Monday, March 21, 2011

பம்பரத்தை நம்பி வெம்பரப்பாதல்...

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும்  தனித்தனியாக தேர்தலில் நின்றால் எனது வாக்கு பம்பத்துக்கல்ல.  இரும்பு சம்பந்தப்பட்ட ஒரு சின்னத்துக்குத்தான். பம்பரத்துக்குக் குத்து ஆணியாக இரும்பு செயல்பட்டாலும் நான் அதைக் கணக்கிலெடுக்கவில்லை. குத்து ஆணியும் சாட்டையும் இல்லாமற்தான் போய்விட்டது பம்பரம்.

வை.கோ முதன் முதலில் பெற்றது குடை சின்னம். அது சார்ந்து இரண்டு ஞாபகங்கள் எனக்கு உண்டு. ஒன்று அவரது கட்சி குடை சின்னத்தில்  நின்ற காலத்தில் நான் ஒரு வானொலி நிலையத்தில் கவிதை வாசிக்கப்போனேன். ‘நீயும் நானும் ஒரு குடையின் கீழ் நடந்ததால் அன்றைக்கு நல்ல மழை’ என்று நான் காதல் கவிதை எழுதியிருந்தேன். நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ‘தம்பி, தேர்தல் சின்னங்கள் வானொலியில் வருவது சரியல்ல’ என்றார். இதில் யாருடைய துரதிர்ஷ்டம் பெரிதென்று தெரியவில்லை. 

‘’நீயும் நானும் நனைந்து நடந்ததால் ‘ என்று கவிதையை மாற்றினேன். நண்பனிடம் இதைச் சொன்னபோது (இரண்டாம் ஞாபகம்)... வைகோவுக்குக் குடை என்ன பொருத்தமடா, ‘’நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது’ ன்னு குடையை கக்கத்துல வச்சிக்கிட்டு ஊரூராப் போவேண்டியதுதான். என்றான். அவன் இப்படிச் சொன்னதில் சாதிசார்ந்த குறிப்பு ஒன்று இருந்தது, போதாததற்கு அவர் கருப்புச் சால்வை வேறு அணிந்திருந்தார். கற்பனை செய்யவே மிக அலாதியாக இருந்தது. குடை விரிவதற்கு முன்னாக அவர் பம்பரத்திற்கு மாறினார். அவர் பட்ட சின்னங்கள் நாடறிந்தது. வெண்ணெய் திரள்கிற நேரத்தில் தாழிகள் உருண்டுருள்வது அவருக்குத்தான்.

அவர் அ.தி.மு.க அணியில் இருந்து நீக்கப்பட்ட விதம் ஏனோ மிகுந்த மனச்சோர்வை அளிக்கிறது. நான் அவருக்கு வாக்களிக்கும் எண்ணத்தில் இல்லாதபோதும். இதை மிகப்பெரிய தார்மீக வழுவான செயலாகக் கருதுகிறேன். அவரது வில(க்)கல் பின்னணியில் சோ, சுப்பிரமணிய சாமி முதல் விஜய் மல்லையா ஈறாக பல பெயர்களும் ஆணவம் அகந்தை உள்ளிட்ட குணங்களும் பேசப்படலாம்.

கடவுளின் விளையாட்டும் இதில் இருக்கிறது என்பதன் உதாரணம்தான் கி.வீரமணி ‘தி.மு.கவை ஆதரியுங்கள் ‘ எனக் கோபால்சாமிக்குக் கடிதம் எழுதப்பட்டிருப்பது. அப்புறம் ஜெயலலிதாவும் தன் தரப்புக்கு ஒரு கடிதம்.

ம.தி.மு.வின் கொள்கைப் பீரங்கியான நாஞ்சில் சம்பத் சொன்னது இப்போது மெய்ப்பாட்டை அடையும் தருணம் வந்துவிட்டது. நாங்கள் கட்சி அல்ல இயக்கம்.
 மிக நன்று. இப்போது இயக்கமாக வை.கோ செய்யவேண்டிய காரியங்கள் பல உள.
1. தமிழை ஆட்சி மற்றும் நீதி குறிப்பாக பயிற்றுமொழியாகவும் ஆக்க குரல்கொடுத்தல்.

