Monday, November 23, 2009

புதிய பெருமை

தொலைக் காட்சி விளம்பரங்களைப் பற்றி கருத்துப் பகிர்ந்துகொண்டதன் தொடர்ச்சியாக சில பதில்உரைகள் வந்திருந்தன. பின்னும் நண்பனுடன் உரையாடிக்கொண்டிருந்ததில் நிறைய நல்ல விளம்பரங்கள் வருகின்றன என்றும் சில சகிக்க இயலா விளம்பரங்கள் வருகின்றன என்றும் பேசிக்கொண்டிருந்தோம். விரிவாக அவற்றைப்பற்றி எழுதவேண்டிய பொறுப்பை நண்பனிடம் விட்டுவிட்டேன்.

எனக்கு வந்த பதிலுரையில் போத்தீஸ் விளம்பரம் பிடிக்கவில்லை என்று வந்த மடல் நான் ஏற்கெனவே கொண்டிருந்த கருத்துக்கு ஒட்டிவந்ததால் அதைப்பற்றி மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.அந்த விளம்பரம் நொடிக்கு நொடி பிடிக்காமல் போவதற்குத்தான் வாய்ப்பு அதிகம்.

அந்த விளம்பரத்துக்கு வரலாற்று புராண நியாயம் எதாவது இருக்கிறதென்றால் இருக்கிறது.கூந்தலுக்கு மணம் உண்டா என்ற மிகப்பெரிய ஆராய்ச்சி மன்னனுக்கு வந்துவிடுகிறது. நாடாள்வதை விட்டுவிட்டு கூந்தலில் மீன் பிடிக்கிற மென்மனத்தை அவனது பெயர்தான் அவனுக்கு வழங்கியிருக்கவேண்டும்.செண்பகப்பாண்டியன்.என்ன மணமான பெயர். அந்த மணமான மனமான ஆண் அரசன் மனைவியின் கூந்தலை நுகர்ந்துவிட்டு (வாடிக்கையாளர் மாதிரி தோன்றுகிறது என்றால் முகர்ந்துவிட்டு என்று படித்துக்கொள்ளவும்), பாட்டேலே பதில் சொல்ல புலவர்களை அழைக்கிறான்.

மதுரை மாமன்னருக்கு மாபெரும் பிரச்சினையில் மாபெரும் சந்தேகம் எழுந்துள்ளது என்கிறது தண்டோரா. பரிசு அற்பசொற்பம் அல்ல. ஆயிரம் பொற்காசுகள்.

தருமிக்கு சிவன் கோஸ்ட் ரைட்டர். கடையில் சண்டை (வெம்மைதாளாது) பொற்றாமரைக்குளத்தில் நக்கீரன் விழுவது வரை போகிறது. மூன்றாம் கண் திறப்பு வரை இந்தப் பிரச்சினை போகுமென்றால் செண்பகன் மனைவிக்கு நீலிபிருங்காதி அல்லது அஸ்வினி வாங்கிக்கொடுத்திருப்பான். போத்தீஸ் விளம்பரத்தில் மதுரை என்றதும் மதலில் எனக்கு தோன்றியது செண்பகப் பாண்டியின் நினைப்புதான்.

போத்தீஸுக்கும் மதுரை விளம்பர உத்தியாகத் தோன்றியதன் காரணம் கடை மதுரையில் (அடுக்கிப்பிறகு) விரிப்பதால்தான். அப்புறம் விளம்பரத்தின் பாத்திரத் தேர்வுகள். ஒரு நாற்பத்தி ஐந்து பட்டுப் புடவையைப் பார்த்ததும் (சந்தோஷமாக) கஜானா காலியாகிவிட்டதா எனக் கேட்கிற அரசன். இது சத்தியராஜ்.மதுரைக்கு வாய்க்கிற மன்னர்கள் எப்பவும் இப்படிக் கூமுட்டையாகவே இருக்கிறார்களே என வருந்தினேன். அறியப்பட்ட புல அளவில் அவர் மதுரை மன்னரோ மதுரை மண்ணரோ அல்ல. பிறகு ஆந்திர சீதா அரசி.அவருக்கு அடுக்கிய கையிலிருந்து ஒவ்வொரு புடவையாக எடுத்துத்தர சத்யராஜ் படுகிற பாட்டை நீங்கள் பார்க்கவேண்டும்.

