Friday, January 14, 2011

என்னமோ போங்கள்!

பொங்கல் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரியப்படுத்த உத்தேசித்துத்தான் கணினியை இயக்க ஆரம்பித்தது. அதற்கு முன் இன்றைய நாளிதழ் செய்திகளை ஒருமுறை படித்துவிடலாமே என ‘தின சரி’ களின் பக்கம் பார்வையை ஓட்டியபோதுதான் செய்தியைப் பார்த்தேன்.
சபரி மலை ‘புல்லு மேடு’ வாகன விபத்து. பக்தர்கள் இல்லாத காலத்தில் ஆளரவமற்றதும் அலைவரிசை ஆம்புலன்ஸ் வசதிகளும் அற்றதும் ஆன பிரதேசமாகையால் செய்திகளின் முழு வடிவம் இன்னும் மனத்தொகுப்புக்கு வர இயலாதவாறு வெவ்வேறுவிதமான செய்திகள்.

ஒரு நாளிதழில் ஜீப் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர் பலி எனப் பார்த்ததும்  ஜீப்பில் நூறு பேரா என திகைத்தேன். பிறகு  வேறு பத்திரிக்கைகளை வாசிக்கையில் விபத்தில் பேருந்து ஒன்றும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிகிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர் பலி எனக்கண்டதும் எங்கேணும் விமான விபத்தோ என்றுதான் முதல்வினாடிச் சந்தேகம் எழுந்தது.’விமானத் தாவளம் அமைத்து தரிசிக்கப்படும் அளவில் இன்னும் மணிகண்டனுக்கு வாய்ப்புகள் கூடவில்லை. நூறு...தொண்ணூறு... நூற்றுக்கும் மேல் எனச் சொல்லப்படும் எண்ணிக்கைகள் வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. விழாக்காலங்களில் அருள்த்தலங்களில் கூடும் தமிழர் அல்லது பக்தர் எண்ணிக்கை மலைப்பை ஏற்படுத்தக்கூடியதுதான். இது குறித்து விமர்சிக்க என்ன இருக்கிறது. எதோ ஒரு சூழலில் நாமும் இப்படி நேரக்கூடியவர்கள்தான்.

இன்னும் கொஞ்சம் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகளை இரு மாநில அரசுகளும் மேற்கொள்ளவேண்டும். நேற்று ‘தமிழக அரசியல்’ இதழை வாசித்தபோது ‘பாண்டி பக்தர்களை’ (தமிழ்ச்சாமிகள்) கேரளக் காவலரும் கடை வியாபாரிகளும் நடத்துகிற விதம் பற்றிப் படித்தபோது, ‘இவ்வளவு அவமானப் பட்டு சாமி கும்பிடவேண்டுமா?’ என்றே தோன்றியது.

வருடத்தையும் வருமானத்தையும் வருங்காலத்தையும் வாபரின் நண்பன் சாஸ்தா குறைவறக் கவனித்துக்கொள்வானெனில் எளிய அவமானங்களைச் சகித்துக் கொள்ளவேண்டியதுதான். ஊரெல்லாம் சாமியாகப் பார்க்கும் ஒரு நபரை எதோ ஒரு கணம் ஒரு காக்கிச் சட்டை ‘’ஏ பாண்டிப் பட்டி!’ என விளிச்சால் என்ன மோசம் போகிறது?

டாஸ் மாக் விற்பனையைக் குறைக்கிற காரியத்தில் நான் எப்பவும் ‘கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருக்கிற’ பக்கத்தில்தான் நிற்பேன்.

வருமானம் தருகிற தளம் என்கிற அளவிலாவது சில நேர்த்திகளை ஏற்பாடு செய்து தரும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.பக்தர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டால் ‘மகர ஜோதி பார்ப்பதினும் பார்க்க வீட்டில் ஒரு மத்தாப்புக் கொளுத்துவது உத்தமம்’. என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

அதற்கும் முன் தரிசனம் என்றால் என்னவென்ற குறைந்தபட்சப் புரிதலுக்கு மனிதன் உள்ளாகவேண்டும். இதை ‘மாலைகள்’ எப்போதும் தருவதில்லை.

2 comments:

ஆர்.பி.சிங் said...

ஜனவரி 2011 உயிர் எழுத்து இதழில் உங்களின் "காட்டாறுக்கும் உண்டு கிளைநதிகள் " படித்தேன்." காட்டாற்றுக்கும் " என்றல்லவா வரவேண்டும்! உங்களின் அதிதீவிர ரசிகன் என்பதால் இதைத் தெரிவிக்கிறேன்!மற்றபடி அருமையிலும் அருமை!!

Anonymous said...

//அதற்கும் முன் தரிசனம் என்றால் என்னவென்ற குறைந்தபட்சப் புரிதலுக்கு மனிதன் உள்ளாகவேண்டும். இதை ‘மாலைகள்’ எப்போதும் தருவதில்லை.//

”மலைகளும்”
-ஜெகன்