Tuesday, May 25, 2010

காப்புரிமை

பொதுவாகக் காப்புரிமை என்பது பல திறப்படும்.ஏனெனில் பணம் சம்பாதிக்கிற விவகாரங்கள் இல்லையா. இசைக் கீற்றினை பதினைந்து நொடிகள் வரை யாருடையதாவதை அப்படியே அடித்துவிடுவது எல்லாம் காப்புரிமையில் இருந்து விலக்கப்பட்டது. பிறகும் இசை முதலிய சங்கதிகளுக்கு மொழி கிடையாதாகையால் சர்வதேச அளவிலிருந்து - எட்டுத் திக்கும் சென்றும் நம் இசையமைப்பாளர்கள் நன்றி கூடச் சொல்லாமல் மண்ணில் இறக்கிவிடுவது உண்டு. இதேபோல இங்கு உருவானவற்றையும் பிறரும் அடித்துத் தேற்றுவார்கள் என நம்பலாம்.

அதேபோல திரைப் படப் பெயர்களுக்கான ஆயுள் பதினாறு ஆண்டுகள் என்பது நான் கேள்விப்பட்டது.(சரியான தகவல்கள் வரவேற்கப்படுகின்றன) நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், பொல்லாதவன், திருவிளையாடல், நினைத்தாலே இனிக்கும்... என எவ்வளவோ படங்கள் வந்துவிட்டன.

பழைய படத்தின் மரியாதையைக் கெடுக்காத படம் என்றால் ‘பில்லா’ மட்டும்தான் என்பது எனது துணிபு. பல படங்களின் பெயர்களுக்காகவும் இப்போது எடுக்கப்பட்ட விதத்துக்காகவும் திலகங்கள் இருவரும் சொர்க்கத்தில் துன்புறுவார்கள்.

இஃது இவ்விதம் இருக்கட்டும். இன்று மத்தியானம் கோடம்பாக்கத்தில் கமலாதியேட்டர் பக்கம் நண்பர் ஸ்ரீதரின் வரவுக்காகக் காத்திருந்து ஒரு மரத்தடியில் ஒதுங்கிய போது நடந்தது. நின்ற இடத்தின் அருகிலுள்ள மதில் சுவரில்‘ஆயிரத்தில் ஒருவன்’ கார்த்தியின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களைப் பார்த்தேன். நல்லவேளை அவருக்குக் கட்- அவுட் வைக்காமல் இந்த அளவில் அடக்கமாக விட்டார்களே என வியந்து மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு 55வயது அளவிடத்தக்க நபர் வந்து என்னருகில் நின்று போஸ்டர்களை முறைத்தார்.முணுமுணுத்தார்.

எனக்கு வரலாறு பிடிபட்டுவிட்டது.நண்பன் வரும் வரை பொழுதும் போகணுமே என அவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

’’ஆயிரத்தில் ஒருவன்னா அது எம்.ஜி.ஆர் மட்டும் தான்ங்கறீங்களா?”

‘’ஆமாங்க. இந்த .. யாருங்க?” என்றார்.(ஒவ்வொரு புள்ளியும் ஒவ்வொரு எழுத்து)

சென்னையில் இன்னும் அக்கினி நட்சத்திரம் வேறு முழுதாகக் கடந்திருக்கவில்லை.
‘சிவகுமாரோட பையனுங்க’ என்று சொல்லலாமா என நினைத்தவன் உடனே அமைதியாகிவிட்டேன். அவர் சிவகுமாரையும் திட்டுவார் என்னையும் திட்டுவார் எனத் தோன்றியது. அமைதி காத்தேன். அக்னி நட்சத்திரம் (இந்தப்பேரு இன்னம் காலாவதி ஆகலியா?)கடந்துவிட்டது.அமைதியாய் இருந்ததற்கு என்னை நானே மெச்சிக்கொண்டேன்.

‘காப்புரிமை’களில்தான் எத்தனை வகை?

4 comments:

manjoorraja said...

இது வித்தியாசமான காப்புரிமை.....

padma said...

பேருந்தில் தொடங்கி 'அமைதியாய் இருத்தல்' ..வேள்வி போல .பேசியிருந்தால் இன்னும் சுவாரசியமாய் இருந்திருக்கும் (எங்களுக்கு) :))

விஜய் said...

நீங்க கூறியது போல் பில்லா மட்டும் தான் பழைய பெயரை கெடுக்காத ஒன்று.

விஜய்

க. சீ. சிவக்குமார் said...

பதமா! ஏன் இந்தக் கொல வெறி?