Friday, April 30, 2010

அன்பும் வாழ்த்தும்

பாரதியாரின் அன்பு செய்தல் கவிதையிலிருந்து சில வரிகள்...

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வானுலகு நீர் தருமேல் மண்மீது வகைவகையாய்
புற்கள் நெற்கள் மலிந்திருக்குமன்றே... ஆதலினால்
மானுடரே பாடுபடல் வேண்டா
ஊனுடலை வருத்தாதீர்
உங்களுக்குத் தொழில் இங்கு அன்பு செய்தல் கண்டீர்!


ஆகவே... உழைப்பைப் பற்றி
சும்மா இருந்து கொஞ்சம்
கடுமையாகச் சிந்திப்போம். என்ற போதும்

‘உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.’

ஒரு நற்செய்தி

இதனால் தமிழ் வாசிக்கும் சகலமான பேர்களுக்கும் அறிவிப்பது யாதெனில் எழுத்தாளர்
அ.முத்து லிங்கம் இணைய தளம் தொடங்கியுள்ளார்.http;amuttu.com விலாசத்துக் கண் தேடிப்பார்த்து இன்புற வேண்டியது அவசியம். அவரைப் பற்றி எழுதிச்சிலாகிக்க எவ்வளவோ ஆழக்கடலில் கிடப்பினும் (ஆழக்கடலில் தேடி அமுத்து என்ற பாடலைக்கேட்டால் கூட எனக்கு அவர் நினைவுதான்) அவரது பாக்கியுள்ள பதிவுகளைப் படிக்கும் ஆவலில் இதை இக்கணமே நிறைவு செய்கிறேன். நன்றி...

இன்று மழை நாள் மாலை...

பூ விழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே!
இளம் கிளியே கிளியே
மெல்ல வராலாம் இனியே
இனித் தொடலாம் என்னையே...
அரும்பான காதல் பூவானது அனுபவ சுகங்களைத் தேடுது.
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை.
கார் மேகமோ குழலானது ஊர்கோலமாய் அது போகுது.
மலை வாழைத் தென்றல் தாலாட்டுது.
மரகத இலைத் திரை போடுது.
கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ
கலை இது அறிமுகம் வேண்டுமோ?
- இன்னும் ஏழெட்டு வரிகள் இந்தப்பாட்டில் உள்ளன.எனக்கு உயிராய்ப்பிடித்த பாடல்.பாட்டுக்கேட்டுக்கொண்டே தட்டுகிறேன்.பாட்டின் வேகத்துக்கு தட் ‘டச்’ ச முடியவில்லை. என்ன படம்? பாடியது யார் என்று தெரியவில்லை.(பின்னூட்டத்துக்கு மனுஷன் என்னவெல்லாம் வேலை பண்ண வேண்டியிருக்கிறது.)

வசந்த சேனையைப் பார்த்ததுவரை.

ஆதிரனின் பதிவில் தனது ஆரம்ப கால சினிமா நினைவுகளில் இருந்து கிளர்ந்து சமகால அதிருப்தி வரை வந்திருந்தார். எனது சினிமா நினைவுகளும் ஏறக்குறைய அவரது காலத்திலிருந்தே ஆரம்பிக்கிறது.

சினிமா நினைவுகள் தியேட்டர்களின் உச்சியில் கூம்புகட்டிக் கூவுகின்றன. விநாயகனே வினை தீர்ப்பவனே என்கிற சீர்காழி... அல்லது மருதமலை மாமணியே முருகையா என்று மதுரை சோமு பாடுகிறாரென்றால் டிக்கெட் கொடுக்கப்போகிறார்கள் என்கிற கிராமியப் பண்பாடு கலந்தது வாழ்க்கைமுறை.மூலனூர் சௌந்திராம்பிகை தியேட்டரில் ஆரம்பிக்கிறது திரைவாழ்க்கை.(மணல் தரை வாழ்க்கையின் மகத்துவங்கள் தனி. அது முருகன் திரையரங்கத்தில்.)

சவாரி வண்டியும் மொட்டை வண்டியும் கட்டிக்கொண்டு போய் படம்பார்த்த வம்சம் எங்களுடையது. தேவரின் திருவருள் முதல்படமாக மனதில் பதிந்த நினைவு. படத்தலைப்பில் வருகிற தேவர் முருக பக்தரும் மிருக பக்தருமான தேவரா அல்லது முப்பத்துமுக்கோடியா என்பது உங்கள் வாய்ப்புக்கு விடப்படுகிறது.கந்தன் காலடியை வணங்கினால் ... பாடல் இந்தப்படத்தில் என்பது நினைவு.

கத்தி எடுத்துச் சண்டை போடுவதிலும் சுருட்டை முடியிலும் மயங்கி சிலகாலம் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் வித்யாசம் தெரியாமல் இருந்தது. எல்லாமே எம்.ஜி.ஆராக என் அத்வைதத்தில் தெரிந்தது. பாசமலருக்குப் பிறகு பளிச் வித்யாசம் புலப்படும் முன்னமே எனக்கு ஊரில் ‘இரட்டை இலை’ என்கிற பட்டப்பெயர் கிடைத்தது.

இரண்டாவது படிக்கும்போது 77 எலக்சனில் எம்.ஜி.ஆருக்கு நான் கார் ஏறிப்போய் மைக்கில் ஓட்டுக்கேட்ட இடங்கள் பத்துக்குமேல். கோழி திருடியது உட்பட சர்க்காரியா காலத்தில் கருணாநிதி மேல் போடப்பட்ட நூற்றுச்சொச்சம் வழக்குகளில் ஐம்பதுக்கு மேல் அப்போது எனக்கு மனப்பாடம்.அதை மூச்சுவிட்டும் விடாமலும் ஒப்பிப்பேன்.

இப்போது ஞாபக சக்தி போய்விட்டது. ஊழலில்லாத பத்துத் திட்டங்களைப் பட்டிலிட்டுக்கொண்டிருக்கிறேன் இப்போது. எம்.ஜி.ஆர் என்னை தத்து எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தை 1980-இல் மூகாம்பிகை கருணையால் முடியிழையில் இழந்தேன். பாருங்கள் சினிமா பற்றிப் பேசினால் இதே தொல்லைதான். வண்டி திசை மாறிப்போகிறது.கரூர்,வெள்ளகோவில்,சின்னதாராபுரம் ஆகியன படம் பார்க்கும் இதர இடங்களாக அப்போது இருந்தன.

டீன் ஏஜில் அடியெடுத்துவைக்கும் போது இந்த இடங்கள் தவிர்த்து முதலாவதாக வேறு இடத்தில் ஒரு படம்பார்த்தேன். மனோகரா. இரண்டாவது ஆட்டம் .தாராபுரம் விசாலாட்சி தியேட்டர். எங்கள் பஸ் கண்டக்டர் கூப்பிட்டார் என்று பஸ் ஏறி கல்யாணத்துக்குப் போய்விட்டு என்ன செய்வது எனத் தெரியாமல் போன படம் அது.

அறுபதுகளுக்கு முன்னால் வந்த படத்துக்கு எண்பதுகளிலும் சீட்டுக்குத் தள்ளுமுள்ளு. கவுன்ட்டரில் எனது ஒரு செருப்பு காலில் இருந்து நழுவிப்போயிற்று. இடைவேளை வரை ஒற்றைச் செருப்புடன் உட்கார்ந்து பெஞ்சில் அமர்ந்து படம் பார்த்தேன்.

இடைவேளையில் எதேச்சையாகத் திரும்பினால் எனது பெஞ்சுக்கு பின்னாடி ஒன்றரை மணி நேரத்துக்குப் முன்னால் தொலைந்த மிச்சச் செருப்பு. இரண்டு செருப்புகளுடன் மீதிப்படத்தைப் பார்த்தேன். வாழ்வின் அற்புதமான நிகழ் தகவுகளில் அது ஒன்று. என்ன ஆச்சரியம்... கடைசிக்காட்சிகளில் கண்ணாம்பாவின் கூச்சல் தாளமுடியாமல் இரும்புச் சங்கிலியால் தூணை அசைத்தபோது எனக்கு ஆச்சரியமே தோன்றவில்லை.

