Tuesday, January 26, 2010

வேலி காத்த மரம்

கனி தரும்
விறகானால் கரிதரும்
கன்று ஒன்றை
வேலி ஓரத்தில்
நடுகிறார் உழவர்.
பூமிக்குள் ஓடும்
வேர்
அண்டை வயலானின்
பரப்புக்குள்
விதவித விரல் நீட்டி
பலனை அபகரித்துக்
கொணர்ந்து சேர்க்கும்
என்பது
ஆழ்மனதின்
அறியாக் கனவாக
இருந்திருக்கக் கூடும்.
உறுதி சொல்வதற்கில்லை-
உழவரும் அப்பாவி.
பூவெடுத்த நாளின்
மரப் பருமன்
அயலானது ஆகாச எல்லையில்
வட்டம் விரிக்கிறது.
பட்டா எண்கள்
கிஸ்தி
சிட்டா அடங்கல்
முதலியன அறியா
மூட மரம்
பலனெடுக்கும் நாளையிலே
குருதி பார்க்கக்
காத்திருக்கிறது.

Sunday, January 24, 2010

Mighty Sparrow – Big Bamboo

I asked my woman what must I do, what must I do
To make her honest and keep love too, and keep love too
She said Sparrow all I want from you, I want from you 
Is a little little piece baby, just a little little piece of the big bamboo

Well she’s ready for, bamboo, grows out from the ground, bamboo
It’s so big and strong, bamboo stand up straight and tall, bamboo
Please it’s what I wantbamboo, tadadada bamboo lalalala bamboo laladedada bamboo tadadada
The big big bamboo bamboo lalalala lalalala lalala
Working for the yankee dollars
The big big bamboo bamboo lalalala lalalala lalala
Working for the yankee dollars

I gave my woman a coconut , a coconut
She told me she thought, it was ok but, it is ok but
To my surprise she gave it back to me, right back to me
What good is the nut baby, tell me what good is the nut without the tree 

Well she’s ready for, bamboo, grows out from the ground, bamboo
It’s so big and strong, bamboo, stand up straight and tall, bamboo
Please it’s what I want, bamboo, tadadada bamboo lalalala bamboo laladedada bamboo 
The big big bamboo bamboo lalalala lalalala lalala
Working for the yankee dollars
The big big bamboo bamboo lalalala lalalala lalala
Working for the yankee dollars

I gave my woman a sugarcane, a sugarcane
Very very sweet, I must explain, I must explain
And she gave it back much to my surprise, to my surprise
I love this flavour I really,reallylove this flavour but not the size

Well she’s ready for, bamboo, grows out from the ground, bamboo
It’s so big and strong, bamboo, stand up straight and tall, bamboo
Please it’s what I want, bamboo, tadadada bamboo lalalala bamboo laladedada bamboo dubydubydubydoo
The big big bamboo bamboo lalalala lalalala lalala
Working for the yankee dollars
The big big bamboo bamboo lalalala lalalala lalala
Working for the yankee dollars

Now ever since the world began, the world began
Woman was always fooling man, fooling man
And, but they found out women were always true, always true
To the man then, who would jam them,when they really really would jam them
With the big bamboo

Well they’re ready for, bamboo, grows out from the ground, bamboo
It’s so big and strong, bamboo, stands up straight and tall, bamboo
Please it’s what I want bamboo, tadadada bamboo lalalala bamboo laladedada bamboo dubydubydubydoo
The big big bamboo bamboo lalalala lalalala lalala
Working for the yankee dollars
The big big bamboo bamboo lalalala lalalala lalala
Working for the yankee dollars

A Japanese came to America, to America
For a woman he brought out Rockefeller Plaza, Rockefeller Plaza
She said Hai Hai Hai no more Ari Ka Toh, Ari Ka Toh
You show up me with your bridges, 
When I only want a few inches at the big bamboo

