Monday, April 26, 2010

அனவரதமும் எழில்வரம்...(3)

அரக்கோணம் உள்க்காவல் நிலையத்திலிருந்து வெளி வந்தபோது நேரம் மத்தியானத்தைத் தாண்டியிருந்தது.அந்த வழித்தடத்தில் ஒசூருக்கே ரயில் இருந்ததோ என்னவோ அது புத்தியில் படவில்லை.வெளிவந்து பேருந்து நிலையம் போய் அங்கிருந்து ஊர் ஊராகச் சுற்றி-திருப்பத்தூர் எல்லாம் போயிருப்பேன் என நினைக்கிறேன் - மாலை இரவிற் கலக்கும் மங்கல் நேரத்தில் ஒசூரில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப்போனேன்.

மகிழ்ச்சி கரமான சம்பவமாக இருந்தது. எழில்வரதன் அவரது எந்த புத்தக விழாவாக இருந்தாலும் குடும்ப சமேதராக காட்சியளிப்பார்.பொதுவாக இது தமிழ்ச் சூழலில் இல்லாத பண்பு.விழா முடிந்து பெங்களூர் வீட்டுக்குப் போய் சங்கிலி இழுத்த கதையை திறமையாக மறைத்தேன். குடும்பத்தில் நான் நீண்ட காலம் மறைத்த ஒரே சம்பவம் இதுதான்.எனது ரகசியங்களின் ஆயுட்காலம் வானவில் நேரத்தை விடவும் ஆயுட்குறைவு பட்டவை.

திங்கட்கிழமை சொன்னபடிக்கே அரக்கோணம் வந்தேன். மாலை நாலு மணிக்கு மேல் நீதி மன்றத்துக்கு கூட்டிப்போனார்கள்.என்னைப் போலவே துச்ச வழக்குக்காரர்கள் பத்துக்கும் மேல் இருந்தார்கள். பராசக்தி கணேசன் மாதிரி தனிக்கூண்டு ஏறி முழங்க அவசியமில்லாமல் இருந்தது. தரிசனத்துக்குச் சவுக்குக் கட்டிய மாதிரி வரிசையாக சூத்தைத் தேய்த்துக்கொண்டே போய் நீதிபதியின் பார்வைக்கு நிற்கவேண்டியதுதான்.மளமளவென விசாரித்து சட்சட்டென தீர்ப்பு சொன்னார் நீதிபதி.அவர் எழுத்தாளர் ஜெயமோகனைப் போலவே எனக்கு அலாதியான உணர்வு நிலைகளை உண்டுபண்ணிவிட்டது.

எனது முறை வந்த போது குற்றச்சாட்டு உண்மையா என்றார். விஜயகாந்த் சொல்லியிருந்தபடி ஆம் என ஒப்புக்கொண்டேன்.
’அபராதம் போட்டுடலாமா?’
‘பாத்து சொல்லுங்கய்யா ஏழை எழுத்தாளன்’ - எழுத்து பற்றி அவ இடங்களில் பிரஸ்தாபிக்க நேரும் போதெல்லாம் எனக்கு டணால் தங்கவேலுவின் நினைவு வரும்(கல்யாணப்பரிசு - எழுத்தாளர் பைரவன்)
‘ஒரு ஆயிரம் ரூபா?’
‘ஐயா! மாசக் கடைசி. பாத்து சொல்லுங்கய்யா!’
நீதிபதி புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்தார்.
‘இன்னும் தேதி பத்து கூட ஆகலியேய்யா?’
நான் குரலில் இயன்ற அளவு பவ்யத்தைத் தரித்துக்கொண்டேன்.
‘இப்பவெல்லாம் ஒன்னாந்தேதியே மாசக் கடைசி ஆயிருதுங்கய்யா...’
அவர் புன்னகைத்துவிட்டு அபராதித்தார்.’ஐநூறு ரூபாய். இனிமேல் இந்த மாதிரி சங்கிலி பிடிச்சு இழுக்கற வேலையெல்லாம் வெச்சுக்கக்கூடாது . புரியுதா?’
‘சரிங்க..’
காசு கட்டிக் காகிதம் வாங்கிக்கொண்டு மறுபடி காவல் நிலையத்தில் கைப்பற்றி வைத்திருந்த எனது டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வாங்கிக்கொண்டு சென்னைக்கு ரயிலேறினேன்.

பிற்பாடு அன் ரிசர்வ்டு ஏறுகிற நிலை வந்தால் கைலியை விரித்து உட்கார்ந்துகொள்வது என்ற காத்திரமான முடிவை எடுத்தேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், ரயில்கள் கடந்து போனபின் தண்டவாளங்கள் வெப்பமாக இருக்கின்றன.

9 comments:

Nathanjagk said...