ஆச்சரியங்களின் ரூபங்கள் வேறு. அதற்குப்பின் வீட்டுச் சுவர்களில் நான் வரைந்ததெல்லாம் சினிமா தியேட்டர்கள் தான். சீட்டுகள் ,ஆட்கள்,ஆபரேட்டர் ரூம், அதிலிருந்து பாயுமொளி,திரை,காட்சி எல்லாமும் இருக்கும். நான் ஓவியனுமாகவில்லை. எனக்கு முந்தியே முட்டைக்கரைசலில் அப்பா எழுதிவைத்த சுவரெழுத்துகள் இருந்தன. ஒன்று அரசியல் சார்ந்தது. ’மாட்டுப்பெட்டியில் ஓட்டுப்போடுங்கள்.’
இன்னொன்று உயிர் சார்ந்ததாகவே இருக்கும் என நினைக்கிறேன். அவர் எழுதியிருந்த இரண்டு பெயர்கள். ‘கண்ணாம்பா, டி.ஆர்.ராஜகுமாரி.’

என்ன மாதிரிச் சேர்க்கையய்யா இது. என்கிறீர்களா? தமிழ்நாட்டில் ரேஷன் கார்டைவிட எண்ணிக்கையில் அதிகமாக கலைக்குடும்பங்கள் இருக்கின்றன. பலபேருக்கு நேரமில்லை. அவ்வளவுதான்.

Thursday, April 29, 2010

எதிர்ச்சேவை

வருடம் தவறாமல்
கல்யாணம் மீனாளுக்கு
என்றாலும்
சமயத்தில் வந்து சேர
வாய்க்காது சகோதரனுக்கு
எப்போதும்.

சூடிக்கொடுத்த மலர்களால்
சுகங்கண்ட சோம்பேறி அவன்.
மண மங்கல ஒலி கேட்டு
சீதனம் நதிலெறிந்து
திரும்புவான் அவன்.
அழகன் கண்ணீர் ஆற்றோடு போகும்.

மீளும் அவனுக்காக
வண்டியூரில் காத்திருப்பாள்
இன்னுமொரு அடியாள்.
‘துளுக்க நாச்சியம்மை.’*

*-சித்ரா பவுர்ணமியின் நேற்றைய நினைவுகளோடு இது பதியப்பெறுகிறது. பண்டு ஒரு காலம் இதை வெளியிட்ட தினமணி - கதிருக்கு நன்றி.

Tuesday, April 27, 2010

படையெடுப்பு

காலையில் ஒரு பாட்டுக்கேட்டேன். சுவாரசியமாக இருந்தது.
ராமா ராமா ராமா ராமா
ராமன் கிட்டெ வில்லைக் கேட்டேன்
பீமன் கிட்ட கதையக் கேட்டேன்...
..................................
உங்க கிட்ட அன்பைக் கேட்டே(ன்)...
ராமா ராமா ராமா ராமாஆஅ....

நல்லாத்தானய்யா கிளம்பி வர்றாங்க சனங்க!

Monday, April 26, 2010

அனவரதமும் எழில்வரம்...(3)

அரக்கோணம் உள்க்காவல் நிலையத்திலிருந்து வெளி வந்தபோது நேரம் மத்தியானத்தைத் தாண்டியிருந்தது.அந்த வழித்தடத்தில் ஒசூருக்கே ரயில் இருந்ததோ என்னவோ அது புத்தியில் படவில்லை.வெளிவந்து பேருந்து நிலையம் போய் அங்கிருந்து ஊர் ஊராகச் சுற்றி-திருப்பத்தூர் எல்லாம் போயிருப்பேன் என நினைக்கிறேன் - மாலை இரவிற் கலக்கும் மங்கல் நேரத்தில் ஒசூரில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப்போனேன்.

மகிழ்ச்சி கரமான சம்பவமாக இருந்தது. எழில்வரதன் அவரது எந்த புத்தக விழாவாக இருந்தாலும் குடும்ப சமேதராக காட்சியளிப்பார்.பொதுவாக இது தமிழ்ச் சூழலில் இல்லாத பண்பு.விழா முடிந்து பெங்களூர் வீட்டுக்குப் போய் சங்கிலி இழுத்த கதையை திறமையாக மறைத்தேன். குடும்பத்தில் நான் நீண்ட காலம் மறைத்த ஒரே சம்பவம் இதுதான்.எனது ரகசியங்களின் ஆயுட்காலம் வானவில் நேரத்தை விடவும் ஆயுட்குறைவு பட்டவை.

திங்கட்கிழமை சொன்னபடிக்கே அரக்கோணம் வந்தேன். மாலை நாலு மணிக்கு மேல் நீதி மன்றத்துக்கு கூட்டிப்போனார்கள்.என்னைப் போலவே துச்ச வழக்குக்காரர்கள் பத்துக்கும் மேல் இருந்தார்கள். பராசக்தி கணேசன் மாதிரி தனிக்கூண்டு ஏறி முழங்க அவசியமில்லாமல் இருந்தது. தரிசனத்துக்குச் சவுக்குக் கட்டிய மாதிரி வரிசையாக சூத்தைத் தேய்த்துக்கொண்டே போய் நீதிபதியின் பார்வைக்கு நிற்கவேண்டியதுதான்.மளமளவென விசாரித்து சட்சட்டென தீர்ப்பு சொன்னார் நீதிபதி.அவர் எழுத்தாளர் ஜெயமோகனைப் போலவே எனக்கு அலாதியான உணர்வு நிலைகளை உண்டுபண்ணிவிட்டது.

எனது முறை வந்த போது குற்றச்சாட்டு உண்மையா என்றார். விஜயகாந்த் சொல்லியிருந்தபடி ஆம் என ஒப்புக்கொண்டேன்.
’அபராதம் போட்டுடலாமா?’
‘பாத்து சொல்லுங்கய்யா ஏழை எழுத்தாளன்’ - எழுத்து பற்றி அவ இடங்களில் பிரஸ்தாபிக்க நேரும் போதெல்லாம் எனக்கு டணால் தங்கவேலுவின் நினைவு வரும்(கல்யாணப்பரிசு - எழுத்தாளர் பைரவன்)
‘ஒரு ஆயிரம் ரூபா?’
‘ஐயா! மாசக் கடைசி. பாத்து சொல்லுங்கய்யா!’
நீதிபதி புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்தார்.
‘இன்னும் தேதி பத்து கூட ஆகலியேய்யா?’
நான் குரலில் இயன்ற அளவு பவ்யத்தைத் தரித்துக்கொண்டேன்.
‘இப்பவெல்லாம் ஒன்னாந்தேதியே மாசக் கடைசி ஆயிருதுங்கய்யா...’
அவர் புன்னகைத்துவிட்டு அபராதித்தார்.’ஐநூறு ரூபாய். இனிமேல் இந்த மாதிரி சங்கிலி பிடிச்சு இழுக்கற வேலையெல்லாம் வெச்சுக்கக்கூடாது . புரியுதா?’
‘சரிங்க..’
காசு கட்டிக் காகிதம் வாங்கிக்கொண்டு மறுபடி காவல் நிலையத்தில் கைப்பற்றி வைத்திருந்த எனது டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வாங்கிக்கொண்டு சென்னைக்கு ரயிலேறினேன்.

பிற்பாடு அன் ரிசர்வ்டு ஏறுகிற நிலை வந்தால் கைலியை விரித்து உட்கார்ந்துகொள்வது என்ற காத்திரமான முடிவை எடுத்தேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், ரயில்கள் கடந்து போனபின் தண்டவாளங்கள் வெப்பமாக இருக்கின்றன.

Sunday, April 25, 2010

அனவரதமும் எழில்வரம்...(2)

அந்த முறை நான் பெங்களூர் போவதற்கான காரணம் எழுத்தாளர் எழில்வரதன்.ஒசூரில் இருக்கிற ஒன்றாந்தர நகைச்சுவை எழுத்தாளர்.அவரது ’ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு’ (திரியுமா உலவுமா என்பது இப்போது குழப்பமாயிருக்கிறது\திரிதலும் உலவுதலும் ஒன்றுதானோ என்பதனை நிகர்த்தது இது) சிறுகதைத் தொகுப்பின் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை மாலையாக இருந்தது.வெள்ளிக்கிழமை இரவு எனது ரயிலேற்றம்.

