Monday, November 16, 2009

நீங்களும் கேளுங்கள்.

வானிலை மற்றும் வாழ்நிலை பற்றியும் ஒட்டியும் எழுதியிருந்த பகிர்வுக்கு சங்கர் நீ-கேளேன்.பிளாக்ஸ்பாட்.காமில் இரு தினங்களுக்கு முன் எழுதியிருந்த தற்செயலைச் சொல்லியிருந்தார்.அதை நான் நொடியது விநாடி வரை படிக்கவில்லை. இதோ அடுத்து முயன்று படித்துவிடுகிறேன்.இன்னும் கருத்துரையைப் பதிவு செய்யவும் கம்ப்யூட்டரில் படிக்கவில்லை.

இதெல்லாம் சப்பமேட்டரு மச்சி! என்று பிளாக்கர் செவ்வகம் முணுமுணுப்பது செவியில் கேட்கிறது. என்னளவில் கணினி உருது மொழியில் கிடைத்த விவிலியம் போன்ற தோற்றத்தையே இன்னும் தருகிறது.விரைவில் தீர்வு வரும்.முக்கியக் கருத்துகளுக்கு முகம் கொடுத்து பேசுவதன் தார்மீகத்திற்காக ‘கருத்துரை’ப் பதிவை கடைபிடிக்கவேண்டும்.

இப்போது சங்கர் கூறியதைப் பற்றி.இதில் வியப்பதற்கு அதிகமில்லை என்பதனை அவரும் அறிவார்.காலகாலமாக ஒரு விஷயத்தை ஒரேமாதிரி சிந்திப்பவர்களும் அல்லது இதுவும் ஒரு மேட்டார்தான் என காண்கிறவர்களும் பபல இடங்களில் விரவிக்கிடக்கிறார்கள். பகிர்வுக் கருவியின் காலமாக இருப்பதால் இப்போது வெளித்தெரிந்து கைகுலுக்குகிறோம்.

ஆனந்த விகடனில் வருகிற அதே செய்தி குமுதத்தில் வருவதும் உயிர்மைத் தலையங்கத்தின் சாரப்பொருளே காலச்சுவடிலும் உயிரெழுத்திலும் வருவது ஒற்றர்கள் மூலம் அல்ல. சிந்தனைப் பள்ளி அமைப்புகளில் இருந்து.நீ கேளேன் என்பதை சங்கர் கருணாவிடம் இருந்து பெற்றிருக்கக்கூடும்.எஸ்-ஸில் ஆரம்பித்து ஆர்-ரில் முடிகிற நான் கூட இதே தலைப்பை பதிவுக்கு வைத்திருக்கக்கூடும்.அந்த இளமை எனக்குப் பிடிச்சிருக்கு.
ஆனால் நீங்கள் கேளுங்களேன் என்றுதான் தலைப்பு வைத்திருப்பேன்.சவட்டுப் படுவதன் அளவிலிருந்து வருவன இவையும் இவையன்னவும்.

நிச்சயம் ம்,முந்தாநாள் இரவு சன் செய்திக்கு முன் சங்கர் கஸ்தூரி தொடர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.செய்தியை உத்தேசித்து சூரியனில் நுழைவதற்குமுன் இரண்டு நிமிடங்கள் அதைப்பார்க்க நேர்ந்தது.கணவன் வரவேயில்லை கங்கா பதற ஆரம்பித்தபோது நேரம் ஒன்பது. கம்பெனி பற்றி-கண்ணில் காட்டாமலே- சித்தரிக்கப்படுகிற அளவிலே இருந்து கூட அங்கிருந்து முதலாளி இரவு பத்து மணிக்கு முன்பு கிளம்பினால் அவன் சி.ஐ.டி.யூ அல்லது ஐ.என்.டி.யூ.சி யில் சேர வேண்டிய அவகதிக்கு ஆளாகிவிடுவான்.படலக் காட்சி முறையில் கங்கா நடந்து தவிக்குறாள்.நகம் கடிக்குறாள்.

கங்காவின் அப்பா,’உனக்கு பயந்து மாப்ள கம்பெனியிலேயே தங்கிறப்போறாரும்மா’ என்று ஜோக் அடிக்கிறார். அந்தப் புள்ளியில் பேசாமல் அந்தப் பயல் இந்த ஆளையே கல்யாணம் பண்ணிக்கொண்டிருக்கலாமே என்று எனக்குத் தோன்றியது. அப்புறம் கதை நகர்கிறது.

எனக்கு என்ன தோன்றியது என்றால் ‘கங்கா சித்த நாழி தொலைக்காட்சி பார்த்தால் என்ன?’ என்று. உங்களுக்குத் தெரிய தொலைக்காட்சி பாத்திரங்கள் யாரும் தொலைக் காட்சித் தொடர் பார்க்கிறார்களா என்ன.நீங்களும் தான் சொல்லுங்களேன்.

இதைத்தான் படைப்பாளிகளின் சமகாலப் பிரக்ஞை என்பது.

5 comments:

நேசமித்ரன் said...

அண்ணே இதுதானே அது

கண்டுபிடிச்சுட்டோம்ல ....

:)

ஸ்ரீராம். said...

தொலைக் காட்சித் தொடர் பக்கமே போறதில்லைங்க....

ஜெகநாதன் said...

நீ-​கேளேன் தான் சரி! நீங்கள் ​கேளேன் என்பது அபஸ்வரம்!! ஆமா, ஒவ்வொரு ​நையாண்டிக்கும் ஒரு ராகம் இருக்குண்ணா.
எனக்கு கூட கச்சேரி பாகவதர் பாடிக்கிட்டு இருக்கும் போது சீட்டு எழுதி நீட்டணும் ஆசை. ஏதாவது ஒரு பாட்டை "வரும்ம்ம் ஆனா வராது" ராகத்தில் பாடவும் என்று.
உண்மையில் இந்த வரும் ஆனா வராது (வடிவேலு காமடி) ராகத்தை கர்நாடக சங்கீத மேளனம் சுவீஸ்கரித்துக் ​கொள்ளலாம்!

மஞ்சூர் ராசா said...

//எனக்கு என்ன தோன்றியது என்றால் ‘கங்கா சித்த நாழி தொலைக்காட்சி பார்த்தால் என்ன?’ என்று. உங்களுக்குத் தெரிய தொலைக்காட்சி பாத்திரங்கள் யாரும் தொலைக் காட்சித் தொடர் பார்க்கிறார்களா என்ன.நீங்களும் தான் சொல்லுங்களேன்.//

ஒரு நிமிடம் யோசிக்கவைத்தது.

சங்கர் said...

//எனக்கு என்ன தோன்றியது என்றால் ‘கங்கா சித்த நாழி தொலைக்காட்சி பார்த்தால் என்ன?’ என்று. உங்களுக்குத் தெரிய தொலைக்காட்சி பாத்திரங்கள் யாரும் தொலைக் காட்சித் தொடர் பார்க்கிறார்களா என்ன.நீங்களும் தான் சொல்லுங்களேன்.//

இருநூறு தொடர்களிலும், இருக்கும் இருபது நடிகர்களே வருவதால், ஏதாவது தொடரை பார்த்து, அதிலும் இவர்களே வர நேரிடலாம் என்பதால் இது போல் காட்சிகள் வரவதில்லை போலும்