மந்திரி எம்.எஸ்.பாஸ்கர். சரியான ஆளிடம் மந்திரியாக இருப்பதான தோற்றம் அவரது முக மிளிர்வில் இருக்கிறது. கஜானா ,மகாராணி, நாடு எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன் மன்னா! இன்னிக்கு மத்யான சாப்பாடு அம்மா மெஸ்ஸா,மாமி மெஸ்ஸா? என்பது போன்ற பாவம் அவருக்கு.அரசனும் அரசியும் இணைந்து அவர்களது ஓங்குதாங்குக்குக் குறைவில்லாத ஒரு இளவரசியை வேறு பெத்துப்போட்டுவிட்டார்கள்.

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை என்கிற வாக்கியம் அந்த அழகிய சின்னப்பெண்ணால் எனக்கு ஆழத்திலிருந்து நினைவுக்கு வந்தது.

போத்தீஸ் என்றால் எதோ மலையாளவகைப் பேர் என்று நினைக்கிறேன்.போத்து என்றால் மலையாளத்தில் என்னவென்று தெரியவேண்டும். யாரெங்ஙிலு சகாயிக்கூ!

மதுரையின் மலைமலையான பல பெருமைகளைப் பார்த்ததால் விளம்பரத்தின் மீதான கோபம் தீர்ந்து போத்தீசுக்குப் போனேன். பழைய வருத்தங்கள் பறந்தோடிப்போகட்டும் என ஹேமமாலினியைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

வஸ்தரகலா- ராணி.

வடக்கும் தெற்கும் சேர்ந்த கவலை.

11 comments:

பா.ராஜாராம் said...

:-))))))))))))))))

விஜய் said...

ஆமாம், மிக கொடுமையான விளம்பரம். சத்யராஜ், சீதா இருவரும் கொஞ்சம் கூட இயைந்து போக வில்லை. எரிச்சல் தான் வருகிறது

விஜய்

ஸ்ரீராம். said...

விளம்பரங்களில் இருவகை....பாசிடிவ்...நெகடிவ்....இது எதிர்மறையில் உங்களை எரிச்சலூட்டினாலும் அதைப் பற்றி நினைக்க வைத்து, ஒரு இடுகை இட வைத்து, நீங்கள் அங்கு போயும் ஆகி விட்டது என்பது விளம்பர நோக்கத்தின் வெற்றிதானே....!

adhiran said...

sriram is correct. that is the point of ads.!
good post siva.

நேசமித்ரன் said...

நல்ல அலசல்

செம ஃப்யூசன் இடுகை

Nathanjagk said...

விளம்பரங்களை பற்றி நிறைய எழுத ஆசை.. ரொம்ப ரசித்து உன்னிப்பாக பார்ப்பது வழக்கம்.

எப்படி என்றால் எந்தமாதிரியான வர்ணங்கள் வருகின்றன.. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பீடு செய்யும் போது இடப்பக்கம் இருப்பது கெட்டதா வலப்பக்கம் இருப்பதா நல்லதா, டிவியின் திரையில் எந்த பக்கம் நம் மூளை வேகமாக கிரகிக்கிறது (நீங்களும் உத்து பாருங்கள்.. திரையின் இடப்பக்கத்தில்தான் முக்கிய சங்கதிகள் இடம்பெறும்... முகம் தோன்றி பேசுவது, பிராண்ட் எழுத்துகள் தோன்றுவது.. இப்படி) இப்படியெல்லாம்.... டோன்ட் வொர்ரி... நான் நல்லாத்தான் இருக்கேன் - இது ஒரு ஆராய்ச்சிக்காக பண்றது (infovis).

நல்ல விளம்பரங்கள் என்றால் அது பிராண்டின் தரம் அல்லது பொருளின் விலையோடு சம்பந்தப் பட்டதாகவே இருக்கிறது. தரமான விளம்பரங்களில் அடிக்கிற நிறங்கள் வராது.. மென்மையான இசை இருக்கும்.. மைக்கை தொண்டைக்குள் வைத்துக் கொண்டு கத்த மாட்டார்கள்.. ஐயோயோ காசு போகுதே என்ற பரபரப்பில் 21இஞ்ச் திரைக்குள் மொத்த விளம்பர அறிக்கையையும் திணிக்க மாட்டார்கள்.. மூன்றாம்தர காமடி இருக்காது.. மாநில, ஜாதி, மத அடையாளம் கொண்டிருக்காது. ஒரு குட்டிக் கவிதை அல்லது சிறுகதை ஒளிந்து கொண்டிருக்கும்..!