ஒசூர் போகிறவன் ஏன் பெங்களூருக்கு ரயிலேற வேண்டும் என்று கேட்டீர்களேயானால் இரண்டு பதில்கள் உண்டு. ஒசூரை அடுத்து பெங்களூர் இருக்கிறது. பெங்களூரில் என் மனைவியும் மகளும் இருந்தனர்.இந்தப் பதிவுக்கு தலைப்பு எழில் வரதனின் பெயரிலிருந்து பெறப்பட்டது.அவரது அடுத்தொரு புத்தகமான ‘ஆலமர இடையழகு’(தலைவர் தலைப்புகளில் என்னமாய் எழில் கொஞ்சுகிறது பாருங்கள்) நூலுக்கு என்னைப் பேச அழைத்து பேனரெல்லாம் கட்டியிருந்ததற்கு முதல்நாள் இரவு ‘அரவக்குறிச்சி’ காவல் நிலையத்தில் நான் விசாரணைக்கு உட்பட்டிருந்தேன்.அவரது எந்த நூலுக்கும் நான் சிறப்பாக பேசவில்லை. இனி அப்படிப் பேச நேருமாயின் ஒசூரிலேயே கூட்டம் நடக்கும் இடத்துக்குப் பக்கத்தில் அறை எடுத்து நமக்குநாமே திட்டத்தின் கீழ் சிறைப்பட்டு படித்து முடித்துப் பேசவேண்டியதுதான்.

ரயில் சங்கிலியை இழுத்து முடித்ததும் ரயில் நின்றது. இப்போது என்னைச் சுற்றி இருந்த நெரிசல் காலியாகி ஒரு வரைபடப் புலம் உருவாகிவிட்டது.நிறுத்தியது யார் என்று ஒவ்வொரு பெட்டியாக விசாரித்துக்கொண்டு நிர்வாகிகள் வருவதான அரவம் தெரிந்தது.
என்னை நானே காட்டிக்கொடுக்கத் தயாராக வாசலுக்கு வந்து நின்றேன்.
‘கேட்டா ஒன்னும் பதில் பேசாத அப்படியே நின்னுக்க’ என்று ஒருவர் அறிவுறுத்தினார்.அவரது பாக்கெட்டுக்கு மேலாக சிவப்பு அட்டை துருத்து அதில் வெள்ளை எழுத்துக்கள் இருந்தன.
தென்னகத் தடமுருளித் தொடர்வண்டித் தொழிலாளர் தொகுப்பமைப்பு (தமிழ் தகரத்தில் என்னமாய் பிச்சு வாங்குகிறது பாருங்கள். செம்மொழியா கொக்கா கொக்கா!)- என்பதன் ஆங்கில முதலெழுத்துகள் அவை. நான் அவரது சொல் தட்டினேன். தரையில் ஆட்கள் வந்து நின்றபோது இறங்கி ‘நாந்தாங்க வண்டியை நிறுத்தினது’ என்றேன்.

அடுத்த சில நிமிடங்களில் ரயில் ஓடத்தொடங்கியபோது நான் ஒற்றை சீட்டில் அமர்ந்து சார்ஜ் ஷீட் எழுதுகிற காவலரின் முன்னால் நின்றுகொண்டிருந்தேன். லாலுவை சந்திப்பதற்கு முன்னால் இப்படி கன்னமும் ஒடுங்கி தலையும் சொட்டையான ‘நூறு’ வித்யாசங்கள் கொண்ட ஒருவரை சந்திப்பேன் என்பது என் கனவு வேலைத் திட்டத்தில் இருக்கவில்லை.அவர் அதை எழுதுவதற்கு இன்னம் நாலு ரயில்வேக்காரர்கள் கூட இருந்து தகவலும் வார்த்தைகளும் எடுத்துத் தந்து உதவினார்கள்.மகா பாரதத்துக்கு கொம்பெடுத்துக்கொடுத்த விநாயகருக்குப் பதிலாக நான் இருந்தேன்.’கரெக்டா எத்தனை மணிக்கு வண்டி நின்னுச்சு?’ என்பது போன்ற டெக்னிக்கலான கேள்விகளுக்கு நானே பதிலளித்தேன்.

’பதினொன்னு நாப்பத்தி மூணுங்க சார்’- என்று வானொலியில் நேரம் சொல்வது மாதிரி சொன்னதில் அவர் அசந்துபோய்விட்டார்.எழுதும் பணியை எனக்கே கொடுத்து விடுவாரோ என்று கூட ஒருகணம் விரும்பினேன்.ரைட்டர் என்பதை மீண்டும் மீண்டும் நிறுவலாமே.
ஆனால் அவரே எழுதிவிட்டார். அவரது கையெழுத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் எண்கள் மட்டும் துல்லியமாக எழுதப்பட்டிருந்தன. எழுத்துக்கள் நீளநீளமாக ஜாங்கிரி வளையங்களை பிய்த்து அடுக்கியது போல இருந்தன.அவர் ஒரு திறமையான ரைட்டர் என்கிற முடிவுக்கு வந்தேன். அவரது அறிக்கையை என்னவாகவாகவும் வாசிக்கும் வாய்ப்பை எழுத்துவடிவில் வைத்திருந்தார்.

காந்தியைச் சுட்டது,யேசுவைக் குரிசில் மாட்டியது,நபியைக் கல் எறிந்தது உட்பட எந்தக்குற்றத்தைச் சாட்டவும் அந்தக் கையெழுத்து நெளிந்துகொடுக்கும் என நினைத்தேன்.ஹிப்ரூ அரபி என அதை மொழி மாற்றி வாசிக்கும் வாய்ப்பும் இருந்தது.

வண்டி காட்பாடி நிறுத்தத்தில் நின்றது.ரயில்வே ஸ்டேஷனுக்குள் இருக்கும் பொலீஸ் ஸ்டேஷனுக்கு என்னைக் கூட்டிப்போனார்கள்.அடுக்கு நிலை விசாரணைகள் முடிந்தன.நான் ஏதோ பலமுறை கஞ்சா வழக்கில் உள்ளே போனவன்மாதிரியான நைந்த தோரணையில் பெஞ்சின் கீழே உட்காரப்போக ‘மேலே உட்காரு தம்பி’ என்று ஒரு காவலர் பணித்தார்.

கைதியை வைத்திருக்க இது உகந்த இடமல்ல என்று என்னை அரக்கோணம் அனுப்பினார்கள்.அரக்கோணத்துக்கு துப்பாக்கிப் பாதுகாவலுடன் நான். ஒரு பெட்டியில் எட்டுப்பேர் அமரத்தக்க அறைப்பிரிப்பில் நானும் அந்தக் காவலரும் மட்டுமிருந்தோம்.
இப்படி ஜாலியான பயணம் என்றால் கழுதை சென்னையில் வண்டி கிளம்புமுன்னரே ஒரு தடவை சங்கிலியை இழுத்திருக்கலாமே என்று பட்டது.

காட்பாடியில் இருந்து அரக்கோணம் வரும்போதுதான் தெரிந்தது, அவர் காவலரல்ல விஜய்காந்த் என்று.அப்படிஅப்படி மணிமணியான வசனங்கள். நான் குடித்துவிட்டு ரயில் ஏறியதற்காக முதன்முறையாக வருந்தினேன்.ஆனால், அவர்தான் யோசனை சொன்னார்.
‘இத பாருங்க... கூட்டம் அதிகம், பொட்டி பத்தாதுன்னெல்லாம் வசனம் பேசாதீங்க. தலை பயங்கரமா சுத்திச்சு... மயக்கம் வர்றமாதிரி இருந்துச்சு...சங்கிலியை இழுத்துட்டேன்னு ஜட்ஜ் கிட்ட சொல்லுங்க”

அப்ப... நான் கோர்ட்டுக்குப் போகப்போறேன் என்பது அப்போதுதான் உறைத்தது.பின்னிரவு
ஊடாக ரயில் அரக்கோணத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.குறிப்பிடத்தக்க குற்றவாளியைப் போல ஜாமீன் கிடைக்காத வெள்ளிக்கிழமை இரவு அரெஸ்ட் ஆகியிருக்கிறேன். உலகளாவிய தொன்மத்தில் இந்த வெள்ளிப் பின்னிரவு முக்கியமான நேரம். சிலுவை யேசு
மயக்கத்தின் முதலாம் பாகத்துக்குப் போகும் நேரம்.ஆலகால சிவன் மயக்கத்தின் மையத்தில் இருக்கும் நேரம்.

