Tuesday, November 30, 2010

பதினெட்டாம் நாளில் என்ன ஆகும்?

பங்குசேர் வாழ்க்கை பழிபாவமஞ்சிக் கள்ளம் செப்பாது
உள்ளது மொழியுமோ?  பழகியதே தழீஇய
செயலாற்று அரசு ;கூடுதலின்றி அவை
 நலிந்தே அழியினும் கிட்டுமோ தீர்வே? -

மானாடும் முன்றிலில் அவை நடவடிக்கைகளில் ஈடுபடாது அஞ்சாது துஞ்சிக் கிடந்த குடுமிப் பெரும் வழுதியை கால்க் காசும் பெறாத அரை ‘அணா’ர் பாடியது.

Saturday, November 20, 2010

மன மோகன....

குல்பி ஐஸ் காரர்கள் மாதிரி நடுராத்தியில் வந்து வீட்டுக்கு மெத்தை கொடுத்துவிட்டுப்போன சம்பவத்தைப் பற்றி எழுதுகையில் - மெத்தை வாங்கியது சர்தார்ஜி கடை ஆதலால் பல சிங்குகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். தலார் மெகந்தி மாதிரி சிலர் விடுபட்டுப் போய்விட்டார்கள். அந்தப் பட்டியலில் பிந்தரன் வாலே விடுபட்டுப்போனது என் மன ஆரோக்கியத்தைப் பறை சாற்றுகிறது.பலே பல்லே.

ஆனால், காகித ஓடம் பத்மா மன்மோகன் சிங் ஏன் நினைவுக்கு வரவில்லை? எனக் கேட்டது கொஞ்சம் யோசிக்கவைத்துவிட்டது. இத்தனைக்கும் மன்மோகனை நான் ரொம்பவும் அவரை நேசித்தேன். ஒரு ரூபாய் நோட்டில் அவரது கையெழுத்தைப் பார்த்தது இப்பவும் மனக் கண்ணில் இருக்கிறது. ஃபோர்ஜரித் திறன் மட்டும் எனக்கு இருந்தால் அவரது கையெழுத்தை இப்போது கூட நான் போட்டுவிடுவேன். அவரது ஆங்கில ஹெச்- சில் மேலே ஒரு முக்கோணம் உண்டு. பழைய கால மைக்- கினை அல்லது சட்டை மாட்டும் ஹேங்கரை நினைவூட்டக் கூடியது அது.

அவர் பிரதம அமைச்சர் ஆனதும் நாடு இன்னும் செழிக்கும் என்று நம்பிய பல அப்பாவியரில் நானும் ஒருவன். உண்மைக்கு நாடு செழித்துத்தான் விட்டதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் நாட்டின் ஆன்ம வீழ்ச்சி பயமுறுத்துகிற அளவுக்கு இருக்கிறது. இத்தனை லஞ்ச அவலாவண்யங்கள் அற்ப சந்தர்ப்ப வாதங்களுக்கும் இடையில் அவரது பேரிட்டு ஆட்சி நடந்தாலும் அவரது பேரில் எனக்கு கோபமே வரமாட்டேன் என்கிறது. அமைப்பின் மொத்தத்தில் ஏதோ ஒரு இடறல்.

பாருங்கள் ஆறேழு நாளாக ஒரே அமளி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும். அமளி நடப்பதால் செய்திகளில் அடிக்கடி மீரா குமார் பார்க்கக் கிடைக்கிறார். ரோஷ உணர்வு நரம்புகள் மன் மோகன் சிங்கிற்கு வேலை செய்யும் பட்சத்தில் அவர் தூக்கம் கெடுகிற பிரதமராகத்தான் இருப்பார்.

போயும் போயும் மெத்தை வாங்கும் போது அன்னாரது நினைவு வந்தால் நான் என்னதான் ஆவேன்?

Friday, November 19, 2010

மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கல...

