Wednesday, November 11, 2009

தென்கச்சி.

தென்கச்சி என்பது ஒரு ஊரின் பெயர்.எங்கே இருக்கிறது என்பது துல்லியமாகத் தெரியாது.தஞ்சை மாவட்டம் அல்லது அருகாமையில் இருக்கலாம் என்பது யூகம். அங்கே சாமிநாதன் என்றொருத்தர் இருந்தார். அங்கே என்றால் அங்கே இல்லை. அந்த ஊரின் பெயரைச் சொல்லிக்கொண்டு வானொலி நிலையம் உள்ள ஊர்களில். பிற்பாடு சென்னையில். அந்திம காலத்தில் தொலைக் காட்சிப் பெட்டிகளில் காலை நேரங்களில் தோன்றினார்.நான் ரொம்பச் சின்னப் பையனாக நான் இருக்கும்போதே அவரது குரலும் பெயரும் ஈர்த்துவிட்டது.அப்படி ஈர்த்த இன்னொரு பெயரும் குரலும் வடிவேல்ராவணன்.
தென்கச்சி சொல்வதில் எதோ விஷயம் இருக்கிறது என்றெண்ணி காது குடுத்துக் கேட்கும் போது விவரம் தெரிகிற வயது கடந்துவிட்டது.அப்புறம் எப்பொழுதும் விவரம் தெரியாதவனாகவே இருந்திடவேண்டும் என்கிற வீராப்பு அவர் சொன்னதில் ஒரு கருத்து கூட இப்போது நினைவில் இல்லை. அவரும் கருத்து என்று ஒருபோதும் உரைத்ததில்லை. தினம் ஒரு தகவல் என்பதுதான் அவரது அடையாளம்.
அவர் குரல் போலவே வேறு ஒரு குரல் இருக்கிறதே என்று வெகுநாள் தோன்றிக்கொண்டு இருந்தது.அது டணால் தங்கவேலுவினுடைய குரல்.டணாலும் எழுத்தாளர் பைரவனாகத் தோன்றி ’நடித்ததன்’ வாயிலாக தமிழெழுத்தாளர்களால் மறக்கப்பட இயலாதவர்தான்.டணால் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு குரல்-டப்பிங்- கொடுக்காமல் இறந்துவிட்டார் என்றும் அப்பணியை சாமிநாதன் செய்தார் என்றும் தகவல் கேள்விப்பட்டபோதுதான் இரண்டு குரல்களையும் ஒப்புமை கண்டேன். பெற்ற தகவல் பொய்யோ மெய்யோ எதுவாகவும் இருக்கலாம்.இன்று ஒரு தகவல் வகை சேர்ந்தது. எப்படி இருப்பினும் பாதகமில்லை. டணாலும் உயிருடன் இல்லை தகவலாரும் உயிருடன் இல்லை.சரீரமும் சாரீரமும் மறைந்தபின் சாமிநாதனுக்கு யாரும் குரல் கொடுக்க அவசியமில்லை.
சாமிநாதனை சன் தொலைக்காட்சியில் நான் பார்க்கும் போதெல்லாம் அவரது பேச்சைக் கேட்பதினும் விட முகத்தைப் பார்ப்பதில் ஆர்வமாக இருப்பேன்.அவரது சாந்தமான முகபாவத்தையும் சொல்லல் முறையையும் கடந்து ஒரு சுத்தியல் தெரியும்.அதையே அதிகமும் பார்ப்பேன். மூக்கைக் கைப்பிடியாகக் கொண்டு இரு புருவங்களுக்கும் மேலாக பருத்துப் புடைத்த சதைத் திரட்சியானது எனக்கு எப்போதும் சுத்தியலையே நினைவூட்டியது.அடங்கிய குரலினை அசைக்கும் அந்த வாய்மேல் கண்டிருந்த சுத்திதனை எப்பிறப்பிற் காண்பேன் இனி.
ஆனந்த விகடம் ’பொக்கிஷம்’ பகுதியில் சொந்த ஊரார் அவர் மேல் கொண்டிருந்த மதிப்பும் அபிமானமும் தெரிந்தது.பொதுவாக உள்ளூரால் புகழ் பெற்றுவிட்ட மாந்தர் மீது அந்த விதமான மரியாதையை வைப்பதில்லை.அதை அந்த ஊர் அவருக்குத் தந்தது. உண்மையில் அவரது மறைவை ஒட்டியே அது மீள் வெளியீடு பெற்றிருக்கிறது என்பதும் அவர் இறந்துவிட்டார் என்பதும் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
தமிழ்மரபில் தெற்கு என்பது மரணத்தின் திசையாக அறியப்படுவதால் அமரப்பெருந்தகைகளுக்கு அஞ்சலி என்பதில் முதலாவதாக அவரைப் பற்றி எழுதுவது தற்செயலாகும். காற்றில் வரும் கீதங்கள் இவற்றை உயிர்ப்பிக்கின்றன.
தினம் ஒரு தகவல்- தருவது பற்றி நண்பர் சி.முருகேஷ்பாபு அவரிடம் வியந்திருக்கிறார்.
(ராமச்சந்திரன் டீக்கடைக்குப் பக்கத்தில் எதோ ஒரு மரநிழலில் வைத்து பகிர்ந்து கொண்டது என்பது பாபுவுக்கு பர்ஸனல் எஸ்.எம்.எஸ்)
அதற்கு தென்கச்சி ‘இதுல ஆச்சரியப் படறதுக்கு என்னங்க இருக்கு.இல்லீனா மெமோ குடுத்திடறான்.’ என்று சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார்.அந்த இயல்புதான் குணவிசேஷம் .அவர் இறந்த செய்தியை இருபது நாட்கள் கழித்து தெரிந்து கொண்டேன். பெரிய வருத்தமொன்றுமில்லை. இந்தத் தகவல் தெரிய நமக்கு இத்தனை நாளாயிற்றே என எண்ணும் போது வருத்தமாக இருந்தது.

8 comments:

நேசமித்ரன் said...

உங்களுக்கே உரிய நடையில் மிக நல்ல பகிர்வு
தங்கவேலு அவர்களுக்கு தென்கச்சியார் குரல் கொடுத்தது புது தகவல்

Anonymous said...

பத்தி பிரித்து பத்திகளுக்கிடையே இடைவெளி விட்டு சரி செய்யுங்கள் சிவ. படிக்க எளிதாக இருக்கும்.

தென்கச்சியின் சில நகைச்சுவைகள் சினிமாவில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. அது குறித்து அவர் ஒரு போது புகார் சொல்லியதில்லை.

ஜெகநாதன் said...

வாழ்வின் பறவைப் ​போக்கில் இந்த பிளாக் எழுதுவது என்பது சிற்பங்களின் இடுக்கில் காணும் குளிரும் ​வெப்பமுமான நிழல். ​உங்கள் குளிர்மை எழுத்தில் ​என் வெயிலைக் கழட்டி ​​​வைக்க எப்போதும் ​​போல் ஓடிவருகி​றேன்.
*
இந்த குரல்களின் ​வேட்டை எப்​போதும் சுவாரஸியமானது. ​போன்களில், சாட்டிங்கில், ஆட்டோ ஏன்ஸரிங் வாய்ஸில், கதவுக்கு பின்னிருந்து ஒலிக்கும் குரலில் என தூரி​​கை​யை ​கையில் திணித்து விடும் சாமார்த்தியம் ​​கொண்டவை.

ம்.... வெவ்​வேறு ஒலிச்​செறிவுகளில் ​​வெவ்​வேறு அழகு காட்டும் குரல்க​ளை இந்த உலகம் ப​டைத்துக் ​கொண்டுதான் இருக்கிறது என்று ​சொல்லிவிட்டு.., அப்படி​யே குரலுக்கு தகுந்த முகங்கள்தான் ப​டைக்கப் படுவதில்​லை - ​மேற்​கொண்டு சுத்தியலால் உடைக்கப் படுகிறது - என்று முடிக்கலா​மோ?
*
​தென்கச்சி சுவாமிநாதனின் குரல் ஒரு வட்டாரத்தின் பிரதி. ​டணால் தங்க​வேலு:சுவாமிநாதன்.. ஆச்சரியக(கா)ரமான குரல் ஒற்றுமை!
*
உங்களின் இந்த எழுத்து இங்கு எப்​போதும் கி​டைக்கு ​வேண்டுகி​றேன்.
*
வாழ்த்துக்கள்! நள்​ளெண் யாமம் ​மேலும் சிறக்க உரக்க வாழ்த்துகி​றேன்!!

ஜெயகாந்தன் பழனி said...

தினம் ஒரு தகவல் பற்றின உங்களின் தகவல் அருமை..அதைவிட தினமும் பதிவிடுகிறீர்கள்,தொடரட்டும் இதே நிலை..வாழ்த்துகள்

adhiran. said...

sema start siva. thenkatchikku saanthamaana kunam irunthatho illaiyo saanthamaana muham irunthathu.
tamil paadalkal patriya nedunthodarai ithil naan ethirpaarkiren.
nanri.

sharma.aps said...

சிவா சார்..

நேரம் இருந்தா இந்த நேர்காணலைப் படிங்க. தென்கச்சியைப் பற்றிய நிறைய, முழுமையான விஷயம் இதில் இருக்கிறது.

http://www.tamilonline.com/thendral/Auth.aspx?id=102&cid=4&aid=5596&m=a

ஸ்ரீராம். said...

//அதற்கு தென்கச்சி ‘இதுல ஆச்சரியப் படறதுக்கு என்னங்க இருக்கு.இல்லீனா மெமோ குடுத்திடறான்.’ என்று சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார்.அந்த இயல்புதான் குணவிசேஷம்//

யதார்த்தம்.

சேரல் said...

பதிவுலகில் நல்ல தொடக்கம். வாழ்த்துகள் திரு.சிவக்குமார்!

தென்கச்சி கோ.சுவாமிநாதனின் குரல் சிறுவயது முதலே துரத்திக் கொண்டிருந்தது. குரல் தோற்றுவித்து வைத்திருந்த கிட்டத்தட்ட ஒரு சாமியாரின் தோற்றத்தை, விகடனிலோ, குமுதத்திலோ வெளிவந்திருந்த அவரின் புகைப்படம் உடைத்தபோதும் அந்தக் குரல் என்னை வசீகரித்துக்கொண்டே இருந்தது.

நான் உருவாக்கி வைத்திருந்த நீள அகலங்களுடன் சற்றும் பொருந்தாத அவரின் இயல்பு முகத்தை சன் தொலைகாட்சி சில வருடங்கள் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தது. ஆனால், அப்போதும் அவர் குரலை மட்டும் கேட்கவே பிரியமாய் இருந்தது. அவரின் இறப்பு, என் காதுகளையும், சிந்தனையையும் மட்டும் வெகுவாக பாதித்ததாக உணர்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்