விடைபெற்றுப் போனாய்

வலதுபக்கம் சரியும் பாதையில்
புள்ளியாய் நீ மறையும் வரை
முதுகு பார்த்தபடி இருந்தேன்

இடது பக்கம் மேடேறிச் செல்லும்
எனது நிழல் விழுந்த பாதையில்
நடந்தபோது நினைத்துக் கொண்டேன்

அந்த முறையும்
சொல்லாமல் விடப்பட்ட
எனது பிரியத்தை
எனது காதலை
__________________
___________________

இவ்வளவுதான். ஆனாலும் தன்மையிற் கவி சொல்லும் இந்தக் குரல் ஆணானதோ பெண்ணானதோ எதுவாக இருந்தாலும் (அறை நண்பர்களின் குறட்டை ஒலியிலிருந்து அது ஆண் என்று தெளிவாகிறது)  எதை எதைப் பற்றியெல்லாம் பேசுகிறது என்கிற பட்டியலைப் பார்க்கிறபோது... குறைந்த பட்சம் 7x7 நாற்பத்தி ஒன்பது ஜன்மங்களுக்கு காதலைச் சொல்ல இயலாது என்றுதான் தோன்றியது.

Sunday, June 19, 2011

ஒரு பரவச தருணம்

’கன்னி வாடி’ என்கிற என் ஊரின் பெயரை முதன் முதலில் திரைப்படம் ஒன்றில் கேள்விப்பட்டதும் பார்த்ததும் கோழி கூவுது என்கிற திரைப் படத்தில்தான். ஒரு கல்யாண நிச்சயதார்த்த ஓலை வாசிப்பில் அந்தப் பெயரைச் சொல்வார்கள்.

மூன்று நாட்களுக்குமுன் வேறொன்றும் கேள்விப்பட்டேன். பழைய படம் ஒன்றில் ‘கன்னி வாடி’ என்கிற ஊர்ப்பெயர் வருவதுடன் அந்த ஊரையே காட்டுகிறார்கள். ஆனால் கேள்விப்பட்ட விவரங்கள் காட்சி வர்ணனை அடிப்படையில் எங்கள் கன்னி வாடியோ அல்லது திண்டுக்கல் மாவட்ட அப்பிய நாயக்கர் கன்னிவாடியோ அல்ல அது. சேலத்துக்குப் பக்கத்தில் எதோ ஒரு ஊரை கன்னி வாடி என்று காட்டியிருக்கிறார்கள்.

என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம்,காளி என்.ரத்தினம். டி.எஸ்.துரைசாமி, டி.ஆர்.ராமச்சந்திரன்என்கிற நகைச்சுவைக் காவியர்களோடு சி.டி.ராஜகாந்தமும் நடித்த படம்.ராஜ காந்தம்தான் கன்னிவாடிக்காரி. சௌ சௌ என்கிற படம்:அதாவது மிக்சர் என்கிற அர்த்தத்தில். பிளாக் மார்கெட், விடாக்கண்டன் கொடாக் கண்டன் ஆகிய பார்ட்டுகளும் அதே படத்தில் உண்டு. ஒரு படம் மூன்று கதை கான்செப்ட்.

சைக்கிள் ஓட்டத் தெரியாத துரைசாமி கன்னி வாடிக்குப் பெண் பார்க்கப் போவது சைக்கிளில். கன்னீ வாடி! என்கிற பெயரே காளி என்.ரத்தினத்தை ஈர்த்துவிட துரைசாமியை சைக்கிளில் வைத்து அந்த ஊருக்குத் தள்ளிக்கொண்டே செல்கிறார். ஒரு சுண்டல் கிழவி மீது சைக்கிள் மோத சண்டையாகி தப்பிச்செல்லும் துரைசாமி பெண் வீட்டுக்குப் போய்விட தப்பிஓடி ஏரிக்கரை அருகில் ஊரின் பெயர்ப் பலகையைப் பார்க்கும் ரத்தினம் கன்னி வாடி, கன்னி வாடி என ராகம்போட்டு உச்சரித்துக்கொண்டு அங்கே தண்ணீருக்கு வரும் ராஜகாந்தத்தை ஓரக் கண்ணால் பார்க்கிறார்.

ராஜகாந்தம் தலைமையில் கும்பல் மொத்தமாக ரத்தினத்தை மொத்த அவர் தப்பித்து வந்து சேரும் இடம் பெண் பார்க்கும் வீடு.... இப்படியாக அவர்களது சைக்கிள் பயணம் முடிகிறது.

வாழ்வின் திசைப் போக்கை மாற்றிய மறக்க இயலாத இடங்களில் ஒன்றான பெங்களூர் செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் நான் அவரைச் சந்திக்க நேர்ந்தது. கெழுதகை அண்ணார் விஜயன் விஜயன் மூலமாக அறிமுகமான மறு நொடியில் என் ஊர்ப் பெயரை விசாரித்ததும் ‘கண்களில் காட்சிகளே விரியும்படி ஏராளமான தகவல்களுடன்’ இதைப் பகிர்ந்துகொண்டவர் விட்டல் ராவ்.

அவரது ‘நதி மூலம்’ நாவலை இன்னொரு முறை படிக்க ஆசைப் படுகிறேன். கிடைத்தால் சௌ சௌ படத்தினையும் பார்த்திட வேண்டும்.

Saturday, June 4, 2011

நிலா நாற்பது - 16

நித்யம் தரித்து
மரித்த பின்னாலும்
பொழிவிற் சோராது
வான் மசிக் குடுவை.

ராம லீலா மைதானம்- ஊழல் விரோதம்: சூழல் மிக வினோதம்04.06.20011 .கர வருடம் வைகாசி இருபத்தொன்றாம் நாள் திரிதியை திதியில் தில்லி ராம லீலா மைதானத்தில் ‘ஊழலுக்கு எதிரான’ தனது உண்ணா விரதத்தைத் தொடங்கியிருக்கிறார் யோகா குரு ராம்தேவ்.

வீட்டில் எனது நாட்காட்டியிலும் கிணறு வாஸ்துக்கு இது நல்ல நாள் என்றே போட்டிருக்கிறது. ஊழல் தூர் வாரப் பட்டு நல்ல கிணத்துத் தண்ணியாக சுத்தமாக எல்லோருக்கும் எல்லாமும் பகிரக் கிடைத்தால்தான் எத்தனை மகிழ்ச்சி.

புகழுக்காக அவர் இதைச் செய்கிறார் என்று நாம் இதைக் கொச்சைப் படுத்திவிடக் கூடாது. புகழுக்காக பட்டினி கிடந்து ஒருவர் நோன்பு நோற்கத் தயாராவார் என நான் நம்பவில்லை. மிகச் சில நாட்கள் முன்னதாக ஹசாரே காட்டிய வழியில் யோகா குருவும் இந்த உண்ணா நோன்புக்குத் தயாராகிவிட்டார்.

நாடு முழுக்கவும் பல்வேறு இடங்களில் கிளைகள் உருவாகி பல பெரு சிறு நகரங்களிலும் பலர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்கள். கிளைகள் என்றதும் இதை வங்கிக் கிளை போன்று குறிப்பிட்டுவிட்டேனோ என யாரும் கருதவேண்டாம். கிளை என்றால் உறவு என்ற பொருளில் இந்தியாவின் ஆன்மீக மற்றும் ஆத்மீக பந்தத்தினால்தான் அவருக்கு இத்தகைய வரவேற்பு.

செய்தி கொண்டு செல்லும் அல்லது செலுத்தும் ஊடகங்களால் இந்த உடனடிப் பரவலும் சாத்தியப்பட்டிருக்கிறது. ‘அவர் கூறுவது நியாயம்தான்’ என்று செய்தித் தொடர்பு அமைச்சரே கூறும் போது செய்தி மிகப் பெரும் வலிமையுடையதாக மாறுகிறது.

முதற்கண் ராம் தேவினை மறுத்துப் பேச இங்கு யாருக்கும் நாவில்லை என்பதாக சூழல் இருக்கிறது.அன்னா ஹசாரேவும் முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு தார்மீக ஆதரவைத் தருவார்.

ராம் தேவ், ராம் லீலா மைதானம் ஆகிய பதங்களின் தொடர்ச்சியாக காந்தி சொன்ன ராம ராஜ்யம் என்கிற பதப்பிரயோகமும் நமக்கு ஞாபகம் வருகிறது. ஆனால் பிரயோகம் வேறு கிடைக்கிற யோகம் வேறு.

‘ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஒழியுங்கள்’ என்று அவர் சொன்னதாகவும் அதை அதிகாரத்தில் உள்ளவர்கள் மறுத்திருப்பதாகவும் செய்தி படித்தேன். ராம் தேவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் நான் இந்த நிமிடத்தைய (குடும்பக்) கையிருப்பான எண்ணாயிரத்து நானூறு ரூபாயில் எட்டாயிரத்தை இழந்து வெறும் நானூறு ரூபாய்க் காரன் ஆகிவிடுவேன்.

ஏ.டி.எம் மெஷின்களுக்கும் இப்போது ’புழங்கும்’(அ) புழுங்கும் சூழலுக்கும் ராம் தேவ்வின் கோரிக்கையைப் புரியவைக்க முடியாது. அவரது குழந்தைக் காலத்தைப் போல காலணா ஓட்டைக் காசும் நாலணா எட்டணாக்களுமாகப் புழங்கினால் ஊழல் ஒழிந்துவிடும் என அவர் நினைக்கிறாரா தெரியவில்லை. முப்பது வெள்ளிக் காசுகளுக்கு இறைத் தூதர்களைக் காட்டிக் கொடுக்க ஆரம்பித்து ஆயிற்று ஆயிரங்களின் காலம்.

ஆனால், ராம் தேவின் இந்தக் கோரிக்கையில் உள்ள அறியாமையையே அவரது நேர்மையாகவும் லட்சிய வாதமாகவும் பார்க்கிறேன். லட்சிய வாதங்களுக்கான மரணச் சங்கொலி ஏற்கெனவே கேட்டாகிவிட்டது எனப் பேசப் படும் சூழலில் இப்படி ஒருவர் ஆரம்பித்து வைப்பதும் அதை அடுத்து நாடேகமும் சிலசில சலனங்கள் ஏற்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது.

’உங்கள் தரப்பில் நியாயம் இருக்கிறது. அது பரிசீலிக்கத் தக்கதாய் இருக்கிறது.உண்ணா விரதத்தைக் கைவிடுங்கள் என அரசு கபில் சிபல் மூலமாகக் கேட்டுக்கொண்டாகிவிட்டது. அப்புறமும் பலபேர்.

வட இந்திய ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியை குத்தகைக்கு எடுக்கப் போகின்றன என்பது லட்சக்கணக்கான பேர்கள் பங்கெடுப்பதற்கான திருவிழா ஏற்பாட்டிலிருந்து தெரியவருகிறது.

ஹிந்தித் திரைப்பட நட்சத்திரங்களின் ஆதரவு இதற்குக் கிடைக்காதென்பது பேட்டிகளால் தெரிகிறது. பெயர் கூட மாற்றப் படாத ஒரே படத்தில் எத்தனை தடவை நடிப்பது என்கிற எண்ணம் அவர்களுக்கு இருக்குமாயிருக்கும்.

ஊழல் ஒழிப்புப் போராட்டத்திற்கு தார்மீக அல்லது மானசீக ஆதரவை அளிப்பது நமது கடமை.

எவ்வளவெவ்வளவோ மாற்றங்களை சிறுகச் சிறுகக் கொண்டு வரவேண்டியிருக்கிறது. மனவலிமையும் மன நேர்மையும் பொதுப் புத்தியில் உறைய வேண்டிய கடப்பாட்டை அது கோரி நிற்கிறது.

சத்தியம் வெல்லும் என்பதற்காக சடங்குகளில் பங்கேற்காமல் நிர்விகல்பமாய் இருக்கமுடியாது. ராம் தேவ் தனது இந்தப் போராட்டத்தை பத்து நாட்களுக்கும் மேலாகக் கொண்டு செல்வார் என நம்புகிறேன். யோகங்களைப் பற்றி நான் கருதுகிற யூகங்களை ஒட்டி இதைச் சொல்லுகிறேன்.

Wednesday, June 1, 2011

ஒரு கவிதையும் சமச்சீர் கல்வியும்

பள்ளிக் குழந்தைகள் எல்லாம் பதினைந்து நாள் உபரி விடுமுறையில் சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்தப் பதினைந்து நாளை அனுபவிக்க விடாமல் டியூசனுக்கோ அல்லது ‘தங்கள் நிலையில் உத்தரவாதமாகவும் உறுதியாகவும் இருக்கிற பள்ளிக்கோ போகும் பிள்ளைகள் தங்கள் வரலாற்றின் பலனை அனுபவிக்கிறார்கள்.

சிலபல கோடிகளை செலவு செய்து புதிய (அல்லது பழைய ) புத்தகங்கள் அச்சிடப் பட்டுக்கொண்டிருக்கின்றன. ’எனது கவிதயை வேண்டுமானால் நீக்கிவிட்டு பாடத்திட்டத்தை அமலாக்குங்கள் ‘ எனக் கருணாநிதி கேட்டுக்கொண்டார். அப்படியாயிருப்பினும் புதிதாக அச்சிட்டுத்தான் ஆகவேண்டும். தாளைக் கிழித்துவிட்டு பாடப் புத்தகத்தை அப்படியே தொடரும் கல்வி முறை இன்னும் அமலுக்கு வரவில்லை.

ஒன்று விளங்குகிறது.(நீண்ட காலப் பார்வையற்று) தேவையற்ற செலவுகளுக்கு வழி வைப்பதாகவும், தேவையான செலவுகளைச் செய்யாமல் விடுவதாகவும்தான் நமது அரசியல் மற்றும் கல்விக்கான பிணைப்புகள் இருக்கின்றன.
.
;இன்றைய செய்தி நாளைய வரலாறு ’ என்பதைப் புரிந்துகொண்ட தி.மு.க அவர்கலுக்கு ஏற்ற பாடத்திட்டத்தை முயன்றிருக்கக் கூடும் என்பதும் அச்சங்களில் ஒன்றுதான். ஆனால் ஜெயலலிதா நேற்றுத் தெரிவித்துவிட்டார்... கவிதை காரணமல்ல. ஒட்டு மொத்த கல்வியியல் நோக்கத்தின் அடிப்படையில்தான் பாடத்திட்டம் மாறுகிறது என.

தனியார் கல்விப் புலத்தில் ஃபீஸ்கள் மற்றும் பீசுகளில் அவர் தலையிடப் போவதில்லை என்பதையும் தெரிவித்திருக்கிறார். பெற்றோர்கள் அரசுப் பள்ளிக் கல்வியைப் புறக்கணிக்கிற நிலைப் பாட்டை எடுத்தபின் . தாங்கள் போய்ச்சேர்ந்த நிறுவங்களிடம் ‘காசைக் குறை’ என்று சண்டை போடுவது என்ன வித நியாயம் எனத் தெரியவில்லை.( சும்மா சொல்லிக் கொடுக்க அவன் என்ன மாமனா மச்சானா....)

யோசித்துப் பாருங்கள் அதிகமாகப் பத்தும் இருபதும் ஆயிரங்களாக சம்பளம் வாங்கும் ஆசிரியர்களிடம் பிள்ளைகளைப் படிக்கப் போடாமல் நான்கும் ஐந்தும் ஆயிரங்களாக சம்பளம் வாங்கும் பள்ளிகளில் ‘நீங்கள் காசும் கொடுத்து’ப் படிக்கப் போடுகிறீர்கள் என்றால்.... இடையில் நடப்பதுதான் என்ன.

அரசுப் பள்ளியில் படிப்போருக்கு அறுபது சதம் ஒதுக்கீடு என்பது மாதிரி சட்டம் வந்தால் கூட ஒப்புக்கொள்ளலாம் என்பது மாதிரி தோன்றுகிறது.
அனைவருக்கும் கல்வி இலவசம், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி இல்லை,மந்திரி மகனும் கூலித் தொழிலாளி மகனும் கலெக்டர் மகளும் ஒரே பள்ளிக்கூடம் (உடைகள் உட்பட அப்போது அரசின் பொறுப்புக்கு வந்துவிடக்கூடும்).

இந்த நிலைமை வராமல் சமச்சீர் கல்வி என்பது சாத்தியமல்ல என்றுதான் நினைக்கிறேன். சமச் சீர் என்பது நமது பெயரிடும் ஆர்வத்தால் உச்சரிக்கப்படுகிறது.

‘சமன் செய்து சீர் தூக்கி அங்கே ஒருபால் கோடாமை கோடி பெறும்.’

ஆரோக்கியமான கல்வி மறுக்கப்படுகிற கோட்டுவிளிம்பில்தான் எத்தனை கோடிப்பேர்.

Tuesday, May 17, 2011

விதானம்.... நிதானம்.

தமிழக சட்ட சபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாறுகிறது. எங்கிருந்து இயங்குகிறது என்பது எப்போதும் சங்கதி அல்ல. எப்படி இயங்குகிறது என்பதே சங்கதி.

ஏராளம் பொருட் செலவில் அண்ணா சாலையில் தன்னளவில் விசாலமாகவும் பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் கட்டப்பட்டிருந்த (அல்லது இடப்பட்டிருந்த) அவை பயன்பாட்டில் இல்லாது போகிறது. ஒரு இரண்டு ஆண்டுக்குள்ளாக இந்தியப் பணத்தில் அதற்கேற்பட்ட செலவினங்கள் யாவும் இப்போது வெட்டியாகக் கருதப்படுகிற சூழல் வந்துவிட்டது. இத்தனைக்கும் அப்படியான இட மாற்றத்துக்கு தி.மு.க தயாரானபோது இருந்ததென்னவோ மைனாரிட்டி அரசுதான்.

இதுபோன்ற அலாதியான செலவினங்களின் போதாவது எதிர்க்கட்சிகள் புதிர்க்கட்சிகள் உட்பட பலரது தரப்பிலும் ஆதரவைக் கோருவது மட்டுமே சரி என்று படுகிறது.

இல்லாவிட்டால் மிகத் தொலைநோக்கான காரியங்களில் எல்லாம் அரசாங்கங்கள் அவசரம் காட்டவேண்டியதில்லை.

 இங்கு சட்டசபை என்பது குறியீடு மட்டுமே.

Sunday, May 15, 2011

ஆரூர்த் தேரும் அரங்கன் கோபுரமும்

தமிழகத்தின் புதிய - அல்லது பழைய - முதலமைச்சராக ஜெயலலிதா நாளை மறுபடியும் பதவியேற்கிறார்.

எதிர்க் கட்சித் தலைவராக விஜய காந்த்.

 ஒருவேளை கருணா நிதியே வந்திருக்கக் கூடியதுதான். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னனாக இருந்தவர் ஏமாறா மன்னனாக ‘ஆற்ற’ இயலாத போய்விட்டது. ஒருவேளை குடியாட்சி மன்னராக இருந்து செய்து கொள்ள வேண்டிய வசதி வாய்ப்புகளை போதுமான அளவு பெருக்கிக்கொண்டாரோ என்னவோ? மீண்டும் ஆட்சிக் கட்டிலில் இல்லை என்பது இழப்புதான்.

இந்தச் சரிவு தி.மு.கழகத்தை ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் பின்னகர்த்தியிருக்கிறது. வெற்றி வேட்பாளர்களின் எண்ணிக்கையை மனதில் வைத்து இதை மொழிகிறேன். ஒரு விதத்தில் ஜெயலலிதாவின் சேவல் கூவிய காலத்தின் எண்ணிக்கையை நினைவூட்டுகிற மாதிரி இன்று உதய சூரியன் வந்திருக்கிறது.

ராஜீவின் மரணம்- இந்திரா காந்தி அல்லது மூப்பனாருடன் கூட்டு என்பது மாதிரி சில தருணங்களில் அ.தி.மு.க அல்லது தி.மு.க இரண்டுக்குமே  இப்படியான ‘பெருக்கித் துடைக்கப்பட்ட வீழ்ச்சிகள்’ கிடைத்துத்தான் இருக்கின்றன.

ஆனால் இம்முறை மிகுதியானதும் வலிவானதும் என நம்பப்பட்ட கூட்டணிகள்; சாதீயக் கட்சிகளுடன் கூட்டு என பலவிதப்பட்ட வியூகங்களைத் தாண்டி பெற்றுக்கொண்ட இந்தத் தோல்வி கருணா நிதி உள்ளிட்ட கழகத்தினரை கடுமையாக சிந்திக்கவைக்கும்.

எதிர்க் கட்சிக்குக் கூட லாயக்கில்லாத  கழகத்தின் ‘ இம் முடிவு’ புதிய தெம்பை ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்துக்கும் தந்திருக்கும். இந்தத் தெம்புடன் தரப்பட்ட மற்ற உள்ளுறைச் சங்கதிகளையும் கணக்கில் கொண்டு அவர்கள் பணிபுரிவது அவசியம்.

உள்ளூரில் நின்று வென்ற இரு தலைவர்களையும் வாழ்த்தி திரு. வாலி அவர்கள் பாட்டு எழுதினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய சுகமாக இருக்கிறது.

கருணா நிதி;

 நிலையில்
நிற்கின்ற தேரும்
அதன் பருவத்தில்
ஓடிவரும் என்பதற்கு
நீ எடுத்துக்காட்டு. அதை
உலகத்திற்கு
எடுத்துக்காட்டு.


ஜெயலலிதா:

உறங்குகிறாய் என
உலகம்
உன்னியிருந்தது
அறி துயிலாகும்.
உன் இமையை
விரித்துவிட்டால்
ஆதி சேடனும்
ஆகிடுவான் உன்
பாதி சீடன்.

Tuesday, May 3, 2011

முள்ளை முள்ளால்...

முள்ளை முள்ளால் எடுப்பது பற்றி
முடிவு செய்து புதிதாக
முள்ளை உருவாக்கியது
முன்பொரு நாள்.

முள்ளாகப் பயன்பட்ட
முள்ளானது
பின்
தனக்கென முள் வனம்
வளர்க்கத் தொடங்கி
முதலாம் முள் மனத்தைப்
பதம் பார்க்கிறது.

வளர்த்த முள்ளால்
வலிகண்ட வன் ஆளுமை
‘முள்ளைக் களைவது’
பற்றி
அகிலத்துக்குப் பறை சாற்றுகிறது.

பின்
புதிய வரலாற்றின் பதிவு ஒன்றைப்
பொன் எழுத்துக்களால்
அச்சடிக்கும் முயற்சியில்
முள்ளைக் களைந்துவிட்டு
மார் தட்டுகிறது.

முனை மழுங்கிய முள்ளுக்கு
ஈமச் சடங்கு செய்ய
தாவர ரீதியான முறைமைகள்
செவ்வனே முடிக்கப்பட்டதாக
அறிவித்துவிட்டு
முள்ளைத் துக்கி
நீர் நிலையில் போடுகிறது.

சடலம் கடித்த மீன்களைப்
பற்றி
புதிதாகக் கவலை
கொள்கிறது அகிலம்.

மீன்களுக்கும் முட்கள்
உண்டு.

Thursday, April 28, 2011

கருதாப் பிழை...

நேற்று யூ - டியூப் பில் கரூரில் சீமான் ஆற்றிய உரை கேட்டேன். காங்கிரசை எதிர்த்து பொரிந்து தள்ளியிருந்தார். கட்டிக் காது அறுத்தல் என்பது அதுதான். நான் எழுத வந்தது அது பற்றி அல்ல.

கூட்டத் துவக்கத்தில் வந்த தமிழர் ஒருவர் இப்படித் தொடங்கினார்.
‘’பொங்கு தமிழர்க்கு இனனல் விளைந்தால் சிங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு ‘’

சம்ஹாரத்தின் அடியாகப் பிறந்த சங்காரம் என்ற வார்த்தையை அன்பர் அறிந்திருப்பது போலத் தெரியவில்லை. ஒரு வேளை படிக்க நேர்ந்திருந்தாலும் ‘’ சிங்காரத்தை இப்படி தப்பா அடிச்சிருக்காங்க பாரு’’ என்ற எண்ணத்தில் ‘திருத்தி’ வாசித்திருப்பார் என நினைக்கிறேன்.

சீமான் பேசியதைப் பார்த்தபோதும் சில விஷயங்களை யோசிக்கும் வேளையிலும் அன்பர் சொன்னதிலும் அர்த்தமுள்ளது போல ஒரு தோற்றம் மேவியது,

Monday, April 25, 2011

ஓய்வென்னும் உய்வு...

விஜய் தொலைக் காட்சியில் ’நீயா? நானா?’ நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை நிறைவு செய்கிறது. அதன் முதலாவது நிகழ்ச்சியில் பங்கேற்பாளராகக் கலந்துகொண்டது நினைவுக்கு வருகிறது. அது போக்குவரத்துத் தொழிலாலர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி. இப்போதும் வருகிற மே-1 தொழிலாளர் தினத்தை ஒட்டி ஒளிபரப்பாக இருக்கிற நிகழ்வில்  சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றிருக்கிறேன்.

லீவே போடாமல் பணி செய்கிற ஆட்களும் நிர்வாகத்தை டபாய்த்து லீவு போடும் ஆட்களும் பங்குபெற்ற சுவாரசியமான நிகழ்ச்சி. இதற்குப் புறத்திலும் இதன் அன்னியிலும் இரண்டாயிரத்தை ஒட்டிய வருடங்களில் இருந்து ஹெச் ஆர் எனப்படும் டிபார்ட்மெண்டின் வருகையையும் அதை யொட்டிய சரியத் தொடங்கியிருக்கிற தொழிற் சங்கங்களின் வீழ்ச்சியும் சமகாலப் புள்ளியில் இணைவது குறித்த ஆச்சரியக் கேள்வியை ஓரிரு வாக்கியங்களில் பதிவு செய்திருக்கிறேன். மின் தடங்கலும் நுண் தடங்கலும் ஏற்படாதவர்கள் நிகழ்ச்சியைப் பாருங்கள் என  அன்பார்ந்த முறையில் தகவல் விடுக்கிறேன்.

Sunday, April 17, 2011

நிலா நாற்பது - 15

அழிவதும் பொங்கி
வழிவதுமாகத் தானே
மிதக்கும் கண்ணாடிக்
கள் மொந்தை. சுற்றிலும்
போதையில் சிமிட்டும்
விண் கண்களின் மந்தை,

நிலா நாற்பது-14

படுத்துறங்கும் புவிமீது
பழுத்திறங்கும் கனிரசம்.
பால் வெண் படர்வின்
பாத ரசம்.

Wednesday, April 6, 2011

திசையிலி

எழுந்து விடிந்த காலை
ஒரு அவதினத்தைப் போல
உணர்வளித்தால் என்ன
செய்ய இயலும்?

முட்டிக்கொண்டு சாகலாம்
போல நரம்புகள் தெறிக்கிற
இந்த நாளின் ஆரம்பத்தை
என்ன செய்து
சீரமைக்க முடியும்.

முடிவற்றதும் நீங்கவே
நீங்காததுமான
உறைவுத் தோற்றத்தினூடே
பகல் வெளிச்சம் விஷமெனப்
பாரித்திருக்கிறது.

பொழுதின் எந்த நேரத்துக்
கதிர் உயிர்ப்பின் சிறு
துளியைக் கொண்டு வரும்
எனக் காத்திருத்தலில்
கண் அயர்ந்தே கிடக்கிறது
இருப்பின் சோர்வு.

தேநீரைத்தான் எத்தனை முறை
அருந்துவது. இப்படித் துவங்கும் எனில்
சூரியனைக் கழுத்தை
நெரித்திருப்பேன், அது மண்டைக்கும்
சற்றே
கீழாகத்தான் இருந்தது,

செய்ய ஏதுமில்லாக்
கைகளின் கண்கள்
எத்தனையோ பலநாட்கள் மாதிரி
இன்றும் பார்த்தே கழித்துவிட
ஆயத்தமாகிவிட்டன.

மீண்டும் ஒரு தேநீர், ஒரு
மூன்று முறை மூத்திரம்
பெய்தபின் ஏதேனும்
மாற்றம் தெரியக்கூடலாம். 

வாக்காளர்களுக்கு...

தேர்தல் கமிஷனால் கைப்பற்றப்படும் பணத்தின் அளவு மலைக்கவைப்பதாய் இருக்கிறது. அதிலும் இன்றைய செய்தியான , ‘திருச்சி;ஆம்னி பஸ்ஸில் அஞ்சு கோடி’ மகத்தான செய்திதான். ஆம்புலன்சு முதல் ஆம்னி பஸ் வரை என ஏற்கெனவே பேரிட்டும் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு அம்மி கொத்துகிறவர் பூட்டு குடை ரிப்பேர்காரர்கள் வரை குடைந்து எடுப்பார்கள் என நம்புவோம். வாக்காளர்களிடம் வேட்பாளர்களும் காலில் விழத் தொடங்கிவிட்டார்கள். நல்லது ஆற்றப் போகிறவர்கள் அத்தனை பாடுபட்டு அந்த வாய்ப்பை வாங்காவிட்டால்தான் என்ன கெட்டுப்போகும் என்று தெரியவில்லை.

இந்நிலையில் நேற்று சென்னையில் ‘பணம் வாங்காதீர்கள், கட்டாயம் வாக்களியுங்கள்’ என கலெக்டர் அமுதா முன்னிலையில் கல்லூரி மாணாக்கர்/கியர்கள் பொதுமக்களின் காலில் விழுந்து வேண்டிக்கொண்ட நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டு என்ன விதமான உணர்ச்சியை அடைவது எனத் தெரியாமல் பேதலித்துவிட்டேன்.

’முள்ளை முள்ளால் எடுப்பது’ என்பது இதுதானோ?

Friday, April 1, 2011

தர்ம அடி... சாரி... சாரி.... தர்ம புரி!

 தர்ம புரியில் வேனில் வைத்து வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததாக செய்தியும் (தொலைக்)காட்சியும் கிடைத்தது. மறு மறு ஒளிபரப்புகளில் அவர் அடித்துக்குமுறுவதுபோல அக்காட்சி சித்தரிக்கப்படுகிறது. அது தவிரவும் அடித்து உதைப்பு, அடித்துத் துவைப்பு என அளவுக்கு மீறிய வார்த்தைகள் பிரயோகிக்கப் படுகின்றன. இக்காட்சி அனேகமாக ‘’கொல பண்றாங்கப்பா! அய்யோ கொல்றாங்களே!’’ அளவுக்கு ஒளிபரப்பப்படலாம் என்பது என் கணிப்பு.

நல்லவேலையாக பாண்டியன் என்று விஜயகாந்த்தால் அழைக்கப்பட்ட பாஸ்கரன் விஜயகாந்த்தை திருப்பி அடிக்காததன் மூலம் ராசாபாசம் பாதி மட்டுப்பட்டுவிட்டது.

மதுரைக்காரர் என்கிற அளவில் ‘பாண்டியன்’ என்கிற பெயர் ரத்தத்திலும் சத்தத்திலும் ஊறியதாகும். ஒருவேளை பாஸ்கரனை தனிச்சந்திப்புகளில் விஜயகாந்த் ‘பாண்டியன்’ என்றுதான் அழைத்துக்கொண்டிருந்தாரோ என்னவோ?... பாண்டியன் தவறு செய்கிற இடத்தில் அல்லது சரியே செய்கிற பட்சத்தில் கூட செல்லமாக அவ்வப்போது தட்டுவதை விஜயகாந்த் வழக்கமாகக் கொண்டிருக்கலாம். அடித்த கையும் உதைத்த காலும் சும்மா இருக்குமா?

கிரிகெட் ஆட்டங்களில் ஸ்டம்பு கேமரா இருப்பதுபோல வேனின் பிரச்சாரச் செவ்வகத்தை ஒட்டி ஒரு கேமரா இருந்தால்தான் உண்மை நிலை விளங்கும். செய்திகளின் போது நிஜமான வேகத்தில் ஒளிபரப்பவேண்டுமே தவிர ரீ-ப்ளே, ஃப்ளர்ப், மிகை இயக்கம், தாழ் இயக்கம், மிசைக்குரல் போன்ற சினிமா சார்ந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்தி வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும்.
எனக்கென்னவோ ‘ச்சே பேசாம இருடா... ’ என்கிற தொனொயில் விஜயகாந்த் வேட்பாளரின் வலதுதோள் பட்டையை ஒன்று அல்லது இரண்டு முறை உந்தித் தள்ளியதுமாதிரித்தான் பட்டது.

பாஸ்கரனே இதுபற்றி முறையிடாத போது நானும் சொல்வதற்கு ஒன்றுமில்லைதான். ஆனால் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்குத்தான் தெரியும் உண்மை எதுவென்று.

கட்சிக்காரர்களை அடிக்கும் உரிமை எடுத்துக்கொள்கிற அளவில் விஜயகாந்த் இருப்பாரேயாகில்  அவர் மக்களை என்னவெல்லாம் செய்வார் என நினைக்கும்போது திகிலாகத்தான் இருக்கிறது. அடிப்படைச் செயல்பாடுகள் இயல்பூக்கம் உயிரியல்பு ஆகியவற்றின் ஆதாரத்திலேயே விஜயகாந்த் இப்படி ஒரு ஆளாக இருப்பாராகில் மக்களாகிய நாம் சொல்லிவிடவேண்டியதுதான்.

தமிழ்ல நமக்குப் பிடிக்காத வார்த்தை. ‘மன்னிப்பு!’ ஹ்ஹா....ங்.

Monday, March 21, 2011

பம்பரத்தை நம்பி வெம்பரப்பாதல்...

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும்  தனித்தனியாக தேர்தலில் நின்றால் எனது வாக்கு பம்பத்துக்கல்ல.  இரும்பு சம்பந்தப்பட்ட ஒரு சின்னத்துக்குத்தான். பம்பரத்துக்குக் குத்து ஆணியாக இரும்பு செயல்பட்டாலும் நான் அதைக் கணக்கிலெடுக்கவில்லை. குத்து ஆணியும் சாட்டையும் இல்லாமற்தான் போய்விட்டது பம்பரம்.

வை.கோ முதன் முதலில் பெற்றது குடை சின்னம். அது சார்ந்து இரண்டு ஞாபகங்கள் எனக்கு உண்டு. ஒன்று அவரது கட்சி குடை சின்னத்தில்  நின்ற காலத்தில் நான் ஒரு வானொலி நிலையத்தில் கவிதை வாசிக்கப்போனேன். ‘நீயும் நானும் ஒரு குடையின் கீழ் நடந்ததால் அன்றைக்கு நல்ல மழை’ என்று நான் காதல் கவிதை எழுதியிருந்தேன். நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ‘தம்பி, தேர்தல் சின்னங்கள் வானொலியில் வருவது சரியல்ல’ என்றார். இதில் யாருடைய துரதிர்ஷ்டம் பெரிதென்று தெரியவில்லை. 

‘’நீயும் நானும் நனைந்து நடந்ததால் ‘ என்று கவிதையை மாற்றினேன். நண்பனிடம் இதைச் சொன்னபோது (இரண்டாம் ஞாபகம்)... வைகோவுக்குக் குடை என்ன பொருத்தமடா, ‘’நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது’ ன்னு குடையை கக்கத்துல வச்சிக்கிட்டு ஊரூராப் போவேண்டியதுதான். என்றான். அவன் இப்படிச் சொன்னதில் சாதிசார்ந்த குறிப்பு ஒன்று இருந்தது, போதாததற்கு அவர் கருப்புச் சால்வை வேறு அணிந்திருந்தார். கற்பனை செய்யவே மிக அலாதியாக இருந்தது. குடை விரிவதற்கு முன்னாக அவர் பம்பரத்திற்கு மாறினார். அவர் பட்ட சின்னங்கள் நாடறிந்தது. வெண்ணெய் திரள்கிற நேரத்தில் தாழிகள் உருண்டுருள்வது அவருக்குத்தான்.

அவர் அ.தி.மு.க அணியில் இருந்து நீக்கப்பட்ட விதம் ஏனோ மிகுந்த மனச்சோர்வை அளிக்கிறது. நான் அவருக்கு வாக்களிக்கும் எண்ணத்தில் இல்லாதபோதும். இதை மிகப்பெரிய தார்மீக வழுவான செயலாகக் கருதுகிறேன். அவரது வில(க்)கல் பின்னணியில் சோ, சுப்பிரமணிய சாமி முதல் விஜய் மல்லையா ஈறாக பல பெயர்களும் ஆணவம் அகந்தை உள்ளிட்ட குணங்களும் பேசப்படலாம்.

கடவுளின் விளையாட்டும் இதில் இருக்கிறது என்பதன் உதாரணம்தான் கி.வீரமணி ‘தி.மு.கவை ஆதரியுங்கள் ‘ எனக் கோபால்சாமிக்குக் கடிதம் எழுதப்பட்டிருப்பது. அப்புறம் ஜெயலலிதாவும் தன் தரப்புக்கு ஒரு கடிதம்.

