Saturday, July 31, 2010

நிலா நாற்பது- 8

ஓய்வாய் உணரும்
நாளின் இரவில் நிலா
கொள்ளும் பிணை
கொடுப்பினை.

Friday, July 30, 2010

ஆதியிலே கோழி இருந்தது....

இன்று ‘காலடி’ யில் என் கண்ணடி பட்டு ஜகநாதனின் ‘கிளஸ்டர் - நோவா ‘ அறிவியல் புனைகதை படித்தேன். அது ஒரு வேளை புனைகதையாக அன்றி நிஜம் கூட ஆகலாம் எனினும் காலத்தை 2018 க்குள் கொண்டே கதை சொல்வதால் அது புனைவு என ஊர்ஜிதமாகிறது. ஜகனின் அறிவு ஆவேசமும் கூட அதில் தெரிகிறது. இதே நாளில் தூரன் குணா வின் அகப்பாடலில் ‘திரிவேணி’ படித்துத் திக்குப்பிரமை அடித்திருந்தபோது ஜகனின் கதை படிக்க அது வேறுவித உணர்வைத் தந்தது.

ஜகனின் பிளாக்கிலிருந்து அவரது விருப்பப் பூக்களில் சரங்கட்டியிருந்த ‘வால் பையன்’ வலைப்பூவுக்குப் போனபோது அவர் கோழி முந்தியா- முட்டை முந்தியா என்பது பற்றி எழுதியிருந்தார். சமீப ஆராய்ச்சியில் கோழிதான் முதலில் என கண்டடைந்திருக்கிறார்களாம். அதை முட்டையோ முட்டை போடும் பெட்டைக் கோழியோ ஒப்புக்கொண்டதா தெரியவில்லை.

வால்பையனும்  -என்னைப் போ - சாரி நானும் அவரைப்போலவே சின்ன வயதுகளிலேயே கோழி முந்திக் கருத்தில் உறுதியாயிருந்தேன். கோழி முந்திக் கருத்துக்கு ஆஃப் பாயில்,பூஞ்சோலை போன்றவற்றை நினைவூட்டும் வண்ணப் படங்களுடன் அவர் விவரமளித்திருக்கிறார். தர்க்கபூர்வ விவாதங்களும் நிறுவுதல்களும் எனக்கு ஏலாது. நான் தீர்மானித்திருந்தது ஒன்றை முன்வைத்துத்தான்.

அடைகாக்க ஒரு கோழியின்றி முட்டையினம்தான் எப்படித் தொடர்ந்திருக்கும்? ...ஆக இதை ஒப்புக்கொள்கிற வாழியர் நம் மக்கள்.இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் நாமக்கல் கோழிப்பண்ணையொன்றில் இங்குபேட்டர்களுக்குள் இருபத்தியொரு நாட்கள் உழல்வார்களாக.

Saturday, July 24, 2010

சுத்தாத சக்கரம்

ஐந்து ரூபாய் நோட்டு என்றால் டிராக்டர். பத்து ரூபாய் நோட்டு என்றால் கப்பல். இருபது ரூபாய் நோட்டு என்றால் சக்கரம் இவையே அடையாளங்கள் என்னளவில். பொதுவாகவும் அப்படித்தான். ஆனால் சமயங்களில் ரிசர்வ் வங்கியோ யாரோ டிசைன் செய்து  அடையாளங்கள் மாறுவதுண்டு.இப்போது இருபது ரூபாய்க்கு அப்படி மாறிவிட்டது.

சமீபகாலமாக செல்லாத இருபது ரூபாய் நோட்டுகள் என்னை அடைந்து, விட்டுப்போகாமல் கூடவே  வந்து தொல்லை செய்கின்றன.இரண்டு சமீபத்திய உதாரணங்கள் திண்டுக்கல்லில் கிடைத்த நோட்டு ஒன்று. நூறு ரூபாய் நோட்டுக்கு தேநீர் தர சங்கடப்படுவார்கள் என அரை பாக்கெட் சிகரெட்டும் உடன் வாங்கியபோது பாக்கியில் வந்தது அது.

நூறு ரூபாய்க்கு மேல் காசும் வைத்துக்கொண்டு நம்மால் தேநீர் அருந்தால் போய்விடக்கூடாதில்லையா. ஆகவே கலிதீர்த்த முடிவாய் சிகரெட்டும் வாங்கிவிட்டுப் பேருந்து ஏறிப் பார்த்தால் துளையுள்ள ஒரு இருபது.