2. அனைவருக்கும் சமச்சீர் மற்றும் இலவசக் கல்வி.

3. இலவச மருத்துவம்.

4. அணு மின் நிலைய எதிர்ப்பு.

5. கள்ளை அனுமதித்தல்

6.பன்னாட்டு ஆதிக்கத்தை ஒழித்து நாட்டின் தற்சார்பு

7.வேலை வாய்ப்பு

இந்த அரசியற் செயல்பாடுகள் தவிர்த்து கிரேக்க- இந்திய புராணங்களை ஒப்பிட்டு சில ஆயிரம் பக்கங்கள் வருவது போல ஓரிரு புத்தகங்களாவது அவர் எழுதவேண்டும் என்பது என் விருப்பம்.

அவர் அனுஷ்டிக்கப் போகிற அறுபது நாள் மௌனத்திற்கு வாழ்த்துச் சொல்வதுதவிர இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை.

Thursday, March 17, 2011

காலம் வரும் வரை கருவியை....

தமிழகத்தில் மூன்றாவது அணி பற்றிய பேச்சும் எதிர்பார்ப்பும் ஒவ்வொரு தேர்தலின் போதும் கிளம்புவதுதான். ஆனால் 3வது அணியைப் பொருத்தவரையில் ஒவ்வொரு முறையும் ’வரூம்...ஆனா வராது’ கதைதான். மூன்றாவது அணிபற்றிய எதிர்பார்ப்பு தலைதூக்குவதற்குக் காரணமாயிருப்பவர்கள் அனேகமாக எப்போதும் கம்யூனிஸ்டுகள்தாம்.
தனது தீராத பக்கங்கள் வலைப்பதிவில் மாதவராஜ் ‘கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்’ என இரண்டு பதிவுகள் இட்டிருக்கிறார். விரிவானதாக அல்லாவிட்டாலும் செறிவான பதிவுகள். ஜெயலலிதாவிடம் போய் நிற்பது பிரச்னை அல்ல. நிர்பந்தம். ஆனால் ஜெயலலிதா சொன்ன இடத்தில் ‘நிற்பது’ என்கிற அளவிற்கு அவர் கொண்டுவந்து வைத்துவிடுவார்.

ஜனநாயகம் என்பதை பாவனை நிலையில் கூட அனுசரிக்காத அவரது போக்கின் வெளிப்பாடே இன்று ‘தன்னிச்சை’யாக அவர் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டமை ஆகும். கருணாநிதியைப் பொருத்த அளவில் பொதுக்குழு செயற்குழு எனப் பலபேர்கள் சொல்லி ஜனநாயகக் காட்சியை திற்ம்பட நடித்துக் காட்டி நடத்திக்காட்டி இறுதியில் தனக்குச் சாதகமான முடிவை எட்டுவார். குறைந்த பட்சம் தொழிற் கூட்டாளிகளிடம் கலந்துகொள்கிற பண்பு ( அதை கழகத்தினர் மாண்பு என விளிப்பர்) அவரிடம் உண்டு. முழுக்கவும் அவரது பாச்சா பலிக்காமற் போயிருப்பது நாயன்மார்களிடம்தான். அதாவது அறுபத்து மூவரிடம்.

எதிரணியில் ம.தி.மு.க வுக்கு ஒரு ‘ஆழ்வார்கள்’ (பன்னிரெண்டு பேர்) கோஷ்டிக்கு கிடைத்திருந்தால் கூட இன்றைக்கு மூன்றாம் அணிப்பேச்சு இப்போது வலுவடைந்திருக்காது.  சூழல் என்னவென்றால் கார்த்திக் எல்லாம் மூன்றாவது அணிக்கு தோள் கொடுத்துத் தூணாக விளங்கும் நிலை வந்துவிட்டது.