ம.தி.மு.வின் கொள்கைப் பீரங்கியான நாஞ்சில் சம்பத் சொன்னது இப்போது மெய்ப்பாட்டை அடையும் தருணம் வந்துவிட்டது. நாங்கள் கட்சி அல்ல இயக்கம்.
 மிக நன்று. இப்போது இயக்கமாக வை.கோ செய்யவேண்டிய காரியங்கள் பல உள.
1. தமிழை ஆட்சி மற்றும் நீதி குறிப்பாக பயிற்றுமொழியாகவும் ஆக்க குரல்கொடுத்தல்.

2. அனைவருக்கும் சமச்சீர் மற்றும் இலவசக் கல்வி.

3. இலவச மருத்துவம்.

4. அணு மின் நிலைய எதிர்ப்பு.

5. கள்ளை அனுமதித்தல்

6.பன்னாட்டு ஆதிக்கத்தை ஒழித்து நாட்டின் தற்சார்பு

7.வேலை வாய்ப்பு

இந்த அரசியற் செயல்பாடுகள் தவிர்த்து கிரேக்க- இந்திய புராணங்களை ஒப்பிட்டு சில ஆயிரம் பக்கங்கள் வருவது போல ஓரிரு புத்தகங்களாவது அவர் எழுதவேண்டும் என்பது என் விருப்பம்.

அவர் அனுஷ்டிக்கப் போகிற அறுபது நாள் மௌனத்திற்கு வாழ்த்துச் சொல்வதுதவிர இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை.

Thursday, March 17, 2011

காலம் வரும் வரை கருவியை....

தமிழகத்தில் மூன்றாவது அணி பற்றிய பேச்சும் எதிர்பார்ப்பும் ஒவ்வொரு தேர்தலின் போதும் கிளம்புவதுதான். ஆனால் 3வது அணியைப் பொருத்தவரையில் ஒவ்வொரு முறையும் ’வரூம்...ஆனா வராது’ கதைதான். மூன்றாவது அணிபற்றிய எதிர்பார்ப்பு தலைதூக்குவதற்குக் காரணமாயிருப்பவர்கள் அனேகமாக எப்போதும் கம்யூனிஸ்டுகள்தாம்.
தனது தீராத பக்கங்கள் வலைப்பதிவில் மாதவராஜ் ‘கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்’ என இரண்டு பதிவுகள் இட்டிருக்கிறார். விரிவானதாக அல்லாவிட்டாலும் செறிவான பதிவுகள். ஜெயலலிதாவிடம் போய் நிற்பது பிரச்னை அல்ல. நிர்பந்தம். ஆனால் ஜெயலலிதா சொன்ன இடத்தில் ‘நிற்பது’ என்கிற அளவிற்கு அவர் கொண்டுவந்து வைத்துவிடுவார்.

ஜனநாயகம் என்பதை பாவனை நிலையில் கூட அனுசரிக்காத அவரது போக்கின் வெளிப்பாடே இன்று ‘தன்னிச்சை’யாக அவர் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டமை ஆகும். கருணாநிதியைப் பொருத்த அளவில் பொதுக்குழு செயற்குழு எனப் பலபேர்கள் சொல்லி ஜனநாயகக் காட்சியை திற்ம்பட நடித்துக் காட்டி நடத்திக்காட்டி இறுதியில் தனக்குச் சாதகமான முடிவை எட்டுவார். குறைந்த பட்சம் தொழிற் கூட்டாளிகளிடம் கலந்துகொள்கிற பண்பு ( அதை கழகத்தினர் மாண்பு என விளிப்பர்) அவரிடம் உண்டு. முழுக்கவும் அவரது பாச்சா பலிக்காமற் போயிருப்பது நாயன்மார்களிடம்தான். அதாவது அறுபத்து மூவரிடம்.

எதிரணியில் ம.தி.மு.க வுக்கு ஒரு ‘ஆழ்வார்கள்’ (பன்னிரெண்டு பேர்) கோஷ்டிக்கு கிடைத்திருந்தால் கூட இன்றைக்கு மூன்றாம் அணிப்பேச்சு இப்போது வலுவடைந்திருக்காது.  சூழல் என்னவென்றால் கார்த்திக் எல்லாம் மூன்றாவது அணிக்கு தோள் கொடுத்துத் தூணாக விளங்கும் நிலை வந்துவிட்டது.

உண்மையில் விகிதாசார முறையை அமல்படுத்துவதில் ஜெயலலிதாதான் முன்கை எடுப்பார் போலிருக்கிறது. கம்யூனிஸ்டுகளுக்கும் வை.கோ வுக்கும் அவர் தொகுதிப் பங்கீடு சொன்னவிதத்தில் அது வெளிப்படுகிறது. வாய்ப்பு இருந்தும் மந்திரி பதவிகள் கிடைக்காவிட்டால் உறுப்பினர்கள் என்னவென்ன செய்து காட்டுவார்கள் என்பதை கோபால்சாமியின் கண்ணான கண்ணானவர்கள் நிரூபித்துக்காட்டினார்கள். ஓரிரு தேர்தல்களுக்கு எம்.எல்.ஏ , எம்.பிக்களும் இல்லாது போய்விட்டால் கட்சி என்ன ஆகும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மூன்றாவது அணி அமைக்கப்பெற்றால் அது தொகுதிகள் தோறும் இருபது சதவீத வாக்குகளைத்தாண்டி பெறப்போவதில்லை. ஆகவே இம்முறை ஜெயலலிதாவை அனுசரித்துப்போவது ஒன்றே மாற்று. அல்லது மூன்றாவது அணி அமைத்து தொங்கு சட்டமன்றக் காட்சிகளையும் பார்க்கலாம். மூன்றவது அணி அமைக்கும் அளவு தைரியம் இருப்பின் விகிதாசார முறைத் தேர்தல் குறித்துக் குரல் கொடுக்கலாம் நாம்.

Monday, March 14, 2011

சாதிக்கட்சிகளின் நிலை- நிலைப்பாடுகள் - எழுச்சிதாழ்ச்சிகள்.

தமிழகத்தில் நிலவும் பல சாதிக்கட்சிகளின் பெயர்கள் கூட முழுதாகத் தெரியாத நிலையில் சில ஞாபகங்களில் இருந்து இதை எழுதுகிறேன். அப்படி பெயர் விளங்காமல் இருப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. வேட்புமனுக்கள் தாக்கல் படப்போகும் மூன்று நான்கு நாட்களுக்குள்
புதிதாக எதேனும் சாதி அமைப்புகள் தோன்றி போட்டிக்கு வந்துவிடவும் வாய்ப்புகள் உள்ளன.

சாதிச் சான்றிதழுக்குக் கஷ்டப்படும் இருளர்கள், தேவ கவுடா பிரதமரானதற்கு மகிழ்ந்த ஒக்கலிகர்கள், பலிஜா நாயுடுகள்.... என யாவரும் போட்டியிடலாம்தான். தமிழகத்தில் பொருளாதார மேம்பாட்டை எட்டிக்கொண்டிருக்கிற கவுண்டர்கள் ‘கொங்கு’ என்ற பேராலும் நாடார்களும் தனக்கென தனி இடம் பெற்றிருப்பதும் ஆதிதிராவிடர்கள் வழக்கம்போல தங்களது சதவீதத்துக்கும் ஏழ்மைக்குமான ஒப்பீட்டைக் கருத்திற்கொண்டு மிகையான இடங்களைச் சாதிக்காமல் போவதும் ஆழ்ந்த மிகச் சோகம் தரும் வருத்தத்தை என்னில் ஏற்படுகிறது.

மனத்தகவமைப்பில் சாதிவாரி அடுக்குகள் படலக் கோடாக தோன்றாத பட்சத்தில் சென்னையில் ஆரம்பித்து நெல்லைவரை புவிப்பரப்பு மீதான பயணத்தை மனதால் ஓட்டித்தான் இதை எழுதவேண்டியிருக்கிறது.

 தி.மு.க  அனுபவித்துவந்து சொப்பனாவஸ்தை நிலையைக் கருத்தில் கொள்ளாமலும் தன்னை வலுவுக்கு மீறி நம்பியதாலும் பூவை.ஜகன் மூர்த்தியார் அந்தக் கூட்டணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். பேனர்களின் எண்ணிக்கை மட்டும் வெற்றியைத் தீர்மானிக்கும் என அவர் கருதியிருக்கக் கூடும். பத்துத் தொகுதிகளில் அவர் தனியாக நிற்கப் போகிறாராம். அந்த வட்டாரத்தில் அவரது சாதியினரின் மனநிலை எத்தகையதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவருக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

பா.ம.கட்சி தனது அரசியலின் தசாப்தங்களின் பாரம்பரியம் காரணமாகவும் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றதன் வாயிலாகவும் பரவலாகப் பல இடங்களிலும் வெவ்வேறு சாதிக்காரர்களை செயலாளர் மட்டங்களில் இணைத்துக்கொண்டதாலும்  எல்லாவற்றையும் விட தனது கட்சிப் பெயரின் காரணமாகவும் ‘வன்னியர்’ கட்சி என்கிற பேரை வேறோர் பூச்சு கொண்டு மறைத்திருக்கிறது.அவர்கள் தனக்கென பத்துப்பதினைந்து இடத்தைப் பிடித்து ‘ஊசல்த் தேர்வு’ நிலையை தமிழக முடிவுகள் தருமானால் பலமான கட்சியாகக் கூட மாறமுடியும்.

பா.ம.க வின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளைக் கவனித்து வந்த ‘கவுண்டர்’களுக்கு தனிக்கட்சி ஆசை வந்தது வியப்பில்லை. கலாசார ரீதியில் செய்வதற்கு அவர்களுக்கு எவ்வளவோ பணிகள் இருப்பினும் வாக்குத்தேர்தல் வசீகரித்து பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை துருப்புச்சீட்டாக்கி (இரு கூட்டணிகளிலுமாக) ஏழெட்டு சீட்டுகளைப் பெற்றுவிட்டார்கள். அவர்கள் இரண்டு சீட்டுகளுக்குமேல் வெல்லமுடியாது என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் வெற்றியோ ஸ்ரீதர் வாண்டையாரின் வெற்றியோ அந்தந்தக் கழகத்தின் வெற்றியாகப் பாவிக்கப்பட்டாலும் ‘நீயில்லாமல் நானில்லை’ என்கிற ஆழ்ந்த பிணைப்புக்கொண்டதாகவே அந்த வெற்றிகள் இருக்கும். அ.தி.மு.க தேவர்களின் கட்சியாக பாவிக்கப் படுவதற்கு சசிகலாவின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.

ஜான் பாண்டியன் ஒரு படுகொலை காரணமாக தனது இயக்கத்தைக் கொன்றேவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். புதிய தமிழகம் தனது இரண்டு சீட்டுகளின் வெற்றிதோல்வியைக் கொண்டுதான் எதிர்காலத்தின்மீது பயணிக்க இயலும்.

அண்ணாச்சிகள் அள்ளிக்கொள்ளுமளவு பணமும் சொல்லிக்கொள்ள கு,காமராஜரும் இருப்பதால் தனியாக சீட்டுப் பெற்றுவிட்டார்கள். தி.மு.கவில் பெற்றது ஒரு சீட்டுதான் எனினும் அடையாள ரீதியில் இது கவனம் பெறும் முயற்சியும் செயல்பாடும் ஆகும், இதில் சரத்குமாரின் அதிர்ஷ்டம் இரண்டு சீட்டுகள் பெற்றது. நாடார் என்பதற்காக ஒன்று நடிகர் என்பதற்காக ஒனறு.

கார்த்திக்கிற்கு எத்தனை சீட்டுகள் என்பது தெரியவில்லை. இப்போதெல்லாம் மனிதர் கொஞ்சம் பக்குவமாகப் பேசுகிறார். முத்துராமனுக்கும் முத்துராம லிங்கத்துக்கும் வித்யாசம் தெரியாதவர்கள் அவரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவும்கூடும். எப்படி இருந்தபோதும் தமிழ் நாட்டில் ஃபார்வார்டு பிளாக்கின் சமாதிக்கு கடைசிக்கற்கள் எடுத்து அடுக்கியவர்களின் பட்டியலில் அவரது பெயரும் உண்டு.

விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு அறிவாளி எம்.எல்.ஏக்களைப் பெற்றதன் மூலம் தமிழ்நாடு முழுதும் பரவலாக அறியப்பட்டதும் பரவிவிட்டதும் ஆகிவிட்டது. கடந்த முறை அவர் நிறுத்திய வேட்பாளர்கள் பட்டியல் அதையும் சாதிக்கட்சியாகவே காட்சியது. இந்த ஒதுக்கீடுகளில் விழுக்காட்டுக் கணக்குப் போட ஏதுவாக 10 இடங்கள் அதற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. திருமா இதுவரை என்னவாக இருந்தார் என்பதை அவரது செயல்பாடுகள் காட்டிவிட்டன. இனியும் என்னவாக இருப்பார் என்பதை பட்டியல் காட்டிவிடும்.

இதுகாறும் பெயர் சொல்லாமல் நடந்துகொண்டிருந்த ஒதுக்கீடுகள் இப்போது பெயரைச் சொல்லி நடக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால் ‘’ எங்க எம்.எல்.ஏ’’ என்று தொகுதியைச் சொல்லி உரிமை கொண்டாடும் வாக்காளர் மனம்.  இனி ‘’ எங்க எம்.எல்.ஏ ‘’ என அழைக்கப் பெறுபவர்கள் யாராக இருப்பார்கள் என எண்ணும்போது.....

‘கட்சி கட்டுதல்கள்’ ஏற்படும் ரூபங்கள் அத்தனை உவப்பானதாக இருக்கும் எனத் தோன்றவில்லை. காலம் முன்னோக்கி நகர்ந்தாலும் பின்னோக்கி நகர்ந்தாலும் ஒரே விளைவுதானோ எனக் கேள்வியாக இருக்கிறது.

Wednesday, March 9, 2011

தொகுதி மாற்றங்களும் சில ஏமாற்றங்களும்

தி.மு.க தரப்பு தொகுதிப்பங்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட பாவனையில் காட்சியளிக்கிறது. அரசு கட்டிலில் அமர்ந்து அவர்கள் தனிப் பெரும்பான்மை எட்டவேண்டுமானால் கிட்டத்தட்ட போட்டியிடுகிற அத்தனை இடங்களிலுமே வென்றாக வேண்டும் என்கிற அளவு நிலையில் தி.மு.க வின் ஒதுக்கீடு அமைந்திருக்கிறது.
முதலில் மிகத் துரிதமாகக் காட்சியளித்த அ.தி.மு.க இப்போது சுணக்கம் காட்டுகிறது. விரைவில் அது தனது பங்கீட்டை முடிக்கவேண்டுமெனில் கம்யூனிஸ்டுகள் மற்றும் ம.தி.மு.கவுடன் இணக்கம் காட்டவேண்டும். மூன்றுக்கும் தலா பத்துக்கும் குறைவாக நல்குதலே ஜெயலிதாவுக்கு உவப்பானதாக இருக்கலாம். கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த அளவில் மார்க்சிஸ்டுகள் பெறுகிற அதே அளவை இந்திய கம்யூனிஸ்டுகள் பெறாவிட்டால் தத்துவார்த்த உளவியல் சிக்கலின் பாற்பட்ட தொய்வுக்கு அவர்கள் ஆளாவார்கள் என்றாலும் ஸ்திதிகதிகளை ஆலோசிக்கும்போது மார்க்சிஸ்டுகள் கூடுதலான இடத்தைப் பெற்றுவிடுவார்கள். மொத்தம் இருபத்தை ஐந்து சீட்டுகளுக்குள் இந்த இரண்டு கம்யூனிஸ்டுகளும் அடங்கிவிடும் என்கிற நிலையில் அடுத்து நிற்பது ம.தி.மு.க தான்.

ஏறக்குறைய அ.தி.மு.வின் கொள்கைப் பீரங்கியாகவும் விசுவாசியாகவுமே மாறிப்போய்விட்ட வை.கோவின் கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்பது கேள்வி. மனதளவில் அவர் இருபதுக்குத் தயாராகிவிட்டார். இருபது ஆட்கள் இருக்கிறார்களா? என்பது அ.தி.மு.கவின் கேள்வியும் பெரும்பான்மைப் பொது மக்களின் கேலியுமாகும். தலைவன் மற்றும் தலைமை மட்டுமே இயக்கமாக மாறிவிடாது என்பதன் கனத்த உதாரணமாக ம.தி.மு.க இலங்குகிறது. அடிமாட்டு விலைக்கும் தோல்விலைக்கும் இடையில் ஒரு கணக்கைப் போட்டு பதினைந்து பதினாறு சீட்டுகளை வை.கோவுக்கு ஜெயலலிதா வழங்குவார் என நினைக்கிறேன்.

தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளின் மண்ணிலும் கால்பதித்து ஒரு புயலாய் ஒரு சுறாவளியாய் ஒரு சண்டமாருதமாய் அலை வீசி அடிக்கிற ஆற்றலும் உடற்றிறனும் தொண்டுள்ளமும் தொண்டை வளமும் அவருக்கு மட்டுமே உள்ளது என்பதால் ஜெயலலிதா அவர்மீது கருணை கொள்வார்  என நம்புகிறேன். இன்றைய (09.03.2011) தினமணியில் குறிப்பிட்டுள்ளது போல மூன்றாவது அணியும் அமைந்து தேர்தல் களத்தில் வகைதொகை இல்லாத  காட்சி மாற்றங்கள் பார்க்கக் கிடைக்காது என நம்புகிறேன். விஜயகாந்தை மட்டும் முழுக்க நம்பி மற்றவர்களையும் தன்னையும் ஒருசேர நட்டாற்றுக்கு ஜெயலலிதா இழுத்துக் கொள்ளமாட்டார்.

இப்போது தொகுதிப் பங்கீட்டில் உற்பத்தியாகப் போகும் இழுபறிக் குழப்பங்கள் என்னவென்றால் சீரமைக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப் பட்ட தொகுதி வரைபடங்கள்தான். அது தீவிரமான சர்ச்சைகள் ஊடல்கள் வட்டார ஆட்களின் மனமுறிதல்கள் ஆகியவற்றுக்குக் காரணமாக அமையப்போகிறது.

நான் நன்கறிந்த தொகுதி எங்கள் தொகுதியான வெள்ளகோவில், அந்தத் தொகுதி இந்தத் தேர்தலில் இல்லை. அத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் இப்போது தாராபுரத்திலும் போட்டியிட முடியாது அது ‘தனி’த் தொகுதி.
ஒட்டன் சத்திரத்தில் போட்டியிடலாமெனில் அது கொறடா சக்கரபாணியின் தொகுதி. மாவட்டச் செயலாளராகவும் இருக்கிற சாமிநாதன் ஒரு வேளை காங்கேயத்தில் போட்டியிடலாம் என்றால் அது விடியல் சேகருக்கான காங்கிரஸ் தொகுதியாக இருக்கிறது.

இப்போது சாமிநாதன் நெடுஞ்சாலைகளில் தனது தொகுதி எது எனத் தேடிக்கொண்டிருக்கிறார். விடியல் சேகர் தனது ‘அஸ்தமனம்’ நெருங்கிவிட்டதோ என அச்சப்பட்டிருக்கக் கூடும். தமிழக விரிவிலும் அளவிலும் இதுபோல எண்ணற்ற இக்கட்டுகள் பெருகியிருக்கும் நிலையில் எல்லாக் கட்சிகளுக்கும் சிக்கல்கள். இவை சிந்தனையை வேண்டுகிற சிக்கல்களாயிருப்பது மேலும் தலைவலி.

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதில் கருணாநிதியின் பலம் என்னவெனில் தங்கபாலு காங் தலைவராயிருப்பது. ஜெயலலிதாவின் பலம் என்னவெனில் ஜெயலலிதா ஜெயலலிதாவாக இருப்பது.

Monday, March 7, 2011

பெண்களின் தினச் சேதி

பெண்கள் தினத்துக்கு வாழ்த்துச் சொல்வது அத்தனை சம்பிரதாயகரமாகவும் அலுப்பூட்டுவதாகவும் (ஆணியல் அடிப்படையில் உட்குமைந்திருக்கிற காமத்தின் பாற்பட்டு ) குற்ற உணர்ச்சி தருவதாகவும் இருக்கிறது. ஆனாலும் சித்திரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டுவரும் நிலையில் பெண்கள் தினத்தைப் பற்றி எண்ணங்கொள்ளாமல் தள்ளிப்போடுவதும் சாத்தியமாகவில்லை.

பெண்கள் தினத்தை பெரும்பான்மை சனரஞ்சக இதழ்கள் ‘மகளிர் தினம்’ என விளிப்பதிலேயே தமது உள்ளங்கைக் கூட்டுக்குள் பெண்களை வைக்கவேண்டும் என்கிற மனோரீதி காணக்கிடைக்கிறது. இந்த ஆண்டின் பெண்கள் தினம் தமிழகத்தில் மிக அடுத்து தேர்தலைக் காணவுள்ள ஒரு நாளாக மலர்ந்துள்ளது(இதை ஒரு நாளின் மலர்ச்சியாகக் கொள்ளவேண்டுமேயல்லாமல் பெண் = மலர் என்கிற பாவனையில் கொள்ளவேண்டாம்).

அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க போன்ற நூறுக்கும் அதிகமான இடங்களில் போட்டியிடும் இரு கட்சிகளை விட்டுவிட்டு அடுத்துள்ள நிலையில் உள்ள கட்சிகளைப் பாருங்கள். காங்கிரஸ்,பா.ம.க, வி.சி. தே.மு.தி.க,கம்யூனிஸ்டுகள், கொ.மு.க,த.மு.மு, ம.தி.மு.க இப்படி ஏகப்பட்ட கட்சிகள் போட்டியிடப் போகின்றன. அவை விகிதாசார அடிப்படையில் பெண்களுக்கு எத்தனை எத்தனை இடங்கள் ஒதுக்கப்போகிறார்கள் எனப் பாருங்கள்.

(தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த மூன்றாம் பாலினரான ரோஸ் மற்றும் கல்கி ஆகியோருக்கு ஒதுக்கப்படுமா என்பது மூன்றாம் பிரச்னை: மூன்றாம் பிரச்சினை என்பதாலேயே முக்கியத்துவமற்ற ஒன்றாக அது மாறிவிடாது.லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு விசா கூடக் கிடைக்கவில்லை என்பதை அவர் தனது பதிவில் கொந்தளித்திருக்கிறார்.)

பெண்களுக்கு அவர்கள் சதாகாலமும் மசோதா நிலைப் பேச்சிலேயே உள்ள 33.333333  சதவீத ஒதுக்கீட்டைச் செய்கிறார்களா எனப் பார்க்கவேண்டும். (மிகச் சிக்கலான பாகா எண் இந்த 100.) அப்படி ஒதுக்கீடு செய்யாத பட்சத்தில் பெண்கள் தேர்தலை- வாக்களிப்பைப் புறக்கணித்தால் எப்படி  இருக்கும்  என யோசித்துப்பார்க்கிறேன். எட்டாந் தேதி ஒன்றில் எட்டாத காரியங்களைப் பற்றிச் சிந்திக்கநேர்ந்துவிட்டது ஆண்மையப் பிழையாக இருக்காது என்றும் நம்புகிறேன்.

Sunday, March 6, 2011

கழகத்தின் ‘கை’யறு நிலை

இன்றைய தின இதழை வாசித்தபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி கருணாநிதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு எள்ளளவிலும் குறைவில்லாததே. தனித்த அளவில் லாப நட்டங்கள் இல்லாதபோதும்.

ரோஷக்காரர் மற்றும் தன்மானம் மிக்க நண்பர் விஜயகாந்த என அழகிரியால் சான்று புகழப்பட்ட புரட்சிக் கலைஞர் கூட தனது கூட்டணி ஒப்பந்தத்தை அ.இ.அ.தி.மு.க வுடன் இறுதி செய்துவிட்ட நிலையில் தி.மு,க, காங்கிரஸ் தரப்பு தனது ஒப்பந்தத்தை இறுதி செய்யாத நிலை நீடிக்கிறது.

அம்மட்டோ... காங்- கின் அழிச்சாட்டியம் தாளாமல் தனது மந்திரிகளையும் மத்திய அமைச்சரவையிலிருந்து பின்மாற்றிக் கொள்வதாக மு.க அறிவிக்குமளவு நிலைமை முற்றிவிட்டது.

ஐம்பதில் தொடங்கி அறுபது வரை வேட்புச் சீட்டுகள் தர தி.மு.க ஒப்புக்கொண்டபின்னும் அறுபத்தி மூன்று வேண்டும் என காங்- உறுதி காட்டுகிறது.

