Sunday, March 21, 2010

பேறு நல்ல பேறு

என் மீது கோபமா
என்றொரு குரல் கேட்க
மகிழ்ச்சியாக இருக்கிறது
மிக மிக.

ரசனையாளர்கள்
தேர்வாளர்கள்
வேட்டைக்காரர்கள்
துய்ப்பவர்கள்
மிகுந்த

அஃதேயளவு
ஏமாளிகளும்
கற்பனாவாதிகளும்
இழப்பாளர்களும்
தற்கொலை விருப்பர்களும்
மலிந்த

பொருண்மை
அழியா உலகில்
கோபமல்ல உன்மீது
பரிதாபம் என்று
எப்படிச்சொல்லுவேன்?

படிச்சுக்கோ எனச்
சொல்லத் தகுதியில்லாத
முட்டாள் மாணவன்.

Saturday, March 20, 2010

கடந்த பாதை

எனக்குப் பைத்தியம்
பிடித்துக்கொண்டிருக்கிறது.
அல்லது
நடந்த ஒரு
செயலை மறந்து விடுகிறேன்.
எதிரில் இருப்பவரை
நிஜமாகவே எதிராளி ஆக்கி
விடுகிறேன்.
என்னைப் பாராட்டிய
இரண்டாம் நிமிடம்
அவர்களது அவதூறுக்கோ
இழிசொல்லுக்கோ
கூடை கூடையாய்
இடம் வைக்கிறேன்.
அழித்து எழுத வகை இருப்பின்
எந்த இடத்திலும் திரும்பிச்
சென்று நற்பெயர் படைக்க
ஏதுவாகத்தான் இருக்கும்.
யோசித்து யோசித்து
மாய்ந்ததில்
பிறந்தே இருக்கக்கூடாது
என்கிற
புத்திவந்த போது
நான் எல்லா அவப்பெயர்களுடனும்
அவனியில் இருக்கிறேன்.
கொஞ்சம் நோய்
நிறைய நொய்மை
எப்பொழுதாவது கொஞ்சம்
நம்பிக்கை.அவ்வளவே நான்.

நள்ளென் யாமம்

வலைத் தளத்தின் பெயர் பற்றி நேற்று கார்த்திகாவாசுதேவன் கேட்டிருந்தார்.(பிளாக் என்பதை வலைத் தளம் என்றும் .காம் .இன் களை வலைமனை என்றும் அறிந்துகொள்ளலாமா என்பதை ஜூனில் செம்மொழிக் குழுமர் உறுதி செய்யட்டும்)

நள்ளென் யாமம் என்பது சங்கப்பாடல்களில் அடிக்கடி ஒலிப்பது. ராத்திரியே தான்.நள்ளென்று ஒலிக்கக்கூடிய செறிவான சாமம் என்று பொருள் கொள்ளலாம்.சிள்வண்டின் ரீங்காரம், ஆந்தைகள் அலறல் உட்பட பலவற்றின் பின்துணையோடு இதைப் புரிந்துகொள்ளலாம்.நானும் 30 வயது வரை இரண்டு சுழியையே பயன் படுத்திவந்தேன்.அப்புறம் கடந்த தசாப்தத்தில் வார்த்தைப் பிரயோகப் புழக்கம் இல்லாததாலும் மூளையை மழுங்கடித்துக்கொண்டு ஆனால் கூர் தீட்டிக்கொண்டு வருவதான கற்பிதத்தில் நள்ளென் - என்பது நள்ளெண் என ஆயிற்று. இதற்கு இரவின் எட்டு ஜாமங்களின் நடு ஜாமம் என நண்பர்களுக்கு விளக்கம் கொடுத்துவந்தேன். இரவு 12 வரை விழித்திருந்தால் என்னவும் பேசலாம் என்பதன் வெளிப்பாடும் உள்ப்பாடும் இது.