Nathanjagk said...

எனக்கு ரொம்ப பிடித்த விளம்பரம் (அப்-போதைய நினைவில்) கோகோ-கோலா. லைப்ரயில் இருக்கும் ஆணும் பெண்ணும்... தங்கள் கைகளில் படம் வரைந்தே பானத்தை இன்னொருவருக்கு மாற்றுவது - கூடவே ஜாஸாக ஒரு அட்டகாசப் பின்னணி..! பின்நவீனத்துவ விளம்பரம்!!

நம் லலிதா ஜுவல்லரி, போத்தீஸ்காரர்களாக இருந்திருந்தால் கத்தி குவித்திருப்பார்கள்.. இதெல்லாம் ஒரு ஏடா (Ad) என்று? ரசனையை விற்க முடியாதுங்க சார்!

Nathanjagk said...

என்னோட இப்போதைய பேவரிட் - விளம்பரம் அல்ல.. விளம்பரங்களில் வருகிற ஒரு தேவதை! கிட்டத்தட்ட 10-15 விளம்பரங்களில் அத்தேவதையைப் பார்க்கலாம்.

3 ரோஸஸில் என்னன்னு சொல்லித் தொலைங்க-வில் அறிமுகமாகி அப்புறம் ஹமாம் (புதுசு), மிக்ஸி விளம்பரம் (கூட ஸ்னேகா), லலிதா ஜுவல்லரி, சாம்சங் என்று ரொம்ப பிஸி தேவதை!

என்னை கவர்ந்த விஷயம்.. பொதுவா விளம்பர உலகத்தில் ஒரு மாடலுக்கு என்று ஒரு தரம் உண்டு.. எப்படின்னா.. நீயாம்மா? உனக்கு சொட்டு நீலம் அன்ட் அழுக்கு சோப்பு, இந்த பொண்ணு ஹேர்ஆயில் + ஷாம்பு.. இந்த குச்சிப்பொண்ணு சமையல் எண்ணை & சப்பாத்தி மாவு... இந்த சிவத்த பொண்ணு சோப்பு விளம்பரம்.. இந்த இங்கிலீஷ் கண்ணு ப்ரிட்ஜ் மற்றும் கார் விற்க என்று ஒரு அலோக்கேஷன் வைத்திருப்பார்கள்.. ஆனா பாருங்க என் ஆளு இந்த தொகுப்புகள் எல்லாத்தையும் ஒரே தாவா தாவி மிக்ஸி டூ சாம்சங் மொபைல் வரைக்கும் எல்லாத்தையும் வித்துத் தள்ளுது..

பேர் தெரிஞ்சா கேட்டுச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

இதே போல் இதற்கு முன் ஒரு தேவதையை பிடித்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் இப்போ அதிகம் கண்ணில் சிக்குவதில்லை. பேர் பிரார்த்தனா.. சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் அறிமுகமான என் ப்ரிய மிக்கி மவுஸ்.. (காது கொஞ்சம் பெருசு) அப்புறம் லைன் டேட்ஸ் பேரீச்சம் பழம் கூட வித்தாங்க. இப்ப காணோம். தேவதைத்தன்மைக்கு ஆயுள் கம்மி போல!

இதுதான் என் புத்தி.. விளம்பரத்தில் ஆரம்பிச்சு தேவதையில் வந்து நிக்கிறேன் (ஜெகாயிஸம்...?????) ஸாரிங்க!

Indian said...

//3 ரோஸஸில் என்னன்னு சொல்லித் தொலைங்க-வில் அறிமுகமாகி அப்புறம் ஹமாம் (புதுசு), மிக்ஸி விளம்பரம் (கூட ஸ்னேகா), லலிதா ஜுவல்லரி, சாம்சங் என்று ரொம்ப பிஸி தேவதை! //

She is Divya Parameshwar

Nathanjagk said...

Roooooooooooooba Thanks Indian!!!
Divya... Divyaaa.... endru Kandhal Konden Dhanush mathiri aaiden!!!

Indian said...

:)