உண்மையில் விகிதாசார முறையை அமல்படுத்துவதில் ஜெயலலிதாதான் முன்கை எடுப்பார் போலிருக்கிறது. கம்யூனிஸ்டுகளுக்கும் வை.கோ வுக்கும் அவர் தொகுதிப் பங்கீடு சொன்னவிதத்தில் அது வெளிப்படுகிறது. வாய்ப்பு இருந்தும் மந்திரி பதவிகள் கிடைக்காவிட்டால் உறுப்பினர்கள் என்னவென்ன செய்து காட்டுவார்கள் என்பதை கோபால்சாமியின் கண்ணான கண்ணானவர்கள் நிரூபித்துக்காட்டினார்கள். ஓரிரு தேர்தல்களுக்கு எம்.எல்.ஏ , எம்.பிக்களும் இல்லாது போய்விட்டால் கட்சி என்ன ஆகும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மூன்றாவது அணி அமைக்கப்பெற்றால் அது தொகுதிகள் தோறும் இருபது சதவீத வாக்குகளைத்தாண்டி பெறப்போவதில்லை. ஆகவே இம்முறை ஜெயலலிதாவை அனுசரித்துப்போவது ஒன்றே மாற்று. அல்லது மூன்றாவது அணி அமைத்து தொங்கு சட்டமன்றக் காட்சிகளையும் பார்க்கலாம். மூன்றவது அணி அமைக்கும் அளவு தைரியம் இருப்பின் விகிதாசார முறைத் தேர்தல் குறித்துக் குரல் கொடுக்கலாம் நாம்.

Monday, March 14, 2011

சாதிக்கட்சிகளின் நிலை- நிலைப்பாடுகள் - எழுச்சிதாழ்ச்சிகள்.

தமிழகத்தில் நிலவும் பல சாதிக்கட்சிகளின் பெயர்கள் கூட முழுதாகத் தெரியாத நிலையில் சில ஞாபகங்களில் இருந்து இதை எழுதுகிறேன். அப்படி பெயர் விளங்காமல் இருப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. வேட்புமனுக்கள் தாக்கல் படப்போகும் மூன்று நான்கு நாட்களுக்குள்
புதிதாக எதேனும் சாதி அமைப்புகள் தோன்றி போட்டிக்கு வந்துவிடவும் வாய்ப்புகள் உள்ளன.

சாதிச் சான்றிதழுக்குக் கஷ்டப்படும் இருளர்கள், தேவ கவுடா பிரதமரானதற்கு மகிழ்ந்த ஒக்கலிகர்கள், பலிஜா நாயுடுகள்.... என யாவரும் போட்டியிடலாம்தான். தமிழகத்தில் பொருளாதார மேம்பாட்டை எட்டிக்கொண்டிருக்கிற கவுண்டர்கள் ‘கொங்கு’ என்ற பேராலும் நாடார்களும் தனக்கென தனி இடம் பெற்றிருப்பதும் ஆதிதிராவிடர்கள் வழக்கம்போல தங்களது சதவீதத்துக்கும் ஏழ்மைக்குமான ஒப்பீட்டைக் கருத்திற்கொண்டு மிகையான இடங்களைச் சாதிக்காமல் போவதும் ஆழ்ந்த மிகச் சோகம் தரும் வருத்தத்தை என்னில் ஏற்படுகிறது.

மனத்தகவமைப்பில் சாதிவாரி அடுக்குகள் படலக் கோடாக தோன்றாத பட்சத்தில் சென்னையில் ஆரம்பித்து நெல்லைவரை புவிப்பரப்பு மீதான பயணத்தை மனதால் ஓட்டித்தான் இதை எழுதவேண்டியிருக்கிறது.

 தி.மு.க  அனுபவித்துவந்து சொப்பனாவஸ்தை நிலையைக் கருத்தில் கொள்ளாமலும் தன்னை வலுவுக்கு மீறி நம்பியதாலும் பூவை.ஜகன் மூர்த்தியார் அந்தக் கூட்டணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். பேனர்களின் எண்ணிக்கை மட்டும் வெற்றியைத் தீர்மானிக்கும் என அவர் கருதியிருக்கக் கூடும். பத்துத் தொகுதிகளில் அவர் தனியாக நிற்கப் போகிறாராம். அந்த வட்டாரத்தில் அவரது சாதியினரின் மனநிலை எத்தகையதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவருக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

