Tuesday, April 6, 2010

ஆவீன மழை பொழிய- அங்காடித்தெரு.

சமீபத்தில் அங்காடித்தெரு படம் பார்த்தேன்.ஜவுளிக் கடையில் துணி விரித்து விற்பதும் கடைத்தெருவில் பொம்மைகள் விற்பதும் விளிம்பு நிலை வாழ்வில் சேருமா? அல்லது அதனினும் கடை கெட்ட விளிம்பு நிலைகள் பாரதத்தில் இருக்கக் கூடுமோ தெரியவில்லை. படத்தைப் பார்க்கையில் பலரது வாழ்வு விளிம்பு நிலையில்தான் இருக்கிறது.

மிக ரசித்து லயித்தும் பார்த்த இந்தப் படத்தை வள்ளுவன் சொன்னபடி,'கடிதோச்சி மெல்ல எறிவது' எப்படி என்று தெரியாமல் கொஞ்சம் திகைத்தே போகிறேன்.வெந்தும் புழுங்கியும் நெரிசலில் தவித்தும் அழகாகப் படமாக்கிய ரிச்சர்டு விட்டுவந்த பின்னும் விழியில் நிற்கிறார்.

நாயக நாயகியான லிங்கு-கனி, சவுந்தரபாண்டி- செல்வராணி, வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி என காதல் கடிதம் எழுதும் குண்டுப்பையன் பாண்டி-சோபியா,மேனேஜர் கருங்காலி, கடை முதலாளி அண்ணாச்சி என மனதில் ஒரு மாதமாவது நிற்கும் பாத்திரங்கள். பெரு நகரில் கடை நடத்த எத்தனை பேரை சரிக்கட்ட வேண்டியிருக்கிறது என்பதை ஒரு பக்கக் கணக்குத்தாள் மூன்று வினாடி குளோஸ் அப்பில் வந்துபோவது படத்தின் அருமையான இடம்.

வெய்யிலை விட வரலாற்று அறிவில் வசந்தபாலன் சில மடங்குகளாவது அதிகமாகியுள்ளார். கதை நிகழும் வட்டாரங்கள்,பெயர்கள், நடவடிக்கைகள், அசைவுகள் எனப் பலவகைகளிலும் வசந்தபாலனின் பதிவுகள் மகிழ்வையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.

அண்ணன் வேலை செய்யும் கடையின் பெயர் எழுதிய பையை தங்கை பேருந்து நிலையத்தில் ஓடிஓடிஓடி வந்து தொட்டுப் பார்ப்பதும் - அதனினும் பார்க்க அந்தப் பை அந்த சிறுமிக்குக் கிடைத்துவிடுவதும்....

அன்று நாசரேத்தில் சம்பளநாளாக இருந்தாலும் பையைச் சிறுமிக்கு பரிசளித்துவிட்டுப் போகிற அந்தத் தம்பதிக்கு அது ஒரு ஏழாம் நாளாகவும் ஓய்வு நாளாகவும் இருக்கக் கூடும்.இதை எழுதுகையில் கண்கள் பனித்து எழுதுதிரை மீது மானசீகமாக நெகிழ்வின் மழையின் கண்ணாடிப்பொட்டுக்கள்.அந்த உணர்வு வண்ணதாசனின் கதைகளில் எனக்குக் கிடைக்கிறதாக்கும்.இப்படிச் சில கவித்துவங்களும் நட்சத்திரத்தையும் கண்ணாடி மற்றும் காங்கிரீட் சுவர்களையும் ஊதாத் திரைகளையும் சாட்சிவைத்த சோகங்கள் அல்லது கண்ணாடி உடைந்து கோலத்தின் மீது காதல் சிதறும் வேகங்கள்- நம் துர்ப்பேற்றின் காலத்தின் இரக்கமற்ற பதிவுகள்.பற்பல...

விதந்து சொல்ல ஏராளம் இடம் வைத்திருக்கிற படத்தில் (என் அன்பிற்குரிய) ஜெய மோகனின் வசனங்கள் அவ்வளவு பொருந்தி இயைந்து உயிரூட்டுகிறது.இயல்பின் வழித்தடத்தில் மழைக்காலப் பெருக்குபோல ஒழுகுகிறது அது.(கனி:தங்கச்சிதான் உன்னய யாரு யாருன்னு கேட்டுக்கிட்டே இருந்தா. லிங்கு: நீ என்ன சொன்னே? கனி: சிரிச்சேன்)

வசனங்கள் வாய்களால் வளம் பெறுகின்றன. நாயகி கனியாக நடித்த அஞ்சலிப்பெண்ணை போற்றாவிடில் புதைகுழி எனக்கு நட்டுக்குத்தலாக அமைந்துவிடும் பாவத்துக்கு ஆளாவேன்.மாடிப்படிகளில் அவர் ஓடும்போது 'இந்தப் பெண் இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்றிருக்கவேண்டியவர்' என நினைத்தேன்.ஒரு பாடல் தமிழ்க் காற்றில் இந்த வருடத்தை ஆர்ஜிதம் செய்துகொண்டுவிட்டது.நா.முத்துக்குமாருக்கு இது சகஜம்தான்.படத்தின் பின்னணி இசை படத்தில் காணப்படும் கொடுமைகளை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.

