Monday, December 21, 2009

கே.பி.சுந்தராம்பாளும் கருணாநிதியும் கமல்ஹாசனும் பின்னே ஞானும்...

முந்தாநாள் அதிகாலை ஒரு கனவு.

முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள் இருந்து கே.பி . சுந்தராம்பாள் வருகிறார்.அவரது கைகளில் ஓலைச்சுவடி இருக்கிறது. அவர் ஜோசியக்காரராக என் மனதுக்குப் படுகிறது. அடுத்து அவர் மரத்தடி ஜோசியக்காரருடன் அமர்ந்து உரையாடுகிறார். உண்மையில் அது விவாதம். எனக்கே கூட அது சுந்தராம்பாளாக இருக்க வாய்ப்பில்லை என்று படுகிறது. அவர் இறந்துவிட்டார் என்பது காரணமில்லை.ஏனோ ஒரு தோணல், அவராக இருக்க வாய்ப்பில்லை என்று படுகிறது.

ஜோசியக்காரரின் பிரச்சனை வேறு . அவர் சுந்தராம்பாள் இறந்துவிட்டார் என நினைக்கவில்லை. ஆனால், அது சுந்தராம்பாளாக இருக்கக்கூடாது என விரும்புகிறார். அவரது தொழில் போட்டி.தான் நுழைய வேண்டிய இடத்துக்கு அந்த அம்மா எப்படிப் போகலாம் என்பது அவரது பாவனையில் தொனிக்கிறது.

திரும்பவும் அவர் கருணாநிதியின் வீட்டுக்குள் செல்கிறார்.மதில் தாண்டியதும் அவரது கனவுப் பாத்திரம் முடிகிறது.இப்போது நான் பாடுகிறேன். இப்போதும் எனது கனவிருப்பு சாரீர நிலையையே எட்டியிருக்கிறது.ஒரு பாடலை அச்சு அசலாகப் பாடுகிறேன்.(பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே என்பது போன்ற ஆன்மாவுக்கு நெருக்கமான பாடலாக அது இருக்கக்கூடும்- பாடல் நினைவில்லை.)

அடுத்து பாடலின் இசைக்கோர்வைகளையும் எனது வாயாலேயே இசைக்கிறேன். அடுத்துப் பாடும்போது குரலில் பிசிறு தட்டுகிறது. இப்போது கமலைப் பார்க்கிறேன். இருவரும் அடுத்த நொடியே ஒரு இருட்டுக்குள் செல்கிறோம். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள இயலவில்லை.நான் ஒரு பாறைமேல் அமர்ந்திருக்கிறேன்.

எனக்கு மூச்சா வருகிறது எனக் கமலிடம் தெரிவிக்கிறேன்.அவர் அந்த மேனிக்கே அடிக்குமாறு பரிந்துரைக்கிறார். நான் முக்கிப் பார்க்கிறேன் மூச்சா வரவில்லை.அந்த முக்கலில் இருந்த இடம் வெளிச்சமாகிறது. அது கொடைக்கானலில் உள்ள குணா குகை.

அதைப்பார்த்ததும் விழித்துவிட்டேன். அப்புறம் எழுந்து பாத்ரூம் போனேன். மெத்தை போர்வைகள் தப்பித்தன. விழித்த நிலையில் கனவின் சரடுகளை ஆராய ஆரம்பித்தேன்.
‘வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்’ என்று பாடுகிற அவ்வைசுந்தராம்பாளுக்கு(இது கமல் லிங்க்) ஜோசியத் தோற்றம் பொருத்தம்தான்.கையில் சுவடி ஜோசியக்காரர்களுக்கும் புலவருக்கும் உரியதே.

கருணாவும் ஜோசியம் பார்க்கக்கூடும் என்பது மஞ்சள் சாட்சி.சமீபத்திய குலச்சாமி கோயில் தரிசனம் சாட்சி.ஜோசியக்காரன் பிழைப்பைக் காக்க நினைக்கும்:தக்கவைக்க நினைக்கும் எனது பிரதிநிதி என நினைக்கிறேன்.

கனவில் வந்த மற்ற மூவரின் அடையாளம் ஆங்கில எழுத்து கே.வில் தொடங்குகிறது.குணா பாறை ஏன் வந்தது. என்ன கேயாஸ் தியரி...குரலிலும் பிற்பாடு உருவிலும் கூட சுந்தராம்பாளுக்கு இணை வந்து விட்ட எஸ்.வரலட்சுமி காரணமா...

குணா படத்தில் கமலின் அம்மா.பாடல்; உன்னை நானறிவேன் என்னயன்றி யாரறிவார்?...
(அல்லது ராஜராஜ சோழனில் ,’ஏடு’ தந்தானடி தில்லையிலே பாடலை கைச்சுவடியுடன் நினைவு கொள்ளலாம்.)

கனவை யோசிக்க யோசிக்க காலைப்பொழுது சுவாரசியாக கன்னித்தீவு போல நீண்டுகொண்டிருந்தது.காலையில் தினத் தந்தி பார்த்தால் தலைப்புச்செய்தி,’கலைஞர் கருணாநிதிக்கு மூத்த தமிழ் மகன் விருது.’

சங்கதி இதுதானா... இளைய மகன்களுக்கு இப்படியான கனவுகள்கூட வராவிட்டால் நாட்டில் பிறகு என்னதான் நடக்கும்.

4 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

//காலையில் தினத் தந்தி பார்த்தால் தலைப்புச்செய்தி,’கலைஞர் கருணாநிதிக்கு மூத்த தமிழ் மகன் விருது.’//

மானங்கெட்ட மனிதர்கள்........

பத்மஸ்ரீ, மட்டும் பாக்கி...

விரைவில் தந்து தங்கள் செஞ்சோற்றுக் கடனைத் தீர்த்து, தங்கள் விசுவாசத்தை வெளிக்காட்டுவார்கள் என நினைக்கின்றேன்.

Kodees said...

சிவா! ஏன் ஈரோடு சந்திப்பிற்கு வரவில்லை? நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

Nathanjagk said...

நான் படிக்கும் போது சேரிலேயே உச்சா​போய்விட்டேன்! இப்படியெல்லாமா மஞ்ச துண்டு மேல வஞ்சம் காட்டறது?

இது எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது. மஞ்சளாக இல்லாமல் பச்சை அரசாட்சியில் இருந்திருக்குமானால் தமிழ்த்தாய் என்றல்லவா விருதை தயாரித்திருப்பார்கள்!

அப்புறம் 1:
கன்னித்தீவு முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். சரியா?

க. சீ. சிவக்குமார் said...

ஈரோடு வாழ்வியல் நகைச்சுவை காரணமாக வர இயலாமற் போய்விட்டது கோடீஸ். பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதாலேயே நாம் பார்த்துக்கொள்ள பிராபப்ளிட்டி கம்மி. என் பிராப்தம் அப்படி; அவற்றை நேரில் சொல்கிறேன் எப்போதாவது.

ஜகா நாளைக்கு தந்தி பாத்திடறேன் முடிஞ்சுதா கன்னித்தீவுன்னு.