பா.ம.கட்சி தனது அரசியலின் தசாப்தங்களின் பாரம்பரியம் காரணமாகவும் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றதன் வாயிலாகவும் பரவலாகப் பல இடங்களிலும் வெவ்வேறு சாதிக்காரர்களை செயலாளர் மட்டங்களில் இணைத்துக்கொண்டதாலும்  எல்லாவற்றையும் விட தனது கட்சிப் பெயரின் காரணமாகவும் ‘வன்னியர்’ கட்சி என்கிற பேரை வேறோர் பூச்சு கொண்டு மறைத்திருக்கிறது.அவர்கள் தனக்கென பத்துப்பதினைந்து இடத்தைப் பிடித்து ‘ஊசல்த் தேர்வு’ நிலையை தமிழக முடிவுகள் தருமானால் பலமான கட்சியாகக் கூட மாறமுடியும்.

பா.ம.க வின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளைக் கவனித்து வந்த ‘கவுண்டர்’களுக்கு தனிக்கட்சி ஆசை வந்தது வியப்பில்லை. கலாசார ரீதியில் செய்வதற்கு அவர்களுக்கு எவ்வளவோ பணிகள் இருப்பினும் வாக்குத்தேர்தல் வசீகரித்து பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை துருப்புச்சீட்டாக்கி (இரு கூட்டணிகளிலுமாக) ஏழெட்டு சீட்டுகளைப் பெற்றுவிட்டார்கள். அவர்கள் இரண்டு சீட்டுகளுக்குமேல் வெல்லமுடியாது என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் வெற்றியோ ஸ்ரீதர் வாண்டையாரின் வெற்றியோ அந்தந்தக் கழகத்தின் வெற்றியாகப் பாவிக்கப்பட்டாலும் ‘நீயில்லாமல் நானில்லை’ என்கிற ஆழ்ந்த பிணைப்புக்கொண்டதாகவே அந்த வெற்றிகள் இருக்கும். அ.தி.மு.க தேவர்களின் கட்சியாக பாவிக்கப் படுவதற்கு சசிகலாவின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.

ஜான் பாண்டியன் ஒரு படுகொலை காரணமாக தனது இயக்கத்தைக் கொன்றேவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். புதிய தமிழகம் தனது இரண்டு சீட்டுகளின் வெற்றிதோல்வியைக் கொண்டுதான் எதிர்காலத்தின்மீது பயணிக்க இயலும்.

அண்ணாச்சிகள் அள்ளிக்கொள்ளுமளவு பணமும் சொல்லிக்கொள்ள கு,காமராஜரும் இருப்பதால் தனியாக சீட்டுப் பெற்றுவிட்டார்கள். தி.மு.கவில் பெற்றது ஒரு சீட்டுதான் எனினும் அடையாள ரீதியில் இது கவனம் பெறும் முயற்சியும் செயல்பாடும் ஆகும், இதில் சரத்குமாரின் அதிர்ஷ்டம் இரண்டு சீட்டுகள் பெற்றது. நாடார் என்பதற்காக ஒன்று நடிகர் என்பதற்காக ஒனறு.

கார்த்திக்கிற்கு எத்தனை சீட்டுகள் என்பது தெரியவில்லை. இப்போதெல்லாம் மனிதர் கொஞ்சம் பக்குவமாகப் பேசுகிறார். முத்துராமனுக்கும் முத்துராம லிங்கத்துக்கும் வித்யாசம் தெரியாதவர்கள் அவரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவும்கூடும். எப்படி இருந்தபோதும் தமிழ் நாட்டில் ஃபார்வார்டு பிளாக்கின் சமாதிக்கு கடைசிக்கற்கள் எடுத்து அடுக்கியவர்களின் பட்டியலில் அவரது பெயரும் உண்டு.

விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு அறிவாளி எம்.எல்.ஏக்களைப் பெற்றதன் மூலம் தமிழ்நாடு முழுதும் பரவலாக அறியப்பட்டதும் பரவிவிட்டதும் ஆகிவிட்டது. கடந்த முறை அவர் நிறுத்திய வேட்பாளர்கள் பட்டியல் அதையும் சாதிக்கட்சியாகவே காட்சியது. இந்த ஒதுக்கீடுகளில் விழுக்காட்டுக் கணக்குப் போட ஏதுவாக 10 இடங்கள் அதற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. திருமா இதுவரை என்னவாக இருந்தார் என்பதை அவரது செயல்பாடுகள் காட்டிவிட்டன. இனியும் என்னவாக இருப்பார் என்பதை பட்டியல் காட்டிவிடும்.

