Tuesday, December 29, 2009

2010- ஒரு புத்தாண்டு

புத்தாண்டு தினம் வருகிறது. நள்ளெண் யாமத்தில் ஒரு புது விண்மீன் தெரிகிறது என்றோ அது புதிய ஆண்டில் குளம்படி எடுத்து வைக்கிறது என்று எழுதவோ என்ன அற்புதமான வாய்ப்பு.

வாழ்த்துக்கூற வேண்டும் என நினைத்ததும் காலண்டர் பார்க்கத்தோன்றியது. அது தமிழ் மனப் பழக்கம். வியவ, பவ என எதையாவது எழுதி வைத்திருந்தால் அதைச் சொல்லி வாழ்த்தணுமில்லியா அதற்காக. அப்புறம் இது ஆங்கில ஆண்டு
என ஞாபகம் வந்தது.

ஆங்கில ஆண்டு என்று சொல்வதும் அடிமை மனமே இல்லையா... கிருத்துவ ஆண்டு.உலக நடப்பு ஆண்டு.
ஆகவே 2010 என நினைவும்... யாண்டு பல ஆயினும் நரை இல ஆகுக... என்கிற வாக்கியமும் நினைவு வர இந்த வாழ்த்து. எண்ணற்ற வாழ்த்து.

உடுக்கள் போல அளவிலியாய் அண்டங்களில் திரிகிற எண்ணிலும் என்னிலும் ஒன்றைக் காணும் எத்தனிப்பில் பொருளுள்ள அல்லது பொருளற்ற சடங்கை புன்னகையுடன் நினைவு கூர்ந்து  அன்பின் பகைவர், பகிர்வர்,பதிவர், சுற்றம்,நட்பு,  அடையாத் தொலைவின் ஒலி ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ளோர் யாவருக்குமாக என்றன் எளிய வாழ்த்து. வலிந்து பெறப்பட்ட கனிவிலும் கனவிலும் முகை விரித்த வாசச் சிறுமலர்.

தப்புத் தாளங்கள்...

நடப்புலக வாழ்விலிருந்து நான்கு நாட்கள் விலகியிருந்த நான் இன்று ஆனந்த விகடன் பார்க்க வாய்ப்புவந்தது.23.12.09 தேதியிட்ட இதழ். இதழின் 18,20,21 பக்கங்களைப் படிக்கும்போது ஒரு அரிய வாய்ப்பை தவறவிட்ட வருத்தம் வந்து சூழ்ந்தது.அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் குஷ்பு தொகுப்பாளராக இருந்திருக்கிறார் என்கிற முதற் செய்தியே என்னை பரவசத்திலும், அந்த நிகழ்வைத் தொலைக்காட்சிகளில் பார்க்காமல் தவறவிட்டோமே என்கிற வருத்தத்திலும் தள்ளியது.

’தமிழ் உச்சரிக்கத் தடுமாறும் நீங்கள் ஏன்  அவ்விழாவின் தொகுப்புப் பொறுப்பை எடுத்துக்கொண்டீர்கள்?’ என்பது விகடனின் கேள்வி.

‘தொகுப்புரை  மிக கவித்துவமான நடையில் அமைந்துவிட்டதால் அந்தத் தடுமாற்றம்’ என்பது குஷ்புவின் பதில். இந்த ஒரு பதில் போதுமே அவர் தமிழ்நாட்டை சமாளிக்க. மூத்த தமிழ்மகனின் ஆட்சியில் அவ்வளவு பேரும் இங்கே கவிஞர்கள்தான். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

கவித்துவத்தை   தவறவிட்டுவிட்டேனே என்றும் வருத்தம் வந்தது கூடுதலாக. குஷ்புவாலேயே அழியாத தமிழ் என்று முதல்வர் வேறு சமாளித்திருப் பார் போலிருக்கிறது. விழா மேடைகளை அல்லது விருது மேடைகளை ’இந்திரலோகம்’ அளவுக்கே மாற்ற முயலும் மாற்ற விரும்பும் பேராசையின் எளிய வெளிப்பாடுகள் இப்படிக் குமிழியிட்டு விடுகின்றன.

என்னென்ன மாதிரி குஷ்பு மொழிந்தார் என்பதற்கு விகடன் (பக்கம் 20-இல்) சொன்ன உதாரணங்கள் சாதாரணங்கள் அல்ல. உளியின் ஓசையை(இவ்வாறு ஒரு திடைப்படத்துக்கு கருணாநிதி வசனம் எழுதியுள்ளார்)- ஒலியின் ஓசை என்று வாசித்திருக்கிறார் குஷ்பு.

கவித்துவத் தமிழை ஆங்கிலத்தில் எழுதி வாசித்தாரோ அவர் என்கிற சிறிய ஐயம் அடுத்த எ.கா வில் தீர்ந்தது எனக்கு . பெரியாரின் கொள்கைகள் என்பதை ‘பெரியாரின் கொள்ளைகள்’ என சொல்லியிருக்கிறார்.

விடுதலை வளாகம் அடுத்து மைந்தன் கைக்கும் கட்டுப்பாட்டுக்கும் போகுமாறு வீரமணி.கி ஏற்பாடு செய்திருப்பதையும் அதை விட அய்யாவின் எழுத்துகளை தங்களைத் தவிர எந்த வெங்காயமும் புத்தகமாகப் புடுங்கப்படாது என வழக்காடித் திரிவதையும்  சமகால சூழலில் வாகாக வைத்து குஷ்பு விளையாடிவிட்டாரோ என்று தோன்றுகிறது. கறுப்புக்குடைகள், கறுப்பு உடைகள் ஆகிய அனைத்து மொத்தக்குத்தகை வியாபாரத்தையும் வீரமணி உரிமை கொண்டாடலாம்.

தமிழைப் படாத பாடு படுத்தினார் குஷ்பு என்று விகடனில் எழுதியிருக்கிறார்கள்.அவர் அப்படி வாழ வைத்த தமிழை வீழ வைத்து மனதறிந்து  வேடிக்கை பார்க்கிறவர் அல்ல என்று மனசுக்குப் படுகிறது.

ஆனால்,( என்  ஒரு தலை மற்றும்  தறுதலை நேசத்துக்குரிய பரிமள) அன்பான குஷ்பு ! நீங்க, எங்க பெருசுகள வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?





Wednesday, December 23, 2009

ஹைகூ

வெட்டவெளியில்
எரியும் அடுப்பு
நேற்று அங்கில்லை

Tuesday, December 22, 2009

குத்துங்கடா... உருவுங்கடா...

காற்றும் மழையும் கலந்தடித்துக்கொண்டிருந்த நவம்பர் 09 -2009 அன்றைக்கு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த வாரத்தில் மனதில் சட்டமன்ற நடவடிக்கைகள் பெரிதும் இடம்பூண்டிருந்தன.தமிழ்நாடு சட்டமன்றம் அல்ல.கர்நாடக சட்டமன்றம். முதல்வர் எடியூரப்பாவுக்கு இடியூரப்பாக்களாக இறங்கினர் ரெட்டி சகோதரர்கள் இருவர்.கதறி மனமுருகி என்னவோ செய்து எடி தாக்குப்பிடித்தார் தற்காலிகமாக.ரெட்டி சகோதரர்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு கோமணம் கட்டி பீப்பி ஊதும் ‘ஜெமினி’ ராசி இரட்டைக் குழந்தைகளைப் பார்க்கையில் ஏற்படும் பரவசம் உண்டானது.அப்படி ஜொலிப்பும் இணைப்புமாக அவர்கள் காட்சியளித்தனர்.

எடியூரப்பா மந்திரித்த கோழியாய் மாறிப்போனாலும் நெற்றியில் வைத்தபொட்டு அவரது வனப்பைக் காப்பாற்றவே செய்தது.மந்திரி சோபாவின் (பதவி) இறக்கத்தாலும் இரக்கத்தாலும், விதான் சௌதாவை அவர் மீண்டும் அலங்கரிப்பது உறுதியானது.சன் நியூஸ் சேனலில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.வேளச்சேரி மக்கள் வெள்ளத்தில் த்த்தளித்துக்கொண்டிருந்தார்கள்.திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்கத்தில் மூன்று அடித்துக்கொண்டுபோக த்வி லிங்கமாகிவிட்டது.சீக்கிரம் ஒரு குடமுழுக்கு உண்டு கோவை மாவட்டத்தில்.

சன் நியூஸ்- சேனலில் செய்தி ஓடிக்கொண்டிருக்கும் போதே சுண்டுவிரல் அகல நாடா ஒன்று சுருளாக ஓடுகிறது அடர்நீலப் பின்னணியில்.அதற்கு மேலே அகலங்கூடிய செவ்வகப் பட்டையில் ’சற்று முன்’ என்கிற ஃப்ளாஷ் நியூஸ்கள் ஓடுகின்றன.அது அவ்வப்போது விளம்பரப் பகுதியாகவும் மாறுகிறது.அதற்கும் மேலே அவ்வப்போது பங்குச்சந்தை மற்றும் பொன்வெள்ளி விலை நிலவரங்கள்.சேனலைத் தொடர்ந்து பார்த்தால் நீங்கள் ஒரு சதுராவதானி ஆவது திண்ணம்.

சாயங்கால நேரத்தில் திருநாவுக்கரசர் தில்லியில் காங்கிரஸில் இணைந்த ’சற்றுமுன்’ கிடைத்தபோது மேலே ’பங்குச் சந்தை நிலவரம்’ என்று ஓடியது.இயற்கையும் இதர மொழிகளும் சமயங்களில் ஏற்படுத்தும் நகைச்சுவை அலாதியானது. சமீபத்தில் அப்படித்தான் சிறையில் மட்டன் பிரியாணி கிடைக்கவில்லை என்று ஒருவர் தட்டைத் தூக்கி எறிந்தார்.எறிந்தவரின் பெயர் அஜ்மல் ‘கசாப்’.

பிறகு ஆதித்யா சேனலுக்கு மாறிவிட்டேன்.கட்டுரைக்கான ஆதார சம்பவம் நிகழ்ந்தது சன் – னின் ஏழு மணிப் பிரதான செய்தியில்.மகாராஷ்ட்ர மாநிலத்தில் சமாஜ்வாடி எம்.எல்.ஏ இந்தியில் பிரமாணம் எடுக்க முற்பட்டபோது மாற்றுக்கட்சி ஆட்கள் பாய்ந்து தாக்கிவிட்டார்கள்.தாக்கியவர்களில் நான்குபேர் நான்காண்டுகளுக்கு சஸ்பென்ஸ் செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.அவர்கள் ஒருவேளை ஐந்தாம் ஆண்டில் பதவிக்கு மீள்வார்களோ என நினைத்துக்கொண்டேன்.

அடிவாங்கும் நபரை ஒரு வீரப்பெண்மணி இடைப்புகுந்து காப்பாற்றினார். குழாயடிச் சண்டையில் குறுக்கே புகுந்து குருதி இழப்பைத் தடுக்கும் அப்படிப்பட்ட குறுந்தெய்வங்களை நேரில் பார்த்திருக்கிறேன்.தொலைக் காட்சியில் தரிசிப்பது இதுவே முதல்முறை.

தாக்கியவர்கள் ராஜ்தாக்கரே கட்சிக்காரர்கள்.இதை ராஜ் ’தாக்கறே’ என்று புரிந்துகொள்ளத் தக்கவிதமாகத்தான் கட்சியின் பெயரும் இருக்கிறது.’புத்துருவாக்கப் படை ’என்னும் பொருளில் நவ்நிர்மாண் சேனா. படையாம் படை.எந்தக் காலத்தில் எப்படிப் பெயர் பாருங்கள்.பெயர் சூட்டுவதற்குத் தமிழகத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும். ஒரு கண்கட்டு மயக்கத்தில் ‘குழுமம்’ என்று தொனிக்கக்கூடிய அளவில் கழகம் என்று வைத்திருக்கிறார்கள்.

மகாராஷ்ட்ராவில் பதவி ஏற்ற எம்.எல்.ஏ பிரமாணம் செய்தது லத்தீன் அல்லது பாரசீகம் போன்றவற்றில் அல்ல. இந்தியில்.நான் எழுத்துருக்களைக் கவனித்த அளவில் இந்தியில் c என்று போடுவதை மராட்டியில் < என்பது போல எழுதுவார்கள்.இது குறியீட்டுப் பொருளில் உரைக்கப்படுகிறது.யாரும் அகராதியுடன் சண்டைக்கு வரவேண்டாம்.வாய்ப்பிரயோக அளவிலும் அவ்வண்ணமான வித்யாசங்களே இருக்கக்கூடும். பாராளுமன்றர்கள் ஆங்கிலத்தில் பதவி ஏற்பதைக்கூடச் சகிக்கிற மராட்டியர்களுக்கு இந்தி ஏனோ பிடிக்காமற்போய்விட்டது.அல்லது மராட்டிப் பற்று மலையளவு ஏறிவிட்டது. அல்லது இதில் மேலும் சில உள் விவரங்கள் உள.

மராட்டியை எனக்கு ஐந்து வயதில் இருந்து தெரியும் - பள்ளிக்கூட பிரேயர்களில் நின்றதன் வாயிலாக.பஞ்சாப ஸிந்து குஜராட்ட மராட்டா... எனப் பாடுகையில் இந்த மராட் என்னமோ செய்யும்.மெல்லினத்தில்(ம) தொடங்கி இடையின(ர) ஊடாக வல்லின(ட)த்தை அடைகிற ஒலிக்கோர்வை அதன் காரணமாக இருக்கலாம்.

அப்புறம் பத்தாம் வகுப்புப் பருவத்தில் ’சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு’ என்று பாடிய பாரதி. கவிதையைக் கூட கர்ஜிப்பார்களோ!

விஜய் டெண்டுல்கர் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை மராட்டாவின் வேறுபல மாதிரிகளும் இருக்கலாம்.வாழிய மராட்டா!

தில்லி ராஜதானி முதல் ராஜபாளையம் வரை பற்பல இடங்களில் மன்றக்கூச்சல்கள் இவ்விதமாய் இருக்கின்றன.மக்களுக்கு எதாவது செய்வார்கள் என நம்பி அனுப்பப் படுகிறவர்கள், எவ்வளவோ செய்யறோம் இதையும் செய்யமாட்டோமா? எனக் கிளம்பிவிடுகிறார்கள்.

இந்தியில் வீறுகொண்டு பிரமாணித்த அந்த வெள்ளை ஜிப்பா மனிதரின் முகம் மறுநாளும் மங்கலாக நினைவில் இருக்கிறது.

இதை எழுத முற்படும்போது ‘சிங்க மராட்டியர்’ என்றுதான் தலைப்புத் தோன்றியது.சிங்கங்கள் செய்ததென்ன பாவம்? ஆகவே..வன்முறைச் சுவையை மனதில்கொண்டு மேற்படித்தலைப்பை வைத்தேன்.எங்கேயோ கேட்டமாதிரி இருந்தால் சங்கத்தமிழும் சிங்கத் தமிழருமே பொறுப்பு.

Monday, December 21, 2009

கே.பி.சுந்தராம்பாளும் கருணாநிதியும் கமல்ஹாசனும் பின்னே ஞானும்...

முந்தாநாள் அதிகாலை ஒரு கனவு.

முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள் இருந்து கே.பி . சுந்தராம்பாள் வருகிறார்.அவரது கைகளில் ஓலைச்சுவடி இருக்கிறது. அவர் ஜோசியக்காரராக என் மனதுக்குப் படுகிறது. அடுத்து அவர் மரத்தடி ஜோசியக்காரருடன் அமர்ந்து உரையாடுகிறார். உண்மையில் அது விவாதம். எனக்கே கூட அது சுந்தராம்பாளாக இருக்க வாய்ப்பில்லை என்று படுகிறது. அவர் இறந்துவிட்டார் என்பது காரணமில்லை.ஏனோ ஒரு தோணல், அவராக இருக்க வாய்ப்பில்லை என்று படுகிறது.

ஜோசியக்காரரின் பிரச்சனை வேறு . அவர் சுந்தராம்பாள் இறந்துவிட்டார் என நினைக்கவில்லை. ஆனால், அது சுந்தராம்பாளாக இருக்கக்கூடாது என விரும்புகிறார். அவரது தொழில் போட்டி.தான் நுழைய வேண்டிய இடத்துக்கு அந்த அம்மா எப்படிப் போகலாம் என்பது அவரது பாவனையில் தொனிக்கிறது.

திரும்பவும் அவர் கருணாநிதியின் வீட்டுக்குள் செல்கிறார்.மதில் தாண்டியதும் அவரது கனவுப் பாத்திரம் முடிகிறது.இப்போது நான் பாடுகிறேன். இப்போதும் எனது கனவிருப்பு சாரீர நிலையையே எட்டியிருக்கிறது.ஒரு பாடலை அச்சு அசலாகப் பாடுகிறேன்.(பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே என்பது போன்ற ஆன்மாவுக்கு நெருக்கமான பாடலாக அது இருக்கக்கூடும்- பாடல் நினைவில்லை.)

அடுத்து பாடலின் இசைக்கோர்வைகளையும் எனது வாயாலேயே இசைக்கிறேன். அடுத்துப் பாடும்போது குரலில் பிசிறு தட்டுகிறது. இப்போது கமலைப் பார்க்கிறேன். இருவரும் அடுத்த நொடியே ஒரு இருட்டுக்குள் செல்கிறோம். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள இயலவில்லை.நான் ஒரு பாறைமேல் அமர்ந்திருக்கிறேன்.

எனக்கு மூச்சா வருகிறது எனக் கமலிடம் தெரிவிக்கிறேன்.அவர் அந்த மேனிக்கே அடிக்குமாறு பரிந்துரைக்கிறார். நான் முக்கிப் பார்க்கிறேன் மூச்சா வரவில்லை.அந்த முக்கலில் இருந்த இடம் வெளிச்சமாகிறது. அது கொடைக்கானலில் உள்ள குணா குகை.

அதைப்பார்த்ததும் விழித்துவிட்டேன். அப்புறம் எழுந்து பாத்ரூம் போனேன். மெத்தை போர்வைகள் தப்பித்தன. விழித்த நிலையில் கனவின் சரடுகளை ஆராய ஆரம்பித்தேன்.
‘வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்’ என்று பாடுகிற அவ்வைசுந்தராம்பாளுக்கு(இது கமல் லிங்க்) ஜோசியத் தோற்றம் பொருத்தம்தான்.கையில் சுவடி ஜோசியக்காரர்களுக்கும் புலவருக்கும் உரியதே.

கருணாவும் ஜோசியம் பார்க்கக்கூடும் என்பது மஞ்சள் சாட்சி.சமீபத்திய குலச்சாமி கோயில் தரிசனம் சாட்சி.ஜோசியக்காரன் பிழைப்பைக் காக்க நினைக்கும்:தக்கவைக்க நினைக்கும் எனது பிரதிநிதி என நினைக்கிறேன்.

கனவில் வந்த மற்ற மூவரின் அடையாளம் ஆங்கில எழுத்து கே.வில் தொடங்குகிறது.குணா பாறை ஏன் வந்தது. என்ன கேயாஸ் தியரி...குரலிலும் பிற்பாடு உருவிலும் கூட சுந்தராம்பாளுக்கு இணை வந்து விட்ட எஸ்.வரலட்சுமி காரணமா...

குணா படத்தில் கமலின் அம்மா.பாடல்; உன்னை நானறிவேன் என்னயன்றி யாரறிவார்?...
(அல்லது ராஜராஜ சோழனில் ,’ஏடு’ தந்தானடி தில்லையிலே பாடலை கைச்சுவடியுடன் நினைவு கொள்ளலாம்.)

கனவை யோசிக்க யோசிக்க காலைப்பொழுது சுவாரசியாக கன்னித்தீவு போல நீண்டுகொண்டிருந்தது.காலையில் தினத் தந்தி பார்த்தால் தலைப்புச்செய்தி,’கலைஞர் கருணாநிதிக்கு மூத்த தமிழ் மகன் விருது.’

சங்கதி இதுதானா... இளைய மகன்களுக்கு இப்படியான கனவுகள்கூட வராவிட்டால் நாட்டில் பிறகு என்னதான் நடக்கும்.

Sunday, December 20, 2009

தலைமைக் கழகப் பேச்சாளர்கள்

நன்னிலம் நடராஜன், பொத்தனூர் மணிமாறன்,திருப்பூர் கூத்தரசன்,பொத்தனூர் மணி மாறன்,திருப்பூர் விஜயா,புதுக்கோட்டை விஜயா, வண்ணை ஸ்டெல்லா... ஊர்ப்பெயரை முன்னால் வைக்காத கட்சிப்பேச்சாளர்களைத் தேடிக்கண்டு பிடிக்கவேண்டும்.

ஊர்ப்பெயரையே கொஞ்சம் மாற்றி, கலிங்கத்துப்பரணியினை நினைவூட்டும் விதமாக வைத்துக்கொள்ளும் வாய்ப்பை இழந்து தமிழ்ப்பெயர் வைத்துக்கொண்டவர் ஜெயங்கொண்டானைச் சேர்ந்த வெற்றிகொண்டான்.’நெல்லை’ கண்ணனை இதில் யோசனையுடன் சேர்த்துக்கொள்கிறேன்.’கடையிலே பொருளில்லை கஜானாவுக்கு அடித்துக்கொள்கிறார்கள்’ என சேர்ந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸையே கலங்கடித்தவர் அவர்.

ஊர்ப்பெயரை வைத்துக்கொள்ளாதவர்களும் வேறெதாவது ஒன்றை ஒட்டு வைத்துக்கொள்வார்கள். தீப்பொறி ஆறுமுகம், தமிழருவி மணியன் இப்படி. தமிழருவி அறிவுத்தளத்தில் இப்போது காங்கிரஸுக்கு ஆப்பு வைத்துக்கொண்டிருக்கிறார். சுரத்திடை பெய்த மழை.

எனது ஞாபகத்தில் இருந்து சிலவற்றைப் பதிவு செய்யுமுன் தமிழ்ப் பதிப்பகங்களுக்கு ஒரு ஆலோசனை. பேச்சாளர்களை கேள்விகளுடன் அணுகி (சுமாராக 50 கேள்விகள்) அவர்களது பதில்களைத் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டுவரலாம். அது தமிழின் சமகால ஆவணங்களில் ஒன்றாகத் திகழும். கொஞ்சம் பொருட்செலவு பிடிக்கக்கூடிய இந்த வெட்டி வேலையை யார் செய்யக்கூடும் எனத்தெரியவில்லை.
(இப்படியான எனது கனாத் திட்டத்திற்கு மூன்று ஒலிநாடாக்கள் பேசிக்கொடுத்த புதுக்கோட்டை விஜயாவுக்கு பயனிலி நன்றியைப் பகிர்ந்துகொள்கிறேன்.) இந்த வெட்டிவேலைக்கு எனது அரசியல் அறிவை (முன்னால் பேச்சாளன் நான்:மற்றவை மந்தணம்) உபயோகிக்கத் தருவேன். கம்மியான செய்கூலியில்.

தீப்பொறி ஆறுமுகத்துக்கு உண்மையில் எரிமலை என்பது மாதிரிப் பெயர்தான் வைத்திருக்கவேண்டும்.தீப்பொறியும் வெற்றிகொண்டானும் தான் பதினைந்து இருபது மைல் சைக்கிள் எடுத்துக்கொண்டு போய் கேட்கிற பட்டாளத்தின் வியர்வையைச் சம்பாதித்தவர்கள்.

முன்பொரு சமயம் ஆற்காட்டில் ( அது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நேரம்) கூட்டம் பேச வந்திருந்த வெற்றிகொண்டான் (அப்போது அவர் வெ.கொ அல்ல) தீப்பொறியை ரசனையோடு சிலாகித்தார். ஆறுமுகம் ஒரு கஜல் பாடகன் என்பது போல இருந்தது வெற்றிகொண்டானின் விதந்துரை.

ஆனால் அன்றைக்கு வெற்றிகொண்டானின் பேச்சில் தெறித்த நிஜமான தீப்பொறி வேறு. அந்த உள்ளடக்கத்தை அவரது (சில மாறிப்போய்விட்ட )வார்த்தைகளில் நினைவுபடுத்திக்கொள்கிறேன்.

“இங்க பாருங்க... நான் வெற்றிகொண்டான். தி.மு.கவுல ஒரு ஒன்றியச் செயலாளர் கூடக் கிடையாது. ஒரு சாதாரணப் பேச்சாளன். இப்ப நான் கார்ல வந்து எறங்கினேன் பாத்தீங்கள்ல... தம்பி சுப்பிரமணி கிட்ட வந்து என்னயக் கூட்டிக்கிட்டு வந்தாப்டி. சுத்தி நாலஞ்சு உடன்பிறப்புகள் இருந்தாங்க. இப்ப எனக்கு குண்டு வச்சாங்கன்னு வைங்க... ஒரு நாலஞ்சு பேராவது தி.மு.க காரன் சாவமா இல்லியா?... எனக்கே இப்படின்னா, ஒரு வருங்காலப் பிரதமர்...நேரு பேரன்! அந்த ஆளு செத்துப்போறாரு..கூட பத்துப்பதினஞ்சு பேரு செத்துப்போறாங்க... ஏங்க...யோசிச்சுப்பாருங்க... ஒரு..ஒரு காங்கிரஸ்காரன்கூட சாகலைன்னா அது எப்படிங்க?”

யோசிக்கத்தீராத கேள்வியாகத்தான் இன்னிக்கும் இருக்கு இல்லீங்களா?

Saturday, December 19, 2009

வைப்பாற்று நதிக்கரை....

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இதற்கு முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று அழைக்கப்பட்டு வந்தது.95 வாக்கில் நான் மதுரையில் இருந்தபோது அதில் நான் அங்கத்தினனாக இருந்தேன்.

எழுதுகிறதை விட அருப்புக்கோட்டை,ராஜபாளையம்,கோவில்பட்டி,விருதுநகர்,எட்டயபுரம் என பேருந்து ஏறிப்போய் ஏறிப்போய் கலை இரவு பார்ப்பதுதான் அப்போது விருப்பமாக இருந்தது.மதுரையில் இருந்து போவதற்குள் நன்மாறன் பேசி முடித்திருப்பார். நன்மாறன் நன்றாகப் பேசினார்- என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.நான் நன்மாறனைப் பார்த்ததில்லை. பார்த்ததும் அறிவாளியைப்போலத் தோற்றம் காட்டுகிற வனப்பும் அவருக்கு இல்லை. நான் பலநாட்கள் எஸ்.ஏ.பெருமாளைப் பார்த்துவிட்டு ‘இவர்தான் நன்மாறன்’ என நினைத்துக்கொண்டிருந்தேன். எஸ்.ஏ.பியின் தோற்றம் அப்படி.

எதோ ஒரு ஊரில் நன்மாறனின் பெயர் ஒலிக்கப்பட்டு அவர் வந்து பேசியதைக் கேட்டேன்.அனேகமாக அது இப்போதைய என் மாவட்டத் தலை நகரான் திருப்பூரிலாக இருக்கவேண்டும்.சிறுகதைகளில் புதுமைப்பித்தன் காட்டிய அவ்வளவையும் அவர் பேச்சில் காட்டினார். அவர் பேசுங்கால் பல ஊர்களில் சிரிப்புத்தாளாமல் எழுந்து பத்திருபது மீட்டர்கள் எழுந்து ஓடியிருக்கிறேன்.

இப்படி எவ்வளவோ நினைவுகளை உள்ளடக்கிய த.மு.எ.ச வில் மாதவராஜையும் சந்தித்தேன். சாத்தூர் கிளையில் அப்போது இருந்தார். இப்போது இருக்கிறாரா தெரியவில்லை. ’வீர சுதந்திரம் வேண்டி’ என்று வருடம் தவறாமல் மறுபதிப்புக்கோ அல்லது சின்னவயதுப் பாடப்புத்தகத்துக்கோ தகுதியான அந்த நூலை சாத்தூர் கிளை வெளியிட்டிருக்கிறது. அந்தப் புத்தகங்களை தூக்கிச் சுமந்த நினைவுகள் தனி.

சாத்தூர் வைப்பாற்றின் கரையில் இருக்கிறது.எஸ்.லட்சுமணப்பெருமாள் (இவர் ஒரு நாவாலும் பேனாவாலும் கதைஞர்),லட்சுமி காந்தன்(காட்சிக்கு இனியன் கவிஞன் என தன்னை நம்புபவன்),காமராஜ்,தியாகு,கார்த்திக்குகள் என சிறிய வட்டம் எனக்கு சாத்தூரில் உருவானது.

தொடர்ந்து கதைகள் எழுதுவார் எனப் பலராலும் நம்பப்பட்ட மாதவராஜ் 2000 வாக்கில் மும்மரமாக கணினியில் புகுந்து கற்றுக்கொள்ளப்போனார். நான், பாண்டியன் கிராம வங்கி வேலையை விட்டுவிட்டு கணினித் துறைக்குப் போகப்போகிறார் என நம்புமளவு அவரது தீவிரம் இருந்தது.அவரது இந்த வார கட்டுரைகளைப் படிக்கையில் அவர் அப்படிக்கூட செய்திருக்கலாம் என்றுபடுகிறது.

பிளாக் ஆரம்பித்தார். அவரது தூண்டுதலில் ச.தமிழ்ச்செல்வனின் ‘தமிழ் வீதி’ உருவாகி அந்த வீதியில் நானும் இருக்கிறேன் என்பது மகிழ்வளிக்கிறது.இதுகாறும் மனையில் வந்த பலவற்றை (சேவு செய்து) தொகுத்து மூன்று புத்தகங்களாகவும் அதுதவிர அவரே எழுதியவற்றின் தொகுப்பு ஒன்றையும் வெளியிட இருக்கிறார் மாதவராஜ்.கவிதைகள் மற்றும் கட்டுரைகளாக அவை ‘வம்சி வெளியீடு’

தொகுப்புகள் பற்றிய விவரத்தை அடுத்து எழுதுவதற்குமுன்... புத்தகங்கள் வரட்டும் வரட்டும் எனக் காத்திருக்கிறேன். இந்த மழைப்பருவத்துக்கு என் பிரியநதி வைப்பாற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

Wednesday, December 16, 2009

இயலாமை

வெற்றிடமாக் காணும்
பெருவெளியில் நேசத்தை
(அழுக்குருண்டை போல
சுகமாய்த் திரளுவதுஅது)
மெல்லமனதில் திரட்ட
அது ஒரு கோள வடிவத்தினை
எடுத்து
கரகரவெனச் சுற்றி மேல்
கீழற்ற
-பிரக்ஞைக் குறிப்புகள்
வசத்திலில்லை-
விதமாகச் சுழன்று சுற்றி
மோதி நின்ற இடம் உன்
காற் பெரு விரலின் நகமாய்
இருந்தது.

உருவகித்த பொருளின்
பிரதிநிதி நீயே எனக் கற்பிதம்.
மோகமும் பேரமும் ஒருங்கே
பேசி
‘சீக்கிர’ங்களுக்கு மத்தியில்
இடம்பிடித்தபோது
நீட்டலளவையை ஊதிப்
பெரிதாக்கும் உள்ளுறை
உயிரிழந்திருந்தது.
தோற்று நடந்த அதிகாலை
வானின் கீழ்
விண்மீன்கள் மங்கிக்கொண்டிருந்தன.
நண்பகலில் தூக்கம் வந்தது-
கறைபட்ட வரைபடத்தின்
ஈரத்தின் மேலாக.

