Monday, May 31, 2010

நிலா நாற்பது - 2

வரம்புகளில்லாத
நட்சத்திர கிரிகெட்டுக்கு
நிரந்தரமில்லாத
நடுவர்

Sunday, May 30, 2010

வாழும் அருங்கலை.

இன்றைய நாளிதழ் செய்தி ஒன்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது(சுவாரசியம் அளித்தது என்று எழுதினால் என்னதான் ஆகும். ஆனாலும் உண்மை உங்களுக்குத் தெரியும்தானே) .ஆம்.ஆன்மீக வாதி ரவிசங்கர் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறார்.அவரது குரல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பேசும்போது எனக்கு சச்சின் டெண்டுல்கர் பேசுவது நினைவுக்குவரும். ஒரு மாதிரியான வசீகரத்தன்மை கொண்ட குரல் இருவருக்கும்.

எனக்கு அவரது குரல் பிடிப்பது இருக்கட்டும். எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கவேண்டிய அவசியமில்லை. ஒருவருக்கு ‘போட்டு எறிய வேண்டிய’ அளவு கொலைவெறி போலும். துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.கூட்டத்தில் செருப்பெடுத்து எறிந்தால் சனியன் பிடித்தவன் தலையில் விழும் என்பார்கள். அவ்வண்ணம் குண்டு (அப்பாவி?) பக்தர் ஒருவர் மீது பட்டுவிட்டது. அமைதி காக்குமாறு பக்தர்களைக் கேட்டுக்கொள்கிற ரவிசங்கர் சுட்டவரையும் தன்னிடம் பாடம் கேட்கவருமாறு பேட்டியில் பணித்திருக்கிறார். கிளாசுக்கு துப்பாக்கியுடன் வரலாமா என்பது பற்றி குறிப்புகள் இல்லை.

ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டில் தப்பித்தார் என்பது எனக்கு மகிழ்ச்சிச் செய்தி. வேட்டியைப் போர்த்திக்கொண்டு நடமாட நம் தலைமுறையிலும் ஆள் இருக்கிறதே என்கிற எண்ணத்தால் விளைந்த மகிழ்ச்சி. அதைவிடவும் ‘வாழும் கலை’ (தப்பிக்கும் கலை+தாக்குப் பிடிக்கும் கலை= வாழும் கலை) பயிற்சி நடத்த தகுதியானவர் என்பதை அன்னார் நிரூபித்துள்ளமை
மெத்த மகிழ்ச்சியில் மேலும் ஆழ்த்துகிறது.

Thursday, May 27, 2010

நிலா நாற்பது - 1

இலக்குக் கம்பங்களை
இழந்துவிட்டு
அந்தரத்தில் நிற்கிறது
கந்தர்வர்களின் கால்பந்து

Tuesday, May 25, 2010

காப்புரிமை

பொதுவாகக் காப்புரிமை என்பது பல திறப்படும்.ஏனெனில் பணம் சம்பாதிக்கிற விவகாரங்கள் இல்லையா. இசைக் கீற்றினை பதினைந்து நொடிகள் வரை யாருடையதாவதை அப்படியே அடித்துவிடுவது எல்லாம் காப்புரிமையில் இருந்து விலக்கப்பட்டது. பிறகும் இசை முதலிய சங்கதிகளுக்கு மொழி கிடையாதாகையால் சர்வதேச அளவிலிருந்து - எட்டுத் திக்கும் சென்றும் நம் இசையமைப்பாளர்கள் நன்றி கூடச் சொல்லாமல் மண்ணில் இறக்கிவிடுவது உண்டு. இதேபோல இங்கு உருவானவற்றையும் பிறரும் அடித்துத் தேற்றுவார்கள் என நம்பலாம்.

அதேபோல திரைப் படப் பெயர்களுக்கான ஆயுள் பதினாறு ஆண்டுகள் என்பது நான் கேள்விப்பட்டது.(சரியான தகவல்கள் வரவேற்கப்படுகின்றன) நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், பொல்லாதவன், திருவிளையாடல், நினைத்தாலே இனிக்கும்... என எவ்வளவோ படங்கள் வந்துவிட்டன.

பழைய படத்தின் மரியாதையைக் கெடுக்காத படம் என்றால் ‘பில்லா’ மட்டும்தான் என்பது எனது துணிபு. பல படங்களின் பெயர்களுக்காகவும் இப்போது எடுக்கப்பட்ட விதத்துக்காகவும் திலகங்கள் இருவரும் சொர்க்கத்தில் துன்புறுவார்கள்.