இதுகாறும் பெயர் சொல்லாமல் நடந்துகொண்டிருந்த ஒதுக்கீடுகள் இப்போது பெயரைச் சொல்லி நடக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால் ‘’ எங்க எம்.எல்.ஏ’’ என்று தொகுதியைச் சொல்லி உரிமை கொண்டாடும் வாக்காளர் மனம்.  இனி ‘’ எங்க எம்.எல்.ஏ ‘’ என அழைக்கப் பெறுபவர்கள் யாராக இருப்பார்கள் என எண்ணும்போது.....

‘கட்சி கட்டுதல்கள்’ ஏற்படும் ரூபங்கள் அத்தனை உவப்பானதாக இருக்கும் எனத் தோன்றவில்லை. காலம் முன்னோக்கி நகர்ந்தாலும் பின்னோக்கி நகர்ந்தாலும் ஒரே விளைவுதானோ எனக் கேள்வியாக இருக்கிறது.

Wednesday, March 9, 2011

தொகுதி மாற்றங்களும் சில ஏமாற்றங்களும்

தி.மு.க தரப்பு தொகுதிப்பங்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட பாவனையில் காட்சியளிக்கிறது. அரசு கட்டிலில் அமர்ந்து அவர்கள் தனிப் பெரும்பான்மை எட்டவேண்டுமானால் கிட்டத்தட்ட போட்டியிடுகிற அத்தனை இடங்களிலுமே வென்றாக வேண்டும் என்கிற அளவு நிலையில் தி.மு.க வின் ஒதுக்கீடு அமைந்திருக்கிறது.
முதலில் மிகத் துரிதமாகக் காட்சியளித்த அ.தி.மு.க இப்போது சுணக்கம் காட்டுகிறது. விரைவில் அது தனது பங்கீட்டை முடிக்கவேண்டுமெனில் கம்யூனிஸ்டுகள் மற்றும் ம.தி.மு.கவுடன் இணக்கம் காட்டவேண்டும். மூன்றுக்கும் தலா பத்துக்கும் குறைவாக நல்குதலே ஜெயலிதாவுக்கு உவப்பானதாக இருக்கலாம். கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த அளவில் மார்க்சிஸ்டுகள் பெறுகிற அதே அளவை இந்திய கம்யூனிஸ்டுகள் பெறாவிட்டால் தத்துவார்த்த உளவியல் சிக்கலின் பாற்பட்ட தொய்வுக்கு அவர்கள் ஆளாவார்கள் என்றாலும் ஸ்திதிகதிகளை ஆலோசிக்கும்போது மார்க்சிஸ்டுகள் கூடுதலான இடத்தைப் பெற்றுவிடுவார்கள். மொத்தம் இருபத்தை ஐந்து சீட்டுகளுக்குள் இந்த இரண்டு கம்யூனிஸ்டுகளும் அடங்கிவிடும் என்கிற நிலையில் அடுத்து நிற்பது ம.தி.மு.க தான்.

ஏறக்குறைய அ.தி.மு.வின் கொள்கைப் பீரங்கியாகவும் விசுவாசியாகவுமே மாறிப்போய்விட்ட வை.கோவின் கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்பது கேள்வி. மனதளவில் அவர் இருபதுக்குத் தயாராகிவிட்டார். இருபது ஆட்கள் இருக்கிறார்களா? என்பது அ.தி.மு.கவின் கேள்வியும் பெரும்பான்மைப் பொது மக்களின் கேலியுமாகும். தலைவன் மற்றும் தலைமை மட்டுமே இயக்கமாக மாறிவிடாது என்பதன் கனத்த உதாரணமாக ம.தி.மு.க இலங்குகிறது. அடிமாட்டு விலைக்கும் தோல்விலைக்கும் இடையில் ஒரு கணக்கைப் போட்டு பதினைந்து பதினாறு சீட்டுகளை வை.கோவுக்கு ஜெயலலிதா வழங்குவார் என நினைக்கிறேன்.

தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளின் மண்ணிலும் கால்பதித்து ஒரு புயலாய் ஒரு சுறாவளியாய் ஒரு சண்டமாருதமாய் அலை வீசி அடிக்கிற ஆற்றலும் உடற்றிறனும் தொண்டுள்ளமும் தொண்டை வளமும் அவருக்கு மட்டுமே உள்ளது என்பதால் ஜெயலலிதா அவர்மீது கருணை கொள்வார்  என நம்புகிறேன். இன்றைய (09.03.2011) தினமணியில் குறிப்பிட்டுள்ளது போல மூன்றாவது அணியும் அமைந்து தேர்தல் களத்தில் வகைதொகை இல்லாத  காட்சி மாற்றங்கள் பார்க்கக் கிடைக்காது என நம்புகிறேன். விஜயகாந்தை மட்டும் முழுக்க நம்பி மற்றவர்களையும் தன்னையும் ஒருசேர நட்டாற்றுக்கு ஜெயலலிதா இழுத்துக் கொள்ளமாட்டார்.

இப்போது தொகுதிப் பங்கீட்டில் உற்பத்தியாகப் போகும் இழுபறிக் குழப்பங்கள் என்னவென்றால் சீரமைக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப் பட்ட தொகுதி வரைபடங்கள்தான். அது தீவிரமான சர்ச்சைகள் ஊடல்கள் வட்டார ஆட்களின் மனமுறிதல்கள் ஆகியவற்றுக்குக் காரணமாக அமையப்போகிறது.

நான் நன்கறிந்த தொகுதி எங்கள் தொகுதியான வெள்ளகோவில், அந்தத் தொகுதி இந்தத் தேர்தலில் இல்லை. அத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் இப்போது தாராபுரத்திலும் போட்டியிட முடியாது அது ‘தனி’த் தொகுதி.
ஒட்டன் சத்திரத்தில் போட்டியிடலாமெனில் அது கொறடா சக்கரபாணியின் தொகுதி. மாவட்டச் செயலாளராகவும் இருக்கிற சாமிநாதன் ஒரு வேளை காங்கேயத்தில் போட்டியிடலாம் என்றால் அது விடியல் சேகருக்கான காங்கிரஸ் தொகுதியாக இருக்கிறது.

இப்போது சாமிநாதன் நெடுஞ்சாலைகளில் தனது தொகுதி எது எனத் தேடிக்கொண்டிருக்கிறார். விடியல் சேகர் தனது ‘அஸ்தமனம்’ நெருங்கிவிட்டதோ என அச்சப்பட்டிருக்கக் கூடும். தமிழக விரிவிலும் அளவிலும் இதுபோல எண்ணற்ற இக்கட்டுகள் பெருகியிருக்கும் நிலையில் எல்லாக் கட்சிகளுக்கும் சிக்கல்கள். இவை சிந்தனையை வேண்டுகிற சிக்கல்களாயிருப்பது மேலும் தலைவலி.

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதில் கருணாநிதியின் பலம் என்னவெனில் தங்கபாலு காங் தலைவராயிருப்பது. ஜெயலலிதாவின் பலம் என்னவெனில் ஜெயலலிதா ஜெயலலிதாவாக இருப்பது.

Monday, March 7, 2011

பெண்களின் தினச் சேதி

பெண்கள் தினத்துக்கு வாழ்த்துச் சொல்வது அத்தனை சம்பிரதாயகரமாகவும் அலுப்பூட்டுவதாகவும் (ஆணியல் அடிப்படையில் உட்குமைந்திருக்கிற காமத்தின் பாற்பட்டு ) குற்ற உணர்ச்சி தருவதாகவும் இருக்கிறது. ஆனாலும் சித்திரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டுவரும் நிலையில் பெண்கள் தினத்தைப் பற்றி எண்ணங்கொள்ளாமல் தள்ளிப்போடுவதும் சாத்தியமாகவில்லை.