Well she’s ready for, bamboo, grows out from the ground, bamboo
It’s so big and strong, bamboo, stands up straight and tall, bamboo
Please it’s what I want bamboo, tadadada bamboo lalalala bamboo laladeda bamboo tadadada
The big big bamboo bamboo lalalala lalalala lalala
Working for the yankee dollars
The big big bamboo bamboo lalalala lalalala lalala
Working for the yankee dollars

Wednesday, January 20, 2010

தலைக் கவசம்

தலைக் கவசத்தின்
பயன்கள்
காயம் படாமல் காப்பது
உயிராபத்திலிருந்து
தப்புவிப்பது எனச்சில.
சுரங்கங்கள்
அரங்கங்கள்
வாகனங்கள்
போர்க் களங்கள்
கட்டட வேலைத் தளங்கள்
தீயணைக்கும் இடம்
மீட்பு நடவடிக்கை நேரம்
எனப் பற்பல இடங்களில்
அதற்குப் பயன்பாடு உண்டு.
தாடை வரை நீண்ட கவசம்
எனில் எதிர் வரும்
உயிருக்கு நீங்கள்
உதடு குவித்து
மர்மமாக வழங்கலாம்
மானசீக முத்தமொன்று.
தலைக் கவசம்
உயிர்காப்பின்
முக்கிய அம்சம்.
கவசத்திற்கு பல நிறங்களுண்டு.
மகுடங்களும் கிரீடங்களும்
தலைக்கவசத்தின் வகையிற்சேரா...
ஆனால்,
அவற்றினடி வாழும் உங்களுக்கு
மரணம் தலையை மட்டும்
இலக்கு கொள்ளவேண்டிய
அவசியமொன்றுமில்லை.

Tuesday, January 19, 2010

தொட்டுத் தொட்டு...

எய்ட்ஸ் நோய் வந்தவர்களுடன் என்னென்ன விதமாக சகவாசம் வைத்துக்கொள்ளலாம் , எந்தெந்த விதமாக பரிவு காட்டலாம் என தமிழக அரசு ‘எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம்’ (இதன் அங்கீகரிக்கப்பட்ட பெயர் வேறாகவும் இருக்கலாம். புரிந்துகொண்ட அளவில் இப்படி எழுதுகிறேன்) விதவிதமாக விளம்பரம் செய்து மக்களிடம் அறிவைக் கொண்டு சேர்க்கிறது.

சு.சி.பர்னாலாவும்(இவரை மறந்திருக்க மாட்டீர்கள்தானே:நம் கவர்னர்) மு.க வும் தீவுத்திடலில் உரையாற்றவில்லையே தவிர எய்ட்ஸை வேரோடு களைதல் ,தவறி பாதிப்புக்குள்ளாகி்விட்ட  மக்களை ஆரோக்கியமுடன் பேணுதல் என வாரியம் முடிவெடுத்து கருத்தரங்கங்கள், புள்ளி ராஜா காலந்தொட்டு விளம்பரங்கள் , ஆவண(ம்) செய்தல்கள் என பல அளவில் செயல்பட்டு வரும் நாளது நாட்களிலே....

(சுஜாதாவின் ‘நகரம்’ கதை நினைவுக்கு வருதல் தவிர்க்க வுடியவில்லை) மதுரை அரசு மருத்துவமனையில்,  நாமக்கல்லைச் சேர்ந்தவரும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட நிறைசூலியாகப்பட்டவருமான  விஜயலட்சுமிக்கு  பிரசவம் பார்க்காமல் புறக்கணித்திருக்கிறார்கள்(செய்தி: ஜூனியர் விகடன்.17.01.2010).
பிறகு சுயமாக தனக்குத்தானே முக்கிவேதனித்து மகவு ஒன்றை விஜயலட்சுமி் ஈன்றுவிட்டார்.

பாவம் !படித்த மருத்துவர் செவிலியர் உட்பட யாருக்கும் ‘பிரசவம் பார்த்தால் எய்ட்ஸ் பரவாது’ எனச் சொல்லித்தரப்படவில்லை. சொல்கிறவர்கள் சொல்லிக்கொண்டே இருங்கள், அமைப்பை மாற்ற முடியாது. என்பதே நிலைமை.

உதாரணமாக கொடைக்கானல் எஃப்.எம் மின் இரண்டு நிகழ்ச்சிககளின் விளம்பரதாரராக எய்ட்ஸ் தடுத்துப் புடுங்கும் வாரியம் செயல்படுகிறது. இந்தப் பாடல் நிகழ்ச்சிகளை வழங்குவது எப்படி ஏமக்கொல்லி நோய்க்கு எதிராக இருக்கும் என்றும் தெரியவில்லை.ஆனால் ஒன்று அவர்கள் ஸ்பான்சர் செய்கிறார்களே என்று நிகழ்ச்சியின் ரஞ்சகத்தனமான பெயர்களை வானொலி நிலையத்தார் மாற்ற முடியுமா என்ன?

அந்த இரண்டு நிகழ்ச்சிகளின் பெயர்கள்:
1. மனம் விரும்புதே
2. தொட்டுத் தொட்டு

நல்லா  உருவாகுமுங்க எய்ட்ஸ் இல்லாத தமிழகம்.

Friday, January 15, 2010

குளிர்

தகரத் தரைமேல் அந்தரத்தில்
நின்று
சிதறிய தானியம்
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்.
பிரிவுப் பெருமரக்
கிளையிற் கட்டிய கயிறு
என் கூண்டின் வளையத்தை
விரல் சுற்றிப் பிடித்திருக்கிறது.
உறைபனிக் காலத்தின்
மேவிய
குளிரிருட்டு கம்பிகளின்
இடை  வெளியில்
காற்றெனப் புகுந்து நடுக்குகிறது.
வேண்டும் ஒரு போர்வை
உடல் வெப்பம்
ஒரு கனப்பு அடுப்பு
பருகச் சூடாய் ஒரு பானம்
அல்லது
இடையில் அறுபடாத
நல்நினைவுக் கண்ணி.
எல்லாக் கம்பி இடைவெளிகளையும்
சன்னலாகப் பாவித்த
சேய்ப் பறவை
ஏற்கெனவே
இருட்டை வெறித்துவிட்டு
கம்பி ஒன்றினை
நகங்களால் கவ்வி
சிறகு போர்த்தி
உறங்கிக் கிடக்கிறது.
அதன் கீழிமைக் கண்ணு நீரை
குளிர் காற்று வந்து
மெழுகுக் கற்பூரமாக்கிப்  பின்பு
இல்லாமலும் ஆக்குகிறது.
மீறும் கனவில் நீ வந்து
குளிரை விரட்டலாம்.

Friday, January 8, 2010

உயிர் எழுத்து சமீபத்திய நூல்கள்

இந்த - கடந்த - புத்தகக் கண்காட்சியை ஒட்டி ‘படைப்பிலக்கியத்தின் குரலான’ உயிர் எழுத்து பதிப்பகத்திலிருந்து எட்டு நூல்கள் வெளியாகியுள்ளன.

1. ‘இலக்கிய ஆளுமைகளின் படைப்புத் திறன்’- ந.முருகேச பாண்டியன் ஆய்வு மற்றும் அலசல் நோக்கில் பல படைப்பாளிகள் பற்றி எழுதியவற்றின் தொகுப்பு.

2. ‘கூப்பிடுவது எமனாக இருக்கலாம்’- வா.மு.கோமுவின் படைப்பு.   நாவலல்ல கொண்டாட்டம் என அவரே அறுதியிடுகிறார். கண்களின் மீது வழுக்கிக்கொண்டு செல்லும் எழுத்து நடை அவருடையது. உள்ளடக்கம் இறைச்சிப்பொருள் பற்றி இந்த ராசமைந்தன் பற்றி தமிழில் விமர்சனங்கள் உண்டென்றாலும் இவரது எழுத்தை ஒருமுறை படித்தவர்கள் ‘கோடிகள் கொடுத்தாலும் கோமகனை (கோமு)மறவீர்கள்’.

3.உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் - தாணு பிச்சையாவின் கவிதைகள் தொகுப்பு. பத்தரை மாற்றுத் தங்கம். பத்தரின் வாழ்வைச் சொல்லும் அங்கம். பிரத்யேகமான புத்தகம். சமகால வாழ்வு வெளியில் புராதன புராண விஷயங்களுடன் பொற்கொல்லர் வாழ்வு, தங்கம் எனப் பல நிலைகளைப் பேசுகிறது.

4.நீலவானம் இல்லாத ஊரே இல்லை - க.சீ. சிவகுமாரின்  பத்தி எழுத்து. பல்வேறு தன் நினைவுகள் சம்பவங்களுடன் கிரிகெட்,டென்னிஸ்,அரசியல்,சுரா,பெண் எழுத்து ,பழங்காதல் ரயில் பயணம் எனப் பலவற்றை அங்கதம் மங்காமல் பேசிக்களிக்கிறது. அவ்வப்போது தத்துவத் தெறிப்புகள்.

5.உயிர் எழுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - தொகுப்பு க.மோகன ரங்கன். கடந்த வருடத்தில் சிறுகதை மற்றும் கவிதைகளில் உயிர் எழுத்து அளவுக்கு புதிய எழுத்தாளர்களுக்கு இடம் தந்த பத்திரிக்கை ஏதுமில்லை. அதி நிச்சயமாகவும் இது சமகால எழுத்துப்போக்கினை பிரதிநிதிப் படுத்துவதாக இருக்கும்.

6.கடலோடு இசைத்தல் - கவிதைகள். சக்தி ஜோதி.
இவரது கவிதைகளில் கடந்த நூற்றாண்டுகளின் நேசிப்புத்தளம் இப்போது புழங்கும் சொற்களில் சரளமும் உவப்புமாக ஓடுகிறது.(பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி - தாயுமானவர். உன்னை என்னுடையதென்று நொடியில் கண்டுகொண்டேன் - தாகூர் ... இது போன்ற இடையறாக் காதலின் கண்ணித் தொடர்ச்சி) இதுவே, சக்தி ஜோதியின் கவிதைத் திடத்தில் பங்காற்றுவதால் சுலபமாக நம்மைக் கவர்ந்துவிடுகின்றன.

7.காட்டின் பெருங்கனவு - சிறுகதைகள். சந்திரா.

8. நீங்கிச் செல்லும் பேரன்பு - கவிதைகள். சந்திரா.

எனக்கு தனியளவில் சந்திராவின் சிறுகதைகள் மேல் மலைப்பும் திளைப்பும் உண்டு. கவிதைகள் பாசவட்டச் சுற்றத்தைப் பேசிக்கொண்டு இருக்கும்போதே அகிலமளாவிய வன்முறைக் கவிச்சியை நோக்கிப் பாய்கிறவை.

மிக நேர்த்தியான முறையில் அயராத உழைப்புடன் என் கெழுதகை நண்பர் , உயிர் எழுத்து ஆசிரியர் , கவிஞர். சுதீர் செந்தில் இவற்றை பதிப்பித்துள்ளார்.அவருக்கு எழுத்திலும் நேரிலும் கன்னத்தில் முத்தங்கள்.

நூல்கள் கிடைக்கும் தமிழக விலாசம்.

உயிர் எழுத்து
9 முதல் தளம்,
தீபம் வணிக வளாகம்,கருமண்டபம்.
திருச்சி - 1.
அலைபேசி; 99427 64229.

பின் தொடரிகள் மற்றும் முன் உயிரிகள்...

புத்தகக் கண்காட்சி பற்றி நான் எழுதியதன் பகுதியின்  பின் ஊட்டத்தில், தம்பி என அழைக்கப்படுவதை விரும்புகிற நண்பன் செல்வேந்திரன் ரமேஷ் வைத்யாவைப் பார்த்தீர்களா எனக் கேட்டிருந்தார்.
இது வால் பகுதியில் பகிர்ந்துகொள்ளத்தக்கதல்ல என்பதால் ‘இல்லை’ என்கிற பதிலை பட்ட(வர்த்தன)ப் பகுதியிலேயே  பகிர்ந்து கொள்ளுகிறேன்.

