Friday, October 29, 2010

ஒரு குறுஞ்செய்தி....

இது வய்லாம் பூக்கள்
பிஞ்சுகளாய் மாறும் காலம்.
காகத்தின் முட்டை
குஞ்சுகளாய் மாறும்காலம்.


நண்பரும் கவிஞரும் நெசவருமான சு.வெங்குட்டுவன் அனுப்பிய குறுந்தகவல். இந்த வய்லாம் பூக்கள் என்றால் என்னவென்று புரியவில்லை.

Wednesday, October 27, 2010

நானே என்னுள் இல்லை....

முந்தாநாள் ராத்திரி ஒரு கனவு.

சுவரில் உள்ள போட்டோவிற்கு மாலை சூட்டப்பட்டிருக்கிறது. முன்னே உள்ள மேஜைக்குக் கீழ் நானும் கவுண்டமணியும் பேசிக்கொண்டிருக்கிறோம். அது ஏதோ சினிமாக் காட்சி எடுப்பதற்கான முஸ்தீபு போலத் தெரிகிறது. கவுண்டமணி இயக்குனராக இல்லாத பட்சத்தில் நான் இயக்குனரா கதாசிரியனா இயக்கமா ஆஃபீஸ் பாயா தெரியவில்லை.

சற்று நேரத்தில் வடிவேலு வந்து போட்டோவைப் பார்த்து அழுகிறார்.திருமணத் தரகரான அவர் அப்படி அழுது கொண்டிருக்கும் போதே கவுண்டமணி மறைந்து விடுகிறார். இப்போது போட்டோவில் கவுண்டமணி. பெண் பார்த்து வடிவேலு கட்டிவைப்பார் என எண்ணி எண்ணி ஏமாந்து போன - ஏமாந்து இறந்து போன கவுண்டமணி.

நான் கதவுக்கு வெளியே வர உள் காட்சிகள் மறைந்து போகின்றன. தெருவில் ஒரு குண்டுப் பெண்மணியும் ஒரு பையனும் நடந்து போகிறார்கள்.

கனவு கலைந்து எழுந்துவிட்டேன். என்ன மாதிரியான கனவெல்லாம் வந்து தொலைகிறது என சுய இரக்கம் கவிகிறது. அந்தப் பெண்ணும் பையனும் யார் யார் என யோசித்து இன்று விடை கண்டுவிட்டேன்.

பேசாமல் ஜெயசித்ராவின் மைந்தர் அம்ரேஷ் கணேஷ் நடித்த (படத்தலைப்பே பகிர்வின் தலைப்பும்) படம் பார்த்து இயல்பு வாழ்கைக்குத் திரும்பவேண்டியதுதான்.

நிலா நாற்பது -9

நள்ளிரவில் நிலா.
நந்தவனத்தில்  உலா.
தனிமையெனில் சாரம்.
துணையுமெனில்
சராசரம்.

Saturday, October 16, 2010

தமிழ் மலை...

நண்பர் நல்லசிவனின் அறையில் ஒரு திருமண வரவேற்பு அழைப்பிதழ் கண்டு அகமகிழ்ந்தேன். தமிழ் தருகிற பல சாத்தியங்களில் ஒன்றை அது வெளிப்படுத்தியது. அதன் மொத்த வடிவத்தையும் இங்கு தருவது மெத்தச் சரியாக இருக்கும்.

                                    வரவேற்பு விழா அழைப்பிதழ்

பூமலை பொழியும் சேமலை வலசில்
பயிரங் குலத்தின் பாரம் பரியம்
பருவதம் மணந்த பாலசுப்பிர மணியன்
திருவளர் செல்வன் பார்த்திபன் யானே!
ப்ரியா உடனே தங்களை அழைக்கும்
இருமன ஏற்பு திருமண வரவேற்பு!

பொள்ளாச்சிப் பக்கம் பில்சின்னாம் பாளையம்;
அதில் வாழும் ஆந்தை குலத்து
மயில்சாமி ராதாமணி; மகிழ்வுடன் பெற்ற
திருமகளே; மணமகளாம் மோகனப் ப்ரியா
பொற்கரம் பற்றும் நற்திரு மணவிழா
முகூர்த்தம் முடித்து முறையான வரவேற்பு !

