Saturday, March 20, 2010

நள்ளென் யாமம்

வலைத் தளத்தின் பெயர் பற்றி நேற்று கார்த்திகாவாசுதேவன் கேட்டிருந்தார்.(பிளாக் என்பதை வலைத் தளம் என்றும் .காம் .இன் களை வலைமனை என்றும் அறிந்துகொள்ளலாமா என்பதை ஜூனில் செம்மொழிக் குழுமர் உறுதி செய்யட்டும்)

நள்ளென் யாமம் என்பது சங்கப்பாடல்களில் அடிக்கடி ஒலிப்பது. ராத்திரியே தான்.நள்ளென்று ஒலிக்கக்கூடிய செறிவான சாமம் என்று பொருள் கொள்ளலாம்.சிள்வண்டின் ரீங்காரம், ஆந்தைகள் அலறல் உட்பட பலவற்றின் பின்துணையோடு இதைப் புரிந்துகொள்ளலாம்.நானும் 30 வயது வரை இரண்டு சுழியையே பயன் படுத்திவந்தேன்.அப்புறம் கடந்த தசாப்தத்தில் வார்த்தைப் பிரயோகப் புழக்கம் இல்லாததாலும் மூளையை மழுங்கடித்துக்கொண்டு ஆனால் கூர் தீட்டிக்கொண்டு வருவதான கற்பிதத்தில் நள்ளென் - என்பது நள்ளெண் என ஆயிற்று. இதற்கு இரவின் எட்டு ஜாமங்களின் நடு ஜாமம் என நண்பர்களுக்கு விளக்கம் கொடுத்துவந்தேன். இரவு 12 வரை விழித்திருந்தால் என்னவும் பேசலாம் என்பதன் வெளிப்பாடும் உள்ப்பாடும் இது.

தலைப்பின் தவறை தமிழினி வசந்தகுமார் ஆதிரன்.காமரின் வழியாக எனக்கு உணர்த்தினார். நான் உடனே பொள்ளாச்சி அமுதன் ஐயா அவர்களை தொலைபேசியில் விளித்து தலைப்பையும் அர்த்தத்தையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

இதற்கிடையில் இதற்கு முன்பே அரும்பாடு பட்டு ஜகப்பாடு பட்டு எனது முகப்பை வடிவமைத்த ஜகனாதனுக்கு(காலடியார் - அதாவது காலடி.காம்) நான் தெரிவித்தது ‘நள்ளெண் யாமம்’ என்றே இருந்தது.இனி இரண்டு சுழியை அவரிடம் சொல்லிச் சரி செய்யவேண்டும்.சாவிச் சொல் ஈந்து சரி செய்யவேண்டும்.

நான்வேறு மூன்று நாட்களுக்குமுன் செல்போனைத் தொலைத்துவிட்டேன்.பாஸ்வேர்டை பிளாக்கில் எழுதுகிற அளவுக்கு உலகம் மேன்மையுறவில்லை.இரண்டு பேர் ரகசியம் பேசுகிற இடத்து மூன்றாவதாயும் மூன்று பேர் ரகசியம் பேசுகிற இடத்தில் நான்காவதாகவும் அல்லா இருக்கிறார் என்று குரான் சொல்கிறது.

இதைப் படிக்க நேர்கிற சைபர் கிரைம் நுட்பர்கள் யாராவது, முகப்பில் காணும் மூணு சுழியில் ஒரு (சைபரை) சுழியை அபேஸ் செய்தார்களேயானால் அவர்களை எனது கணினி முன் அமர்ந்து தொழுவேன் என்று சிவன் ஆணையாக மெய்யாலுமே மெய்யாலுமே உங்களுக்குச் சொல்லுகிறேன். இன்ஷா அல்லாஹ்!

3 comments:

ஜீயெஸ்கே said...

//நான்வேறு மூன்று நாட்களுக்குமுன் செல்போனைத் தொலைத்துவிட்டேன்//
அதான் நான் ரெண்டு நாளா கூப்பிட்டப்ப எல்லாம் ‘கூ...கூ...கூ’-ன்னு கூப்பாடு போட்டுகிட்டே இருந்துச்சா? போனா போவுது கவலைய வுடுங்க! புது நெம்பர் வாங்கினா கொஞ்சம் மறக்காம எனக்கு மெயில் பண்ணுங்க சார்!.

KarthigaVasudevan said...

ஆஹா ...பின்னூட்டக் கேள்விக்கு பதிலை புது பதிவாவே போட்டுட்டிங்களே!நல்ல விளக்கம் . நன்றி க.சீ .

ஜெகநாதன் said...

அதுதான் ணகரம் னகரமாகி விட்டதே?
இன்னும் ஏன் பென்னாகர வாக்காளர் கணக்கா 'பத்தாதுன்னு' புலம்பிக்கிட்டிருக்கீங்க... அண்ணா??