Friday, May 21, 2010

விருகை - வட பழனி

விருகம் பாக்கத்தில் இருந்து வடபழனிக்கு பேருந்து ஏறலாம் என வந்து நின்றபோது இளங்காலை நேரம்.சம்பவம் சென்னையில் எனத் தெரிவிக்கிறேன்.ஏனெனில் இதே பெயரில் வேறு ஊர்கள் எங்கேனும் இருக்கக் கூடும்.
போரூர் போகிற திசைக்கு நிற்காமல் சரியான திசைக்கு வந்து நிற்கிற அளவில் இருப்பதே எனக்கு சமீபத்திய வளர்ச்சிதான். நிறுத்தத்தில் எனக்கு வலதுபக்கம் முப்பத்தைந்து வயது அளவிடத்தக்கவாலிபர் நின்று கொண்டிருந்தார்.விரலிடுக்கின் மேலாகவும் ஆமைமுகட்டின் மேலாகவும் பாதத்தின் மேலாகவும் இரண்டு பட்டைகள் கவ்வுகிற அழகான செருப்புகள் (இதை ஒருமையில் சொன்னால் என்னவாம்?) அணிந்திருந்த அவர் கரும்பச்சையில் ஜீன்ஸ் அணிந்திருந்தார்.கறுப்பான அவர் என்னிலும் அழகானவர்.அதனாலேயே விவரமானவர் என்பதாகவும் மனப்பதிவு ஊர்ஜிக்கிறது:கர்ஜிக்கிறது. சிரைத்த முகத்தின் மேலாக படிய வாரப்பட்ட முடித்தலை.வெள்ளை அரைக்கைச் சட்டை அதில் முக்கால் அங்குலத்துக்கு ஒன்றாக வெள்ளி நீர்க்கோலக் கோடுகள்.மூன்று மில்லி மீட்டர் அகலங்கள் கொண்டவை.

முதலாவது பேருந்தின் போர்டை முழுக்கப் படிப்பதற்குள் வண்டி பக்கவாட்டுக்கு வந்துவிட ''ஏங்க இது வடபழனி போகுங்களா?'' எனக் கேட்கிறேன். ''போகாது'' எனப் பதிலளிக்கிறார்.

அடுத்த வண்டி. சொகுசு வண்டி. இருக்கைகள் ஆட்களின் வரவுக்கு இரைஞ்சுகிற நிலையில் தாடாத்தியாக இருந்தது. ஆங்கிலத்தில் ஸ்டாப்புகளின் பெயர் எழுதி அவை நகர்ந்துகொண்டிருப்பது போல பிராம்ப்டர் ஏற்பாடு உள்ளது.எனது காலத்தோடு இயற்கை விளையாடும் கண்ணாமூச்சி இம்முறையும் துல்லியமாக விளையாடுகிறது. நின்று போகிற பேருந்து மூன்றாம் கியருக்கு மாறுகிற தூரத்தில் 'வட பழனி' என்கிற சிவப்பெழுத்துகள் பேருந்தின் முகுளப்பகுதியில் ஓடுவதைப் பார்க்கிறேன்.

அருகில் உள்ள அழகனை மனதால் சடைகிறேன்.வடபழனிக்கு இந்த வண்டி போறதைச் சொல்வதற்கு இந்த ஆளுக்கென்ன கேடு? அல்லது சொகுசு பஸ்சுக்கு காசில்லாதவன் என முடிவு செய்திருக்கிறாரா? இப்படிப் பலதும் ஓடியது.

தவிர, கிரி அபார்ட்மெண்ட்ஸில் அறை வாசியும் எனக்கு ஆதிரனுக்கெல்லாம் நிழற்குடை வேந்தனாயிருக்கிற சிவராமன் 'உரையாடல்' ,பொசிசன்,பர்சப்சன் என்றெல்லாம் நள்ளிரவு வரை பேசி(அதிகம் கேட்டும்) வந்ததில்...

இந்த நபரிடம் நான் கேட்ட கேள்வி தப்பு. 'வட பழனி போற பஸ் வந்தா சொல்லுங்க!'ஞ என்று எதைப் பேச வேண்டுமோ அதை மட்டும் பேசியிருக்கவேண்டும் என்றும் தோன்றியது.

இப்போது அடுத்த வண்டி.மூன்றாம் கியரில் முகுளத்தில் வட பழனி.'மறு படியும் வண்டி போச்சே' என மனம் அங்கலாய்த்தது.இன்று நின்று செத்தான் சிவகுமார் என முடிவு செய்தேன். இப்போது ஒரு சாதாரணப் பேருந்து.பக்கத்தில் நிற்கிறவர் இரண்டாம் முறையாக இப்போது என்னிடம் பேசுகிறார். மொழிபெயர்க்கவும் மொழியவும் முடியாத அற்புதப் புன்னகையோடு சொன்னார்.
''இது போகாதுங்க."

நீண்ட நெடுமூச்சு விட்டேன். இந்தப் பேருந்து எங்கே சென்றாலும் ஏறுவது என முடிவெடுத்தேன். அவர் அந்தப் பேருந்தில் ஏறவில்லை. பலருக்கு வழி காட்ட அவர் நிற்கக் கூடும். நான் ஏறிய பேருந்து வட பழனி சென்றது. பத்து ரூபாய் நோட்டை நீட்ட நடத்துனர் ''மூணு ரூபாய் கொடுங்க'' என்றார். சரியாக காதில் வாங்கிக் கொள்ளாத நான் 'ஒரு ரூபாய் ' எடுத்துக்கொடுத்தேன்.

'உங்க கிட்ட கேட்டே இருக்க வேண்டியதில்லை' என்ற நடத்துனர் எட்டு ரூபாயை மீதியாகக் கொடுத்தார்.அவரிடம் பேசாததை இப்போது எழுதுகிறேன்,

''வானப்பிரஸ்தம் போகாமல் ஒருத்தன் வட பழனி போறானே அதே பெருசு. விடூங்க கண்டக்டர்.''

5 comments:

Nathanjagk said...

Interesting!!
How is Chennai?
Take care! Let me call in night!

நேசமித்ரன் said...

ஆஹா சென்னை வாசமா

சுவாரஸ்யமா போகுது போல

ம்ம் வாழ்த்துகள்

:)

விஜய் said...

கவிதை போட்டி செலெக்சன் நடக்குதோ ?

விஜய்

viswanathan said...

நெடு நாட்களாக இணையத்தில் வாசிப்பதுண்டு. ஆனால் படிக்கையிலே லேசான குறு நகையுடன் படிப்பதை உங்கள் இணைய தளத்தில் உணர்கிறேன் .

ஒப்பீடுகள் சரியானவை அல்ல. ஆனால் தனித்துவமான நடை.

இது எனது இரண்டாவது பின்னூட்டம் . . இணையத்தில்..

பின்னூட்டங்கள் எண்ணிக்கை எல்லாம் போங்கு. .

ny said...

புதுப்பட ரிலீஸ்..

http://3.bp.blogspot.com/_9vV1GQrxDFE/S2K9oc09k7I/AAAAAAAAAY8/ApCUcX6O5Uw/s1600-h/Ka.Si.Sivakumar.jpg

இது profile pic ஆகும் பட்சத்தில்..
பால் கணக்குகள் மாறலாம் :)