Saturday, December 24, 2011

வியாபார உலகம்... உலக வியாபாரம்.

முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக எல்லைகளில் மக்கள் குழுமுதலும் குமுறுதலும் ஒரு பக்கம் நடந்தவாறிருக்க தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் கேரளீயர்களின் நிறுவனங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. இப்படித் தாக்கப் படுவதில் பிரச்சினை சார்ந்த உணர்ச்சி வசப்படுதல் தவிர்த்து பூர்வாங்க உளவியலும் இருக்கிறது.

எங்கிருந்தோ வந்து கண்ணாடி டெகரேட் பண்ணி கல்லாப் போட்டு உக்காந்துருக்காம் பாரு.... என்கிற தரத்திலானது அது. ( மதவெறி/ மொழி வெறி/இனவெறி/ உள்ளூர் வெறிகள் தனி - வல்லம் தாஜூபால்)

தொலைக்காட்சியில் முத்தூட் நிறுவனத்தாரின் கடைகளில் கண்ணாடிகள் உடைக்கப்படுவதை சிலநேரம் பார்த்தேன். நல்லவேளையாக ஊழியர்கள் தாக்கப்படாமல் இருந்தார்கள்: மகிழ்ச்சி.

கலவரத்தைக் காரணம் காட்டி கடையை மூடிவிட்டுப் போய்விட்டார்களேயானால் பெட்டகத்துக்குள் இருக்கும் தங்கங்கள், அவற்றை அடகு வைத்தவர்கள் கதி என்ன? என ஒரு வினாடி திக்கென்று இருந்தது.

கடைகளில் அடகு வைத்தவர்கள் இரிஞ்ஞாலக்குடாவிலிருந்தோ பந்தனம் திட்டாவிலிருந்தோ வந்து வைக்கவில்லை. தமிழர்களுக்குச் சொந்தமான ஆபரணங்கள்.

இத்தகைய செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பெரியபெரிய நகைக்கடைகளின் நிலவரம் பற்றி அறிவதற்கு ஆவல் மேலிட்டு நண்பர் ஒருவருக்கு போன்செய்தேன். என்ன இருந்தாலும் கிராமத்தில் இருந்த பொற்கொல்லர்கள் அவ்வளவு பேரையும் இருந்தஇடம் தெரியாமல் ஆக்கிய மாபெரும் புரட்சியாளர்கள் அல்லவா அவர்கள்?

‘பெரிய கடைகள் எல்லாம் நல்லா பாதுகாப்போட நடக்குது’ - என்றார் நண்பர்.

 ‘’நிறைய போலீசா?”

‘’ஆமா நெறைய போலீஸ்’’

‘’ஆக கடை ஊழியர்களுக்கும் நகைகளுக்கும் ஆபத்தில்லை...’’

‘’ நீங்க வேற சலம்பல் பண்ணினா அங்க இருக்கற செக்யூரிட்டிக பொதுமக்களைப் போட்டெறிஞ்சிருவானுங்க... போலீஸ் பாதுகாப்பு பொதுமக்களுக்குத்தான்.’’

1 comment:

meyramesh said...

சகோதரர் க சீ சிவக்குமார் அவர்களுக்கு,

நான் உங்கள் எழுத்தின் பரம ரசிகன். ஆதிமங்கலத்து விசேஷங்கள் ஜூவியில் வந்த போதும் விகடன் பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டபோதும் படித்து மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் எழுத்தில் காணக் கிடைக்கும் சமூக அக்கறையும், சமூக விமர்சனமும், தமிழை நீங்கள் கையாளும் விதமும் உங்கள் மேல் எனக்கு ஒர் ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது. உங்களை வாய்ப்பு கிடைக்கும்போது சந்திக்க விரும்புகிறேன். 'எங்கேயோ போயிருந்தேன் ஆமாவா', விகடன் தீபாவளி மலரில் எழுதியிருந்த வீதி நாடக ஏற்பாடு குறித்த கதை, மாமனாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு அவர் இறப்புக்கு வருந்துவதான கதை என்று நிறைய படித்திருக்கிறேன். தமிழ்ச் சங்க செயலாளரிடம் தங்களின் அனுபவம் குறித்த விவரணை (மோனையால் கலங்கடித்தார்) என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இன்றுதான் உங்களின் 'நள்ளெண் யாமம்' காண வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து எழுதுங்கள். நானும் பெங்களூரிலேயே இருப்பதால் பெங்களூர் குறித்த கதைகள், கட்டுரைகளை நானே எழுதிப் படிப்பது போல என்னை அதில் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது. உங்கள் தமிழ்ப் பணிக்கும் சமூகப் பணிக்கும் நன்றி. வாழ்த்துக்கள்!

ரமேஷ்குமார்.