Tuesday, November 17, 2009

’சந்தை’ய்யா டுடே

மதுரை போயிருந்தபோது நேற்று ரொம்ப நாள் கழித்து ‘இந்தியா டுடே’வாங்கினேன்.1995-இல் மதுரையில் நான் வாழ்ந்தபோதே எனது முதலாவது சிறுகதை அதில் வெளியானது. அந்தப்பாசம் என்னியுமறியாமல் பொத்துக்கொண்டிருக்கக்கூடும்.நவம்பர்25,2009 இதழ்.விவாதமா,வர்த்தகமா?-என்ற தகவல்பூர்வமான நல்ல கட்டுரை வெளியாகி இருந்தது.ஷஃபி ரஹ்மான் எழுதியது. ஒருவகையில் தகவல்களின் தொகுப்பும் திரட்டும் கூட. விஷயம் தெரிந்து பயங்கொள்வோருக்கு ஆங்கில ‘திரட்’. ஆனால் பத்திரிக்கைக் கட்டுரைகளுக்கெல்லாம் அஞ்சுகிற ஆட்கள் நம் அவைகளில் இல்லை.

விஷயம் நாடாளுமன்றம் சார்ந்தது.தொழில்துறை நிலைக்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் வணிகத்துறையைச் சேர்ந்தவர்கள் என்கிறது விவரம்.எது குறித்தாவது அவர்கள் கேள்விகேட்கிறார்கள் என்றால் அவர்கள்து தொழில் சார்ந்த கேள்வியாக இருக்கிறது. மக்கள் நலனுக்காக கேட்கப்படும் தோரணை உள்ள அந்தக் கெள்விகளின் உள்ளடக்கம்.’எங்களுக்கு என்னய்யா பண்ணப்போறே கவர்மெண்டு?’ என்று கேட்பதாக இருக்கிறது.

நென்னெறிக்குழு தலைவர் கரண்சிங், என்னவும் கேளுங்கள் அதற்கு முன் நீங்கள் யாரெனத் தெரிவித்துவிட்டு அப்புறம் பேசுங்கள் என்கிறார். இது தார்மீகம். யார் யார் எந்தெந்தக் குழுமத்தில் என்னென்ன ‘நிலை’யில் உள்ளனர் என்பதற்கெல்லாம் பதிவுகள் பேணப்படுவதில்லை என்பது கட்டுரையில் தெரிகிறது. பிளாட்பார கிளி ஜோசியக்காரர்கள் போல இருக்கும்போல.’மன் மோகன்கிற பேருக்கு ஒரு சீட்டு எடுப்பா செல்லக்கிளி’ என்பதற்கு மேல் எவனெவன் எங்கிருந்து வந்தான்,இன்னாத்துக்கு இவன் வாயிலிருந்து இப்டியான கேள்வி வருது என்பதற்கெல்லாம் ஆவணபூர்வங்கள் எதுவும் இல்லை.

‘எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்கவில்லை அவரும் சொல்லவில்லை’ என்ற நகுலன் கவிதை மாதிரி சபை நடக்கிறது.

‘சொல்லீட்டு செய்ங்க ஐயா!’ என்றுதான் கேட்டுக்கொள்ளவேண்டும்.சாம்பசிவ ராயபதி ராவ்,கவுரி சாம்பசிவ ராவ்,நம்ம நாகேஸ்வர ராவ்...என பெட்டிச் செய்தியில் பேர்கள் உண்டு. இதுதவிர அதிபர்களின் முந்தைய இரவு உபசாரத்தில்(முதல் எழுத்து உ’வேதான்) மறுநாள் சபையில் செஞ்சோற்றுக் கேள்வி எழுப்பும் உறுப்பினர்களும் இருக்கலாம்.அது கட்டுரையில் இல்லை.மாநிலங்களவை துணைத்தலைவர் குழுவின் உறுப்பினர் பி.ஜெ.குரியன் வினவுவதில் அதற்கான பூடகங்கள் இருந்தன.

இப்படிக் கட்டுரைகள் அவ்வப்போது தருகிற இந்தியா டுடேவின் லே அவுட்டில் தலைப்பில் டிண்ட் அடித்த பகுதிகளையும் அடிக்காத பகுதிகளையும் சிறுகோட்டால் பிரித்து உங்களுக்குத் தருகிறேன்.
1.ஆசிரிய-ரிடமிருந்து...
2.உள்-ளே
3அன் -புடன்
4.ரேடார்
5.எட்டுத்திக்கும்
6.தே-சம்
7.மாநி-லங்கள்
8.தமி-ழகம்
9.கவர்-ஸ்டோரி
10.சந் -தை
11.சிறப்புப்பகுதி
12.மைதா-னம்
13.ரச -னை

கோட் அடிப்பது எப்படி என்று இந்த அரசியல் கம் தொழிலர்களிடம் லீவிங் மீடியா இண்டியா லிமிடெட் படித்துக்கொள்ள வேண்டும்.

1 comment:

பிரசன்னா இராசன் said...

இந்தியா டுடே இலக்கிய மலரில் வந்த உங்களுடைய ‘காற்றாடை’ என்ற கதையை நான் படித்து இருக்கிறேன். நீங்களும் ‘பாஸ்கர் சக்தி’யும் அறிமுக எழுத்தாளர்களுக்கான பரிசை பெற்று இருந்தீர்கள். ஏழாம் வகுப்பு படித்த போது புரிந்ததோ இல்லையோ வாசித்தேன். இந்தியா டுடேயின் தற்போதைய ‘Content' மிக மிக ஏமாற்றம் அளிக்கக் கூடியதாகவே உள்ளது. வாசந்தி ஆசிரியராக இருந்த வரை குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு சிறுகதை, புத்தக மதிப்புரை போன்றவை இருக்கும். இப்போது அதையும் காணோம். சர்க்குலேஷனிலும் அநியாய்த்திற்கு நொண்டியடிக்கிறார்கள் என்றும் கேள்விப் பட்டேன்.