Wednesday, February 16, 2011

பதற்றம்

செய்யாமல் விட்டவை
இயலாமல் விட்டவையாய்
உருப்பெறாமல் போகின்றன.

நிகழ்வனவற்றைத்
தீர்மானிப்பவை இரண்டு
தரப்புகள் மற்றும்
வரலாற்றின் தடுப்புகள்.

மெல்லிய அல்லது வலிய
பதற்றங்களால் தவறிப் போகிற
எல்லாவற்றிலும்
காரணமாயிருக்கின்றன
தன்வரலாறும் சூழல் வரலாறும்.

ஒரு திட்டமிடலில்
அல்லது பதற்றத்தில்
அல்லது உயரெழுச்சியில்
எதோ ஒரு செயல் நடக்கிறது.

அது, தன் வரலாற்றினை
மீறுகிற ஒன்றாய் அமைகிறபோதே
புதிய வரலாறாகவும் மாறுகிறது:
வரலாற்றின் பதற்றம்.

Saturday, February 12, 2011

மேல் நிற்றல்

கீழே நிற்பவருடன் உரையாட
என்ன இருக்கிறது?
அவர் மேல் நோக்கி
விழிகளை உயர்த்தும் போதே
இரைஞ்சுகிற பாவனை வந்துவிடுகிறது.
கேள்விகளுக்கும் பதில்களுக்கும்
இடையில்
உண்மை ஒளிந்துகொண்டு விடுகிறது.

உடனடியாக ஒரு ஏணி
தேவைப்படுகிறது எனும்போது
அது
நமது பரணில் இருப்பதும்
நினைவுக்கு வந்தாலும் அதை
எடுத்துத் தர மனங்கொள்வதில்லை.

அவர் ஏறி வருகிறபோதே நாம்
இறங்கிச் சென்றுகொண்டிருப்பதான
காட்சி பற்றிய சித்திரம்
வந்து மருட்டுவது
காரணமாயிருக்கலாம்.அல்லது
உரையாடல் நமது சுகத்திலும்
லாபத்திலும் பங்கு வைப்பதை
நோக்கிச் சென்றிடக்கூடாது
என்பதும் கூட.

கீழ் நிற்பவர் முறைத்தார் என்றால்
ஐயமேயில்லை அவர்
சட்டத்திற்குப் புறம்பாக
இருக்கிறார். சரி உரையாடலை
துண்டித்துக்கொள்ளலாம்.

என்றேனும் அவர் சமக் கட்டில்
வந்து முகத்தை நேராகப் பார்க்கும்
கணங்கள் வாய்த்து விடாதவாறு
சூழல் நம்மைக் காப்பாற்ற
வேண்டுமென
கண்ணறியாத மாயக்கரங்களை
வேண்டிக்கொண்டு
இந்தப் பரிமாற்றத்தை
இந்த அளவில் முறிக்கிறோம். பிறகு
கீழ் நிற்பவர் பார்வைக் கோணத்தில்
இருந்து
மறைகிறார்.

Wednesday, February 9, 2011

ஒரு தேநீர்க்கடை ஞாபகம்....

இன்றைக்கெல்லாம் அது நடந்து பதினைந்து பதினாறு ஆண்டுகள் இருக்கும். மதுரையில் - திருப்பரங்குன்றத்தில் தமிழ்ப்புத்தாண்டினை ஒட்டிய த.மு.எ.ச வின் கலை இரவு.

பலபேர் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பேச்சாளர் மேடையேறுவதற்கு முன்பாக தேநீர் அருந்தலாமே என்றார்.நானும் செல்வனும் (அப்போது மதுரை இப்பொழுது கோயமுத்தூர்) அவரும் தேநீர்க்கடை நோக்கிச் சென்றோம். அவரைச் சுற்றி (என் போன்ற சிறுவர் குழாமும்) இளைஞர் பட்டாளமும் ஒரு இன்முக வசீகரிப்பில் ஒருங்கிச் சூழவே இருக்கும். ஆகவே டீக்கடை ஏகுமுன் எண்ணிக்கை அதிகரித்தது இயல்பான செயலே.

தேநீர் மேஜையாளர் ‘’எத்தனை டீ?’’ என்றதும் அவர் தலைகளை எண்ணினார். அல்லது முகங்களை எண்ணினார் என்று சொல்வது பொருத்தமே எனினும் அவரது உயரத்திற்கு தலைகளை எண்ணினார் என்று சொல்வதே பொருத்தம்.