அடுத்து வருவது செல்வேந்திரன் அனுப்பிவைத்த ஃபாலோயர்ஸ் பகுதிக்கான படம் பற்றியது. முதற்கண் இந்த ஃபாலோயர்ஸ் என்கிற வார்த்தையே தலையில் மகுடம், முள் மகுடம்,அல்லது மங்கிக் குல்லாய் போன்றவற்றை மனதில் தோற்றுவிப்பது.

இருப்பினும் இதை , ‘உனக்கு நான் ஃபாலோ எனக்கு நீ ஃபாலோ’- என்று ஏற்றுக்கொள்ளலாம். மிகப் பிரக்ஞை பூண்டுவிட்டால் பேச்சு அரிதாகிவிடும்.35 என்கிற தேர்வு மதிப்பெண்ணைக் கடந்த பின்னும் எனக்கு இதுவரை பெண் ஃபாலோயர்ஸ் வந்ததாய் அதிகாரபூர்வ தகவலில்லை.

‘மண் குதிரை’ என்கிற பால் தீர்க்க முடியாத பெயரெல்லாம் வருகிறது எனினும், மண் குதிரையை நம்பி கற்பனை ஆற்றில் இறங்க முடியாது.

ஃபாலோயரில் முதன் முதலாக ஒரு பெண் படத்தைப் பார்த்தபோது முதற்கணம் திகீரென்றது. வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் உருவமுள்ள ஒரு உருண்டை உருண்டது. அது மூச்சுக்குழாயை நசுக்கியது. அப்புறம் அந்தப் பெண்ணின் மார்புப் பகுதியில் சுட்டுவிரல் (இது எலியின் சுட்டுவிரல்)  பட  மிடுக்கிப் பார்த்தால் செல்வேந்திரன் என்று இருந்தது.

பெண்களின் போதாமை இலக்கியக் கூட்டம் முதல் இந்தி(ரி)ய பாராளுமன்றம் வரை எல்லா இடத்திலும் உண்டு. அதை பிம்பங்கள் கொண்டு இட்டு நிரப்ப வேண்டிய அவசியமேயில்லை.

செல்வேந்திரனே ஐஸ்வர்யாராய்க்கு நிகரான அழகன்தான். மீசை வைத்து தைராய்டுப் பிரச்னைகளுக்காக மாத்திரை எடுத்துக்கொள்கிற ஐஸ்வர்யாராய்.ஒரு அறுபத்தொன்பது கிலோ தாஜ்மகால்.அப்படி அவரது படம் இல்லாவிட்டாலும் எரிமலை,பள்ளத்தாக்கு,நீல வான்,வேன்,மான்... என எத்தனையோ படங்கள் உள. அவற்றில் ஒன்றை அவர் படமாக வைக்கலாம்.

மன ஆழத்தின் முடியலத்துவம் உளவியல் நோக்கில் யாருக்கும் இடறினாலும்
(காதுள்ளவர் கேட்கவே கடவர்), எந்த வித மயக்கங்களுடனும் செத்துப்போக விரும்பவில்லை என்கிற காந்தியாரின் வாக்கு நினைவுக்கு வருகிறது.

Thursday, January 7, 2010

வாத ரசம்

பாதரசச் சத்தையும் வண்ணத்தையும்
இலைகள் உறிஞ்சிவிட்டாற் போல
நுனிமுனை தொற்றித்
தாவரத்தில் நீர்த்துளி உள்ளது.

படுக்கையில் கனவுமிகுந்து
உளறிப்படுத்திருக்கிறது
காலையில் அதிகாலையில்
இம் மார்கழியில் பூந்தொட்டி.
தாய்மை வெப்பத்தைத்
துறந்து வாழுவது.

