Thursday, November 26, 2009

சின்னப்பிரச்னை

மீராகுமார் சபை நாயகராக இப்போது பாராளுமன்றத்தில் இருக்கிறார். அனேகமாக முதல் பெண் நாயகர் அவர்தான் என்றும் நம்புகிறேன்.


மீராவைப்போன்ற ஒருவர், ’அமைதியாய் இருங்கள் அமைதியாய் இருங்கள்’ என்று சைகை காட்டும்போது நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலும் அமளியும் செய்கின்றனர் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அம்மையார் எதேனும் புதிதாக மதம் ஆரம்பித்தால் நான் அதில் சேர்ந்துவிடுவேன்.அவரது கன்னக் கதுப்புகளைக் கண்டபிறகுதான் பாபு ஜகஜீவன்ராம் அவர்கள் எவ்வளவு அழகு என்பது எனக்கு உறைத்தது.

மும்பைக் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று அத்வானி சுட்டிக்காட்ட பிரணாப்முகர்ஜி இதில் அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்.இதற்கெல்லாம் விலை கொடுக்கவேண்டிவரும் என்று மிரட்டினார்.எதில் எதில் அரசியல் பண்ணுவது என்பதை காங்கிரசாரிடம் பி.ஜே.பி கற்றுக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.அதைவிட , நல்ல ஒளிச்செறிவில் பதிவுக்கருவிகள் முன் பணம் வாங்குவதை நிறுத்தவேண்டும்.

முதலில் தேசியக்கொடியைப் போலவே தோற்றமளிக்கிற கொடியை காங்கிரசிடமிருந்தும், தேசிய மலரான தாமரைச் சின்னத்தை பி.ஜே.பி -யிடம் இருந்தும் அபகரிக்கவேண்டும் என்பது என் ஆவல்.

சீதாராம் கேசரியின் மகன் சீதாராம் யெச்சூரி என்று சொன்னால் நம்பிவிடும் நம் ஜனங்கள் கள்ளுக்கும் பாலுக்கும் வித்யாசம் தெரியாதவர்கள்.இந்த மாதிரி ’குறி’ சமாச்சாரத்தில் எல்லாம் உளவியல் சங்கதிகள் இருக்கிறது. இது புரியாமல் கம்யூனிஸ்டுகள் அரிவாள்,சுத்தி என்றெல்லாம் தேர்ந்தெடுத்தார்கள்.

தமிழ்நாட்டினரிடம் படிக்கவேண்டும் சின்னம் தேர்ந்தெடுப்பதை.இரட்டை இலையைத் தேர்வு செய்த எம்.ஜி.ஆர்தான் எவ்வளவு புத்திசாலி. அண்ணா கண்ட உதய சூரியனை இன்றைக்கு முழுச்சூரியனாக வரைகிற அளவுக்கு தி.மு.க முன்னேறவில்லையா.

வைகோ முதலில் குடை சின்னத்தை தேர்ந்தெடுத்தபோது எங்கள் ஊரில் ஒருவார்.’அருமைடா... ஆள் ஏற்கெனவே கறுப்புச் சால்வை போட்டுருக்கார்.கக்கத்துல குடைய மடக்கிவச்சு ஒரு உடுக்கையும் கையிலெடுத்து ‘நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குதுன்னு போவேண்டீதுதான்’ என்றார். இன்னைக்கு என்ன ஆயிற்று பார்ட்டி பம்பரமாகச் சுத்திக்கொண்டு இருக்கிறார். சாட்டை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.
அவரது குடை மேட்டரில் மகாஜனங்கள் யாரும் உள் அர்த்தம் எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.

