Monday, August 30, 2010

பணம் இருக்கல்ல...

இன்று காலை கோடை வானொலிப் பண்பொலியில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். பாடல்கள் சுவை என்றால் நேயர்களோடு உரையாடிப் பாட்டுப் போடுவதைக் கேட்கையில் அந்த உரையாடல்கள் சுவாரசியமானதாக இருக்கும்.

நேத்து அப்படித்தான் நெகமத்து நெசவாளி (தமிழில் சினிமாப் பாட்டு எழுதுவது எவ்வளவு சுலபம் என்று இந்த வாக்கியத்தில் உங்களுக்குத் தெரியும், தமிழில் சினிமாப் பாட்டு எழுதுவது சுலபம்.பாடலாசிரியராக இருப்பதற்கான தகவமைப்பு வேறு .அதற்கு வல்லமை வேண்டும்.) ஒருவர் பாட்டுக் கேட்டார். அவரது தொழில் பற்றி வினவுகையில் தொகுப்பாளர் இப்ப என்ன டிசைன் நெய்யறீங்க மானா மயிலா? என்று கேட்டார். (எனக்கு உயிர்ராசிகளுக்குப் பின்னே ‘டா’வன்னா சேர்ந்து ஒலித்தது.இயற்கையின் விளையாட்டு என் மன அமைப்பினையும் விஞ்சியது.

நெசவாளியின் பதில் :  “ இப்ப... இலை மாதிரி ஒரு டிசைன் தானுங்கய்யா ஓட்டிக்கிட்டு இருக்கறம்.”

தொகுப்பாளர் உடனடியாக உங்களுக்கு என்ன பாட்டுங்க வேணும்? என்று உரையாடலைத் துண்டித்தார்.

நெசவாளர்கள் மற்றும் டெயிலர்கள் தவிர மற்றவர்கள் பாட்டுக் கேட்டால் இன்னும் கூர்மையாகிவிடுவேன். இன்று ஒரு வங்கிக்காரர்.வங்கி கணினி மயமானதைப் பற்றி தொகுப்பாளர் கேட்க வங்கி ஊழியர் தங்கள் வங்கி கணினி வங்கியே என்றார்.

வேலை நேரம்?

10 டூ 2 , 2.30 டூ 4.

மத்தியான நேரத்தில் என்ன பண்ணுவீங்க?

வங்கிக் காரர் இப்போது வங்கியியல் வார்த்தைகளோடு ஆங்கிலமும் தமிழும் பாம்பும் சாரையுமாக ஒரு பதில் சொல்கிறார். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. தொகுப்பாளருக்கும் புரிந்திருக்காது. ஆனால் ஒன்று நிஜம் எனது வங்கிக் கணக்கில் அடி வண்டல் அச்சாரத் தொகை நூறு போக அதிகம் ஒரு பைசா இருந்தாலும் யாராவது ஆள் உட்கார்ந்து ராப் பகல் எந்நேரம் ஆனாலும் பைசா எடுத்துக்கொடுக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். அந்தத் தொகைக்கு மேல் இரு நாள் வைத்திருந்ததால் எனது பாஸ்புக்கின் பெயர் பாஸ்புக் அல்ல ஃபெயில் புக்.

பலருக்கு அப்படி இருக்கக் கூடும். குறைந்த பட்சம் அஞ்சு மணி வரைக்கும் காசு தந்தால் கூட நல்லா இருக்கும் என்பதாவது சிலருக்கு இருக்கும். அதன் பிரதிநிதித்துவமாக தொகுப்பாளர் கேட்டார்.

அதான் கணினி மயமாயிடுச்சு.. பட்டன் தட்டுனீங்கன்னா அப்பப்ப டேலி ஆகுது. மத்யானத்துக்கு மேல என்ன பண்றீங்க?

ஏங்க வாங்கின பணத்தை எண்ணி எடுத்து வச்சு ஒழுங்கு பண்ணவேணாமா?

- இதுதான் பதில். இதை என்னுடைய வார்த்தையில் எழுதியிருக்கிறேன். அந்த வங்கிக்காரர் ரொம்ப அல்வாவும் அமிர்தமும் கலந்த மொழியில் இதைச் சொன்னார். அந்த ரீதியில் எனக்கு மூன்றாவது வார்த்தையைக் கோக்க இயலாது. அப்படி முடிந்திருந்தால் நான் மண்டல மேலாளராக ஆகியிருப்பேன்.

தொகுப்பாளருக்கு பாட்டுப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை.

பணம் வேறு கணக்கு வேறுதானே? - எப்பவுமே....

தளிர் மூவர்...கொலை மூவர்.

இன்று தொலைக் காட்சியில் (பொதிகை)கேட்ட தலைப்புச்செய்தியின் அடிப்படையில் இதை எழுதுகிறேன்.சன், ஜெயா தொலைக் காட்சிகளில் இது என்ன இடத்தில் வந்ததெனத் தெரியவில்லை.

வருடம் நினைவில்லை. தி.மு.க ஆட்சியின் போதுதான் என நினைக்கிறேன்.ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு ஒன்றினால் வன்ம வசப்பட்டு கோவை வேளாண் கல்லூரி மாணவியர் மூவரை பேருந்துடன் சேர்த்து சிலர் கொளுத்தினர்.அ.தி.மு.க தொண்டர் என செய்திகளில் சொல்லப் படுகிறார்கள். அ.தி.மு.க மூடர் என்று சொல்வதற்கு செய்தி தர்மம் இடம் தராது. சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள ஊரின் பெயர் “தர்மபுரி’. கொளுத்தப்பட்ட இடம் ‘இலக்கியம் பட்டி.” எனக்கு இப்படியாக கொளுத்தினார்கள் என்றதும் அந்த ஊரின்பெயர் தீவட்டிப் பட்டி என்பதாகவே ஒரு மனத்தோணல் ஓடியது.