Friday, December 11, 2009

இன்று திருவண்ணாமலையில்...

குளிர் காலம். திருவண்ணாமலை மார்கழிகள் தோறும் வரவேற்றுக்கொண்டிருக்கிறது என்னை. முன்பெல்லாம் டிசம்பர்- 31 கலை இரவு நிகழ்ச்சிகளுக்காக வந்து போய்க்கொண்டிருந்தது. கலை இரவு என்கிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்ச்சி வடிவம் அனேகமாக வழக்கொழிந்து போய்விட்டது என நினைக்கிறேன்.

சரியாக கடைசி மாநில மாநாட்டில் அவர்கள் ; ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்’ எனப் பெயர்மாற்ரியதிலிருந்து இந்த மாற்றம் தொடங்குகிறது. இனி ஒருவேளை எங்காவது கலை இரவுகள் நடந்தாலும் முந்தைய பொலிவில் நடைபெறுவது சந்தேகம்தான். தோழர்கள் களைத்துப்போய்விட்டார்கள்.

இம்முறை திருவண்ணாமலை வந்தது வம்சி புத்தக வெளியீடு வேலைகள் சம்பந்தமாக. மாதவராஜின் தீராத பக்கங்களிலிருந்து மூன்றோ இரண்டோ புத்தகங்கள் வெளிவருவது மகிழ்ச்சியாய் இருந்தது.பொறுப்பை பெரிய அளவு சிரமேற்கொள்ளாமல் புரூஃப் பார்ப்பது சுவாரசியமான அனுபவம். நேற்ரு தனிமையின் இசை’- அய்யனார் விஸ்வநாத்தின் இரண்டு கவிதைப்புத்தகங்கள் வாசித்தேன். துபாயிலிருக்கிற நண்பன் கிளம்பி இந்தியா வந்துவிட்டால் தேவலை என மனதார நினைத்தேன்.

எண்ணெய் மண்டலத்திடையே பற்றியெரியும் காதல் தீ. வாழ்வில் வந்து போகிற பெண்கள் சும்மாவும் போகாமல் செண்ட் வாசம் கிட்டத்தில் அடிக்கிற மாதிரி ஒருதடவை வந்துவிட்டுச் சென்றுவிடுவார்கள் போலிருக்கிறது.
நேசத்தின் நெய் ,மண் அகலில் இட்ட திரிச்சுடராய் மென்கருகலோடு மணக்கிறது. இருதயத்தை இரண்டாய் வெட்டி கிளியாஞ்சட்டிகள் ஆக்குவது பற்றி கற்பனை செய்தேன்.

நினைத்துக்கொண்டேன்,
’பாழுந் தனிமையில் பெட்ரோல் ஊற்றிக்கொளுத்த’.

Monday, December 7, 2009

முழுமை

கருக்கொண்டு பருத்திரண்டு
முற்றுமதன் அங்கங்கள்
உருவாகி உலவுலாவி
அசைந்தும் புரண்டும்
நகர்ந்தும் எழுந்தும்
நீண்டோ உயர்ந்தோ
குறுக்கிற் பெருத்தோ
உயிரென்னும் பெயரில்
உலவிடும் ‘விந்தை’.
ஓருயிர் முதலாம் ஆறுயிர்
உயிரிடை ...அளவிற்
சிதைந்தும் ஆக்கலிற்
கலைந்தும் பாதியிற்
போதல் பகரவும்
துக்கமாம் பாவியேன்
சொற்களில்...

Sunday, December 6, 2009

ரச மட்டம்

சமீபத்தில் உள்ளறையில் இருந்தவாறு வெளியில் ஒலித்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிச் செய்தியை காது மடுத்துக்கொண்டிருந்தேன்.’இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டிடத்தை’ என்று அது விளம்பிக்கொண்டிருந்தது.ஆங்... நீங்கள் யூகிக்கிறது சரியேதான்.

இந்த செய்தியாளர்களே இப்படித்தான் முறையாக எதையாவது சொல்கிறார்களா? பீளமேட்டில் இரட்டைக்கொலை ஆகவே கோயமுத்தூரே பதட்டம் என்கிற ரீதியிலும் பலசெய்திகள் சொல்லுகிறார்கள். பரபரப்பு என்பதற்குக் குறைவான உணர்ச்சி நிலையே இருக்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டமாதிரி.

எல்லா ஊரும் கண்ணகியைக் கண்டிட்ட மதுரை மாதிரி(அல்லலுற்றாற்றாதழ்

Saturday, December 5, 2009

ஆடிப்போதல்

அலைபேசி நிறுவனங்களின் செலவு தரும் செய்திகள் அல்லது இன்பம் நல்கும் செய்திகளில் இருந்து தப்ப ஒரு மார்க்கம் உண்டா எனத் தெரியவில்லை. மாதக்கட்டணம் வெறும் முப்பதே ரூபாய்தான் என ஆரம்பித்து பெண்குரல்கள். ஜோசியம் சொல்றோம், ஜோக் சொல்றோம்,ஜொள்ளு சொல்றோம், குழந்தைக்கு கதை சொல்றோம்,பாட்டுப்போடறொம் என விதவிதமாக பின்னிப்பெடலெடுக்கிறார்கள்.

ஒரு விவஸ்தை கெட்ட உறவைப்போலவும்,குடிப்பழக்க அன்பர்களைப்போலவும் நமது நிலை அறியாது அடகு வைத்து விட்டு வருகையில்,ஆயி போகையில்,அடுப்படியில் பால் காய்ச்சுகையில் என வினோத நேரங்கள் பார்த்து அழைத்து நாம் ஆவலுடன் அல்லது பதற்றத்துடன் வந்து எடுத்தால் இந்த ரெகார்டட் செய்திகள்.

கட் பண்ணிவிட்டு அடுத்து நாம் போன் செய்தால் இந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வேறொரு பதிவு செய்யப்பட்ட செய்தி வரும்.இந்த எண்ணை இப்படியான காரியங்களுக்கு அழைக்காதீர்கள்... நானெல்லாம் ரொம்பப்பாவமுங்க’ என்று பதிவு செய்துகொள்ள எதாவது ஏற்பாடு இருக்கிறதா எனத் தேடவேண்டும்.

இன்று காலையில் கழிப்பறையில் இருக்கையில் ஒரு அழைப்புச்சத்தம். ’வரும் ஆனா வராது’ என்கிற கடுமையான கண்டிஷன். வெளியே ஓடி வந்து எடுத்தால் ஆண்குரல். இது வாழ்வினிலே முதல்முறை. ஜோக் சொல்கிறது.

புது படம் ஒன்றுக்கு புக் பண்ண நயன்தாராவைச் சந்திக்கப்போன புரட்யூஷர் அவர் கேட்ட சம்பளத்தைக்கேட்டு ஆடிப்போயிட்டாராம். அதுசரி, தியேட்டரில் புரட்யூஷர் வந்து ஆடினால் ஜனங்க ஆடிப்போக மாட்டாங்களா?

நல்லஜோக்தான்.இதற்கான மாதக்கட்டண விகிதங்களைக் கேட்டுக்கொள்ளாமல் நான் உள்ளேபோய் வெளியே போக ஆரம்பித்தேன்.

ஆடிப்போகவைக்காம அடங்கமாட்டார்கள் போலத்தான் தெரிகிறது.

Thursday, December 3, 2009

உலக வாழ்வு தரும் கேள்விகள்

பின்னூட்டம் என்பதன் பொருளுக்கு மேலும் செறிவு கூடியது என்னளவில் இன்று.பின்னால் வரும் கருத்து என்கிற அளவில் சௌகரியப் பொருள் கொண்டிருந்த எனக்கு இதன் முந்தைய பதிவுக்கு ஜகநாதன் தந்த பின்னூட்டங்கள் பின்+ஊட்டம் என விளங்கப்பண்ணின.

பகிர்கிறவதை விட அதிகமான ‘கேரக்டர்’களில் பின்வினைகள் வருகிறபோது மகிழ்வும் உடம்பில் ஆகார சக்தியும் மூளையில் ஆதாரத் திறப்புகளும் இருந்தால் சிந்தனையும் ஏற்படுகிறது. உலகத்தின் விரிவு பற்றி (இது பிரபஞ்ச பிரமாண்டமே போன்றது)- ஜகன் தெள்ளிதின் எடுத்துரைத்திருந்தான்.

கோபிகிருஷ்ணன் உலக அளவில் அறிந்திருக்கப்படவேண்டியவர் என நான் எழுதப்போந்தது ,யான்பெற்ற இன்பம்... என்கிற பாலூட்டு வகையையும் பாராட்டு வகையும் சேர்ந்தது.உலகம் முழுக்க அறியப்பட்டவர் என்றால் ஏசுநாதரைத்தான் சொல்லமுடியும்.ஒரு 75 சதவீதம் பேராவது அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன். அதிலும் பாம்புபல்லி முதலாக எறும்பெருமை ஈறான பற்பலபற்பல உயிரிகள் அவரை அறிந்திருக்காது. உலகம் என்பது மனிதர்கள் மட்டுமன்று. ஆனால் ‘மனிதர் மாட்டு’ என்பது ஆறாம் அறிவுடைத்த இருகாலிகளின் நம்பகம்.

அங்கே இடி முழங்குது... பாடல் பாடிய தேக்கம்பட்டி சுந்தர்ராசன் இறந்துவிட்டாரா எனத் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும். களையெடுக்க வந்த 50 வயது அளவிடத்தக்க எங்க ஊர்ப்பெண்மணி ‘அவரு ஏசுநோய் வந்து செத்துப்போயிட்டாரு’ என்று சொன்னபோது திகைத்துப் போய்விட்டேன். ஒன்று அவர் மதம் மாறி இறந்திருக்கவேண்டும். அல்லால் எய்ட்ஸ். ஆனாலும் உள்ளங்கை காயமாகிக் குருதி கொப்பளிக்கும் நிலையிலும் உதவிக்கரம் நீட்டுகிற தெய்வம் யேசுவன்றி வேறார்.எய்ட்ஸ் என்பதை உதவி எனப் பொருள் கொள்க.

மிகை நவிற்சியாக சிலதை வெளிப்படுத்துகிறோம்.
‘வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்குவாழும் உயிர்க்கெலாம்’ என்றும் பாடுகிற (ஏரியாவ சொல்லி சோறு கேக்கலீனா நம்மாளுக செவிக்குணவு அப்படி இப்படின்னு சொல்லி வயித்துல தட்டிருவாங்க) பாரதி, ’தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ‘ஜக’த்தினை அழித்திடுவோம்’ என்கிறான். ’தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் சோத்தினை அளித்திடுவோம்’ என்று பாடுவதல்லவா சிலாக்கியம்.என்ன நடந்திருக்குன்னு புரிஞ்சுக்கலாம்னா பெருசே பட்னி கிடந்து ஒருநேரமோ ரெண்டு நேரமோ சோத்துக்கு வீங்கீருக்கு.

அதும் கஞ்சாப் போத தீர்ந்ததும் சோறு கிடைக்காம இருந்தா என்னதான் ஆகும் ‘அன்னந்தான் கிட்டாதெனில் அண்டந்தனை (அண்டா அல்ல) அழித்திடுவோம்’ எனவும் பாடவேண்டியதுதான்.பரந்து கெடுக இவ்வுலகியற்றியான் என்று செந்நாப்போதர் சொல்லவில்லையா. அப்டி...அப்டி.

ஊர் சிரித்தது என்பதையெல்லாம் விட்டொழித்து விழாக்காலம் ஆகிறது.ஆக உலகம் என இனி எழுதுவதற்கு முன் இனிக்கொஞ்சம் யோசிக்கிறேன்.ஈ ஜகமுலோனா எந்தோ உந்தி.

Wednesday, December 2, 2009

மானுட வாழ்வில் வரும் கனவு...

இன்றைக்கு உறக்கத்தில் கோபிகிருஷ்ணனைப் பார்த்தேன். முந்தைய இரவின் நாளைக் கழித்துக் கட்டிவிட்டே உறங்கச் சென்றதால் அதை இன்றைய கனவு என உறுதியாகக்கூறலாம்.முன்னிரவில் அல்லது நள்ளிரவில் காணும் கனவுகள் - இடைத் தூக்கம் விழிக்காவிட்டால் - அனேகமாக மறந்துவிடும் என்றுதான் நினைக்கிறேன்.

ஆகவே, எழுத்தாளர் கோபியைப் பார்த்தது அதிகாலைக் கனவில்தான்.நல்ல கறுத்த நீளமான முடியும் முன் வழுக்கையும் கொண்டவராகக் காணப்பட்ட அவர் ஆனந்தன் என்ற பெய்ரில் வந்தார்.நிறம்,உடை (இன்று அணிந்திருந்த சாந்துப்பொட்டு நிறத்திலான முழுக்கை சட்டையில் அவரை ஒருதடவையும் பார்த்ததில்லை நான்) போன்றவற்றில் அவரென அறுதியிட முடியாதிருந்தும். அதே கண்கள், கன்னக் கதுப்புகள்.

கனவுக்கும் விழிப்புக்குமான கால இடைவெளியும் மனவெளியுமே பக்கபக்கத்தில் இருந்திருக்கவேண்டும்.தர்க்கமாக யோசித்தது கனவின் ஊடாகவேவா அல்லது விழித்த துவக்கக் கணங்களிலா என்பது கூடத் தெரியாத மயக்கம்.

கோபி ஆனந்தன் என்ற பெயரில் வருவது ‘மானுட வாழ்வு தரும் ஆனந்தம்’ என்ற தொகுப்புத் தலைப்பினாலா. ஏன் அவர் ’தூயோன்’ என வரவில்லை. தர்க்கம் அல்லது நிகழ்கூறுவெளிகளை என் மனம் உறக்கத்திலும் ஆதரித்து ஆனந்தன் என்ற பெயரைச் சூட்டியதா?

ஜ்யோவராம் சுந்தர்- சிவராம் இணை கொடுத்திருந்த கோபி நூல்கள் பற்றிய அறிவிப்பை காலம் தாழ்த்திப் பார்த்ததால் வந்த கனவா?

கார்த்திகை தீபத்தின் நாளில் வந்த கனவு இது என்கிறபோது இறுதியாக நான் அவரைப் பார்த்தது திருவண்ணாமலையில்தான் என- அறுதியிட முடியாதது இது- நினைவும் வருகிறது.

கோபிகிருஷ்ணன் தவறுவதற்கு பத்துப்பதினைந்து தினங்களுக்கு முன் அவரது நூல் ஒன்றுக்கு ஒரு வாராந்திரியில் அறிமுகம் எழுதினேன். மைப்பிரதி இப்படித்தொடங்கியது...

‘உலக அளவில் பேசப்பட்டிருக்க வேண்டியவர். உள்ளூரிலேயே கண்டு கொள்ளப்படாதவர்...’

அச்சிடப்பட்டது இப்படி,

கோபிகிருஷ்ணன்... உள்ளூரிலேயே கண்டுகொள்ளப்படாதவர்.

‘லே அவுட்’ எனது நவிற்சியை விழுங்கிவிட்டது.

அவரது அஞ்சலிக்கூட்டத்தில் இந்த விஷயத்தைப் பேசும்படி நிகழ்வுகள் விதித்தன.
இப்போது இதை எழுதிக்கொண்டு இருக்கும்பொழுதும் ஒருமுறை பாதியில் மின்சாரம் போய்விட்டது. முதலிலிருந்து இரும்பு காய்ச்சவேண்டும் என்றுதான் நினைத்தேன். தப்பித்துவிட்டது.

ககன வெளி பற்றியும் கனவுகள் பற்றியும் ஒருங்கே யோசிக்கிறேன்.