விஜயகாந்த் இன்று புதிதாக வந்து கொட்டடா முரசு கொட்டடா என்று நிற்கிறார்.இப்பொழுது தொழில் நுட்பம் அதிகமாகி பிளக்ஸ் பேனர்கள் வந்துவிட்டன. ஆர்வப்பட்ட இளம் ஊழியர்கள் பலரிருந்தாலும் சின்னம் வரைவதற்கெல்லாம் ஆள் போட்டுவிடுகிறார்கள். சுய முயற்சியில் கைப்பழக்கம் இல்லாதவர்கள் வரைந்தால் முரசு ஒரு வடைச் சட்டியைப்போலக் காட்சியளிக்கும்.மூப்பனாரின் சைக்கிள் இன்றைக்கு இருந்திருந்தால் அது ஒரு பைக்காக மாறி இருக்காதா?-மூப்பனார் சுதாரித்து கை இல்லாமல் சைக்கிள் ஓட்ட முடியாது என முடிவெடுத்தார்.

கொஞ்சம் தப்பாக வரைந்தாலும் தம்மை வெளிப்படுத்திக்கொள்கிற சின்னங்கள் சூரியனும் இலையும்தான்.பா.ம.கட்சியின் பழைய யானை - மாயாவதியின் புதிய யானை துதிக்கையை வைத்து கொஞ்சம் தப்பிக்கும். ஆனால் மாம்பழம் கொஞ்சம் குடித்த நிலையில் வரைந்தால் ஆப்பிள் ஆகிவிட வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி நடக்காது. அய்யாவின் கட்சிக்காரர்கள் யாரும் குடிப்பதும் இல்லை. புகைப்பதும் இல்லை.

ஏர் உழவன் சின்னம் இருந்ததாலேயே ஜனதா கட்சி காணாமல் போய்விட்டது என நினைக்கிறேன். உழவர்களே காணாமல் போகும் நாட்டில் சின்னம் மட்டும் இருந்தென்ன போயென்ன.அப்போதெல்லாம் தகரத்தில் ‘சின்ன’த்தை வெட்டிஎடுத்து அச்சு உருவாக்கி அதில் காவி மற்றும் நீலம் கொண்டு வரையும் பழக்கம் இருந்தது. இன்று நெரோலாக்,ஆசியன் பெயிண்ட்களை உபயோகிக்கும் அளவு காஸ்ட்லியாகிவிட்டது.கதிர்-அரிவாள்-சுத்தித் தோழர்கள் மாறிமாறி திராவிடக் கூட்டு போட்டதில் ராச்செலவுக்கு டீயும் பீடியும் கட்டுபடியாகாது என்கிற மனநிலையை தோழர்கள் வந்தெய்தியிருக்கிறார்கள்.

பசுவும் கன்றும் இன்றும் இருந்திருந்தால் காங்கிரஸே இல்லாது போயிருக்கும்.காங்கிரஸ் -ஐ யும் காங்கிரஸ் ‘கை’யும் ஒருசேர பிரியதர்ஷினியால் வந்தது.

மிருகங்களைச் சின்னமாக வைக்க ஏலாது என்று அவரது சின்னமருமகள் பதைபதைத்ததற்கு ஓரளவு பலனும் இருந்தது.கையையே கைக்கொண்ட சோனியா அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

நரி முதலாகிய உயிரிகள் சின்னமாகாதது மோனிகா போன்ற குரல்களால்தான்.எல்லாச் சின்னங்களுக்கு ஊடாகவும் அடுக்குத் தோற்ற(சூப்பர் இம்போஸ்) முறையில் காந்தியின் படத்தைக் காட்டுகிற புதிய முறையை அமலுக்குக் கொண்டுவராவிட்டாலும் பரவலாக்கியதும் இன்று நாடு தழுவப் பரப்பிக்கொண்டிருப்பதும் சின்னத் தேர்வில் பிரதானர்களான தமிழ்நாடுதான். சின்னத்தனமாயினும் தென்னவர்களை மிஞ்ச அவனியில் ஆளில்லை.

10 comments:

சுரேஷ் கண்ணன் said...

interesting post.

ஜெகநாதன் said...

இது அரசியல் கலந்து எழுதப்பட்டிருந்தாலும்.. இன்றைய விளம்பர உலகத்தின் மிக முக்கியமான மிரட்டும் காரணியைப் பற்றி ஆய்வறிக்கை.