சிகரெட்டை எண்ணிப்பார்க்கத் தெரிகிறது. சில்லறையை எண்ணிப்பார்க்கத் தெரியவில்லை.அப்புறம் இரண்டு மூன்று நாள் தங்கிவிட்டு ஒருவழியாக விடைபெற்றது.இதில் வியப்பில்லை உலகத்தில் நம்மிலும் மேலான நல்லோர் தீயோர் முட்டாள் அனைவரும் இருப்பர்தானே.

மூன்று நாட்களுக்கு முன் ஒரு நோட்டுவந்து மாட்டிக்கொண்டது சென்னையில். ஒரு பெட்டிக்கடையில் நோட்டை உருவுகையில் அதன் வெள்ளிக்கம்பி குமிழ் போட்டுக்கொண்டு அகட்டு வளைவெடுத்தது. வேறு காசுகளும் இருந்ததால் பெட்டிக்கடையில் கண்ணியத்தைக் காப்பாற்றிக்கொண்டேன். இருப்பினும் இனிமேல் நோட்டு வாங்கும்போது கட்டுப்பாடாக இருக்கவேண்டுமென்றும் இப்போதைக்கு இந்த இருபதை செலாவணி ஆக்கவேண்டியது கடமை என்றும் எண்ணினேன்.

அருகிலிருந்த நண்பன் ஸ்ரீதர் இருபது ரூபாய் நோட்டை வாஞ்சையுடன் நீவி வெள்ளிக் கம்பியை ஒடுக்கெடுத்து அதன் இருப்புப் பரப்புக்குள்ளேயே செமித்துக் கொடுத்தார்.

இருபது ரூபாயை பேருந்தில் கண்டக்டரிடம் நீட்டினேன். அவர் வாங்கி விரலிடைப் பொதிகிற நேரம் வெள்ளிக் கம்பி வெளி நீட்டியது. விட்டலாச்சார்யா படங்களில் ஒரு ஜோடிக் கண்களுக்கு பேரழகியும் மற்ற கண்களுக்கு பிசாசும் தெரியுமே அப்படி ஆகிவிட்டது.கண்டக்டர் ‘’பாவம் வெள்ளிய எடுக்க டிரை பண்ணீருக்காரு.முடியல. இப்ப நம்ம கிட்டச்செலுத்த வந்திருக்காரு.’’ என்றவாறு திருப்பித் தந்தார்.

எனக்கு  ‘ச்சை ’ என்று வந்தது. இந்த வெள்ளியை எடுத்து கொலுசா செய்யப்போகிறேன். கண்டக்டரிடம் மனதுக்குள் சொன்னேன். ‘ஹலோ மிஸ்டர் கண்டக்டர்! சிவகுமார் செய்கிற முட்டாள் தனங்கள் கணக்கற்றவை. ஆனால் அதற்காக இப்படியெல்லாம் முட்டாள் தனம் பண்ணமாட்டான். அவனது  முட்டாள் தனங்கள் அவனுக்கென்ற தனித்த முத்திரைகளை உடையவை.

அப்புறம் இரவான பின் ’மதுக்கடையில் செல்லாத நோட்டு ஒன்று உண்டா’ என்ற நம்பிக்கையில் ஒரு முயற்சி மேற்கொண்டேன்.அமைதியாக வாங்கிப்போட்டு பாட்டிலைக் கொடுத்தவர். அதை நான் எடுப்பதற்குள் ‘’ஹலோ வேற நோட்டுக் குடுங்க’’ என்றார்.

‘’ஏங்க இங்க எப்படியும் இங்கே செல்லும்னுதான் கொடுத்தேன்.’’

’’அப்படியெல்லாம் செல்லாது.’’
’சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்குது’ என்கிற பழமொழி ஞாபகத்துக்கு வந்ததால் வேறு இரு பத்துக்களைக் கொடுத்துவிட்டு வந்தேன்.இருபது ரூபாயை அறையில் ஒரு டைரிக்குள் வைத்தேன்.

இப்படியாக எனக்குள் இருபது அச்சத் திட்டம் வேரூன்றிவிட்டது. இப்போதும் அந்த இருபது ரூபாயை செலுத்திவிடலாம்.

