Saturday, November 20, 2010

மன மோகன....

குல்பி ஐஸ் காரர்கள் மாதிரி நடுராத்தியில் வந்து வீட்டுக்கு மெத்தை கொடுத்துவிட்டுப்போன சம்பவத்தைப் பற்றி எழுதுகையில் - மெத்தை வாங்கியது சர்தார்ஜி கடை ஆதலால் பல சிங்குகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். தலார் மெகந்தி மாதிரி சிலர் விடுபட்டுப் போய்விட்டார்கள். அந்தப் பட்டியலில் பிந்தரன் வாலே விடுபட்டுப்போனது என் மன ஆரோக்கியத்தைப் பறை சாற்றுகிறது.பலே பல்லே.

ஆனால், காகித ஓடம் பத்மா மன்மோகன் சிங் ஏன் நினைவுக்கு வரவில்லை? எனக் கேட்டது கொஞ்சம் யோசிக்கவைத்துவிட்டது. இத்தனைக்கும் மன்மோகனை நான் ரொம்பவும் அவரை நேசித்தேன். ஒரு ரூபாய் நோட்டில் அவரது கையெழுத்தைப் பார்த்தது இப்பவும் மனக் கண்ணில் இருக்கிறது. ஃபோர்ஜரித் திறன் மட்டும் எனக்கு இருந்தால் அவரது கையெழுத்தை இப்போது கூட நான் போட்டுவிடுவேன். அவரது ஆங்கில ஹெச்- சில் மேலே ஒரு முக்கோணம் உண்டு. பழைய கால மைக்- கினை அல்லது சட்டை மாட்டும் ஹேங்கரை நினைவூட்டக் கூடியது அது.

அவர் பிரதம அமைச்சர் ஆனதும் நாடு இன்னும் செழிக்கும் என்று நம்பிய பல அப்பாவியரில் நானும் ஒருவன். உண்மைக்கு நாடு செழித்துத்தான் விட்டதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் நாட்டின் ஆன்ம வீழ்ச்சி பயமுறுத்துகிற அளவுக்கு இருக்கிறது. இத்தனை லஞ்ச அவலாவண்யங்கள் அற்ப சந்தர்ப்ப வாதங்களுக்கும் இடையில் அவரது பேரிட்டு ஆட்சி நடந்தாலும் அவரது பேரில் எனக்கு கோபமே வரமாட்டேன் என்கிறது. அமைப்பின் மொத்தத்தில் ஏதோ ஒரு இடறல்.

பாருங்கள் ஆறேழு நாளாக ஒரே அமளி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும். அமளி நடப்பதால் செய்திகளில் அடிக்கடி மீரா குமார் பார்க்கக் கிடைக்கிறார். ரோஷ உணர்வு நரம்புகள் மன் மோகன் சிங்கிற்கு வேலை செய்யும் பட்சத்தில் அவர் தூக்கம் கெடுகிற பிரதமராகத்தான் இருப்பார்.

போயும் போயும் மெத்தை வாங்கும் போது அன்னாரது நினைவு வந்தால் நான் என்னதான் ஆவேன்?

No comments: