Thursday, August 25, 2011

நேரில் கோர முடியாத மன்னிப்பு...

அன்பினால் விளைகிற அபத்தங்கள் மற்றும் தீங்குகள்  எனக்குப் புதியதல்ல. என்றாலும் புதிதாக ஒன்று விளைகிற போதும் நேர்கிற போதும் அது புதிதேதான்.

இது அசந்தர்ப்பமாக நேர்ந்துவிட்ட (நான்கைந்து பதிவுகளுக்கு முந்தைய) ‘நேரில் பார்த்திராத கனவன்’  பதிவு பற்றிய நனவு நிலை விளக்கங்களும்... பின்னூட்டங்கள் (கண்டனங்கள்) ஆகியனவற்றுக்கான பதிலுமாகும்.

அந்தப் பதிவுக்காக சுரேகா அவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். அய்யா நெல்லைக் கண்ணன் அவர்கள் இதைப் படிக்கும்போது மேலும் சிலதை என் தரப்பில் சொல்லுதல் தகும் என்றே மேற்செல்கிறேன்.

அவரது பேச்சுக்காக காத தூரங்கள் பேருந்திலும் பைக்கிலும் பயணித்து பேச்சைக் கேட்கிற ரசிகன் நான். (தமிழ்ப் பேச்சாளர்கள் பற்றிய முந்தைய பதிவு ஒன்றில்... கடையிலே பொருளில்லை கஜானாவுக்காக அடித்துக்கொள்கிறார்கள் என காங்கிரசில் இருந்துகொண்டே காங்கிரசைக் கடிந்துகொண்டதைக் குறிப்பிட்டிருக்கிறேன்).

தவிரவும் அவரது சமகாலப் பிரக்ஞையும் பழைய கால ஞாபகங்களும் சம எடை வைத்த தராசுத்தட்டுகள். (தேர்தல் அறிக்கையை கதாநாயகி என கருணாநிதி வர்ணித்த காலத்தில் - கலைஞரின்து மேடைப் பண்பாடு பற்றிய விளாசல் ஒரு நல்ல உதாரணம். எனக்கு தினமலரில் படித்ததாக ஞாபகம்).

எனது பிசகு என்னவென்றால், எனது வலைப்பக்கத்தைப் படிக்கும் சம காலத்தவர் அவர் என்பதை மறந்துவிட்டேன். நிச்சயமாக இதை அவர் படிக்கப் போவதில்லை என்பதாகத்தான்  என் நம்பகமும் புரிதலுமிருந்தது.

இது நிற்க,,, பதிவிடும் நாளுக்கு முன்னதாக நெல்லையிலிருந்து எழுத்தாளர் கணபதி அவர்கள் காலமானதைக் கேள்விப்பட்டிருந்தேன். துஷ்டியில் கலந்துகொள்ள முடியாத வருத்தமும் இருந்தது. ஒரு ஒளிவு மறைவு வேண்டாமே என இப்போது அதைக் குறிப்பிடுகிறேன்.

பதிவில் அதைக் குறிப்பிடாத நான் ஒரு கனவினை அப்படியே எழுதியிருக்க வேண்டியதில்லை. குறிப்பாக ஜீவியவந்தராக ஒருவர் இருக்கையில் அவரது மகனைப் பற்றி அவ்விதமாக எழுதினால்... படிக்கும் தந்தையின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை உணரத்தவறிவிட்டேன்.

பதிவின் கனவில் அல்லது கனவின் பதிவில் ‘கண்ணன் அவர்கள்’ வருந்துகிற விதமான  தோற்றத்தில்  சுரேஷ் இல்லை. மரத்தில் கிடந்த சால்வையை எனக்கு முன்னமே எடுக்கிற துடிப்புடன் இருந்தார். அப்புறமும் ‘மகா பாரதத்தைப் பற்றிப் பேச ஆட்கள் அழைத்தபோதும்’ அந்த ஆள் மாதிரியே கொண்டுபோய்யா என்றதும்  அசல் நெல்லைக் குசும்புதான்.

காட்சி முடிவதற்கு முன்னாக என்னோடு சுரேஷ் தேநீர் அருந்திக்கொண்டு நலமாகத்தான் இருந்தார். நலமாகத்தான் இருப்பார். சுகாவைக் கனவில் பார்த்தபோதும் கண்ணனை நான் நினைத்தது ‘வார்த்தை’கள் படித்த ஆதிநாளில் கண்ணனின் மகன் சுகா எனக்கேட்டதும் ஏற்பட்ட புளகாங்கிதத்தின் மிச்சம்.

கனவில் ராஜேந்திர சோழனைப் பார்த்திருந்தாலும் ராஜராஜ சோழனை நினைத்துத்தான் இருப்பேன். தர்க்கங்களற்ற கனவில் சிலவேளை தர்க்கம் ஒளி(ர்)கிறது.

மதிப்பிற்குரிய அய்யா கண்ணன் அவர்களே! நீங்களும் சுகாவும் எனது பல மணி நேரங்களை இன்பமாக்கி அருளியிருக்கிறீர்கள்.

இனியும் ஒரு சுகமான நினைவுகளுடன் கனவில் வர தமிழ்த்தாய் அருளுவாள். அதை எழுதாமலிருக்க வாழ்க்கையும் இருப்பும் போதித்திருக்கிறது. இந்தப் பதிவிற்கு நீங்கள் பதிலிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் இது பற்றி எழுத நேரிடினும் அதன் பெயரும் அனு பந்தம் என்றே இருக்கும்.

கொஞ்சம் தமிழாலும் நிறைய நரம்புத் தளர்ச்சியாலும் இது விளைந்துவிட்டது. 

Sunday, August 21, 2011

உண்ணா ஹசாரே

அன்னா மீண்டும் உண்ணா விரதத்தைத் தொடங்கிவிட்டார். ராம் லீலா மைதானத்தில். ஆர்வ வழிப்பட்ட ஆதுரங்கள் அவர் மீது மலரெனத் தூவப்பட்டுவிட்டன.

தியாகியை அடைப்பதற்கென்று தனி ஜெயில்கள் உருவாக்க முடியாது என்கிற எளிய உண்மையைக் கூட மனம் ஏற்றுக்கொள்ளாமல் ‘இவரைப் போய் திகாரில் அடைப்பதா?’ என்கிற கேள்விகள் எல்லாம் எழுந்தாயிற்று. சிறையில் புனிதர்களும் குற்றவாளிகளும் மனிதர்களும் (சமயங்களில் குற்றமற்றவர்களும்) அடைபடுவதால்தான் சிறை இந்த அமைப்பின் தவிர்க்க இயலாத அம்சம் ஆகிறது.

ஆட்சியில் இருந்த காலத்தில் லோக்பாலை அமல் படுத்தாதவர்கள் எல்லாம் இன்று அன்னாவுக்குக் குரல் கொடுக்கிறார்கள். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் சட்டம் போலவே இதிலும் வெகுபேர் விரும்பாத நுண் அமைவுகள் பலது இருக்கக் கூடுமெனக் கருதுகிறேன். வெகுபேர் என்பதை அரசியலாளர்கள் மற்றும் மக்கள் என இருதரப்பிலுமாகக் குறிப்பிடுகிறேன்.

அன்னா கேட்டது போலவே கொடுத்துவிட்டு அதை எண்ணி எண்பத்தியிரெண்டு மணித்தியாலத்துள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள அரசியலாளருக்கு இயலாததல்ல.

ஆகவே அதனினும் கடந்து அன்னாவின் கோரிக்கைகளில் எதேனும் வலிமை இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

மன் மோகன் மவுன மோகனாக இருந்தாலும் அவ்வப்போது பெரும் கருத்துகளைச் சொல்கிறார். அறப்போர்களின் காலம் முடிவுற்றுவிட்டது என்பது போன்ற செய்திதான் சமீபத்தில் அவர் தந்தது.கொரிக்கை நிமித்தமான  பட்டினி இறப்புகள் என்னமாதிரியான ஆவேசம் அல்லது விளைச்சலைத் தோற்றுவிக்கும் என கற்பனை செய்யுமளவு எனக்கு மனத் திராணி இல்லை.

நாடெங்கிலும் பந்தலிட்டுப் பட்டினியில் அமர்ந்திருக்கிற அன்னாரின் சக போராளிகள் யாரேனும் இறந்துவிடக்கூடாது என்பதே விருப்பமாயிருக்கிறது.

Thursday, August 4, 2011

சதா இக்கட்டிலிருந்து சதானந்தத்துக்கு...

இன்று முதல் கர்நாடகத்தில் புதிய முதலமைச்சரின் கண்பார்வையில் வாழப்போகிறேன். சதானந்த கவுடா பி.ஜே.பிக்காரர்களால் ஏகமனதாக அல்லாமல் ஒரு வழியாகத் தேர்வு பெற்றிருக்கிறார்.

அரியணை ஏறிய நாள் முதலாக அல்லலுற்றும் இக்கட்டுகளின் பாற்பட்டும் ஆட்சி நடத்திவந்த எடியூரப்பாவுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. அவர் விரும்பாத விடுதலை. அண்டை மாநிலமான தமிழ் நாட்டின் ஜெயலலிதா போல ஆறு மாதத்தில் மீண்டும் தானே முடி சூடும் கனவும் எடியூரப்பாவுக்கு இருக்கிறது. அது முச்சூடும் பலிக்குமா எனத் தெரியவில்லை.

தென்னகத்தில் முதன்முதலாக அமைந்த பி.ஜே.பி ஆட்சியை இப்படி அவர் ஆக்கிவைத்தது அந்தக் கட்சிக்கு பாதகம்தான். கர்நாடக முதலமைச்சர் பட்டியலில் ரெட்டி,ஜாட்டி, மொய்லி,பட்டீல்,ராவ்.சிங்.ஹெக்டே,கவுடா, அப்பா.அய்யா,சாமி.... என வினோதம் பலவுண்டு.இப்போது சதானந்த கவுடா. குமாரசாமி கவுடரின் சத்தத்தை இந்த ஏற்பாடு குறைக்குமா எனத் தெரியவில்லை.

மிகச் சிலர் எதிர்பார்த்தது போல சோபா முதலமைச்சர் ஆகவில்லை. அல்லது ஆகமுடியவில்லை. தென்னகத்தார் ஒரு பெண்ணின் தலைமைய அவ்வளவு எளிதில் ஏற்பார்களா தெரியவில்லை. விடுதலைக்குப் பின் அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. அனேகமாக விடுதலைப் பாரதத் தென்னகத்தின் முதல் நூற்றாண்டின் ஏக பெண் முதல்வர் ஜெயலலிதா மட்டுமேயாக அமைந்துவிடுதல் கூடும்.

அனேக வருத்தங்களில் ஒன்றான இதை பிரத்யேக வருத்தம் எனக் கூறமுடியுமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.