என்ன ஒன்று அதற்கு என்னிடமே உள்ள ஒன்றை வாங்கிவிட்டால் போதுமானது. ஆனால் அதைவிட அந்த இருபது ரூபாய் அப்படியே இருந்துவிடுவது இன்னும் லாபகரமானது.

நிலா நாற்பது -7

சேயுறிஞ்சும் ஒற்றைக்
கொங்கையே அஷ்டமி.
பூரிக்குதென்றால் வளர்சேகரம்.
வற்றுகிறதென்றால் பசியில்
பற்றுகிறது சிசுக்கரம்.

Friday, July 23, 2010

மதித்தலால் வருதலென் கொல்...

அனேமாய் அனுதினமும்
இரண்டாம் ஆட்டம் சினிமா.
நான்,ஜகன்,ம்னோகரன்
மூவரும் பைக்கில்.

அறைக்கு அருகிலேயே
இருக்குமொரு
சோதனைச் சாவடிக்
காவலர் கருதி
ஒருவர் இறங்கி நடந்து
இருவர் பைக் ஏறி
சாவடி கடந்து மூவரும் போவோம்.

மதியம் மாலைகளில்
மனந்துளிருங் காலைகளில்
இருவராய் எங்களைக் காணுகையில்
புன்னகைப்பார்.
கண்களில் கேள்வியிருக்கும்...
’எங்கேடா இன்னொருத்தன்?’

தொழில் நுட்பச் செவ்வகம்- வட்டம்

என்னென்ன மாதிரியான சூழலில் எழுதுவீர்கள்? - என்று முன்னெல்லாம் யாராகிலும் கேட்கும் போது முதலாவது எழும் உணர்வு கோபம்தான். அப்படி சுலபமாக பதில் சொல்ல முடியாத கேள்வி அது. தவிர வினவும் நபர் எழுத்தை பிற துறைகள் போலவே தொழில் நுட்ப முறையில் அணுகுகிறார் என்பதால் வருகிற எரிச்சல் ‘படைப்புக் கச்சையை’ கழட்ட ஆரம்பிக்கிறது.

எரிச்சல் கொள்ளாமல் பதில் சொல்லவேண்டுமெனில் ஆகாததல்ல. மன சாவதானமும் மறுபக்கத்தின் ஆவல் திறனும்  ஒன்றிணைய வேண்டும். அவ்வளவே. இந்த அவ்வளவு அவ்வளவு எளிதில் கைகூடுவதல்ல.

கன்னிவாடி வீட்டில் பக்கத்திலிருந்து பெரியம்மா திட்டிக்கொண்டிருக்கும் போதெல்லாம் நான் எழுதியிருக்கிறேன் தெரியுமா....என்று எப்போதாகிலும் பழைய காலங்கள் நினைவில் நிரடுவது உண்டு.(ஆனால்... செத்துப்போன செவலை மாடு இருந்திருந்தால் உடைந்து போன கலயத்தில் ஒரு கலயம் பால் கறக்கும் என்கிற கதைதான் இப்போது...)

நட்பு அல்லது குடும்பம் ஆகியவற்றில் இருந்து வரும் சிறு சீறலும் இரண்டு தினத்துக்கேனும் எதையும் எழுதுதற்கு இல்லாமல் ஆக்குகிறது இப்போது. எழுதுவது இப்படி என்றால் வாசித்தல அதனினும் கஷ்டமாக இருக்கிறது. பயனற்ற வேலையை - பொருள் ஈட்டி உன்னை நிறுவாத இந்த மடத்தனத்தை -இன்னும் ஏன் கண்கொண்டிருக்கிறாய் என்கிற குரல்கள் பக்கவாட்டில் டீட்டிஹெச்சில் ஒலிக்கின்றன. இவை அகம் சார்ந்தவை.

புறத்தின் காரணிகள் காற்றின் ஈரப்பதத்திலிருந்து தொடங்கிகின்றன. கணினிக்கு வந்த பின் முதல் தடை , மின் தடையில் இருந்தே தொடங்குகிறது. முன்பு பெங்களூரில் வசித்து எழுதிவந்தபோது ‘அழகி’(தமிழ் எழுத்துருங்க)யைப் பயன் படுத்தி எழுதிவந்தேன். ஒலியியல் முறையில் எழுத்தடிக்கும் முறை நமக்குக் கிடைத்தது ஒருங்கே வரப்பிரசாதமும் சாபப் பிரசாதமுமே ஆகும்.கிராமத்துக்கு வந்து ஒரு அரைக்கால் வேக வில்நெட் இணைப்புடன் கணினிப்பெட்டி வந்ததும் என்.எச்.எம் மின் பதிவிறக்கம் அழகி இல்லாத குறையைக் களைந்தது.

அது தந்த உத்வேகத்தாலும் ஏற்கனவே நன்றியுரைக்கப்பட்டவர்களின் துணையாலும் என் வலைப்பூப் பயணம் களைப்பின்றித் தொடர்கிறது. தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவராக தெரிய நேர்ந்த போது அந்நாட்களில் பதிவு ஏதும் போடாத போது சிலர் என்னை ,‘கம்பராமாயணத்து இலங்கை வேந்தனாக’ கதிகலங்க வைத்தார்கள். காரும் மடிக்கணினியும் இருந்தால் தொடர் பதிவு ஒரு சோப்புப் போடும் ஸ்டைலில் சகஜம்தான். வீடு வாசலற்று அலையும் போது blog என்ன பிளாக். ஒரே black தான்.

இப்போதும் ‘புதுத் தொடுவான ஊடக’த்தின் செயலி கருவிகளில் இல்லாது போய்விட்டால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறேன். மதராசப் பட்டனம் படத்திற்கு அவ்வளவு சிறிய பதிவு போட்டதெல்லாம் அதுமாதிரிக் காரணத்தினால்தான். அப்புறம்... ஆட்டோமாட்டிக்காக இதுக்கு இவ்வளவு போதும் என்கிற மனப்பான்மை வந்துவிடும்.( என் கிருபை உனக்குப் போதும்..)

சமீபத்தில் எனது அபிமானத்திற்கினிய இந்த என்.எச்.எம் மை தமிழ் கூறுகெட்ட நல் உலகிற்கு முறையாக வழங்குகிறேன் என்று எங்கள் கொங்கு மண்ணுக்குப் போய் புறங்கண்ட மதிப்பிற்குரிய பத்ரி என்.எச்.எம் பறந்தோடிய வேகம் கண்டு மலைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இது முறையாகப் பயன்பட்டால் எவ்வளவோ மகிழ்வேன் என்று கூறியிருக்கிறார்.ஐயாயிரம் சாவிகளை மட்டும் ஒரே இடத்தில் குவித்து வைத்துப்பாருங்கள்... அவற்றுக்கு திறவுக் காடியின் குடைவுகள் எதுவும் அவசியமிருக்கவேண்டியதில்லை. அவை பத்தாம் நிமிடம் காணாமல் போய்விடும். பழைய இரும்புக்குப் போட்டு லயன் டேட்ஸ் வாங்கிவிடுவார்கள்.

நான் என்ன நினைக்கிறேன் என்றால் கிழக்கு பதிப்பகத்தாரின் அந்த மென்பொருளை (அனேகமாக அது வட்டத்தகடு) தங்கள் இல்லத்தின் விலையுயர்ந்த டீப்பாய்கள், கண்ணாடி மேஜை ஆகியவற்றின் மீது தேநீர்க்கறை படியாமலிருக்க கோப்பை தாங்கிகளாக அவர்கள் பயன் படுத்தக்கூடும். இந்தக் கற்பனை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனது இந்த மன அமைப்பின் மீது கிழக்கு பத்ரி கோபம் கொள்ளவும் கூடும்.

நவரத்தினம் திரைப்படத்தில் ஒன்பதில் ஒரு நாயகி கிராம போன் தட்டுகளை எறிந்து வில்லன்களைத் துவம்சம் செய்வாள். அப்படி ஒரு தட்டினை பத்ரி என்மீதும் எறியட்டும்.

பட்டணம் - பாட்டுகளூம் பாடூம்

மதராச பட்டணத்தில் (அதாவது திரைப்படம் பற்றி முதலில் பேசுவதாயின் எடுத்தோர் விருப்பப்படி மதராசப் பட்டனம் என எழுதணும்) பாட்டுகள் எப்படி என பத்மா வினவியிருந்தார். பாடல்களில் அபாரமான வரிகள் இருந்ததாக கேட்கும் போது தோன்றியது. நினைவாற்றல் குறைவு அல்லது மறுபடி மறுபடிக் கேட்காமை ஆகிய காரணங்களால் அவற்றை நினைவு கூரமுடியவில்லை.தோய்தலுக்கான வாய்ப்பும் அமையவில்லை. ஆராய்ச்சி செய்யும் வண்ணமான லௌகீக சரத்தும்  அதிலெனக்கு இல்லை. இப்ப எனக்கு மனதில் நிற்பது ‘மேகமே! மேகமே! கொஞ்சம் போயிட்டு நேரஞ்செண்டு வா’ அப்படிங்கிற பாட்டு . அதை எடுத்திருந்த விதமுமே நல்லா இருந்தது.

சென்னையில் மற்றும் தமிழ்நாட்டுல எங்கேயும் இப்ப பரவலான கருத்துக் கவர்ந்த விஷயம் போலி மதிப்பெண் அட்டைகள்தான். இதில் நடுத்தரச் சமுதாய மாணவர்கள் பலபேர் மாட்டிக்கொண்டார்கள்.+2 வில் ஆயிரம்மதிப்பெண்ணுக்குக் கீழே வாங்குகிறனெல்லாம் செத்தே போய்விட வேண்டும் என்பதான மனக் கிறுக்கு பெற்றோரிடம் உள்ளது. மொத்தக் கூகையனுகளும் இப்படி இருந்தால் இது என்ன இதுமாதிரி பலநூறு அபத்தங்களும் அழிமதியும் சமூகத்தில் பெருகித்தீரும். பேசித்தீராது.

பாருங்கள் பல ஊழல்களைத் தோலுரித்து உப்புக்கண்டம் போட்டவர் என பேரும் புகழுலுமாக விளங்கிய உமாசங்கர் ஐ.ஏ.எஸ் . போலிச் சான்றிதழ் காட்டிப் படித்தார் என சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார்.அப்புறம் பூவழகியோ பூவரசியோ எதோ ஒரு பொண்ணு அதுவும் கலெக்கடர் கனவில் உழன்று மதி புரண்டவள் போல்தான் இருக்கிறது. சின்னப் பையனைக் கொன்றுவிட்டு ஜெயிலில் சக கைதிகள் கிட்ட அடிவாங்குகிற நிலைக்குப் போய்விட்டாள்.

ஆகவே இந்தக் கலிகாலத்தில் இப்படியான சென்னைப் பட்டணத்தில் தற்சமயம் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் எனக்கு எழுதப் படிக்கத் தெரியும் என நம்புகிற நண்பர்கள் எழுத்து அல்லது காட்சி ஊடகங்களில் வாய்ப்பு இருப்பின் தெரிவிக்கலாம்.எனது அலை பேசி எண் ;
8973194399.

இதனை ஒட்டித் தொடர்பு கொள்வோர் பிளாக்கை பற்றி விமர்சிக்கவேண்டாம் என்றும் அதிலும் குறிப்பாக பாராட்டவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனெனில் .....
முடியல..

(கட்டுரைக் கடைசியை  வைகைப்புயல் வடிவேலுவின் தொனியில் வாசிக்கவும்)

Monday, July 19, 2010

பட்டணம்... பயில்வான்கள்

எவ்வளவோ வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் இரண்டு திரைப்படங்கள் பார்த்தேன். ஒன்று மதராசப் பட்டணம் மற்றது தேனாண்டாள் பிலிம்ஸ் மொழி மாற்றி வழங்கிய 'உலக நாயகன்' (காற்றைக் கடைசியாய் வளைக்கும் ஒருவன் - என்கிற மாதிரி பொருட் தலைப்பு உடைய படம்) .


உலக நாயகன் படத்துக்குக் குழந்தைகளைக் கூட்டிப் போனால் மகிழ வைக்கலாம்.மதராசப் பட்டணம் வேறு சில வகைகளில் கவர்ந்தது.கவித்துவமான சில காட்சிகளில் புல்லரித்தேன். கவர்னரின் பெண் கழுதை வைத்திருக்கும் வண்ணார் பையனைக் காதலிக்கிறாள்.
அதைவிட வண்ணார்கள் அவ்வளவு பெரும் கொழுக் மொழுக் என இருந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. குஸ்தி சண்டை பயில்வான்கள் வேறு அவர்களில் பலர் இருந்தனர். காதலன் படத்திலாவது காக்கிநாட காக்கர்லா பொண்ணுதான் கான்ஸ்டபிள் மகனைக் காதலிக்கிறாள். இதில் வெள்ளைக் காரக் கவர்னர் பெண்ணே நம்ம பையனைக் காதலிக்கிறாள். அப்புறம் டைட்டானிக் மாதிரி நினைவுச் சின்னம் ஒன்று . மொத்தத்தில் ஒரு பத்துப் பதினைந்து படத்தை நினைவு படுத்துவதால் நமது ஞாபக சக்தியை சோதித்துக் கொள்வதற்காகவாவது அவசியம் படத்தைப் பார்ப்பது நல்லது.

Wednesday, July 7, 2010

வெளியெல்லாம் உள்ளே...

சுற்றிலுமுள்ள பலதிசை விரிந்த
கோளங்களின் வெளியை
வானம் பார்க்கிறது.

தன் கட்டுப்பாட்டிலும்
வேண்டியபொழுது
ஆட்டுவிக்கப் படுவதாகவும் வெளி
இருக்கவேண்டும் என விரும்புகிறது.

கதிகள் கட்டுக்குள்
இயைவதற்கான அறிகுறிகள்
எதுவும் தோன்றாதபோது

தன்னிடமிருந்து
-எப்போதுமிருக்கிற
நிறப்பிரிகையினை உற்பவிக்கும்
சாயத்தை நினைவு கூர்ந்தவாறு

தூரிகையைக் கையிலெடுக்கிறது.
பிறகு அறைக் கதவைத் தாழிட்டு
அண்டங்கள் கேட்குமாறு
விசும்பலுடன் கண்ணும் மூடி
லயித்து
தன்னைத்தானே வரைகிறது வானம்.

Tuesday, July 6, 2010

குறுஞ் செய்தி

நேச மித்ரனிடம் இருந்து வந்த மின்னஞ்சல் புதிய செய்தி (எனக்குதான் புதுசு) ஒன்றைத் தெரிவித்தது. மகுடேசுவரனின் வலைப்பூ பற்றிய தகவல்.kavimagudeswaran.blogspot.com. எனது லட்சத்திப் பத்தாயிரம் சம்பாத்தியமுள்ள வேலைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு உடனடியாய் கண்ணும் கையும் விரைந்தோடி படித்துமுடித்தேன்.

வழக்கம் போல அவரது கவிதைகள் துய்ப்புக்கும் கட்டுரைகள் படித்துச் சிந்திக்கவும் சிலாகிக்கவும் ஆனவை. இச்செய்தியை எட்டுத் திக்கும் கொட்டி முழக்குவதற்காக உடனடியாக இது பதியப் படுகிறது. ஆஸ்கர் அவார்டு ரஹ்மான் பற்றி அவரது கட்டுரை ஒன்று உண்டு. அதன் மீது உடன்பாட்டுத் தளங்கள் ஒரு பக்கம் இருக்க அவரது அவார்டு விஷயத்தை ஒட்டி வேறொரு அவதானம் எனக்கு உண்டு.

ஆஸ்கார் வாங்கியதால் ரஹ்மானுக்கு பத்ம விருது தவிர்க்கப் பட இயலாததாயிற்று.செம்மொழி ‘மையச் செய்தி’ப் பாடலுக்கு அவரைவிடப் பொருத்தம் யார்? ரஹ்மானுக்குத் தந்ததாலேயே இளையராஜாவுக்கும் பதம விருது கிடைத்தது.

விருது கிடைத்த அன்று இளையராஜா உளறிய உளறல் புது இலக்கிய வகை. உளறலினூடாக அவர் செய்தியைச் சொல்லிவிட்டார். அவர் அதில் சொல்லாத செய்தியே எனது கேள்வி.

எம்.எஸ்.விஸ்வநாதன் பத்ம விருது பெற்றிருக்கிறாரா என்பதுதான் அது. ஒருவேளை இல்லையெனில் தமிழின் வரலாறு, இசை,சிற்பம், கட்டடம், மங்கானி அனைத்தையும் நாற்பது அல்லது எண்பத்தேழு ஆண்டுகளுக்குள் சுருக்கிக்கொண்டு பொத்தித் திரியவேண்டியதுதான்.

இரட்டை உலையும் பரிதிக்கரமும்

நாளிதழ்கள் படித்துப் பதினைந்து தினங்களுக்கும் மேலாகிவிட்டது என்கிற ஒரே தைரியத்தில்தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன். ஏனெனில் தமிழக அரசியல் பற்றி எழுதுவதற்கு விநோதத் தகுதிகள் தேவையாயிருக்கின்றன. ஒன்று கோள் வல்லுநராயிருந்து கருத்துச் சொன்னால் பலிக்கக் கூடும். அல்லது தொகுதி வாரியாக ஒற்றறிந்து உளவு வேலை செய்து ஒரு அறிக்கையைத் தயாரிக்கவேண்டும்.

இப்போது அதையும் தாண்டிய ஒரு சிக்கல் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறது. மக்கள் வாக்குகளை விற்கத் தயாராகிவிட்டார்கள். காசு வாங்கிக்கொண்டு காசு தந்தவர்களுக்கே வாக்களிக்கிற அளவுக்கு மக்கள் நேர்மையாக இருக்கிறார்கள். இது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. காசு அவர்களிடம் வாங்கிக்கொள்ளுங்கள் வாக்கு எங்களுக்குப் போடுங்கள் என்று சொல்கிறவர்களின் பேச்சு எடுபடுவதில்லை.

‘எங்களை என்னதாண்டா நெனச்சு வச்சிருக்கீங்க?’ என்பதாக பதில் அமைந்துவிடுகிறது.மாதா மாதம் பணம் தருகிற ஏற்பாடு உண்டென்றால் நானும் வாக்குவிற்கத் தயார்தான். அது மாதா, அய்யன், சொறியன்,முடிச்சவிழ்க்கி யாருக்காக இருந்தாலும் சரி. ஆனால் அப்படி நடக்காது. ஜனநாயகம் சிவகுமாருக்காகப் படைக்கப்பட்டதல்ல.

சுவாரசியமான யூகங்களுக்கு இடந்தரவல்லதாக இப்போதைய நிலை -வரும் சட்டமன்றத் தேர்தல் - உள்ளது.சரத் குமாரோ கார்த்திக்கோ முதலமைச்சர் ஆகமாட்டார்கள் என உறுதியாகச் சொல்லலாம்.கடனோ உடனோ வாங்கி இதற்காக ஐந்தாயிரம் வரை பணம் கட்டுவேன்.

இன்று காலை சந்தித்த கிராம நண்பன் ‘காங்கிரசும் அ.இ.அதி.மு.கவும் கூட்டாகிருவாங்க போல இருக்கே?’ என்றான்.ஆகட்டும் அதற்கென்ன.ஆனால் தி.மு.கவுடன் கூட்டு வைத்துக்கொண்டால் அது காங்கிரசுக்கு உத்தரவாதக் கூட்டணி. காங்கிரஸ் அ.தி.மு.க வுடன் கூட்டு வைத்துக்கொண்டால் அதுவும் உத்தரவாதமாக வெற்றிக்கூட்டணிதான். முதல் முறையாக ஸ்பஷ்டமாக திராவிடக் கட்சிகள் காங்கிரஸ் மீது கழுதியேறும் நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணி என்பது ஒருவேளை காங்கிரசே கிளப்பிவிடுகிற ஒன்றாக இருக்கலாம்.

மைனாரிட்டி அரசாக இருந்துகொண்டு (செம்மொழியில் பகரவேண்டுமெனில் தனிவலுக் குன்றிய அரசாக ) தி.மு.க பெற்ற பலன் அதிகமே. நிச்சயமாகவும் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் கோரியிருக்க முடியும். லஞ்சக் களங்கம் கண்ணை மூடிக்கொண்டு வந்துசேருமே என்கிற பயத்தில் சோனியாவோ ராகுலோ தமிழக அரசவையில் கூட்டுச் சேர மருகியிருக்கவேண்டும். அல்லது ஈழத்து மண்ணில் படிய வேண்டிய குருதிக்கு தெக்கத்திச் சாட்சியாக நிற்கவேண்டியதில்லை என்பதும் காரணமாக இருந்திருக்கலாம்.

கூட்டணி பற்றிக் கோடு காட்டி டங்குவாறு அறுந்த தங்கபாலுவின் நிலை நமக்குத் தெரியும்.
(என்னா ஒரு எகத்தாளம்!)ஆனால் இம்முறை துணை முதல்வர் உள்ளிட்ட பல கோரிக்கைகளை காங்கிரஸ் எழுப்பலாம். 2000 வரை துணை முதல்வர் என்பது செய்தி அளவில் கூட பல மாநிலங்களில் தெரியப்பட்டிருக்கவில்லை. இன்று நிலை வேறு. அதிலும் தமிழகத்தில் துணை முதல்வர் என்பது ஒரு சுமை அல்ல சுவை என்று தி.மு.க நிரூபித்திருக்கிறது.

ஜெயலலிதா ஒரு தடுமாறும் தலைவி என்றாலும் தடம் மாறாத தலைவி.அதாவது ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முட்டாள்தனங்களுக்குக் குறைவில்லாமல் பார்த்துக்கொள்வார். கட்சியில் இருந்து யார் யார் விலகினார்கள் என்பதை நினைவிலேயே வைத்துக்கொள்ள முடியாத படிக்கு சரம் கட்டி வெளியேற்றம் நடந்துகொண்டிருந்தது. கடைசியாக முத்துசாமியும் சின்னசாமியும். பட்டியல் சாமிகளுடன் முடிவடையாது. பட்சிகள் பறக்கக் காத்திருக்கின்றன.

கட்சிக்காரர்களை மதிப்பது என்பது ஜெயா டி.வி யில் கடைசியாக அஞ்சலி சொல்லிவிட்டு ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதல்ல.செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமையானும் கெடும் என்பதற்கு வாழும் உதாரணமாக இருக்கிறார் அவர். கட்சிக்காரர்களின் நிலை என்ன வென்றால் ...’அடிமை புகுந்த பின்னும் எண்னும் போதங்கு வருவதற்கில்லை, கடுமையுடையதடி காவலுன் மாளிகையில்... ‘ என்பதுதான்.

மற்ற படி அரசாசனத்தில் இல்லையென்றால் அம்மைக்கு மன்றத்துக்குப் போகப் பிடிக்காது. இது தமிழ் நாட்டில் வியப்பான ஒன்றல்ல. கொள்கைச் சிங்கம் கோபால புரத்தில் இருக்கும் கோமளவல்லி கோடநாட்டில் இருக்கிறது. இதை தி.மு.க காரர்கள் விமர்சித்துப் பேசுவது எலும்பில்லாத நாக்கின் சௌகரியம் கொண்டு.

இப்படி நிலைமைகள் இருக்க அ.தி.மு.க வின் அஸ்திவாரம் அசைத்த விஜயகாந்த் சமரசத்துக்கான இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதை அவர் புரிந்து கொள்ளாமல் தனித்து நின்றால் அதற்கான பலனை அனுபவிப்பார். கூட்டுகள் ஜெயலலிதாவை நோக்கி மும்மரம் அடைந்தால் வை.கோ கம்யூனிஸ்டுகளுடன் கை கோர்ப்பதற்கான மூன்றாம் அணி நான்காம் அணி பற்றிய திட்ட முன் வரைவுகளைப் பற்றிப் பேச வேண்டிவரும். தமிழ் நாட்டில் இரண்டுக்கு மேல் எண்கள் கிடையாது.விகிதாசார வாக்குமுறை வரும் வரை தமிழ்நாடு எம்மனோரின் இத்தகைய கட்டுரைகளை சந்தித்தே தீரவேண்டும்.

கம்யூனிஸ்டுகள் இந்த முறையாவது தனித்தே போட்டியிடாவிட்டால் தமிழகத்தில் நக்சல் (மாவோ)ஆதரவு பெருகுவதற்கு ஏதுவாகிவிடும். இதுவரை சொல்லாத முக்கிய சுவாரசியம்
தி.மு.க வில் நிகழப் போகும் உட்பூசல் (இதைக் ’குடும்பச்’ சண்டை என்று கொச்சைப் படுத்தலாகாது). வரும் ஆனால் வராது என்பது மாதிரியான போக்கில் இருக்கிற அதை நம்பி இதர கட்சிகள் கனவுகள் மற்றும் திட்டங்களை மேற்கொள்வது அவ்வக் கட்சியின் நலன்களுக்கு உகந்ததல்ல.

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் மு.கருணாநிதி அல்ல என்பது என்னளவில் கணிப்புக்குள்ளாகிறது.