வாழ்வென்பது
என துன் முகூர்த்தங்கள்.
வெளியில் பனி குதறுகிறது.
வரும் வெய்யிலில்
நாள் தன் ரசவாதத்தை என்
மீது பூசுகிறது.

இதற்கு முந்தையதைச் சொன்னால்
இனி நான் கவிதை சொல்லக்கூடும்.

Wednesday, January 6, 2010

சென்னைப் புத்தகக்கண்காட்சி-33

இந்த முறை கண்காட்சி மைதானத்தின் முதலாம் வரவேற்புச் செவ்வகத்தைக் கடந்ததுமே ஆனந்த அதிர்ச்சி. முதலாவது ஹோர்டிங்கிலேயே எனது புகைப் படம் இருந்தது.
வம்சி வெளியீடு சார்பான சிறுகதைத் தொகுப்புகளுக்காக வைக்கப்பட்ட அதில் நான்,பாஸ்கர் சக்தி,உதய சங்கர், எஸ்.லட்சுமணப் பெருமாள்  ஆகியோரது திருவுருவப் படங்கள்.பிற்பாடு எங்கு சுற்றியும் கவிப்பேரரசுவின் படம் கண்ணில் படாததற்கு அதுதான் காரணமென்று நினைத்துக்கொண்டேன்.

அஞ்சு ரூபாய் டிக்கெட்(இதை இளைய தலைமுறை) விற்றுக்கொண்டிருந்தார்கள். இந்தச் சுங்கம் தவிர்க்க முடியாது என்பதால் டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே போனால் வழக்கமான காட்சிகள்,கட்சிகள் அவ்வளவும் தென்பட்டன.என்ன இருந்தாலும் இது நமக்குத் திருவிழாதான்.

ஏழு ரூபாய்க் காஃபி, இடை வழிச் சந்துகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என நல்ல ஏற்பாடு. அரங்கின் பக்கவாட்டுக்கு சென்று உன்னிப்பாகப் பார்த்தவர்களுக்கே தெரியும் தண்ணீருக்கும் சேறுக்கும் ஒன்றரை அடி உயரத்தில் தாங்கள் நின்றுகொண்டும் நடந்துகொண்டும் இருக்கிறோம் என்பது.

செங்கம்பள விரிப்புகளுடன் வாசகர்களுக்கு வரவேற்பு. புத்தகங்கள் விலை அதிகம் என்பதைப் பேசுவதற்கு அறம் சார்ந்த நியாயங்கள் ஏதுமில்லை.அதுவும் என்னளவில். நான் மொத்தமாக வாங்கிய நூல்களுக்கு செலவிட்ட தொகை அரை ஆயிரத்திலும் குறைவாகும்.

காலச்சுவடு வெளியீடான ஜோ டி குரூசின் ‘கொற்கை’ நாவலை பிரேமாரேவதி வெளியிட நான் பெற்றுக்கொண்டேன்.காத்திருந்த கண்கள் அந்த முத்தைக் கவர்ந்து சென்றிருப்பினும் பின்னர் அதை மீட்டு படித்து முடித்தேவிடுவேன்.

ஜோ டி குரூஸ் எழுதித் தமிழினி வெளியிட்ட ஆழி சூழ் உலகின் கருவாட்டு வாசமும் கடல்வாசமும் உடல்வாசமும் ஏன் மூக்குப்பொடி வாசம் ஒன்றும் கூட மனதில் இருக்கிறது.

கடை திறந்த மறுநாளே நான் எழுதிய ‘உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’ சிறுகதைத் தொகுப்பு வம்சி வெளியீட்டில் விற்பனைக்கு வந்துவிட்டது. அட்டைப் படத்தில் பூனையையும், காகிதக் கட்டுக்குள் புனைவுகளையும் தேடித்தேடிக் கண்டுபிடிப்பது படிப்போர் சாமர்த்தியம்.