இஃது இவ்விதம் இருக்கட்டும். இன்று மத்தியானம் கோடம்பாக்கத்தில் கமலாதியேட்டர் பக்கம் நண்பர் ஸ்ரீதரின் வரவுக்காகக் காத்திருந்து ஒரு மரத்தடியில் ஒதுங்கிய போது நடந்தது. நின்ற இடத்தின் அருகிலுள்ள மதில் சுவரில்‘ஆயிரத்தில் ஒருவன்’ கார்த்தியின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களைப் பார்த்தேன். நல்லவேளை அவருக்குக் கட்- அவுட் வைக்காமல் இந்த அளவில் அடக்கமாக விட்டார்களே என வியந்து மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு 55வயது அளவிடத்தக்க நபர் வந்து என்னருகில் நின்று போஸ்டர்களை முறைத்தார்.முணுமுணுத்தார்.

எனக்கு வரலாறு பிடிபட்டுவிட்டது.நண்பன் வரும் வரை பொழுதும் போகணுமே என அவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

’’ஆயிரத்தில் ஒருவன்னா அது எம்.ஜி.ஆர் மட்டும் தான்ங்கறீங்களா?”

‘’ஆமாங்க. இந்த .. யாருங்க?” என்றார்.(ஒவ்வொரு புள்ளியும் ஒவ்வொரு எழுத்து)

சென்னையில் இன்னும் அக்கினி நட்சத்திரம் வேறு முழுதாகக் கடந்திருக்கவில்லை.
‘சிவகுமாரோட பையனுங்க’ என்று சொல்லலாமா என நினைத்தவன் உடனே அமைதியாகிவிட்டேன். அவர் சிவகுமாரையும் திட்டுவார் என்னையும் திட்டுவார் எனத் தோன்றியது. அமைதி காத்தேன். அக்னி நட்சத்திரம் (இந்தப்பேரு இன்னம் காலாவதி ஆகலியா?)கடந்துவிட்டது.அமைதியாய் இருந்ததற்கு என்னை நானே மெச்சிக்கொண்டேன்.

‘காப்புரிமை’களில்தான் எத்தனை வகை?

Friday, May 21, 2010

விருகை - வட பழனி

விருகம் பாக்கத்தில் இருந்து வடபழனிக்கு பேருந்து ஏறலாம் என வந்து நின்றபோது இளங்காலை நேரம்.சம்பவம் சென்னையில் எனத் தெரிவிக்கிறேன்.ஏனெனில் இதே பெயரில் வேறு ஊர்கள் எங்கேனும் இருக்கக் கூடும்.
போரூர் போகிற திசைக்கு நிற்காமல் சரியான திசைக்கு வந்து நிற்கிற அளவில் இருப்பதே எனக்கு சமீபத்திய வளர்ச்சிதான். நிறுத்தத்தில் எனக்கு வலதுபக்கம் முப்பத்தைந்து வயது அளவிடத்தக்கவாலிபர் நின்று கொண்டிருந்தார்.விரலிடுக்கின் மேலாகவும் ஆமைமுகட்டின் மேலாகவும் பாதத்தின் மேலாகவும் இரண்டு பட்டைகள் கவ்வுகிற அழகான செருப்புகள் (இதை ஒருமையில் சொன்னால் என்னவாம்?) அணிந்திருந்த அவர் கரும்பச்சையில் ஜீன்ஸ் அணிந்திருந்தார்.கறுப்பான அவர் என்னிலும் அழகானவர்.அதனாலேயே விவரமானவர் என்பதாகவும் மனப்பதிவு ஊர்ஜிக்கிறது:கர்ஜிக்கிறது. சிரைத்த முகத்தின் மேலாக படிய வாரப்பட்ட முடித்தலை.வெள்ளை அரைக்கைச் சட்டை அதில் முக்கால் அங்குலத்துக்கு ஒன்றாக வெள்ளி நீர்க்கோலக் கோடுகள்.மூன்று மில்லி மீட்டர் அகலங்கள் கொண்டவை.

முதலாவது பேருந்தின் போர்டை முழுக்கப் படிப்பதற்குள் வண்டி பக்கவாட்டுக்கு வந்துவிட ''ஏங்க இது வடபழனி போகுங்களா?'' எனக் கேட்கிறேன். ''போகாது'' எனப் பதிலளிக்கிறார்.

