Wednesday, July 20, 2011

நேரில் பார்த்திராத கனவன்

கனவில் முகம் தெரியாதவர்கள் வருவது இயல்பே. ஆனால் கேள்விப்பட்ட நிலையில் மட்டுமே உள்ள நபர் (அவர் தான் கனவில் வருகிறார் என்று தோன்றும் விதமாக) தோன்றித் தொடர்பு கொண்டது நேற்றைய இரவில் முதல் முறை. நேற்றைய இரவு என்று நாம் உறங்குவதனால் மட்டுமே சொல்கிறோமாயிருக்கும். அனேகமாக முன்னிரவின் கனவுகள் மறந்து விடுவதும் அதிகாலைக் கனவுகள் நினைவில் இருப்பதும் வாடிக்கை. ஒரு வகையில் இது இன்றைய கனவே.

இன்றைய கனவில் தோன்றியவர் சுகா என அறியப்படுகிற சுரேஷ் கண்ணன். மூங்கில் மூச்சு என்ற தொடரை ஆனந்த விகடனில் எழுதி வருகிறார் இவர். ஆனால் அதற்கும் முன்னரே இவரது தொடர் ஒன்றினை வார்த்தை மாத இதழில் வாசித்து வியப்புற்று யாரெனத் தேடிய போது செய்தி அறிந்தேன் திரு. நெல்லை கண்ணனின் மைந்தன் இவரென்று. இது தவிர வேறு பேச்சுத் தொடர்போ சந்திப்போ கிடையாது.

இவர் என் கனவில் என்ன பண்ணினார் என்றால் எங்கள் ஊர் நாடகக் கொட்டகை முன்னால் மைக் போட்டு ஏராளம் கூட்டத்தினர் முன் பேசிக்கொண்டிருக்கிறார். மைக் மட்டும் தானே தவிர மேடையில் இல்லை. ( இது, இப்படித்தான் பேச்சு இருக்க வேண்டும் என்கிற எனது பலகால தத்துவப் பின்புலத்தில் இருந்து விளைந்ததாக இருக்கலாம்.) சுகா விடிய விடியப் பேசுகிறார். அதனால் தமிழ் கூத்து நாடக முறைக்கேற்ற கூட்டத்தின் பாணியில் பார்வையாளர்கள் கலைந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர் அனேகமாக பழைய சினிமாப் பாடல்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அவரது  பேச்சுக்கிடையே ‘நெல்லைக் கண்ணனுக்கு’ என்ன ஆயிற்று என்கிற கேள்வி எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. கடைசியில் விடிந்து விட்டது பத்துப் பதினைந்து பார்வையாளர்களில் உன்னிப்பாகக் கவனிக்கிற ஓரிரு பார்வையாளர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். அவர் உற்சாகமாகப் பேசிக்கொண்டேயிருக்கிறார். திடீரென அவரது சால்வை பறந்து போய் ஒரு டீக்கடையின் அருகில் உள்ள மரத்தில் சிக்கிக் கொள்கிறது. நான் அதை ஏறி எடுக்கத் தொட்டுவிட்டபோது ‘’நானே எடுத்துக்கிறேனே’’ என்று சால்வையை சுகாவே எடுக்கிறார்.

அது 1980க்கு முந்தைய தோற்றமுடைய எங்கள் ஊரின் தேநீர் விடுதி. நானும் அவரும் டீ குடிக்கையில் பக்கத்தில் ஏழெட்டுப் பேர் எங்கள் பக்கத்து ஊர்க்காரர்கள். ஒருவர் படுத்த படுக்கையாய் கிடக்கிறார். எங்கள் ஊரில் பேசு முன்பே அந்தப் படுக்கையாளரிடம் சுகா ‘மகா பாரதம் பற்றி’ப் பேச ஒப்புக்கொண்டதால் அதை நிறைவேற்றிக் கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என பக்கத்து ஊர்க்காரர்கள் வற்புறுத்துகிறார்கள். கிடையாய்க்கிடக்கிறவரோ ஏறக்குறைய மரணப் படுக்கை.

