Friday, February 5, 2010

துயில் குயிலாச்சுதடி

அத்த மனச் சூரியன்
எழுந்த மறுநாள்...
நக விளிம்பு காட்டி
குங்குமங் குளித்த சூரியன்
மெல்லமேலெழுந்து
தன்னிறம் மாற்றி
வட்டஞ்சுருங்கி மேலேறுகிறது.

கட்டிக் கதிரடித்து
 அம்பாரம் குவித்துக்
கோணிகள் மூடியும்
கொஞ்சும் மஞ்சளை
குனித்த கதிரிற்
காட்டும்  நெல்லுமாகப்
பின் பனிக் காலத்தின்
வயலதிகாலை.
படபடத்து இமைகள்
திறந்திறந்து மூடுகையில்
அடர் சாம்பல் இணை
வட்டங்கள்
 மயங்கி விளைந்து
குருகுகள் ஒழுங்கில்
வயலுக்கும் வானுக்கும்
தாவிப் படர்ந்து மறைகின்றன.

உள்ளுறங்கும் உன்னை
எழுப்ப நினைக்கிறேன். நீ
கனவிற் காணும் கதிரோ நிலவோ
வெப்பமும் குளிருமற்ற
ஒன்றாக
அமைந்திருக்கக்கூடுமோ என
அஞ்சி
 அப்படியே விட்டேன் உறங்க உன்னை.

மிதமிஞ்சிய இப்பகல் இறங்கும்
 மீந்திருக்கும் சூரியனை
கட்டடங்கள் மறைக்கின்றன.

No comments: