Saturday, April 24, 2010

சத்திரம் தேடும் நட்சத்திரம்

தமிழ் மணம் அறிவித்த நட்சத்திர அறிவிப்பை நான் பார்க்கவில்லை. ஆனாலும் நம்புகிறேன். நண்பன் ஜகன் அதை உறுதிப்படுத்தியபின் அது வேறு சிவகுமாராக இருக்க வாய்ப்பில்லை. ஓடுகிற போக்கில் கருவியும் நேரமும் மனநிலையும் வாய்த்து எழுதிய இரண்டு பதிவுகளுக்கு தன் வரலாறு காணாத பின்னூட்டங்கள். அதிலும் அனானிமஸ் அதிரவைத்துவிட்டார்.செம்மொழி மாநாட்டைப் புறக்கணிப்பதற்குத் தண்டனையாக நான் மேலும் இரண்டு பிளாக்குகளுக்குள் நுழையவேணுமாய் அன்புக் கட்டளை வேறு.
‘பந்தியிலேயே இடம் இல்லை. இலை பீத்தல் என்றானாம்’ என்கிற எங்கள் வட்டாரப் பழமொழியை அவருக்கு நினைவூட்டுகிறேன். எங்கள் ஊர் சுதந்திரத்துக்கு சற்று பின்பு வரை அரவக்குறிச்சியினை பதிவாளர் அலுவலகத்துக்கெனக் கொண்டிருந்தது.(இது வேறு அனானிமஸ் விளைவித்த சந்தேகமோ...)

செவ்வக வடிவில் எழுத்துருவாய் சந்திக்கிறவர்களுக்கு எனது வாழ்க்கை (அ)முறை தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆயினும் ஒரு விளக்கம்.நட்சத்திர அறிவிப்பிற்கு ஒப்புதல் கேட்டு வந்த கடிதத்துக்கு நான் அனுப்பிய பதிலின் ஒரு கீற்றினை இங்கே பகிர விழைகிறேன்.

‘ஒளி குறைந்த நட்சத்திரங்களுக்கும் ஆகாசத்தில் இடமுண்டு என்பது உண்மையாயின் எனக்கும் நட்சத்திரமாய் இருக்கச் சம்மதமே’ என்பதாகும் அது. மரணித்துக் குள்ளனாகி இருட் பூதமாகிவிட்ட நட்சத்திரங்களின் ஒளியைக் கூட நாம் காண வாய்ப்பிருக்கிறது என்பது ‘ஒளி ஆண்டுகளின்’ பிரமாண்டம் நிர்ணயித்திருக்கிற காணியல் விதி.கருவி ரிப்பேராகாமல் கரண்டு போகாமல் அண்டைஅயலார் உரசாமல்... இப்படி எத்தனையோ நல் உற்பாதங்கள் நடந்தாலன்றி ஒரு பதிவு அரங்கேற வாய்ப்பில்லை. இவை நிற்க...

அனானிமஸ் அவர்களின் செம்மொழி உளறல் மாநாடு பற்றிய கோபத்தை உணரமுடிகிறது. அவரது வார்த்தைகளில் ’வேசிமகன்’ என்பதை பின் இழுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.(என்ன கடுமை சார் இது). எத்தனை தசைப் பகிர்வாளியாக பெண் இருப்பினும் பெற்றெடுப்பது ஒரு ஆளின் விந்தணுவுக்குத்தான்.

பின் ஊட்டங்கள் மகிழ்வளித்தன. நாளை பின் ஓட்டம் பற்றிப் பேச வாய்ப்பளிக்கப்போகிற நேசமித்ரன் மற்றும் ஆதிரன் ஆகியோருக்கு நன்றி. ஏனெனில் நியாயத்துக்கு இன்றைய பதிவு முதலில் அதுபற்றியதாக இருக்குமென்பது எனது எண்ணமாக இருந்தது.மாறிப்போய் அனானிமசின் பால் இது விழைகிறதென்றால் இது ,நட்சத்திரங்களின் இருப்பளவு கோள்களையும் மதிக்கிறது என்றே அர்த்தம்.

1 comment:

இளமுருகன் said...

தமிழ்மணம் அறிவித்த நட்சத்திர அறிவுப்புக்கு தாங்கள் முற்றிலும் தகுதி உள்ளவரே.மகிழ்ச்சி,வாழ்த்துகள்.

இளமுருகன்
நைஜீரியா