 கொளுத்திய சிலரில் மூவருக்கு உயர் நீதி மன்றம் மரணதண்டனை விதித்திருக்கிறது. அதை இப்போது உச்ச நீதி மன்றமும் உறுதி செய்திருக்கிறது என்பதே தலைப்புச்செய்தி.

எனது இப்போதைய நினைவில்... ‘அட... உலகம் இன்னுங் கூட இப்படி இருக்குதா?’ எனப் பதறவைத்த செய்திகளில் முதலாவது தாமிரபரணியில் 17 பேர் இறந்தது. அரசாங்கமே லத்தி எடுத்துவிட்டால் அங்கே குற்றவாளிகள் இல்லை. செய்தி கேட்ட நாளில் ஒரு தண்ணீர்த் தொட்டிக்குள் இயன்ற அளவு மூச்சுத் திணற இரண்டோ மூன்றோ முறைகள் மூச்சுத் திணற மண்டியிட்டேன். இது தற் செய்தி. நிற்க, தாமிர பரணிச்சாவுகளை விபத்தென்று முடித்துவிட்டதென நினைக்கிறேன் அரசு. அதில் யாரும் தண்டனை பெறவில்லை.

அப்புறம் மாணவிகள் எரிப்பு. பிறகு மதுரையில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் மூவர்.அந்த வழக்கு நடக்கிறதா தெரியவில்லை.

மாணவிகள் வழக்கில் இனி கொல்லப்படப் போகும் மூவரின் குடும்பங்களிலும் இளம் மாணவ மாணவியர் இருக்கக்கூடும். அவர்கள் சுமக்கப் போகும் அவமான வேதனையை நினைத்து வருத்தமாக இருக்கிறது.

தீக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள பந்தம் நெடியது. எரி தழல் கொண்டு மதுரை எரித்த சிலம்பின் நாடே இஃது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது காவலர் வாயில் சுடருந் திரவம் ஊற்றித் தீவைத்த பண்பாடெல்லாம் நமக்கு உண்டு (திருப்பூரிலா அது?).

கயவாளிகள் தொண்டர் ஆகிய மண்டர்களுக்கு நல்லது சொல்லித் தரவில்லை. அவர்களை அடி நிலையில் வைத்திருக்கவும் தலைமையர் கொழிக்கவும் சூத்திரங்கள் கண்ணியமாகக் கட்டமைக்கப் பட்டுள்ளன.

ஒன்று உறுதி... பேருந்து கொளுத்த மொத்தமாகப் போனவர்கள் மூவர் மட்டுமே அல்ல.பத்துக்கும் குறைவில்லாது போயிருந்தால்தான் அப்படியான சேதாரம் சாத்தியம். மூன்று பேர் சாவுக்கு மூன்று பேருக்கு மரணதண்டனை என்கிற நுட்பக் கணக்கு...

எளியவற்றின் நுட்பம் அளவிட முடியாததாக இருக்கிறது. அது மனச்சோர்வில் தள்ளுகிறது. நெருஞ்சி பூத்த உடைமுள்க் காட்டில் வெற்றுடம்பும் வெற்றுக் காலுமாக குளிர்க் கடும் இரவை உணர்கிறேன்.

நேற்று... இன்று... நாளை(விடுமுறை விண்ணப்பம்)

எல்.ஆர். ஈஸ்வரி பாடும் பாடல்களில் ஒன்றில் , ‘நேற்றாகி இன்றாகி நாளாகினாள்..’ என்று ஒரு வரி வரும். இந்த நாள் என்பதில் நாளை என்கிற பதமும் ஒளிந்து கிடப்பது கண்டு நாளும் வியக்கிறேன். இந்தப் பகிர்வை எழுதுமுன் அம் மணி நினைவுக்கு வந்ததும் உயர்வுச் சிலிர்ப்பூட்டுகிறது. அனேகமாக செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பகிர்வுகள் எழுத இயலாதென நினைக்கிறேன்.

 கல்நார்க் கூரை வீட்டு விதானத்தை காங்கிரீட் மெத்துவதான ஏற்பாட்டில் கூரை பிரித்துக் காரை மேயும் ஏற்பாடு. மெத்தை வீடு மெத்த் அவசியமல்லதான் என்றாலும் அப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்கிற சுற்றத்தின் எண்ணமும் செயல்பாடும். இதில் என் பங்கு சித்தாள் வேலை செய்வது தவிர்த்து ஒரு சுக்கு ஒரு காசு எதுவும் கிடையாது.

எவ்வளவு பெரிய வீடு இருந்தாலும் சமயங்களில் இன்னுமொரு அறை இருந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும் என்பார் டால்ஸ்டாய்.(புத்துயிர்ப்பு நாவலின் முதல் வாக்கியம் இது.)எனது கனவு வீடு வேறு மாதிரியானது. ஆனால் அது கட்டட அமைப்பு சம்பந்தப் பட்டது அல்ல. கட்டமைப்பு சம்பந்தப்பட்டது. அது நிறைவேற நான் மறுபிறவிகள் கொள்கையை நம்பவேண்டும்.