அரக்கோணம் காவலர்கள் என்னை விநோதியைப் போலப்பார்த்தார்கள். எனக்கென்று காட்டப்பட்ட அறையில் வால்கயிறு இருந்தது. எருமைகள் ஒருவேளை அதில் தூக்குமாட்டிக்கொள்ளலாம். எனது கழுத்துக்கு அது ஒவ்வாததாக இருப்பினும் லாக்-அப் தற்கொலைகள் நிகழ்வதற்கான சாத்தியங்களை கற்பனை செய்ய முடிந்தது.

காலையில் கழிப்பறைக்குப் போய்வந்த பின் பக்கத்தேயுள்ள பூவிரிந்த அழகு மைதானத்தில் உலவப்போகிறேன் என ஆசையை வெளியிட்டபோது அதை மறுத்துவிட்டார்கள். தொலை பேசி ஒன்று பேசிக்கொள்ள ஒரே ஒரு அழைப்புக்கு அனுமதி கிடைத்தது.

யாருக்கு பேசினேன் என்பது இங்கே மந்தணம். அந்த இலக்கிய அண்ணன் தற்சமயம் என்னை விலக்கிய அண்ணனுக்கு (பேதமை ஒன்றோ பெருங்கிழமை...) போன் செய்தார்.கடைசியில் திங்கட்கிழமை மத்தியானத்துக்கு மேல் இதே இடத்துக்கு வந்துவிடவேணுமாயும் கோர்ட் சென்று அபராதம் கட்ட வேண்டுமாயும் கூறி விடுவிக்கப்பட்டேன்.

அப்படித் தற்காலிக விடைபெறும் போது இன்ஸ்பெக்டர் சொன்னார்.
‘எந்த மாதிரி இடத்துல நீங்க சங்கிலியப் புடிச்சு இழுத்திருக்கீங்க தெரியுமா? சவுத்லயே அதிகமா ஸ்நாட்ச்சிங் பண்ணிட்டு திருடங்க இறங்கி ஓடற அதே இடத்துல நீங்களும் நிறுத்தீருக்கீங்க...’

நான் திகைத்தேன். நிறுத்துகிற இடங்களை நாம் தீர்மானிப்பதிலும் பார்க்க வேறேதோ செயல்படும் போலிருக்கிறது.

அனவரதமும் எழில்வரம்...(1)

இது நிகழ்ந்து மூன்றாண்டுகள் ஆகியிருக்கும்.அப்பொழுதெல்லாம் எனக்கு ஒரு கார்பரேட் வங்கியில் கணக்கும் அட்டை நுழைத்துப் பெட்டியில் பணம் எடுக்கும் ரகசிய எண்ணும் கூட இருந்தன.மூன்று தொடர்கள் எழுதிக்கொண்டிருந்தேன்.அவை முடிவடையும் நேரம் இறுமாப்பும் செருக்கும் உள்ளுக்குள் கொப்பளித்துக்கொண்டிருக்கூடும். நடந்த நிகழ்ச்சிக்கு அது மட்டும் காரணமா என்றும் தெரியாது.

ரயில் பயணத்தை முதன்முதலாக பத்தொன்பதாவது வயதில் அனுபவித்த போதாமையாகக் கூட இருக்கலாம்.முதலாம் முறை ஈரோட்டிலிருந்து விசாகப்பட்டினத்துக்கு ரயில் ஏறினபோது சட்டைப் பையில் இருந்தது பத்து ரூபாய்.அதிலிருந்து மொத்த ஞாபகத்தைக் கிளறினால் ஒரு தன்வரலாற்றுப் புத்தகம் கிடைக்கும். ‘பதினெட்டு முதல் முப்பத்தெட்டு வரையிலான நான்.’

தடம் பிறழாமல் வண்டியை ஓட்டிச்செல்கிற சிரமத்தை இப்போதும் இந்நினைவு அளிக்கிறது.
அன்றைக்கு சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறினபோது இரவு தொடங்கியிருந்தது.இப்போதும் நான் பேருந்துப்பயணிதான் அன்றைக்கு ஏனோ மெனக்கெட்டு ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுத்தேன். ரயில் பயணத்தைத் தேர்வதாயின் முன்பதிவு செய்தல் நலம் என்பது புரிந்திருக்கவில்லை.(முன் பதிவுகள் செய்துவிட்டு தரைப்பலகையில் உட்கார்ந்து வர நேர்ந்தவையெல்லாம் தனித்தனிக் கதைகள்:ஊழிற் பெரு வலி யாவுள).

அன்றைக்கு சென்னை ரயில் நிலையத்துக்கு என்னை பெங்களூருக்கு வழி அனுப்ப இயக்குனர் ஸ்ரீதர் வந்திருந்தார்.முதல் குழப்பம் இங்கே தொடங்குகிறது. நீங்கள் எதிர்பார்ப்பதுபோல அது ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ ஸ்ரீதர் அல்ல.ராமேஸ்வரம் படத்தின் துணை இயக்குனர்.சினிமாவும் லௌகீகவும் ஊஞ்சலாடுகிற ஸ்ரீதர்.ரயில் கிளம்புவதற்கு சற்று முன்னதாக டிக்கெட் எடுத்து அன் ரிசர்வ்டுக்கு வந்தால் பின்பகுதிப் பெட்டியில் சுமாரான நெரிசல்.இரண்டு ஃபர்லாங்குகள் நடந்து முன் பகுதிக்குப் போனால் அங்கேயும் நெரிசல். இப்போது ரயில் விதி புலப்பட்டுவிட்டது. அன்ரிசர்வ்டுகளில் முன் பின் வித்யாசம் இல்லை.அண்ணனுக்குத் தம்பி இளைப்பில்லை காண் என்பது போல் எல்லாம் சரியாகத்தான் இருக்கும். மீண்டும் பின்னோக்கி நடந்தால் நெரிசல் கனத்த நெரிசலாக மாறிவிட்டிருந்தது.அங்கே ஏறிக்கொண்டபின் ஸ்ரீ நிம்மதியுற்றுக் கையாட்டிவிட்டு விடைபெற்றார்.

அவர் சென்றபின் கீழிறங்கி ரிசர்வ்ட் பெட்டிகளில் காலியான சீட்டுகளில் அமர முயற்சித்து ஆட்கள் வந்ததும் இடம் மாற்றப்பட்டேன்.பயணிகள் பட்டியல் படித்து ஏ-27 என்பது மாதிரி வினோத தெரிவிப்புகள் இருந்த இருக்கைகளில் அமர்ந்தேன்.(அவை ரயில் அலுவலர் அல்லது காவல் அதிகாரிகளுக்கானவை).

‘அவர் வந்தா எழுந்துக்கறேனுங்க’ என்பது மாதிரி டவுன் பஸ் தனமாக ஒரு கான்ஸ்டபிளிடம் விவாதம் செய்தேன்.ஏட்டையாவிற்குக் கீழ் உள்ள அதிகாரப் படி நிலையால் இந்தியாவில் சேதம் ஏற்படாதவகையில் தீர்வு சொல்லமுடியாது. ரயில் கூவுவதற்கு முன்னால் நான் அன்ரிசர்வ்ட் பெட்டில்தான் இருந்தேன்.நிலையத்துக்கு நிலையம் நெரிசல் அதிகரித்துக்கொண்டிருந்தது.நெருங்கித் தொற்றி இடிபட்டே பயணித்துச் சாவதற்கென்றே பிறப்பெடுத்தவர்கள் போல நூற்றவர் கூட்டம். இந்தக் கும்பலில் பாதியை ரிசர்வ் டிக்கெட் பகுதிகளில் நின்றுகொள்ளத்தான் அனுமதித்தால் என்ன என்கிற தார்மீக ஆவேசம் எனக்குள் பொங்கியது. நான் முன்னொரு காலம் பார்த்த பேருந்து நடத்துனர் வேலை அப்படி எண்ணவைத்திருக்கலாம்.

ஒருசாரார் அலட்டலின்றி அமர்ந்துவருவதும் மற்றோர் பகுதி(ஏறக்குறைய அதற்கிணையான கூட்டம் ஓரிரு பெட்டிகளில்) செமித்த தவிட்டு மூட்டையாய் வருவதும் எனது சமதர்மக் கோபத்தைக் கிளறியது. காரியங்களை எளிமையாகச் சிந்தித்தேன். ரயில் சங்கிலியைப் பிடித்து இழுப்பது.அதைத் தொடர்ந்த விசாரணையில் ‘இப்படி இப்படி நான் ஒரு எழுத்தாளனாக்கும். நான் சொல்றேன் ரயில்களில் அன் ரிசர்வ்ட் பெட்டிகளை அதிகப்படுத்துங்கள்’ எனத் தெரிவிப்பது. அப்படித் தெரிவித்தால் இந்த இரண்டு பிறைக்காலத்துக்குள் விடிவு வந்துவிடும். இப்படி எனது எண்ண ஓட்டத்தின் சுதாவான போக்குக்கு ஏற்ப அன்றைக்கு மத்திய ரயிலமைச்சராக ‘லாலு பிரசாத் யாதவ்’ இருந்து தொலைத்தார்.
கறவைகள் பின்சென்று காணம் பெய்து உண்கின்ற நம்மவர்தானே என்று தன்னம்பிக்கை பீறிட்டது. அபாயச் சங்கிலி அருகில் சென்றேன். அதைப்பிடித்து இழுத்தேன். அது எண்ணிய அளவு சுலபமாக இருக்கவில்லை. பலத்தைப் பிரயோகித்து கண்களை மூடி அதை சாய்திசையில் இழுத்தேன். வாழ்வில் அதுவரை கேட்டிராத வினோத ஒலி கேட்டது. திட்டமிடாமல் ரயில் நிற்கும் சத்தம் அது.

ரயில் சங்கிலியை இதுவரை ஒரு தமிழ் எழுத்தாளர் இழுத்ததில்லை என்கிற கலி என்னால் தீர்ந்தது. - இப்போது ஒரு விளம்பர இடைவேளை .ரயில் நிற்கிறது.

Saturday, April 24, 2010

பித்துற்ற பத்து...

ஆடி அலைந்து அல்லது ஓடித்திரிந்து கணினி உள்ள நீற்றறைக்கு வந்து சேர்ந்ததும் முதலாவதாக எதையாவது எழுதி ஆட்டத்தைத் தொடங்குவதற்கு இரண்டு விஷயங்கள் உவப்பாக இருக்கின்றன. ஒன்று பின்னூட்டங்களைப்படித்து அதிலிருந்து பதியன் கொண்டு எழுதுதல் அல்லது மற்றவர்கள் உற்றவர்கள் மனையைப் படிப்பது.

பயணத்தின் பல தினங்களில் எழுத எண்ணிக் கொப்புளித்து உருத்திரண்டவை ஆவியாகவோ அல்லது காலாவதியாகவோ ஆகிவிட்டிருக்கும்.(போலிகளை விட காலாவதி மேல் என்று ஏதேனும் குரல் உங்கள் மனதுக்குள் கேட்கிறதா?)

அமர்ந்து, ஆதிரன்.காம் பக்கம் படிக்கப் போக எளிதானதும் ஆபத்தானதுமான சவாலை ஆதிரன் அளித்திருந்தார். பிடித்த பத்துப்பெண்களை வரிசைப் படுத்துவது.வரிசையின் எண்கள் தரவரிசை என்ற பொருள் படாது எனக் கொள்ளவேண்டும். அந்த ஏற்பாட்டை நானும் ஏற்க எத்தனித்ததனூடே நேசமிதரன் ஆதிரனுக்கு ‘ நாம அஞ்சு பேருக்குப் பின்னூட்டம் போட்டா நமக்கு அஞ்சு பேரு பின்னூட்டம் போடுவாங்க ‘ என்கிற ‘மொய்க்கு மொய்’ தொனியில் எதோ பகர்ந்திருந்ததும் அதற்கு ஆதிரனின் பதிலையும் படித்தேன்.

படித்த எல்லாவற்றுக்கும் பதில் போடுவது எளிதல்ல. அது உணர்வு சார்ந்த சங்கதி.ஆனால் சில பகிர்வுகள் அதேபோல் நாமும் ஒன்று எழுதலாமே எனத் தோன்றவைக்கின்றன. இதைப் பின் ஓட்டம் எனச் செல்லமாக அழைக்கிறேன்.பிளாக்குகளைப் படிக்கிறவர்களைப் பொறுத்த மட்டில் ‘வருந்தி அழைத்தாலும் வாராதவர் வாரார். பொருந்தியவர் போம் என்றால் போகார்’ என்ற அவ்வை வாக்கே நினைவுக்கு வருகிறது.

நேசமித்ரனை அடி அல்லது தலை நெஞ்சு எது ஒற்றியும் கவிதை எழுத முடியாதென்பதாலும்( இவ்வளவு நாட்களுக்குப் பிறகு பௌதிகம் ரசாயனம் உயிரியல் ஆகியவற்றில் பிஹெச்டி பண்ணும் திராணி இல்லாததால் அது கைவிடப்படுகிறது), ஆதிரனைப் போல ஒரு பட்டியலிட கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும் என்பதாலும் சோம்பல் கொண்டது எளிதில் வெல்லுகிறது.

இப்போது பட்டியல் - ( ஒரு பெரும் ஆசுவாசம் -இந்தப் பட்டியல் வெளிவந்த பிறகு ‘என்ன யாருன்னு நெனச்சே மைண்ட் இட்’ என்று குறுந்தகவல்கள் வராது என்பதில் உள்ள நம்பிக்கையே)

உங்க ஊர்ல கிழவிகளையும் சகோதர உறவையும் நாய்களையும் தவிர நீங்கள் யாரைத்தான் காதலிக்கவில்லை என்ற பாலசுப்பிரமணியனின் குரலை தூரத் தள்ளிவிட்டு

இனி... நோ நோ... இதற்கு முன் என்னைக் கவர்ந்த பெண்கள் பதின்மர்.

(குறுக்கீடு ; எடுத்ததும் அம்மாவைச் சொல்லாவிட்டால் ‘தாயென்னும் கோயிலைக் காக்கமறந்திட்ட பாவியடி கிளியே’ தொனியுள்ள ராஜாவின் ராகங்கள் அறுபதை யாரும் பரிசளித்துவிடுவார்களோ? என ஐயமாக இருக்கிறது. ஆனாலும் அம்மா லிஸ்டில் இல்லை. அப்படி இருந்தால் அவள் என்னுடைய அம்மா இல்லை).

1.மோகனாம்பாள் - ஒன்றாம் வகுப்பு ஆசிரியை.ஊரில் வளமான அடித்தளத்தை உருவாக்கி பலபேர் உருப்படக் காரணமாயிருந்தவர். கெட்டுப்போனவர்கள் சுய முயற்சியால் கெட்டுப் போனார்கள் என நிலைக் கண்ணாடி மீது சத்தியம்.

2. மார்ட்டினா நவரதிலோவா.

3. கே.எஸ். சித்ரா - அவரது இனிஷியல் எனக்கு வாய்த்தது காரணமல்ல. ஜிக்கி முதல் அனுராதா ஸ்ரீ ராம் ஈறாக பல்வேறு குரலின் மிசை நான் தேக்கிவைத்த நேசத்தின் புன்னகைப் பருண்மை.

4. நந்திதா தாஸ்.

5.அருந்ததி ராய்.

6.சுகந்தி டீச்சர் - காலப்போக்கில் மறந்துபோகப்பட இருப்பவரெனினும் கிணறாழத்தில் மடிந்த நேசத்தின் பேதமைக்காக.

7. பானுமதி ராமகிருஷ்ணா.

8.கே.ஆர். அம்பிகா- நாடக நடிகை.கரூர்.

9.கவுரியம்மா

10.கியூரி அம்மையார்.

பத்து என்பதற்குள் அணி நிரல் வாய்ப்புக்கான அனந்தம்(எண்களாக அடங்கி) இருப்பதால் இந்த எண்ணிக்கை மகத்துவம் பெறுகிறது என எண்ணுகிறேன். புழக்கடைக் கொல்லையில் தாவரங்கள் பூத்திருக்கக் கண்டு வேளாண்மை உணர்ந்த முதலாம் பெண்ணிலிருந்து தொட்டுத் தொடரும் இந்தப் பாரம்பரியத்தைப் பட்டியலிட சக முப்பால் பதிவர்களை அன்புடன் அழைக்கிறேன்.

