Wednesday, July 27, 2011

ரவிச் சந்திரன்

நடிகர் ரவிச் சந்திரன் முதுமை மற்றும் நோய்கள் காரணமாக மரணமடைந்திருக்கிறார். சென்ற தலைமுறையினரை தனது செல்வாக்காலும் - ஸ்டைலாலும் ஓரளவு பாதித்தவர் என்றால் அது மிகையில்லை. ரவிச் சந்திரனுக்கு அழகான கண்கள். அதனால்தானோ என்னவோ அதே கண்கள் மற்றும் ஊமை விழிகள் என அவருக்குப் பேர் சொல்லும்படி அமைந்துவிட்டன.

ரவிச்சந்திரன் அறிமுகமானது ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில். ‘விஸ்வநாதன் வேலை வேணும்’ என அவர் போட்ட கெட்ட ஆட்டம் மறக்கமுடியாதது. புகழுச்சிக்குப் பின் கிணற்றில் போட்ட கல்லாக அவரது மௌனம் திரை வாழ்வில் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது. எனினும் தனித்துவமான நடிகர்தான் அவர்.

அவர் சினிமாவில் தேர்வு பெற்றது பற்றி சுவாரசியமான செய்தி ஒன்று உண்டு. எவ்வளவு தூரம் அது மெய் எனத் தெரியவில்லை. அதாவது முதலாம் சந்திப்பில் ’நீங்கள் தேர்வு பெறவில்லை’ என ஸ்ரீதர் சொன்னதும் ‘’அப்படியா’’ என்று கேட்டுவிட்டு சாவதானமாக சிகரெட் பற்ற வைத்திருக்கிறார். அதுதான் டீலிங் முடிஞ்சு போச்சே இனி என்ன மரியாதைகள் வேண்டிக்கிடக்கு என்கிற தொனியில் அவர் சிகரெட் பற்ற வைத்த விதம் ஸ்ரீதருக்கு பிடித்துப்போக அந்தக் கணமே ஒப்பந்தமானார் ரவிச்சந்திரன். ஒருவேளை பொய்யாக இருந்தாலும் இந்தச் செய்தியை அமரர்களான ஸ்ரீதர் மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் ரசிக்கக் கூடும்.

மிக நீண்ட தசாப்தங்களில் ரஜினிகாந்த்தின் தந்தை  வேடத்தில் ரவிச்சந்திரனை யாரும் யோசிக்கவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Wednesday, July 20, 2011

நேரில் பார்த்திராத கனவன்

கனவில் முகம் தெரியாதவர்கள் வருவது இயல்பே. ஆனால் கேள்விப்பட்ட நிலையில் மட்டுமே உள்ள நபர் (அவர் தான் கனவில் வருகிறார் என்று தோன்றும் விதமாக) தோன்றித் தொடர்பு கொண்டது நேற்றைய இரவில் முதல் முறை. நேற்றைய இரவு என்று நாம் உறங்குவதனால் மட்டுமே சொல்கிறோமாயிருக்கும். அனேகமாக முன்னிரவின் கனவுகள் மறந்து விடுவதும் அதிகாலைக் கனவுகள் நினைவில் இருப்பதும் வாடிக்கை. ஒரு வகையில் இது இன்றைய கனவே.

இன்றைய கனவில் தோன்றியவர் சுகா என அறியப்படுகிற சுரேஷ் கண்ணன். மூங்கில் மூச்சு என்ற தொடரை ஆனந்த விகடனில் எழுதி வருகிறார் இவர். ஆனால் அதற்கும் முன்னரே இவரது தொடர் ஒன்றினை வார்த்தை மாத இதழில் வாசித்து வியப்புற்று யாரெனத் தேடிய போது செய்தி அறிந்தேன் திரு. நெல்லை கண்ணனின் மைந்தன் இவரென்று. இது தவிர வேறு பேச்சுத் தொடர்போ சந்திப்போ கிடையாது.