மாமனாரின் சொல்படி ‘தேவையில்லாத புத்தகங்களை ‘ மேற்சாலையில் ஏற்கெனவே போட்டாயிற்று. இந்த தேவையில்லாத என்பது புத்தகங்களுக்கு அவர் தருகிற உரிச்சொல். இதை எதிர்த்து வாதாட எனக்குத் தெம்பில்லை.கணினியும் நாளையோ மறுநாளோ பொதியப்பட்டுவிடும். நெட்டும் செட்டுமாயிருக்கிற இந்தக் கணினியை ஒரு இருமாதத்துக்கு அயலில் ஐநூறு ஐநூறு மீட்டர்களில் சூழ்ந்து நிற்கிற இரண்ட்ல் ஒரு கிராமத்தில் போட்டுவைத்து எளிய அளவில் அங்குள்ள குழந்தைகளோடு பகிர்ந்துகொள்ளலாம் என்கிற ஆசைகூட இருக்கிறது. இதெல்லாம் ஆசைதான்.

மாமனாரும் மனைவியும் மாமியுமே பலசமயங்களில் இவனை ஏண்டா சேத்துக்கிட்டோம் என விதியை நோகும்போது கிராமத்தில் புதிதாக தேவதைகள் சாத்தான்கள் எதுவும் வேண்டாம்.கிராமம் தனது வழக்கமான கதியில் தரிக்கட்டும். கரையானும் அரிக்காது என்கிற நம்பிக்கையோடு புதிய கூடாரத்தில் கணினியைப் போட்டுவைக்கப் போகிறேன். புத்தகம் உள்ள தனிக் கூடாரத்தை வாதைகள் மற்றும் கரையானும் அரிக்காத சுவிசேஷம் கிடைக்க இயற்கை அருளட்டும்.

ஆக, இந்த இரண்டு மாதங்களுக்கும் (அல்லது அதற்கும் மேல்சில நாட்களுக்கு) கணினியில் எழுதிப் பகிரும் வாய்ப்பில்லை. இடையில் எப்படியாவது எழுதவும் பகிரவும் வாய்க்கும் எனில் அது வள்ளுவத்தை எடுத்துக்காட்டும்.

‘ஊழிற் பெரு வலி யாவுள...’

அச்சம் மடம் நாணம்...

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு... என்கிற அடுக்குச் சொற்களை தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் பதின் வயதுகளுக்குள் கேட்டுவிடமுடியும். நானும் அப்படிக் கேட்டு அது மனனம் கூட ஆகியும் நான்காவது வார்த்தையான பயிர்ப்புக்கு வெகு காலம் அர்த்தம் தெரியாமல் இருந்தது.

 இப்பவும் ஒரு குழப்பம் உண்டு. ஆணின் அங்கம் வயது வந்த பெண்ணின் மீது படுகையில்ப் படர்கையில் ஏற்படுகிற உணர்வுதான் பயிர்ப்பு என்பதா அல்லது, “ பயிர்மை’ என்கிற உயிர் நீட்டுத் தன்மை கொண்டு உயிர்த்தொடர்ச்சி நடத்தும் தகைமை பெண்களுக்கு இருப்பதால் ‘பயிர்ப்பு ‘ என்கிற சொல் தொடர்கிறதா என்பதும் மொழி ஆய்வாக இருக்கிறது எனக்கு. தமிழ்ச் சங்கம் தீர்க்காததை தனியாக யாரும் தீர்த்துவைத்தாலும் மகிழ்வே.

இதனிடையே பயிர்ப்பு என்றால் என்னவென்று மக்களிடம் நான் விவாதம் தொடங்கும் முன்னே ஊர்க்காட்டு நாடகத்தில் அதைப் பற்றிக் கேட்டது முதாலாவது சிரிப்பைத் தந்தது.

நாடகம், கரகாட்டம் முதலியவற்றில் பின் சொல்வதை நிகர்த்த பத்துக்கும் மேற்பட்ட கொச்சைகள் என்னிடம் உண்டு. எளிய மனதோர் ,இருதய பலவீனமுள்ளோர்,ரொம்ப நல்லவங்க ஆகியோர் இதைப் படிக்கவேண்டாம். (குறிப்பாக தேனிக்காரன்.ஹைதராபாத் ஆறுமுகம்).

கூத்தில் காமிக் பெண்ணிடம் பபூன் வினவுவது இப்படி, “ ஏம்மா! பொம்பளைகளுக்கு இருக்கவேண்டிய அச்சம் மடம் நாணம் பயிப்பு எதாவது உங்கிட்ட இருக்கா?” - பைப்பு என்கிற சொல் சில அளவுகளில் பொருத்தப் பாடுகளுடன் இயைந்து சுவை கூட்டியது. அதிலும் பைப் என்பது முப்பாலருக்கும்பொருந்துவது அல்லவா?

ஒரு விதமாக தவறாகவேனும் பயிர்ப்பு என்றால் என்னவென விளக்கும் நிலைக்கு நான் வந்திருக்கிற நிலையில் நேற்று ஒரு நிகழ்வு நடந்தது. சென்று வந்த ஒரு திருமணம் , திருநெறிய தமிழ் முறைப்படி நடந்தேறியது.தமிழில் தான் பாடல்கள் ஓதுதல் எல்லாம். பெண்ணின் நல்லாலொடும் பெருந்தகை இருந்ததே... உட்பட ஏராளம் நல்ல சைவப்பண்கள் கேட்டேன்.

தமிழ் முறைப்படி இப்படி நடக்கும் திருமணங்கள் வைணவத்தில் நடக்கிறதா தெரியவில்லை. பவளச் செவ்வாய் ,கமலச் செங்கண் ,புடைபரந்து விரிந்து கரியவாய பேதமை செய்யும் பெரியவாய.... மொழியையும் விழியையும் வைத்துக்கொண்டு வைணவத்தில் இவ்விதம் தமிழ்கூறி மணங்கள் நடக்கவில்லையெனில் அது அரங்கனின் அரங்கத்துக்கு ஓர் அபவாதமே.
நிற்க.

