Sunday, April 25, 2010

அனவரதமும் எழில்வரம்...(2)

அந்த முறை நான் பெங்களூர் போவதற்கான காரணம் எழுத்தாளர் எழில்வரதன்.ஒசூரில் இருக்கிற ஒன்றாந்தர நகைச்சுவை எழுத்தாளர்.அவரது ’ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு’ (திரியுமா உலவுமா என்பது இப்போது குழப்பமாயிருக்கிறது\திரிதலும் உலவுதலும் ஒன்றுதானோ என்பதனை நிகர்த்தது இது) சிறுகதைத் தொகுப்பின் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை மாலையாக இருந்தது.வெள்ளிக்கிழமை இரவு எனது ரயிலேற்றம்.

ஒசூர் போகிறவன் ஏன் பெங்களூருக்கு ரயிலேற வேண்டும் என்று கேட்டீர்களேயானால் இரண்டு பதில்கள் உண்டு. ஒசூரை அடுத்து பெங்களூர் இருக்கிறது. பெங்களூரில் என் மனைவியும் மகளும் இருந்தனர்.இந்தப் பதிவுக்கு தலைப்பு எழில் வரதனின் பெயரிலிருந்து பெறப்பட்டது.அவரது அடுத்தொரு புத்தகமான ‘ஆலமர இடையழகு’(தலைவர் தலைப்புகளில் என்னமாய் எழில் கொஞ்சுகிறது பாருங்கள்) நூலுக்கு என்னைப் பேச அழைத்து பேனரெல்லாம் கட்டியிருந்ததற்கு முதல்நாள் இரவு ‘அரவக்குறிச்சி’ காவல் நிலையத்தில் நான் விசாரணைக்கு உட்பட்டிருந்தேன்.அவரது எந்த நூலுக்கும் நான் சிறப்பாக பேசவில்லை. இனி அப்படிப் பேச நேருமாயின் ஒசூரிலேயே கூட்டம் நடக்கும் இடத்துக்குப் பக்கத்தில் அறை எடுத்து நமக்குநாமே திட்டத்தின் கீழ் சிறைப்பட்டு படித்து முடித்துப் பேசவேண்டியதுதான்.

ரயில் சங்கிலியை இழுத்து முடித்ததும் ரயில் நின்றது. இப்போது என்னைச் சுற்றி இருந்த நெரிசல் காலியாகி ஒரு வரைபடப் புலம் உருவாகிவிட்டது.நிறுத்தியது யார் என்று ஒவ்வொரு பெட்டியாக விசாரித்துக்கொண்டு நிர்வாகிகள் வருவதான அரவம் தெரிந்தது.
என்னை நானே காட்டிக்கொடுக்கத் தயாராக வாசலுக்கு வந்து நின்றேன்.
‘கேட்டா ஒன்னும் பதில் பேசாத அப்படியே நின்னுக்க’ என்று ஒருவர் அறிவுறுத்தினார்.அவரது பாக்கெட்டுக்கு மேலாக சிவப்பு அட்டை துருத்து அதில் வெள்ளை எழுத்துக்கள் இருந்தன.
தென்னகத் தடமுருளித் தொடர்வண்டித் தொழிலாளர் தொகுப்பமைப்பு (தமிழ் தகரத்தில் என்னமாய் பிச்சு வாங்குகிறது பாருங்கள். செம்மொழியா கொக்கா கொக்கா!)- என்பதன் ஆங்கில முதலெழுத்துகள் அவை. நான் அவரது சொல் தட்டினேன். தரையில் ஆட்கள் வந்து நின்றபோது இறங்கி ‘நாந்தாங்க வண்டியை நிறுத்தினது’ என்றேன்.

அடுத்த சில நிமிடங்களில் ரயில் ஓடத்தொடங்கியபோது நான் ஒற்றை சீட்டில் அமர்ந்து சார்ஜ் ஷீட் எழுதுகிற காவலரின் முன்னால் நின்றுகொண்டிருந்தேன். லாலுவை சந்திப்பதற்கு முன்னால் இப்படி கன்னமும் ஒடுங்கி தலையும் சொட்டையான ‘நூறு’ வித்யாசங்கள் கொண்ட ஒருவரை சந்திப்பேன் என்பது என் கனவு வேலைத் திட்டத்தில் இருக்கவில்லை.அவர் அதை எழுதுவதற்கு இன்னம் நாலு ரயில்வேக்காரர்கள் கூட இருந்து தகவலும் வார்த்தைகளும் எடுத்துத் தந்து உதவினார்கள்.மகா பாரதத்துக்கு கொம்பெடுத்துக்கொடுத்த விநாயகருக்குப் பதிலாக நான் இருந்தேன்.’கரெக்டா எத்தனை மணிக்கு வண்டி நின்னுச்சு?’ என்பது போன்ற டெக்னிக்கலான கேள்விகளுக்கு நானே பதிலளித்தேன்.

