Wednesday, April 7, 2010

இந்த வசனம் என்கிற...

ஆவீன மழை பொழிய... பாடல் பற்றி வினவியதும், எனது 'விளக்கம்'- பகிர்வின் பின் ஊட்டத்தில் பாடல் அனுப்பி மகிழ்வித்த கதிரவன், நேச மித்ரன் ஆகியோரது விரைவு கண்டு விம்முகிறேன் நெஞ்சம் பூரித்து.

இதற்கிடையில் ( டி.வி செய்திகள் பார்க்கிறவர்கள் இதற்கிடையில் என்கிற வார்த்தையில் இருந்து தப்பமுடியாது.சென்னை புரசைவாக்கத்தில் பூட்டுடைத்துத் திருட்டு இதற்கிடையில் கரூரில் கழுத்தறுத்துத் தாலி திருட்டு என்று இரண்டு செய்திகளை தொலைக்காட்சியில் செய்தியாகக் காட்டிப் பேசுகையில் பரிதாபதினைப் பார்க்க சிரிப்பே மிஞ்சுகிறது- இதற்கிடையில் என நான் ஆரம்பித்தது வேறு) நண்பன் ஆதிரன் அவரது மனையில் தமிழ்த் திரை வசனங்கள் பற்றி ஞாபகத் தந்திகளை மீட்டலாமே என பேசு நல் உலகச் செம்மொழி மாந்தர்க்கு அறக்கட்டளை இட்டிருந்த படியினாலே கிண்டிக் கிழங்கெடுக்க வேண்டியதாகிறது பின் வருவன. அவரது கோரிக்கையினால் வருங்கால வசன கர்த்தாக்களுக்கு பயன்கள் ஏதும் விளையவும் கூடலாம்.

நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவும் தப்பில்லை (நாயகன்) என்று எழுத ஆரம்பித்துவிட்டேன்.நூறு தடவை சொல்வதற்குச் சமாமாக ஒரு தடவை சொல்வது வசனமாகாது.'வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடுவதில்'(பராசக்தி) இருந்து தமிழ்த் திராவிட வசனம் உருக்கொள்வதாகக் கருதலாம்.அதற்குமுன் பதினைந்து ஆண்டுகள் பாட்டன்கள் பாடினார்கள் என்றே கொள்ளாலாமே அன்றி பேச்செனக் கருத முடியாது.
அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரண தேவி- என்பது வீரவசனம்.பி.எஸ்.வீரப்பா என்கிற அட்டகாசச் சிரிப்புக்குச் சொந்தக்காரரால் பேசப்பட்டது. அது எழுதப்பட்டதால் உருவான வசனம் அல்ல. உச்சரிக்கப்பட்டதால் உருவான வசனம்.( அங்காடித் தெருவில் 'சிரிச்சேன்' என்பது வசனமாக மாறியதும் அஞ்சலியின் வாய்க்காரியத்தால்தான்)

'மன்னருக்கு இவற்றைப் பார்க்க விழியில்லை எனவே என்மீது பழியில்லை'(காஞ்சித் தலைவனில் சேடப்பட்டி ராஜேந்திரன்)என்பன போன்ற பல வசனங்களை தமிழ் மண் பார்த்தது.இதற்கு நிகர்த்த கொக்கரிப்புகளை கொழுப்புக் குறைவான வசனங்களைக் கொண்டு முகச்சுளிப்புகளால் காலி செய்தவர் பானுமதி ராமகிருஷ்ணா.

வசனத்துக்கு இலக்கணப் பிழை மூலம் உளவியல் அந்தஸ்து கொடுத்தது டி.எஸ். பாலையா.( அசோகர் உங்க மகரா ?- காதலிக்க நேரமில்லை).காதலிக்க நேரமில்லை என்றதும் ஸ்ரீதரின் நினைவு தவிர்க்க இயலாது.'உத்தம புத்திரன்' படத்துக்கு அவர்தான் வசனம்.கருணாநிதிக்கு இன்னும் கொஞ்சம் சினிமா அறிவு கூட இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் அந்தப் படத்தில் வசனங்கள்.

சக்சஸ்.. சக்சஸ், எல்லாம் நல்லபடியா நடக்கணும்... என்று முதல் வசனங்கள் ( பிள்ளையார் முன் கற்பூரம்,மாடப்புறாக்கள் பறந்து மணி ஓசை கேட்கும் கோபுரம்.போர்டிகோவில் வந்து நிற்கும் அம்பாசிடர்- இவை பின்னணி எனப்படுவன) இருந்துகொண்டிருந்த காலத்தில் படத்தின் முதல் வசனமாக ,'ஐயோ' என்பதை (கோயில் புறா) வைத்தவர் ஸ்ரீதர்.