நேற்று நன்விதம் மங்கலம் செய்வித்த ஓதுவாராகப் பட்டவர் முக்கியமான ஒரு இடத்தில் வழுவினார். சுவையான வழு அது. பெண் வாக்குறுதியில் அச்சம் மடம் நாணம் பெயர்ப்பு ஆகியன கொண்டு ஒழுகுவதாக பெண்ணை சொல்லச் சொன்னார். என் மாமா மகளும் அப்படியே சொன்னாள். விபரீதமான இடங்களில் சிரித்துவைக்கிற வியாதி பீடித்திருப்பதால் இப்போதெல்லாம் மேடைகளுக்கு அருகில் அமர்வது இல்லை. பலரின் பகை தவிர்க்க அரங்கக் கடைசிகளிலோ அல்லது வெளியிலோ நின்றுவிடுகிறேன்.

பெயர்ப்பு என்றதும் சிரிப்பு வந்துவிட்டது. பயிர்ப்பின் காலம் போய்விட்டது. பெயர்ப்பு என்று சரியாகத்தான் சொல்கிறாரோ. புக்ககம் போனதும் முதல் ஜோலியாக பயலை தனிக்குடுத்தனத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

Friday, August 27, 2010

வெண்ணிலாவின் குறும்பு...

ஒரு ஊர்ல ஒரு வெண்ணிலான்னு ஒரு பாப்பா இருக்குமா... அப்ப ஒரு அழகான பட்டர்ஃபிளை இருக்குமா வண்ணத்துப்பூச்சி. அதுக்கு ஒரு குட்டி பிறந்துச்சாம். அப்ப அது அதுக்கு நெறயா தேன் குடுக்குமா. அந்த வெண்ணிலா பாப்பா அவங்க அப்பாகிட்டக் கேட்டுச்சாம், “ அப்பா... அப்பா... இந்த பட்டர்ஃபிளை நம்ம கூட  வராதான்னு கேட்டுச்சாம். அவங்கப்பா சொன்னாரா , “பட்டர் ஃபிளையை நம்ம கூப்புட்டா வரும்”னு சொன்னாராம். அதுக்கு அந்த வெண்ணிலா சொல்லுச்சாம்.

“ இப்ப கூப்டா வருமான்னு “ கேட்டுச்சாம். அதுக்கு அவங்க அம்மா உள்ளருந்து வந்து அவங்க சொன்னாங்களாம் , “ பட்டர் ஃபிளை இன்னேரம் தூங்கீருக்கும்’’ னு சொன்னாங்களாம். வெண்ணிலாப் பாப்பா சொல்லுச்சாம்.

“ நா மட்டும் முழிச்சிருக்கேனேன்னு”  கேட்டுச்சாம்.

“நீ பெரிய புள்ள. ஆனா ,பட்டர் ஃபிளைலாம் ... சின்ன மிருகந்தான் ம்ஹூம் சின்ன பறவைதான்.அதுனால அது சீக்கிரமாவே தூங்கிரும்.”

(அப்பா கதையோட மாரல் எழுதலாமா? - கதையோட மாரல் தான் இப்போ... என்னப்பா இதெல்லாம் போயி அடிச்சுக்கிட்டு இருக்கீங்க)

நீங்களும் சீக்கிரமா தூங்கினீங்கன்னா காலைல ஸ்கூலுக்கு வேகமா போயி மேம்ட்ட அடிவாங்காம இருக்கலாம். அவ்வளவுதான்....

* குட்டி ரேவதியின் குறுங்கதை, ‘ நிலவில் குடியேறிய மரத்து அணில் ’படித்துவிட்டு ஸ்வேதா குட்டி சொன்ன கதை.தலைப்பும் ஸ்வேதாவே...தட்டச்சாக்கம் - சிவகுமார்

கொய்த தலையில் காணும் புன்னகை...

உடலிலிருந்து தலை பிரிக்கப்பட்ட
சடலத்துக்கு இரட்டை மரணம்.
உடலுக்கு ஒன்று
தலைக்கு ஒன்றென.

அறுத்துச் சிரம் துணிக்கும்
பொருட்கள் யாவும் விளிம்பில்
வெள்ளிப் பளபளப்பைக் கொண்டே
இருக்கின்றன.

நெடுக்கேகும் பாதையில்
திடீரென நேர்வந்து கீறிய -
கூர்மை நடுக்குறச் செய்யும்
கணத்திற்குச் சற்றே முந்தைய
சடுதியில்
உடல் உணர்ந்ததென்ன?
தலை நினைத்ததென்ன?

வெட்டுண்ட உடல்
உள்ளிருந்த உயிர்ப்பால்
துடிக்கும்போது தலை
வீச்சின் திராணியை
அச்சாய்க்கொண்டே
திரண்டுருள்கிறது.

தவறிய அதிசயமாய்த் தலைமேல்
தேங்கிவிட்டது  ஒரு புன்னகை....
அது எதன் அபத்தத்தை உணர்த்தக் கூடும்?
வாழ்வின் அபத்தம்
அல்லது
மரணத்தின்
அபத்தமல்லது சாசுவதம் .

மூளைச் செய்திகள் ஸ்தம்பித்துவிட
இமை மூட மறந்த தலை
விழிமணியில் காணும் பிம்பம்
ஒவ்வொன்றையும் கனவாகவே
காணுகிறது.

பகிராக் கனவு... பதியாக் கனவு.