இவர் என் கனவில் என்ன பண்ணினார் என்றால் எங்கள் ஊர் நாடகக் கொட்டகை முன்னால் மைக் போட்டு ஏராளம் கூட்டத்தினர் முன் பேசிக்கொண்டிருக்கிறார். மைக் மட்டும் தானே தவிர மேடையில் இல்லை. ( இது, இப்படித்தான் பேச்சு இருக்க வேண்டும் என்கிற எனது பலகால தத்துவப் பின்புலத்தில் இருந்து விளைந்ததாக இருக்கலாம்.) சுகா விடிய விடியப் பேசுகிறார். அதனால் தமிழ் கூத்து நாடக முறைக்கேற்ற கூட்டத்தின் பாணியில் பார்வையாளர்கள் கலைந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர் அனேகமாக பழைய சினிமாப் பாடல்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அவரது  பேச்சுக்கிடையே ‘நெல்லைக் கண்ணனுக்கு’ என்ன ஆயிற்று என்கிற கேள்வி எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. கடைசியில் விடிந்து விட்டது பத்துப் பதினைந்து பார்வையாளர்களில் உன்னிப்பாகக் கவனிக்கிற ஓரிரு பார்வையாளர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். அவர் உற்சாகமாகப் பேசிக்கொண்டேயிருக்கிறார். திடீரென அவரது சால்வை பறந்து போய் ஒரு டீக்கடையின் அருகில் உள்ள மரத்தில் சிக்கிக் கொள்கிறது. நான் அதை ஏறி எடுக்கத் தொட்டுவிட்டபோது ‘’நானே எடுத்துக்கிறேனே’’ என்று சால்வையை சுகாவே எடுக்கிறார்.

அது 1980க்கு முந்தைய தோற்றமுடைய எங்கள் ஊரின் தேநீர் விடுதி. நானும் அவரும் டீ குடிக்கையில் பக்கத்தில் ஏழெட்டுப் பேர் எங்கள் பக்கத்து ஊர்க்காரர்கள். ஒருவர் படுத்த படுக்கையாய் கிடக்கிறார். எங்கள் ஊரில் பேசு முன்பே அந்தப் படுக்கையாளரிடம் சுகா ‘மகா பாரதம் பற்றி’ப் பேச ஒப்புக்கொண்டதால் அதை நிறைவேற்றிக் கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என பக்கத்து ஊர்க்காரர்கள் வற்புறுத்துகிறார்கள். கிடையாய்க்கிடக்கிறவரோ ஏறக்குறைய மரணப் படுக்கை.

செத்துக்கொண்டிருந்தவனின் காதில் திருவாசகம் ஓதுதல் என்கிற நாஞ்சில் நாடனின் வரி என் மனதுக்குள் ஓடுகிறது. அவரை எப்படி கொண்டு போகிறீர்களோ அதே மாதிரி என்னையும் கொண்டுபோனால் நான் அவரிடம் பேசுகிறேன் என்று சுகா சொன்னதும்....

முதலில் மரணக் கிடக்கையாளரை நான்கைந்து பேர் தூக்கிச் செல்கிறார்கள். அவரையடுத்து சுகாவை. என் அண்ணன் வீட்டுக்குத் தூக்கிச் செல்கிறார்கள்.
அப்புறம் கணத்திற்கும் குறைவான நேரம் இடைவெளி விட்டு சுகா மீண்டும் என்னிடம் வந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான் கனவு முடிந்தது.


சமீபத்தில் நெல்லையில் இருந்து வந்த மரணச் செய்தி இப்படிப் பாதித்துக் கனவைத் தூண்டியிருக்கலாம். ஆனாலும்.... இப்படியாக் கொண்ட கற்பனைகள் எல்லாம் எழுதும் போது ஏன் என்னைக் கைவிடுகின்றன என்பதையே யோசிக்கிறேன்.

Tuesday, July 19, 2011

சில கனவுகள் சமீபத்தியவை

போன வாரத்தில் இரவில் ஒரு கனவு, இரண்டு நண்பர்கள் என்னைச் சந்திக்கிறார்கள்.
ஒருவர், பாம்பு பிசினெஸ் நல்லா இருக்கும் என்கிறார்.அதைச் செய்யலாம் என முடிவெடுத்து மற்றொரு நண்பரிடம் சொல்ல அவரும் நானும் பாம்பினைப் பிடிக்கிறோம்.