Monday, November 30, 2009

முகிழ்த்தல்

எரியும் உருகும்
ஒரு பொருள் எனது
இதயமாக இருக்கலாம்.
சுடரில் வடிவுறும் சலனம்
நின் முகமாகும் ஆதலின்
கற்பூரம் கமழ்கிறது
ஆராதனை முற்றத்தெங்கும்.
பற்றற்றுக் கிடந்தேன்
நேற்றது வரை.
நேற்றுப் போகிற போக்கில்
ஓரக்கண் பார்த்து
ஒரு பூப் பூத்தது.

(நன்றி;ஆனந்த விகடன்)

Friday, November 27, 2009

வாழ்த்து...

சர்வ ஏகாதசியில் வந்திருக்கிற இந்த பக்ரீத் குறித்து மகிழ்வோம். இன்று உறக்கம் விழிக்கிற யாவருக்கும் பேரறிவாளன் வீடுபேறு தரட்டும்.

பிரியாணி தருவோரின் பிரியங்கள் மதங்கடந்து வாழ்க.இனிய விழாவினை மனதினில்கொண்டு யாவரும் சந்திப்போம். இனிய வாய்ப்பினை இயற்கை தந்தால் எங்கும் சந்திப்போம்.

பக்ரீத் வாழ்த்துக்கள்.

ராஜகுமாரனின் ம(ண்)குடம்.

மாதவராஜின் பிளாக்கை நியாயத்துக்கு அப்பாற்பட்ட தாமதத்துடன் முந்தாநாள் படித்தேன்.mathavaraj.blogspot.com. அதில் அவரது முதலாவது (செம்மலர்)சிறுகதையான மண்குடம்- கதையை இட்டிருந்தார்.

அவரது சிறுகதைத் தொகுப்பு ‘ராஜ குமாரன்’ என்றே என் ஞாபகம். மண்குடத்தை விட நல்ல கதைகள் உள்ள அந்தத் தொகுப்பைக்கொண்டு இந்த மாதவராஜ குமாரன் அறியப்பட்டிருக்கலாம். ஆனால், தமிழின் மோனை மோகத்தால் ’மண் குடம் மாதவராஜ்’ என இலக்கியர் பலரால் அறியப்பட்டார்.

நினைவில் மறந்திருந்த மண் குடத்தை மறுபடி படித்தேன். தமிழின் முதாலம் சிறுகதையைப் போன்றதான உத்தியில் மண் குடமே இக்கதையைச் சொல்கிறது.வாயும் வாப்பாடும் உள்ள அந்த வஸ்து கதையில் பேசுவதில் வியப்பில்லை. விக்கிரமாதித்தன் கதைகளில் திரைச்சீலை,தாவணி, புடவை முதலியவை பேசவில்லையா என்ன?

சாதாரண ஆரம்பமாகத் தொடங்குகிற அந்தக்கதை பொதுவாக அல்லது பார்வைக்குத் தெரியும் மேலோட்டத்தளத்தில் தண்ணீர்ப்பஞ்சத்தைப் பேசுகிறது. செண்பகம் தண்ணிக்குப் படுகிற பாட்டைப் பார்த்துவிட்டு ‘தனக்கொரு இறக்கை முளைத்தால் பரவாயில்லை. பறந்து போய் தண்ணீர் கொண்டுவந்து தாகந் தீர்க்கலாம்’ என நினைக்கிற இடத்தில் கதைக்கு நிஜமாகவே இறக்கை முளைக்கிறது.

கடைசியில் நீர்வேண்டிய போராட்டத்தில் குடம் உடைபடும்போது செண்பகத்தைப்பார்த்து கத்த நினைக்கிறது.ஆறு என்கிட்ட எவ்வளவோ சொல்லியிருக்கு.,என்று முடிகிற கதைக்கு முந்தைய இருவரிகள்... அதை எடுத்துவிட்டால் கதை இன்னும் கச்சிதம் பெற்றிருக்கும்.

23ஆண்டுகளுக்கு முன்பு எழுதின கதை என்கிறார் மாதவராஜ்.அப்ப அது அப்படித்தான் இருக்கும். இப்போது எழுதியிருந்தால் தேவையில்லை என நான் நினைத்த கடைசிக்கு முந்தைய இருவரிகளை எழுதியிருக்க மாட்டார்.உங்கள் கண்ணோடு ஒன்று சொல்கிறேன். அந்தக் கதையையே எழுதியிருக்க மாட்டார். இப்பதான் மண்குடம் இல்லியே.

ஆனால் உள்ளே ததும்பும் ஆன்மா இருக்கிறதே அலையடித்துக்கொண்டு.

Thursday, November 26, 2009

சின்னப்பிரச்னை

மீராகுமார் சபை நாயகராக இப்போது பாராளுமன்றத்தில் இருக்கிறார். அனேகமாக முதல் பெண் நாயகர் அவர்தான் என்றும் நம்புகிறேன்.


மீராவைப்போன்ற ஒருவர், ’அமைதியாய் இருங்கள் அமைதியாய் இருங்கள்’ என்று சைகை காட்டும்போது நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலும் அமளியும் செய்கின்றனர் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அம்மையார் எதேனும் புதிதாக மதம் ஆரம்பித்தால் நான் அதில் சேர்ந்துவிடுவேன்.அவரது கன்னக் கதுப்புகளைக் கண்டபிறகுதான் பாபு ஜகஜீவன்ராம் அவர்கள் எவ்வளவு அழகு என்பது எனக்கு உறைத்தது.

மும்பைக் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று அத்வானி சுட்டிக்காட்ட பிரணாப்முகர்ஜி இதில் அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்.இதற்கெல்லாம் விலை கொடுக்கவேண்டிவரும் என்று மிரட்டினார்.எதில் எதில் அரசியல் பண்ணுவது என்பதை காங்கிரசாரிடம் பி.ஜே.பி கற்றுக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.அதைவிட , நல்ல ஒளிச்செறிவில் பதிவுக்கருவிகள் முன் பணம் வாங்குவதை நிறுத்தவேண்டும்.

முதலில் தேசியக்கொடியைப் போலவே தோற்றமளிக்கிற கொடியை காங்கிரசிடமிருந்தும், தேசிய மலரான தாமரைச் சின்னத்தை பி.ஜே.பி -யிடம் இருந்தும் அபகரிக்கவேண்டும் என்பது என் ஆவல்.

சீதாராம் கேசரியின் மகன் சீதாராம் யெச்சூரி என்று சொன்னால் நம்பிவிடும் நம் ஜனங்கள் கள்ளுக்கும் பாலுக்கும் வித்யாசம் தெரியாதவர்கள்.இந்த மாதிரி ’குறி’ சமாச்சாரத்தில் எல்லாம் உளவியல் சங்கதிகள் இருக்கிறது. இது புரியாமல் கம்யூனிஸ்டுகள் அரிவாள்,சுத்தி என்றெல்லாம் தேர்ந்தெடுத்தார்கள்.

தமிழ்நாட்டினரிடம் படிக்கவேண்டும் சின்னம் தேர்ந்தெடுப்பதை.இரட்டை இலையைத் தேர்வு செய்த எம்.ஜி.ஆர்தான் எவ்வளவு புத்திசாலி. அண்ணா கண்ட உதய சூரியனை இன்றைக்கு முழுச்சூரியனாக வரைகிற அளவுக்கு தி.மு.க முன்னேறவில்லையா.

வைகோ முதலில் குடை சின்னத்தை தேர்ந்தெடுத்தபோது எங்கள் ஊரில் ஒருவார்.’அருமைடா... ஆள் ஏற்கெனவே கறுப்புச் சால்வை போட்டுருக்கார்.கக்கத்துல குடைய மடக்கிவச்சு ஒரு உடுக்கையும் கையிலெடுத்து ‘நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குதுன்னு போவேண்டீதுதான்’ என்றார். இன்னைக்கு என்ன ஆயிற்று பார்ட்டி பம்பரமாகச் சுத்திக்கொண்டு இருக்கிறார். சாட்டை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.
அவரது குடை மேட்டரில் மகாஜனங்கள் யாரும் உள் அர்த்தம் எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.

விஜயகாந்த் இன்று புதிதாக வந்து கொட்டடா முரசு கொட்டடா என்று நிற்கிறார்.இப்பொழுது தொழில் நுட்பம் அதிகமாகி பிளக்ஸ் பேனர்கள் வந்துவிட்டன. ஆர்வப்பட்ட இளம் ஊழியர்கள் பலரிருந்தாலும் சின்னம் வரைவதற்கெல்லாம் ஆள் போட்டுவிடுகிறார்கள். சுய முயற்சியில் கைப்பழக்கம் இல்லாதவர்கள் வரைந்தால் முரசு ஒரு வடைச் சட்டியைப்போலக் காட்சியளிக்கும்.மூப்பனாரின் சைக்கிள் இன்றைக்கு இருந்திருந்தால் அது ஒரு பைக்காக மாறி இருக்காதா?-மூப்பனார் சுதாரித்து கை இல்லாமல் சைக்கிள் ஓட்ட முடியாது என முடிவெடுத்தார்.

கொஞ்சம் தப்பாக வரைந்தாலும் தம்மை வெளிப்படுத்திக்கொள்கிற சின்னங்கள் சூரியனும் இலையும்தான்.பா.ம.கட்சியின் பழைய யானை - மாயாவதியின் புதிய யானை துதிக்கையை வைத்து கொஞ்சம் தப்பிக்கும். ஆனால் மாம்பழம் கொஞ்சம் குடித்த நிலையில் வரைந்தால் ஆப்பிள் ஆகிவிட வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி நடக்காது. அய்யாவின் கட்சிக்காரர்கள் யாரும் குடிப்பதும் இல்லை. புகைப்பதும் இல்லை.

ஏர் உழவன் சின்னம் இருந்ததாலேயே ஜனதா கட்சி காணாமல் போய்விட்டது என நினைக்கிறேன். உழவர்களே காணாமல் போகும் நாட்டில் சின்னம் மட்டும் இருந்தென்ன போயென்ன.அப்போதெல்லாம் தகரத்தில் ‘சின்ன’த்தை வெட்டிஎடுத்து அச்சு உருவாக்கி அதில் காவி மற்றும் நீலம் கொண்டு வரையும் பழக்கம் இருந்தது. இன்று நெரோலாக்,ஆசியன் பெயிண்ட்களை உபயோகிக்கும் அளவு காஸ்ட்லியாகிவிட்டது.கதிர்-அரிவாள்-சுத்தித் தோழர்கள் மாறிமாறி திராவிடக் கூட்டு போட்டதில் ராச்செலவுக்கு டீயும் பீடியும் கட்டுபடியாகாது என்கிற மனநிலையை தோழர்கள் வந்தெய்தியிருக்கிறார்கள்.

பசுவும் கன்றும் இன்றும் இருந்திருந்தால் காங்கிரஸே இல்லாது போயிருக்கும்.காங்கிரஸ் -ஐ யும் காங்கிரஸ் ‘கை’யும் ஒருசேர பிரியதர்ஷினியால் வந்தது.

மிருகங்களைச் சின்னமாக வைக்க ஏலாது என்று அவரது சின்னமருமகள் பதைபதைத்ததற்கு ஓரளவு பலனும் இருந்தது.கையையே கைக்கொண்ட சோனியா அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

நரி முதலாகிய உயிரிகள் சின்னமாகாதது மோனிகா போன்ற குரல்களால்தான்.எல்லாச் சின்னங்களுக்கு ஊடாகவும் அடுக்குத் தோற்ற(சூப்பர் இம்போஸ்) முறையில் காந்தியின் படத்தைக் காட்டுகிற புதிய முறையை அமலுக்குக் கொண்டுவராவிட்டாலும் பரவலாக்கியதும் இன்று நாடு தழுவப் பரப்பிக்கொண்டிருப்பதும் சின்னத் தேர்வில் பிரதானர்களான தமிழ்நாடுதான். சின்னத்தனமாயினும் தென்னவர்களை மிஞ்ச அவனியில் ஆளில்லை.

Wednesday, November 25, 2009

காற்றிலேறி விண்ணை...

இன்று இந்திய வரலாற்றில் குறியீட்டளவில் முக்கியமான நாள்.(25.11.09)இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் போர் விமானம் ஒன்றில் ஏறி முப்பது நிமிடங்கள் பயணித்துவிட்டு வந்திருக்கிறார். விமானத்தின் பெயர் சுகாய் என்பது மாதிரி செய்தி நேரத்தில் காதில் விழுந்தது. இது போன்ற செய்திகளை செய்திகளோடு செய்தியாக இல்லாமல் சிறப்பு ஒளிபரப்பாகச் செய்யவேண்டும்.

இப்படியாக்கொண்ட விமானத்தில் பயணித்த முதலாவது பெண் ஜனாதிபதி அவர்தான் என்கிறார்கள். இதே ஐட்டத்தில் விஞ்ஞானியும் முன்னால் ஜனாதிபதியும் நடுவகிர் கூந்தல் நாயகனும் கனவுக் கண்ணனுமாகிய அப்துல்கலாமும் பயணித்திருக்கிறார்.

அப்துலின் தைரியத்திற்கு இரண்டு சான்றுகள் உள்ளன. ஒருமுறை எல்லையோர விமான நிலையத்தில் மின்சாரம் போய்விட தீப்பந்தங்களை பக்கவாட்டில் கொளுத்தி விமானத்தரைப்பாதை ஓட்டத்திற்குப்பின் மேலேறி தலைநகர் வந்து சேர்ந்தது. இதில் சாகசம் என்னவென்றால் விமானம் மேலேறியபின் ஏதேனும் பிரச்னை என்றால் அந்த விமான நிலையத்தில் தரை இறங்க முடியாது. வாழ்வு துச்சம், மரணம் துச்சம் என அவர்காட்டிய தைரியத்தின் அத்தாட்சி அது.

அதேபோல குஜராத் கலவரத்தின் போது ஜனாதிபதியாக இருந்து நாட்டை திறம்பட- ராஜினாமா செய்யாமல்- பாலித்தது.

பொதுவாக பாரதத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் வயது அளவில் ஏறக்குறைய ரெட்டைக் குழந்தைகள் தோற்றத்தில் இருப்பார்கள்.விதிவிலக்கு ராஜீவ் காந்தி- ஜெயில் சிங் இணை.
கலாமுக்கும் வாஜ்பேயிக்கும் கூட தசாப்த வித்யாசங்கள் உண்டு. இரண்டு பேருமே வெள்ளி முடி கொண்ட ஞானிகள் என்பதால் இருவருக்கும் ஆன பாகுபாடு வெளித்தெரியவில்லை.

அது நிற்க... இன்று பிரதீபா மூதாட்டியை ராணுவ உடைக் கோலத்தில் பார்த்தபோது மகிழ்ந்தேன்.புவியீர்ப்பை கொஞ்சம் கட்டுத்தாங்கும் உடை என்பது அதன் தொழில் நுட்பம்.ஆனால் முதன் முதலாக ஃபேண்ட் அணிந்து ஊடகக் காட்சி தந்த எங்கள் முதன் முதல் , பெண் ஜனாதிபதி.

அக ஊதாக்கதிர்களையும் தாண்டி என் மனமிகப் பறந்து அகமகிழ்கிறேன்.

Tuesday, November 24, 2009

அப்யந்திரம்

பெங்களூரு வாழியான ஜகநாதனின் ’காலடி’ இணையதளத்தில் சுற்றிக்கொண்டிருந்தபோது சமீபத்தில் மூச்சா போவது(1) பற்றி எழுதியிருந்தார். கொஞ்சம் ஒருபக்க சிறுகதைகளுக்கான முடிப்பு முடிச்சோடு கட்டுரை நிறைவு பெற்றிருந்தது.நல்ல நகைச்சுவையான பதிவு.அவர் எட்டடி பாய்ந்தால் நாம் பதினாறடி பாய்வது என முடிவு செய்து நம்பர் 2 பற்றி எழுதுவது என முடிவுசெய்துவிட்டேன்.மலம் கழிப்பது பற்றியேதான்.ஆயி,இசா,பீ எனப் பலபேர்களால் மலம் அறியப்படுகிறது.

மலம் என்று எழுதுவது பாமரத்தனத்திலிருந்து புரிந்துகொள்ளக்கூடிய சொல் அல்ல.மலம் ,நிர்மலம் என அது சம்ஸ்கிருத ரேஞ்சில் இருக்கிறது, இந்தக் கட்டுரையின் தலைப்பு போல.நான் ஒட்டன் சத்திரத்தில் இருக்கும்போது -பொது மக்கள் மீதான -மருத்துவாய்வு ஒன்றிற்கு நண்பரொருத்தர் கேள்விப்பட்டி ஒன்று தயாரித்திருந்தார்.அதில் நாளில் எத்தனை முறை மலம் கழிப்பீர்கள் என ஒரு கேள்வி. இதை ஒரு நோயாளியிடம் கேட்டபோது ஏழெட்டு தடவை எனப் பதிலளித்தார். என்ன ஆச்சு உங்களுக்கு என அதிர்ச்சி தெரிவித்தபோது,’’நீங்க ஒன்னுக்கடிக்கிறதத்தான கேக்கறீங்க?’’ என்றார்.

பாரதத்தில் வெளியிடப்படும் கருத்தாய்வு முடிவுகள் மீது அன்றைக்கு முச்சூடும் நம்பிக்கை இழந்தேன். எலெக்சன் ரிசல்ட்டுகள் உட்பட.

கழித்தல் வகையைக் குறிப்பிடுவதற்கு ‘வெளியே போதல்,காட்டுக்குப் போதல்,கொல்லைக்குப் போதல்’ என பல இடக்கரடக்கல் உண்டு. அதனதன் இரட்டுற மொழியும் செயல்பாட்டில் அந்தந்த வட்டாரத்தில் அதற்கான நகைச்சுவைகளை அது உற்பத்திசெய்யும். எங்கள் பக்கத்து ஊர்க் கிழவர் ஒருவர் ஆயி போகும்போது காட்டில் ஏதோ தொடைப்பகுதியில் முள் குத்திவிட பாம்புதான் கடித்துவிட்டது என முடிவு செய்து மருத்துவரிடம் ஓடோடிச் சென்று குப்புறப்படுத்து ஆசனப் பகுதியைக் காட்டினார்.

மருத்துவர், ’போய் கால் கழுவிக்கிட்டு வாங்க!’ என மொழிந்தார்.அந்த அய்யன் பாத்ரூம் போய் காலை மட்டும் கழுவிக்கொண்டு வந்து திரும்ப குப்புறப்படுத்து ....யைக் காட்டினார்.மருத்துவர் அவரது மரணத்தையே விரும்பியிருக்கக் கூடும்.(இந்த இடத்தில் அவரது என்றது யாரைக் குறிக்கிறது)அப்புறம் இடக்கரடக்கலை டாக்டர் விட்டுவிட்டு பச்சையாகக் கட்டளையிட்டார்.

பாம்பு கடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.அந்த இடத்தில் பாம்பு கடித்துச் சாகிறவர்கள் அபூர்வம்.ஏனெனில்...

Monday, November 23, 2009

புதிய பெருமை

தொலைக் காட்சி விளம்பரங்களைப் பற்றி கருத்துப் பகிர்ந்துகொண்டதன் தொடர்ச்சியாக சில பதில்உரைகள் வந்திருந்தன. பின்னும் நண்பனுடன் உரையாடிக்கொண்டிருந்ததில் நிறைய நல்ல விளம்பரங்கள் வருகின்றன என்றும் சில சகிக்க இயலா விளம்பரங்கள் வருகின்றன என்றும் பேசிக்கொண்டிருந்தோம். விரிவாக அவற்றைப்பற்றி எழுதவேண்டிய பொறுப்பை நண்பனிடம் விட்டுவிட்டேன்.

எனக்கு வந்த பதிலுரையில் போத்தீஸ் விளம்பரம் பிடிக்கவில்லை என்று வந்த மடல் நான் ஏற்கெனவே கொண்டிருந்த கருத்துக்கு ஒட்டிவந்ததால் அதைப்பற்றி மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.அந்த விளம்பரம் நொடிக்கு நொடி பிடிக்காமல் போவதற்குத்தான் வாய்ப்பு அதிகம்.

அந்த விளம்பரத்துக்கு வரலாற்று புராண நியாயம் எதாவது இருக்கிறதென்றால் இருக்கிறது.கூந்தலுக்கு மணம் உண்டா என்ற மிகப்பெரிய ஆராய்ச்சி மன்னனுக்கு வந்துவிடுகிறது. நாடாள்வதை விட்டுவிட்டு கூந்தலில் மீன் பிடிக்கிற மென்மனத்தை அவனது பெயர்தான் அவனுக்கு வழங்கியிருக்கவேண்டும்.செண்பகப்பாண்டியன்.என்ன மணமான பெயர். அந்த மணமான மனமான ஆண் அரசன் மனைவியின் கூந்தலை நுகர்ந்துவிட்டு (வாடிக்கையாளர் மாதிரி தோன்றுகிறது என்றால் முகர்ந்துவிட்டு என்று படித்துக்கொள்ளவும்), பாட்டேலே பதில் சொல்ல புலவர்களை அழைக்கிறான்.

மதுரை மாமன்னருக்கு மாபெரும் பிரச்சினையில் மாபெரும் சந்தேகம் எழுந்துள்ளது என்கிறது தண்டோரா. பரிசு அற்பசொற்பம் அல்ல. ஆயிரம் பொற்காசுகள்.

தருமிக்கு சிவன் கோஸ்ட் ரைட்டர். கடையில் சண்டை (வெம்மைதாளாது) பொற்றாமரைக்குளத்தில் நக்கீரன் விழுவது வரை போகிறது. மூன்றாம் கண் திறப்பு வரை இந்தப் பிரச்சினை போகுமென்றால் செண்பகன் மனைவிக்கு நீலிபிருங்காதி அல்லது அஸ்வினி வாங்கிக்கொடுத்திருப்பான். போத்தீஸ் விளம்பரத்தில் மதுரை என்றதும் மதலில் எனக்கு தோன்றியது செண்பகப் பாண்டியின் நினைப்புதான்.

போத்தீஸுக்கும் மதுரை விளம்பர உத்தியாகத் தோன்றியதன் காரணம் கடை மதுரையில் (அடுக்கிப்பிறகு) விரிப்பதால்தான். அப்புறம் விளம்பரத்தின் பாத்திரத் தேர்வுகள். ஒரு நாற்பத்தி ஐந்து பட்டுப் புடவையைப் பார்த்ததும் (சந்தோஷமாக) கஜானா காலியாகிவிட்டதா எனக் கேட்கிற அரசன். இது சத்தியராஜ்.மதுரைக்கு வாய்க்கிற மன்னர்கள் எப்பவும் இப்படிக் கூமுட்டையாகவே இருக்கிறார்களே என வருந்தினேன். அறியப்பட்ட புல அளவில் அவர் மதுரை மன்னரோ மதுரை மண்ணரோ அல்ல. பிறகு ஆந்திர சீதா அரசி.அவருக்கு அடுக்கிய கையிலிருந்து ஒவ்வொரு புடவையாக எடுத்துத்தர சத்யராஜ் படுகிற பாட்டை நீங்கள் பார்க்கவேண்டும்.

மந்திரி எம்.எஸ்.பாஸ்கர். சரியான ஆளிடம் மந்திரியாக இருப்பதான தோற்றம் அவரது முக மிளிர்வில் இருக்கிறது. கஜானா ,மகாராணி, நாடு எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன் மன்னா! இன்னிக்கு மத்யான சாப்பாடு அம்மா மெஸ்ஸா,மாமி மெஸ்ஸா? என்பது போன்ற பாவம் அவருக்கு.அரசனும் அரசியும் இணைந்து அவர்களது ஓங்குதாங்குக்குக் குறைவில்லாத ஒரு இளவரசியை வேறு பெத்துப்போட்டுவிட்டார்கள்.

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை என்கிற வாக்கியம் அந்த அழகிய சின்னப்பெண்ணால் எனக்கு ஆழத்திலிருந்து நினைவுக்கு வந்தது.

போத்தீஸ் என்றால் எதோ மலையாளவகைப் பேர் என்று நினைக்கிறேன்.போத்து என்றால் மலையாளத்தில் என்னவென்று தெரியவேண்டும். யாரெங்ஙிலு சகாயிக்கூ!

மதுரையின் மலைமலையான பல பெருமைகளைப் பார்த்ததால் விளம்பரத்தின் மீதான கோபம் தீர்ந்து போத்தீசுக்குப் போனேன். பழைய வருத்தங்கள் பறந்தோடிப்போகட்டும் என ஹேமமாலினியைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

வஸ்தரகலா- ராணி.

வடக்கும் தெற்கும் சேர்ந்த கவலை.

Friday, November 20, 2009

தலை நகரம்

ஒரு நாட்டிற்கு தலை எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் தலைநகர் என்பதும்.இது மாவட்டம் வட்டம் கிராம பஞ்சாயத்து அளவு பொருந்தக்கூடியது.தமிழகத் தலைநகர் அல்லது தமிழர் தலைநகர் என்கிற அளவில் சென்னை புரிந்துகொள்ளப்படுகிறது.இப்போதைய அளவில் சம காலப் பிரக்ஞையில் வேறொரு தலைநகருக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
தமிழ் நாட்டின் தலைநகராக திருச்சியைக் கொண்டுவருகிற ஒரு திட்டம் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு இருந்தது.

அப்போது அவரது கனவு முகமது பின் துக்ளக்கின் தலை நகர் மாற்றத் திட்டத்தோடு அப்போதைய ஊடகங்களால் ஒப்பிடப்பட்டது. தலை நகர் மாநிலத்தின் மையத்தில் இருக்கவேண்டும் என்கிற கருத்தை எம்.ஜி.ஆர் சொன்னார். கன்னியாகுமரி முடியவும் பாலக்காடு வரையிலும் நீண்டிருக்கிற மக்கள் பரப்பின் நலனைக் கணக்கிலும் கருத்திலும் எடுத்தால் அது நல்ல திட்டம்.

பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ,’தலைநகர் மையத்தில் இருக்கவேண்டுமா?-அப்படியானால் மனிதனுக்கு மூளை என்ன வயிற்றிலா இருக்கிறது?’ என்றொரு தர்க்கக்கேள்வியை எழுப்பினார்.

உண்மையில் மனிதனுக்கு வயிற்றில் மூளை இருந்ததைத்தான் அப்போதைய நிகழ்வுகள் வெளிச்சமிட்டுக்காட்டின. ஊடகர்களுக்கு சினிமாக்காரர்களுக்கு நாட்டின் கதிப்போக்கை நிர்ணயிக்கும் தொழிலதிபர் பலருக்கு அப்போது சென்னையில் சொத்து இருந்தது.இப்போதும் இருக்கிறது. அனைவரும் எம்.ஜி.ஆருக்கு எப்போதும் இருந்த கோமாளிப்பட்டத்தின் தொப்பியில் மேலும் ஒரு இறகைச் செருகினார்கள். திட்டம் தோற்றுப்போயிற்று.

திருச்சி தலை நகராகக் கிடைத்திருக்குமெனில் கொஞ்சம் நாறியிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆறு டி.எம்.சிக்காக மழையற்ற காலங்களில் போராடிக்கொண்டிருக்கிற நிலைமை வந்திருக்காது.

வம்புவழக்குகள் முதல் வாய்ப்பு நிமித்தம் வரை தொட்டது தொண்ணூறுக்கும் சென்னை போகிற களியக்காவிளைக் காரராக இருந்து நீங்கள் பார்த்தால் திருச்சியின் பலாபலன் யூகிக்கக்கூடியது. மூளை வயிற்றிலும் இருக்கலாம். மொய்ம்புற்ற புலன்கள் அதிகம் தலையிலே இருப்பதால் மூளை தலையில் இருக்கிறது.அவ்வளவே. இப்போது காலம் கடந்துவிட்டது.

தலைநகர் என்பது அன்னிய நாட்டு வேந்தர்கள் தொழில்வேந்தர்கள் வந்து தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள இருபது நிமிடங்களில் பார்வையிட்டுச் செல்ல தோதாக இருக்கவேண்டும் என்கிற நமது உபசார மனத்திலிருந்து எழுகிறது சென்னை மட்டுமே தலைநகர் என்று நினைப்பது.

இந்தியாவின் ஆன்மா கிராமத்தில் இருக்கிறது. ஆன்மாவினால் யாருக்கும் லாபம் கிடையாது. அதன் பேரைச் சொல்லி வயிறு செல்வாக்கு வளர்த்துவோர் தவிர.

ஆன்மாவும் வயிற்றில்தான் இருக்கிறதோ என்னவோ!

Wednesday, November 18, 2009

நீ- சொல்லேஏன்!(இசை அளபெடை)

நீ-கேளேன் பிளாக்கிற்கு இன்று இருந்த இடத்திலிருந்தே போனேன்.வடிவமைப்பு, புகைப்படங்கள் என பல விசயங்கள் பட்டையைக் கிளப்பின. அப்படின்னா உள்ளடக்கம்? என சம்பந்தப்பட்டவர்கள் வினவுவது காதில் ஒலிக்கிறது. அவை சில நன்றாக உள்ளன.நான் (ஆகாச ஆராச்சி) ரமணன் விஷயமாக என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்க உட்புகுந்தேன். சென்னை நகரின் மழையும் பின்னவீனத்துவமும் மழையும் ரசித்தேன்.ரமணனின் உடையையும் செய்தியையும் வைத்து நம்பகத்தன்மை பற்றிப் பேசியிருந்தது ஜாலியாக இருந்தது.ஜாலி மட்டுமே.

கிரிகெட் உலகக்கோப்பை வலது கை கேப்டனுக்கும் இடது கை ஆட்டக்கார கேப்டனுக்கும் மாறிமாறி வருகிறது என்கிற 25 ஆண்டு காலத்தில் பெறப்பட்ட நம்பிக்கை போன தடவையில் இருந்து பொய்க்கவில்லையா அதுபோல இதுவும் பொய்க்கும். மழையே பொய்க்கும் போது ரமணனின் வாக்குகள் பொய்க்காமல் எப்படி?
சென்னையி அவஸ்தைகள் தீர அரைவாசி மாந்தராவது அங்கிருந்து வெளியேற வேண்டும்.சினிமா,டி.வி,கோர்ட்டுகள்,பத்திரிக்கைகள் இப்படிப் பல விஷயங்கள் மாநிலத்தின் ஐந்தாறு இடங்களில் பிரிந்து நடந்தால் இது சாத்தியம்.இப்போதும் முன்னும் இதற்கு உதாரணங்கள் இருந்தன.இருக்கின்றன. பரவல் மற்றும் அதிகாரப் பரவலே இதை சாத்தியமாக்கக் கூடியது.

இதைப்பற்றி விரிவாக ஆராயவேண்டும். நீ-கேளேன் படித்துவிட்டு எனக்கும் ஆராய்ச்சி மனோபாவம் கூடிவிட்டது.ஆனால் இன்று புகுந்தது வேறு காரணத்திற்காக தொலைக் காட்சி விளம்பரத்தில் உங்களுக்குப் பிடித்தது எது பிடிககாதது எது என்பதை குறிப்பி்ட வேண்டும். இந்தத் தகவல் நமது சக சதிகாரர் ஒருவருக்கு தேவைப்படுகிறது. வெளியில் சொல்லத் தக்கது என்றால் என்னென்ன காரணங்களை முன்னிட்டு என்றும் எழுதலாம். எங்களது WMF ஆராய்ச்சிக் கழகத்துக்கு அது பயனுள்ளதாக விளங்கப்போகிறது.

முதலில் நான் சொல்லிவிடுகிறேன் மகுடிக்காரன் எலிகளைக் கூட்டிபோகிற விளம்பரம் எனக்குப் பிடித்தருக்கிறது. எதற்கான விளம்பரம் என்பதை இனிமேல்தான் கவனிக்கவேண்டும்.சின்னவயதில் பேக்-பைபர் படித்தததும் பிற்பாடு பெக்-பைபர் அடித்ததும் அதற்குக் காரணமாயிருக்கலாம்.பிடிக்காத விளம்பரம் ஹமாம்.(அவர்களே ஆய்ந்து இந்நேரம் அதை நிறுத்தியிருக்கவும் கூடும்.)மகளை சோப் வாங்க அனுப்பிவிட்டு பின்னாலேயே அவளது தாய் பதறி ஓடுகிற விளம்பரம்.

என்னதான் அறியாத பிள்ளை அல்லது வெட்கங்கெட்ட பிள்ளையாக இருந்தாலும் சோப்பு வாங்கிய மறுகணம் மளிகைக் கடை வாசலிலேயே குளித்துவிடுமா என்ன?

Tuesday, November 17, 2009

டீலா நோ டீலா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை கொடுத்துவைத்தவனாக இருக்கிறேன்.இரவு 7 மணிக்கு சன் செய்திகள்.7.30க்கு ஜெயா செய்திகள்.அவ்வளவுதான் விரும்பிப்பார்ப்பது. மற்ற நேரம் அனேகமாக பார்ப்பதேஇல்லை. ஜெயா செய்திகளை இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை ஒருத்தி ஐயோ செய்திகள் என்று வாசித்தாள்.ஆட்சியிழந்து அடுத்து ஆட்சிக்கு வரப்போவதற்கான முன் ஏற்பாடுகளையும் இழந்துவரும் ஜெயலலிதாவைப் பார்த்தால் அந்த செய்திகளை அப்படித்தான் வாசிக்கத்தோன்றுகிறது.

ஜெயா செய்திகளில் பிடித்த அம்சம் செய்திக்கு முன்னே வருகிற ’இன்று’.செய்திகளின்போது பிடிக்காத அம்சம் இடப்பக்கத்தில் ஜெயலலிதாவின் பச்சைப்புடவை (அது கோட்டோ) போட்டோவைக் காட்டி பத்து நிமிடங்கள் அவர் கருணாநிதியை வசைந்ததை திடக்குரலில் சொல்வது. அந்தக் குரலுக்கு உரிமையாளர் சரோஜ்-தானா என்று யாராவாது தெரிவியுங்கள்.

வீட்டில் டி.வி.கேபிள் கனெக்சன் என்று பார்த்தால் நானும் டண்டனா டண் தான்.கனெக்சனைப் பற்றி பிறகு எழுதலாம். நான் இன்னும் மீசையை எடுக்கவில்லை.டண்டனாவைப் பரிந்துரைக்கிறவர்மாதிரி தொப்பையும் வரவில்லை.

இதில் வருகிற சேனல்களுக்கே உருப்படியான பல நிகழ்ச்சிகள் பார்க்கலாம். வீட்டில் இதர வாழிகளின் ஆதரவு ஆதித்யா(அசைச்சுக்க முடியாது அசைச்சுக்க முடியாது...ஆயுசு நூறு),சுட்டி டி.வி (நிராகரிக்க முடியாத உறுப்பினரின் விருப்பம் இது), அப்புறம் சன் னில் எருமைச்சாணியை எந்நேரமும் அப்பினாற்போலவே வரும் எட்டுப்பத்து பாத்திரங்கள் வரும் திருமதி.செல்வம் போன்ற தொடர்களுக்கு எனது கோபித்தலும் வீட்டாரின் ஏகோபித்தலும் இருக்கிறது.

புதுத்தொடரோ புதிய நிகழ்ச்சிகளோ ஆரம்பிக்கும் போது அதை விரும்பி-முதலாவது நிகழ்வை- பார்ப்பது வழக்கம். பய கண்டெம்ப்ரரியா இருக்கணுமல்ல அதுக்காக.அப்படித்தான் டீலா நோ டீலா பார்த்தேன். விதிமுறைககள் மனசிலாகவில்லை.அதற்கு இரண்டு மூன்று வாரங்கள் பார்க்கவேண்டும். பங்கெடுக்கிறவர் ஆணாயினும் பெண்ணாயினும் பார்க்க நேர்த்தியாக இருக்கவேண்டும் என்பது மங்கலாகப் புரிகிறது.

அப்புறம் கிங் ஃபிஷர் விண்- உபசாரிணிகளை நினைவுபடுத்தும் உடைத்தோற்றத்தில் பல பெண்கள் கேலரி கட்டி நின்று பெட்டியைத் திறந்து திறந்து காட்டுகிறார்கள். அவற்றில் எழுதப்பட்ட எண்கள் உள்ளன. அதற்கும் போட்டிக்கும் எதோ சம்பந்தம் இருக்கும் போல. இது ஆண் பார்வையாளர்களைக் கவர்கிற அம்சமாயிருக்கலாம். அதே நிகழ்ச்சியில் பெண்களைக் கவர்கிற அம்சமும் ஏதாவது இருக்கலாம். நாலு நிமிடத்துக்கு ஒரு முறை தொகை தொகை என்று பணத்தைப்பற்றிப் பேசினாலே பாவையருக்கு-தோகையருக்கு பிடித்துப்போய்விடும். நிகழ்ச்சி வெற்றிகரமாகப் போகும் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை. அஞ்சாயிரம் பந்தயம். டீலா நோடீலா.

நிகழ்ச்சி வடிவமைப்பாளர் கண்ணில்பட்டால் ஒரே கேள்விதான் கேட்கவேண்டும்.
உங்கொய்யால ஆம்பளைக தொறந்தா பொட்டி தொறக்காதாடா?

’சந்தை’ய்யா டுடே

மதுரை போயிருந்தபோது நேற்று ரொம்ப நாள் கழித்து ‘இந்தியா டுடே’வாங்கினேன்.1995-இல் மதுரையில் நான் வாழ்ந்தபோதே எனது முதலாவது சிறுகதை அதில் வெளியானது. அந்தப்பாசம் என்னியுமறியாமல் பொத்துக்கொண்டிருக்கக்கூடும்.நவம்பர்25,2009 இதழ்.விவாதமா,வர்த்தகமா?-என்ற தகவல்பூர்வமான நல்ல கட்டுரை வெளியாகி இருந்தது.ஷஃபி ரஹ்மான் எழுதியது. ஒருவகையில் தகவல்களின் தொகுப்பும் திரட்டும் கூட. விஷயம் தெரிந்து பயங்கொள்வோருக்கு ஆங்கில ‘திரட்’. ஆனால் பத்திரிக்கைக் கட்டுரைகளுக்கெல்லாம் அஞ்சுகிற ஆட்கள் நம் அவைகளில் இல்லை.

விஷயம் நாடாளுமன்றம் சார்ந்தது.தொழில்துறை நிலைக்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் வணிகத்துறையைச் சேர்ந்தவர்கள் என்கிறது விவரம்.எது குறித்தாவது அவர்கள் கேள்விகேட்கிறார்கள் என்றால் அவர்கள்து தொழில் சார்ந்த கேள்வியாக இருக்கிறது. மக்கள் நலனுக்காக கேட்கப்படும் தோரணை உள்ள அந்தக் கெள்விகளின் உள்ளடக்கம்.’எங்களுக்கு என்னய்யா பண்ணப்போறே கவர்மெண்டு?’ என்று கேட்பதாக இருக்கிறது.

நென்னெறிக்குழு தலைவர் கரண்சிங், என்னவும் கேளுங்கள் அதற்கு முன் நீங்கள் யாரெனத் தெரிவித்துவிட்டு அப்புறம் பேசுங்கள் என்கிறார். இது தார்மீகம். யார் யார் எந்தெந்தக் குழுமத்தில் என்னென்ன ‘நிலை’யில் உள்ளனர் என்பதற்கெல்லாம் பதிவுகள் பேணப்படுவதில்லை என்பது கட்டுரையில் தெரிகிறது. பிளாட்பார கிளி ஜோசியக்காரர்கள் போல இருக்கும்போல.’மன் மோகன்கிற பேருக்கு ஒரு சீட்டு எடுப்பா செல்லக்கிளி’ என்பதற்கு மேல் எவனெவன் எங்கிருந்து வந்தான்,இன்னாத்துக்கு இவன் வாயிலிருந்து இப்டியான கேள்வி வருது என்பதற்கெல்லாம் ஆவணபூர்வங்கள் எதுவும் இல்லை.

‘எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்கவில்லை அவரும் சொல்லவில்லை’ என்ற நகுலன் கவிதை மாதிரி சபை நடக்கிறது.

‘சொல்லீட்டு செய்ங்க ஐயா!’ என்றுதான் கேட்டுக்கொள்ளவேண்டும்.சாம்பசிவ ராயபதி ராவ்,கவுரி சாம்பசிவ ராவ்,நம்ம நாகேஸ்வர ராவ்...என பெட்டிச் செய்தியில் பேர்கள் உண்டு. இதுதவிர அதிபர்களின் முந்தைய இரவு உபசாரத்தில்(முதல் எழுத்து உ’வேதான்) மறுநாள் சபையில் செஞ்சோற்றுக் கேள்வி எழுப்பும் உறுப்பினர்களும் இருக்கலாம்.அது கட்டுரையில் இல்லை.மாநிலங்களவை துணைத்தலைவர் குழுவின் உறுப்பினர் பி.ஜெ.குரியன் வினவுவதில் அதற்கான பூடகங்கள் இருந்தன.

இப்படிக் கட்டுரைகள் அவ்வப்போது தருகிற இந்தியா டுடேவின் லே அவுட்டில் தலைப்பில் டிண்ட் அடித்த பகுதிகளையும் அடிக்காத பகுதிகளையும் சிறுகோட்டால் பிரித்து உங்களுக்குத் தருகிறேன்.
1.ஆசிரிய-ரிடமிருந்து...
2.உள்-ளே
3அன் -புடன்
4.ரேடார்
5.எட்டுத்திக்கும்
6.தே-சம்
7.மாநி-லங்கள்
8.தமி-ழகம்
9.கவர்-ஸ்டோரி
10.சந் -தை
11.சிறப்புப்பகுதி
12.மைதா-னம்
13.ரச -னை

கோட் அடிப்பது எப்படி என்று இந்த அரசியல் கம் தொழிலர்களிடம் லீவிங் மீடியா இண்டியா லிமிடெட் படித்துக்கொள்ள வேண்டும்.

Monday, November 16, 2009

நீங்களும் கேளுங்கள்.

வானிலை மற்றும் வாழ்நிலை பற்றியும் ஒட்டியும் எழுதியிருந்த பகிர்வுக்கு சங்கர் நீ-கேளேன்.பிளாக்ஸ்பாட்.காமில் இரு தினங்களுக்கு முன் எழுதியிருந்த தற்செயலைச் சொல்லியிருந்தார்.அதை நான் நொடியது விநாடி வரை படிக்கவில்லை. இதோ அடுத்து முயன்று படித்துவிடுகிறேன்.இன்னும் கருத்துரையைப் பதிவு செய்யவும் கம்ப்யூட்டரில் படிக்கவில்லை.

இதெல்லாம் சப்பமேட்டரு மச்சி! என்று பிளாக்கர் செவ்வகம் முணுமுணுப்பது செவியில் கேட்கிறது. என்னளவில் கணினி உருது மொழியில் கிடைத்த விவிலியம் போன்ற தோற்றத்தையே இன்னும் தருகிறது.விரைவில் தீர்வு வரும்.முக்கியக் கருத்துகளுக்கு முகம் கொடுத்து பேசுவதன் தார்மீகத்திற்காக ‘கருத்துரை’ப் பதிவை கடைபிடிக்கவேண்டும்.

இப்போது சங்கர் கூறியதைப் பற்றி.இதில் வியப்பதற்கு அதிகமில்லை என்பதனை அவரும் அறிவார்.காலகாலமாக ஒரு விஷயத்தை ஒரேமாதிரி சிந்திப்பவர்களும் அல்லது இதுவும் ஒரு மேட்டார்தான் என காண்கிறவர்களும் பபல இடங்களில் விரவிக்கிடக்கிறார்கள். பகிர்வுக் கருவியின் காலமாக இருப்பதால் இப்போது வெளித்தெரிந்து கைகுலுக்குகிறோம்.

ஆனந்த விகடனில் வருகிற அதே செய்தி குமுதத்தில் வருவதும் உயிர்மைத் தலையங்கத்தின் சாரப்பொருளே காலச்சுவடிலும் உயிரெழுத்திலும் வருவது ஒற்றர்கள் மூலம் அல்ல. சிந்தனைப் பள்ளி அமைப்புகளில் இருந்து.நீ கேளேன் என்பதை சங்கர் கருணாவிடம் இருந்து பெற்றிருக்கக்கூடும்.எஸ்-ஸில் ஆரம்பித்து ஆர்-ரில் முடிகிற நான் கூட இதே தலைப்பை பதிவுக்கு வைத்திருக்கக்கூடும்.அந்த இளமை எனக்குப் பிடிச்சிருக்கு.
ஆனால் நீங்கள் கேளுங்களேன் என்றுதான் தலைப்பு வைத்திருப்பேன்.சவட்டுப் படுவதன் அளவிலிருந்து வருவன இவையும் இவையன்னவும்.

நிச்சயம் ம்,முந்தாநாள் இரவு சன் செய்திக்கு முன் சங்கர் கஸ்தூரி தொடர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.செய்தியை உத்தேசித்து சூரியனில் நுழைவதற்குமுன் இரண்டு நிமிடங்கள் அதைப்பார்க்க நேர்ந்தது.கணவன் வரவேயில்லை கங்கா பதற ஆரம்பித்தபோது நேரம் ஒன்பது. கம்பெனி பற்றி-கண்ணில் காட்டாமலே- சித்தரிக்கப்படுகிற அளவிலே இருந்து கூட அங்கிருந்து முதலாளி இரவு பத்து மணிக்கு முன்பு கிளம்பினால் அவன் சி.ஐ.டி.யூ அல்லது ஐ.என்.டி.யூ.சி யில் சேர வேண்டிய அவகதிக்கு ஆளாகிவிடுவான்.படலக் காட்சி முறையில் கங்கா நடந்து தவிக்குறாள்.நகம் கடிக்குறாள்.

கங்காவின் அப்பா,’உனக்கு பயந்து மாப்ள கம்பெனியிலேயே தங்கிறப்போறாரும்மா’ என்று ஜோக் அடிக்கிறார். அந்தப் புள்ளியில் பேசாமல் அந்தப் பயல் இந்த ஆளையே கல்யாணம் பண்ணிக்கொண்டிருக்கலாமே என்று எனக்குத் தோன்றியது. அப்புறம் கதை நகர்கிறது.

எனக்கு என்ன தோன்றியது என்றால் ‘கங்கா சித்த நாழி தொலைக்காட்சி பார்த்தால் என்ன?’ என்று. உங்களுக்குத் தெரிய தொலைக்காட்சி பாத்திரங்கள் யாரும் தொலைக் காட்சித் தொடர் பார்க்கிறார்களா என்ன.நீங்களும் தான் சொல்லுங்களேன்.

இதைத்தான் படைப்பாளிகளின் சமகாலப் பிரக்ஞை என்பது.

Saturday, November 14, 2009

நீங்களும் கேளுங்கள்.

சேமிக்காமல் இடுகையிட்டதன் பலனை நான் அனுபவித்தேன். நீங்கள் அனுபவிக்கவில்லை.
பேறு யாருடையதாகவும் இருக்கலாம்.

லேசானது முதல்...

ஊரெங்கும் மழையாக இருக்கிற ஐப்பசி இரவில் இதை எழுதுகிறேன்.இந்நேரம் மனதிற்கு மிக உகந்த ஒரு விருப்பத்தைச் சொல்லிவிட விழைகிறேன். காது வழி நிகழ்ச்சிகளிலேயே எனக்குப் பிடித்தது மத்தியானம் ஒன்றரை மணி வாக்கில் செய்தி முடிந்தவுடன் வானொலியில் கூறப்படுகிற வானிலை அறிக்கைதான். வங்கக்கடலும் அரபிக்கடலும் தவறாமல் இடம் பெறும் இதைக் கேட்கிற போது அனேகமாக இந்த அறிவிப்புகள் ஐந்து நிமிடம் நீடிக்குமாக இருக்கும்.ஆனால் இதைக் கேட்கும் போது நேர ஓர்மையற்று,கால நினைவற்றுத் திளைத்துவிடுகிறேன்(கால நினைவற்ற என்ற வாக்கியம் வண்ணநிலவனின் குளத்துப்புழை ஆறு கவிதையின் நினைவில்). கேட்பது ஐந்து நிமிடமே ஆனாலும் உடலை ஆகாய சஞ்சாரமாக்கிக் கொண்டு திராவிட நாடு முழுதும் சுற்றி வந்தது போல ஒரு உணர்ச்சி தோன்றும்.

உதாரணமாக அதில் உச்சரிக்கப் படும் ஊர்ப்பெயர்கள் இவ்விதம் இருக்கும்.

மார்த்தாண்டம்,ஒரத்தநாடு,தேன்கனிக்கோட்டை,திருத்தணி,நெல்லூர்,கடப்பா,ஸ்ரீகாகுளம்,ராயலசீமா(இங்கெல்லாம்..),கோவா,
சிக்மகளூர்,சிவமொக்க,மங்களூர்,பாலக்காடு,வடக்கு மலபாரின் உட்புறப்பகுதி,பெருந்தலமன்னா,இரிங்ஙாலக்குடா....

கெள்விப்பட்டும் படாததுமான அத்தனைவிதமான பேர்கள்.அதிலும் வெளியே மழை பெய்து கொண்டிருக்கிற சூழ்நிலையில் இப்படி வானொலியில் கேட்கும் போது எல்லா ஊரின் மழையும் மணக்கண்ணில் விரியும். இந்த ஊர்களிலெல்லாம் இப்போது நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை வேறு வரும்.

வானொலியைவிட தொலைக்காட்சி இப்படியான விவரங்கள் தருவதில் குறைவான சேவையே ஆற்றுகிறது. செய்திகளின் முடிவில் அதிகபட்சம் எட்டுப்பத்து நகரங்களின் வெப்ப தட்ப அளவு மற்றும் மழைப்பொழிவுகளைச் சொல்லுவார்கள்.

அப்படிச் சொல்லிக்கொண்டிருந்த தொலைக்காட்சிச் செய்திகளில் திடீரென அந்தச் செய்தியைச் சொல்ல அந்தத்துறையின் முகாமிப்பட்ட ஒருவரே தோன்றினார். பெயர் ரமணன்.ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அவர் என்று நினைக்கிறேன்.அவரது தோற்றம் அதாவது தொலைக்காட்சிப் பிரத்யக்ஷம் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.

இதற்கு ஒப்புமைகள் சொல்லவேண்டுமெனில் ஜெயில்சிங்,டி.என்.சேஷன்,பி.ஹெச்.பாண்டியன் ஆகியோரைச் சொல்லலாம்.அதாவது அவர்கள் இருந்ததனாலேயே அந்தப் பதவி அதிகமும் வெளி உலகத்துக்கு தெரியவந்ததே அதுபோல இது. தொலைக்காட்சிகள் பாதிப்புச் செலுத்த வந்த காலத்தில் இப்படி சேதி சொல்ல வந்தது ரமணனின் திருச்சுழி என்று கருதுகிறேன். சுழி என்பது இங்கு தமிழ் வழக்கத்து பேறு எனம் பொருளில் தந்தேன்.

இப்போது புயற்காலங்களில் -காற்றழுத்தத் தாழிக் காலங்களில்- அனேகமாக அவர் தினமும் தோன்றுகிறார்.தொலைக் காட்சி செய்தி வாசிப்பவர்களைப் போலவே ஒருமுறை காச்சி அளித்த உடையில் மறுமுறை காச்சி அளிக்கக்கூடாது என்கிற தார்மீக நிர்ப்பந்தம் வேறு அவருக்கு இருக்கிறது. எப்படிச் சமாளிக்கிறாரோ அது அவர்பாடு.ஆனால் சமாளிக்கத்தான் செய்கிறார் என்பது கண்கூடு.

ஊடகங்கள் அல்லது பொது-புதுப் பொருள்களின் பயன்பாடு சிலருக்குத்தான் வாய்க்கும்.அதற்கு உதாரணங்கள் உள.பத்திரிக்கையை அப்படி பயன்படுத்தியது தமிழ்வாணன் & சன். இதில் சன்னுக்கு தொப்பி மிஸ்ஸிங்.

பிளெக்ஸ் பேனரின் அதிக பயனை அடைந்தவர்கள் சினிமாக்காரரில் இளையதளபதி.அரசியலில் தளபதி.தளபதிக்கு நிகராக அழகிரி.

இதெல்லாம் அந்தந்த காலச்சூழலில் தமது மானுட இருப்பும் நேர்வதால் உண்டாவதால் ஆன பலன்கள்.அது தொலைக்காட்சி வழியே ரமணனுக்கு வாய்த்திருக்கிறது.அவரது குரல் பற்றிச் சொல்வதென்றால் வலியவந்து காதில் ஏறும் குரலல்ல.அசிரத்தையாய் இருந்தீர்களானால் ஒன்றுமே புரியாது போய்விடும் என்பதான குரல்.ஆனால் கவனமெடுத்துக் கேட்கும் போது ஏமாற்றாமல் முழுச்செய்தியையும் தெரிவித்துவிடுகிற குரல். அதிலும் அவர் ’ஓரிரு இடங்களில்’ என்பதில் ‘ஓரிரு’ என்பதை உச்சரிக்கிற விதமே அலாதியானது. அதேமாதிரி யாராவது உச்சரித்துக்காட்டினால் ஓரிரு பொற்காசுகள் கூட வழங்கிவிடலாம்.ரமணன் தொலைக்காட்சியில் தோன்றும்பேதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது. மத்தியான ரேடியோச் செய்தி அளவுக்கு இல்லாவிட்டாலும் சிறிது மகிழ்ச்சி.எவ்வளவு மழை அளவோ அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு. அவரது காட்டில்,
லேசானது முதல் மிதமானது வரை.

Friday, November 13, 2009

தனி வீட்டின் சிறுவன்

பின் இரவின் மழை ஓய்ந்து
தெருவெல்லாம் வெள்ளக் காலை.
மரங்கள் குளித்த பாதையில் போயின
கால்நடைகள் மேய்ச்சலுக்கு.
ஆட்டுப் புளுக்கை ஒன்றெடுத்து
‘மரகத மரம்’ முளைக்குமென
குழிபறித்து மூடிவிட்டு
குந்திக் காத்திருக்கிறான்
தோழர்கள் வருவரென்று.
பொன்வண்டைத் தேடிப்போன அவர்கள்
தெருவுக்கு வரவேயில்லை.

Thursday, November 12, 2009

60/60

பாரந்தூர்60;பாரதம் 60 என்பது இதற்கு -இதற்கு முந்தைய கச்சா வடிவில் வைத்திருந்த தலைப்பு.உலகம் அறுபது வினாடிகள் ஒரு நிமிடம் என்றும் அறுபது நிமிடங்கள் ஒரு மணி என்பதையும் அங்கீகரித்திருக்கிறது.தமிழ் மரபு நாளை அறுபது நாழிகையாகவும் ஆண்டுகளை அறுபதுச் சுற்றுகளாகவும் பிரித்து வைத்திருக்கிறது. எட்டு எட்டாக மனித வாழ்வைப் பிரித்தால் எட்டாவது எட்டினை முடிக்க தமிழ்ச் சுற்றில் இடமில்லை. பழைய விரோதி,பிங்கள ஆண்டுகளின் பெயரிலேயே திரும்ப வாழவேண்டியதுதான்.

இந்தியா விடுதலை அடைந்து அறுபதின் வைரம் மின்னும் ஆகஸ்ட்-15 தினத்தில் ஒரு கிராமத்துக்குப்போனேன். மல்லிகை மகள் (பத்திரிக்கை) ஆசிரியர் ம.கா.சிவஞானம் அப்படி ஒரு பணியை ஏவியிருந்தார். அந்த ஏவலுக்கு இப்போது நன்றி.

ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் வழியில் 20-வது கி.மீ யில் இருக்கிறது.எம்.பாரந்தூர்.கம்யூனிஸ்ட்டுகள் சீட்டுக் கொடுக்காததால் சுயேச்சையாகவே தாளித்து தளி ராமச்சந்திரன் வெற்றிபெற்ற சட்டமன்றத்துள் வருகிறது இந்தப்பகுதி.தெலுகு அதிகம் பேசும் ஆனால் தமிழக ஆளிகைக்கு உட்பட்ட பகுதி.

நூறுக்கும் குறைவான வீடுகள்.அனேகமும் சீமை ஓடுகள்.பயணிகள் நிழற்குடைகளில் பலகாரக்கடைகள். சாலைவாகனங்களால் ஊடறுத்துவிட முடியாத அமைதியின் ஊர்.ஊர்த்தலைவாசல் கோயிலுக்கு முன்பாக விக்கிரமாக நின்று விடுதலை உணர்ச்சியை ஊட்டிக்கொண்டிருப்பவர்.பி.கே.தேவய்யா.

தேவய்யா அப்போதே பி.ஏ.முடித்தவர்.மோகன்தாஸ் கரம்சந்த்தின் அணுக்கமாக இருந்த பல்லாயிரவரில் ஒருவர்.இவரது முயற்சியால் இந்தச்சிறிய ஊருக்கும் ஒரு முறை வந்துவிட்டுப் போயிருக்கிறார் தேசப்பிதா.

ஊரில் முதலில் நான் சந்தித்தது வன்னப்பள்ளி எம்.வெங்கடேசப்பாவை.கார் ஷெட் வடிவத்தில் கட்டப்பட்டிருந்த கோவிலின் நுழைவுவாசல் முகப்பில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் வினாயகரை பிரதிஷ்டை செய்துவிட்ட மகிழ்வில் அன்றெல்லாம் திளைத்துக்கொண்டிருந்தார்.65 வயது. சுதந்திரம் வாங்கியது நினைவில்லை என்றார்.ஏனெனில் அப்போது அவருக்கு வயது 5. குழந்தைகளுக்கு மன்னரோ பிரதமரோ இருக்க முடியுமா என்ன?

கீழ்பாய்ச்சுக் கட்டிக்கொண்டிருந்த ஆண்கள் ‘பழனி’ திரைப்படத்தை நினைவூட்டுகிறார்கள்.நீரோடும் வீதி எங்கும் ஏரோடுது என.’’நூறு ரூபாய் இருந்தால் அப்பவெல்லாம் என்ன செய்வீங்க?’’ என்று வெங்கட்டைக் கேட்டேன். ‘ஒரு மூட்டை நிறைய சாமான் வாங்கிவருவேன்’ என்ரு அபிநயம் காண்பித்தார்.மாஸ்டருக்கு ஃபீஸ் கட்டி எட்டாவது வரை படித்திருக்கிறார்.நீளமான தரைப் பலகையில் அமர்ந்து படிப்பாம்.ஆனால் கல்வி எல்லாக் காலத்திலும் கட்டணம் கட்டிப் படிப்பதாகத்தான் இருந்திருக்கிறது.மாதச் சம்பளத்தை பெற்றோர்கள் ஆசிரியர்களுக்குக் கொடுத்துவிடுவதாகச் சொன்ன அவர் தொகை எவ்வளவு என்ன என்பது நினைவில்லை என்றார்.அது அவரது கொடுப்பினைகளில் ஒன்று போலும் என நினைத்துக்கொண்டேன்.

கல்தூண்களை நிறுத்தி அதன்மீது நான்கு பக்கமும் கல்பலகைகளை நிறுத்தி தண்ணீர் டேங்குகள் இருந்தன ஊரைச் சுற்றி பல இடங்களில். விரும்பினால் மறு உபயோகத்துக்கு நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற தரத்தில் இருக்கும் அவை இருபது லிட்டர்கள் முதல் ஐம்பது லிட்டர்கள் வரை கொள்ளளவு உடையன.முன்னம் வழிப்போக்கர்களுக்கு விடாய் தீர்க்க உதவின என்பது ஊரார் கூற்று.
ஊருக்குப் புறத்தே தெளித்தாற்போல சிலைகள்,கல்தூண்கள்,சிலா சாசனங்கள்(கல்வெட்டுகள்) புடை சிற்பங்கள் என கல்லின் கலை வடிவம் மிகுந்தே இருந்தது.

ஆலமரத்து பஸ் ஸ்டாப்பில் பேருந்துக்கு நின்ற பெண்,’ராயி உந்தி.தான்ட்லோ பிரயோஜனம் ஏம் உந்தி?’ (கல்லினால் ஆன பயனென்ன சொல்?)எனக் கேட்டு சிந்தனையைக் கிளறிவிட்டுச் சென்றார்.வயது35.

ஒரு கல்மண்டபத்துக்குள் சென்று ஓ.எம்.நாராயணன் என்கிற துறவி என நம்பத்தக்க ஒருவரை சந்தித்தேன்.தெலுகில் எங்கள் உரையாடல் நடந்தது.இப்போது தெலுங்கு என்பதை தெலுகு என எழுதுவதை பொறுப்பீர்கள் என நம்புகிறேன். ஆள் எழுத்தாளராகவும் இருந்தார்.அத்தனையும் கவிதைகள்.20 குயருக்கான பேப்பர்களை வைத்திருந்தார்.அந்த உரையாடலை எழுதினால் சிலபேச்ர்க்கு சூஃபிகள் கிடைத்துவிடுவார் என்பதால் எழுதாமல் விடுகிறேன்.
அவர்தான் எம்.பாரந்தூர் என்பது முக்காசி பாரந்தூர் என்றார்.நான் பஞ்சாயத்து அலுவலகம் உள்ள ஊரை மனதில் இருத்தி முக்கானபள்ளி பாரந்தூர் என நினைத்திருந்தேன்.இந்த ஊர் மூன்று காசிகளுக்கு சமம் என்றார்.அவரிடம் விடைபெற்றபோது அக்ஷரப் பிரவாகத்திலிருந்து கடைத்தேறிய உணர்வு.

அடுத்து சந்தித்தது எர்ரப்பா(எ) முனியப்பாவை.கையில் சிகரெட்டுடன் வீட்டின் தோற்றமே உள்ள பெட்டிக்கடையில் அம்ர்ந்திருந்தார்.ஆட்கள் வந்தால் வீட்டு அடுப்பு தேநீர்க்கடை அடுப்பாக மாறுகிறது.விறகடுப்பு.டோப்பி நேஷனல் சிகரெட்டில் தனது ’நுரையீரல் மீதான சவாலை’த் துவக்கியதாகச்சொன்னார்.கத்திரி சிகரெட் பாக்கெட்டும் அரிசியும் ஐம்பது காசுக்கு சம விலையில் விற்ற காலத்தை அவர் சொன்னபோது கத்திரிசிகரெட் பாக்கெட் விலைக்கும் சாதாரண அரிசி விலைக்கும் ஒரு மாதிரி நத்தை& ஓடு தொடர்பு நீடித்து வருவதை கண்டுபிடித்தேன்.

படிக்கணக்கு கிலோக்கணக்காக மாறியதன் ஏக பலன் ஆட்கள் பலமிழந்து போனதுதான் என்ற அவரது கண்டுபிடிப்பைச் சொன்னார்.எனக்குக் குறைவான ஒரு ஆளை வாழ்க்கை முழுவதிலும் நான் சந்திக்கப்போவதில்லை.நிறைய வீடுகளுக்கு இலவச டி.வி.கிடைத்திருப்பதை மகிழ்ந்து சொன்னார்.ஊரில் டாக்டர்கள் எஞ்சினியர்கள் ஆசிரியர்கள் யாருமில்லியா? என வினவினேன்.
தப்பினாற்போல அப்படி ஆன ஓரிருவரும் வெளியூர்களில் வசிக்கிறார்கள் என்றார்.
‘டாக்டரு லேது.மாஸ்டரு லேது.’
இங்குள்ள குழந்தைகள் படிப்பது தெலுகில்தான்.பாரந்தூர் மேல்நிலைப் பள்ளியில் 900 மாணாக்கர்.இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் பயிற்று மொழிக்குழப்பம் வயிற்று மொழிக்குழப்பம் ஆகியன மிகும்.ஊருக்குள் ஜீன்ஸ்கள் சுடிதார்கள் நைட்டிகள் உள.முனியப்பாவிடம் நான் விடைபெறுவதற்குள் மூன்று சிகரெட்டுகளை முடித்திருந்தார்.

நஞ்சம்மா எழுபது வயதைக் கடந்திருந்தார்.70.பச்சை குத்தியிருந்தார்.அவரது தகப்பனார் மகளுக்கு ரூ.100 செலவில் 10 பவுன் அடித்துப்போட்டிருக்கிறார்.பூப்போல வளர்த்த பொண்ணை ஆசிரியன் அடிப்பதா என பள்ளிக்கூடத்திலிருந்து தகப்பனால் தடுத்த்டாட்கொள்ளப்பட்டவர்.அன்றைக்கு எதற்கோ ‘இடது கைப் பெருவிரல் ரேகை’ வைக்கப் போயிருந்த அவரை ஏழாம் வகுப்பு படிக்கும் பேத்தி அழைத்து வந்தாள். அன்றைக்கு சுதந்திரட்துக்கு முந்தய பிறப்பர்களைச் சந்திப்பது எனது திட்டமாக இருந்தது.அவரிடன் உரையாடுவது சிரமமாக இருந்தது.கணவனை இழந்த கழுத்தோடு காதுத்திறனை இழந்திருந்தார்.எவ்வளவு தேவையில்லையோ அவ்வளவு.பலதரப்பட்ட பதின்மர் எங்கள் உரையாடலை மொழிபெயர்த்தனர்.
‘பாட்டி சுதந்திரம்...’ என்றேன்.அவரது மொழிக்கிடங்கில் அது இல்லை.அது எனக்குப் புரியவில்லை.இஞ்சினியரிங் படிக்கும் பேரன்,’பாட்டி நீ வெள்ளைக்காரனைப் பாத்திருக்கியா?’ என்று கேள்வியை எளிதாக்கினான்.மக்கா இஞ்சினியர் இஞ்சினியர்தாண்டா என மனதுக்குள் வியந்தேன்.
சத்திரத்தில் வைத்து கல்யாணங்கள் நடப்பது தனக்குப்பிடிக்கவில்லை என்றார்.முன்பொருதடவை எப்போதோ ‘காங்கிரஸ் ரங்கசாமி’க்கு வாக்களித்தது நினைவிருக்கிறது என்றார்.(நீ கூடத்தான் வந்திட்டுப்போறே அதெல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியுமா?)பேருந்தில் போய் வெகுநாளாகிவிட்டது என்றார்.

முற்றாகக் கைவிட்டுவிடாத விவசாயம்.ஓடு,செங்கல் தயாரிப்பு,கன்றுகாலி கறவைகள் என பாரந்தூரின் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.சாஷேக்களில் பொருட்கள் கிடைக்கின்றன.

நஞ்சம்மா எனது அளப்பரிய கேள்விகள் மற்றும் கோணங்களைப் பார்த்துவிட்டு திடீரென,’ஏப்பா காசுகிது குடுக்கப்போறியா?’என வினவினார். விடுதலை நாள் அன்று ரேகை வைக்கப்போன அவர்பாலான வியப்பை விட்டொழித்தேன்.நஞ்சம்மா எதிர்பாராத விதமாக காந்திஜியைப் பார்த்ததை நினைவு வைத்திருந்தார்.சிறுமி.சிறுமி.
‘அன்னிக்கு தேவகவுடா முள்ளைவெட்டி இழுத்து மேடைக்கான இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.’
தேவகவுடா என அங்குள்ளோர் குறிப்பிடுவது ஊர்முகப்பில் சிலையாய் நிற்கிற தேவய்யாவைத்தான்.

திரும்ப கடைவீதிக்கு வந்தேன்.அவரது சிலை முன் தேசியக்கொடி கட்டிய சிலை ஒன்று நீண்டநேரன் நின்றிருந்தது பிற்பகலில்.காரிலிருந்து யாரும் இறங்கி அவரு கழுத்துக்கு ஒரு மாலை போட்டுவிடுவார்கள் என எதிர்பார்த்தேன்.நினைத்ததே நடந்தது.விரும்பியது நடக்கவில்லை.காரில் இருந்தோர் அவரை கண்டுகொள்ளவேயில்லை.தேவய்யாவின் வீடும் பக்கத்தில்தான் என்று காட்டினார்கள்.தேவய்யா காந்திய ஊருக்குக் கூட்டியாந்ததெல்லாம் உனக்கு தேவையா?- எனக் கேள்வி ஓடியது.சிலைகட்குச் செவியில்லை எப்போதும்.

அறுபது ஆண்டுகள் என்பது ஐயந்திரிபற முள்ளும் மலருமேயான நினைவுதான்.

Wednesday, November 11, 2009

தென்கச்சி.

தென்கச்சி என்பது ஒரு ஊரின் பெயர்.எங்கே இருக்கிறது என்பது துல்லியமாகத் தெரியாது.தஞ்சை மாவட்டம் அல்லது அருகாமையில் இருக்கலாம் என்பது யூகம். அங்கே சாமிநாதன் என்றொருத்தர் இருந்தார். அங்கே என்றால் அங்கே இல்லை. அந்த ஊரின் பெயரைச் சொல்லிக்கொண்டு வானொலி நிலையம் உள்ள ஊர்களில். பிற்பாடு சென்னையில். அந்திம காலத்தில் தொலைக் காட்சிப் பெட்டிகளில் காலை நேரங்களில் தோன்றினார்.நான் ரொம்பச் சின்னப் பையனாக நான் இருக்கும்போதே அவரது குரலும் பெயரும் ஈர்த்துவிட்டது.அப்படி ஈர்த்த இன்னொரு பெயரும் குரலும் வடிவேல்ராவணன்.
தென்கச்சி சொல்வதில் எதோ விஷயம் இருக்கிறது என்றெண்ணி காது குடுத்துக் கேட்கும் போது விவரம் தெரிகிற வயது கடந்துவிட்டது.அப்புறம் எப்பொழுதும் விவரம் தெரியாதவனாகவே இருந்திடவேண்டும் என்கிற வீராப்பு அவர் சொன்னதில் ஒரு கருத்து கூட இப்போது நினைவில் இல்லை. அவரும் கருத்து என்று ஒருபோதும் உரைத்ததில்லை. தினம் ஒரு தகவல் என்பதுதான் அவரது அடையாளம்.
அவர் குரல் போலவே வேறு ஒரு குரல் இருக்கிறதே என்று வெகுநாள் தோன்றிக்கொண்டு இருந்தது.அது டணால் தங்கவேலுவினுடைய குரல்.டணாலும் எழுத்தாளர் பைரவனாகத் தோன்றி ’நடித்ததன்’ வாயிலாக தமிழெழுத்தாளர்களால் மறக்கப்பட இயலாதவர்தான்.டணால் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு குரல்-டப்பிங்- கொடுக்காமல் இறந்துவிட்டார் என்றும் அப்பணியை சாமிநாதன் செய்தார் என்றும் தகவல் கேள்விப்பட்டபோதுதான் இரண்டு குரல்களையும் ஒப்புமை கண்டேன். பெற்ற தகவல் பொய்யோ மெய்யோ எதுவாகவும் இருக்கலாம்.இன்று ஒரு தகவல் வகை சேர்ந்தது. எப்படி இருப்பினும் பாதகமில்லை. டணாலும் உயிருடன் இல்லை தகவலாரும் உயிருடன் இல்லை.சரீரமும் சாரீரமும் மறைந்தபின் சாமிநாதனுக்கு யாரும் குரல் கொடுக்க அவசியமில்லை.
சாமிநாதனை சன் தொலைக்காட்சியில் நான் பார்க்கும் போதெல்லாம் அவரது பேச்சைக் கேட்பதினும் விட முகத்தைப் பார்ப்பதில் ஆர்வமாக இருப்பேன்.அவரது சாந்தமான முகபாவத்தையும் சொல்லல் முறையையும் கடந்து ஒரு சுத்தியல் தெரியும்.அதையே அதிகமும் பார்ப்பேன். மூக்கைக் கைப்பிடியாகக் கொண்டு இரு புருவங்களுக்கும் மேலாக பருத்துப் புடைத்த சதைத் திரட்சியானது எனக்கு எப்போதும் சுத்தியலையே நினைவூட்டியது.அடங்கிய குரலினை அசைக்கும் அந்த வாய்மேல் கண்டிருந்த சுத்திதனை எப்பிறப்பிற் காண்பேன் இனி.
ஆனந்த விகடம் ’பொக்கிஷம்’ பகுதியில் சொந்த ஊரார் அவர் மேல் கொண்டிருந்த மதிப்பும் அபிமானமும் தெரிந்தது.பொதுவாக உள்ளூரால் புகழ் பெற்றுவிட்ட மாந்தர் மீது அந்த விதமான மரியாதையை வைப்பதில்லை.அதை அந்த ஊர் அவருக்குத் தந்தது. உண்மையில் அவரது மறைவை ஒட்டியே அது மீள் வெளியீடு பெற்றிருக்கிறது என்பதும் அவர் இறந்துவிட்டார் என்பதும் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
தமிழ்மரபில் தெற்கு என்பது மரணத்தின் திசையாக அறியப்படுவதால் அமரப்பெருந்தகைகளுக்கு அஞ்சலி என்பதில் முதலாவதாக அவரைப் பற்றி எழுதுவது தற்செயலாகும். காற்றில் வரும் கீதங்கள் இவற்றை உயிர்ப்பிக்கின்றன.
தினம் ஒரு தகவல்- தருவது பற்றி நண்பர் சி.முருகேஷ்பாபு அவரிடம் வியந்திருக்கிறார்.
(ராமச்சந்திரன் டீக்கடைக்குப் பக்கத்தில் எதோ ஒரு மரநிழலில் வைத்து பகிர்ந்து கொண்டது என்பது பாபுவுக்கு பர்ஸனல் எஸ்.எம்.எஸ்)
அதற்கு தென்கச்சி ‘இதுல ஆச்சரியப் படறதுக்கு என்னங்க இருக்கு.இல்லீனா மெமோ குடுத்திடறான்.’ என்று சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார்.அந்த இயல்புதான் குணவிசேஷம் .அவர் இறந்த செய்தியை இருபது நாட்கள் கழித்து தெரிந்து கொண்டேன். பெரிய வருத்தமொன்றுமில்லை. இந்தத் தகவல் தெரிய நமக்கு இத்தனை நாளாயிற்றே என எண்ணும் போது வருத்தமாக இருந்தது.

Tuesday, November 10, 2009

நள்ளெண் யாமம்.

தலைப்புக்குப் பொருத்தமான நள்ளிரவு நெருங்குகிறது.கணினி அறிவியற்பூர்வமாக காட்டும் நேரம் அமைப்பாக்கிவைத்த நேர இடுகையால் விளைந்தது.அது எதாவது ஒரு தேசத்தில் இந்த நேரத்து மணியாக இருக்கலாம். அட்சரேகைகள் தீர்க்கரேகைகளால் சூழப்பட்டது இந்த நளியிரு முந்நீர் சூழ் புவி. இணையத்தில் எழுதத் துவங்கும் இந்நேரம் பாறைகளில் உளித்த கடுந்தனிமங்கள் பனைகளில் சலசலத்த ஓலைகள் தூவிகள் இறகுகள்துணிகள் ஆணிகள் மறைந்து கொண்டு இருக்கும் பேனா நிப்புகள் காகிதங்கள் மசியின் கீழ் உருளும் ஆலவிதை அளவுப் பந்துகள் என எழுதப்பட்ட மானுடமும் ஊடகமும் உசாப்பொருளுமாக தமிழும் இன்னபிற மொழிகளுமாக என்னென்னவோ உணர்வுக்கு வருகிறது.
மகிழ்வும் கனவுமான பொழுது. அச்சுக்கு வராத கச்சா ரூபத்தில் கணினியிலேயே கதை தட்டும் முயற்சி சொந்த வட்டமான தாராபுரத்தில் நடந்தது.மின்சாரவாரியரான கருப்புசாமியின் மகன் ஜெகநாதன் அச்சிக்கொடுத்த கதைகள் சில.எனக்கு முன்னரே அவர் இணையத்தில் உலவுவார் என்பது நான் எதிர்பாராதது.2000 ஆண்டின் இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற எனது நாற்று கதையின் வடிநேர்த்திக்குக் காரணமான எடிட்டரும் அவனே.ஐந்தாண்டுகளாக அவனைத் தொடர்ந்து தூரன்குணா,பாலசுப்பிரமணியன் ஆகியோர் என்னைக் கணினிக்கு ஊக்கினார்கள். மூவரும் இப்போது பெங்களூரில். பெங்களூரில் செய்யாததை நிலக்கோட்டை தாலூக்கா வதிலை அருகுள்ள கோட்டப்பட்டி காமாட்சிபுரத்திலிருந்து செய்கிறேன். கனவுகளை விடவும் ஆசை அதிகமாயிருக்கிறது. சமீபத்தில் தளம் ஆரம்பிக்குமாறு ஊக்கியது பாலாஜி. மிக ஆச்சரியகரமாக இங்கே ஒரு அந்தக நிரடலில் நான் ஒரு ரிப்பனைக் கட்ட, கண்டங்கடந்திருந்து கத்திரிக்கோல் எடுத்து நேசமித்திரன் வெட்ட வைத்தார். இந்த அனுபவத்தை நானும் அவனும் மறப்பதற்கில்லை. விளை பொருள் எப்படி இருப்பினுங்கூட.தொடர்ந்து சின்னச் சின்ன கருத்துகளோடு நண்பர்களைச் சந்திக்கிறேன்.காணாத் துணையாயும் கனவு இணையாயும் இப்போது கத்தாரில் இருக்கிற சாந்தியின் ஊக்கமும் இந்தப் பயணத்தைத் தொடங்குவதற்கான சாத்தியத்தை அளித்திருக்கிறது. தூங்கும் தூங்காமலிருக்கும் அனைவரின் இமைகளையும் காற்று போல தழுவி ஒரு ‘நல்லிரவு’ சொல்லிக்கொள்கிறேன்.

இன்று நள்ளிரவு.

கொட்டுது மழை.வாட்டுது குளிர்.வாய்ப்பு இருந்தா நாளை பார்க்கலாம். சிவா