Friday, February 26, 2010

ஆண்டு விழாக்கள்

நேற்று முந்தா நேற்று மாலைகளில் வேறுவேறு பள்ளிகளின் ஆண்டுவிழாக்களில் பார்வையாளனாகக் கலந்துகொண்டேன். இரண்டும் மெட்ரிகுலேசன் பள்ளிகள்.பொதுவாக பல ஊர்களின் பள்ளிகளின் ஆண்டுவிழாக்களைப் பார்த்ததில் மேதினியில் இரண்டுவகை.
ஓரளவு திட்டமிட்டு நடத்தி ஒன்பது பத்து மணிக்குள்ளாக வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகிறவர்கள் ஒருவகை. இன்னொரு ரகத்தினர் பழங்கால கோயில் விசேச அமைப்புகளில் பங்குகொண்டிருந்தவர்களின் வாரிசுகளாயிருந்து பள்ளி நடத்துகிறவர்கள்.உற்றார் சான்றோர் பெருந்தகைகள் வந்து இவர்களை வாழ்த்தி முடிய பத்து மணி ஆகும். அதற்குப்பிறகு குழந்தைகள் பரிசுவாங்கி... குத்து மற்றும் சூத்துப்பாடல்களுக்கு ஆட்டம் போட்டு கலைந்து களைத்துச் செல்ல  மணி ஒன்றோ இரண்டோ ஆகிவிடும்.
ஒவ்வொரு குழந்தையும் அந்த நான்கு நிமிட ஆட்டத்திற்காக ஐநூறு முதல் இரண்டாயிரம் வரை செலவு வைக்கிறார்கள். மகனாட மகளாடப் பார்த்து மகிழும் பெற்றோருக்கு அதுபற்றி குற்றச்சாட்டுகள் இல்லை: அது வேண்டியதுமில்லை.
மகிழ்ச்சியைப் பறித்துக்கொள்ள இன்றைய சூழலில் எவ்வளவோ உள்ளன. நாம் அகமகிழ உள்ளவை சில சந்தர்ப்பங்கள்தான். மிகமகிழவே செய்வோமாக.
ஆட்டத்துக்கு ஒலி பரப்பப்படுகிற பாடல்களை மட்டும் அதன் எழுத்து வடிவினை பள்ளி நிர்வாகிகள் படித்துவிடுவது உத்தமம்.
ஏனெனில் மனதில் என்னைப்போல எந்நேரமும் காமம் தேக்கிய ஏராளமான பாவிகளும் கலந்துகொள்ள வாய்ப்புள்ள நிகழ்ச்சி, இந்த ஆண்டுவிழா என்பது.இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பி ஆடப்பட்ட பாடல் ஒன்று...
 ‘ஊம்ப ஜாலே... ஊம்ப ஜாலே...’

Saturday, February 20, 2010

நடனம்

மவுனம் கலைய ஒரு கிறீச்சொலி
பேச்சு ஆரம்பமாகி
குவளையில் சரிகிறது
தனக்கென
கவலைகளற்ற ரசம்.
பேச்சரவத்தின் ஊடாக
ஆகாயத்தில் தொக்கி நின்ற
பாடலொன்று கூட்டத்தினரின்
தொண்டை ஒன்றினுள்
வளை அறுக்கிறது.
வியாபித்த குரலைச் சுற்றி
தோண்டத்தீராத பாடல்களின்
கண்ணிகள் சலனித்திசைகின்றன.
ஒருவர் எழுந்தாடுகிறார்.
ஆடுகிற அவர்
ஆட்டுவிக்கிறவராகிறார்.
தூங்கிய பின்னிரவின் பற்பல
விழிமூடல்களில் ஆட்டத்தின்
களைப்பு அனைவரையும்
தொற்றுகிறது.
அனைவரும் மறுநாட்காலை
வேறுவேறு நேரங்களில் தங்களது
சூரியனை எழுப்புகிறார்கள்.

Tuesday, February 16, 2010

சொல்

பிரக்ஞை  செம்மையுற்றால்
பொன்னுருவாகாது

Friday, February 5, 2010

துயில் குயிலாச்சுதடி

அத்த மனச் சூரியன்
எழுந்த மறுநாள்...
நக விளிம்பு காட்டி
குங்குமங் குளித்த சூரியன்
மெல்லமேலெழுந்து
தன்னிறம் மாற்றி
வட்டஞ்சுருங்கி மேலேறுகிறது.

கட்டிக் கதிரடித்து
 அம்பாரம் குவித்துக்
கோணிகள் மூடியும்
கொஞ்சும் மஞ்சளை
குனித்த கதிரிற்
காட்டும்  நெல்லுமாகப்
பின் பனிக் காலத்தின்
வயலதிகாலை.
படபடத்து இமைகள்
திறந்திறந்து மூடுகையில்
அடர் சாம்பல் இணை
வட்டங்கள்
 மயங்கி விளைந்து
குருகுகள் ஒழுங்கில்
வயலுக்கும் வானுக்கும்
தாவிப் படர்ந்து மறைகின்றன.

உள்ளுறங்கும் உன்னை
எழுப்ப நினைக்கிறேன். நீ
கனவிற் காணும் கதிரோ நிலவோ
வெப்பமும் குளிருமற்ற
ஒன்றாக
அமைந்திருக்கக்கூடுமோ என
அஞ்சி
 அப்படியே விட்டேன் உறங்க உன்னை.

மிதமிஞ்சிய இப்பகல் இறங்கும்
 மீந்திருக்கும் சூரியனை
கட்டடங்கள் மறைக்கின்றன.