தலைப்பின் தவறை தமிழினி வசந்தகுமார் ஆதிரன்.காமரின் வழியாக எனக்கு உணர்த்தினார். நான் உடனே பொள்ளாச்சி அமுதன் ஐயா அவர்களை தொலைபேசியில் விளித்து தலைப்பையும் அர்த்தத்தையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

இதற்கிடையில் இதற்கு முன்பே அரும்பாடு பட்டு ஜகப்பாடு பட்டு எனது முகப்பை வடிவமைத்த ஜகனாதனுக்கு(காலடியார் - அதாவது காலடி.காம்) நான் தெரிவித்தது ‘நள்ளெண் யாமம்’ என்றே இருந்தது.இனி இரண்டு சுழியை அவரிடம் சொல்லிச் சரி செய்யவேண்டும்.சாவிச் சொல் ஈந்து சரி செய்யவேண்டும்.

நான்வேறு மூன்று நாட்களுக்குமுன் செல்போனைத் தொலைத்துவிட்டேன்.பாஸ்வேர்டை பிளாக்கில் எழுதுகிற அளவுக்கு உலகம் மேன்மையுறவில்லை.இரண்டு பேர் ரகசியம் பேசுகிற இடத்து மூன்றாவதாயும் மூன்று பேர் ரகசியம் பேசுகிற இடத்தில் நான்காவதாகவும் அல்லா இருக்கிறார் என்று குரான் சொல்கிறது.

இதைப் படிக்க நேர்கிற சைபர் கிரைம் நுட்பர்கள் யாராவது, முகப்பில் காணும் மூணு சுழியில் ஒரு (சைபரை) சுழியை அபேஸ் செய்தார்களேயானால் அவர்களை எனது கணினி முன் அமர்ந்து தொழுவேன் என்று சிவன் ஆணையாக மெய்யாலுமே மெய்யாலுமே உங்களுக்குச் சொல்லுகிறேன். இன்ஷா அல்லாஹ்!

Friday, March 19, 2010

நல்லூழ் பற்றிய கற்பிதம்

மலந் துடைத்த கற்களை
மழைக் காலம் கழுவிப்
போகும்...
பின்னும் வருமொரு வருமொரு
மாங்கனியின் காம்புத்
துவர்ப்பில்
முனை நக்கிக் கூவுகிறது
ஒரு குயில்
காக்கைக் கூடு தேடி
அண்டங் காத்து.

Tuesday, March 9, 2010

திருவண்ணாமலையில் வரும் இரு நாட்கள...

மேலும் விவரங்களுக்கு... bavachelladurai.blogspot.com

மார்ச் எட்டு - உலக...

மார்ச் எட்டாம் தேதியை உலக பெண்கள் தினமாக அறிவித்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கு எந்தப் புண்ணியவானோ புண்னிய வதியோ காரணமாயிருக்கலாம். அவர்களைப் போற்றலாம். ஒருவேளை ஏற்பாடு செய்தவர்கள் பாவியாய் இருந்தால் இந்த ‘பாவி’ என்பது ஆண்பால் பெண்பால் இரண்டுக்கும் பொருந்தும்.
தமிழில் ஏன் பலர் இந்த நாளை உலக மகளிர் தினம் என அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. இந்த மகளிர் என்ற சொல் எந்த கிழவியையும் ஒரு மங்கை நிலையைத் தாண்டாத மன உணர்வு நிலையில் வைத்திருப்பதுடன் பெண்ணின் பல நிலைகளையும் வீச்சுகளையும் மறுக்கிறது. நம் தமிழ்ப் பொது மனதின் மாறாத மந்த புத்திக்கு உதாரணம்.
மகளிர் தினத்தை மாற்றிச் சொல்லுமாறும் மேற்படி நாளில் பெண்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி காதலைத் தெரிவிக்கவேண்டாம் என ஆண் நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.
பெண் நண்பர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வதுடன் ஆணும் பெண்ணும் நட்பாயிருப்பது பற்றி யோசிக்கிறேன். தசை மற்றும் இச்சையுடன் செயல்படும் சில நேரங்களில் உடலிலியாய் ஏன் நாம் தோன்றியிருக்கக் கூடாது எனவும் ஏங்குகிறேன்.