Sunday, April 25, 2010

அனவரதமும் எழில்வரம்...(1)

இது நிகழ்ந்து மூன்றாண்டுகள் ஆகியிருக்கும்.அப்பொழுதெல்லாம் எனக்கு ஒரு கார்பரேட் வங்கியில் கணக்கும் அட்டை நுழைத்துப் பெட்டியில் பணம் எடுக்கும் ரகசிய எண்ணும் கூட இருந்தன.மூன்று தொடர்கள் எழுதிக்கொண்டிருந்தேன்.அவை முடிவடையும் நேரம் இறுமாப்பும் செருக்கும் உள்ளுக்குள் கொப்பளித்துக்கொண்டிருக்கூடும். நடந்த நிகழ்ச்சிக்கு அது மட்டும் காரணமா என்றும் தெரியாது.

ரயில் பயணத்தை முதன்முதலாக பத்தொன்பதாவது வயதில் அனுபவித்த போதாமையாகக் கூட இருக்கலாம்.முதலாம் முறை ஈரோட்டிலிருந்து விசாகப்பட்டினத்துக்கு ரயில் ஏறினபோது சட்டைப் பையில் இருந்தது பத்து ரூபாய்.அதிலிருந்து மொத்த ஞாபகத்தைக் கிளறினால் ஒரு தன்வரலாற்றுப் புத்தகம் கிடைக்கும். ‘பதினெட்டு முதல் முப்பத்தெட்டு வரையிலான நான்.’

தடம் பிறழாமல் வண்டியை ஓட்டிச்செல்கிற சிரமத்தை இப்போதும் இந்நினைவு அளிக்கிறது.
அன்றைக்கு சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறினபோது இரவு தொடங்கியிருந்தது.இப்போதும் நான் பேருந்துப்பயணிதான் அன்றைக்கு ஏனோ மெனக்கெட்டு ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுத்தேன். ரயில் பயணத்தைத் தேர்வதாயின் முன்பதிவு செய்தல் நலம் என்பது புரிந்திருக்கவில்லை.(முன் பதிவுகள் செய்துவிட்டு தரைப்பலகையில் உட்கார்ந்து வர நேர்ந்தவையெல்லாம் தனித்தனிக் கதைகள்:ஊழிற் பெரு வலி யாவுள).

அன்றைக்கு சென்னை ரயில் நிலையத்துக்கு என்னை பெங்களூருக்கு வழி அனுப்ப இயக்குனர் ஸ்ரீதர் வந்திருந்தார்.முதல் குழப்பம் இங்கே தொடங்குகிறது. நீங்கள் எதிர்பார்ப்பதுபோல அது ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ ஸ்ரீதர் அல்ல.ராமேஸ்வரம் படத்தின் துணை இயக்குனர்.சினிமாவும் லௌகீகவும் ஊஞ்சலாடுகிற ஸ்ரீதர்.ரயில் கிளம்புவதற்கு சற்று முன்னதாக டிக்கெட் எடுத்து அன் ரிசர்வ்டுக்கு வந்தால் பின்பகுதிப் பெட்டியில் சுமாரான நெரிசல்.இரண்டு ஃபர்லாங்குகள் நடந்து முன் பகுதிக்குப் போனால் அங்கேயும் நெரிசல். இப்போது ரயில் விதி புலப்பட்டுவிட்டது. அன்ரிசர்வ்டுகளில் முன் பின் வித்யாசம் இல்லை.அண்ணனுக்குத் தம்பி இளைப்பில்லை காண் என்பது போல் எல்லாம் சரியாகத்தான் இருக்கும். மீண்டும் பின்னோக்கி நடந்தால் நெரிசல் கனத்த நெரிசலாக மாறிவிட்டிருந்தது.அங்கே ஏறிக்கொண்டபின் ஸ்ரீ நிம்மதியுற்றுக் கையாட்டிவிட்டு விடைபெற்றார்.

அவர் சென்றபின் கீழிறங்கி ரிசர்வ்ட் பெட்டிகளில் காலியான சீட்டுகளில் அமர முயற்சித்து ஆட்கள் வந்ததும் இடம் மாற்றப்பட்டேன்.பயணிகள் பட்டியல் படித்து ஏ-27 என்பது மாதிரி வினோத தெரிவிப்புகள் இருந்த இருக்கைகளில் அமர்ந்தேன்.(அவை ரயில் அலுவலர் அல்லது காவல் அதிகாரிகளுக்கானவை).

‘அவர் வந்தா எழுந்துக்கறேனுங்க’ என்பது மாதிரி டவுன் பஸ் தனமாக ஒரு கான்ஸ்டபிளிடம் விவாதம் செய்தேன்.ஏட்டையாவிற்குக் கீழ் உள்ள அதிகாரப் படி நிலையால் இந்தியாவில் சேதம் ஏற்படாதவகையில் தீர்வு சொல்லமுடியாது. ரயில் கூவுவதற்கு முன்னால் நான் அன்ரிசர்வ்ட் பெட்டில்தான் இருந்தேன்.நிலையத்துக்கு நிலையம் நெரிசல் அதிகரித்துக்கொண்டிருந்தது.நெருங்கித் தொற்றி இடிபட்டே பயணித்துச் சாவதற்கென்றே பிறப்பெடுத்தவர்கள் போல நூற்றவர் கூட்டம். இந்தக் கும்பலில் பாதியை ரிசர்வ் டிக்கெட் பகுதிகளில் நின்றுகொள்ளத்தான் அனுமதித்தால் என்ன என்கிற தார்மீக ஆவேசம் எனக்குள் பொங்கியது. நான் முன்னொரு காலம் பார்த்த பேருந்து நடத்துனர் வேலை அப்படி எண்ணவைத்திருக்கலாம்.

