Saturday, April 24, 2010

பித்துற்ற பத்து...

ஆடி அலைந்து அல்லது ஓடித்திரிந்து கணினி உள்ள நீற்றறைக்கு வந்து சேர்ந்ததும் முதலாவதாக எதையாவது எழுதி ஆட்டத்தைத் தொடங்குவதற்கு இரண்டு விஷயங்கள் உவப்பாக இருக்கின்றன. ஒன்று பின்னூட்டங்களைப்படித்து அதிலிருந்து பதியன் கொண்டு எழுதுதல் அல்லது மற்றவர்கள் உற்றவர்கள் மனையைப் படிப்பது.

பயணத்தின் பல தினங்களில் எழுத எண்ணிக் கொப்புளித்து உருத்திரண்டவை ஆவியாகவோ அல்லது காலாவதியாகவோ ஆகிவிட்டிருக்கும்.(போலிகளை விட காலாவதி மேல் என்று ஏதேனும் குரல் உங்கள் மனதுக்குள் கேட்கிறதா?)

அமர்ந்து, ஆதிரன்.காம் பக்கம் படிக்கப் போக எளிதானதும் ஆபத்தானதுமான சவாலை ஆதிரன் அளித்திருந்தார். பிடித்த பத்துப்பெண்களை வரிசைப் படுத்துவது.வரிசையின் எண்கள் தரவரிசை என்ற பொருள் படாது எனக் கொள்ளவேண்டும். அந்த ஏற்பாட்டை நானும் ஏற்க எத்தனித்ததனூடே நேசமிதரன் ஆதிரனுக்கு ‘ நாம அஞ்சு பேருக்குப் பின்னூட்டம் போட்டா நமக்கு அஞ்சு பேரு பின்னூட்டம் போடுவாங்க ‘ என்கிற ‘மொய்க்கு மொய்’ தொனியில் எதோ பகர்ந்திருந்ததும் அதற்கு ஆதிரனின் பதிலையும் படித்தேன்.

படித்த எல்லாவற்றுக்கும் பதில் போடுவது எளிதல்ல. அது உணர்வு சார்ந்த சங்கதி.ஆனால் சில பகிர்வுகள் அதேபோல் நாமும் ஒன்று எழுதலாமே எனத் தோன்றவைக்கின்றன. இதைப் பின் ஓட்டம் எனச் செல்லமாக அழைக்கிறேன்.பிளாக்குகளைப் படிக்கிறவர்களைப் பொறுத்த மட்டில் ‘வருந்தி அழைத்தாலும் வாராதவர் வாரார். பொருந்தியவர் போம் என்றால் போகார்’ என்ற அவ்வை வாக்கே நினைவுக்கு வருகிறது.

நேசமித்ரனை அடி அல்லது தலை நெஞ்சு எது ஒற்றியும் கவிதை எழுத முடியாதென்பதாலும்( இவ்வளவு நாட்களுக்குப் பிறகு பௌதிகம் ரசாயனம் உயிரியல் ஆகியவற்றில் பிஹெச்டி பண்ணும் திராணி இல்லாததால் அது கைவிடப்படுகிறது), ஆதிரனைப் போல ஒரு பட்டியலிட கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும் என்பதாலும் சோம்பல் கொண்டது எளிதில் வெல்லுகிறது.

இப்போது பட்டியல் - ( ஒரு பெரும் ஆசுவாசம் -இந்தப் பட்டியல் வெளிவந்த பிறகு ‘என்ன யாருன்னு நெனச்சே மைண்ட் இட்’ என்று குறுந்தகவல்கள் வராது என்பதில் உள்ள நம்பிக்கையே)

உங்க ஊர்ல கிழவிகளையும் சகோதர உறவையும் நாய்களையும் தவிர நீங்கள் யாரைத்தான் காதலிக்கவில்லை என்ற பாலசுப்பிரமணியனின் குரலை தூரத் தள்ளிவிட்டு

இனி... நோ நோ... இதற்கு முன் என்னைக் கவர்ந்த பெண்கள் பதின்மர்.

(குறுக்கீடு ; எடுத்ததும் அம்மாவைச் சொல்லாவிட்டால் ‘தாயென்னும் கோயிலைக் காக்கமறந்திட்ட பாவியடி கிளியே’ தொனியுள்ள ராஜாவின் ராகங்கள் அறுபதை யாரும் பரிசளித்துவிடுவார்களோ? என ஐயமாக இருக்கிறது. ஆனாலும் அம்மா லிஸ்டில் இல்லை. அப்படி இருந்தால் அவள் என்னுடைய அம்மா இல்லை).

