Friday, April 30, 2010

வசந்த சேனையைப் பார்த்ததுவரை.

ஆதிரனின் பதிவில் தனது ஆரம்ப கால சினிமா நினைவுகளில் இருந்து கிளர்ந்து சமகால அதிருப்தி வரை வந்திருந்தார். எனது சினிமா நினைவுகளும் ஏறக்குறைய அவரது காலத்திலிருந்தே ஆரம்பிக்கிறது.

சினிமா நினைவுகள் தியேட்டர்களின் உச்சியில் கூம்புகட்டிக் கூவுகின்றன. விநாயகனே வினை தீர்ப்பவனே என்கிற சீர்காழி... அல்லது மருதமலை மாமணியே முருகையா என்று மதுரை சோமு பாடுகிறாரென்றால் டிக்கெட் கொடுக்கப்போகிறார்கள் என்கிற கிராமியப் பண்பாடு கலந்தது வாழ்க்கைமுறை.மூலனூர் சௌந்திராம்பிகை தியேட்டரில் ஆரம்பிக்கிறது திரைவாழ்க்கை.(மணல் தரை வாழ்க்கையின் மகத்துவங்கள் தனி. அது முருகன் திரையரங்கத்தில்.)

சவாரி வண்டியும் மொட்டை வண்டியும் கட்டிக்கொண்டு போய் படம்பார்த்த வம்சம் எங்களுடையது. தேவரின் திருவருள் முதல்படமாக மனதில் பதிந்த நினைவு. படத்தலைப்பில் வருகிற தேவர் முருக பக்தரும் மிருக பக்தருமான தேவரா அல்லது முப்பத்துமுக்கோடியா என்பது உங்கள் வாய்ப்புக்கு விடப்படுகிறது.கந்தன் காலடியை வணங்கினால் ... பாடல் இந்தப்படத்தில் என்பது நினைவு.

கத்தி எடுத்துச் சண்டை போடுவதிலும் சுருட்டை முடியிலும் மயங்கி சிலகாலம் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் வித்யாசம் தெரியாமல் இருந்தது. எல்லாமே எம்.ஜி.ஆராக என் அத்வைதத்தில் தெரிந்தது. பாசமலருக்குப் பிறகு பளிச் வித்யாசம் புலப்படும் முன்னமே எனக்கு ஊரில் ‘இரட்டை இலை’ என்கிற பட்டப்பெயர் கிடைத்தது.

இரண்டாவது படிக்கும்போது 77 எலக்சனில் எம்.ஜி.ஆருக்கு நான் கார் ஏறிப்போய் மைக்கில் ஓட்டுக்கேட்ட இடங்கள் பத்துக்குமேல். கோழி திருடியது உட்பட சர்க்காரியா காலத்தில் கருணாநிதி மேல் போடப்பட்ட நூற்றுச்சொச்சம் வழக்குகளில் ஐம்பதுக்கு மேல் அப்போது எனக்கு மனப்பாடம்.அதை மூச்சுவிட்டும் விடாமலும் ஒப்பிப்பேன்.

இப்போது ஞாபக சக்தி போய்விட்டது. ஊழலில்லாத பத்துத் திட்டங்களைப் பட்டிலிட்டுக்கொண்டிருக்கிறேன் இப்போது. எம்.ஜி.ஆர் என்னை தத்து எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தை 1980-இல் மூகாம்பிகை கருணையால் முடியிழையில் இழந்தேன். பாருங்கள் சினிமா பற்றிப் பேசினால் இதே தொல்லைதான். வண்டி திசை மாறிப்போகிறது.கரூர்,வெள்ளகோவில்,சின்னதாராபுரம் ஆகியன படம் பார்க்கும் இதர இடங்களாக அப்போது இருந்தன.

டீன் ஏஜில் அடியெடுத்துவைக்கும் போது இந்த இடங்கள் தவிர்த்து முதலாவதாக வேறு இடத்தில் ஒரு படம்பார்த்தேன். மனோகரா. இரண்டாவது ஆட்டம் .தாராபுரம் விசாலாட்சி தியேட்டர். எங்கள் பஸ் கண்டக்டர் கூப்பிட்டார் என்று பஸ் ஏறி கல்யாணத்துக்குப் போய்விட்டு என்ன செய்வது எனத் தெரியாமல் போன படம் அது.