புது இடத்துக்கு குடியேறிய முதல் நாள் இரவு வண்டி நிறுத்துமிடத்தில் பைக்கினை நிறுத்திவிட்டு இரண்டு கைகளில் இரண்டு சுமைகளை எடுத்துச்சென்றவன் ஹெல்மெட்டை கீழேயே விட்டுவிட்டு முதலாவது மாடியிலுள்ள வீட்டுக்குச் சென்றுவிட்டேன். ஞாபக மறதியை எனக்குத் தந்த இயற்கை மூன்று கைகளைத் தந்திருக்கவில்லை.

காலையில் தலைக் கவசம் நினைவுக்கு வந்து தலைபோகும் வேகத்தில் கீழே வந்து பார்த்தபோது பக்கத்துவண்டியின் இருக்கைமீது அது இருந்தது. வந்த வேகத்தில் நான் அதைக் காவியதும் வேறு ஒருத்தர் ஹெல்மெட் இருந்த வண்டியை எடுத்துச்சென்றார். ஹெல்மெட்டின் கேள்விக்கு விடை தெரியாமல் நிமிடக் கணக்கில் காத்திருந்தது போலிருந்தது அவர் தோற்றம். பச்சை குத்திக்கொள்வது அல்லது சுண்டுவிரலில் முடிச்சுப் போட்டுக்கொள்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுத்தான் என்னைச்  சரிக்கட்டவேண்டும் என நினைத்தேன்.

இவ்விதமாக முதல் நாள் அமைந்து இன்றுகாலை மனைவி முதல் வசனமாக , ‘’ நான் இனி உன்னை திட்ட மாட்டேன் சிவா.” என்றாள். என்றால் ...நேற்றைய இரவின் தீவிரத்தையும் (வழக்கம் போல ) என் ஆன்மா நசுக்குண்டதையும் நீங்கள் உருவகிக்கவேண்டும்.

 முந்தா நாள் பிலே ஹள்ளியில் நானும் மனைவியும் ஒரு படுக்கை விற்கும் கடைக்குப் போனோம். விலை படியவில்லை. அதே நேரம் தம்பி ஒருவன், ‘’அண்ணா! நாளைக்கு நாம வேற ஒருபக்கம் போயி எடுத்துக்கலாம்.” என்றான்.

தம்பி உடையான் பகைக்கு அஞ்சான், படுக்கைக்கும் அஞ்சான் என்று மெத்தை வாங்கும் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன்.

உண்மையில் பேனா பேப்பர்  வாங்குவது சிகரெட் தீப்பெட்டி வாங்குவது - இதைத் தவிர வேறு எதுவும் இயல்பாக வாங்கத் தெரியாது. அதனாலேயே தொட்டது தொன்னூறுக்கும் நண்பர்கள் துணையுடன்தான் வாங்கச் செல்வது.

நேற்று மெத்தை வாங்குவதற்காக தம்பி ரங்கசாமியுடன் ஜெய்நகர் 4 வது பிளாக் சென்றேன். கடை மூன்றாவது பிளாக்கின் விலாசத்தில் இருந்தது.அது ஒரு சர்தார்ஜி கடை என்பது  அமிர்தசரஸ் பொற்கோவில் படம் மாட்டப்பட்டிருப்பதிலும் மாலை போட்ட ஒரு புகைப்படத்திலிருந்தும் தெரிகிறது.அவர் ஸ்தாபகராகவோ ஸ்தாபகருக்கும் முந்தைய ஞாபகராகவோ இருக்கக்கூடும். கல்லாவில் இருக்கும் இருவர் உரிமையாளர் தோற்றத்தில் இருந்தாலும் வேடு கட்டிய தலை இல்லாமல் இளமைத் தோற்றத்தில் இருக்கிறார்கள். கோதுமைத் திடகாத்திரம்.