(இலக்கியப்பேச்சுகள் மனதில் தேங்கி ரீங்காரம் குறையாமலிருந்த மொழிச் சுழல்வு சூழலைப் புலமெனக் கவ்வியிருந்தது)

‘’ஒன்னு, ரண்டு,மூணு,நாலு,அஞ்சு,ஆறு’’ தேநீர்க்காரரிடம் திரும்பினார்.’’ஆறு. டீ ஆறு. ஆரு... நீ ஆரு நான் ஆரு?’’  சுற்றிலும் மகிழ்வும் நெகிழ்வுமான சிரிப்போசை கவ்வியது. கூடக் குறையச் சுவைகளைத் தோற்றுவிக்காத ஒரே தேநீரை ஆறு பேரும் பருகினோம் என்றுதான் தோன்றியது.

அந்தப் பேச்சாளர் , பேச்சாளர் என்று அறியப்பட்டிருந்தாலும் சிறுகதை எழுத்தாளர் என்று தெரியப்படுத்த மறுபடி ஒரு தசாப்தம் தேவையாயிருந்தது. அன்றைக்கு வெறும் தவணைக்குத் துணி வைப்பவனாய் அறியப்பட்டிருந்த எனது கவிதைகள் சில்வற்றை வாங்கி திருச்சியில் நந்தலாலாவுக்கு அனுப்பி ‘சோலைக் குயில்களில்’ பதிப்பித்தார்.

பேரெழில் வாய்ந்த கையெழுத்துக்கு உரிமையாளராகிய அவர் இரண்டு குறும் படங்களையும் இயக்கியிருக்கிறார். 1.ராமய்யாவின் குடிசை 2.என்று தணியும்.

திடீரென அவரது வலைப்பக்கம் குறித்த தகவலை ‘அடர் கருப்பு’ வலைப்பக்கத்தில் பார்த்து விட்டு இன்று வாசித்தேன். அவரது நேற்றைய பதிவுதான் எனது இன்றைய பதிவையும் நினைவையும் கிளறியது. அதுவும் ஒரு தேநீர்க்கடைச் சம்பவம்.

( முன்னிரு முரசங்கள் தாமே அதிர.... நானும் அவரும் மதுரையில் சுற்றித் திளைத்த மீனாட்சியம்மன் கோவிலெல்லாம் நினைவுக்கு வருகிறது.

அவ்வவற்றின் ஞாபக அடுக்குகளின் பிரகாரம்)

அவருடன் ஒரு தேநீர் அருந்தி ஆண்டுகள் சில ஆகிவிட்டன. அந்தத் தருணத்தை விடவும் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியாகும் நாள் ஒன்றினைத்தான்.

மீதமுள்ள பார்வைக்கு unmaiputhithandru.blogspot.com.

Monday, February 7, 2011

மறுபடியும் முதல்ல இருந்தா?

நேற்றிரவு கணினியில் ஆர்வமாக செய்தி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்த சாந்தியிடம் கேட்டேன், ‘என்ன செய்தி இவ்வளவு ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்?’ என்று.

மூன்றடிக்கும் அப்பாலிருந்து சாய்குத்துக் கோணத்தில் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இஸ்ரோ என்கிற வார்த்தை மட்டுமே புதியதாகக் காட்சியளித்துக்கொண்டிருந்தது.

கணினியை மௌனமாக்கி விட்டு சாந்தி ‘எதோ இரண்டு லட்சம் கோடி ஊழலாம்?’ என்றார்.

‘’எதோ இஸ்ரோன்னு போட்டிருந்துச்சு?’

‘இஸ்ரோதான் பட் டூஜி சம்பந்தப்பட்டது.’

‘அப்படின்னா அவ்வளவு இருக்காது. டூஜியே ஒன்னு எழுபத்தாறுதானம்மா?’’

‘’அப்படின்னா இரண்டாயிரம் கோடின்னு வச்சுக்க!’’ என்றார் எனக்கு எதோ காசோலை தருவது போல. அப்புறம் அந்த உரையாடல் துண்டாடப்பட்ட பின்னர் காலையில்தான் நாளிதழ் பார்க்கிறேன்.

இந்த ஆயிரம் லட்சம் கோடி வகைகளுக்கு எத்தனை சுழிகள் எனத் தெரியாததால் உண்மையில் இத்தகு செய்திகள் ஆர்வம் தராமல் போய்விட்டன. ஆனாலும் பொதுக்குழு மாநாட்டில் ராசாவைப் பாராட்டித் தீர்மானம் என்பது போல் கருணாநிதி டகாலிட்டிகள் விடும்போது மட்டும் சுவாரசியம் கூடிவிடும். பிறகு இன்னும் ஏன் நான் மூர்ச்சையடையாமல் இருக்கும் அளவு தரங்கெட்டுப் போய்விட்டேன் என என்னை நானே நினைத்துப் பரிதாபமாக இருக்கும்.