அடுத்த வண்டி. சொகுசு வண்டி. இருக்கைகள் ஆட்களின் வரவுக்கு இரைஞ்சுகிற நிலையில் தாடாத்தியாக இருந்தது. ஆங்கிலத்தில் ஸ்டாப்புகளின் பெயர் எழுதி அவை நகர்ந்துகொண்டிருப்பது போல பிராம்ப்டர் ஏற்பாடு உள்ளது.எனது காலத்தோடு இயற்கை விளையாடும் கண்ணாமூச்சி இம்முறையும் துல்லியமாக விளையாடுகிறது. நின்று போகிற பேருந்து மூன்றாம் கியருக்கு மாறுகிற தூரத்தில் 'வட பழனி' என்கிற சிவப்பெழுத்துகள் பேருந்தின் முகுளப்பகுதியில் ஓடுவதைப் பார்க்கிறேன்.

அருகில் உள்ள அழகனை மனதால் சடைகிறேன்.வடபழனிக்கு இந்த வண்டி போறதைச் சொல்வதற்கு இந்த ஆளுக்கென்ன கேடு? அல்லது சொகுசு பஸ்சுக்கு காசில்லாதவன் என முடிவு செய்திருக்கிறாரா? இப்படிப் பலதும் ஓடியது.

தவிர, கிரி அபார்ட்மெண்ட்ஸில் அறை வாசியும் எனக்கு ஆதிரனுக்கெல்லாம் நிழற்குடை வேந்தனாயிருக்கிற சிவராமன் 'உரையாடல்' ,பொசிசன்,பர்சப்சன் என்றெல்லாம் நள்ளிரவு வரை பேசி(அதிகம் கேட்டும்) வந்ததில்...

இந்த நபரிடம் நான் கேட்ட கேள்வி தப்பு. 'வட பழனி போற பஸ் வந்தா சொல்லுங்க!'ஞ என்று எதைப் பேச வேண்டுமோ அதை மட்டும் பேசியிருக்கவேண்டும் என்றும் தோன்றியது.

இப்போது அடுத்த வண்டி.மூன்றாம் கியரில் முகுளத்தில் வட பழனி.'மறு படியும் வண்டி போச்சே' என மனம் அங்கலாய்த்தது.இன்று நின்று செத்தான் சிவகுமார் என முடிவு செய்தேன். இப்போது ஒரு சாதாரணப் பேருந்து.பக்கத்தில் நிற்கிறவர் இரண்டாம் முறையாக இப்போது என்னிடம் பேசுகிறார். மொழிபெயர்க்கவும் மொழியவும் முடியாத அற்புதப் புன்னகையோடு சொன்னார்.
''இது போகாதுங்க."

நீண்ட நெடுமூச்சு விட்டேன். இந்தப் பேருந்து எங்கே சென்றாலும் ஏறுவது என முடிவெடுத்தேன். அவர் அந்தப் பேருந்தில் ஏறவில்லை. பலருக்கு வழி காட்ட அவர் நிற்கக் கூடும். நான் ஏறிய பேருந்து வட பழனி சென்றது. பத்து ரூபாய் நோட்டை நீட்ட நடத்துனர் ''மூணு ரூபாய் கொடுங்க'' என்றார். சரியாக காதில் வாங்கிக் கொள்ளாத நான் 'ஒரு ரூபாய் ' எடுத்துக்கொடுத்தேன்.

'உங்க கிட்ட கேட்டே இருக்க வேண்டியதில்லை' என்ற நடத்துனர் எட்டு ரூபாயை மீதியாகக் கொடுத்தார்.அவரிடம் பேசாததை இப்போது எழுதுகிறேன்,

''வானப்பிரஸ்தம் போகாமல் ஒருத்தன் வட பழனி போறானே அதே பெருசு. விடூங்க கண்டக்டர்.''

Monday, May 17, 2010

இரும்புக்கோட்டை முக்கா டவுசர்

நேற்று மத்தியானம் பேருந்து நிலையத்துக்கு முந்தின நிறுத்தத்தில் பேருந்து இறங்கிவிடுகிற போக்கின் அடிப்படையில் ஒட்டன் சத்திரத்தில் பேருந்து இறங்கியபோது.கார்த்திக் தியேட்டரில் அது மத்தியானக் காட்சி தொடங்கி ஓடுகிற நேரமாக இருந்தது.டிக்கெட் கவுன்ட்டரின் வால் முனையில் ஒரே ஒரு நபர் நின்றுகொண்டிருந்த நேரம் 2.45. படம் தொடங்கும் நேரம் 2.15 என பக்கவாட்டில் ஒரு பலகையில் கண்டிருந்ததால் ஏங்க படம் போட்டு அரை மணி நேரம் ஆச்சா? என வினவ அவர் 2.40க்குத்தான் படம் தொடங்கிற்று என்றார்.

என்னா ஆனாலும் சரி என்று டிக்கெட் எடுக்கப்போனால் அவரே சீட்டுக் கொடுக்கும் கூண்டினுள்ளும் வந்து நின்றார். 40 ரூபாய் டிக்கெட்டுக்கு இரண்டாம் மாடிக்கு சீட் எடுத்து மிச்சமுள்ள மொத்தப்படமும் ஒற்றை ஆளாக உட்கார்ந்து பார்த்தேன்.நூறுக்கும் மேற்பட்ட நாற்காலிகளுக்கு ஒரு ஆள் என்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

நான் நுழைகிற நேரம் சிங்கம்(லாரன்ஸ்) உலக்கையுடன்(சாய்குமார்)சீட்டு விளையாட ஆரம்பித்திருந்தார். சீட்டு விளையாட்டு என்றால் சீட்டின் எண்களுடன் விளையாடாமல் சீட்டுக்கட்டில் விளையாடுவது. முதலில் படத்துக்குத் தேர்ந்தெடுத்த வண்ணத்தை மனங்கொண்டு சிம்புதேவனை மெச்ச வேண்டும்.வேறு ஒரு நில அமைப்பிலும் பிரமிப்பிலும் நம்மை வைத்திருக்கும் வண்ணம் அது இருந்தது.பிறகு செட்டுகள்.என்றாலும் கூட செட்டுகளைப் பார்த்துவிட்டு இடைவேளை வரை படம் பார்த்ததில் நிறைய தச்சர்களின் உழைப்பு வீணாகி விட்டதோ என நினைத்தேன். ஆனால் டிரவுசர் இனிக் கிழியும் என இடைவேளை விட்டபின் சிம்புதேவன் ஈடுகட்டிவிட்டார்.

கலைப் படைப்பில் முழுக்கவும் ஒன்றித்து நாம் பிரக்ஞை இழந்துவிடக்கூடாது (இது பிரட்டோ பிரெக்டோ சொன்னது அல்லவா) என்பதற்கான நினைவூட்டல்கள் அடிக்கடி வந்துபோகின்றன. படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது 14 மொழி பேசும் டிரான்சுலேட்டர்.
விவிலிய எழுப்புதல் கூட்ட மொழிபெயர்ப்பின் விரைவை எட்டுகிறார். அதேபோல மூல மொழி பேசும் எம்.எஸ். பாஸ்கர்.(விகரம் படத்தின் அம்ஜத் மற்றும் ஜனகராஜை நினைவுகொள்க).

கைகளைப் பிசையாமல் நம்பியாரை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டார் நாசர்.லாரன்ஸ் மட்டும் ரஜினியிலிருந்து வெளிவர கொஞ்சம் கிரமப்பட்டிருக்கிறார். தேடிப்போன புதையல் இடத்துக்கு ‘சுங்கச் சாவடி’ போட்டிருப்பதிலிருந்து படத்துக்கு ஒரு சமகாலத் தன்மை வந்துவிடுகிறது.கௌ பாய் தொப்பிக்கு ரொம்பப் பொருந்திய முகம் மௌலியினுடையது.

பாஸ் மார்க்,பனகல் பார்க் என பல வித ’ஓட்டு’கள் படத்திலுண்டு. படத்திற்கும் உண்டு.நாயகிகள் தேர்வு நல்ல தேர்வு.(சாப்பாடு நல்ல ஏற்பாடு என்று திருவிழா நாடகங்களில் பபூன்கள் சொல்லும் தொனியில் இதைப் படிக்கவேண்டும்.)பாட்டுகள் நன்றாகத்தான் இருந்திருக்கவேண்டும் கொட்டகை அமைப்பு காரணமாகவோ காதுக்கோளாறு காரணமாகவோ அதை நான் மனங்கொள்ள முடியவில்லை. வைரத்தை எடுத்து பொதுமக்களுக்குக் கொடுத்தாயிற்று என்கிற அளவில் தமிழில் கௌபாயை முதலும் முடிவுமாக்கிய சிம்புதேவனுக்கு நன்றி.(பயலுகளைப் படிக்க வைங்கடா- என்பது அவரது கடைசி வசனம்)

படத்தின் இறுதி வசனம் சிங்கத்தினுடையது அல்ல. பத்மப்பிரியாவினுடையது.எப்போதா வந்து இடறிவிட்டு கனவாய்ப் போகிற காதலி போன்ற தோற்றம் அவருக்கு. ஆனால் இந்தப் படத்தில் அவரது காதல் மட்டும்தான் ஈடேறுகிறது.