முதன் முதலாக ஒரு சர்தார்ஜிகளிடம் கொள்முதல் பண்ணப் போகிறோம் என்றதும் குஷ்வந்து சிங், ஜெயில் சிங், பிஷன் சிங் பேதி,ஹர்பஜன் சிங்  (அதுவும் சமீபத்திய இரண்டு செஞ்சுரிகள்)  எல்லாம் நினைவுக்கு வந்தார்கள். எனக்கு நிறைவான மனநிலை உண்டானது.

விலை பேசி கூடுதலாக இரண்டு தலையணைகளுக்கு உத்தரவாதம் பெற்று மொத்தப் பணமும் முதலிலேயே கட்டி,மாலைக்குள் அனுப்பிவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு நானும் தம்பியும் விடைபெற்றோம்.டெலிவரி என்பது மாலைக்கு மேல பல பெட்டுகளை எடுத்துப்போட்டுக் கொண்டு சப்ளை செய்வார்கள் என்கிற புரிதல் இருந்ததால் இரவு 7 மணி வாக்கில் அனுப்பிவைக்கும் படி கடைக்காரரிடம் சொல்லிக்கொண்டு வந்தேன். ( எப்போதும் பிறரை முன்னிட்டு நாம் சிந்திக்கிற வேலையை நிறுத்திக்கொள்ளவேண்டும்)

மாலை ஆறு மணிக்கு முதலாவது நினைவூட்டும் போனை கடைக்குச் செய்தபோது எட்டு எட்டரைக்கு மெத்தை வரும் என்றார்கள். போன் போடும் பொறுப்பை என் மனைவிடம் விட்டுவிட்டேன். எனக்கு லைன் கிடைப்பதில்லை என்பது ஒரு புறம் இருக்க பேச்சு மொழியில் எனது அறுமொழி அறிவும் எதிர்ப்பலன்களை விளைவிக்க வல்லன.

எட்டரை என்பது ஏற்புடையதே என்றேன் நான். நகரின் அகலம் மக்கட் தொகைப் பெருக்கம் வாகன ஏற்பாடுகள் நெரிசல் இவை பற்றிய புரிதல் நமக்கு உண்டுதானே.

மணி எட்டே முக்காலுக்குள் எனக்கு முதலாம் ‘துயில் நீக்கி’ முடிந்துவிட்டது. ( துயில் நீக்கி என்றால் பள்ளி எழுச்சியின் எதிர்.) உருப்படியாக ஒரு பொருள் வாங்கியதுண்டா, எதுக்குப் பாத்தாலும் எவனையாவது துணைக்குக் கூட்டிப் போவேண்டியது.... சொந்தமா ஒரு காரியமுமே பண்ணத் தெரியாதா.... என்று கடிதலின் நீட்சி ‘இனியும் நாம் வாழ வேண்டுமா? - என்கிற (அடிக்கடி தோன்றுகிற) உணர்வு நிலைக்குக் கொண்டு தள்ளியது. நாலில் விளையாதது நாற்பதில் விளையாதல்லவா.

ஒன்பது மணிக்கு மனைவி கடைக்குப் போன் செய்தார். ஆங்கில விசாரிப்புக்கு ஹிந்தியில் பதில். நாளைக்குத் தருகிறோம் என்பதான பதில்.(கல்... கல்... என்கிறார்கள் போல. நல்லாப் போட்டீங்கப்பா கல்லை. ஒருத்தன் படுக்கைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வந்து உயிர் நிலையாமை பத்தி யோசித்துக்கொண்டிருக்கிறான்.)