செத்துக்கொண்டிருந்தவனின் காதில் திருவாசகம் ஓதுதல் என்கிற நாஞ்சில் நாடனின் வரி என் மனதுக்குள் ஓடுகிறது. அவரை எப்படி கொண்டு போகிறீர்களோ அதே மாதிரி என்னையும் கொண்டுபோனால் நான் அவரிடம் பேசுகிறேன் என்று சுகா சொன்னதும்....

முதலில் மரணக் கிடக்கையாளரை நான்கைந்து பேர் தூக்கிச் செல்கிறார்கள். அவரையடுத்து சுகாவை. என் அண்ணன் வீட்டுக்குத் தூக்கிச் செல்கிறார்கள்.
அப்புறம் கணத்திற்கும் குறைவான நேரம் இடைவெளி விட்டு சுகா மீண்டும் என்னிடம் வந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான் கனவு முடிந்தது.


சமீபத்தில் நெல்லையில் இருந்து வந்த மரணச் செய்தி இப்படிப் பாதித்துக் கனவைத் தூண்டியிருக்கலாம். ஆனாலும்.... இப்படியாக் கொண்ட கற்பனைகள் எல்லாம் எழுதும் போது ஏன் என்னைக் கைவிடுகின்றன என்பதையே யோசிக்கிறேன்.

6 comments:

கிருபாநந்தினி said...

சிவகுமார்ணே! உங்க அழகான தமிழ் நடைக்காகவே நான் தொடர்ந்து படிச்சுட்டு வரேன். தொடர்ந்து எழுதுங்ணே!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

சொக்க வைக்கும் நடை உங்களுடையது

நெல்லை கண்ணன் said...

அய்யா தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் புரியவில்லையே.அன்புடன் நெல்லைக்கண்ணன்

நெல்லை கண்ணன் said...

அய்யா மரணப் படுக்கையில் கிடப்பவரைப் போலவே என்னையும் தூக்கிச் செல்ல வேண்டும் எனது மகன் சுகா சொன்னதாக எழுதுகின்றீர்களே அது பண்பா. நெல்லைக்கண்ணனுக்கு என்ன ஆயிற்று என்று வேறு எழுதுகின்றீர்கள். ஏன்.நானும் எனது மகனும் உங்களுக்கு எதுவும் தீங்கிழைத்தோமா. புரியவில்லை திருநெல்வெலியிலெயிருந்து வ்ந்த மரணச்செய்தியின் பாதிப்பு என்று எழுதுகின்றீர்களே. நீங்கள் என் மரணத்தை வேண்டுகின்றீர்களா.வாழுகின்ற என் மகனை நாலு பேர் தூக்கிச் செல்ல வேண்டும் என்று கேட்டதாக எழுதுகின்றீர்களே. இது என்ன பண்பாடு. அன்புடன் நெல்லைகண்ணன்

அமுதா கிருஷ்ணா said...

சுகா நெல்லை கண்ணனின் மகன் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன்.தகவலுக்கு நன்றி.
நெல்லை கண்ணன் கேட்டதை போல என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை?

சுரேகா.. said...

இந்தக்கனவிலிருந்து தாங்கள் கூற விரும்பும் கருத்து?

ஒன்று சுகாவின் எழுத்தைப்பற்றி எழுதலாம்.

அவர்து தந்தையார் , நெல்லைக்கண்ணன் அய்யாவின் தமிழ்ப்புலமை பற்றி எழுதலாம்.

மரணம், திருவாசகம் என்று...குழப்புகிறீர்களே...க.சீ.!!

அடுத்தவர் மனதை பாதிக்கும் செயலை, பேசவோ எழுதவோ நினைக்காத குடும்பம் அது!

உங்களின் இந்த எழுத்தில் எனக்கு உடன்பாடோ, விருப்பமோ ஏற்படவில்லை.

தவறாகப்படுகிறது!!