இனித்திடும் இரண்டு ஆயிரத்துப் பத்தில்
அக்டோபர் மாதம் இருபத்து நான்கு
ஞாயிறு மதியம்; நலமிகு வேளை
மணியோ பதின் ஒன்றுக்கும் மூன்றுக்கும்
இடைபட்ட நேரம், இனியவரே வருக

ஈரோடு நடுவில் சம்பத் நகரில்
சீரோடு , கொங்குக் கலை அரங்கில்
நடைபெறும் விழாவிற்கு நட்பே வருக !
நாங்கள் கைகோர்த்துக் காத்தி ருப்போம்
தங்களை வரவேற்க ! வருகை தருக !                                 
                                                                                            பாசமிகு . பார்த்திபன்
                                                                                            நேசமிகு . ப்ரியா

இஃதே  அழைப்பிதழ்.

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

இதுவரை நான் சந்தித்திராத இனிய நண்பர் பார்த்திபன் சேமலை வலசில் பிறந்ததற்காக ‘பூமலை ...’ எப்படித்தான் பொழியும் என மனக்கண்ணில் சிந்தித்துச் சிந்தித்துப் பார்க்கிறேன். ம்... அழகாத்தான் இருக்கு.

Thursday, October 14, 2010

பழம் பூரி அல்லது பழம் பொரி

பழம் பொரி என்றோ பழம் பூரி என்றோ கூவப்படுகிற இந்த பட்சணம் உண்மையில் பழம் பஜ்ஜி என்றே அழைக்கப்படவேண்டியது. நேந்திரம் பழத்தின் கீற்றை கரைத்த கடலை மாவில் போட்டு எண்ணெயில் பொரித்தெடுப்பார்கள். கடலை மாவில் சர்க்கரை போடுவார்கள் என்கிறார் என் மனைவி சாந்தி ராணி. இல்லை என்கிறேன் நான். இப்படி வாதாடும் இருவருக்கும் முதன் முதலாக மின்ஞ்சலில் டிக்கெட் பதிவு செய்து ரயிலில் பயணிக்கிற அனுபவம் நேற்றுக் கிடைத்தது.கோயமுத்தூரில் ஒரு நண்பனிடம் சொல்லிவைத்து டிக்கெட்டை வத்தலக்குண்டு பிரவுசிங் செண்டரில் பிரிண்ட் அவுட் எடுப்பதற்குள் நிகழ்ந்த சம்பவங்கள் தனியாக ஆயிரம் வார்த்தைகளை அடையும்.

பேருந்துப் பயணச் சீட்டைத் தவிர வேறொன்றையும் அங்கீகரிக்காதது என் வாழ்க்கை முறையும் நிலையும். அங்கீகரிக்காதது மட்டுமல்ல மன அனுக்கமும் கொள்ள முடியாது. இதனால் ரயில் டிக்கட்டுகள் எனது பாக்கெட்டிலிருந்து  விடுபடுவதற்கும் நாட்களை எடுத்துக்கொள்கின்றன.

கோயமுத்தூரில் இருந்து இண்டர் சிட்டியில் பெங்களூரு என்பது பயணத்திட்டம். இப்போது இண்டர் சிட்டி என்பது பெங்களூரு - எர்ணா குளம் இடைப்பட்டதாக ஓடி வருகிறது.கோய முத்தூரில் ‘எத்தனை மணிக்கு பெங்களூருக்கு ரயில்?’ என விசாரித்த போது நண்பர் பாலாஜி வேறெங்கோ விசாரித்து விட்டு ‘’ 12. 45 ‘’ என்றார். ’நன்றி பாலாஜி’ என்று அலைபேசியை அணைக்கப் போகையில் ‘’ஒரு நிமிஷம் ‘’ என்றார். அடுத்து அவர் சொன்ன தகவல் முக்கியமானது. 