அதுகூடப் பரவாயில்லை. அந்த அறுபத்துமூவரையும் தங்கள் தொகுதியை எடுத்துக்கொண்டு மீதத்தை தி.மு.க வுக்குத் தருவோம் என அவர்கள் கூறுவது இதுகாறும் நாடு காணாத வினோதமாகும். கூட்டணிகளுக்கு தர்மம் என ஒன்று உண்டா? எனச் சிலர் வினவலாம். ஆனாலும் உண்மை என்னவென்றால் கூட்டணிகளுக்கு தர்மம் உண்டு ;ஆனால் தர்மம் தற்காலிகமானது.

அறம் மீறிய ஆசையிலும் கண்மூடித்தனத்திலும் காங்கிரஸ் இந்தப் பிடிவாதம் காட்டுகிறது. இது தனித்து நின்று தி.மு.க வெற்றி பெறும் என்று துருத்தி ஊதுகிற கி.வீரமணியின் கண்மூடித்தனத்திற்கு ஒப்பானது.
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மூடநம்பிக்கை இல்லாமல் வாழ்வை ஓட்டமுடியாது என வீரு நிரூபிக்கிறார்.

தனது நீண்ட நெடுநாள் அனுபவத்தில் இப்படியான சிக்கலை அனுபவித்ததில்லை என்கிறார் கருணாநிதி. அவர் மட்டுமல்ல இந்தியாவில் எந்தக் கூட்டணியும் இப்படியான நிலையை அனுபவித்திருக்குமா என்பது ஐயமே.

என்ன செய்வது ’மேன் மக்கள்த் தொடர்பு சதிகாரி’ நீரா ராடியா இல்லாமல் இருந்திருந்தால் கதைப் போக்கு வேறுமாதிரி இருந்திருக்கும்.கம்பு ஊன்றி நடக்கும் கடைக் காலத்தில் கருணாநிதிக்கு காலம் அனுப்பிவைத்தை வசந்த சேனை இந்த நீரா. ஜனகீயமும் சாணக்யமும் நன்கறிந்த தமிழகத்தின் இந்நாள் முதல்வர் தொடுத்த அஸ்திரம்தான் மத்திய அவையில் தனது அமைச்சர்களை ராஜினாமாக் கோரவைப்பது.

இன்றைக்கு ஃப்ளைட் பிடித்து இரவு குலாம் நபியோ வீரப்ப மொய்லியோ வருவார்கள் டெல்லியிலிருந்து சென்னைக்கு. அறுபத்தியொரு இடங்கள் காங்கிரசுக்கு....ஆயிரத்தொரு இடர்கள் தி.மு.கவுக்கு. 

வாஸ்துப் பார்த்து... வாஸ்துப் பார்த்து...

ஒரு தேநீர்க்கடைக் காரரிடம் ஆட்டோக்காரர் ஒருவர் சக ஆட்டோக்காரரைப் பற்றிச் சொன்னது,

‘’அவன் முதல்ல பம்பாய்ல ஆட்டோ ஓட்டிக்கிட்டுருந்தாண்ணே. அவன் சொன்னான் முதல்ல ஓட்டறப்ப அங்க இருக்கற இடங்களே தெரியாது. ஆள் ஏறி உக்காந்தா மெதுவா ஓட்டிப் போய் வாஸ்துப்பாத்து வாஸ்துப் பாத்துக் கரெக்டாக் கொண்டு போய் விட்டுடுவேன்னு சொன்னான். அது எப்பட்றா முடியும் ரைட்ல போ வேண்டியதுக்கு வாஸ்துப் பாத்து லெஃப்டுல போனீனா எடத்துக்கு போய்ச் சேரமுடியுமான்னு கேட்டேண்ணே. அவன் சொன்னான் மெதுவாப் போய்க்கிட்டே போர்டுகளை வாஸ்துப் பாத்து வாஸ்துப் பாத்து கொண்டுபோய்ச் சேர்த்துடுவேன்னு.’’

சென்னையில் இந்தச் சம்பவத்தை நேரில் கண்டுகேட்டு அலைபேசியில் சின்னமனூர் ஸ்ரீதர் சொன்னபோது சிரித்துமுடிந்து வியப்பில் ஆழ்ந்துவிட்டேன். பேச்சை எப்படியெல்லாம் வாஸ்துப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

Wednesday, February 16, 2011

பதற்றம்

செய்யாமல் விட்டவை
இயலாமல் விட்டவையாய்
உருப்பெறாமல் போகின்றன.

நிகழ்வனவற்றைத்
தீர்மானிப்பவை இரண்டு
தரப்புகள் மற்றும்
வரலாற்றின் தடுப்புகள்.

மெல்லிய அல்லது வலிய
பதற்றங்களால் தவறிப் போகிற
எல்லாவற்றிலும்
காரணமாயிருக்கின்றன
தன்வரலாறும் சூழல் வரலாறும்.

ஒரு திட்டமிடலில்
அல்லது பதற்றத்தில்
அல்லது உயரெழுச்சியில்
எதோ ஒரு செயல் நடக்கிறது.

அது, தன் வரலாற்றினை
மீறுகிற ஒன்றாய் அமைகிறபோதே
புதிய வரலாறாகவும் மாறுகிறது:
வரலாற்றின் பதற்றம்.

Saturday, February 12, 2011

மேல் நிற்றல்

கீழே நிற்பவருடன் உரையாட
என்ன இருக்கிறது?
அவர் மேல் நோக்கி
விழிகளை உயர்த்தும் போதே
இரைஞ்சுகிற பாவனை வந்துவிடுகிறது.
கேள்விகளுக்கும் பதில்களுக்கும்
இடையில்
உண்மை ஒளிந்துகொண்டு விடுகிறது.

உடனடியாக ஒரு ஏணி
தேவைப்படுகிறது எனும்போது
அது
நமது பரணில் இருப்பதும்
நினைவுக்கு வந்தாலும் அதை
எடுத்துத் தர மனங்கொள்வதில்லை.

அவர் ஏறி வருகிறபோதே நாம்
இறங்கிச் சென்றுகொண்டிருப்பதான
காட்சி பற்றிய சித்திரம்
வந்து மருட்டுவது
காரணமாயிருக்கலாம்.அல்லது
உரையாடல் நமது சுகத்திலும்
லாபத்திலும் பங்கு வைப்பதை
நோக்கிச் சென்றிடக்கூடாது
என்பதும் கூட.

கீழ் நிற்பவர் முறைத்தார் என்றால்
ஐயமேயில்லை அவர்
சட்டத்திற்குப் புறம்பாக
இருக்கிறார். சரி உரையாடலை
துண்டித்துக்கொள்ளலாம்.

என்றேனும் அவர் சமக் கட்டில்
வந்து முகத்தை நேராகப் பார்க்கும்
கணங்கள் வாய்த்து விடாதவாறு
சூழல் நம்மைக் காப்பாற்ற
வேண்டுமென
கண்ணறியாத மாயக்கரங்களை
வேண்டிக்கொண்டு
இந்தப் பரிமாற்றத்தை
இந்த அளவில் முறிக்கிறோம். பிறகு
கீழ் நிற்பவர் பார்வைக் கோணத்தில்
இருந்து
மறைகிறார்.

Wednesday, February 9, 2011

ஒரு தேநீர்க்கடை ஞாபகம்....

இன்றைக்கெல்லாம் அது நடந்து பதினைந்து பதினாறு ஆண்டுகள் இருக்கும். மதுரையில் - திருப்பரங்குன்றத்தில் தமிழ்ப்புத்தாண்டினை ஒட்டிய த.மு.எ.ச வின் கலை இரவு.

பலபேர் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பேச்சாளர் மேடையேறுவதற்கு முன்பாக தேநீர் அருந்தலாமே என்றார்.நானும் செல்வனும் (அப்போது மதுரை இப்பொழுது கோயமுத்தூர்) அவரும் தேநீர்க்கடை நோக்கிச் சென்றோம். அவரைச் சுற்றி (என் போன்ற சிறுவர் குழாமும்) இளைஞர் பட்டாளமும் ஒரு இன்முக வசீகரிப்பில் ஒருங்கிச் சூழவே இருக்கும். ஆகவே டீக்கடை ஏகுமுன் எண்ணிக்கை அதிகரித்தது இயல்பான செயலே.

தேநீர் மேஜையாளர் ‘’எத்தனை டீ?’’ என்றதும் அவர் தலைகளை எண்ணினார். அல்லது முகங்களை எண்ணினார் என்று சொல்வது பொருத்தமே எனினும் அவரது உயரத்திற்கு தலைகளை எண்ணினார் என்று சொல்வதே பொருத்தம்.

(இலக்கியப்பேச்சுகள் மனதில் தேங்கி ரீங்காரம் குறையாமலிருந்த மொழிச் சுழல்வு சூழலைப் புலமெனக் கவ்வியிருந்தது)

‘’ஒன்னு, ரண்டு,மூணு,நாலு,அஞ்சு,ஆறு’’ தேநீர்க்காரரிடம் திரும்பினார்.’’ஆறு. டீ ஆறு. ஆரு... நீ ஆரு நான் ஆரு?’’  சுற்றிலும் மகிழ்வும் நெகிழ்வுமான சிரிப்போசை கவ்வியது. கூடக் குறையச் சுவைகளைத் தோற்றுவிக்காத ஒரே தேநீரை ஆறு பேரும் பருகினோம் என்றுதான் தோன்றியது.

அந்தப் பேச்சாளர் , பேச்சாளர் என்று அறியப்பட்டிருந்தாலும் சிறுகதை எழுத்தாளர் என்று தெரியப்படுத்த மறுபடி ஒரு தசாப்தம் தேவையாயிருந்தது. அன்றைக்கு வெறும் தவணைக்குத் துணி வைப்பவனாய் அறியப்பட்டிருந்த எனது கவிதைகள் சில்வற்றை வாங்கி திருச்சியில் நந்தலாலாவுக்கு அனுப்பி ‘சோலைக் குயில்களில்’ பதிப்பித்தார்.

பேரெழில் வாய்ந்த கையெழுத்துக்கு உரிமையாளராகிய அவர் இரண்டு குறும் படங்களையும் இயக்கியிருக்கிறார். 1.ராமய்யாவின் குடிசை 2.என்று தணியும்.

திடீரென அவரது வலைப்பக்கம் குறித்த தகவலை ‘அடர் கருப்பு’ வலைப்பக்கத்தில் பார்த்து விட்டு இன்று வாசித்தேன். அவரது நேற்றைய பதிவுதான் எனது இன்றைய பதிவையும் நினைவையும் கிளறியது. அதுவும் ஒரு தேநீர்க்கடைச் சம்பவம்.

( முன்னிரு முரசங்கள் தாமே அதிர.... நானும் அவரும் மதுரையில் சுற்றித் திளைத்த மீனாட்சியம்மன் கோவிலெல்லாம் நினைவுக்கு வருகிறது.

அவ்வவற்றின் ஞாபக அடுக்குகளின் பிரகாரம்)

அவருடன் ஒரு தேநீர் அருந்தி ஆண்டுகள் சில ஆகிவிட்டன. அந்தத் தருணத்தை விடவும் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியாகும் நாள் ஒன்றினைத்தான்.

மீதமுள்ள பார்வைக்கு unmaiputhithandru.blogspot.com.

Monday, February 7, 2011

மறுபடியும் முதல்ல இருந்தா?

நேற்றிரவு கணினியில் ஆர்வமாக செய்தி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்த சாந்தியிடம் கேட்டேன், ‘என்ன செய்தி இவ்வளவு ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்?’ என்று.

மூன்றடிக்கும் அப்பாலிருந்து சாய்குத்துக் கோணத்தில் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இஸ்ரோ என்கிற வார்த்தை மட்டுமே புதியதாகக் காட்சியளித்துக்கொண்டிருந்தது.

கணினியை மௌனமாக்கி விட்டு சாந்தி ‘எதோ இரண்டு லட்சம் கோடி ஊழலாம்?’ என்றார்.

‘’எதோ இஸ்ரோன்னு போட்டிருந்துச்சு?’

‘இஸ்ரோதான் பட் டூஜி சம்பந்தப்பட்டது.’

‘அப்படின்னா அவ்வளவு இருக்காது. டூஜியே ஒன்னு எழுபத்தாறுதானம்மா?’’