* ஊடிழை - kakithaoodam.blogspot டில் வந்த ‘கனவுகள் தடை செய்யப்பட்ட உலகு’ கவிதை உள்ளிருந்து  தலைப்பும் உத்வேகமும் பெறப்பட்டது.

Wednesday, August 25, 2010

சாமீ! நேத்துதான் உண்மை தெரிஞ்சது...

ஏ.கே. வீராசாமி. ஐநூறு படங்களுக்கு மேல் நடித்த திரைக் கலைஞர். குறிப்பாக முதல் மரியாதை படத்தில் , ‘சாமீ! எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்கிற வசனத்தின் வாயிலாக மனங்களில் மங்காத இடம்பிடித்து முதல் மரியாதை வீராச்சாமி என்றே அறியப்பட்ட குணசித்திர நடிகர். எண்பதுக்கும் அதிகமான அகவையில் ஆகஸ்ட் 22, 2010 இல் காலமாகிவிட்டார்.

அவர் சா. கந்தசாமியின் கதையான ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ குறும்படத்தில் நடித்திருக்கிறார். அதை பொதிகை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் அமரர் ஆன செய்தியை 100.5 கோடை பண்பலையில் கேட்டுத் தெரிந்துகொண்டேன். பிரசார் பாரதி பிரசார் பாரதிதான். அதன் மீதான பராதிகள் தனி.

வீராச்சாமிக்கு பெரிய வருத்தங்கள் ஏதுமற்ற அஞ்சலி.

Saturday, August 21, 2010

பாராளுமன்றத்தின் சம்பளம் அம்பதாயிரம்

தலைப்பு,சேர்க்கை மற்றும் ஓசை அடிப்படையில் வேறு ஏதேனும் வாசகத்தை நினைவு படுத்தினால் நான் பொறுப்பேற்க முடியாது. நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கான சம்பளம் ஐம்பதாயிரமாக உயர்வதை வரவேற்றே இது எழுதப்படுகிறது.

பழைய ஒரு ரூபாய் நோட்டுகளில் மன்மோஹன் சிங்கின் கையெழுத்து ( h களில் இடைவெளி விட்டு ) காணக்கிடைக்கும். அவரது அறிவு தோன்றும் அதில். இன்னும் அவரது கையெழுத்து மாறியிருக்காது என்றே கருதுகிறேன். சம்பளத்தை விட ஓய்வூதியம், பயணப் படி,உபசரிப்பு அலவன்ஸ் ஆகியவை நாளது தேதிக்கும் ஸ்திதிக்கும் தக்க உயர்த்திக்கொடுக்கப்பட்டிருக்கிறது.

எத்தனை விடலைப் பையன்கள் ‘ எங்க  சம்பளம் எம்.பியை விட அதிகம் எனக் கெக்கலித்திருப்பார்கள். ஒரு சட்ட மன்றத் தொகுதி தமது மையப் பிரதிநிதிக்கு மாதாந்திரம் பத்துப் பதினைந்து செலவிடுவதால் க்ஷீணித்துப்போகாது. வீழ்ச்சியின் விவர நிலைகள் வேறு ரூபங்களில் வருகின்றன. உறுப்பினர்களுக்கான சம்பளத்தை முன்னமே கூட்டியிருக்கவேண்டும்.

பரிந்துரைத்த குழு எண்பதாயிரம் வரை தரலாம் என்று சொன்னதால் ‘எண்பதைத் தா’ எனச் சிலர் கோஷமிட்டு அவையை முடக்கினார்கள்.விண்ணவப் புன்னகையுடன் சபையை அமைதி காக்க ஹஸ்த முத்திரை செய்துவிட்டு பிறகு வழக்கம் போல சபையை ஒத்திவைத்தார் மீரா குமார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் பாபு ஜகஜீவன் ராமின் மீது எனக்குப் பிரியம் மிகுகிறது. அவரும் ஜெமினி கணேசனும் வாரிசுகளுக்கு கன்னக் கதுப்பை மரபுவழியாகக் கொடுத்ததில் இன்றும் நினைவில் வாழ்கிறார்கள்.நிற்க.

எண்பதாயிரம் கோருகிறவர்கள் முந்தைய சம்பளத்தைக் காட்டிலும் சில மடங்கு எம்.பிக்கு உயர்த்துவதால் அரசு சம்பளம் பெறும் அனைவரும் உடனடியாக ஒப்புமைக் கணக்குப் போட்டு போராட்டத்துக்கு மனத்தை ஆயத்தம் செய்வார்கள் என்பதையாவது எண்ணிப்பார்க்க வேண்டும். ஆனால், அவர்கள் என்ன செய்வார்கள். இல்லத்தில் இல்லி தூர்ந்த வறுமார்புகளுடன் மனைவிகள் காத்திருக்கிறார்கள். இவர்களது இந்தக் காசில்தான் முதல் வேலையாக விறகு வாங்கிப்போய் அடுப்பில் உறங்கும் பூனையை விரட்ட வேண்டி இருக்கிறது.

இவர்களைப் பார்த்தால் சிங்க முத்து அண்ணன் (வடிவேலு புகழ்) போலத்தான் கேட்கவேண்டும்.

‘என்ன தாய்யா வேணும்?’

Friday, August 20, 2010

கொட்டும் மழையில்...

இந்த சுதந்திர தினத்தில் சென்னையில் கொட்டும் மழையினூடாக கோட்டையில் கொடி ஏற்றி வைத்து அதற்கு முன்னமோ பின்னரோ ஒரு அறிவிப்பை முதலமைச்சர் மு. கருணாநிதி வெளியிட்டதாக அறிகிறேன்.