பெங்களூருக்கான வண்டி நின்று கொண்டிருக்கிற நேரத்தை அடுத்து பத்துப் பதினைந்து நிமிட இடைவெளிக்குள்ளாக பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் செல்லும் வண்டியும் வரும். அது எதிர் பிளாட்ஃபாரத்தில் நிற்கும்.ஆகவே.....

பாலாஜி சொன்னது எனக்குப் புரிந்துவிட்டது.நண்பெண்டா என மனதுக்குள் கூவினேன்.பயணங்களில் என்ன விதமான ஆபத்துகளை நானும் நண்பர்களும் எதிர்கொள்வோம் என்பதை பாலாஜி அறிந்துவைத்திருக்கிறார். மாநிலம் மாறிப்போய் “திருமங்கலத்தில் மலயாளிகளா?’ என வியந்தவாறு கொல்லத்தில் ரயிலிறங்கிய நண்பர்களும் நமக்கு உண்டு.

ரயில் ஏறியபோது நான் காட்டாத அவசரத்தை என் மனைவி காட்டினார். ஆகவே இரண்டு அன் ரிசர்வ்டு பெட்டிகளில் எங்களது உணவுப்பொட்டலம் உள்ளிட்ட ஆறு பைகளை சுமந்து ஏறி இறங்கி கடைசியில் ஜெனரல் கம்பார்ட் மெண்ட்டை அடைந்து கிடைத்த இருக்கையில் அமர்ந்ததும் மனைவியிடம் சொன்னேன். ஐந்து நிமிடம் என்பது ஓரளவு நல்ல கால அளவு . பேருந்து ஏறுகிற மாதிரி ரயில் ஏற வேண்டியதில்லை என்று.


இப்போது எங்கள் இருக்கைகளின் எண்கள் தெரியவில்லை. இதில் ரயில் நிலையத்தில் காத்திருந்த முப்பது நிமிடங்களில் அதற்கான இடத்தில் விசாரித்து இருக்கை எண்ணை அறிந்திருக்க முடியும். முட்டாள்களுக்கு முப்பது நிமிடமும் போதாத காலம்தான் என்பதை ஏற்கெனவே மெய்ப்பித்திருந்தேன் நான். ஈ மெயில் டிக்கெட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட தாள்கள் பிரிண்டில் கிடைக்குமா? அதில் இருக்கை எண்களும் குறிக்கப் பட்டிருக்குமா என்பது அனுபவஸ்தர்கள் பின்னூட்ட வேண்டியது.

நண்பன் செல்வனும் ரம்யாவும் கட்டிக் கொடுத்த  சாப்பாட்டில் தயிர்ச் சோற்றுக்குப் போகுமுன்னரே சேலமும் வந்து எங்கள் எண்களுக்க்ப் பயணிகளும் வந்துவிட்டார்கள்.சாப்பாடைப் பாதியில் நிறுத்திவிட்டு எதிர் இருக்கைக்கு மாறியதில் என் மனைவிக்கு அமர இடம் கிடைத்து நான் ஸ்டாண்டிங் ஆகிவிட்டேன். டி,டி.ஆரைத் தேடி சமையற் கூடம் வரை ஒருதடவை போய் வந்தேன். சாந்தியிடம் வந்து காணவில்லை அறிவிப்புக் கொடுத்தேன்.கொஞ்ச நேரத்தில் இரண்டு பெட்டிகள் தாண்டி டிடிஆர்  தட்டுப்பட்டார்.