‘’அப்படின்னா இரண்டாயிரம் கோடின்னு வச்சுக்க!’’ என்றார் எனக்கு எதோ காசோலை தருவது போல. அப்புறம் அந்த உரையாடல் துண்டாடப்பட்ட பின்னர் காலையில்தான் நாளிதழ் பார்க்கிறேன்.

இந்த ஆயிரம் லட்சம் கோடி வகைகளுக்கு எத்தனை சுழிகள் எனத் தெரியாததால் உண்மையில் இத்தகு செய்திகள் ஆர்வம் தராமல் போய்விட்டன. ஆனாலும் பொதுக்குழு மாநாட்டில் ராசாவைப் பாராட்டித் தீர்மானம் என்பது போல் கருணாநிதி டகாலிட்டிகள் விடும்போது மட்டும் சுவாரசியம் கூடிவிடும். பிறகு இன்னும் ஏன் நான் மூர்ச்சையடையாமல் இருக்கும் அளவு தரங்கெட்டுப் போய்விட்டேன் என என்னை நானே நினைத்துப் பரிதாபமாக இருக்கும்.

காலையில் நாளிதழ் பார்த்தால் தணிக்கைக் (உண்மையிலேயே இது ஒரு தனிக் கை போலத்தான் தெரிகிறது) குழு இரண்டு லட்சம் கோடி முறை கேடு என அறிக்கையிட்டிருக்கிறது.

இத்தனை ஊழல்களுக்குப் பிறகும் எனக்கெல்லாம் சோறு கிடைக்கிறதே
என எண்ணும்போது மலைப்பாகவும் தித்திப்பாகவும் இருந்து பாரத மணித்திரு நாட்டின் செல்வவளத்ததனை நெஞ்சில் போற்றினேன்.

இறுதியில் இந்தப் பகிர்வை   வகைமைத் தரவில் அரசியலில் சேர்ப்பதா ஊழலில் சேர்ப்பதா என மனங்குழம்பி இஸ்ரோ வகையிலும் ஊழல் நடந்திருக்கவேணாமே என மனம் விரும்பி பகிர்வு என்றே பதிவிடுகிறேன்.

நிலா நாற்பது - 13

சூரிய ஆதியில்
சந்திர ஜோதி.
பெருகிப் புடைப்பதும்
உருகி மறைவதும்
அதன் தனி நியதி.

Friday, February 4, 2011

என் பெயர் சிவப்பு

ஓரான் பாமுக் எழுதிய மை நேம் ஈஸ் ரெட்- டின் தமிழ் மொழி பெயர்ப்பை மெல்லிய முறுவலுடன் படித்துமுடித்தேன். முறுவல் கடைசி வாக்கியங்களின் பலனால் விளைந்ததாகும்.

கிழக்கும் மேற்கும் அல்லாவுக்கு உரியன(இது குர் ஆனிலிருந்து), ஆனாலும் கிழக்கு கிழக்குதான் மேற்கு மேற்குதான். மத்தியக் கிழக்கின் பாரங்களும் அபாரங்களும் உண்மையில் வேறுமாதிரியானவையே. கிழக்கும் மேற்கும் என்றைக்கும் இணைய முடியாதோ என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது.

சாத்தானின் இருப்பு தவிர்க்க முடியாததாகிற பட்சத்தினூடே பேரறிவாளனின் பார்வைக்கோணம் பற்றிய விவாதம் ஓவியங்களூடாக பரிமாற்றத்துக்கு வருகிறது.

ஹிந்துஸ்தானத்தை அக்பர் ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில் துருக்கியில் இஸ்தான்பில்லில் கதைச் சம்பவங்கள் நடக்கின்றன. வாழ்வில் மறுக்கவே இயலாத கருதுகோள்களை அத்தியாயங்களுக்கிடையில் கதை மாந்தர்கள் தன்’மை’யப்பேச்சினூடாக வெளிப்படுத்துகிறார்கள். அடுத்த அத்தியாயத்தை யார் பேசப் போகிறார்கள் என யூகித்துப் பெரும்பாலும் தோற்பதும் சிலநேரம் வெல்வதும் வாசிக்கும்போது எனக்கு மகிழ்வூட்டிய அம்சமாக இருந்தது.

ஒரு துப்பறியும் நாவலின் சுவாரசியத்தோடும் ஓவியர்களையே வாசிக்கத்தூண்டும் விவரணைகளோடும் நாவல் விரைகிறது. இதை மொழி பெயர்த்துத தந்த ஜி.குப்புசாமிக்கு கலை வணக்கங்கள்.

கிட்டத்தட்ட சமகாலத்தில் முறையான அனுமதியுடன் காலச்சுவடு வெளியிட்டிருப்பது மகிழ்வளிக்கும் நிகழ்வாகும். இந்தப் பிரதியின் வெற்றி (அல்லது வரவேற்பினால் உண்டாகும் பெருமிதமும் பெருக்கமும்) இத்   தகு நூல்கள் தமிழில் வர ஏதுவாகும்.

 காலச்சுவடு பதிப்பகம் , தாம் இதுவரை வெளியிட்ட அவ்வளவு புத்தகங்களும் தங்கள் அரங்கில் கிடைக்கும் என புத்தகக் கண்காட்சியை ஒட்டி அறிவிப்பு விட்டிருந்ததும் மகிழ்ச்சி தந்த முக்கியத் தருணமாகும்..

புத்தகங்கள் மேல் பற்றுறுதி கொண்டோர் மகிழும் செயல்வண்ணம்.

என் பெயர் சிவப்பு
- ஓரான் பாமுக்.
(தமிழில்.ஜி.குப்புசாமி)
காலச்சுவடு பதிப்பகம்.
669,கே.பி.சாலை,
நாகர்கோவில்- 629001.
தொலபேசி-0-4652-278525

Monday, January 31, 2011

மாம்பழமா மாம்பழம்...

 நேற்று தில்லி சென்றதும் முதல்வர் பா.ம.க எங்களுடன்தான் கூட்டணி என்று அறிவித்ததும் அசந்துவிட்டேன். ஏனெனில் இழுபறி நிலையில் தமிழ் நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற இரண்டு கட்சிகள் பா.ம.க வும் தே.மு.தி.க வும்தான்.

ரகசியமாகப் பேச்சு வார்த்தைகள் முற்றடைந்து இறுதிக்கட்டம் வரை போனபின் தலைநகரில் முதல்வர் இப்படி அறிவித்திருக்கிறார் என நினைத்தேன். ஆனால் ஓரிரவில் (ஓரிரவு என்பது அண்ணாவால் மறக்க முடியாத ஒரு பதமாக தமிழுக்கு வந்து சேர்ந்தது. அவருக்கும் முன்னால் ஆண்டாள் அதைப் பிரயோகித்திருக்கிறார் என நினைக்கிறேன். ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்து...) கதை அதன் யதா ஸ்திதியை அடைந்து ராமதாஸ், ‘அப்படியெல்லாம் கிடையாதே’ எனத் தெரிவிக்க உடனே முதல்வரும் ‘ஆமா. அப்படியெல்லாம் கிடையாது’ என்று அடுத்த அறிவிப்பு கொடுத்துவிட்டார்.

முதல்வருக்கு தார்மீக அளவையில் ‘அவர்கள் எங்கள் கூட்டணி’ என்று கூற முன்னம்போட்ட ஒப்பந்தம் இருக்கிறது.மற்றபடி வேட்புமனு தாக்கல் செய்வது வரை ராமதாசை நம்பமுடியாது என்று அவருக்குத் தெரியாமல் இருக்காது.
மாம்பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு அன்னையைச்( சோனியா) சுற்றினால் ஆதாயகரமாக இருக்கும் என்று முதல்வர் மு.க நினைத்தார்.
மாம்பழத்துக்கு இவ்வளவு டிமாண்ட் இருந்தால்தான் அம்மா (ஜெ) வைச் சுற்றச் சரியாக இருக்கும் என்று ராமதாசும் நினைத்தார்.
எப்படியோ பா.ம.க வுக்கு முப்பது சீட்டுகள் உறுதியாகிவிட்டது.

Friday, January 28, 2011

உ(க)ள்ளக் காதல்

நேற்றைய தினமலரில் ஒரு செய்தி கள்ளக் காதலர்கள் தற்கொலையைப் பற்றியது. வெளி நாட்டில் கணவன் வாழும் மனைவியுடன் இங்கிருக்கும் ஒருவருக்கு காதல். இங்குள்ளவருக்கும் மனைவி இருக்கிறார். இந்நிலையில் காதலன் வீட்டுக்கு காதலி தேடிச் செல்கிறார். வீட்டிலிருந்த மனைவி கோபித்துக்கொண்டு சண்டைபிடித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்.

காதலன் காதலி இருவரும் தூக்கில் தொங்குகின்றனர்.காதலன் மரணம்.காதலி உயிர் ஊசல். இது செய்தி. செய்தியை கணினி வழிப் படித்த நான் அதற்கு வந்த ஒரு பின்னூட்டத்தையும் படித்தேன்.

பின்னூட்டம் மலேசியா - ‘கில்’லாங் கிலிருந்து வந்திருந்தது. ‘சாவட்டும் உடுங்க’ என்பதுதான் பின்னூட்டம். அனுப்பியவரின் பேரைப் பார்த்தேன். வாசுதேவன் என்றிருந்தது. நல்லவேளை ‘சாவு தேவன் ‘ என்றில்லாதது குறித்து சற்றே ஆறுதலடைந்தேன்.

Wednesday, January 26, 2011

தாமரை பூணுதல்

இந்த ஆண்டு தாமரை விருதுகள் பட்டியலைப் பார்த்ததும் - தமிழ் சாகித்ய அகாடமி விருது நாஞ்சில் நாடனுக்குக் கிட்டிய மகிழ்வைப் போன்றே - பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியத்திற்குக் கிட்டியதைக் கண்டதும் மகிழ்ச்சி தலைவாரிக்கொண்டு ஆடியது. தங்கத் தாமரை மகனே... லா லலல்லா... என்று பாடத்தோன்றியது.
சிற்பம் ஓவியம் நாட்டியம் முதலாய கலைகளில் எனக்கு அவ்வளவு தேர்ச்சியும் தொடரலும் கிடையாது என்பதால் அத்தகையவற்றை விட்டுவிட்டு எழுத்தாளர்கள் யாரேனும் தாமரையாளர்களாகத் தமிழில் அறிவிக்கப்பட்டிருப்பார்களா எனத் தேடினேன். வழக்கம்போல ஏமாற்றம்தான்.

கன்னடத்தில் தேவனூரு மகாதேவ- வுக்குக் கிட்டியிருக்கிறது. (அவரது சிறுகதைத் தொகுப்பு தமிழில் வந்திருக்கிறது. பசித்தவர்கள் என்பது தலைப்பென நினைவு.) ஏதோ ஒரு கதையில் , ‘நட்சத்திரங்கள் வானில். பைத்தியமடிக்குமளவு அத்தனை நட்சத்திரங்கள்’ என்றொரு வாக்கியம் வரும்.

உண்மையில் விருதுகள் தரும்போது அத்தனை அத்தனை நட்சத்திரங்கள் தேர்வுக்கு முன்னர் மிளிர்வார்கள் என்பது உண்மைதான்.தமிழில் கவிதைக்கு சாகிதய அகாடமி எப்போது கிடைக்கும்? ஆராதனை-க்குப் பரிசு பெற்ற அப்துல் ரகுமானை நான் மறந்துவிடவில்லை.தேவதேவன், தேவ தச்சன் (எனது இந்தப் பனிக்காலக் குறிப்பில் நான் விரும்பிய சில பேர்களை இதில் நான் குறிப்பிடவில்லை) இப்படிப் பல கவிஞர்கள் தமிழில் இருக்கிறார்கள். கவிதை என்பது மொழி நதியின் அதி திரவம். ஆண்டுக்கு ஒரு சாகித்ய அகாடமிதான் எனும்போது அனைவருக்கும் அது சாத்யமில்லை எனும்போது தாமரை போன்ற விருதுகளால் கவிஞர்களும் எழுத்தாளர்களும் கவுரவிக்கப்பட வேண்டியவர்கள் இல்லையா?

இந்தப் பட்டியல் தயாரித்தல் மனுச்செய்தல் எல்லாம் எந்த ரூபங்களிலும் முகாந்திரங்களிலும் நடைபெறுகிறது என்பது எனக்குப் பிடிகிட்டவில்லை.மொழியைக் கணிக்கிற வேலையிலும் புறக்கணிக்கிற வேளையிலும் இங்கு பெருந்தவறு நடந்துகொண்டிருக்கிறது என்பதுமட்டும் புரிகிறது. ஒப்பீடுகள் மனதை மேலும் சிதிலமாக்கி ஆறுதலைத் தரும்.

