Saturday, July 24, 2010

சுத்தாத சக்கரம்

ஐந்து ரூபாய் நோட்டு என்றால் டிராக்டர். பத்து ரூபாய் நோட்டு என்றால் கப்பல். இருபது ரூபாய் நோட்டு என்றால் சக்கரம் இவையே அடையாளங்கள் என்னளவில். பொதுவாகவும் அப்படித்தான். ஆனால் சமயங்களில் ரிசர்வ் வங்கியோ யாரோ டிசைன் செய்து  அடையாளங்கள் மாறுவதுண்டு.இப்போது இருபது ரூபாய்க்கு அப்படி மாறிவிட்டது.

சமீபகாலமாக செல்லாத இருபது ரூபாய் நோட்டுகள் என்னை அடைந்து, விட்டுப்போகாமல் கூடவே  வந்து தொல்லை செய்கின்றன.இரண்டு சமீபத்திய உதாரணங்கள் திண்டுக்கல்லில் கிடைத்த நோட்டு ஒன்று. நூறு ரூபாய் நோட்டுக்கு தேநீர் தர சங்கடப்படுவார்கள் என அரை பாக்கெட் சிகரெட்டும் உடன் வாங்கியபோது பாக்கியில் வந்தது அது.

நூறு ரூபாய்க்கு மேல் காசும் வைத்துக்கொண்டு நம்மால் தேநீர் அருந்தால் போய்விடக்கூடாதில்லையா. ஆகவே கலிதீர்த்த முடிவாய் சிகரெட்டும் வாங்கிவிட்டுப் பேருந்து ஏறிப் பார்த்தால் துளையுள்ள ஒரு இருபது.

சிகரெட்டை எண்ணிப்பார்க்கத் தெரிகிறது. சில்லறையை எண்ணிப்பார்க்கத் தெரியவில்லை.அப்புறம் இரண்டு மூன்று நாள் தங்கிவிட்டு ஒருவழியாக விடைபெற்றது.இதில் வியப்பில்லை உலகத்தில் நம்மிலும் மேலான நல்லோர் தீயோர் முட்டாள் அனைவரும் இருப்பர்தானே.

மூன்று நாட்களுக்கு முன் ஒரு நோட்டுவந்து மாட்டிக்கொண்டது சென்னையில். ஒரு பெட்டிக்கடையில் நோட்டை உருவுகையில் அதன் வெள்ளிக்கம்பி குமிழ் போட்டுக்கொண்டு அகட்டு வளைவெடுத்தது. வேறு காசுகளும் இருந்ததால் பெட்டிக்கடையில் கண்ணியத்தைக் காப்பாற்றிக்கொண்டேன். இருப்பினும் இனிமேல் நோட்டு வாங்கும்போது கட்டுப்பாடாக இருக்கவேண்டுமென்றும் இப்போதைக்கு இந்த இருபதை செலாவணி ஆக்கவேண்டியது கடமை என்றும் எண்ணினேன்.

அருகிலிருந்த நண்பன் ஸ்ரீதர் இருபது ரூபாய் நோட்டை வாஞ்சையுடன் நீவி வெள்ளிக் கம்பியை ஒடுக்கெடுத்து அதன் இருப்புப் பரப்புக்குள்ளேயே செமித்துக் கொடுத்தார்.

இருபது ரூபாயை பேருந்தில் கண்டக்டரிடம் நீட்டினேன். அவர் வாங்கி விரலிடைப் பொதிகிற நேரம் வெள்ளிக் கம்பி வெளி நீட்டியது. விட்டலாச்சார்யா படங்களில் ஒரு ஜோடிக் கண்களுக்கு பேரழகியும் மற்ற கண்களுக்கு பிசாசும் தெரியுமே அப்படி ஆகிவிட்டது.கண்டக்டர் ‘’பாவம் வெள்ளிய எடுக்க டிரை பண்ணீருக்காரு.முடியல. இப்ப நம்ம கிட்டச்செலுத்த வந்திருக்காரு.’’ என்றவாறு திருப்பித் தந்தார்.

எனக்கு  ‘ச்சை ’ என்று வந்தது. இந்த வெள்ளியை எடுத்து கொலுசா செய்யப்போகிறேன். கண்டக்டரிடம் மனதுக்குள் சொன்னேன். ‘ஹலோ மிஸ்டர் கண்டக்டர்! சிவகுமார் செய்கிற முட்டாள் தனங்கள் கணக்கற்றவை. ஆனால் அதற்காக இப்படியெல்லாம் முட்டாள் தனம் பண்ணமாட்டான். அவனது  முட்டாள் தனங்கள் அவனுக்கென்ற தனித்த முத்திரைகளை உடையவை.

அப்புறம் இரவான பின் ’மதுக்கடையில் செல்லாத நோட்டு ஒன்று உண்டா’ என்ற நம்பிக்கையில் ஒரு முயற்சி மேற்கொண்டேன்.அமைதியாக வாங்கிப்போட்டு பாட்டிலைக் கொடுத்தவர். அதை நான் எடுப்பதற்குள் ‘’ஹலோ வேற நோட்டுக் குடுங்க’’ என்றார்.

‘’ஏங்க இங்க எப்படியும் இங்கே செல்லும்னுதான் கொடுத்தேன்.’’

’’அப்படியெல்லாம் செல்லாது.’’
’சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்குது’ என்கிற பழமொழி ஞாபகத்துக்கு வந்ததால் வேறு இரு பத்துக்களைக் கொடுத்துவிட்டு வந்தேன்.இருபது ரூபாயை அறையில் ஒரு டைரிக்குள் வைத்தேன்.

இப்படியாக எனக்குள் இருபது அச்சத் திட்டம் வேரூன்றிவிட்டது. இப்போதும் அந்த இருபது ரூபாயை செலுத்திவிடலாம்.

என்ன ஒன்று அதற்கு என்னிடமே உள்ள ஒன்றை வாங்கிவிட்டால் போதுமானது. ஆனால் அதைவிட அந்த இருபது ரூபாய் அப்படியே இருந்துவிடுவது இன்னும் லாபகரமானது.

6 comments:

பத்மா said...

jokes apart


எப்படி கிழிந்திருந்தாலும் எதாவது ஒரு அரசுடமை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் .அது அவர்கள் சேவையில் ஒன்று.வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை

நேசமித்ரன் said...

அருமை அண்ணே

சிரிச்சுக்கிட்டே இருக்கேன் :))))

பனித்துளி சங்கர் said...

பணத்தால் ஏற்பட்ட அனுபவத்தையும் ரசிக்கும்ம்வகையில் எழுதி இருகிறிர்கள் நண்பர் நேசமித்ரன் சொன்னதுபோல் என்னாலும் சிரிப்பை நிறுத்த முடியவில்லை போங்க . அருமை . பகிர்வுக்கு நன்றி

ny said...

//நம்மிலும் மேலான நல்லோர் தீயோர் முட்டாள் அனைவரும் இருப்பர்தானே//

என்பது வரை beauty ..... அதற்கப்புறம் சுவாரசியமில்லை!!

பத்மா said...

என் வலைப்பூவையும் எட்டி பார்த்ததிற்கு நன்றி ...

Mahi_Granny said...

செல்லாத இருபது ரூபாயை வைத்து அழகாக சக்கரம் சுத்தி இருக்கிறிர்கள் .. அருமையாக வந்து இருக்கு.