ஒருசாரார் அலட்டலின்றி அமர்ந்துவருவதும் மற்றோர் பகுதி(ஏறக்குறைய அதற்கிணையான கூட்டம் ஓரிரு பெட்டிகளில்) செமித்த தவிட்டு மூட்டையாய் வருவதும் எனது சமதர்மக் கோபத்தைக் கிளறியது. காரியங்களை எளிமையாகச் சிந்தித்தேன். ரயில் சங்கிலியைப் பிடித்து இழுப்பது.அதைத் தொடர்ந்த விசாரணையில் ‘இப்படி இப்படி நான் ஒரு எழுத்தாளனாக்கும். நான் சொல்றேன் ரயில்களில் அன் ரிசர்வ்ட் பெட்டிகளை அதிகப்படுத்துங்கள்’ எனத் தெரிவிப்பது. அப்படித் தெரிவித்தால் இந்த இரண்டு பிறைக்காலத்துக்குள் விடிவு வந்துவிடும். இப்படி எனது எண்ண ஓட்டத்தின் சுதாவான போக்குக்கு ஏற்ப அன்றைக்கு மத்திய ரயிலமைச்சராக ‘லாலு பிரசாத் யாதவ்’ இருந்து தொலைத்தார்.
கறவைகள் பின்சென்று காணம் பெய்து உண்கின்ற நம்மவர்தானே என்று தன்னம்பிக்கை பீறிட்டது. அபாயச் சங்கிலி அருகில் சென்றேன். அதைப்பிடித்து இழுத்தேன். அது எண்ணிய அளவு சுலபமாக இருக்கவில்லை. பலத்தைப் பிரயோகித்து கண்களை மூடி அதை சாய்திசையில் இழுத்தேன். வாழ்வில் அதுவரை கேட்டிராத வினோத ஒலி கேட்டது. திட்டமிடாமல் ரயில் நிற்கும் சத்தம் அது.

ரயில் சங்கிலியை இதுவரை ஒரு தமிழ் எழுத்தாளர் இழுத்ததில்லை என்கிற கலி என்னால் தீர்ந்தது. - இப்போது ஒரு விளம்பர இடைவேளை .ரயில் நிற்கிறது.

7 comments:

கண்ணா.. said...

இதுதான் அந்த ரயில் கதையா?

:))

விளம்பர இடைவேளை எப்போது முடியும்???

திருநாவுக்கரசு பழனிசாமி said...

ரயில் இப்போதான் வேகமெடுத்துச்சு, அதுக்குள்ள சங்கிலிய இழுத்துட்டீங்களே அண்ணே...

Anonymous said...

yappa kiragam vittathu innayoda

நேசமித்ரன் said...

ஆஹா இந்த சாகசமும் நடந்திருக்கா ?
:)

வழக்கம் போல் மொழி தெண்டனிட்டு
நெற்றி மண்பட வைக்கிறது அண்ணே


அனானிக்கு...

உங்களை யாரும் பிடித்துக் கொண்டிருக்கவில்லை

ஒட்டடைக் கொம்பின் அளவில் பாதியேனும் முதுகெலும்பில்
விரைப்பு இருக்குமெனில் பெயரோடு
வாருங்கள்

ஒருவரை விமர்சிக்கும்முன் முழுதாக வாசித்துவிட்டு விமர்சியுங்கள்

நீங்கள் கிளர்த்திப் பார்க்க விரும்பும் கோபத்திற்கு நீங்கள் தகுதி உடையவராக தெரியவில்லை

உங்களுக்கு என் வருத்தங்கள் ஒரு வாசகனாக

க. சீ. சிவக்குமார் said...

அன்பு நேசமித்ரன் - அனாமிகா மீது நீங்கள் இவ்வளவு காட்டம் பூணத் தேவையில்லை. அவரது தொனியின் உள் சரடை நீங்கள் கவனிக்கவில்லையா.
ரொம்ப நெருங்கிய எதோ ஒருவர்தான் பூச்சா காட்டுகிறார் என நினைக்கிறேன். அப்படியே இல்லாவிட்டாலும் ‘பேதமை ஒன்றோ பெருங்கிழமை’ என்ற குறள் இருக்கிறது படித்துப்பாருங்கள்.
உங்கள் கவிதை பற்றி ஜகன் எழுதியிருந்தது ரொம்பப் பிரமாதமாக இருந்தது. எனக்கு அவனைப்போல சொல்லத் தெரியவில்லை - சிவா

Indian said...

சூப்பர்.
இத போன வாரம் போட்டிருந்தா எவ்ளோ அம்சமா இருந்திருக்கும்?

இளமுருகன் said...

//ரயில் சங்கிலியை இதுவரை ஒரு தமிழ் எழுத்தாளர் இழுத்ததில்லை என்கிற கலி என்னால் தீர்ந்தது//

இப்படி ஒரு கலியா? ஹா ஹா

இளமுருகன்
நைஜீரியா