சத்திரம் தேடும் நட்சத்திரம்

தமிழ் மணம் அறிவித்த நட்சத்திர அறிவிப்பை நான் பார்க்கவில்லை. ஆனாலும் நம்புகிறேன். நண்பன் ஜகன் அதை உறுதிப்படுத்தியபின் அது வேறு சிவகுமாராக இருக்க வாய்ப்பில்லை. ஓடுகிற போக்கில் கருவியும் நேரமும் மனநிலையும் வாய்த்து எழுதிய இரண்டு பதிவுகளுக்கு தன் வரலாறு காணாத பின்னூட்டங்கள். அதிலும் அனானிமஸ் அதிரவைத்துவிட்டார்.செம்மொழி மாநாட்டைப் புறக்கணிப்பதற்குத் தண்டனையாக நான் மேலும் இரண்டு பிளாக்குகளுக்குள் நுழையவேணுமாய் அன்புக் கட்டளை வேறு.
‘பந்தியிலேயே இடம் இல்லை. இலை பீத்தல் என்றானாம்’ என்கிற எங்கள் வட்டாரப் பழமொழியை அவருக்கு நினைவூட்டுகிறேன். எங்கள் ஊர் சுதந்திரத்துக்கு சற்று பின்பு வரை அரவக்குறிச்சியினை பதிவாளர் அலுவலகத்துக்கெனக் கொண்டிருந்தது.(இது வேறு அனானிமஸ் விளைவித்த சந்தேகமோ...)

செவ்வக வடிவில் எழுத்துருவாய் சந்திக்கிறவர்களுக்கு எனது வாழ்க்கை (அ)முறை தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆயினும் ஒரு விளக்கம்.நட்சத்திர அறிவிப்பிற்கு ஒப்புதல் கேட்டு வந்த கடிதத்துக்கு நான் அனுப்பிய பதிலின் ஒரு கீற்றினை இங்கே பகிர விழைகிறேன்.

‘ஒளி குறைந்த நட்சத்திரங்களுக்கும் ஆகாசத்தில் இடமுண்டு என்பது உண்மையாயின் எனக்கும் நட்சத்திரமாய் இருக்கச் சம்மதமே’ என்பதாகும் அது. மரணித்துக் குள்ளனாகி இருட் பூதமாகிவிட்ட நட்சத்திரங்களின் ஒளியைக் கூட நாம் காண வாய்ப்பிருக்கிறது என்பது ‘ஒளி ஆண்டுகளின்’ பிரமாண்டம் நிர்ணயித்திருக்கிற காணியல் விதி.கருவி ரிப்பேராகாமல் கரண்டு போகாமல் அண்டைஅயலார் உரசாமல்... இப்படி எத்தனையோ நல் உற்பாதங்கள் நடந்தாலன்றி ஒரு பதிவு அரங்கேற வாய்ப்பில்லை. இவை நிற்க...

அனானிமஸ் அவர்களின் செம்மொழி உளறல் மாநாடு பற்றிய கோபத்தை உணரமுடிகிறது. அவரது வார்த்தைகளில் ’வேசிமகன்’ என்பதை பின் இழுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.(என்ன கடுமை சார் இது). எத்தனை தசைப் பகிர்வாளியாக பெண் இருப்பினும் பெற்றெடுப்பது ஒரு ஆளின் விந்தணுவுக்குத்தான்.

பின் ஊட்டங்கள் மகிழ்வளித்தன. நாளை பின் ஓட்டம் பற்றிப் பேச வாய்ப்பளிக்கப்போகிற நேசமித்ரன் மற்றும் ஆதிரன் ஆகியோருக்கு நன்றி. ஏனெனில் நியாயத்துக்கு இன்றைய பதிவு முதலில் அதுபற்றியதாக இருக்குமென்பது எனது எண்ணமாக இருந்தது.மாறிப்போய் அனானிமசின் பால் இது விழைகிறதென்றால் இது ,நட்சத்திரங்களின் இருப்பளவு கோள்களையும் மதிக்கிறது என்றே அர்த்தம்.

Thursday, April 22, 2010

konjam oor sutruthal...

kodai vitumuraiyaith thotarnthu oor sutrikkondiruppathaal blog pakkam pokavillai. immaatha iruthiyil irunthu pathivukal varum - siva

Saturday, April 10, 2010

ஜாய்ஸ் ஆஃப் டாய்ஸ்.

இன்று உற்சாகமான மன நிலையில் கணினிக்கு உயிர் கொடுத்து எழுத உட்கார்கையில் குடி பற்றி வந்த மெயில் ஒன்று என்னை மிரட்டிவிட்டது.அப்புறம் ஆசுவாசித்து மெயில் பக்கம் போகையில் பெங்களூர் ஊஞ்சல் வீட்டு விஜயனின் பின் ஊட்டம் வந்திருந்தது. முதலில் மெயில் பக்கம் போகாமல் பிளாக் பக்கம் போயிருக்கலாம் என்று தோன்றியது.

தினம் எத்தனை புனர்ஜன்மம் எடுக்குமோ இந்த ஜென்மம்.பெங்களூரில் விஜயன் அவர்களை சந்தித்த காலத்தில் சிலபல புத்தகங்கள் குறுந்தகடுகளைப் பெற்றும் உரையாடல் மூலமும் அறிவை விஸ்தரித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.கடந்து வந்தபின் கழிவிரக்கம் கொள்வது சிந்தனைப் பண்புகளில் ஒன்று. விஜயன், ஸ்ரீதரின் புனர் ஜன்மம் பார்த்துவிட்டு அதன் வசனங்கள் பற்றி பேசலாமே என்கிறார். இனி பழைய படங்களுக்கு தியேட்டர் கிடைக்குமா எனத் தெரியவில்லை. குறுந்தகடு கிடைத்தால் பார்த்துவிட வேண்டியதுதான்.

இன்று உண்மையில் எழுதப்போந்தது... வாழும் வத்தலக்குண்டுக்கு அருகிலுள்ள கோட்டைப்பட்டி காமாட்சி புரத்தில் திருவிழா சென்றது பற்றி.மகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுக்கும் இன்பத்தை அனுபவித்தேன்.அது எத்தகைய இன்பம் என்பதை பொருளாதாரத்தில் குறைந்த பெற்றோர் அறிவர். ஆனாலும் இன்பத்திலும் குறைச்சல் இல்லைதான். சின்ன வயதில் வாங்காது விட்ட அத்தனை பொம்மைகளும் நினைவுக்கு வந்தன எனக்கு.ஒரு பொம்மையேனும் குழந்தை வயதில் நான் வாங்கியதில்லை.
அப்போதே சுதந்திரமாக என்னை வளரவிட்டுவிட்டார் அப்பா.

இரண்டு பனை உயரத்துக்கு விசிறப்பட்டு அந்த வானத்தில் இருந்து வட்டங்கறங்கி ஒளியுடன் இரவில் இறங்கும் பொருள் இப்போதும் என்னை குழந்தையாக்குகிறது.நாங்கள் அதை வாங்கினோம். குழந்தைகள் உண்மையில் அதை வாங்குவது அதை வானத்தில் பறக்கடிக்கிற விற்பனையாளனின் திறமைக்காகவே அன்றி அந்தப் பொருளுக்காக அல்ல என்பதை அதை வாங்கிய கணத்தில் தெரிந்துகொண்டேன். இரண்டு முறை அதைநான் மகளுக்குக் கற்றுத்தர எத்தனித்ததில் அந்த ஒளி அம்பின் எதோ ஒரு பகுதிபட்டு இடது கையின் பாம்புவிரலின் நகம் பிறைநெளிவில் தசையைத் தொடும் பகுதியில் அடிபட்டு ரத்தம் கசிகிறது. ’சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்’ என்கிற வைரமுத்துவின் மகத்தான இனிய ஆசை மனதில் ஒலிக்கிறது.

தேர்க்கடைவீதி சுற்றி முடிக்கையில் நான் கண்டுபிடித்தது வேறு. கோயிலை நோக்கிச் செல்லும் பாதையில் விரிக்கப்பட்ட கடைகளில் விலைகள் அதிகமாக இருக்கின்றன.

