Wednesday, June 30, 2010

கிளிகள்....

நூறாம் நூறாம் கிளிக்கணக்கில் முப்பத்தாறு கிளிகள் என பதில் சொன்ன இர்ரண்டு பேருக்கு நன்றி.

நிலா நாற்பது - 6

ஆண்முகம் துதிக்குதென்றோ
பெண்ணொ,பெண் முகம்
உதிக்குதென்று ஆணொ சொன்னாலது
பவுர்ணமி

Friday, June 25, 2010

நூறு எப்பதான் ஜகன் வரும்.

கால் பந்தில் கோல்களின் எண்ணிக்கையை மனதில் வைக்காமல் ஆடுவது. இறக்கையுள்ள அரைப்பந்தில் ( ஷட்டில் காக் ) பாயிண்டுகளை மனங்க்கொள்ளாமல் ஆடுவது. பழைய (அதிலும் பழைய) காவஸ்கரைப் போல போர்டைப் பார்க்காமலே செஞ்சுரியைக் கடந்துவிடுவது இப்படியெல்லாம் நடந்து விடுதல் நல்லதுதான்.

நான் பிளாக்கின் ‘100’ போஸ்ட்ஸ் என்பதை நம்பித்தான் நூறைக் கடந்துவிட்டதாக நம்பினேன். கணக்கு தவறு என்கிறார் ’காலடி’யார் ஜகன்.

சரி நூறு வரும்போது வரட்டும். அதற்கு முன் 100 பற்றிய சிறு புதிர்.

ஒரு கிளிக்கூட்டம் பறந்துபோகிறது. பறக்கும் அவற்றைப் (அவைகளை அல்ல - செம்மொழிக் குறிப்பு) பார்த்து ஒருவர் கேட்கிறார்.
‘நூறாம் நூறாம் கிளிகளே எங்கே போறீங்க?’
அதற்கு ஒரு கிளி சொன்ன பதில் இப்படி.

‘நாங்க நூறு பேர் அல்ல. நாங்களும் எங்களொத்த இனமும் எங்களிற் பாதியும் பாதியில் பாதியும் உன்னையும் சேர்த்தால்தான் நூறு’

அப்படியானால் பறந்த கிளிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதை சரியாகச் சொல்வோர் ‘செம்மொழிக் கணக்க்கர்’ விருதும் பட்டயமும் பெறுகிறார். மற்றபடி அவருக்கு சிறப்பாக கூடுதலாக ஒரு கேள்வி தரப்படும். அந்தக் கேள்வி அமைந்திருக்கும் விதம் இப்படி.

13 -ம் தேதி முதல் 18 -ம் தேதி வரை ஒரு மாநாடு என்றால், அந்த மாநாடு ‘முடிய’ வேண்டியது எப்போது?

நிலா நாற்பது - 5

கீழ் நோக்கு மேல் நோக்கு
உரைப்பது நாட்காட்டிகளின்
பகற்பொய்.நிலா வரும்
இரவெலாம் மேல்நோக்கு நாட்களே.

நிலா நாற்பது - 4

அண்ட வெளியில்
துடுப்பின்றித் தடுப்பின்றி
சஞ்சரிக்கும் வெண்படகு
அஞ்சாம் வளர்பிறை.

Friday, June 4, 2010

என்னவாகிறது இவ்விரவுக்கு...

நமக்குத் தூக்கம் வராமலிருக்கையில்
இவ்விரவுக்குப்
பைத்தியம் பிடித்துவிடுதல் உசிதம்.
நமக்குப் பைத்தியம் பிடித்து
விடுதல்
இவ்வுலகுக்கு நன்மை.

தவிர்க்கமுடியா
தவிப்பின் நனவில் உள்ளத்து
உடன்
இருப்பவர்கள் எல்லாம் விழித்தவாறே
உடனிருத்தல் நலமே நலம்.

பிரக்ஞை தெளியுமுன் வாக்குமூலங்களைக்
கொடுத்துவிடுதல்
உயிரின் விருப்பமாயும்
பேசும் வார்த்தைக்கு வருந்துதல்
பிழைப்பின் வருத்தமாகவும் இருக்கிறது.

பேதலிப்பின் நிலைகள் உணர்ந்த
பின்னும்
உண்மையறியாமல் தெளிவை
நிலை நாட்ட விழைகிறது
விடுபடாத ஒன்று.

அனைத்திலிருந்தும் விடுபடாத ஒன்று
ஒன்றிலிருந்தும் கூட
விடுபடப் போவ தில்லை.

Thursday, June 3, 2010

நட்பினை யோசித்தல்...

நட்பு பற்றி ,நட்பின் சுகம் (அ-(காதலின் சுகம்) பற்றி யோசிக்கும் போதெல்லாம் என் நண்பன் ஒருவன் அவனது கல்லூரி முதலாமாண்டுக் காலத்தில் சமவயது மாணவியுடன் நிகழ்த்திக்கொண்ட பரிவர்த்தனை நினைவுக்கு வருகிறது.எண்பத்தைந்தாம் வருடங்களில் அவர்களுக்கு இடையே நடந்துகொண்ட எழுத்துரையாடலைக் காணும் போது இப்போதும் எனக்கு வியப்பு மேலிடுகிறது. அப்புறம் அவர்கள் பிரிந்தார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். காதலினும் பெரிது உலகு.