காலையில் நாளிதழ் பார்த்தால் தணிக்கைக் (உண்மையிலேயே இது ஒரு தனிக் கை போலத்தான் தெரிகிறது) குழு இரண்டு லட்சம் கோடி முறை கேடு என அறிக்கையிட்டிருக்கிறது.

இத்தனை ஊழல்களுக்குப் பிறகும் எனக்கெல்லாம் சோறு கிடைக்கிறதே
என எண்ணும்போது மலைப்பாகவும் தித்திப்பாகவும் இருந்து பாரத மணித்திரு நாட்டின் செல்வவளத்ததனை நெஞ்சில் போற்றினேன்.

இறுதியில் இந்தப் பகிர்வை   வகைமைத் தரவில் அரசியலில் சேர்ப்பதா ஊழலில் சேர்ப்பதா என மனங்குழம்பி இஸ்ரோ வகையிலும் ஊழல் நடந்திருக்கவேணாமே என மனம் விரும்பி பகிர்வு என்றே பதிவிடுகிறேன்.

நிலா நாற்பது - 13

சூரிய ஆதியில்
சந்திர ஜோதி.
பெருகிப் புடைப்பதும்
உருகி மறைவதும்
அதன் தனி நியதி.

Friday, February 4, 2011

என் பெயர் சிவப்பு

ஓரான் பாமுக் எழுதிய மை நேம் ஈஸ் ரெட்- டின் தமிழ் மொழி பெயர்ப்பை மெல்லிய முறுவலுடன் படித்துமுடித்தேன். முறுவல் கடைசி வாக்கியங்களின் பலனால் விளைந்ததாகும்.

கிழக்கும் மேற்கும் அல்லாவுக்கு உரியன(இது குர் ஆனிலிருந்து), ஆனாலும் கிழக்கு கிழக்குதான் மேற்கு மேற்குதான். மத்தியக் கிழக்கின் பாரங்களும் அபாரங்களும் உண்மையில் வேறுமாதிரியானவையே. கிழக்கும் மேற்கும் என்றைக்கும் இணைய முடியாதோ என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது.

சாத்தானின் இருப்பு தவிர்க்க முடியாததாகிற பட்சத்தினூடே பேரறிவாளனின் பார்வைக்கோணம் பற்றிய விவாதம் ஓவியங்களூடாக பரிமாற்றத்துக்கு வருகிறது.

ஹிந்துஸ்தானத்தை அக்பர் ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில் துருக்கியில் இஸ்தான்பில்லில் கதைச் சம்பவங்கள் நடக்கின்றன. வாழ்வில் மறுக்கவே இயலாத கருதுகோள்களை அத்தியாயங்களுக்கிடையில் கதை மாந்தர்கள் தன்’மை’யப்பேச்சினூடாக வெளிப்படுத்துகிறார்கள். அடுத்த அத்தியாயத்தை யார் பேசப் போகிறார்கள் என யூகித்துப் பெரும்பாலும் தோற்பதும் சிலநேரம் வெல்வதும் வாசிக்கும்போது எனக்கு மகிழ்வூட்டிய அம்சமாக இருந்தது.

ஒரு துப்பறியும் நாவலின் சுவாரசியத்தோடும் ஓவியர்களையே வாசிக்கத்தூண்டும் விவரணைகளோடும் நாவல் விரைகிறது. இதை மொழி பெயர்த்துத தந்த ஜி.குப்புசாமிக்கு கலை வணக்கங்கள்.

கிட்டத்தட்ட சமகாலத்தில் முறையான அனுமதியுடன் காலச்சுவடு வெளியிட்டிருப்பது மகிழ்வளிக்கும் நிகழ்வாகும். இந்தப் பிரதியின் வெற்றி (அல்லது வரவேற்பினால் உண்டாகும் பெருமிதமும் பெருக்கமும்) இத்   தகு நூல்கள் தமிழில் வர ஏதுவாகும்.

 காலச்சுவடு பதிப்பகம் , தாம் இதுவரை வெளியிட்ட அவ்வளவு புத்தகங்களும் தங்கள் அரங்கில் கிடைக்கும் என புத்தகக் கண்காட்சியை ஒட்டி அறிவிப்பு விட்டிருந்ததும் மகிழ்ச்சி தந்த முக்கியத் தருணமாகும்..

புத்தகங்கள் மேல் பற்றுறுதி கொண்டோர் மகிழும் செயல்வண்ணம்.

என் பெயர் சிவப்பு
- ஓரான் பாமுக்.
(தமிழில்.ஜி.குப்புசாமி)
காலச்சுவடு பதிப்பகம்.
669,கே.பி.சாலை,
நாகர்கோவில்- 629001.
தொலபேசி-0-4652-278525