 பாம்பை பரிசுப் பெட்டி அளவுக்கு பொதிந்து ஆட்டோவில் ஏற்றினால் பொட்டலம் பெருத்துக் கொண்டே போகிறது. மிலிட்டரிக் காரர்களின் படுக்கையுடன் கலந்த சாமான் பொதி போல வீங்கிக் கொண்டே போகிறது. நல்லவேளையாக அது பெருத்து வெடிப்பதற்குள் விழிப்பு வந்துவிட்டது. விழிப்பு வந்ததற்குப் பிறகு திகைத்துப் போனேன். ஏனெனில் கனவில் வந்த இருவர்... ஒருவர் ப.கவிதா குமார் மற்றவர் பா.ராகவன்.

இனிஷியல்களுக்கும் (பாக்கள் வரும் பாம்பு) கனவுகளுக்கும் சம்பந்தம் உண்டா என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் நேற்றிரவின் கனவில் கலாப்ரியா வந்தார். காலையில் எழுந்து சிற்சில வேலைகள் முடிந்த பின் பகல் தூக்கம் போட்டேன். தூக்கத்துக்கு முன் நாளிதழ் பார்த்து ‘சமச்சீர் கல்வி’ குறித்த ஹை கோர்ட் தீர்ப்பைப் படித்திருந்தேன்.

இன்றைய காலைக் கனவில் ஒரு டுவெண்டி டுவெண்டி மேட்ச் நடக்கிறது. அணிக்கு நாலு பேர். எங்கள் அணி பவுலிங் 16 ஓவர் வரை ஒருத்தரும் அவுட் ஆகவில்லை. என் பள்ளிக் கால நண்பன் பெரிய சாமி மட்டுமே தொடர்ந்து பந்து வீசுவதில் கடுப்பாகி நான் வெளியேருகிறேன். ஒரு மாநாட்டுப் பந்தல் இரண்டு சினிமா தியேட்டர்கள் கடந்து வந்தால் ஒரு சாமியான பந்தலின் கீழ் சோபாவில் கருணா நிதி அமர்ந்திருக்கிறார். அவருக்கு ஐந்தடி தொலைவில் நான் நிற்கிறேன். என்னை எதோ கேட்கிறார். இதற்கிடையில் அவரது போட்டோவை எதோ குறிப்பெழுதும் தாளாகப் பயன் படுத்தி அது நான் கொண்டு போன கச்சாத்துகளில் மேலாகக் கிடக்கிறது. அதை அவர் கவனித்துவிடக் கூடாது எனப் பதைப்புடன் இருக்கிறேன்.

அவர் வலியுறுத்தல் பேச்சின் ஊடாக என் மகள் அவரைப் பற்றி எழுதிய கவிதையைக் காட்டுகிறேன். பசி தாளாமல் கனவின் தொடர்ச்சி கலைந்துவிட்டது. ரிலேட்டடான கனவுகள் வருவது எப்போது நிற்குமெனத் தெரியவில்லை. ஆனால், ‘கலைஞர் முதல் கலாப்ரியா வரை’ என எப்போதோ படித்த தலைப்பு இப்படி மெய்ப்படும் என எதிர் பார்க்கவேயில்லை.

Monday, July 11, 2011

நிலா நாற்பது - 17

கறுப்பு இறகும் வெள்ளை இறகும்
கடிதின் மாற்றிப்
போர்த்திப் போர்த்தி
 கடந்து தவழும்
ககனப் பறவை.

Friday, July 8, 2011

சமச்சீர் - சாமான்ய - மான்ய....

நேற்றைய தினத் தந்தியில் ஒரு விசித்திர செய்தி கண்ணில் பட்டது.திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம் பாறை அருகே வசவ நாயக்கன் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்துக்கொண்டிருப்பதாக.

போன ஆண்டு வரை எட்டாக இருந்த பள்ளியின் மாணவத்தொகை, அனைவரும் சான்றிதழ் வாங்கிக் கொண்டு போய்விட்டதில் ஒன்றில் வந்து நிற்கிறது.

இப்போதைக்கு இந்த ஒருத்திக்காகத்தான் ஒரு ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு சத்துணவுப் பணியாளர், சமையலாளர் எல்லோரும்.... ஆக அனேகமாக தமிழ் நாட்டின் மிகச் செலவு கூடிய தொடக்கப்பள்ளி மாணவி இவளாகவே இருக்கக்கூடும். செய்தியைப் படித்த உடனே இவளைப் பார்க்கவேண்டும் என்று தோன்றிவிட்டது.
இந்த ஒரு மாணவியும் இப்போது சான்றிதழைக் கேட்பதால் அனைவரும் திகைக்கிறார்களாம்.