இந்தப் படத்தில் வேறொரு விசேஷம் இருக்கிறது. படத்தில் தலைகாட்டுகிற பெண்களில் கிட்டத்தட்ட முப்பத்து மூணு சதவீதம் பெண்களை சிங்கம் காதலிக்கிறது.சந்தேகம் இருக்கும் யாராகிலும் படம் பார்த்துவிட்டு அதில் காணக்கிடைக்கும் பெண் தலைகளை எண்ணிச்சொல்லுங்கள்.

Monday, May 10, 2010

பிரார்த்தனை வகை

ஒரு மனைவி ரொம்பவும் கடவுள் பக்தியுடன் இருந்தார்.சுமாரான விவசாயக் குடும்பம். ’ஆடுகறக்க பூனை நக்க’- என்பார்களே அதுபோல ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை. கணவன் பெயருக்கு அப்போது சொசைட்டி( நில வளவங்கி) லோன் எடுத்திருந்தது. அந்த வங்கிகளில் செகரட்டரிகளுக்குத்தான் பவர்.
அப்போது ஒரு காலை நேரம் .மனைவி குளித்து முழுகி கோயிலுக்குத் தயாரான சமயம் கணவனின் வசனம் இப்படியாக இருந்தது.

’’ம். கொழம்பு தாளிக்கறதுக்கு இருக்கற எண்ணையையும் கொண்டு போயி அங்க கோயல்ல ஊத்தீட்டு வந்தர்றே. சரி... சரி... போப்போ. அப்படியே சாமி கிட்ட, நம்ம செகரட்டரி சுப்பிரமணிக்கு நம்மளைப் பாக்கற நேரம் மட்டும் மயமயன்னு கண்ணைக் கட்டிக்கோணும் சாமின்னு வேண்டிக்க!”

Sunday, May 9, 2010

அம்மம்மா தனயன் என்று நம்பி...

இன்று, ’காகித ஓடம்’ பிளாக் பார்க்கப் போனபோது அன்னையர் தினம் என்கிற செய்தி தெரிந்தது. மாலைக் கருக்கல் வானில் வரும் வரை இந்தத் தகவல் தெரியாத நான் அமராவதி ஆற்றங்கரையில் ஆமையைக் கொன்ற பாவத்திலும் தாமிரபரணிக் கரையில் தவளையைக் கொன்ற பாவத்திலும் போவேனாக.அன்னையர் தினம் மகிழ்ச்சிக்குரிய ஒன்று. வாழ்த்து விரும்புவோர்க்கு என் வாழ்த்துக்கள்.

பெற்ற அன்னையை மகிழ்வித்திருக்கிறேனா... இனியாவது மகிழ்விக்க வித்து ஏதும் வைத்திருக்கின்றேனா என யோசிக்கிறேன். சான்றோன் எனக் கேட்டு மகிழ்வதற்குமுன் வேறு விதமான செய்திகள் அவளைச் சென்றடைந்துவிடுகின்றன. எழுத்து சரியில்லை என நினைக்கிறேன். அல்லது உலகத்தின் தகவல் தொடர்பு அமைப்பை மாற்றவேண்டும் என்பது அவாவாக இருக்கிறது.

அம்மாவைப் பற்றி நினைக்கும்போது எஸ்.எஸ். வாசன் தயாரித்த சிவாஜி நடித்த படம் நினைவுக்கு வருகிறது.(இரும்புக் கோட்டையோ என்னவோ பேர். இரும்பு இதயமாகக் கூட இருக்கலாம், அறிந்தவர் தவறு கூர்க). அதில் சிவாஜி அம்மாவிடம் பேசும் வசனம்.
சிவாஜி: அம்மா கடவுள் கொடுமைக் காரனம்மா...
மம்மி ; ஏப்பா அப்படி சொல்றே?
சிவாஜி: எனக்கு ஒரு நல்ல அம்மாவைக் கொடுத்த கடவுள் உனக்கு ஒரு நல்ல புள்ளயக் கொடுக்காமப் போயிட்டானே....
(வசனம் முடிந்தது)

என்ன செய்றதூஊஊஊஊ?..... சொல்லு எஞ் செல்லம்மா?

Friday, May 7, 2010

பொன் முட்டை....