அடுத்து எங்கள் திசை நோக்கி வருவதற்கான முஸ்தீபும் திசையும் கொண்டிருந்தார். எப்படியும் அரை மணி நேரம் பிடிக்கும் என்கிற நிலையில்தான் பழம் பொரிக்காரர் ( சந்திரன்) என்னைக் கடக்க மூன்று கொண்ட செட்டை வாங்கினேன். 24 ரூபாய். இரண்டைப் பதினைந்து ரூபாய்க்கு விற்பதுதான் இப்போதைய இந்திய (வாடிக்கையாளர் ) நிலைக்குச் சரி என்பது கருத்து. ஆனால் சந்தைகள் வாடிக்கையாளரின் நலன்களையும் நிலைகளையும் கருத்தில் கொண்டதல்ல. சாந்தியும் நானும் தலா ஒன்று தின்ற பின் சாந்தி சங்க காலத்துக் காதல் மானாக மாறி மூன்றாவதை என்னைத் தின்னப் பணித்தார். இன்று ஃபோர்டிஸ் மருத்துவமனையில் செவிலியாகப் பணியேற்கப் போகும் பதற்றம் பசி நுண் விருப்பு ஆகியனவற்றை மங்கச்செய்திருந்தது அவளிடம். ( எவ்வளவு நேரம்தான் மரியாதைப் பன்மையில் எழுதுவது)

மூன்றாம் பஜ்ஜியைத் தின்று கொண்டே திரும்பிப் பார்த்தால் டிடிஆர் எதிர்த்திசையில் சென்று கொண்டிருந்தார்.சரி பெங்களூரு வரை நின்று கொண்டே போக முடியாது என்ற எண்ணத்தில் கையில் பஜ்ஜியுடன் அவரை நோக்கி எனது தடை ஓட்டத்தை ஆரம்பித்தேன். சார் என்று நான் அவரை அழைத்த தருணத்தில் அவர் என்னைப் பார்த்தபோது வாயில் குதம்பிய மீதத்தின் பஜ்ஜியும் வலது கையில் பஜ்ஜியின் மீதமும் இருந்தன.இடது கையால் சட்டைப் பாக்கெட்டிலிருந்து எட்டாக மடிக்கப்பட்ட பிரிண்ட் அவுட்டை எடுத்து நீட்டினேன்.

‘’எங்க சீட்டு நம்பரைப் பாத்து சொல்லுங்க சார்?

இந்த நிலையிலும் மனிதரை ஆய்ந்தேன். அவர் கோட்டு அணிந்திருந்தாரே தவிர நேம் பேட்ஜ் அணிந்திருக்கவில்லை.(பழம் பொரி சந்திரன்னு லபிச்ச அதிர்ஷ்டம் ஆயாள்க்குக் கிட்டில்ல) நேம் பேட்ஜ் படிக்கிற பழக்கம் சிகப்பு ரோஜாக்களில் கமல் நடித்த ஒரு சீனிலிருந்து எனக்குள் பெறப்பட்டதாகும்.இதே விதமாக பெண்களின் பெயரைப் படிக்கையில் எழுத்தாளர் சுஜாதாவின் பாதிப்பு எனக்குள் உத்வேகம் பெறும். ஆயினும் பெண்ணியம் கண்ணியம் உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அதைப் பிரயோகிப்பதில்லை.

இந்த லட்சணத்துல இருந்தா எங்கேய்யா தேடறது?... என்று அவர் ஒருமையில் தொடங்கினார். எனது தோற்றம் பிரிண்ட் அவுட்டின் தோற்றம் இரண்டையும் சமகாலத்தில் குறிப்பதாய் இருந்தது அது.

‘’ ஈ மெயில்ல புக் பண்றது வெரி ஃபர்ஸ்ட் டயம் சார்? “

எனக்கு பிரிண்ட் அவுட்டின் எழுத்தளவும் அவரது நாற்பதுக்கும் மேற்பட்ட வயதளவும் பற்றிக் குழப்பம் வந்து....’’பாயிண்ட் சைஸ் அதிகம் வச்சு எடுத்துருக்கணுமோ?’’ என்று யோசனை வந்தது.

‘’உங்க பிரச்னைதான் சார் எனக்கும் பிஎன்னார் நம்பர் தெரியமாட்டேங்குதா?”

அவர் சார்ட்டைத் தேடி டி 4 - 61,62 என்று குறிப்பதற்கும் மோதலின் சிகரத்துக்கு நானும் அவரும் பறப்பதற்கும் சரியாக இருந்தது. தோட்டங்காடுகளில் பணிபுரிவோரும் கல் உடைப்போரும் என்னை நீ என்று விளித்தால் எனது இளமையின் சாட்சியாக எடுத்துக்கொள்ளும் நான் அரசூதியக் காரர்கள் ’ நீ ‘ எனும்போது கோபம் கொள்கிறேன். அதி சத்தியமாகவும்  வாழ்க்கை நிலை சார்ந்ததே இது.