இந்த குஜிலியம் பாறையைச் சுற்றி கடந்த 5 ஆண்டுகளுக்குள் போடி பட்டி, வாத்தியார் புதூர்,வீ.பாறைப் பட்டி,கருங் குளத்துப் பட்டி, முத்தக்கா பட்டி ஆகிய ஊர்களில் தொடக்கப் பள்ளிகளை மூடியிருக்கிறார்கள்.

எனக்கென்னவோ பள்ளிகள் மூடப் பட்டதற்கான காரணம்,  ‘குஜிலி’யம் பாறை வட்டார மக்கள் குழந்தை உற்பத்தியைக் குறைத்துக்கொண்டிருப்பார்கள் என்கிற காரணத்தினால் இருக்க முடியாது என்றே படுகிறது.

எல்லோரும்  நாலும் அஞ்சும் சம்பளம் வாங்குகிற மெட்ரிக்குலேசன் ஆயா மாரிடம் பிள்ளைகளைப் படிக்கப்போட்டுவிட்டார்கள். எந்தச் சீராக இருந்தாலும் அரசுப் பள்ளிகள் மீது மக்கள் வைத்திருக்கும் அபிமானத்தை இது காட்டுகிறது.

அரசு பள்ளிகளை மொத்தமாக மூடிவிட்டு அனைத்து குழந்தைகளுக்கும் கல்விக்கான மானியத் தொகை வழங்கிவிட்டால் ஒரு தொல்லையும் இல்லை பாருங்கள். மாமா மார் அப்பச்சி மார் நடத்துகிற பள்ளிகளில் படிச்சுக்க வேண்டியது அவரவர் பாடு. படிக்கிறவன் படிச்சுக்கோ பாழாப்போறவன் போய்க்கோ.

Wednesday, July 6, 2011

நடுச் சாமம்

நள்ளெண் யாமம் - என்று தலைப்பிட்ட காலங்களில் பதிவுகள் எழுதிக்கொண்டிருந்த போதெல்லாம் அர்த்த ஜாமங்களில் மட்டுமே எழுதுவதாக சூழல் தகவமைவு அதிகமிருந்தது. நள்ளென் யாமம் என்பது சங்க காலப் பாடல்களில் வருகிற வரி ஆகும்.

ஊருறங்கும் நேரங்களில் காதலர்கள் தூக்கம் பிடிக்காமல் புரளுவதும் (கத்துவேன் கொல் முட்டுவேன் கொல் என்று மனது துள்ளி மறியும்) இடந் தலைப்பட்டு சந்திப்பதும் நள் ளென்று (சிள் வண்டுகள்) ஒலிக்கக் கூடிய இரவுகளில் தான்.
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் நடுச் சாமம்... என்கிற சீர்காழி பாடுகிற பாடல் இந்த மனோ நிலைக்குப் பக்கத்தில் கொண்டு சேர்க்கும்.

ஜாமத்தை எட்டாகப் பிரிக்கலாம். மாலை ஆறு முதல் காலை ஆறு வரையிலான பனிரெண்டு மணி நேரத்தை எட்டாகக் கூறு போட்டு (இரண்டாம் ஜாமங்களின் கதை... பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமமெல்லாம் இதில் அடக்கம்) ஒன்றரை மணிக்கு ஒரு ஜாமமாகக் கூறு போட்டு எட்டில் நடுவாந்திர ஜாமம் என நானாகக் கற்பித்து நள்ளெண் யாமம் (இலக்கண உருவாக்கமும் எனதே) எனப் பேரிட்டிருந்தவனை தமிழினி வசந்த குமார், ஆதிரன் வாயிலாகக் கூறி சரியான பதமான ‘நள்ளென் யாமம்’ என மாற்றக் கட்டளையிட்டார். (கட்டளை என்பது எனது மனங்கொள்ளும் விருப்பக் கற்பிதம்) பொள்ளாச்சி மனங்கவர்ந்த தமிழய்யா அமுதன் அவர்களைக் கேட்டு உறுதி செய்தபின் நள்ளென் யாமம் எனத் தலைப்பாயிற்று.