’பதினொன்னு நாப்பத்தி மூணுங்க சார்’- என்று வானொலியில் நேரம் சொல்வது மாதிரி சொன்னதில் அவர் அசந்துபோய்விட்டார்.எழுதும் பணியை எனக்கே கொடுத்து விடுவாரோ என்று கூட ஒருகணம் விரும்பினேன்.ரைட்டர் என்பதை மீண்டும் மீண்டும் நிறுவலாமே.
ஆனால் அவரே எழுதிவிட்டார். அவரது கையெழுத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் எண்கள் மட்டும் துல்லியமாக எழுதப்பட்டிருந்தன. எழுத்துக்கள் நீளநீளமாக ஜாங்கிரி வளையங்களை பிய்த்து அடுக்கியது போல இருந்தன.அவர் ஒரு திறமையான ரைட்டர் என்கிற முடிவுக்கு வந்தேன். அவரது அறிக்கையை என்னவாகவாகவும் வாசிக்கும் வாய்ப்பை எழுத்துவடிவில் வைத்திருந்தார்.

காந்தியைச் சுட்டது,யேசுவைக் குரிசில் மாட்டியது,நபியைக் கல் எறிந்தது உட்பட எந்தக்குற்றத்தைச் சாட்டவும் அந்தக் கையெழுத்து நெளிந்துகொடுக்கும் என நினைத்தேன்.ஹிப்ரூ அரபி என அதை மொழி மாற்றி வாசிக்கும் வாய்ப்பும் இருந்தது.

வண்டி காட்பாடி நிறுத்தத்தில் நின்றது.ரயில்வே ஸ்டேஷனுக்குள் இருக்கும் பொலீஸ் ஸ்டேஷனுக்கு என்னைக் கூட்டிப்போனார்கள்.அடுக்கு நிலை விசாரணைகள் முடிந்தன.நான் ஏதோ பலமுறை கஞ்சா வழக்கில் உள்ளே போனவன்மாதிரியான நைந்த தோரணையில் பெஞ்சின் கீழே உட்காரப்போக ‘மேலே உட்காரு தம்பி’ என்று ஒரு காவலர் பணித்தார்.

கைதியை வைத்திருக்க இது உகந்த இடமல்ல என்று என்னை அரக்கோணம் அனுப்பினார்கள்.அரக்கோணத்துக்கு துப்பாக்கிப் பாதுகாவலுடன் நான். ஒரு பெட்டியில் எட்டுப்பேர் அமரத்தக்க அறைப்பிரிப்பில் நானும் அந்தக் காவலரும் மட்டுமிருந்தோம்.
இப்படி ஜாலியான பயணம் என்றால் கழுதை சென்னையில் வண்டி கிளம்புமுன்னரே ஒரு தடவை சங்கிலியை இழுத்திருக்கலாமே என்று பட்டது.

காட்பாடியில் இருந்து அரக்கோணம் வரும்போதுதான் தெரிந்தது, அவர் காவலரல்ல விஜய்காந்த் என்று.அப்படிஅப்படி மணிமணியான வசனங்கள். நான் குடித்துவிட்டு ரயில் ஏறியதற்காக முதன்முறையாக வருந்தினேன்.ஆனால், அவர்தான் யோசனை சொன்னார்.
‘இத பாருங்க... கூட்டம் அதிகம், பொட்டி பத்தாதுன்னெல்லாம் வசனம் பேசாதீங்க. தலை பயங்கரமா சுத்திச்சு... மயக்கம் வர்றமாதிரி இருந்துச்சு...சங்கிலியை இழுத்துட்டேன்னு ஜட்ஜ் கிட்ட சொல்லுங்க”

அப்ப... நான் கோர்ட்டுக்குப் போகப்போறேன் என்பது அப்போதுதான் உறைத்தது.பின்னிரவு
ஊடாக ரயில் அரக்கோணத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.குறிப்பிடத்தக்க குற்றவாளியைப் போல ஜாமீன் கிடைக்காத வெள்ளிக்கிழமை இரவு அரெஸ்ட் ஆகியிருக்கிறேன். உலகளாவிய தொன்மத்தில் இந்த வெள்ளிப் பின்னிரவு முக்கியமான நேரம். சிலுவை யேசு
மயக்கத்தின் முதலாம் பாகத்துக்குப் போகும் நேரம்.ஆலகால சிவன் மயக்கத்தின் மையத்தில் இருக்கும் நேரம்.