‘’ஒன்லி இங்க்லீஷ் ஆர் கன்னடா... டோண்ட் ஹிந்தி...” என்றார் மனைவி கோபமாக. அறிஞர் அமரர் அண்ணாவின் அமைவிடத்தில் அணையாவிளக்கு அல்பநேரம் சுடர்கூடிப் பிரகாசித்திருக்கக் கூடும் அந்நேரம். பிறகு மனைவி பேசிய பேச்சில் அடுத்த அரை மணிநேரத்தில் வீட்டுக்கு மெத்தை வந்துவிடும் என்றார்கள். மனைவி தாளித்தது நர்சிங் ஸ்டேஷன் ஆங்கிலத்தில்.சம்ஹார கடவுள்களின் கடுமை தெரியும் மொழிஅது . எனக்கு பயம் மேலிட்டு இப்போது நவ்ஜோத் சிங் சித்து நினைவுக்கு வந்தார். லாஃப்ட் சாட்டுகளில் அழகு சிக்சர் அடிக்கிற சித்துவோ ஸ்டுடியோவில் வர்ணனை புரிகிற சித்துவோ அல்ல கார்ச் சண்டையில் நடுரோட்டில் நள்ளிரவில் ஒருத்தனைப் போட்டெறிந்த சித்து.

போன் செய்துவிட்டு அடுத்த பாட்டம் துயில் நீக்கப் பாட்டு. உடனே தூங்கிவிட்டார். இருநூறு டிகிரி செல்சியசில்  கொதித்துவிட்டு உடனே உறங்க பெண்களால் முடியும். நான் தூங்காமல் படிக்க ஆரம்பித்தேன். இரவு பதினொன்றே முக்காலுக்கு ஒரு போன் வந்து பலவழியாக வழி சொல்லி ஒருவழியாக மெத்தை வந்து சேர்ந்தது.

வண்டியில் வந்த இருவர் நான் மாடி என்று சைகை காட்ட மெத்தையை எடுத்துக் கீழே வைத்தனர். நான் வண்டியில் இருந்த இரண்டு தலையணைகளை எடுத்தேன். டிரைவர், ‘’ இது வேற பார்ட்டிக்கு போறது’’ என்றார்.

இரவு பன்னிரெண்டு மணிக்கு இரண்டு தலையணைகளுக்கு ஆட்கள் இருக்கிறார்களா?  என வியந்தேன். பில்லில் வேறு மெத்தை ஒரு பீசஸ் என்றுதான் இருந்தது. கிரில் கேட்டில் சாய்ந்திருந்த மெத்தை உள்ளில் பாதி தெருவில் பாதியாக திரிசங்கு போலவும் சிவகுமார் போலவும் பாவப்பட்டு நின்றிருந்தது.

‘’உங்களுக்கான இரண்டு தலையணைகளை நாளை கொண்டுதருகிறேன் ‘’ என்றார் டிரைவர்.இது ஆவறதில்லை. ‘’ இந்த மெத்தையை இப்ப திருப்பி எடுத்துக்கிட்டுப் போங்க. நாங்க கட்டின காசை இப்பக் குடுங்க...” என்றார் மனைவி சாந்தி.

அடுத்த தேர்டு அம்பயராக செல்ஃபோன் வந்தது.  கடையில் இருந்தவர்கள், வந்தவர்கள் மற்றும் மனைவிக்கு இடையிலான போன் ஆங்கிலம், ஹிந்தி,கன்னடம், தமிழ் என நவ சாரமாக இருந்தது.உலக மயமாக்கம் வேகத்துக்கு ஓரிரு நூற்றாண்டுகளில் பொதுமொழி அமலாகிவிடும் போலிருக்கிறது.

 தலையணையை அவர்களிடம் ஒப்படைத்து விடு என்று கடையில் சொன்னார்கள்.

டிரைவர், ‘’இந்தத் தலையணைகள் விலை கூடியவை.” என்றார்.  ‘’இது தெரியுதல்ல  இதுக்கான தலையணைகளை ஏன் எடுத்து வரலை? ‘’ என்றார் மனைவி. அப்போது அவரது கையில் சுருட்டப்பட்ட வெண் தாள் கற்றை கையில் இருந்தால் பொருத்தமாயிருக்கும். எங்கள் தரப்புக்கு செக்யூரிட்டி துணைக்கு வந்தார். அப்புறம் மெத்தையும் தலையணைகளும்  மேலே வந்தன. உறங்கினோம். மெத்தை வாங்கினேன் தூக்கத்த வாங்கல... என்கிற வரி ஞாபகத்துக்கு வந்தது.


