Tuesday, December 22, 2009

குத்துங்கடா... உருவுங்கடா...

காற்றும் மழையும் கலந்தடித்துக்கொண்டிருந்த நவம்பர் 09 -2009 அன்றைக்கு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த வாரத்தில் மனதில் சட்டமன்ற நடவடிக்கைகள் பெரிதும் இடம்பூண்டிருந்தன.தமிழ்நாடு சட்டமன்றம் அல்ல.கர்நாடக சட்டமன்றம். முதல்வர் எடியூரப்பாவுக்கு இடியூரப்பாக்களாக இறங்கினர் ரெட்டி சகோதரர்கள் இருவர்.கதறி மனமுருகி என்னவோ செய்து எடி தாக்குப்பிடித்தார் தற்காலிகமாக.ரெட்டி சகோதரர்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு கோமணம் கட்டி பீப்பி ஊதும் ‘ஜெமினி’ ராசி இரட்டைக் குழந்தைகளைப் பார்க்கையில் ஏற்படும் பரவசம் உண்டானது.அப்படி ஜொலிப்பும் இணைப்புமாக அவர்கள் காட்சியளித்தனர்.

எடியூரப்பா மந்திரித்த கோழியாய் மாறிப்போனாலும் நெற்றியில் வைத்தபொட்டு அவரது வனப்பைக் காப்பாற்றவே செய்தது.மந்திரி சோபாவின் (பதவி) இறக்கத்தாலும் இரக்கத்தாலும், விதான் சௌதாவை அவர் மீண்டும் அலங்கரிப்பது உறுதியானது.சன் நியூஸ் சேனலில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.வேளச்சேரி மக்கள் வெள்ளத்தில் த்த்தளித்துக்கொண்டிருந்தார்கள்.திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்கத்தில் மூன்று அடித்துக்கொண்டுபோக த்வி லிங்கமாகிவிட்டது.சீக்கிரம் ஒரு குடமுழுக்கு உண்டு கோவை மாவட்டத்தில்.

சன் நியூஸ்- சேனலில் செய்தி ஓடிக்கொண்டிருக்கும் போதே சுண்டுவிரல் அகல நாடா ஒன்று சுருளாக ஓடுகிறது அடர்நீலப் பின்னணியில்.அதற்கு மேலே அகலங்கூடிய செவ்வகப் பட்டையில் ’சற்று முன்’ என்கிற ஃப்ளாஷ் நியூஸ்கள் ஓடுகின்றன.அது அவ்வப்போது விளம்பரப் பகுதியாகவும் மாறுகிறது.அதற்கும் மேலே அவ்வப்போது பங்குச்சந்தை மற்றும் பொன்வெள்ளி விலை நிலவரங்கள்.சேனலைத் தொடர்ந்து பார்த்தால் நீங்கள் ஒரு சதுராவதானி ஆவது திண்ணம்.

சாயங்கால நேரத்தில் திருநாவுக்கரசர் தில்லியில் காங்கிரஸில் இணைந்த ’சற்றுமுன்’ கிடைத்தபோது மேலே ’பங்குச் சந்தை நிலவரம்’ என்று ஓடியது.இயற்கையும் இதர மொழிகளும் சமயங்களில் ஏற்படுத்தும் நகைச்சுவை அலாதியானது. சமீபத்தில் அப்படித்தான் சிறையில் மட்டன் பிரியாணி கிடைக்கவில்லை என்று ஒருவர் தட்டைத் தூக்கி எறிந்தார்.எறிந்தவரின் பெயர் அஜ்மல் ‘கசாப்’.

பிறகு ஆதித்யா சேனலுக்கு மாறிவிட்டேன்.கட்டுரைக்கான ஆதார சம்பவம் நிகழ்ந்தது சன் – னின் ஏழு மணிப் பிரதான செய்தியில்.மகாராஷ்ட்ர மாநிலத்தில் சமாஜ்வாடி எம்.எல்.ஏ இந்தியில் பிரமாணம் எடுக்க முற்பட்டபோது மாற்றுக்கட்சி ஆட்கள் பாய்ந்து தாக்கிவிட்டார்கள்.தாக்கியவர்களில் நான்குபேர் நான்காண்டுகளுக்கு சஸ்பென்ஸ் செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.அவர்கள் ஒருவேளை ஐந்தாம் ஆண்டில் பதவிக்கு மீள்வார்களோ என நினைத்துக்கொண்டேன்.

அடிவாங்கும் நபரை ஒரு வீரப்பெண்மணி இடைப்புகுந்து காப்பாற்றினார். குழாயடிச் சண்டையில் குறுக்கே புகுந்து குருதி இழப்பைத் தடுக்கும் அப்படிப்பட்ட குறுந்தெய்வங்களை நேரில் பார்த்திருக்கிறேன்.தொலைக் காட்சியில் தரிசிப்பது இதுவே முதல்முறை.

தாக்கியவர்கள் ராஜ்தாக்கரே கட்சிக்காரர்கள்.இதை ராஜ் ’தாக்கறே’ என்று புரிந்துகொள்ளத் தக்கவிதமாகத்தான் கட்சியின் பெயரும் இருக்கிறது.’புத்துருவாக்கப் படை ’என்னும் பொருளில் நவ்நிர்மாண் சேனா. படையாம் படை.எந்தக் காலத்தில் எப்படிப் பெயர் பாருங்கள்.பெயர் சூட்டுவதற்குத் தமிழகத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும். ஒரு கண்கட்டு மயக்கத்தில் ‘குழுமம்’ என்று தொனிக்கக்கூடிய அளவில் கழகம் என்று வைத்திருக்கிறார்கள்.