மூன்று நாட்களுக்கு முன் அண்ணன் மாதவராஜ் ‘தீராத பக்கங்க’ளில் இட்ட இடுகையை இப்போதுதான் காலையில் ஆயிபோயிக் கழுவி வந்த கையோடு படித்தேன். ஜெ என்றால்... என்கிற மகத்தான பதிவை இட்டிருந்தார். ஒரு குழந்தை இசா(2) போவது பற்றியது அது.
பதிவில் வரும் பீயான ’ஜெ’யை குழந்தையோடு சேர்ந்து புரிந்துகொள்ளாமல் செல்வியோடு சேர்ந்து புரிந்துகொண்டால் அது அவர்கள் தவறு.

ஏனெனில், மாதவராஜுக்கு முன்னெழுத்தாகவும் முன்னெழுத்தாகவும் உடனெழுத்தாகவும் ஏற்கெனவே இரண்டு ‘ஜெ’கள் உண்டு. இது அவரைத் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.நிற்க.. உடல் சுகாதாரம் உடலியல் போக்குகள் குறித்து நாகரிகம் என்ற படுதாவில் ஒரு சங்கதியையும் பேசாமல் காலத்துக்கும் கஷ்டப்பட்டுக்கொடிருக்கிற சமூகங்களில் தமிழ்ச் சமூகமும் ஒன்று.

இரண்டு உதாரணங்கள்.2001 இல் ஒரு மாணவரின் மருத்துவ ஆய்வறிக்கை (ஸ்டடி) முடிவடைய நானும் உதவினேன்.(ஐம்பதுக் கணக்கான கேள்விகள் கொண்ட நூற்றுக்கணக்கான தாள்களை அவர் ஆட்கள் பிடித்து நிரப்பவேண்டும்)அப்போது ஒரு நபரிடம்
வயது;32.படிப்பு;எட்டாவது. தினமும் எத்தனை முறை மலம் கழிப்பீர்கள்? என்று கேட்டதற்கு அவர் ஐந்து முறை என்றார். நான் திகைத்தேன். நானே மூனுமுறைதானே இவன் என்னைவிடப் பெரிய ஆளா என்று. ‘’ஏங்க நல்லா யோசிச்சு சொல்லுங்க. அஞ்சு தடவையா?’’
‘’ஆமாங்க. தினம் போறவன் எனக்குத் தெரியாதா? ஒன்னுக்குப் போறதத்தான கேக்கறீங்க?’’
- ஆக மலம் என்றால் ஒன்னுக்குப் போறது என நினைத்துக்கொண்டிருக்கிற ஆட்கள் இருக்கிற மாநிலம் நம்முது.

ஒரு தடவை எங்க ஊர் ஐயன் ஒருவர் இருட்டில் முள்ளுக்காடு ஒன்றுக்கு வெளிக்கிருக்கப் போனார்.ஒரு சுற்று கழிந்து முடிந்து இரண்டாம் கழிப்புக்கு இடம் மாறி அமர்கையில் தொடையில் முள் கீறவும் பாம்பு ஒன்று நகர்ந்து போகவும் சரியாக இருந்தது. பாம்புதான் போட்டுவிட்டது என மருத்துவமனைக்குச் சென்றவரிடம் ‘’முதல்ல காலைக் கழுவிக்கிட்டு வாங்க அய்யா’’ என்றார் டாக்டர். கால் கழுவுதல் என்பது பீ கழுவுதலின் இடக்கரடக்கல்.
அய்யன் உயிர்ப்பதற்றத்தில் இருந்ததால் இடக்கரடக்கல் சாரமிழந்தது. காலை மட்டும் கழுவிக்கொண்டு போய் டாக்டருக்கு பீக்குண்டியைக் காட்டினார் அய்யன்.

டாக்டர் இரண்டாம் முறையும் கால் கழுவிவருமாரு பணித்தார்.மறுபடியும் பீக்குண்டி.டாக்டர் நாகரிகத்தைக் கைவிட்டார்.’’யோவ் போயி பொச்சக் கழுவிக்கிட்டு வா.’’

நாகரிகம் எல்லாம் ஒரு அளவுக்குத்தான். மதிப்பீடுகள் மாறுபடுகிற அன்றுதான் வார்த்தைகள் பொருள் பெறும். காட்டாக பாலியல் தொழிலாளி என்று பகர்ந்துகொண்டு ‘தெவ்விடியா’ என மதித்தீர்களேயானால் வார்த்தை மாறுவதில் பொருளில்லை.ஆயி போவதற்கு அழகியலின் உச்சமாக நான் வைத்த பெயர்தான் பொன்முட்டை இடுதல்.