இன்று மெத்தைக் கடையில் இருந்து ஃபோன் வந்தால் விலை உயர்ந்த தலையணைகளைப் பற்றி என்ன செய்வது,சொல்வது, முடிவெடுப்பது.. மற்றும் நேற்றிரவில் கைப்பற்றிய தலையணைகளின் மெய்- யான சொந்தக்காரர்களின் தார்மீகம் ஆகியன பற்றி யோசிக்கும் போது...

பகல் தூக்கம் போச்சே!

ஹெலிகாப்டர் தவிர அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் கிடைக்குமொரு மையம் அது. தம்பி

Thursday, November 18, 2010

ஜரகண்டி... ஜரகண்டி.

நேற்று முன் தினம் திருப்பதியில் 85 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். உண்டியல் வருமானம் ஒரு கோடியே ஐம்பத்தியைந்து லட்சம். (தகவலுக்கு நன்றி : தினத் தந்தி).

நான் இன்னும் திருப்பதி போனதில்லை என்கிற உண்மையிலிருந்து இதை எழுதப் போகிறேன். (மன் மோஹனையும் ராசாவையும் நேரில் பார்த்துவிட்டா மேடைகளில் திட்டுகிறார்கள் அதுபோலத்தான் இதுவும்.)

300 - ரூபாய் கொடுத்து வைகுண்டம் கியூ காம்ப்லெக்சில் காத்திருந்த பக்தர்கள் ( இவர்கள் அறையிலிருந்து வெளியேறியதும் நேரடியாக அந்த மாயா வைகுண்டத்தில் போய் இறங்கிவிட்டால் எப்படித்தான் இருக்கும்.)

நின்று கொல்லும் அல்லது நின்று பாலிக்கும் தெய்வத்தைப் பார்ப்பதற்காக காத்திருந்த ப(க்)தர்களில் சிலர் அறை ஒன்றில் இருந்த டி.வி... அறைக் கதவு ஆகியனவற்றை உடைத்திருக்கிறார்கள் என்பது செய்தி. ஒரு நாளில் உண்டியலில் இத்தனை பணம் விழுவதெல்லாம் இயல்பு வாழ்வின் குற்றச் செயல்பாட்டு விகிதாச்சாரம் அதிகரித்திருப்பதன் எடுத்துக்காட்டுகள்.

முடி உள்ளவன் காணிக்கை கொடுக்கிறான். பக்தர்கள் எண்ணிக்கை இவ்வளவு அதிகப்பட்டுவிட்டதால் ஏன் ஆந்திர அரசு இன்னும் கன்வெயர் பெல்ட் சிஸ்டத்தை கொண்டுவரவில்லை ?

பின்னாலிருந்து எவராவது முகம் அறிமுகமில்லாத முண்டங்கள் விலாவில் நெட்டித் தள்ளினால்தான் தரிசனம் பூர்த்தி அடையுமோ என்னவோ.

ஆனால் ஒன்று புரிந்துவிட்டது ஆழ்மனதின் மதமும் குறியீட்டு வடிவங்களும் இப்போது நாம் காண்பவை அல்ல. கற்கால ஆயுதங்களும் வேட்டை வேட்கையுமே நம் மதம். நல்ல விழா நாளில் முப்பத்தியிரண்டு அறைகளை பதினாறாகக் குறைத்துக் கூட்டத்தைச் சேர்த்துப் பார்த்தால் பாலாஜியே இதை ஒப்புக்கொள்வார்.

Monday, November 15, 2010

இன்றைய ஆச்சரியம்...