நான் ஆணித்தரமாக சொல்ல நினைத்த விஷயங்கள்.ஏலச்சீட்டு போடுகிற ,மேலாளன் காயைப் பிடித்தால் கம்மென்றிருக்கிற, சமயம் கிடைத்தால் படியில் உட்கார்ந்து ஓப்பி அடிக்கிற கனி தனியாகக் கிடைத்த ஒரு கடை இரவில் லிங்குவைப் புணர்ந்தாளா இல்லியா?
( நான் அநியாயத்துக்கு மங்குனி ...மோகமுள்ளில் பாபு யமுனாவைப் போட்டானா இல்லையா என்பதிலேயே எனக்கு ஐயம்தான்)

இந்தக் காமக் கருமாந்திரத்தைப் பற்றி நமக்கு என்ன பேச்சு.டைட்டில் காட்சியில் லாரி டயரில் காட்டப்படும் ரத்தம்.நூறு பேர் மேல் ஏறினாலும் டயரில் அந்தக்கோலத்தில் ரத்தம் படியாது. ரத்தம் மைதாக் கரைசலால் உண்டானதல்ல.(இதை நிரூபிக்கும் முயற்சி அபத்தம் என்று வையுங்கள்).

படத்தின் கண்ணீர் ரத்தத்தை விட அடர்த்தியாக இருக்கிறது.சூழல்தான் வெஞ்சூழல் என்று வையுங்கள். நம் தமிழ் விதிக்கொள்கையின் காத்திரம் நம்பிக்கையைவிட அவநம்பிக்கையை அதிகம் விதைக்கிறது. (எல்லோருக்கும் கழுவக் கக்கூஸ்கள் கைவசமில்லை.)

பாத்திரங்களை ரட்சிக்கிற வாய்ப்பு கலைக்கற்பனைக்கு இருக்கிறது.( தமிழின் வெற்றிப் பட சமீப இயக்குனர்கள் பலபேர் போனஜன்மத்தில் சுடுகாட்டு வழிக்கு சங்கூதிகளாக இருந்திருக்கவேண்டும்).

அடிபட்டு ரணப்பட்டு வெளிவந்தவர்கள் வெய்யில் காட்டில் சுடுகாத்தைக் குடித்துப் படுத்திருப்பதாகக் கூட கதையை முடித்திருக்கலாம்.ஆனால் வசந்த பாலன்(பிலவ்ட்) அவர்களின் கற்பனையில் குறுக்கிட நான் யார்.

நாங்க எல்லாம் வேற மாதிரி ஆளுக பாஸூ! பொம்பளைப் புள்ளைக ஓடிப்போனா சிறுக்கியுள்ளைகளக் கால முறிச்சுப்போடுவமல்ல?

11 comments:

மணிஜி said...

அபாரம் சிவா ..அன்று வம்சி விழாவில் நிறைய பேசமுடியாமல் போனது. ஒரு முறை கூட்டமே இல்லாத(??) ஒரு டாஸ்மாக்கில் உட்காரலாமா?

பிச்சைப்பாத்திரம் said...

//அதனினும் பார்க்க அந்தப் பை அந்த சிறுமிக்குக் கிடைத்துவிடுவதும்....//


படத்தில் இந்தக் காட்சியைப் பார்க்கும் போது 'யாராவது இப்படி பையை விட்டுக் கொடுப்பார்களா?" என்று கேட்டது மனது. மிகக் குரூரமாகியிரந்த அதை 'சற்று நேரமாவது நல்லதாக கற்பனை செய்ய விடேன்' என்று கேட்டுக் கொண்டேன்.

நல்ல பதிவு.

சங்கர் said...

//நான் ஆணித்தரமாக சொல்ல நினைத்த விஷயங்கள்.ஏலச்சீட்டு போடுகிற ,மேலாளன் காயைப் பிடித்தால் கம்மென்றிருக்கிற, சமயம் கிடைத்தால் படியில் உட்கார்ந்து ஓப்பி அடிக்கிற கனி தனியாகக் கிடைத்த ஒரு கடை இரவில் லிங்குவைப் புணர்ந்தாளா இல்லியா?
( நான் அநியாயத்துக்கு மங்குனி ...மோகமுள்ளில் பாபு யமுனாவைப் போட்டானா இல்லையா என்பதிலேயே எனக்கு ஐயம்தான்)//

எனக்கு அந்த சந்தேகமே இல்ல, நடக்க வேண்டியது நடந்திடுச்சி, அப்படியே காட்டினா படத்துக்கு சர்டிபிகேட்டை மாத்திடுவாங்கன்னு பாட்டை போட்டுட்டாங்க போல

சங்கர் said...

//ஆவீன மழை பொழிய//

அப்படீனா? மாடு ஈனும்போது மழை பெய்ததா?

Ahamed irshad said...

//தமிழின் வெற்றிப் பட சமீப இயக்குனர்கள் பலபேர் போனஜன்மத்தில் சுடுகாட்டு வழிக்கு சங்கூதிகளாக இருந்திருக்கவேண்டும்.///

அப்படிபோடுங்க..........

Ken said...

:)))))))))))))))

selventhiran said...

நீ கலக்குற சித்தப்பூ!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அண்ணா..அடிக்கடி எழுதுங்க,எழுதுங்க....

manjoorraja said...

உட்கார்ந்தும் அல்லது மல்லாக்கா படுத்துக்கொண்டும், மோட்டுவளையை பார்த்துக்கொண்டும் யோசிப்பீகளோ?

Nathanjagk said...

மோகமுள் படித்தும் இப்படியெல்லாம் சந்தேகிக்கலாமா?
போட்டானா என்பதைவிட வேறு வார்த்தை போட்டிருக்கலாம். ஆணாதிக்கம் என்று யமுனாக்கள் முணுமுணுக்கக் கூடும் :))

அங்காடித்தெரு இன்னும் பார்க்கவில்லை அல்லது திவிசிடி இன்னும் கிடைக்கவில்லை. பார்த்துவிட்டு பதிவு எழுதக்கூடாது என்ற முடிவிலிருக்கிறேன்.

நானெல்லாம் ​வேறமாதிரியான ஆளு பாஸு..!

Anonymous said...

வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.