பாஸ்கர் சக்திக்கு அதற்குப்பிறகு நான்கு நாட்கள் கழித்து மொத்தத் தொகுப்பான ‘கனக துர்கா’ வந்தது.திருவண்ணாமலையில் ‘வம்சி’க்காக நானும் பால் நிலவனும் ரசித்து ரசித்து பிழை திருத்துதலில்(புத்தக உருவாக்கப் பொருளே கொள்ளுமின்!) ஈடுபட்ட ‘ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு’ தொழில் நுட்பக் காரணங்களால் தாமதமானது.

அடுத்து இரு நாட்களுக்குப் பின் ( தேதி நினைவில்லா மகிழ்ச்சி நிலை) உயிரெழுத்து வெளியீடாக எனது ‘நீலவானம் இல்லாத ஊரே இல்லை’ சென்னை ஃபிலிம் சேம்பரில் ஒரு முன்னிரவில் நடைபெற்றது.

உடன் முருகேச பாண்டியன்,சக்தி ஜோதி,தாணு பிச்சையா ஆகியோரது நூல்களும் வெளியாயின. எனது பத்தி எழுத்துக்களின் தொகுப்பு இந்த ‘நீலவானம் இல்லாத ஊரே இல்லை’. ஆனந்த விகடனில் என்னை அவர்கள் வேலைக்கு வைத்திருந்த நாட்களில் எழுதியது.

நீங்கள் வாங்கிப்படிக்கலாம்தான் என்றாலும் அதன் எழுத்துப் பிழைகளை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.  புத்தகத்தை புரட்டிப் பார்க்க ஆரம்பித்ததும் தோன்றிய உணர்வு, ‘வடை போச்சே’ என்கிற விதமாக இருந்தது. என் புத்தகத்தை நான் ஒரு தடவையாவது பிழை திருத்தியிருக்கவேண்டும்.

சில அத்யாயங்களில் ஆங்கில எழுத்துக்கள்  ஞிஙி ஜி என்று அச்சாகியிருந்தன. அது ஆங்கிலம் பிடிக்காமல் நான் குழந்தைக் காலத்தில் மூக்கால் அழுத மொழி போலும்.தமிழ்  ‘டி’ க்கள் ‘ழ’க்களாக தழைந்திருந்தன. வாசகர்கள் ஒரு எழுபது ரூபாய் செலவு செய்து மருந்து எடுத்துக்கொண்டால் இந்தப் பிழை கண்ணுக்குத் தெரியாது.

அப்புறம் பருவாயில்லை... புத்தகம் பருவாயில்லை பிழைகளும் பருவாயில்லை... என்று நீங்கள் ரசிக்கிற உதித்நாராயணத் தனமான பிழைகள் சில உள. பிரிண்டர்ஸ் டெவில் மாதிரி பிரிண்டர்ஸ் ஏஞ்சல்.

 ‘பரிதி புணர்ந்து படரும் விந்து’ என்கிற பிரமிளின் வரி ‘பிரதி புணர்ந்து படரும் விந்து’ என்று வந்துவிட்டது. அட... வா.மு. கோமு அளத்திக்கு நாம ஆளாகிப்போயிட்டமான்னு நெனச்சனுங்க.

ஆனால் தமிழில் யாரும் எழுதாததை நான் அந்நூலில் எழுதியிருக்கிறேன் என்பதை (அதை என்னைத் தவிர யாரும் எழுதியிருக்கவும் முடியாது) அந்நூல் வாயிலாக மெய்ப்பித்திருக்கிறேன். ரொம்பவும் தன்னடக்கமாகவே சொன்னாலும் அப்படித்தான் சொல்லவருகிறது. நச்சுத் தேர்வுக்குத் தயாராக இல்லாதவர்களும் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.

  நூல் வெளியான பிறகு  ஒரு பகல் இரு இரவுகளை வானமே பார்க்காமல் கழித்து மீண்டும் நீலவானின் விதானத்தின் கீழ் அடியெடுத்து நடந்தும் கடந்தும் இருப்பிடம் என்று சொல்லத்தக்க ஒரு இடம் வந்தடைந்தேன்.