நண்பனுடன் கார் டியூப் வாங்குவதற்காக டயர்க் கடைக்குச் சென்றிருந்தேன். 360 ரூபாய் பில்லுக்காக நான்கு நூறு ரூபாய்கள் கொடுத்ததும் கல்லாப் பெண் நாற்பது ரூபாய் மீதி தந்தார்.அது நான்கு செம்பு டோக்கன்களைப் போலிருக்க நண்பனைப் பார்த்து , ‘’என்னப்பா இது?’’ என்றேன்.

பத்து ரூபாய் என்றான் அவன். சரி சில்லறைத் தட்டுப்பாட்டுக்காக அவர்களாகத் தயார் செய்தது போலிருக்கிறது எனக்கருதி, ‘’இதுக்கு இவங்க கிட்டவே சாமான் வாங்கணுமா?’’ என்று கேட்டேன்.

‘’ஐயோ இது பத்து ரூபா காயின். தெரியாதா? ’’ என்று கையில் கொடுத்துவிட்டான். அதை வியந்து போற்றி பர்சில் வைத்துக்கொண்டேன். (இதன் மூலம் பாவப் பட்டவர்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால்.... நாட்டுல பத்து ரூபா நாணயம் பொழங்குதுங்கோவ்...)

அடுத்த பத்தாவது நிமிடம் ஒரு கடையில் ஐம்பது ரூபாய் செலவுக்கு நூறு ரூபாய் எடுத்துக்கொடுத்தேன் . சில்லறை இல்லை என்றார் கடைக்காரர். பாக்கெட்டைத் தேடியதில் சரியாக ஐந்து பத்து ரூபாய்த் தாள்கள் இருந்தன. ஒன்று குறைவாய் இருந்திருந்தாலும் அந்தக் காசு பறிபோயிருக்கும்.

விரும்ம்பின பொருள் அல்லது கிடைத்ததும் விருப்பத்தைப் பெறுகிற பொருள் மகிழ்ச்சிதரத் தக்கது. கைகூடிய பொருள் தக்கவைப்புக்கு உள்ளாவதுதான் உண்மையான அதிர்ஷ்டம்.

(ஒரு பய, பத்து ருவா கெடச்சுட்டா என்னென்ன பேச்செல்லாம் பேசறான் பாருங்க)

கதவு ஜன்னல் மற்றும் நிலைகள்...

வத்தலக்குண்டு, கோட்டைப் பட்டி அருகேயுள்ள காமாட்சிபுரத்தில் மனைவியுன் பொருள் உழைப்பினாலும் கொத்தனார் சித்தாள் மின்னர் கம்பியர் உள்ளிட்ட பலரின் கூட்டுழைப்பால் என் மாமனாரின் நேர்ப்பார்வையில் வீடு புத்துருவாக்கம் செய்யும் பணி நேற்றைக்கு முதல்நாள் முடிவுற்றதாகக் கேள்விப்பட்டேன். முடிவுற்ற அந்த வீட்டை நான் இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் இந்த வீடு பணியப்படுவதற்கு முன் பழைய வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளையே பக்கவாட்டிலும் மேற்புறமும் வேய்ந்து நான்கு மாதகாலம் வாழ்ந்துவந்தோம். இருபத்தஞ்சடி நீளத்துக்கு முப்பதடி அகலமுள்ள கூடாரம் அது.மூன்று புறம் ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள் அண்டியிருக்க ஒரு முழுமுதற்பக்கம் அதன் முகப்பாயும் திறப்பாயும் இருந்தது.

அதில் பாதியை படுதாக்கள் கொண்டு மறைத்து மீதிப்பாதிக்கு சுருட்டுச் சாக்கே கதவாக இருந்தோம். பெரிதாக ஒன்றும் தொலைந்ததாகத் தெரியவில்லை. முந்தாநாள் கடைசிக் கட்டப் பணியாக ஜன்னல்களுக்குக் கண்ணாடி பொருத்துதல் கதவு பொருத்துதல் ஆகியன் நடந்து முடிந்தன.