நிறுவனத்தின் விளம்பர ரீதியான ஆளுமை மற்றும் வெற்றி இவைகளுக்கு லோகோவுக்கும் (சின்னம்) நிறைய தொடர்பு இருக்கிறது. பான்ட்ஸ் பவுடர் வருஷமா (பரம்பரை பரம்பரையா) பாத்திட்டு வந்திருப்போம் ஆனா அதோட லோகோ? (பழைய) ஹிந்துஸ்தான் லீவர் என்றவுடன் இலை வடிவ லோகோ படக்கென்று தளிர்க்கிறதல்லவா? க்ளோஸ்-அப் என்றால் மனதில் இசை இருக்காது.. ஆனால் கோல்கேட்-பால்மோலிவ் என்றால் C-யும் P-யும் சேரும் போது வரும் "டிங்" கேட்கிறதல்லவா? ஏவிஎம்..? பின்னணி இசையே காட்டிக் கொடுத்து விடும்.. இதே போல் நிறைய சொல்லலாம்.. ஒருமுறை சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் கையிலேயே அதன் தோகை மயில் லோகோவை செய்து காட்டினார்கள். ரொம்ப சிம்பிளா.. காங்கிரஸ் கையை 45 டிகிரி சாய்த்தால் போதும் மயிலாகி விடும்!

இப்படி கருத்தை, கொள்கையை, விதிகளை, இயக்கத்தை, நிறுவனத்தை காட்சியாக வெளிப்படுத்தலில் தேவைப்படுக்கிற இந்த நுண்ணறிவு இப்போது மார்க்கெட்டில் டிமாண்டான ஒன்று. கட்சி சின்னத்தை அலசிய மாதிரி கம்பெனியின் தகவல்கள், அதை வெளிப்படுத்தும் வரைபடங்கள், க்ராப், டேபிள், பொதுமக்களுக்கு வழங்கும் தகவல்கள் (அறிமுகமில்லாத ஒரு பேருந்து நிலையத்தில் சென்று தகவல் பலகையிலிருந்து நீங்க போக வேண்டிய பஸ்ஸை தெரிந்து கொள்ள எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஏஸி ரெஸ்ட்டாரண்ட் மெனுவிலிருந்து ஒரு டெஸர்ட்டை தேர்ந்தெடுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்??), மருத்துவ தகவல் வடிவமைப்பு, வானவியல் இப்படி எல்லா இடத்திலும் இந்த நுண்ணறிவை நீட்டுவதற்குப் பெயர்தான் information visualization சுருக்கமா infovis! (முடிஞ்சா தமிழ்படுத்தி எனக்கும் பகிருங்கள்!)

ஜெகநாதன் said...

கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.. வாயால் மட்டும் நாம் கேட்கும்... எங்கள் ஆட்சியிலே, என்பதை graphகளா வாக்காளர்கள் பார்த்தால் எப்படியிருக்கும்? பத்திரிக்கைகள் மட்டும் அவ்வப்போது செய்து வருகிற இந்த ஒப்பீட்டு வரைபடங்கள் (இந்தியாவுக்கு இந்தியா டுடே தான் இதில் முன்னோடி அப்புறம்தான் தி வீக், இண்டியன் எக்ஸ்ப்ரஸ் போன்ற பத்திரிக்கைகள் வரைய ஆரம்பித்தன... நம்மாளுங்க இதில் டெட் ஸ்லோங்க... ஆனந்த விகடனில் கடந்த தேர்தல் சமயத்தில்தான் முதன் முதலில் கம்பேரிஷன் க்ராப்ஸ் பார்த்தேன்) மக்களுக்கு எளிதில் கிடைத்தால் எவ்வளவு செளகரியம்? ஆயிரம் வார்த்தைகளை சுருக்கிய ஒரு சிறு எளிய படம்... ஒரு கட்சிச்சின்னத்தை கிழித்துவிடும்!

அதாவது நான் கனவு காண்பது ஒரு தகவலறிக்கை... அத்தனை பேருக்கும் பொதுவான, யாரும் படித்து அல்லது பார்த்துவிடுகிற தகவலறிக்கை.. ஒரு தனிப்பட்ட நிறுவனம் இதைத் தயாரிக்கலாம்.

அதில் தேர்தலில் போட்டியிடுகிற (ஆளும்கட்சி முதல்) அனைவரின் பூளவாக்கையும் உண்மையான தகவல்களைக் கொண்டு (அங்கதான் இருக்கு அரசியலின் சாமார்த்தியம்!) வரையப்பட்ட graphs. இதுதான் மக்களுக்கு ஈஸி. 20க்கும் 14க்கும் உள்ள வித்யாசம் பெருசில்லை.. ஆனால் இது தக்காளியின் விலை எனும் போது வித்யாசம் நெஞ்சடைக்கிறதல்லவா? இப்படி எண்களாவே மந்திரித்து விடப்பட்ட தகவல்கள் அவசர புத்தியில் உறைப்பதில்லை. இதை க்ராப்களாக, ஆண்டு வாரியாக வெளிப்படுத்தும் போது.. கண்ணுக் கட்டுத்துப்பா... இப்படி எழுத முடியலே. அதுக்கு பேசாம அந்த மாதிரி ஒரு க்ராப்பை பின்னூட்டமா போட்டுடலாம்... முயற்சிக்கிறேன்..
உங்களின் இந்த கட்சிச் சின்னச் சலவை இடுகை ரொம்ப முக்கியமானது!

ஜெகநாதன் said...

//முதலில் தேசியக்கொடியைப் போலவே தோற்றமளிக்கிற கொடியை காங்கிரசிடமிருந்தும், தேசிய மலரான தாமரைச் சின்னத்தை பி.ஜே.பி -யிடம் இருந்தும் அபகரிக்கவேண்டும் என்பது என் ஆவல்.//
அதற்கு ஒத்துக் ​கொள்ள மாட்டார்கள்.. ​வேணும்கா நாட்டோட ​கொடி டிஸைனை மாத்திக்கோ என்று ​சொல்லிவிடுவார்கள்.. ஏனென்றால் வாக்காள ப்ரக்ஞையில் பதிந்திருக்கும் தங்கள் ​கொடிச்சின்னம்தான் முக்கியம்.. நாட்டுக் ​கொடியல்ல! கணிசமான வாக்காளப் ​பெருமக்களுக்கும் கட்சிக் ​கொடிதான் ​தெரியும், நாட்டுக் கொடி பற்றியோ அதன் மாறிய டிஸைன் பற்றியோ அக்கறையில்லை.

கவிதை(கள்) said...

பன்னி சின்னம் கிடையாதா இந்த அரசியல்வியாதிகளுக்கு

விஜய்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நல்ல பதிவு.. காந்தி சின்னம் எல்லோருக்கும் பொது தலைவா...
"பாலோயர் லிங்க்" கொடுங்க...

நேசமித்ரன் said...

ஆத்தீ ! செம ஹாட் டாபிக்கா இருக்கே

தீ பறக்குதுண்ணே அருமையான அலசல்

ஜெகன் பின்னூட்டம் க்ளாஸ்

ஸ்ரீராம். said...

மீரா குமார் புன்னகை முகத்துடன் சபை நடத்தும் அழகை நானும் வியந்திருக்கிறேன். கோபமே படாதவர் போலத் தோன்றும் முகம்... டென்ஷன் சோம்னாத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன். நஜ்மா ஹெப்துல்லா ராஜ்ய சபா மட்டும்தான் என்று நினைக்கிறேன். சேர்த்துக் கொண்டால் அவரையும் பெண் (துணை) சபா நாயகர் வரிசையில் சேர்க்கலாம்.

க. சீ. சிவக்குமார் said...

சுரேஷ் கண்ணன் நான் தேடுகிற சுகா நீங்கள்தானா... நீங்கள் நெல்லையா இல்லையா என்பதைத் தெரியப்படுத்தவும்- க.சீ.சிவா

சுரேஷ் கண்ணன் said...

//நான் தேடுகிற சுகா நீங்கள்தானா...//

நான் அவரில்லை. (பாகம் 102)
அவர் இங்கிருக்கிறார்.
venuvanamsuka.blogspot.com/ -