1.மோகனாம்பாள் - ஒன்றாம் வகுப்பு ஆசிரியை.ஊரில் வளமான அடித்தளத்தை உருவாக்கி பலபேர் உருப்படக் காரணமாயிருந்தவர். கெட்டுப்போனவர்கள் சுய முயற்சியால் கெட்டுப் போனார்கள் என நிலைக் கண்ணாடி மீது சத்தியம்.

2. மார்ட்டினா நவரதிலோவா.

3. கே.எஸ். சித்ரா - அவரது இனிஷியல் எனக்கு வாய்த்தது காரணமல்ல. ஜிக்கி முதல் அனுராதா ஸ்ரீ ராம் ஈறாக பல்வேறு குரலின் மிசை நான் தேக்கிவைத்த நேசத்தின் புன்னகைப் பருண்மை.

4. நந்திதா தாஸ்.

5.அருந்ததி ராய்.

6.சுகந்தி டீச்சர் - காலப்போக்கில் மறந்துபோகப்பட இருப்பவரெனினும் கிணறாழத்தில் மடிந்த நேசத்தின் பேதமைக்காக.

7. பானுமதி ராமகிருஷ்ணா.

8.கே.ஆர். அம்பிகா- நாடக நடிகை.கரூர்.

9.கவுரியம்மா

10.கியூரி அம்மையார்.

பத்து என்பதற்குள் அணி நிரல் வாய்ப்புக்கான அனந்தம்(எண்களாக அடங்கி) இருப்பதால் இந்த எண்ணிக்கை மகத்துவம் பெறுகிறது என எண்ணுகிறேன். புழக்கடைக் கொல்லையில் தாவரங்கள் பூத்திருக்கக் கண்டு வேளாண்மை உணர்ந்த முதலாம் பெண்ணிலிருந்து தொட்டுத் தொடரும் இந்தப் பாரம்பரியத்தைப் பட்டியலிட சக முப்பால் பதிவர்களை அன்புடன் அழைக்கிறேன்.

5 comments:

நேசமித்ரன் said...

அண்ணே !

முதலில் நன்றி !நீண்ட பிரயத்தனங்களுக்குப் பிறகு இந்த இடுகை இட்டதற்காக

ஆதிரனின் வலைத்தளம் மற்றொருவருக்கு எப்படித்தெரியும் திரட்டிகளின் வழியாக அல்லது பின்தொடர்பு பட்டியலின் வழியாக நான் பெரும்பாலும் பின்னூட்டங்களின் வழித் தொடர்பவனாக இருக்கிறேன் என்பதாலும் அவர் பின்னூட்டமிடச் சொல்லி வைத்திருந்த வாசகத்தினாலும் அந்த கருத்து அங்கு சொல்லப் பட்டது :)

( என்னிய விடுங்கன்னு சொல்லி இருந்தேனே :))

எல்லோரும் உங்களைப் போல் குன்றின் மேலிட்ட பேரொளியா பேர் சொன்னவுடன் தெரிந்து கொள்ள ...

( நானெல்லாம் செல்வேந்திரன் சொல்லிக் கொள்வது போல சல்லிப்பய லிஸ்டுதான )

:)

நேசமித்ரன் said...

தலைப்பு அருமைண்ணே ...! சொல்ல விட்டுப் போச்சு

Unknown said...

பிடித்த பத்தை விட பித்துற்ற பத்து அருமை. எப்படியோ உங்களின் கிணறாழத்தில் மடிந்த நேசத்தின் பேதமையை உணர்ந்துகொள்ள முடிகிறது..

Nathanjagk said...

//இவ்வளவு நாட்களுக்குப் பிறகு பௌதிகம் ரசாயனம் உயிரியல் ஆகியவற்றில் பிஹெச்டி பண்ணும் திராணி இல்லாததால் அது கைவிடப்படுகிறது //
நீங்க​ரொம்ப யதார்த்தம்ண்ணே!

இளமுருகன் said...

//கெட்டுப்போனவர்கள் சுய முயற்சியால் கெட்டுப் போனார்கள் //

நல்ல நக்கல் வரிகள்

''பித்துற்ற பத்து'' நல்ல முத்திரை பதிவு.

இளமுருகன்
நைஜீரியா