சில அறிவிப்புகள் கேட்ட உடனே மகிழ்வுதரும். சில எரிச்சல் தரும். இவ்வறிவிப்பு முதல் வகையைச் சேர்ந்தது என்னளவில். விவசாயிகளுக்கு இலவச மோட்டார் என்பதே அது. பம்ப் செட்டுகள் அதில் அடக்கமா என்பது தெரியவில்லை. இலவசமாகப் பெற்றுக்கொள்வதன் மனச் சங்கடத்தை பல பிரிவினரைப் போலவே உழவர்களும் இழந்தாயிற்று என்பதால் வினியோகச் சிக்கல் இல்லை. இதில் என்ன சங்கடம். நம்ம அரசு நாம் அதன் மக்கள். இதன் சலுகைகளை நாம் நன்கு அனுபவிக்க வேண்டியதுதான். மருத்துவர் ராமதாஸ் சொல்கிறபடி விவசாயிகளுக்கு மாதம் ஐந்தாயிரம் பத்தாயிரம் மானியம் கிடைத்தால் இன்னும் உவப்பானது.

இந்த மின் மோட்டார் உண்மையிலேயே பயனுள்ளது.பாட்டன் காலத்து மோட்டார்கள் பலபக்கம் உள்ளன. இந்த புது மின் மோட்டார் வழங்கும் அதே நேரத்து மின் இணைப்புகளை பெயர் மாற்றித் தந்துவிடலாம். பல மோட்டார்கள் 60 களில் வாங்கி இன்னும் அமரராகிப் போனவர்களின் பெயரில் இருக்கின்றன. மோட்டார்களில் விலை கூடிய பகுதி காயில் என அறியப்பெறும் செம்புக் கம்பிச் சுற்று மட்டுமே. மற்றவை இரும்பாலானது. மொத்தமாகத் தயாரிப்பதில் அரசுக்கு செலவு அதிகம் வந்துவிடாது.

பழைய மோட்டார்கள் இழுக்கும் மின்சாரத்தை விட குறைவான மின்சாரத்தையே புதுத் தொழில் நுட்ப மோட்டர்கள் உறிஞ்சும் என்றால் இயந்திரத்துக்கான காசு இரண்டே வருடத்தில் மின்சேமிப்பு மூலமாகவே தமிழ்நாட்டுக்கான பொதுப் பயனில் வந்துவிடும்.

விவசாய மேம்பாட்டுக்கு செய்யவேண்டியது இன்னும் ஏராளம் உள்ளது. அதைப் பற்றி நூலே எழுதலாம். நூற்கள் தமிழ் நாட்டில் என்னென்ன பயனை விளைவிக்கும் என்பது நாம் அறிந்ததே. அது அங்கேயே நிற்க.

விவசாய மேம்பாட்டுக்கு செய்யவேண்டிய முதலாவது வேலைகள். ஒரு ஒன்றியத்துக்குள்ளேயே இருக்கிற விவசாய ஆஃபீசர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான இடைவெளியை ஆயிரம் கிலோமீட்டர்களில் இருந்து குறைப்பது. அடுத்தது... விவசாயம் என்றால் என்ன என்று தெரிந்தவர்களை விவசாய ஆஃபீஸ் வேலைக்கு எடுத்துக்கொள்வது.

அடக் கடவுளே.... நல்லது பண்றதுல இவ்வளவு கஷ்டம் இருக்குதா?!

Monday, August 16, 2010

மண் வாசனை

இன்று நெடு நாட்களுக்குப் பிறகு தொலைக் காட்சியில் கிரிகெட் ஆட்டம் பார்த்தேன். கறுப்பு வெள்ளைத் தொலைக் காட்சிப் பெட்டி.சமீபத்தில் 99- இல் சதத்தைத் தவறவிட்ட வீரேந்திர சேவக் இம்முறையும் 99. அடித்த சிகசர் அப்படியே இருக்க ஒரு ‘இல்லாத பந்தில்’ (நோ பால்) இந்தியா ஜெயித்துவிட்டது.வெற்றியைக் கடந்த ஏமாற்றம் சேவக்கின் முகத்தில் ஒளிர்ந்தது.

ஆடு மகன் தோனி தனது தெரிவிப்பில் அவரை வீரேந்திர சேவக் என்றே  குறிப்பிட்டார். வீரு, சேவக், வீரேந்திர சேவக் எனப் பலபெயர்களில் அவர் அறியப்படுவதுண்டு.

இழந்த அணியின் கேப்டன் அவரை , ‘வீரேந்த்ரா’ என்றே குறிப்பிட்டார். கதுப்புகளில் இளமையும் செழிப்பும் பொங்கும் அந்த விக்கட் சேவகர் மற்றும் அணி வேந்தர் வேறு யாருமில்லை.

 ‘குமார சங்ககாரா’

Sunday, August 15, 2010

பிராது..

ஒரு விமானத்துக்கு இரண்டு இயக்குனர்கள் இருந்தார்கள். இவர்களை ஓட்டுநர் என்று சொல்வதா பறக்குனர் என்று சொல்வதா என்பது புரியாததாலேயே இப்படி சொல்கிறேன். சரி... பைலட்டுகள்.

இந்த பைலட்டுகள் தங்கள் குறைகளை எழுதி மேலிடத்துக்கு தெரிவிக்க ஒரு நோட்டு இருந்தது. அது வெகு நாட்கள் இவர்களின் உபயோகிப்பு இன்றியே இருந்தது. இருவரில் ஒருவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அதாவது தினமும் குடித்துவிட்டுத்தான் விமானத்துக்கே வருவார். மற்றவருக்கு அந்த ஜோலி
கிடையாது.