சிகரெட் குடிப்பவர்கள் ஆயி போகும்போது கடைசிக் கங்கு முடிவதற்கும் அவர்கள் ஆயி போகும் நேரம் முடிவதற்கும் சரியாக இருப்பது எப்படி என்றேல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டும். மனைவியிடம் தம் அடிப்பதில்லை என்று வாக்குத்தத்தம் செய்த நண்பனின் கழிவறையில் மனைவி தீப்பெட்டியைக் கண்டு பிடித்துவிட்டாள். அவன் சொன்னான்.’’ இல்லம்மா... பாத்ரூம் போகையில சிகரெட்டெல்லாம் குடிக்கிறதில்ல. ஆனாப் பாரு இந்த தீக்குச்சி கொளுத்தறத விடமுடியலே.’’

இப்படிப் பாவ்லோவின் நாய்ப் பழக்கம் எவ்வளவோ உள்ளன். இற்றை நாளிலும் மலத்தில் புது டிசைன் கண்டுவிட்டால் எனக்கு கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. தம் கழிவைத் தாம் பாராதவர் யாரும் உளரா?

மாதவராஜ் பதிந்த குழந்தை கழிந்த ஜே, சின்ன வயதுகளில் நான் ஒன்னுக்கில் வரைந்த இரட்டை இலைகளையெல்லாம் ஞாபகப் படுத்துகின்றன. ஒன்னுக்குப் பட்ட கையோடு சிறுவர்கள் தீண்டவந்தால் பதிலுக்கு நாம் நம் தலை முடியைப் பிடித்துக்கொண்டு தீட்டிலிருந்து தப்பவேண்டும்.

குழந்தைகளின் பீயினால் உலகம் நாறிவிடும் என்று பத்து மணி நேரத்திற்கு குழந்தைகளுக்கு உறிஞ்சு கோமணம் (ங்கொய்யால அதுக்குப் பேரன்னங்க) கட்டுகிற மானுடர் வாழும் மாட்சிமை தங்கிய நாட்டில் இன்னும் பலதைப் பேசவே வேண்டியுளது.அவர்கள் தான் என்ன பண்ணுவார்கள் பயண வழியில் நீங்கள் குண்டி கழுவத் தண்ணீர் தர எவருமில்லை. பதினாறு ரூபாய் பாட்டில்காரர்கள் தவிர.அப்புறம் மோட்டலில் போட்டோ மாட்டியிருந்தால் லிட்டர் தண்ணி இருபது ரூபாயாயிருந்தால் ஆச்சரியமும் படாதீர்கள் சண்டையும் போடாதீர்கள்.

குழந்தையின் குண்டிகளை கல்லெடுத்துத் துடைத்துவிடுங்கள்.’மலந் துடைத்த கற்களை மழைக்காலம் கழுவிப்போகும்.’

Thursday, May 6, 2010

வேர்கள் வேலியைக் கடக்கின்றன...

கவிஞர் வைரமுத்துவைப் பற்றிய - உண்மையில் அப்படி அல்ல அது நர்சிம் குறித்தானது- பதிவினைத் தொடர்ந்து அதற்கு பின்னூட்டப் பிரதிவினையில் ஜகன் பொழிந்து தள்ளிவிட்டான்.
எதிர்வினை என்பதை விட பிரதிவினை என்கிற வார்த்தை ‘மறுவினை’ என்பதை லேசாகத் தொடுகிறது. சில பகிர்வுகள் பின்னூட்டத்தால் கொஞ்சம் பலம் பெறுகின்றன. சில பின்னூட்டங்கள் அடிவேர் மறந்த ஆலின் தாங்கு விழுதுகளாக நின்று விடுகின்றன.
கண்ணதாசனை வைரமுத்து தாண்டவில்லையா பல இடங்களில் அவ்வண்ணமே இது.
வைரமுத்துவை கவிஞர் என்றால் சிலர் சண்டைக்கு வரக்கூடும். ஆனால் அவர்களும் சினிமாப் பாடல்களில் கவிதை உள்ளது என்பதை ஒப்புக்கொளவர்.

அவ்விதமாகக் கவிஞர் எனக்கொள்வோமெனில் வைரமுத்து கவிஞர் என்றும் கண்ணதாசன் துயருற்றவர்களின் கவிஞர் என்றும் சொல்வேன். வைரமுத்துவை ஸ்தாபிப்பதற்கு எனக்குள் சில தகவல்கள் உண்டு. ஒரு நூறு பக்க தெரிவிப்பிற்கு காலம் வரும்போது அது நடக்கும்.இல்லாவிட்டால் தமிழுக்கு ஒரு சுக்கும் நஷ்டமில்லை.