Wednesday, April 7, 2010

இந்த வசனம் என்கிற...

ஆவீன மழை பொழிய... பாடல் பற்றி வினவியதும், எனது 'விளக்கம்'- பகிர்வின் பின் ஊட்டத்தில் பாடல் அனுப்பி மகிழ்வித்த கதிரவன், நேச மித்ரன் ஆகியோரது விரைவு கண்டு விம்முகிறேன் நெஞ்சம் பூரித்து.

இதற்கிடையில் ( டி.வி செய்திகள் பார்க்கிறவர்கள் இதற்கிடையில் என்கிற வார்த்தையில் இருந்து தப்பமுடியாது.சென்னை புரசைவாக்கத்தில் பூட்டுடைத்துத் திருட்டு இதற்கிடையில் கரூரில் கழுத்தறுத்துத் தாலி திருட்டு என்று இரண்டு செய்திகளை தொலைக்காட்சியில் செய்தியாகக் காட்டிப் பேசுகையில் பரிதாபதினைப் பார்க்க சிரிப்பே மிஞ்சுகிறது- இதற்கிடையில் என நான் ஆரம்பித்தது வேறு) நண்பன் ஆதிரன் அவரது மனையில் தமிழ்த் திரை வசனங்கள் பற்றி ஞாபகத் தந்திகளை மீட்டலாமே என பேசு நல் உலகச் செம்மொழி மாந்தர்க்கு அறக்கட்டளை இட்டிருந்த படியினாலே கிண்டிக் கிழங்கெடுக்க வேண்டியதாகிறது பின் வருவன. அவரது கோரிக்கையினால் வருங்கால வசன கர்த்தாக்களுக்கு பயன்கள் ஏதும் விளையவும் கூடலாம்.

நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவும் தப்பில்லை (நாயகன்) என்று எழுத ஆரம்பித்துவிட்டேன்.நூறு தடவை சொல்வதற்குச் சமாமாக ஒரு தடவை சொல்வது வசனமாகாது.'வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடுவதில்'(பராசக்தி) இருந்து தமிழ்த் திராவிட வசனம் உருக்கொள்வதாகக் கருதலாம்.அதற்குமுன் பதினைந்து ஆண்டுகள் பாட்டன்கள் பாடினார்கள் என்றே கொள்ளாலாமே அன்றி பேச்செனக் கருத முடியாது.
அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரண தேவி- என்பது வீரவசனம்.பி.எஸ்.வீரப்பா என்கிற அட்டகாசச் சிரிப்புக்குச் சொந்தக்காரரால் பேசப்பட்டது. அது எழுதப்பட்டதால் உருவான வசனம் அல்ல. உச்சரிக்கப்பட்டதால் உருவான வசனம்.( அங்காடித் தெருவில் 'சிரிச்சேன்' என்பது வசனமாக மாறியதும் அஞ்சலியின் வாய்க்காரியத்தால்தான்)

'மன்னருக்கு இவற்றைப் பார்க்க விழியில்லை எனவே என்மீது பழியில்லை'(காஞ்சித் தலைவனில் சேடப்பட்டி ராஜேந்திரன்)என்பன போன்ற பல வசனங்களை தமிழ் மண் பார்த்தது.இதற்கு நிகர்த்த கொக்கரிப்புகளை கொழுப்புக் குறைவான வசனங்களைக் கொண்டு முகச்சுளிப்புகளால் காலி செய்தவர் பானுமதி ராமகிருஷ்ணா.

வசனத்துக்கு இலக்கணப் பிழை மூலம் உளவியல் அந்தஸ்து கொடுத்தது டி.எஸ். பாலையா.( அசோகர் உங்க மகரா ?- காதலிக்க நேரமில்லை).காதலிக்க நேரமில்லை என்றதும் ஸ்ரீதரின் நினைவு தவிர்க்க இயலாது.'உத்தம புத்திரன்' படத்துக்கு அவர்தான் வசனம்.கருணாநிதிக்கு இன்னும் கொஞ்சம் சினிமா அறிவு கூட இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் அந்தப் படத்தில் வசனங்கள்.

சக்சஸ்.. சக்சஸ், எல்லாம் நல்லபடியா நடக்கணும்... என்று முதல் வசனங்கள் ( பிள்ளையார் முன் கற்பூரம்,மாடப்புறாக்கள் பறந்து மணி ஓசை கேட்கும் கோபுரம்.போர்டிகோவில் வந்து நிற்கும் அம்பாசிடர்- இவை பின்னணி எனப்படுவன) இருந்துகொண்டிருந்த காலத்தில் படத்தின் முதல் வசனமாக ,'ஐயோ' என்பதை (கோயில் புறா) வைத்தவர் ஸ்ரீதர்.

பேதலிப்பின் தருணங்களை வசனங்களில் நாகேஷ் மிளிர்த்திக் காட்டினார்.
திருவிளையாடலில் சிரிக்கும் சிவாஜியிடம் 'ஏப்பமா?' என வினவுவார்.(தருமி -சிவன் உரையாடல்(ஏ.பி.நாகு), இரத்தக்கண்ணீர்(திருவாரூர் தங்கராசு&ராதா),விதி(ஆரூர் தாஸ்) இவற்றை வசனத்தின் எந்தக் கணக்கில் வைப்போம் என்கிற கேள்வி உண்டு)இதற்கிடையில் ஏ.பி.என்னின் வசனங்களைப் பற்றிச்சொல்லக்கூடிய தகுதி எனக்கில்லை. வேறொரு சிவகுமார் இருக்கிறார். நல்ல மனப்பாட சக்தியுள்ள ஓவியர்.இடது கைப் பழக்கமுள்ள இவர் இரண்டு நடிகர்களுக்கு அப்பா. ஒரு முன்னாள் நடிகைக்கு மாமனார்.அவர் பெயரும் சிவகுமார்.

சிவகுமார் நூறாவதாகத் தோன்றிய 'ரோசாப்பூ ரவிக்கைக் காரி'(வசனம் விஜய் கிருஷ்ணராஜாக இருக்கக் கூடும்) படத்தில் ஒரு வசனம்.அந்த வசனத்தை அடிக்கடி உச்சரிப்பது சிவ .... ..... ஆம் . சிவகுமார் அல்ல. சிவ சந்திரன்.' நீங்க தப்பா எடுத்துக்கலீனா...' என்ற வசனம். அந்த வசனம் படத்தில் பலபேரை சோலி பார்த்து ஜோலியை முடிக்கிறது. ஆதிரன் ஆசைப்பட்ட கட்டுரையின் புரோட்டான் இப்படிக் கிளம்பும் என எதிர்பார்க்கவில்லை.
1.தட்டுல இட்லியைப் போட்டுட்டு தலைல இடியைப் போடறியேம்மா...
2.சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்...
3.நம்மதான் கோபால கிருஷ்ணன்னு சொல்லிக்கணும்...இது எப்டி இருக்கு...
4.நீங்க ஃபைலைத் தேடறீங்க நான் லைஃபை..(இரு கோடுகள்)
5.கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு கர்வமா இருக்கலாம்.ஆனா கர்ப்பமா இருக்கக் கூடாது.( அ' வில் ஆரம்பிக்கும் எதோ ஒரு பாலசந்தரின் படம்.)

இனி இந்தக் கட்டுரையை இளம் நண்பர்களுக்குக் கை மாற்றுவதன் மூலம் 'இக்கட்டு'ரையை நிறைவு செய்கிறேன்.

ஏன்னா நான் பொலீசும் அல்ல பொறுக்கியும் அல்ல.

விளக்கம்

ஆவீன மழை பொழிய - என்பது சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இது பழைய (சினிமாப்பாடல் அல்ல) பாட்டு ஒன்றின் வரி. இடையில் வருகிறதா முதலில் வருகிறதா என்பதை மறந்துவிட்டேன். மழை நாளில் மாடு ஈனுவதற்கு நின்று கொண்டிருக்க உழவன் குடிசை இடிமின்னலால் இடிய வெளியேறி நடக்கும் அவனை பாம்போ தேளோ கடித்துவிட... இப்படிப் பல துயரங்களை சந்த நயத்தில் வெளிப்படுத்தும் பாடல் இது. முழு வடிவம் தெரிந்தவர் பின் ஊட்டப்படுத்துக.இரவு நேர கிரிக்கெட் மேட்ச்சில் விளையாடுவோருக்கு விழுவதுபோல நாலா புறமும் அப்படித் துயர நிழல்கள் - மனித உயரத்தை மீறி. அங்காடித் தெரு படம் பார்த்ததும் கண்கலக்கம் தாளாமல் அந்த வரி நினைவு வந்துவிட்டது.அவ்வளவே...