அறுபதுகளுக்கு முன்னால் வந்த படத்துக்கு எண்பதுகளிலும் சீட்டுக்குத் தள்ளுமுள்ளு. கவுன்ட்டரில் எனது ஒரு செருப்பு காலில் இருந்து நழுவிப்போயிற்று. இடைவேளை வரை ஒற்றைச் செருப்புடன் உட்கார்ந்து பெஞ்சில் அமர்ந்து படம் பார்த்தேன்.

இடைவேளையில் எதேச்சையாகத் திரும்பினால் எனது பெஞ்சுக்கு பின்னாடி ஒன்றரை மணி நேரத்துக்குப் முன்னால் தொலைந்த மிச்சச் செருப்பு. இரண்டு செருப்புகளுடன் மீதிப்படத்தைப் பார்த்தேன். வாழ்வின் அற்புதமான நிகழ் தகவுகளில் அது ஒன்று. என்ன ஆச்சரியம்... கடைசிக்காட்சிகளில் கண்ணாம்பாவின் கூச்சல் தாளமுடியாமல் இரும்புச் சங்கிலியால் தூணை அசைத்தபோது எனக்கு ஆச்சரியமே தோன்றவில்லை.

ஆச்சரியங்களின் ரூபங்கள் வேறு. அதற்குப்பின் வீட்டுச் சுவர்களில் நான் வரைந்ததெல்லாம் சினிமா தியேட்டர்கள் தான். சீட்டுகள் ,ஆட்கள்,ஆபரேட்டர் ரூம், அதிலிருந்து பாயுமொளி,திரை,காட்சி எல்லாமும் இருக்கும். நான் ஓவியனுமாகவில்லை. எனக்கு முந்தியே முட்டைக்கரைசலில் அப்பா எழுதிவைத்த சுவரெழுத்துகள் இருந்தன. ஒன்று அரசியல் சார்ந்தது. ’மாட்டுப்பெட்டியில் ஓட்டுப்போடுங்கள்.’
இன்னொன்று உயிர் சார்ந்ததாகவே இருக்கும் என நினைக்கிறேன். அவர் எழுதியிருந்த இரண்டு பெயர்கள். ‘கண்ணாம்பா, டி.ஆர்.ராஜகுமாரி.’

என்ன மாதிரிச் சேர்க்கையய்யா இது. என்கிறீர்களா? தமிழ்நாட்டில் ரேஷன் கார்டைவிட எண்ணிக்கையில் அதிகமாக கலைக்குடும்பங்கள் இருக்கின்றன. பலபேருக்கு நேரமில்லை. அவ்வளவுதான்.

5 comments:

சிநேகிதன்.. said...

//என்ன மாதிரிச் சேர்க்கையய்யா இது. என்கிறீர்களா? தமிழ்நாட்டில் ரேஷன் கார்டைவிட எண்ணிக்கையில் அதிகமாக கலைக்குடும்பங்கள் இருக்கின்றன. பலபேருக்கு நேரமில்லை. அவ்வளவுதான்.//

ultimate !!!

adhiran said...

piramaatham!

சுப. முத்துக்குமார் said...

//தமிழ்நாட்டில் ரேஷன் கார்டைவிட எண்ணிக்கையில் அதிகமாக கலைக்குடும்பங்கள் இருக்கின்றன. பலபேருக்கு நேரமில்லை. அவ்வளவுதான்.//

சிவாண்ணே, வழக்கம்போல உங்க எழுத்துக்களில் உள்ள தடையற்ற ஓட்டம் இதிலும் காணக்கிடைக்கிறது. போகிற போக்கில் சொல்லிச் சென்றது போல தோற்றம் தரும் கடைசி வாக்கியத்தின் தாக்கம், அருமை.

ஜெகநாதன் said...

நல்லநேரம்.. ம.கோ.ரா-விற்கு வாரிசாகவில்லை. எங்களுக்கு க.சீ.சி. கிடைத்தார். உங்களையெல்லாம் ​சொத்துச்சண்டைக்கு கோர்ட் ஏறுகிறமாதிரி நினைத்துப் பார்க்கமுடியவில்லை.

எந்த நம்பிக்கையில் ஒற்றைச் செருப்போடு படம் பார்த்தீர்கள் என்பது வினோதம்தான் :)

sreedharan said...

superappu..