மலயாளத்தில் ஓ.என்.வி குருப்புக்கு விருது கிட்டியிருப்பதாக நண்பர் சொன்னார். உறுதிப்படாத தகவல். செல்வேந்திரன் விசாரித்துச் சொல்லலாம். ஆனால் குருப்பின் ஒரு திரைப்பாடல் வரி மனதில் வந்துவந்து மின்னியும்பின்னியும் செல்கிறது.

‘மௌனம் தேடி மொழிகள் யாத்ரயாய்....’

Tuesday, January 18, 2011

மின்னஞ்சலி

இன்று இந்தக் காலை இடையறாது மின்னஞ்சல் அனுப்பும் நண்பரின் sangkavi.blogspot.com மில் அந்தச் செய்தியைப் படித்தேன். கோபி லட்சுமண அய்யர் காலமாகிவிட்டார். அய்யர் உலக அளவில் அறியப்படவேண்டியவர். உள்ளூர் அலவிலேயே கண்டுகொள்ளப்படாதவர்.(அவரைப் பற்றிய விதந்தலுக்கு சங்கவியின் வலைப்பூவை வாசிக்கவும்.)

இறுதிச் சடங்கில் நூற்றுக்கும் குறைவான நபர்களே வந்திருந்தனர் என்பது கோபி நகருக்கு அவர் ஆற்றிய முன்னோடித் தொண்டுகளினை ஒப்பிடுகையில் பரிதாபத்தைத் தோற்றுவிக்கறது. நூற்றுக்கணக்கான ஹெக்டேர்களை வைத்திருந்த அவரது குடும்பத்திற்கு கடைசியில் அவருக்கு ஆறடிதான் சாஸ்வதமாகியிருக்கிறது.

தன்னுயிர் இயல்பின் அடிப்படையில் அவர் (நாம் பாவிக்கிற அளவு) ‘தியாகி’யாக தன்னை உணர்ந்திருக்கமாட்டார் என எண்ணுகிறேன்.சில ஆண்டுகளுக்கு முன் அவரைப்பற்றி தேவிபாரதி அல்லது ஜோதிமணி என நினைக்கிறேன் சொல்லக்கேட்டு அவரைச் சென்று பார்க்கவேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன்.

ஆனால் கோபிசெட்டி பாளையத்துக்கே கூடப் போகமுடியவில்லை.இனிப் போக நேர்ந்தால் ‘இப்படியும் ஒருவர் வாழ்ந்தார்’ என எண்ணிச் சிலிர்ப்புற வேண்டியதுதான். தேசியக் கொடி போர்த்தப்படாமல் அவரது ஈமக் கிரியை நடைபெற்றது சமகால வாழ்வின் நிர்த்தாக்ஷண்யக் குறியீடு. தானமாக வழங்கப்பட்ட அவரது கண்கள் இனியடுத்த பாரத நிகழ்வுகளையும் காணக்கூடும்.

அரசியலர்கள்,ஆசிரியர்கள் , மாணவர்கள்  மற்றும் பொதுமக்கள் என அவ்வளவு ஆட்கூட்டமுள்ள ஒரு ஊரில் வெறும் நூறுபேரைத் தவிர அத்தனை ஆட்களும் படு பிசியாக இருந்திருக்கிறார்கள் எனும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

‘மந்திரியின் நாய் இறந்தது
அத்தனை பேர் இழவு கேட்க
வந்தார்கள். மந்திரி இறந்தார்.
ஒரு நாயும் வரவில்லை.’ (அனேகமாக தாகூர் என நினைக்கிறேன்)

என்கிற வாக்கியங்கள் நினைவுக்கு வருகின்றன. அப்போதைக்கு பயன் தருகிறவர்கள் பாலது உலகம் இருக்கிறது.மறுமைகளில் நம்பிக்கை இல்லாமலிருப்பது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது. இல்லாவிடில் அவர் சுவர்க்கத்தில் துன்புறக்கூடும். அவருக்கும் மறு உலகம் பற்றிய நம்பிக்கை இல்லாமலிருப்பதையே அவரது கண் தானமும் காட்டுகிறது.

Friday, January 14, 2011

என்னமோ போங்கள்!

பொங்கல் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரியப்படுத்த உத்தேசித்துத்தான் கணினியை இயக்க ஆரம்பித்தது. அதற்கு முன் இன்றைய நாளிதழ் செய்திகளை ஒருமுறை படித்துவிடலாமே என ‘தின சரி’ களின் பக்கம் பார்வையை ஓட்டியபோதுதான் செய்தியைப் பார்த்தேன்.
சபரி மலை ‘புல்லு மேடு’ வாகன விபத்து. பக்தர்கள் இல்லாத காலத்தில் ஆளரவமற்றதும் அலைவரிசை ஆம்புலன்ஸ் வசதிகளும் அற்றதும் ஆன பிரதேசமாகையால் செய்திகளின் முழு வடிவம் இன்னும் மனத்தொகுப்புக்கு வர இயலாதவாறு வெவ்வேறுவிதமான செய்திகள்.

ஒரு நாளிதழில் ஜீப் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர் பலி எனப் பார்த்ததும்  ஜீப்பில் நூறு பேரா என திகைத்தேன். பிறகு  வேறு பத்திரிக்கைகளை வாசிக்கையில் விபத்தில் பேருந்து ஒன்றும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிகிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர் பலி எனக்கண்டதும் எங்கேணும் விமான விபத்தோ என்றுதான் முதல்வினாடிச் சந்தேகம் எழுந்தது.’விமானத் தாவளம் அமைத்து தரிசிக்கப்படும் அளவில் இன்னும் மணிகண்டனுக்கு வாய்ப்புகள் கூடவில்லை. நூறு...தொண்ணூறு... நூற்றுக்கும் மேல் எனச் சொல்லப்படும் எண்ணிக்கைகள் வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. விழாக்காலங்களில் அருள்த்தலங்களில் கூடும் தமிழர் அல்லது பக்தர் எண்ணிக்கை மலைப்பை ஏற்படுத்தக்கூடியதுதான். இது குறித்து விமர்சிக்க என்ன இருக்கிறது. எதோ ஒரு சூழலில் நாமும் இப்படி நேரக்கூடியவர்கள்தான்.

இன்னும் கொஞ்சம் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகளை இரு மாநில அரசுகளும் மேற்கொள்ளவேண்டும். நேற்று ‘தமிழக அரசியல்’ இதழை வாசித்தபோது ‘பாண்டி பக்தர்களை’ (தமிழ்ச்சாமிகள்) கேரளக் காவலரும் கடை வியாபாரிகளும் நடத்துகிற விதம் பற்றிப் படித்தபோது, ‘இவ்வளவு அவமானப் பட்டு சாமி கும்பிடவேண்டுமா?’ என்றே தோன்றியது.

வருடத்தையும் வருமானத்தையும் வருங்காலத்தையும் வாபரின் நண்பன் சாஸ்தா குறைவறக் கவனித்துக்கொள்வானெனில் எளிய அவமானங்களைச் சகித்துக் கொள்ளவேண்டியதுதான். ஊரெல்லாம் சாமியாகப் பார்க்கும் ஒரு நபரை எதோ ஒரு கணம் ஒரு காக்கிச் சட்டை ‘’ஏ பாண்டிப் பட்டி!’ என விளிச்சால் என்ன மோசம் போகிறது?

டாஸ் மாக் விற்பனையைக் குறைக்கிற காரியத்தில் நான் எப்பவும் ‘கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருக்கிற’ பக்கத்தில்தான் நிற்பேன்.

வருமானம் தருகிற தளம் என்கிற அளவிலாவது சில நேர்த்திகளை ஏற்பாடு செய்து தரும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.பக்தர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டால் ‘மகர ஜோதி பார்ப்பதினும் பார்க்க வீட்டில் ஒரு மத்தாப்புக் கொளுத்துவது உத்தமம்’. என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

அதற்கும் முன் தரிசனம் என்றால் என்னவென்ற குறைந்தபட்சப் புரிதலுக்கு மனிதன் உள்ளாகவேண்டும். இதை ‘மாலைகள்’ எப்போதும் தருவதில்லை.

Wednesday, January 12, 2011

நிலா நாற்பது -12

அதி முதல்இரவின் தனி ஒளி
நிலா கண்டு திகைத்து இமைகள்
திறந்த விண் விழிகள்
பல பகல்வரை கூடித்துடிக்கும்.

Sunday, January 9, 2011

மீன்களுக்கு உணவு- அரசியல் குளம்

போனவாரம் விஜயகாந்த் கனவில் வந்தாரே என்று நேற்றுதான் தே.மு.தி.க (உரிமை மீட்பு மாநாடு!) சேலத்தில் நடந்த தினத்தில் விருதகிரி படம் பார்த்துமுடித்தேன்.முதலமைச்சரே ஆகிவிட்ட நிலையிலும் கூட எம்.ஜி.ஆர் , ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்றுதான் படமெடுத்தார். அவர் மக்களுக்கு ஆற்றவேண்டியவற்றை (அதாவது உரைகளை) நாடோடி மன்னனிலேயே ஆற்றிவிட்டதால் விஜயகாந்த் அளவு மெனக்கெடவில்லை. விருதகிரியில் வில்லன்கள் மன்சூர் அலிகான்,ஆஷிஸ் வித்யார்த்தி முதல் காமெடியன்கள் வெளிநாட்டு முகங்கள் என அனைவரும் விஜயகாந்தின் கொ.ப.செ க்கள்தான்.படம் பார்த்துவிட்டு முதுகு வலியால் நான் அவதிப்பட்டுக்கொண்டிருந்த போது உரிமை மாநாடு சிறப்பாக (பெரிய வெட்டுக்குத்து இல்லாமல்) முடிவடைந்துவிட்டது.

நாங்கள் ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு பேனர் நாட்டியதை கின்னஸில் பதியுங்கள் என சுதீஷ் சொல்லியதன் மூலம் தமிழக வெகுஜன கொண்டாட்டக் கலாசாரத்துக்கு கட்சி தயாராகிவிட்டது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

பா.ம.க அடுத்த மூவை சரியாக வைக்கவேண்டும் என்கிற (விஸ்வநாதன் ஆனந்துக்கு நிகரான) பதற்றத்தை எட்டியிருக்கிறது.

வைகுண்டசாமி அய்யாவின் விழாவில் ‘வேலிகள் இல்லா உலகம்’ என ஜெயலலிதா லாவணி பாடியிருக்கிறார்.

தேவையென்றால் விமானம் ஏறி டெல்லி செல்கிற மு.க வாசலுக்கு வந்த மன்மோகனை பார்க்கப்போகாமல் சட்டசபை வளாக மீன்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்துவிட்டார்.

சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்கத் தமிழகத்துக்குத் தெரியவில்லை.

ஜெயலலிதா இல்லாத மூன்றாம் அணி அமையும் பட்சத்தில் இதர இரண்டை அவர் முற்றாகப் பெருக்கித் தள்ளிவிடுவார். விஜயகாந்த்தின் பேச்சு அ.தி.மு.க - தே.மு.தி.க உறவுப் பாலத்துக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இந்த அணிச் சேர்க்கையையே அரிவாள் விரும்பவும் கூடும். அரிவாள் கைக்குப் போக விரும்பாது.

சொல்லி அடிக்கிற அழகிரியை தி.மு.க அவருக்கேற்ப நடத்தவில்லை என்பதால் பாரதூரமான விளைவுகளை கழகத்துக்கு அவர் கொணர்ந்து சேர்ப்பாரோ என்கிற அச்சுறுத்தலும் இருக்கிறது.

இந்த நிலையிலும் பத்திரிக்கைகளைப் பகைத்துக்கொள்ளும் ஜெயலலிதாவைப் பார்க்கையில் அவர் என்றும் மாறாத இளமையுடனும் நிலைமையுடனும் காட்சிதருகிறார்.

அற்றுப்போகாத கூட்டு தொல். திருமா & தி.மு.கதான் போலிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த ஆட்சியும் காட்சியும் என்னவென்பது இரண்டேபேருக்குத்தான் தெரியும். ஒருவர் கடவுள் இன்னொருவர் கி.வீரமணி. இருவருமே ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்பதால்தான் கால’மே’ கடவுளாய் நிற்கிறது.