இங்கே ‘கவிப்பேரரசு’ அவரல்ல. கவிதையில் அவர் காட்டுகிற நுண்மானை வெளிப்பாடுகளில் காட்டுவதில்லை. அவரது தோலை உரித்துப்பார்க்க ஒரு சபை வெளிப்பாடு போதுமானது.

அப்புறம் ஒரு ரகசியம் சொல்கிறேன். இப்போது நான் தண்ணீர் பாய்ச்சுகிற சில செவ்வாழைகளை வைரமுத்துவின் தோட்டத்திலிருந்து ‘கண்டு’களாய் வாங்கிவந்தேன்.
(மக்களே இது கவித்துவ வெளிப்பாடு அல்ல உள்ப்பாடாக்கும்.)

வைரமுத்து தனது தோட்டத்துக்கு ‘கவிஞர் தோட்டம்’ என பெயரிட்டிருக்கிறார்.என்னுடைய தோட்டங்கள் எனது பெயரில் இருக்கப்போவதில்லை. நீங்கள் பினாமி அளவுக்கு யோசிக்கவேண்டியதில்லை. எனக்கு , வாழை வாழும் தோட்டத்துக்கு கருங்கல்லால் மதில்வைக்கத் தெரியாது.

இல்லாமல் உள்ளது.

நினையாமல் இருக்கையில்
மறந்திடக் கூடிய ஒன்றுதான்.
இழப்பை உணர்கையில் பூ ரணம்.
திளைத்து இருக்கையில் பூரணம்.

இன்று வேறொன்றினைப்
பெற்ற பின்னும் எதிரெண்ணாமல்
முகங்கொள்ளும்
இழக்கப்பெற்றதின் சிறுவலி.
புறக்கணிப்பின் பெருவலி.

சுள்ளிமுள்ளுக் காட்டினிலே
கள்ளிப்புதர் உள்ளடுக்கில்
உள்ளது உன் பெயரே!

இல்லாமல் உள்ளது.

Wednesday, May 5, 2010

கசடதபற...

www.narsim.in -சதம் கண்ட வலைத் தளத்தில் இன்று பல கட்டுரைகள் படித்து இன்புற்றேன்.
ஒரு கட்டுரையில் கவிஞர் வைரமுத்துவின் கவித்துவங்களைப் பாராட்டிவிட்டு அவருக்கு வாழ்த்த்துக்கள் தெரிவித்திருந்தார்.பெரிய மனது நர்சிம்முக்கு.

நிமிடத்துக்கு இதயம் துடிக்கும் எண்ணிக்கை,திருப்பதி உண்டியலில் விழும் காணிக்கை,தன் தணிக்கை இப்படி அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் வைரமுத்து நர்சிம்முடைய வாழ்க்கையும் கணக்கில் எடுத்துக்கொள்வார் என நம்புகிறேன்.

நான் எழுதும் செய்தி அதன் பின்னூட்டப் பகுதியில் வருவது.’மெல்லினங்கள் பாடுகண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்’ என்ற ஆண் குரலையடுத்து வருகிற பெண்குரல் ஆண் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மெல்லினத்திலேயே பாடுவதாக ’கார்க்கி’ பதிந்துள்ளார்.
(இந்த கார்க்கி வைரமுத்துவின் வாரிசு அல்ல என நம்புகிறேன்.)

நல்ல குறும்புக்காரன் இந்த கார்க்கி - என ரமேஷ்வைத்யா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் இத்தனை குறும்பை நான் எதிர்பார்க்கவில்லை.ஆண்குரலை அடுத்து...
’கங்கையே இங்கு வந்தது... சந்தமே ... தந்தது.அன்றில்கள் ரண்டு அட்டை போல்’ என பெண் குரல் பாடும் வல்லினம் தமிழில் ஒரு அசாதரணங்களில் ஒன்று.

எவ்வளவு வல்லினம் என்பதை அருமைத் தோழன் நேசமித்ரன் முழுப்பாடலையும் பின்னூட்டமாகப் போட்டு கார்க்கிக்கு மெய்ப்பிப்பார்.

அப்புறம்... என்னிக்கோ வருகிற அல்லது வந்துபோன பிறந்தநாளுக்காக நர்சிம்முக்கு வாழ்த்துக்கள்.கூவாகம் கட்டுரையில் வருகிற ‘ராஜ சுந்தர்ராஜன்’ அவரா இவரு. அல்லது இவரு வேறயா... கண்ணக் கட்டுதே!