மனிதனை நேசிக்க முடிகிறது; கும்பலை முடியலியே சாமீ!
நெரிசலில் வலுவிழக்காத, தள்ளுமுள்ளுகளில் தடுமாறாத, மூச்சுஅனலில் இளகாத அன்புத்தத்துவம் ஏதாவது இருந்தால் யாராவது பகிருங்களேன்.

ஒன்றேகால் லட்ச கிமீ நீளத்தில் தண்டவாளங்கள்​பாரதத்தில் அலைந்து திரிந்து கிடக்கின்றன. பற்றவும் இழுக்கவும் வசதியாக அன்ரிஸர்வ்டு ​பேதமற்று அனைத்துப் பெட்டிகளிலும் சங்கிலிகள் உளன. தீர்க்கமுடியாத தேற்றமாக ரயிலும் ஓடிக்​கொண்டேயிருக்கிறது தண்டவாள சமக்குறியேறி. தூரங்கள் கடந்து​பெறும் ஆசுவாசத்திற்காக நாமும்​தொற்றிக்​கொண்டேயிருக்கிறோம்.

24​கோச்சுகள், 24 x 74 பயணிகள் மற்றும் அரசு எந்திரங்கள், ரயில் எந்திரம் இவற்றை நிறுத்திக் கேள்விக் ​கேட்ட யாவருக்கும் உரிமையுண்டுதான். பட், அபராதமும் உண்டு என்றளவில் குறித்த அரசின் / சட்டத்தின் செயல்பாடு சமாதானம் ​கொள்ள வைக்கிறது.

Baski.. said...

//ரயில்கள் கடந்து போனபின் தண்டவாளங்கள் வெப்பமாக இருக்கின்றன//

enna solrathunne theriyala....

Anonymous said...

என்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கும் புரியும்ப‌டியான‌ இல‌கு த‌மிழில் எழுத‌ இய‌லுமா?
புரிந்த‌ பொழுது வ‌யிறு வ‌லிக்க‌ சிரிப்பை வ‌ர‌வ‌ழைக்கும் உங்க‌ள் எழுத்துக்கு மிக்க‌ ந‌ன்றி. தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்.

-கிருஷ்ண‌மூர்த்தி

adhiran said...

nalla flow siva. ezhuththarin kaiyezhuththu pathina uvamai piramaatham.

athusai.. sangili izhuka mananilai koduththa porveeranai en kaattik kodukkala!

நேசமித்ரன் said...

//தீர்க்கமுடியாத தேற்றமாக ரயிலும் ஓடிக்​கொண்டேயிருக்கிறது தண்டவாள சமக்குறியேறி//

அண்ணனுக்கு தப்பாம இருக்காங்கையா தம்பிங்க


:)

Venkatramanan said...

சிவா!
எழில்வரதனைப் படித்தபின் பிடித்துப்போகாமல் இருக்க முடியுமா?
ஏதோ நம்மாலானது! இணையத்தில் வெளியான அவரது சிறுகதைகளைத் தொகுத்துள்ளேன். மற்றும் ஒரு இடுகையிட்டிருக்கிறேன். நேசமித்ரன் சொன்னமாதிரி ஜெகனும் உங்களுக்குக் குறையாமத்தான் இருக்காரு! பரிதாபப்படக்கூடியவர்கள் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்! (அலுவலகத் தோழரிடம் 'உப்புக்கடலைக் குடிக்கும் பூனை' முன்னுரையைக் காண்பித்தபோது இரண்டு வாக்கியம் படித்துவிட்டு 'இந்த புக்கை முழுசாப்படிக்க எனக்கு ஒரு மாசமாகும்ங்க!' என்றார் (அவர் மேனிலை வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவர் :-))

அன்புடன்
வெங்கட்ரமணன்

பத்மா said...

புகைவண்டியின் அபாயச்சங்கிலி பயங்கர கவர்ச்சியானது .அதை பார்க்கும் அனைவருக்கும் வாழ்வில் ஒருமுறையேனும் அதை இழுக்க உள்மன ஆசை வந்திருக்கும் .எத்தனையோ முறை நான் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்திருக்கிறேன் போகட்டும் இழுத்தால் 500 ரூபாய் தானே என்று முயற்சி கூட செய்து... .கூடவருபவர்கள் தடுத்து விட்டனர் .போலீஸ் அழைத்துக்கொண்டு போகுமா? நல்ல வேளை தப்பித்தேன் . என்ன இருந்தாலும் உங்கள் பராக்கிரமம் பாராட்டுக்குரியது .
அருமையான இயல்பான அழகான நடை .படிக்க படிக்க மனதில் இன்பம் .

பத்மா said...

மனிதனை நேசிக்க முடிகிறது; கும்பலை முடியலியே சாமீ!

ஜகன் எத்தனை அருமையா சொல்லிருக்கீங்க

இளமுருகன் said...

//எனது ரகசியங்களின் ஆயுட்காலம் வானவில் நேரத்தை விடவும் ஆயுட்குறைவு பட்டவை.//

அழகு

இளமுருகன்
நைஜீரியா