‘’ஐ டெண்டிக் கார்டைக் காட்டு! “

நான் எனது இரண்டு சக்கர ஓட்டுரிமை அட்டையை எடுத்துக் காட்டினேன். நகல் அது . ஒரிஜனலை கோயமுத்தூரில் ஒரு லாட்ஜில் அறை போடும்போது கல்லாவில் தந்தது மட்டுமே எனக்கு ஞாபகம்.

‘’இது ஜெராக்ஸ் . ஒரிஜனலைக் குடு...’’

‘’அது ஊர்ல இருக்கு?’’

‘’ எங்களுக்கு என்ன இங்க ஊ... வேற வேல இல்லியா? உங்க ஊருக்கு வர்றதுதான் வேலையா. எழு நூறு ரூபா ஃபைன் கட்டு!’’

‘’ எறக்கி விடுங்க நான் யாருன்னு நிரூபிக்கிற மாதிரி நிரூபிச்சுக்கறேன்.’’

எனக்கு மனக்காட்சியில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் கம்பிக் கொட்டடிக்குள் கிடக்கும் காட்சி நினைவுக்கு வந்துவிட்டது. எப்படித்தான் நிரூபிப்பதாம் ஒருத்தான். ஜெராக்ஸ் கூட இந்த அளவுக்கு செல்லாதா? நமக்குச் சுமக்கற சோலி கஷ்டமய்யா... பேசாம நெத்தியில ஒரு சூட்டைப் போட்டுற வேண்டியதுதான். அல்லது மன்மோகனிடம் நான் இந்தியன் இல்லை என்று அறிவித்துவிடவேண்டியதுதான். எத்தனை மந்திரிகள் ராஜினாமாக் கொடுக்கிறார்கள் அவர் ஏற்றுக்கொள்கிறாரா என்ன?

தாளை டிட்டிஆர் வாங்கிவைத்துக்கொண்டதும் சரி ஜெயிலுக்குப் போகுமுன் சாந்தியிடம் ஒரு பேச்சு சொல்லிக்கொள்ளலாமே என்று வந்து அவளிடம் விஷயத்தைச் சொன்னேன். அவள் வாக்காளர் அட்டை சகிதம் எழுந்து கிளம்பி டிடிஆரிடம் வந்தாள்.

ஓ... வாக்காளர் அட்டை செல்லுபடி ஆகாதது என்ற முடிவுக்கு நாம் உடனடியாக வரவேண்டியதில்லைதான் போலிருக்கிறது. சாந்தி அவரிடம் ஏதோ பேசியதும் ‘’அவரு பேசினது சரியில்லீங்க ‘’ என்று சொல்லித் தாளைக் கொடுத்து டி 4 எங்கே இருக்கிறது என்றும் சொல்லிவிட்டார்.

பெங்களூரில் சிட்டியில் இறங்கினால் வானத்தில் முழு நிலவு தெரிந்தது. இன்னிக்கு பஞ்சமியோ சஷ்டியோதானே வானில் எப்படி நிலவு என வியந்தால் அது விளக்குப் போட்ட ஒரு காத்துப் பலூன். மேலே 400 என எண் தெரிகிறது. ஆட்டோவில் போகும் போது ஒரு பேருந்தின் பின்பக்கம் அதே 400. எதோ ஒரு சரித்திரச் சின்னத்தின் நானூறாம் ஆண்டு. (ஹம்பியாக இருக்கலாமோ). அல்லது ஆட்சியேற்ற நாள் முதலாக எடியூரப்பா அனுபவித்த தலைவலிகளின் எண்ணிக்கையாகவும் அது இருக்கலாம் . எடியூரப்பா சமாளிக்கிற பெங்களூரில் நானும் சமாளிக்கலாமென்றுதான்... நானும் இப்போது பெங்களூரு வாசியாகிவிட்டேன்.