நண்பன் ஒரு ஊடல் சமயத்து காதலிக்கு எழுதிய கடிதம் இப்படி:

மறந்து விடுவதை விட எப்படியும் தண்டித்துவிட முடியாது. தண்டித்துவிடாமல் எதுவும் செய்க.

பெண்ணின் பதில் : ‘நீ என் சுவாசம்.”
(சுவாசத்தை நினைவு வைத்துக்கொண்டிருப்பதில்லை என்பது உட்கிடை)

நண்பன் பதில் : ‘நான் உன் குளத்து மீன் மறுபடியும் தூண்டில் போடாதே.’

ஆக இவ்வாறாயிருந்தன காரியங்கள்.இருக்கின்றனவும் கூட காரியங்கள். நட்பின் களிபேருவகையும் இணையொரு வகையும் நானறிய வேறில்லை என்றபோதும் நரம்பும் ஆன்மாவும் தளர்வுற்றிருக்கிற சமயங்களில் எது ஒன்றும் பொருட்படத் தக்கதாகக் காணாமல் சாவின் நலிவை முத்தமிட முனைகிறேன்.

மற்றபடிக்கு நூறாம் பதிவின் பின்னூட்டமிட்டுக் கிளர்த்தி மலர்த்திய ஆதிரனுக்கு இதில் வரும் பெண்ணின் பதில் எப்போதும் உண்டு. ஆதிரனைப் படிக்கையில் நான் என்னளவில் தத்துவ விசாரணையைத் தனி விசாரணையாகக் குறுக்குவதை உணர்கிறேன்.

Wednesday, June 2, 2010

நூறுக்கு முன்னால் வரும்...

இது நூறாவது பதிவு.தமிழில் நூறுக்கு முன்னால் தொண்ணூறு வருவதும் ஆயிரத்துக்கு முன்னால் தொள்ளாயிரம் வருவதும் போல பிற மொழிகளில் வருகிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பித்துற்ற நிலையில் விரல் வழி உளறப்போகிறேன் என்பது தெரிகிறது.

திடீரெனத் தோன்றும் மனதின் பாடல் பண்டையதொரு மெட்டில்...இந்தப் பச்சைக்’கொடி’*க்கொரு செவ்வந்திப் பூவினில் தொட்டிலைக் கட்டிவைத்தேன். அதில் பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை மெல்லென இட்டுவைத்தேன். நான் யார்? யார்? யாரோ?... என்று ஒலிக்கிறது. நிச்சயமாகவும் அது யேசுதாஸின் குரல் அல்ல. எஸ். வரலட்சுமியின் குரலில் இன்னும் கூடக் கொஞ்சம் சோகபாவமும் ஏகாந்தமும் கூடக்கூடியதே என் மனதில் ஒலிக்கும் குரல்.

உண்மையில் எனது மெயில் பக்கத்தில் பக்கவாட்டில் ஓடிய பெயர்கள் பட்டியலில் சில நண்பர்களின் பேருக்கு அருகில் பச்சை நிறக் கடுகுப்பொட்டு ஒளிர்கிறது. எப்போது பொட்டுகள் ‘ஆன் லைன் ’காட்டினாலும் உடனே ஜி - டாக்- கில் எழுத்துரையாடிய காலமும் ஸ்கைப்பில் உரையாடிய காலமும் நினைவில் வந்துபோனது. இன்றும் ஆன் லைனில் சில நட்பின் பெயர்கள் ஒளிர்கின்றன.

எரி தழல் நரகத்தில் அந்தரத்தில் பொட்டித்து வெப்பக்காற்றில் சிதறுகிறது நான் நாவிய கடுகு.

பேரழகுகளே... பெருந்துயரங்களே... காவியமாய்ப் பூத்துப்போன சிற்றலகுகளே.. சிறு மிகு தருணங்களே! இந்த விநாடியன்ன விநாடிகள் இனி வாய்க்காமல் போவதே புரிதலின் மேம்பட்ட நிலையாக இருக்கும்.

நான் நாடித் திரிந்தவையும் தேடித் தேர்ந்தவையும் இணைந்து பரிசளித்தவை இப்போதுள்ள தனிமை.விடியல்களில், இருப்பின் பேதமையே என் உடலின் இருப்பென கழிவிரக்கம் கொள்ளவைக்கும் இதை கசப்பின் சுவையோடு விழுங்கிக்கொள்கிறேன். கலனும் களமும் பெரிதாகையால் கடலினும் பெரிது இது. பரவசமுறும் என் இதயத்தினும் சிறிதே.

நன்று. இது நிற்க. தீர்க்க.