Tuesday, April 6, 2010

ஆவீன மழை பொழிய- அங்காடித்தெரு.

சமீபத்தில் அங்காடித்தெரு படம் பார்த்தேன்.ஜவுளிக் கடையில் துணி விரித்து விற்பதும் கடைத்தெருவில் பொம்மைகள் விற்பதும் விளிம்பு நிலை வாழ்வில் சேருமா? அல்லது அதனினும் கடை கெட்ட விளிம்பு நிலைகள் பாரதத்தில் இருக்கக் கூடுமோ தெரியவில்லை. படத்தைப் பார்க்கையில் பலரது வாழ்வு விளிம்பு நிலையில்தான் இருக்கிறது.

மிக ரசித்து லயித்தும் பார்த்த இந்தப் படத்தை வள்ளுவன் சொன்னபடி,'கடிதோச்சி மெல்ல எறிவது' எப்படி என்று தெரியாமல் கொஞ்சம் திகைத்தே போகிறேன்.வெந்தும் புழுங்கியும் நெரிசலில் தவித்தும் அழகாகப் படமாக்கிய ரிச்சர்டு விட்டுவந்த பின்னும் விழியில் நிற்கிறார்.

நாயக நாயகியான லிங்கு-கனி, சவுந்தரபாண்டி- செல்வராணி, வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி என காதல் கடிதம் எழுதும் குண்டுப்பையன் பாண்டி-சோபியா,மேனேஜர் கருங்காலி, கடை முதலாளி அண்ணாச்சி என மனதில் ஒரு மாதமாவது நிற்கும் பாத்திரங்கள். பெரு நகரில் கடை நடத்த எத்தனை பேரை சரிக்கட்ட வேண்டியிருக்கிறது என்பதை ஒரு பக்கக் கணக்குத்தாள் மூன்று வினாடி குளோஸ் அப்பில் வந்துபோவது படத்தின் அருமையான இடம்.

வெய்யிலை விட வரலாற்று அறிவில் வசந்தபாலன் சில மடங்குகளாவது அதிகமாகியுள்ளார். கதை நிகழும் வட்டாரங்கள்,பெயர்கள், நடவடிக்கைகள், அசைவுகள் எனப் பலவகைகளிலும் வசந்தபாலனின் பதிவுகள் மகிழ்வையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.

அண்ணன் வேலை செய்யும் கடையின் பெயர் எழுதிய பையை தங்கை பேருந்து நிலையத்தில் ஓடிஓடிஓடி வந்து தொட்டுப் பார்ப்பதும் - அதனினும் பார்க்க அந்தப் பை அந்த சிறுமிக்குக் கிடைத்துவிடுவதும்....

அன்று நாசரேத்தில் சம்பளநாளாக இருந்தாலும் பையைச் சிறுமிக்கு பரிசளித்துவிட்டுப் போகிற அந்தத் தம்பதிக்கு அது ஒரு ஏழாம் நாளாகவும் ஓய்வு நாளாகவும் இருக்கக் கூடும்.இதை எழுதுகையில் கண்கள் பனித்து எழுதுதிரை மீது மானசீகமாக நெகிழ்வின் மழையின் கண்ணாடிப்பொட்டுக்கள்.அந்த உணர்வு வண்ணதாசனின் கதைகளில் எனக்குக் கிடைக்கிறதாக்கும்.இப்படிச் சில கவித்துவங்களும் நட்சத்திரத்தையும் கண்ணாடி மற்றும் காங்கிரீட் சுவர்களையும் ஊதாத் திரைகளையும் சாட்சிவைத்த சோகங்கள் அல்லது கண்ணாடி உடைந்து கோலத்தின் மீது காதல் சிதறும் வேகங்கள்- நம் துர்ப்பேற்றின் காலத்தின் இரக்கமற்ற பதிவுகள்.பற்பல...

விதந்து சொல்ல ஏராளம் இடம் வைத்திருக்கிற படத்தில் (என் அன்பிற்குரிய) ஜெய மோகனின் வசனங்கள் அவ்வளவு பொருந்தி இயைந்து உயிரூட்டுகிறது.இயல்பின் வழித்தடத்தில் மழைக்காலப் பெருக்குபோல ஒழுகுகிறது அது.(கனி:தங்கச்சிதான் உன்னய யாரு யாருன்னு கேட்டுக்கிட்டே இருந்தா. லிங்கு: நீ என்ன சொன்னே? கனி: சிரிச்சேன்)

வசனங்கள் வாய்களால் வளம் பெறுகின்றன. நாயகி கனியாக நடித்த அஞ்சலிப்பெண்ணை போற்றாவிடில் புதைகுழி எனக்கு நட்டுக்குத்தலாக அமைந்துவிடும் பாவத்துக்கு ஆளாவேன்.மாடிப்படிகளில் அவர் ஓடும்போது 'இந்தப் பெண் இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்றிருக்கவேண்டியவர்' என நினைத்தேன்.ஒரு பாடல் தமிழ்க் காற்றில் இந்த வருடத்தை ஆர்ஜிதம் செய்துகொண்டுவிட்டது.நா.முத்துக்குமாருக்கு இது சகஜம்தான்.படத்தின் பின்னணி இசை படத்தில் காணப்படும் கொடுமைகளை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.

நான் ஆணித்தரமாக சொல்ல நினைத்த விஷயங்கள்.ஏலச்சீட்டு போடுகிற ,மேலாளன் காயைப் பிடித்தால் கம்மென்றிருக்கிற, சமயம் கிடைத்தால் படியில் உட்கார்ந்து ஓப்பி அடிக்கிற கனி தனியாகக் கிடைத்த ஒரு கடை இரவில் லிங்குவைப் புணர்ந்தாளா இல்லியா?
( நான் அநியாயத்துக்கு மங்குனி ...மோகமுள்ளில் பாபு யமுனாவைப் போட்டானா இல்லையா என்பதிலேயே எனக்கு ஐயம்தான்)

இந்தக் காமக் கருமாந்திரத்தைப் பற்றி நமக்கு என்ன பேச்சு.டைட்டில் காட்சியில் லாரி டயரில் காட்டப்படும் ரத்தம்.நூறு பேர் மேல் ஏறினாலும் டயரில் அந்தக்கோலத்தில் ரத்தம் படியாது. ரத்தம் மைதாக் கரைசலால் உண்டானதல்ல.(இதை நிரூபிக்கும் முயற்சி அபத்தம் என்று வையுங்கள்).

படத்தின் கண்ணீர் ரத்தத்தை விட அடர்த்தியாக இருக்கிறது.சூழல்தான் வெஞ்சூழல் என்று வையுங்கள். நம் தமிழ் விதிக்கொள்கையின் காத்திரம் நம்பிக்கையைவிட அவநம்பிக்கையை அதிகம் விதைக்கிறது. (எல்லோருக்கும் கழுவக் கக்கூஸ்கள் கைவசமில்லை.)

பாத்திரங்களை ரட்சிக்கிற வாய்ப்பு கலைக்கற்பனைக்கு இருக்கிறது.( தமிழின் வெற்றிப் பட சமீப இயக்குனர்கள் பலபேர் போனஜன்மத்தில் சுடுகாட்டு வழிக்கு சங்கூதிகளாக இருந்திருக்கவேண்டும்).

அடிபட்டு ரணப்பட்டு வெளிவந்தவர்கள் வெய்யில் காட்டில் சுடுகாத்தைக் குடித்துப் படுத்திருப்பதாகக் கூட கதையை முடித்திருக்கலாம்.ஆனால் வசந்த பாலன்(பிலவ்ட்) அவர்களின் கற்பனையில் குறுக்கிட நான் யார்.

நாங்க எல்லாம் வேற மாதிரி ஆளுக பாஸூ! பொம்பளைப் புள்ளைக ஓடிப்போனா சிறுக்கியுள்ளைகளக் கால முறிச்சுப்போடுவமல்ல?