மகாராஷ்ட்ராவில் பதவி ஏற்ற எம்.எல்.ஏ பிரமாணம் செய்தது லத்தீன் அல்லது பாரசீகம் போன்றவற்றில் அல்ல. இந்தியில்.நான் எழுத்துருக்களைக் கவனித்த அளவில் இந்தியில் c என்று போடுவதை மராட்டியில் < என்பது போல எழுதுவார்கள்.இது குறியீட்டுப் பொருளில் உரைக்கப்படுகிறது.யாரும் அகராதியுடன் சண்டைக்கு வரவேண்டாம்.வாய்ப்பிரயோக அளவிலும் அவ்வண்ணமான வித்யாசங்களே இருக்கக்கூடும். பாராளுமன்றர்கள் ஆங்கிலத்தில் பதவி ஏற்பதைக்கூடச் சகிக்கிற மராட்டியர்களுக்கு இந்தி ஏனோ பிடிக்காமற்போய்விட்டது.அல்லது மராட்டிப் பற்று மலையளவு ஏறிவிட்டது. அல்லது இதில் மேலும் சில உள் விவரங்கள் உள.

மராட்டியை எனக்கு ஐந்து வயதில் இருந்து தெரியும் - பள்ளிக்கூட பிரேயர்களில் நின்றதன் வாயிலாக.பஞ்சாப ஸிந்து குஜராட்ட மராட்டா... எனப் பாடுகையில் இந்த மராட் என்னமோ செய்யும்.மெல்லினத்தில்(ம) தொடங்கி இடையின(ர) ஊடாக வல்லின(ட)த்தை அடைகிற ஒலிக்கோர்வை அதன் காரணமாக இருக்கலாம்.

அப்புறம் பத்தாம் வகுப்புப் பருவத்தில் ’சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு’ என்று பாடிய பாரதி. கவிதையைக் கூட கர்ஜிப்பார்களோ!

விஜய் டெண்டுல்கர் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை மராட்டாவின் வேறுபல மாதிரிகளும் இருக்கலாம்.வாழிய மராட்டா!

தில்லி ராஜதானி முதல் ராஜபாளையம் வரை பற்பல இடங்களில் மன்றக்கூச்சல்கள் இவ்விதமாய் இருக்கின்றன.மக்களுக்கு எதாவது செய்வார்கள் என நம்பி அனுப்பப் படுகிறவர்கள், எவ்வளவோ செய்யறோம் இதையும் செய்யமாட்டோமா? எனக் கிளம்பிவிடுகிறார்கள்.

இந்தியில் வீறுகொண்டு பிரமாணித்த அந்த வெள்ளை ஜிப்பா மனிதரின் முகம் மறுநாளும் மங்கலாக நினைவில் இருக்கிறது.

இதை எழுத முற்படும்போது ‘சிங்க மராட்டியர்’ என்றுதான் தலைப்புத் தோன்றியது.சிங்கங்கள் செய்ததென்ன பாவம்? ஆகவே..வன்முறைச் சுவையை மனதில்கொண்டு மேற்படித்தலைப்பை வைத்தேன்.எங்கேயோ கேட்டமாதிரி இருந்தால் சங்கத்தமிழும் சிங்கத் தமிழருமே பொறுப்பு.

5 comments:

adhiran said...

துடுப்பை முழுவதுமாய் இயக்கத்தொடங்கிவிட்டது பதிவுகள். நன்றி.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அண்ணா...தலைப்பை பார்த்ததும் டரியலாயிட்டேன்...

ஈரோடு கோடீஸ் said...

//மக்களுக்கு எதாவது செய்வார்கள் என நம்பி அனுப்பப் படுகிறவர்கள்//

எம்.எல்.ஏ : இன்னுமாடா நம்ம இந்த ஊரு நம்புது!

க. சீ. சிவக்குமார் said...

திரு! இப்படி ஒரு பேர வச்சுக்குட்டு. சமகாலத்துல தலைப்புக்கே டரியலானா எப்படி?

ஜெகநாதன் said...

டிவி-செய்திகள் கச்சைக் கட்டிக் கொண்டு அபரிதமாக வழங்கிற​த்வனி சிலசமயம் விபரீதமாகவும் போகின்றன. ஆங்கில ​செய்தி ​ஸேனல்கள் இன்னும் பயங்கரம்; ஏகப்பட்ட கச்சைகள்.. கண்கட்டிக் கொள்கிறது.

கர்நாடகாவை பெங்களூராகவே அடையாளப்படுத்திக் கொள்ளும் என்னைப்​போன்ற ​பெங்களூர்வாசிகளுக்கு (கர்நாடகவாசி இல்லியாக்கும்) எடி-ரெட்டி-எவரடி​​போன்ற செய்திகள் இந்தமாதிரி படித்தால்தான் உண்டு. அஷ்டே!

இன்னொரு உருவுங்கடா ​மேட்டர் இருக்கு - ​தெலுங்கானா! குத்துங்கடா படலம் இப்ப சிறப்பாக​ஹைதராபாத்தில் நடந்து​கொண்டிருப்பதா செய்தி. உருவுமா என்ன என்பது பெரிய-அம்மாவுக்கே ​வெளிச்சம்.

சிங்க அடைமொழிகளில் எல்லா மாநில இனங்களும் அடைப்பட்டு​போகிறபடியால்,​தேசியவிலங்காக சிங்கத்தையே நியமித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. டோட்டலா சிங்க இந்தியன் என்று கர்ஜிக்கலாம். நல்ல சிந்தனை!

இப்ப நம்ம மாநிலம் சிங்கத்தை விட ​வேட்டைக்காரனுக்கு பயந்து நடுங்குவதா கேள்வி.