Wednesday, July 6, 2011

நடுச் சாமம்

நள்ளெண் யாமம் - என்று தலைப்பிட்ட காலங்களில் பதிவுகள் எழுதிக்கொண்டிருந்த போதெல்லாம் அர்த்த ஜாமங்களில் மட்டுமே எழுதுவதாக சூழல் தகவமைவு அதிகமிருந்தது. நள்ளென் யாமம் என்பது சங்க காலப் பாடல்களில் வருகிற வரி ஆகும்.

ஊருறங்கும் நேரங்களில் காதலர்கள் தூக்கம் பிடிக்காமல் புரளுவதும் (கத்துவேன் கொல் முட்டுவேன் கொல் என்று மனது துள்ளி மறியும்) இடந் தலைப்பட்டு சந்திப்பதும் நள் ளென்று (சிள் வண்டுகள்) ஒலிக்கக் கூடிய இரவுகளில் தான்.
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் நடுச் சாமம்... என்கிற சீர்காழி பாடுகிற பாடல் இந்த மனோ நிலைக்குப் பக்கத்தில் கொண்டு சேர்க்கும்.

ஜாமத்தை எட்டாகப் பிரிக்கலாம். மாலை ஆறு முதல் காலை ஆறு வரையிலான பனிரெண்டு மணி நேரத்தை எட்டாகக் கூறு போட்டு (இரண்டாம் ஜாமங்களின் கதை... பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமமெல்லாம் இதில் அடக்கம்) ஒன்றரை மணிக்கு ஒரு ஜாமமாகக் கூறு போட்டு எட்டில் நடுவாந்திர ஜாமம் என நானாகக் கற்பித்து நள்ளெண் யாமம் (இலக்கண உருவாக்கமும் எனதே) எனப் பேரிட்டிருந்தவனை தமிழினி வசந்த குமார், ஆதிரன் வாயிலாகக் கூறி சரியான பதமான ‘நள்ளென் யாமம்’ என மாற்றக் கட்டளையிட்டார். (கட்டளை என்பது எனது மனங்கொள்ளும் விருப்பக் கற்பிதம்) பொள்ளாச்சி மனங்கவர்ந்த தமிழய்யா அமுதன் அவர்களைக் கேட்டு உறுதி செய்தபின் நள்ளென் யாமம் எனத் தலைப்பாயிற்று.

வலைப் பக்கத்தின் முகப்பை வடிவமைத்த என் எடிட்டர் ஜகநாதன் (காலடி - என்று சங்கராச்சாரியார்  ரேஞ்சுக்கு தலைப்பு வைத்திருக்கிறவர்) மறுபடி ‘எ’ன்’க்காகக் கஷ்டப்பட்டு நாலாம் எழுத்து “ண்’  ணை , ‘ன்’ என்று மாற்றித் தந்தார்.

தலைப்பு அப்படியே இருக்க இதைக் காலை நேரத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். என்றாலும் பதிவிட்ட நேரத்தை இந்த வலைப் பக்கம் இரவென்றே காட்டக்கூடும்.

3 comments:

vijayan said...

சற்றே தாமதமான கருத்து,காரணம் உமக்கு தெரியும்.ஊரார் உறங்கையிலே பாடல் திருச்சி லோகநாதனும் ,ஈஸ்வரி அக்காவும் பாடியது.சீர்காழியார் அல்ல.

கிருபாநந்தினி said...

ஏற்கெனவே உங்களோடு ஒரு பதிவில் நள்ளென்யாமம்னா என்னன்னு கேட்டிருந்தேன்னு ஞாபகம். இந்தப் பதிவைப் படிச்சதும் புரிஞ்சிடுச்சு! :)

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

அமுதன் அய்யா சொன்னார்னா அப்பீலே கிடையாது. நானும் அந்த வரிகளைப் படித்திருக்கிறேன். பதிவின் கடைசி வரிகள் வெகு அருமை