வலைப் பக்கத்தின் முகப்பை வடிவமைத்த என் எடிட்டர் ஜகநாதன் (காலடி - என்று சங்கராச்சாரியார்  ரேஞ்சுக்கு தலைப்பு வைத்திருக்கிறவர்) மறுபடி ‘எ’ன்’க்காகக் கஷ்டப்பட்டு நாலாம் எழுத்து “ண்’  ணை , ‘ன்’ என்று மாற்றித் தந்தார்.

தலைப்பு அப்படியே இருக்க இதைக் காலை நேரத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். என்றாலும் பதிவிட்ட நேரத்தை இந்த வலைப் பக்கம் இரவென்றே காட்டக்கூடும்.

Sunday, July 3, 2011

பத்ம நாபனும் பாதாம் பருப்பும்

பல செய்திகளை ஏககாலத்தில் கேள்விப்பட்டு இரண்டு செய்திகள் மனதில் நின்றன. ஒன்று திருவனந்த புரம் பத்ம நாப சாமி ஆலயத்தில் ரகசியக் கிட்டங்கியில் கொள்ளைகொள்ளையாக பொக்கிஷம் கிடைத்துக்கொண்டிருப்பது. ஒரே நாணில் அனந்து ‘திருப்பதி பாலாஜியை’ பின்னுக்குத் தள்ளிவிடுவார் போலிருக்கிறது. ஒரு பக்கம் கேரள மிளகு மற்றும் வாசனைப் பொருள்களை நினைத்து மகிழ்வாக இருந்தது. அப்புறம் சம்ஸ்தானத்தின் பக்தி மற்றும் அழகுணர்ச்சி.

லட்சம் கோடி ரூபாய்களை நெருங்கிக் கொண்டிருக்கும் இவற்றின் மதிப்பு உலக வல்லுநர்களையே ஒரு கணம் வியப்பில் ஸ்தம்பிக்க வைத்திருக்கும். எனக்கு வீர பாண்டிய கட்ட பொம்மனில் சிவாஜி கணேசன் பேசுகிற வசனம் நினைவுக்கு வந்துவிட்டது. ‘’ எண்ணி எண்ணி... என்ன மாளது... அது ஒரு ஒரு கோடி இருக்கும் போ... போ... கொண்டு போய்க்....”

இந்த வசனம் நினைவுக்கு வரக் காரணம் இதே நாட்களில் சென்னை தீவுத் திடலுக்கு அருகில் உள்ள மிலிட்டரிக் கேம்பில் பாதாம் பழம் பறிக்கப் போன சிறுவனை துப்பாக்கிக் குண்டு ஒன்று உயிரைப் பறித்த சம்பவம்தான். பதிமூன்று வயது தில்சான். என்ன ஒரு மடத்தனம். ராணுவத்தின் மடத்தனத்திற்கு உதாரணம். மடத்தனம் மற்றும் கொலைவெறி. இப்போது செத்த பயலுக்கு- குடும்பத்துக்கு - ஐந்து லட்சம்.
இந்தியா பணக்கார நாடு என்பதற்கு பதம நாபன் ஆலயம் சாட்சி.

கோயிலின் பொக்கிஷ வகையை எப்படிக் காவல் காப்பது என்று ஐயம் எழுந்துள்ளதாம். அது இனி தினமும் பத்து லட்சம் பெறுமானமுள்ள பாதுகாப்பு ஏற்பாட்டினைக் கோரக் கூடும். இவ்வளவு பலமான மிலிட்டரி இருப்பதால் நாம் நகைகளின் பாதுகாப்பு பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

மற்றபடி பத்ம நாபன் ரட்சிப்பான். சென்னையில் செத்துப்போன சிறுவனை நினைத்து வேகாளமும் கண்ணீரும் வருகிறது. மலையாளப் பழமொழி ஒன்றும் நினைவுக்கு வருகிறது.(மனம் என்னேரமும் பொருத்தப்பாடுகளுடன் செயல் பட்டும் கருவியுமல்ல) - ‘ மரிச்சவண்டெ பாடு ரக்ஷப்பட்டு.’