புதியதாக மாமனார் பூட்டும் சாவியும் கூட வாங்கி வந்திருப்பார் என்றுதான் நினைக்கிறே. ஆனால் இரவில் அவருக்கு சாந்தி போன் செய்தபோது சொன்னார்.

‘’ உங்க அம்மாவோட செல்போன் தொலைஞ்சு போச்சு.”

எனது அலைபேசி தொலைந்த போது என்னென்ன மாதிரி விமரிசித்தார்கள் என எண்ணி குரூரமான சந்தோஷத்தை அடைந்தேன். அடுத்த பயம் கதவு மற்றும் ஜன்னல்களைப் பற்றியது. மரக் கதவு மற்றும் மனக் கதவு.

Tuesday, November 9, 2010

ஐராவதம்....

பெங்களூரிலிருந்து வத்தலக்குண்டு வந்துவிட்டு திரும்பவும் பெங்களூரு போகும்போது மனைவி நல்லாளையும் அழைத்துச் செல்லவேண்டிய கடப்பாட்டுக்கு ஆளாகிவிட்டேன். இப்போது கடப்பாடு என்கிற சொல்லே இக்கட்டு என்பதான தொனியை உள்ளடக்கிவிடும்.

தீபாவளி விடுமுறை முடிந்ததும் தமிழ்மக்களின் சஞ்சார விதிகள், வீதிகள் பற்றி உத்தேச அறிவு இருப்பினும் ஒரு மடப்போக்கில் முன்பதிவுக்கு முயற்சிக்காமல் விடுவிட்டேன். வதிலையிலிருந்து திண்டுக்கல் வரும்போது பேருந்து நெரிசலில் மனந்தளர்வுற்ற மனைவி வேறு ஏற்பாடு எதாவது பண்ணு! என்றாள். நண்பர் உடையார் நலிவுக்கு அஞ்சார்.

நண்பனுக்குத் தொலைபேச அவர் திண்டுக்கல்லில் பிறிதொரு நண்பரிடம் சொல்லிவைத்தார்.திண்டுக்கல் நண்பரின் அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே டிராவல் ஏஜெண்டுகளின் ஊடலும் ஊடாடலும் மிகுந்த கூடாரம் இருக்கிறது.திண்டுக்கல்லிலிருந்து பெங்களூருக்கு ரயில்கள் உண்டு என்கிற வரலாற்ர்று உண்மையை முதன்முதலாக அறிந்தேன்.ஆனால் அந்த உண்மையால் தற்கணத்தில் உபயோகமில்லை.

ஏஜெண்டுகளிடம் நட்பின் செல்வாக்கைச் செலுத்துமாறு ஜெயக்குமாரைப் பணித்தேன். கேப்பி(எ)ன்னா பரவாயில்லையா ? என்றார்.

கே.பி,என்னா தாராளமா....

கே.பி.என் அல்ல கேபின்.

தேவை நிமித்த மிசை அளபெடையில் எனக்கு கேபின் கே.பி.என்னாக கேட்டிருக்கிறது.

அதற்கு ஒப்புக்கொண்டு பதினொரு மணிக்குப் பேருந்து ஏறுகிற வரை பெண்களை முன்னால் அனுமதிப்பார்களா எனக்கிலியாக இருந்தது. டிரைவருக்குப் பின்னிருக்கையில் மட்டும் ஐந்து பயணிகள். இடது ஓரம் என் துணைவிக்கு அடுத்து நான். அதையடுத்து மூன்று தூங்குகிறவர்கள். அதிலும் வெள்ளைவேட்டி சட்டைப் பெரியவரின் முழங்கால் மூட்டும் கியர் ராடின் வெள்ளிக் குமிழும் இரண்டு அங்குல இடைவெளியிலேயே கடைசி வரை இருந்தது. எதாவது ஒரு தடவையேனும் கிளட்சை மிதித்துவிட்டு டிரைவர் பெரியவரின் முட்டியை நெம்புவார் என்றே எதிர்பார்த்தேன்.

அப்படி நடக்கவில்லை. டிரைவர் ஏழாவது சிகரெட்டைப் பிடித்து முடித்ததும் சேலத்து முகப்பு வந்திருந்தது. அங்கே தேநீர் குடிக்க எத்தனித்தார்.  கிளீனர் அடுத்து நான் சொல்ற கடையில நிறுத்து என்று விரட்டினார்.  அடுத்த கடை சேலத்தை அடுத்து வந்தது. அங்கே ஒரு காவல் வண்டி நின்று போக்குவரத்தை ஒழுங்கு செய்ய அங்கேயும் தேநீருக்கு நிற்காமல் வண்டி தர்மபுரியை நோக்கி ஓடியது. தொப்பூரில் தேநீர் நேரத்துக்குப் பின் ஓட்டுனர் மாறும் நேரத்தில் ஒரு பட்ரோல் வாகனம் வண்டியைச் சமீபித்து ஓட்டுனர  அழைத்தது. அவர் காக்கிகளிடம் உரையாடிவிட்டு வந்து டீக்குக் காசு கேக்கறாங்க என்றார்.

கிளீனர் ஒரு பத்து ரூபாயைக் குடுங்க என்றார்.

பத்து இருபது நாற்பது என்று போய் விடை கூறுதல் ஐம்பது ரூபாயில் முடிந்தது. ஐந்து அல்லது ஆறு காவலர்கள் வந்த அந்த வண்டிக்கு பத்து ரூபாய் தரச்சொன்ன கிளியை நினைத்து வியந்தேன்.

உலகம் இன்னும் தைரியத்தை முழுக்கவும் இழந்துவிடவில்லை. கேபினில் அருகில் உட்கார்ந்திருக்கிற பெண்வேறு டைட்டானிக் கப்பல் நுனியில் நிற்கிற வின்ஸ்லெட்  போலக் காட்சியளிக்கிறாள். வீர உலகு வாழ்க!

Wednesday, November 3, 2010

திறன்....எந்திரன்

ரஜினி தெறம காட்டிய எந்திரன் படத்தினை நான்கு நாட்கள் முன்னால் பார்த்தேன்.அறிவியல் சாத்தியங்களைப் பற்றிப் பேசுவதற்கு முயன்றிருக்கிறது, அறவியல் சாத்தியங்களைக் கொன்றிருக்கிறது படம்.சுஜாதா இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருக்கமாட்டார் படம் பார்த்திவிட்டு.

நிகர் நிலை மனிதனை உருவாக்கும் விஞ்ஞானி வசீகரனாக ரஜினி.(படத்தின் மூல முடிச்சு இது.மூலை மற்றும் மூளை முடிச்சுக்கள் வேறுவேறு.அதைப் பற்றி இங்கு நான் பதியப்ப்போவதில்லை.) அந்த ரோபோட்டை தேசப் பாதுகாப்புக்காக அனுப்புவது வசீகரனின் எண்ணம்.அதுபோன்ற ஆயிரக் கணக்கான வீர உருக்களை உருவாக்கி நாட்டைக் காக்கலாமாம். உயிர்ப் பலிகள் தவிர்க்கப்படுமாம்.

இதில் என்ன ஒரு பிரச்னையென்றால் ஐந்து மணிநேரம் மின்சாரம் தடைபட்டால் நாடு அம்பேல். என்னடா இவ்வளவு அபத்தமா இருக்கே என யோசித்தவாறே படம் பார்த்த என் எண்ணத்தில் சிலிகான் விழுந்தது. நான் படம் பார்த்து முடிகிற வரை கரண்டு போகவேயில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.