அரக்கோணம் காவலர்கள் என்னை விநோதியைப் போலப்பார்த்தார்கள். எனக்கென்று காட்டப்பட்ட அறையில் வால்கயிறு இருந்தது. எருமைகள் ஒருவேளை அதில் தூக்குமாட்டிக்கொள்ளலாம். எனது கழுத்துக்கு அது ஒவ்வாததாக இருப்பினும் லாக்-அப் தற்கொலைகள் நிகழ்வதற்கான சாத்தியங்களை கற்பனை செய்ய முடிந்தது.

காலையில் கழிப்பறைக்குப் போய்வந்த பின் பக்கத்தேயுள்ள பூவிரிந்த அழகு மைதானத்தில் உலவப்போகிறேன் என ஆசையை வெளியிட்டபோது அதை மறுத்துவிட்டார்கள். தொலை பேசி ஒன்று பேசிக்கொள்ள ஒரே ஒரு அழைப்புக்கு அனுமதி கிடைத்தது.

யாருக்கு பேசினேன் என்பது இங்கே மந்தணம். அந்த இலக்கிய அண்ணன் தற்சமயம் என்னை விலக்கிய அண்ணனுக்கு (பேதமை ஒன்றோ பெருங்கிழமை...) போன் செய்தார்.கடைசியில் திங்கட்கிழமை மத்தியானத்துக்கு மேல் இதே இடத்துக்கு வந்துவிடவேணுமாயும் கோர்ட் சென்று அபராதம் கட்ட வேண்டுமாயும் கூறி விடுவிக்கப்பட்டேன்.

அப்படித் தற்காலிக விடைபெறும் போது இன்ஸ்பெக்டர் சொன்னார்.
‘எந்த மாதிரி இடத்துல நீங்க சங்கிலியப் புடிச்சு இழுத்திருக்கீங்க தெரியுமா? சவுத்லயே அதிகமா ஸ்நாட்ச்சிங் பண்ணிட்டு திருடங்க இறங்கி ஓடற அதே இடத்துல நீங்களும் நிறுத்தீருக்கீங்க...’

நான் திகைத்தேன். நிறுத்துகிற இடங்களை நாம் தீர்மானிப்பதிலும் பார்க்க வேறேதோ செயல்படும் போலிருக்கிறது.

5 comments:

Udukkai said...

மிக அருமையான அனுபவம்....எப்படிங்க திட்டம் தீட்டி சரியா அந்த எடத்துல வண்டிய நிறுத்தினீங்க? நல்ல காமெடி இப்போ நினைக்க...ஆனா அப்போ உங்களுக்கு இருந்திருக்கும் கிளியை நினச்சா பாவமா இருக்கு....

Udukkai said...

//ஆனா அப்போ உங்களுக்கு இருந்திருக்கும் கிளியை நினச்சா பாவமா இருக்கு...//

மன்னிக்கவும்...கிளி அல்ல கிலி....

சுரேஷ் கண்ணன் said...

//காந்தியைச் சுட்டது,யேசுவைக் குரிசில் மாட்டியது,நபியைக் கல் எறிந்தது உட்பட எந்தக்குற்றத்தைச் சாட்டவும் அந்தக் கையெழுத்து நெளிந்துகொடுக்கும்//

அருமையான பகடி.

ஜெகநாதன் said...

சில இடங்களில் Stephen Leacock படிச்ச மாதிரி இருக்கு. அருமை:))

Sai Ram said...

என்னது ரயில் சங்கிலியை இழுத்தீங்களா? டாஸ்மாக் கடை வாசலில் பின்னிரவு மூடப்பட்ட ஷட்டருடன் கொஞ்சி குலாவி குவார்ட்டர் வாங்கிய அனுபவத்தை விட பெரிய ரேஞ்சுக்கு வளர்ந்துட்டு இருக்கீங்க! உங்களை மாதிரி ஓர் ஆள்... வேண்டாம் நீங்க ஒருத்தரே போதும்...