பேதலிப்பின் தருணங்களை வசனங்களில் நாகேஷ் மிளிர்த்திக் காட்டினார்.
திருவிளையாடலில் சிரிக்கும் சிவாஜியிடம் 'ஏப்பமா?' என வினவுவார்.(தருமி -சிவன் உரையாடல்(ஏ.பி.நாகு), இரத்தக்கண்ணீர்(திருவாரூர் தங்கராசு&ராதா),விதி(ஆரூர் தாஸ்) இவற்றை வசனத்தின் எந்தக் கணக்கில் வைப்போம் என்கிற கேள்வி உண்டு)இதற்கிடையில் ஏ.பி.என்னின் வசனங்களைப் பற்றிச்சொல்லக்கூடிய தகுதி எனக்கில்லை. வேறொரு சிவகுமார் இருக்கிறார். நல்ல மனப்பாட சக்தியுள்ள ஓவியர்.இடது கைப் பழக்கமுள்ள இவர் இரண்டு நடிகர்களுக்கு அப்பா. ஒரு முன்னாள் நடிகைக்கு மாமனார்.அவர் பெயரும் சிவகுமார்.

சிவகுமார் நூறாவதாகத் தோன்றிய 'ரோசாப்பூ ரவிக்கைக் காரி'(வசனம் விஜய் கிருஷ்ணராஜாக இருக்கக் கூடும்) படத்தில் ஒரு வசனம்.அந்த வசனத்தை அடிக்கடி உச்சரிப்பது சிவ .... ..... ஆம் . சிவகுமார் அல்ல. சிவ சந்திரன்.' நீங்க தப்பா எடுத்துக்கலீனா...' என்ற வசனம். அந்த வசனம் படத்தில் பலபேரை சோலி பார்த்து ஜோலியை முடிக்கிறது. ஆதிரன் ஆசைப்பட்ட கட்டுரையின் புரோட்டான் இப்படிக் கிளம்பும் என எதிர்பார்க்கவில்லை.
1.தட்டுல இட்லியைப் போட்டுட்டு தலைல இடியைப் போடறியேம்மா...
2.சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்...
3.நம்மதான் கோபால கிருஷ்ணன்னு சொல்லிக்கணும்...இது எப்டி இருக்கு...
4.நீங்க ஃபைலைத் தேடறீங்க நான் லைஃபை..(இரு கோடுகள்)
5.கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு கர்வமா இருக்கலாம்.ஆனா கர்ப்பமா இருக்கக் கூடாது.( அ' வில் ஆரம்பிக்கும் எதோ ஒரு பாலசந்தரின் படம்.)

இனி இந்தக் கட்டுரையை இளம் நண்பர்களுக்குக் கை மாற்றுவதன் மூலம் 'இக்கட்டு'ரையை நிறைவு செய்கிறேன்.

ஏன்னா நான் பொலீசும் அல்ல பொறுக்கியும் அல்ல.

8 comments:

Raju said...

என்னதான் எல்லாத்துலயும் கட்டுடைப்பு செஞ்சாலும், நம்ம எழுத்தாளர்ஸுக்கு புரைசைவாக்கம் பூட்டு, கரூர் கழுத்தறுப்பென ’பூ’னாவுக்கு பூனா, கானாவுக்க கானா போட்டு எழுதுறது மட்டும் போகாது போலயே...!

vijayan said...

ஸ்ரீதரின் புனர் ஜென்மம் வசனம் கேட்டுப்பாருங்க சிவா.அப்புறம் அதைப்பற்றி கொஞ்சம் பேசுவோம்.பெங்களூர் விஜயன்(ஊஞ்சல் வீடு)

adhiran said...

pinnittappaa...!

Nathanjagk said...

இப்பதிவுலகில் அதிகம் யூஸ் பண்ணுவது வடிவேலு வசனங்கள்தாம். மதுரைப் புயலாரின் விசனங்களும் விட்டு​வைக்கப் படவில்லை என்பதற்கு பின்னூட்ட அவ்வ்வ்வ்வ்வ்வ்களே சாட்சி.

ஆணியே புடுங்க வேண்டாம் - என்பதன் உச்சரிப்பு அழுத்தம் ஆணித்தரமானது. அல்லவா?

நாட்டாமை: அந்தப்​பொண்ணு ​கையப்புடிச்சு இழுத்தியா?
வடிவேலு: என்ன கையப்புடிச்சு இழுத்தியா?

இதுக்கு முடிவேயில்லீங்ணா :))

நேசமித்ரன் said...

வடை போச்சே

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அண்ணா...நம்ம " தகடு, தகடு " சத்தியராஜ விட்டுடீங்களே

par said...

//படத்தின் முதல் வசனமாக ,'ஐயோ' என்பதை (கோயில் புறா) வைத்தவர் ஸ்ரீதர்.//

Koyil Pura is not by Sridhar. Did he write dialogues for Maadapura?

By the way, you are writing as good as when you were started.
As the say in cricket,
Form is temporary;
Class is permanent.

Anonymous said...

வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.