வலைத்தளம் தோன்ற உடன் துணையாய் இருந்த தோழி சாந்திராணி, தோன்றாத் துணையாய் இருந்த நேசமித்ரன், வடிவமைப்பில் உசாவும் ஜகநாதன்.கே ஆகியோருக்கு நன்றி தெரிவித்தல் என்பதை சடங்காய் ஆற்றி நூறை நிறைவு செய்கிறேன். முன்னிகள் தொடரிகள் பற்றிய பிரக்ஞை எப்போதும் உண்டு.

* - பழையபாடல் பாடபேதத்துடன் இங்கு பயிலப்படுகிறது.பாடல் இடம் பெற்ற படம் , ‘நீதிக்குத் தலை வணங்கு’ என எண்ணுகையில் புன்னகை வருகிறது . சிரித்த முகத்துடன் நான் இப்போது தொங்கு கயிற்றுக்கு முத்தமிடலாம். ஆனால் கழுவேறத் தயாரில்லை.

Tuesday, June 1, 2010

தார்...கபர்தார்

முந்தாநாள் விண்ணொளிப்பெட்டிகளில் செய்தி பார்த்தேன். நேற்றிலிருந்து சென்னையில் கடையில் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்கவேணும்(ஜூன் -1) என மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.போர்டே இல்லாமல் கடை நடத்தும் வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பாக பெயர்ப்பலகை வைத்துத் தருவதும் அவரது திட்டமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

நேற்று அங்காடித்தெருக்களின் பக்கம் போகவாய்ப்பில்லை.எத்தனை கடைகளை ‘தமிழ்ப் பலகை’ இல்லாததற்காக அடைத்து நடவடிக்கை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. வியாபாரிகள் விஷயத்தில் இவ்வளவு தீவிரம் கடைப்பிடிக்கவேண்டியதில்லை.(நீலகிரி மாவட்டம் கம்பத்தில் பெயர்ப் பலகைகள் பெரும்பாலும் மலயாளத்தில் இருப்பது தனிக்கதை.)

பொருட்கள் அதன் (தரம் என்பது இங்கு மறுபுறம்) அதன் ‘டாம்பீகம் மற்றும் விளம்பரம்’ காரணமாக செலாவணி ஆகின்றனவேயன்றி போர்டுக்காக அல்ல. வெளியில் வாட்ச்மேன் வைத்து முகமன் கூறி அழைப்பார்களே அன்றி கடைக்காரர்கள் கையைப் பிடித்து உள்ளே இழுப்பதில்லை. மாநகரத்தந்தை மா.சு வை விடவும் பணக்கார வியாபாரிகள் நிறைந்த உலகமிது. அவர்களுக்குத் தெரியும் பண்டத்தை எப்படி விற்பது என்பது.

தமிழில் பெயர் எழுதாவிட்டால் அங்கு போகமாட்டேன் என்கிற சொரணை தமிழருக்கே இருந்துவிட்டால் இப்படியான சட்ட திட்டங்களுக்கு இல்லை. கடுகுக்குத் தமிழில் பெயர் தெரியாத குழந்தைகள் பலர் வளர்ந்து உருவாகி வ(ள)ரும் சென்னையில் பெயர்ப்பலகை லத்தீன் அல்லது பிரெஞ்சில் இருந்தால்தான் என்ன. அப்படி என்ன தமிழ்க்கன்னி உங்கள் கனவில் வந்து நொட்டுகிறாள்? தமிழை இப்படியெல்லாம் மீட்கச்சொல்லி.

சதுர அங்குலத்துக்குக் கணக்குப் போட்டு கடை,கல்லா,கம்ப்யூட்டர் பில்லிங், கடை முகப்பு அவ்வளைவையும் பொறியமைவு கொண்டு டிசைன் செய்த (எனதருமை) வியாபாரப் பெருங்குடி மக்கள் ஏன் தமிழில் பெயர்ப்பலகை வைக்கவேண்டும். குன்றா மூன்றாம் பிறை என்றோ நல்லதங்காள் வருஷம் என்றோ அவர்களுக்கு தங்கமும் புடவையும் விற்கத்தெரியும்.

தங்கத்தின் மோகத்திலிருந்தும் பட்டு மோகத்திலிருந்தும் விடுபட்டுவிட்டாலே இங்கே பாதிப்பரலோகம் மண்னில் லபித்துவிடும்.அவனவன் அவனவன் வேலையை அவ்வளவு நொம்பலங்கள் அல்லது இன்பங்களினூடே பார்த்துக்கொண்டு போவதற்கிடையில் இருப்பை நிரூப்பிக்க இவர்கள் போடும் கோட்டாலை வெந்தணலில் புழுங்க வைக்கிறது.

எனது துரதிர்ஷ்டம்தான் போயும் போயும் இப்படி ஒரு செய்தியை நானும் sun net work-கில் கேட்டிருக்கவேண்டியதில்லை.எழுத்துகளை அழிக்க தார் எடுத்த வமிசத்தார் எம் தமிழ்ச்சிங்கத்தார் மரபில் இன்னும் என்னென்ன நடக்குமோ?

நிலா நாற்பது -3

அந்தர மல்லிகைப்
பந்திலிருந்து சரம்
சரமாய் உருவுகிறார்கள்
ரம்பையும் ஊர்வசியும்.
தேய்பிறைகள்.