Tuesday, November 10, 2009

நள்ளெண் யாமம்.

தலைப்புக்குப் பொருத்தமான நள்ளிரவு நெருங்குகிறது.கணினி அறிவியற்பூர்வமாக காட்டும் நேரம் அமைப்பாக்கிவைத்த நேர இடுகையால் விளைந்தது.அது எதாவது ஒரு தேசத்தில் இந்த நேரத்து மணியாக இருக்கலாம். அட்சரேகைகள் தீர்க்கரேகைகளால் சூழப்பட்டது இந்த நளியிரு முந்நீர் சூழ் புவி. இணையத்தில் எழுதத் துவங்கும் இந்நேரம் பாறைகளில் உளித்த கடுந்தனிமங்கள் பனைகளில் சலசலத்த ஓலைகள் தூவிகள் இறகுகள்துணிகள் ஆணிகள் மறைந்து கொண்டு இருக்கும் பேனா நிப்புகள் காகிதங்கள் மசியின் கீழ் உருளும் ஆலவிதை அளவுப் பந்துகள் என எழுதப்பட்ட மானுடமும் ஊடகமும் உசாப்பொருளுமாக தமிழும் இன்னபிற மொழிகளுமாக என்னென்னவோ உணர்வுக்கு வருகிறது.
மகிழ்வும் கனவுமான பொழுது. அச்சுக்கு வராத கச்சா ரூபத்தில் கணினியிலேயே கதை தட்டும் முயற்சி சொந்த வட்டமான தாராபுரத்தில் நடந்தது.மின்சாரவாரியரான கருப்புசாமியின் மகன் ஜெகநாதன் அச்சிக்கொடுத்த கதைகள் சில.எனக்கு முன்னரே அவர் இணையத்தில் உலவுவார் என்பது நான் எதிர்பாராதது.2000 ஆண்டின் இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற எனது நாற்று கதையின் வடிநேர்த்திக்குக் காரணமான எடிட்டரும் அவனே.ஐந்தாண்டுகளாக அவனைத் தொடர்ந்து தூரன்குணா,பாலசுப்பிரமணியன் ஆகியோர் என்னைக் கணினிக்கு ஊக்கினார்கள். மூவரும் இப்போது பெங்களூரில். பெங்களூரில் செய்யாததை நிலக்கோட்டை தாலூக்கா வதிலை அருகுள்ள கோட்டப்பட்டி காமாட்சிபுரத்திலிருந்து செய்கிறேன். கனவுகளை விடவும் ஆசை அதிகமாயிருக்கிறது. சமீபத்தில் தளம் ஆரம்பிக்குமாறு ஊக்கியது பாலாஜி. மிக ஆச்சரியகரமாக இங்கே ஒரு அந்தக நிரடலில் நான் ஒரு ரிப்பனைக் கட்ட, கண்டங்கடந்திருந்து கத்திரிக்கோல் எடுத்து நேசமித்திரன் வெட்ட வைத்தார். இந்த அனுபவத்தை நானும் அவனும் மறப்பதற்கில்லை. விளை பொருள் எப்படி இருப்பினுங்கூட.தொடர்ந்து சின்னச் சின்ன கருத்துகளோடு நண்பர்களைச் சந்திக்கிறேன்.காணாத் துணையாயும் கனவு இணையாயும் இப்போது கத்தாரில் இருக்கிற சாந்தியின் ஊக்கமும் இந்தப் பயணத்தைத் தொடங்குவதற்கான சாத்தியத்தை அளித்திருக்கிறது. தூங்கும் தூங்காமலிருக்கும் அனைவரின் இமைகளையும் காற்று போல தழுவி ஒரு ‘நல்லிரவு’ சொல்லிக்கொள்கிறேன்.

17 comments:

Anonymous said...

வாங்க சிவா, நல்வரவு. ஆதிமங்கலத்து விசேசங்களின் மீதியை எழுதுங்கள்.

அழைத்து வந்த நேசனுக்கு நன்றி.

சிவா, சொல் சரி பார்ப்பை நீக்கி விடவும். பின்னூட்டமிட சிரமமாகவிருக்கும்.

கலகலப்ரியா said...

:-) welcome..!

மாதவராஜ் said...

ஆஹா...!
க.சீ நீங்களும் வந்தாச்சா.
ரொம்பநாள் ஆச்சு உங்களைப் பார்த்து... (தமிழ்ச்செல்வன் மகன் திருமணத்தின்போது பாப்பம்பட்டி ஜமாவோடு தூள் கிளப்பிக்கொண்டு இருந்தீர்கள். கூட்டத்தில் பேச முடியவில்லை).
இனி அடிக்கடி பார்க்கலாம்.....
சந்தோஷம்..

செல்வநாயகி said...

நல்வரவு.

ஜெயகாந்தன் பழனி said...

உங்கள் எழுத்தை கண்டதும் உங்களை நேரில் சந்தித்த மகிழ்ச்சி...நீண்டநாட்களாயிற்று நான் உங்களை சந்தித்து.. நினைவிருக்கிறதோ இல்லையோ..அன்புடன் ஜெயகாந்தன் பழனி

பழமைபேசி said...

க.சீ,

வணக்கமும் வாழ்த்துகளும்! நல்வரவு!!

தண்டோரா ...... said...

பாலோயர் இணைப்பு கொடுங்க சார்

சங்கர் said...

நல்வரவு, வெகுநாள் தேடல் முடிவுக்கு வந்தது, ஒன்பதாண்டுகள் ஆன பின்னும் கானல்தெருவை விட்டு விலக முடியாமல் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு சிறு ரசிகனின் வரவேற்பு

இணைப்பை வழங்கிய கலகலபிரியாவுக்கு நன்றிகள் பல

சங்கர் said...

இணைப்பை வழங்கியவர் நேசமித்திரன், குழப்பத்திற்கு மன்னிக்கவும்

சென்ஷி said...

நல்வரவு!

பேரு முருகேஷ் பாபு said...

மனத் தடை ஏற்படாமல் இருக்க சீரங்கராயனும் மின் தடை ஏற்படாமல் இருக்க ஆற்காட்டாரும் உங்களுக்கு அருளட்டும்!

S.A. நவாஸுதீன் said...

நல்வரவாகட்டும். ரொம்ப சந்தோசம். நண்பர்கள் தொடர்வதற்கான் இணைப்பையும் கொடுத்துவிடுங்க சார்

thenammailakshmanan said...

நள்ளெண் யாமம் நல்லா இருக்கு கன்னிவாடி சிவகுமார்...

எல்லாரும் நல்வரவு சொல்லுவாங்க

நீங்க வித்யாசமா நல்லிரவு சொல்லி இருக்கீங்க

உங்க ஆதி மங்கலத்து விசேஷங்கள்.., குணசித்தர்கள் படிச்சு இருக்கேன் ..மிக அருமை..

இங்க உங்களை அழைத்து வந்த நேசனுக்கும் நன்றிகள் பல ..

ஜெகநாதன் said...

வாழ்த்தி வர​வேற்கி​றேன்!

உங்களுக்காக 3 டிப்ஸ்கள்:

1. ​தொடர்ந்து எழுதுங்கள் (பாஸ்கர் சக்தி பிளாக் ஆரம்பித்து நிறுத்தி விட்டார்; நான் அவ​ரை உற்சாகப்படுத்தி ​மெயில் கூட அனுப்பிருக்கி​றேன்.. இன்னும் jumpstart பண்ணக் கா​ணோம்)

2. இந்த 14 பின்னூட்டங்களுக்கும் உங்களால் இயன்ற டீ, காபி, தம், பன், ​​பொ​ரை, பிஸ்கட் எதுவும் வாங்கிக் ​கொடுக்க ​வேண்டாம்; ஆனால், எளிதாக ஒரு நன்றி​யோ அல்லது பதி​லோ ​கொடுங்கள்.. ரசிகர்கள் ​பெருகுவார்கள்!

3. பிளாக்கு என்று ஒரு தனி ​மொழி, ​தொனி மற்றும் உடல் இருக்கிறது.. அந்த மாயத்​தை கண்டுவிட்டீர்க​ளேயானால்... பிளாக் காசும் பண்ணும்!
-
மறந்து விடாதீர்கள் அலாவுதீன் விளக்​கேயானாலும் ​தேய்த்தால்தான் தம், பூதம் எல்லாம் வரும். ​ஸோ... நீங்களும் ​தேய்ங்க அப்பப்ப!
-

ஜெகநாதன் said...

ஸாரி... பாஸு முக்கியமான இன்​னோரு டிப்ஸு ​சொல்ல மறந்துட்​டேன்..
டிப்ஷு என்னன்னா....
சரக்கு (>=180ml) அதிகமா ​போயிட்டா பதிவு எழுதாதீங்க...
உச்சா ​​போயிட்டு, தண்ணி குடிச்சிட்டு கம்முனு படுத்து தூங்கிடுங்க!
இதுவும் அனுபவம்தாங்க!

balamurugan said...

பிளாக்கர் குளத்தில் குதித்திருக்கும் சிவகுமாருக்கு வாழ்த்துகள். குளத்தில் முத்தும் கிடைக்கலாம்; முட்டியும் பெயரலாம்; நண்பர் வட்டமும் பெருகலாம். நல்லதே நடக்க வாழ்த்துகிறேன்.

பாலா

செல்வராஜ் (R.Selvaraj) said...

பல்லாண்டுகளுக்கு முன்னர் நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையை விகடன் இதழ் ஒன்றில் படித்து இரசித்திருக்கிறேன். 'அபுபக்கர்க்குத் தேநீர்க்காசு' என்று தலைப்புக் கூட நினைவில் இருக்கிறது. நீங்களும் வலைப்பதிவில் எழுதத் தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள். இனிய அனுபவம் அமையட்டும்.

(பிளாக்கு என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன். வலைப்பதிவு என்ற தமிழ்ப்பெயர் நிலைத்து நெடுநாட்கள் ஆகிவிட்டது).