குடிக்காதவர் ஒருநாள் அந்த நோட்டில் எழுதிவைத்துவிட்டார்.’ சக விமானி இன்று குடித்துவிட்டு விமானம் இயக்கினார் ’என்று. இது மேலிடத்துக்குப் போகுமுன் அதைப் பார்த்துவிட்ட சக விமானி உடனடியாக தன் தரப்புக்கு ஒரு குறிப்பு எழுதிவைத்தார்.

‘இன்று என் சக விமானி குடிக்காமல் விமானம் ஓட்டினார்.’

(எழுத்தாளர் எஸ். லட்சுமணப்பெருமாள் வாயிலாக ஒலி பெருக்கியில் கேட்டது இது)

Saturday, August 14, 2010

விடுதலை...

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இதைச் சொல்லுவதற்கு சாக்லெட் செலவு அல்லது பிறைவடிவ (பழைய) ஆரஞ்சு முட்டாய் செலவு கூட இல்லை என்பதாலேயே இதைத் தெரிவித்தலும் ஆகிறது. நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை என்பது ‘விடுதலை விரும்பி’களுக்கு கொஞ்சம் கஷ்டமாகக் கூட இருக்கும்.

அவர்களுக்கு விடுதலை தினமும் மற்றுமொரு நாளே. இது திங்கள் செவ்வாய் என இதர நாளில் வந்து ‘தொலைந்தால்’ என்ன என்று அவர்கள் நினைக்கக்கூடும்.காலண்டர்களை மாற்ற முடியாது. விடுதலை நாளை முன்னிட்டு காலத்தை மாற்ற பாரத மணித்திரு நாட்டு மணிகள் (ஆண்மணி/பெண்மணிகள் ) என்ன செய்தோம் என்பதை கடுமையாக யோசிக்கவேண்டி இருக்கிறது.

வெள்ளையரே ஆண்டிருந்தாலும் இன்றைய நிலையிலிருந்து பெரிய மாற்றம் இருந்திருக்குமா தெரியவில்லை. ஆனால் இந்தியப் பெயர்களைச் சொல்லி தாய்மொழிகளில் ரத்தம், தம்பி, அண்ணன் என்றெல்லாம் வாக்குச் சேகரிக்க முடிவதும் முயல்வதும் விடுதலையின் ஒரு பகுதிதானே?

பின்னே சுதந்திரம் என்பது சுக்கா?மிளகா?

Sunday, August 1, 2010

அய்ய.... மின்சாரமுங்க மின்சாரம்...

உலக நட்பு தினம் ஒரு புறத்தில் இருந்தாலும் உலக நடப்பு தினம் என ஒன்று இருக்கிறதல்லவா?அதன் படிக்கு இன்றைக்குத் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப் பட்டிருக்கிறது. புள்ளிவிவரங்கள் நமக்கு ஆகாது எப்பவுமே. இந்த உயர்வு எனப்படுவது சர்வமட்டதிலும் அல்லாமல் வரையறுக்கப்பட்ட அளவுகளில் இருக்கிறது. வீடுகளுக்கு அறுநூறு யூனிட்டுக்குமேல் ஓடும் போது யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கூடுகிறது. இந்த எண்ணிக்கை முதலாவது யூனிட்டிலிருந்தே கணக்காகும் என்றே நினைக்கிறேன். மின்சாரக் கண்ணன்கள் பின்னூட்டமிட்டு ஐயந் தீர்க்கலாம்.

செய்தி வெளியாகிவிட்டது.பொதுவாக செய்தி தரப்படும் (தரப்    படும்!) போது இரு மாதத்துக்கு என்பதாக அல்லாமல் மாதாந்தரம் என்கிற தொனியிலேயே தெரிவிக்கப்படுகின்றன.இது நம் செய்தியியல் பற்றாக்குறை. கோளாறு. பள்ளிக்கூடங்கள்,தொழில் நிறுவனங்களுக்கும் தொகை கூடுகிறது. தொழில்கள் பற்றிய புரிதல்கள் இல்லாவிட்டாலும் கல்விக் கூடங்களுக்கு ஏற்றியது பற்றி எனக்குக் கேள்வியில்லை. நிர்வாகம் அதனால் தளர்வுறப் போவதில்லை. இதையுங் காரணங்காட்டி குழந்தைகளுக்கு மாதம் பத்தோ இருபதோ ஃபீசு கூட்டப்போகிறார்கள் அவ்வளவே.

ஒரே செய்தியை சன்னிலும் கலைஞரிலும் ஜெயாவிலும் மக்களிலும் பொதிகையிலும் கேட்கும்போது விஷயத்தின் பன்முகத் தன்மையை உணரலாம். சித்தரிப்பில் ஜெயா டி.வி க்கு தனித்தன்மை உண்டு. தனித் தன்மையை மெருகேற்ற  ஃபாத்திமா பாபு.நடுத்தர வர்க்கத்தை இந்த மின் கட்டணம் கடுமையாகப் பாதிக்கிறது என்றவுடன் பொதுஜனப் பெண்மணி ஒருவர் தோன்றி பிளந்து கட்டினார். அவரது ஆவேசத்தை அடுத்து எனக்குத் தோன்றிய ஆச்சரியம். ’தமிழகத்தில் நடுத்தரக் குடும்பங்கள் அறுநூறு யூனிட்டைத் தாண்டி உபயோகிக்கிறார்களா... வாரே வாவ்’ என்பதுதான்.

வாயுருளி, உருளித் திரவம் இப்படி எவ்வளவோ பாத்தாச்சு இந்தக் கட்டண ஏற்றத்தை ...ப்பூ....துவரம் பருப்பூ... என்று ஊதித்தள்ளிவிட மாட்டோமா? விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இன்னும் இலவச மின்சாரம்? அவர்களுக்கும் விரைவில் கட்டணம் அமலாக்கவேண்டும்.

வெள்ளைக் குதிரையேறி கல்கி வருகிற கோலம் பார்க்க ஆசையிருக்காத என்ன இந்த இருண்ட மனதுக்கு?

iஇன்று நண்பர் தினமாம்... சொல்றாங்க...

தூக்கத்திலிருந்து கண்கள் விழித்து மூளை முழுதும்  விழிக்காத (இது ஒரு பாவனை) காலையில் அதிகாலையில் வெளிநாட்டிலிருந்து தோழி தன் பேச்சின் பலதினூடே சொன்னாள். இன்றைக்கு ’நண்பர்கள் தினம்’ என்று. ஓகோ எனக் கேட்டுக்கொண்டேன்.

புன்னகை ,கண்ணில் ஒரு மின்னல், உளக் கிளர்ச்சி  எதுவும் தோன்றவில்லை எனக்கு.எப்படி இருந்த நான் இப்படி ஆயிப்போயிட்டேனே... என்று தோன்றினாலும் அரசியல் காரணங்களுக்காக தினங்கள் ஏனோ உவப்பளிப்பதில்லை.

தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு குழந்தைகளை எப்பொழுது கொண்டாடப் போகிறீர்கள்? - என அப்துல் ரகுமான் கேள்விகேட்ட நாளிலிருந்து இந்த தீர்க்கமுடியா வியாதி தோன்றியிருக்கவேண்டும். ஆனாலும் பாருங்கள் தமிழ் அரசியல் சூழலில் வானம் பாடிகள் ஒரு ஃபீனிக்ஸ் தான். இன்னும் எவ்வெவற்றுக்காக அவர்களை
அவர்களது சொற்களை நினைவுகூரப்போகிறேன் என நினைக்கும்போது தீப ஆவளி, ரம்ஜான், கிருஸ்துமஸ் ஆகியனவற்றுக்கும் மகிழ்வைத் தொலைத்துவிடுவேன் என பயமாக இருக்கிறது.

பெயர்ச்சொல் பிளாக்கில் ஒரு வாழ்த்து அட்டையையும் படத்தையும் பார்த்தபோது நமக்கு ஒரு படம் போட்டு பிளாக் எழுதத் தெரியலியே என வருத்தமாக வந்தது.

முதல் மரியாதை வீராச்சாமிக்கு உள்ள ஏக்கத்தை நிகர்த்தது இது. சிவாஜியிடம் வீராசாமி முறையிடுவதுஅது .( படத்தில் பெருசின் பாத்திரப் பெயர் நினைவில்லை.வீராசாமி வந்து செங்கோடன்)

‘’சாமி உங்க காலுக்கு ஒரு செருப்பு தெச்சுப் போடணும்னு இந்த செங்கோடனுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசைங்க!”

கட்டிய பெண்டாட்டியை ஃபிட்டிங்ஸ் போடாமல், மாமனார் காலில் விழுந்தார் என்பதற்காக செருப்பும் போடாமல்  செங்கோடனின் செருப்புத் தைக்கும் தொழிலுக்கு குந்தகம் விளைவித்து செங்க்ஸை முள் எடுக்க விட்டு ... எசப் பாட்டுப் படித்ததைத் தவிரவும் பாசி கோர்க்க முடி பிடுங்கித் தந்ததைத் தவிரவும் ( எதுக்கு எதை செய்யணுமோ அதை செய்யவே மாட்டியா பெருசு?)
பெருசு அந்தப் படத்தில் எதுவும் செய்யவில்லை. நிற்க...

நான் செய்து கொண்டிருந்த காரியம் நட்புக்கு மரியாதை பற்றி எழுதிக்கொண்டிருந்ததல்லவா? ’நட்டல்’(அய்யன் சொல்) பற்றி ‘நட்பதிகாரம்’ என சொல் நீக்கி வள்ளுவன் எவ்வளவோ சொல்லியிருக்கக் கூடும். நட்பு இருவகைப் படும் ஒன்று கொண்டாடப் படவேண்டிய நட்பு மற்றது பந்தாடப் படவேண்டிய நட்பு. பந்தாடுதல் என்றால் அது அரங்கத்துக்கும் வெளியே போய் நம் ஜீவிய காலத்துக்கும் கண்ணிலேயே படக்கூடாது- அந்தப் பந்து அந்த பந்தம்..

இப்படியெல்லாம் அன்பும் வன்மமும் ஒருங்கே பூண்டு மண்ணில் நல்லவண்ணம் வாழ ஆசையாய் இருக்கிறது. செய்திகள் வந்த அளவில் ’நட்டல் தினம்’ பற்றிய தகவலுக்கு அனிச்சையான நன்றிகள்.

இன்னும் இருபத்தி நாலு மணித்தியாலத்துக்கு ஒரு ஆம்பளைக்கோ ஒரு பொம்பளைக்கோ ஒரு மூணாம் பாலுக்கோ நானாகப் போன் பேசுவதில்லை என முடிவு செய்துவிட்டேன்.

நட்புக்கொள்கை-தற்காலிகக் கோட்பாடு- குடும்பத்துக்கு ஒவ்வாது என நினைக்கையில் பயமாக இருக்கிறது. any way...மானிலம் எல்லாவும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே....