Tuesday, July 6, 2010

இரட்டை உலையும் பரிதிக்கரமும்

நாளிதழ்கள் படித்துப் பதினைந்து தினங்களுக்கும் மேலாகிவிட்டது என்கிற ஒரே தைரியத்தில்தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன். ஏனெனில் தமிழக அரசியல் பற்றி எழுதுவதற்கு விநோதத் தகுதிகள் தேவையாயிருக்கின்றன. ஒன்று கோள் வல்லுநராயிருந்து கருத்துச் சொன்னால் பலிக்கக் கூடும். அல்லது தொகுதி வாரியாக ஒற்றறிந்து உளவு வேலை செய்து ஒரு அறிக்கையைத் தயாரிக்கவேண்டும்.

இப்போது அதையும் தாண்டிய ஒரு சிக்கல் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறது. மக்கள் வாக்குகளை விற்கத் தயாராகிவிட்டார்கள். காசு வாங்கிக்கொண்டு காசு தந்தவர்களுக்கே வாக்களிக்கிற அளவுக்கு மக்கள் நேர்மையாக இருக்கிறார்கள். இது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. காசு அவர்களிடம் வாங்கிக்கொள்ளுங்கள் வாக்கு எங்களுக்குப் போடுங்கள் என்று சொல்கிறவர்களின் பேச்சு எடுபடுவதில்லை.

‘எங்களை என்னதாண்டா நெனச்சு வச்சிருக்கீங்க?’ என்பதாக பதில் அமைந்துவிடுகிறது.மாதா மாதம் பணம் தருகிற ஏற்பாடு உண்டென்றால் நானும் வாக்குவிற்கத் தயார்தான். அது மாதா, அய்யன், சொறியன்,முடிச்சவிழ்க்கி யாருக்காக இருந்தாலும் சரி. ஆனால் அப்படி நடக்காது. ஜனநாயகம் சிவகுமாருக்காகப் படைக்கப்பட்டதல்ல.

சுவாரசியமான யூகங்களுக்கு இடந்தரவல்லதாக இப்போதைய நிலை -வரும் சட்டமன்றத் தேர்தல் - உள்ளது.சரத் குமாரோ கார்த்திக்கோ முதலமைச்சர் ஆகமாட்டார்கள் என உறுதியாகச் சொல்லலாம்.கடனோ உடனோ வாங்கி இதற்காக ஐந்தாயிரம் வரை பணம் கட்டுவேன்.

இன்று காலை சந்தித்த கிராம நண்பன் ‘காங்கிரசும் அ.இ.அதி.மு.கவும் கூட்டாகிருவாங்க போல இருக்கே?’ என்றான்.ஆகட்டும் அதற்கென்ன.ஆனால் தி.மு.கவுடன் கூட்டு வைத்துக்கொண்டால் அது காங்கிரசுக்கு உத்தரவாதக் கூட்டணி. காங்கிரஸ் அ.தி.மு.க வுடன் கூட்டு வைத்துக்கொண்டால் அதுவும் உத்தரவாதமாக வெற்றிக்கூட்டணிதான். முதல் முறையாக ஸ்பஷ்டமாக திராவிடக் கட்சிகள் காங்கிரஸ் மீது கழுதியேறும் நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணி என்பது ஒருவேளை காங்கிரசே கிளப்பிவிடுகிற ஒன்றாக இருக்கலாம்.

மைனாரிட்டி அரசாக இருந்துகொண்டு (செம்மொழியில் பகரவேண்டுமெனில் தனிவலுக் குன்றிய அரசாக ) தி.மு.க பெற்ற பலன் அதிகமே. நிச்சயமாகவும் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் கோரியிருக்க முடியும். லஞ்சக் களங்கம் கண்ணை மூடிக்கொண்டு வந்துசேருமே என்கிற பயத்தில் சோனியாவோ ராகுலோ தமிழக அரசவையில் கூட்டுச் சேர மருகியிருக்கவேண்டும். அல்லது ஈழத்து மண்ணில் படிய வேண்டிய குருதிக்கு தெக்கத்திச் சாட்சியாக நிற்கவேண்டியதில்லை என்பதும் காரணமாக இருந்திருக்கலாம்.

கூட்டணி பற்றிக் கோடு காட்டி டங்குவாறு அறுந்த தங்கபாலுவின் நிலை நமக்குத் தெரியும்.
(என்னா ஒரு எகத்தாளம்!)ஆனால் இம்முறை துணை முதல்வர் உள்ளிட்ட பல கோரிக்கைகளை காங்கிரஸ் எழுப்பலாம். 2000 வரை துணை முதல்வர் என்பது செய்தி அளவில் கூட பல மாநிலங்களில் தெரியப்பட்டிருக்கவில்லை. இன்று நிலை வேறு. அதிலும் தமிழகத்தில் துணை முதல்வர் என்பது ஒரு சுமை அல்ல சுவை என்று தி.மு.க நிரூபித்திருக்கிறது.

ஜெயலலிதா ஒரு தடுமாறும் தலைவி என்றாலும் தடம் மாறாத தலைவி.அதாவது ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முட்டாள்தனங்களுக்குக் குறைவில்லாமல் பார்த்துக்கொள்வார். கட்சியில் இருந்து யார் யார் விலகினார்கள் என்பதை நினைவிலேயே வைத்துக்கொள்ள முடியாத படிக்கு சரம் கட்டி வெளியேற்றம் நடந்துகொண்டிருந்தது. கடைசியாக முத்துசாமியும் சின்னசாமியும். பட்டியல் சாமிகளுடன் முடிவடையாது. பட்சிகள் பறக்கக் காத்திருக்கின்றன.

கட்சிக்காரர்களை மதிப்பது என்பது ஜெயா டி.வி யில் கடைசியாக அஞ்சலி சொல்லிவிட்டு ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதல்ல.செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமையானும் கெடும் என்பதற்கு வாழும் உதாரணமாக இருக்கிறார் அவர். கட்சிக்காரர்களின் நிலை என்ன வென்றால் ...’அடிமை புகுந்த பின்னும் எண்னும் போதங்கு வருவதற்கில்லை, கடுமையுடையதடி காவலுன் மாளிகையில்... ‘ என்பதுதான்.

மற்ற படி அரசாசனத்தில் இல்லையென்றால் அம்மைக்கு மன்றத்துக்குப் போகப் பிடிக்காது. இது தமிழ் நாட்டில் வியப்பான ஒன்றல்ல. கொள்கைச் சிங்கம் கோபால புரத்தில் இருக்கும் கோமளவல்லி கோடநாட்டில் இருக்கிறது. இதை தி.மு.க காரர்கள் விமர்சித்துப் பேசுவது எலும்பில்லாத நாக்கின் சௌகரியம் கொண்டு.

இப்படி நிலைமைகள் இருக்க அ.தி.மு.க வின் அஸ்திவாரம் அசைத்த விஜயகாந்த் சமரசத்துக்கான இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதை அவர் புரிந்து கொள்ளாமல் தனித்து நின்றால் அதற்கான பலனை அனுபவிப்பார். கூட்டுகள் ஜெயலலிதாவை நோக்கி மும்மரம் அடைந்தால் வை.கோ கம்யூனிஸ்டுகளுடன் கை கோர்ப்பதற்கான மூன்றாம் அணி நான்காம் அணி பற்றிய திட்ட முன் வரைவுகளைப் பற்றிப் பேச வேண்டிவரும். தமிழ் நாட்டில் இரண்டுக்கு மேல் எண்கள் கிடையாது.விகிதாசார வாக்குமுறை வரும் வரை தமிழ்நாடு எம்மனோரின் இத்தகைய கட்டுரைகளை சந்தித்தே தீரவேண்டும்.

கம்யூனிஸ்டுகள் இந்த முறையாவது தனித்தே போட்டியிடாவிட்டால் தமிழகத்தில் நக்சல் (மாவோ)ஆதரவு பெருகுவதற்கு ஏதுவாகிவிடும். இதுவரை சொல்லாத முக்கிய சுவாரசியம்
தி.மு.க வில் நிகழப் போகும் உட்பூசல் (இதைக் ’குடும்பச்’ சண்டை என்று கொச்சைப் படுத்தலாகாது). வரும் ஆனால் வராது என்பது மாதிரியான போக்கில் இருக்கிற அதை நம்பி இதர கட்சிகள் கனவுகள் மற்றும் திட்டங்களை மேற்கொள்வது அவ்வக் கட்சியின் நலன்களுக்கு உகந்ததல்ல.

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் மு.கருணாநிதி அல்ல என்பது என்னளவில் கணிப்புக்குள்ளாகிறது.

1 comment:

கபிலன் said...

அன்பின் சிவக்குமார் சார்...

என்ன ஒரு நக்கல்..நையாண்டி...
அதனூடாக சமூகம் போகும் பாதை....
அசத்தியிருக்கிறீர்கள்....
எதாவது செய்யனும் போலதான் இருக்கு...
குறைந்த பட்சம் ஒட்டு போடாமலிருக்க அல்லது..௪௯ஒ (49o )

அன்புடன் கபிலன்....