பெண்கள் தினத்தை பெரும்பான்மை சனரஞ்சக இதழ்கள் ‘மகளிர் தினம்’ என விளிப்பதிலேயே தமது உள்ளங்கைக் கூட்டுக்குள் பெண்களை வைக்கவேண்டும் என்கிற மனோரீதி காணக்கிடைக்கிறது. இந்த ஆண்டின் பெண்கள் தினம் தமிழகத்தில் மிக அடுத்து தேர்தலைக் காணவுள்ள ஒரு நாளாக மலர்ந்துள்ளது(இதை ஒரு நாளின் மலர்ச்சியாகக் கொள்ளவேண்டுமேயல்லாமல் பெண் = மலர் என்கிற பாவனையில் கொள்ளவேண்டாம்).

அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க போன்ற நூறுக்கும் அதிகமான இடங்களில் போட்டியிடும் இரு கட்சிகளை விட்டுவிட்டு அடுத்துள்ள நிலையில் உள்ள கட்சிகளைப் பாருங்கள். காங்கிரஸ்,பா.ம.க, வி.சி. தே.மு.தி.க,கம்யூனிஸ்டுகள், கொ.மு.க,த.மு.மு, ம.தி.மு.க இப்படி ஏகப்பட்ட கட்சிகள் போட்டியிடப் போகின்றன. அவை விகிதாசார அடிப்படையில் பெண்களுக்கு எத்தனை எத்தனை இடங்கள் ஒதுக்கப்போகிறார்கள் எனப் பாருங்கள்.

(தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த மூன்றாம் பாலினரான ரோஸ் மற்றும் கல்கி ஆகியோருக்கு ஒதுக்கப்படுமா என்பது மூன்றாம் பிரச்னை: மூன்றாம் பிரச்சினை என்பதாலேயே முக்கியத்துவமற்ற ஒன்றாக அது மாறிவிடாது.லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு விசா கூடக் கிடைக்கவில்லை என்பதை அவர் தனது பதிவில் கொந்தளித்திருக்கிறார்.)

பெண்களுக்கு அவர்கள் சதாகாலமும் மசோதா நிலைப் பேச்சிலேயே உள்ள 33.333333  சதவீத ஒதுக்கீட்டைச் செய்கிறார்களா எனப் பார்க்கவேண்டும். (மிகச் சிக்கலான பாகா எண் இந்த 100.) அப்படி ஒதுக்கீடு செய்யாத பட்சத்தில் பெண்கள் தேர்தலை- வாக்களிப்பைப் புறக்கணித்தால் எப்படி  இருக்கும்  என யோசித்துப்பார்க்கிறேன். எட்டாந் தேதி ஒன்றில் எட்டாத காரியங்களைப் பற்றிச் சிந்திக்கநேர்ந்துவிட்டது ஆண்மையப் பிழையாக இருக்காது என்றும் நம்புகிறேன்.

Sunday, March 6, 2011

கழகத்தின் ‘கை’யறு நிலை

இன்றைய தின இதழை வாசித்தபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி கருணாநிதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு எள்ளளவிலும் குறைவில்லாததே. தனித்த அளவில் லாப நட்டங்கள் இல்லாதபோதும்.

ரோஷக்காரர் மற்றும் தன்மானம் மிக்க நண்பர் விஜயகாந்த என அழகிரியால் சான்று புகழப்பட்ட புரட்சிக் கலைஞர் கூட தனது கூட்டணி ஒப்பந்தத்தை அ.இ.அ.தி.மு.க வுடன் இறுதி செய்துவிட்ட நிலையில் தி.மு,க, காங்கிரஸ் தரப்பு தனது ஒப்பந்தத்தை இறுதி செய்யாத நிலை நீடிக்கிறது.

அம்மட்டோ... காங்- கின் அழிச்சாட்டியம் தாளாமல் தனது மந்திரிகளையும் மத்திய அமைச்சரவையிலிருந்து பின்மாற்றிக் கொள்வதாக மு.க அறிவிக்குமளவு நிலைமை முற்றிவிட்டது.

ஐம்பதில் தொடங்கி அறுபது வரை வேட்புச் சீட்டுகள் தர தி.மு.க ஒப்புக்கொண்டபின்னும் அறுபத்தி மூன்று வேண்டும் என காங்- உறுதி காட்டுகிறது.

அதுகூடப் பரவாயில்லை. அந்த அறுபத்துமூவரையும் தங்கள் தொகுதியை எடுத்துக்கொண்டு மீதத்தை தி.மு.க வுக்குத் தருவோம் என அவர்கள் கூறுவது இதுகாறும் நாடு காணாத வினோதமாகும். கூட்டணிகளுக்கு தர்மம் என ஒன்று உண்டா? எனச் சிலர் வினவலாம். ஆனாலும் உண்மை என்னவென்றால் கூட்டணிகளுக்கு தர்மம் உண்டு ;ஆனால் தர்மம் தற்காலிகமானது.

அறம் மீறிய ஆசையிலும் கண்மூடித்தனத்திலும் காங்கிரஸ் இந்தப் பிடிவாதம் காட்டுகிறது. இது தனித்து நின்று தி.மு.க வெற்றி பெறும் என்று துருத்தி ஊதுகிற கி.வீரமணியின் கண்மூடித்தனத்திற்கு ஒப்பானது.
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மூடநம்பிக்கை இல்லாமல் வாழ்வை ஓட்டமுடியாது என வீரு நிரூபிக்கிறார்.

தனது நீண்ட நெடுநாள் அனுபவத்தில் இப்படியான சிக்கலை அனுபவித்ததில்லை என்கிறார் கருணாநிதி. அவர் மட்டுமல்ல இந்தியாவில் எந்தக் கூட்டணியும் இப்படியான நிலையை அனுபவித்திருக்குமா என்பது ஐயமே.

என்ன செய்வது ’மேன் மக்கள்த் தொடர்பு சதிகாரி’ நீரா ராடியா இல்லாமல் இருந்திருந்தால் கதைப் போக்கு வேறுமாதிரி இருந்திருக்கும்.கம்பு ஊன்றி நடக்கும் கடைக் காலத்தில் கருணாநிதிக்கு காலம் அனுப்பிவைத்தை வசந்த சேனை இந்த நீரா. ஜனகீயமும் சாணக்யமும் நன்கறிந்த தமிழகத்தின் இந்நாள் முதல்வர் தொடுத்த அஸ்திரம்தான் மத்திய அவையில் தனது அமைச்சர்களை ராஜினாமாக் கோரவைப்பது.

இன்றைக்கு ஃப்ளைட் பிடித்து இரவு குலாம் நபியோ வீரப்ப மொய்லியோ வருவார்கள் டெல்லியிலிருந்து சென்னைக்கு. அறுபத்தியொரு இடங்கள் காங்கிரசுக்கு....ஆயிரத்தொரு இடர்கள் தி.மு.கவுக்கு. 

வாஸ்துப் பார்த்து... வாஸ்துப் பார்த்து...

ஒரு தேநீர்க்கடைக் காரரிடம் ஆட்டோக்காரர் ஒருவர் சக ஆட்டோக்காரரைப் பற்றிச் சொன்னது,

‘’அவன் முதல்ல பம்பாய்ல ஆட்டோ ஓட்டிக்கிட்டுருந்தாண்ணே. அவன் சொன்னான் முதல்ல ஓட்டறப்ப அங்க இருக்கற இடங்களே தெரியாது. ஆள் ஏறி உக்காந்தா மெதுவா ஓட்டிப் போய் வாஸ்துப்பாத்து வாஸ்துப் பாத்துக் கரெக்டாக் கொண்டு போய் விட்டுடுவேன்னு சொன்னான். அது எப்பட்றா முடியும் ரைட்ல போ வேண்டியதுக்கு வாஸ்துப் பாத்து லெஃப்டுல போனீனா எடத்துக்கு போய்ச் சேரமுடியுமான்னு கேட்டேண்ணே. அவன் சொன்னான் மெதுவாப் போய்க்கிட்டே போர்டுகளை வாஸ்துப் பாத்து வாஸ்துப் பாத்து கொண்டுபோய்ச் சேர்த்துடுவேன்னு.’’

சென்னையில் இந்தச் சம்பவத்தை நேரில் கண்டுகேட்டு அலைபேசியில் சின்னமனூர் ஸ்ரீதர் சொன்னபோது சிரித்துமுடிந்து வியப்பில் ஆழ்ந்துவிட்டேன். பேச்சை எப்படியெல்லாம் வாஸ்துப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.