என்னென்ன மாதிரியான சூழலில் எழுதுவீர்கள்? - என்று முன்னெல்லாம் யாராகிலும் கேட்கும் போது முதலாவது எழும் உணர்வு கோபம்தான். அப்படி சுலபமாக பதில் சொல்ல முடியாத கேள்வி அது. தவிர வினவும் நபர் எழுத்தை பிற துறைகள் போலவே தொழில் நுட்ப முறையில் அணுகுகிறார் என்பதால் வருகிற எரிச்சல் ‘படைப்புக் கச்சையை’ கழட்ட ஆரம்பிக்கிறது.
எரிச்சல் கொள்ளாமல் பதில் சொல்லவேண்டுமெனில் ஆகாததல்ல. மன சாவதானமும் மறுபக்கத்தின் ஆவல் திறனும் ஒன்றிணைய வேண்டும். அவ்வளவே. இந்த அவ்வளவு அவ்வளவு எளிதில் கைகூடுவதல்ல.
கன்னிவாடி வீட்டில் பக்கத்திலிருந்து பெரியம்மா திட்டிக்கொண்டிருக்கும் போதெல்லாம் நான் எழுதியிருக்கிறேன் தெரியுமா....என்று எப்போதாகிலும் பழைய காலங்கள் நினைவில் நிரடுவது உண்டு.(ஆனால்... செத்துப்போன செவலை மாடு இருந்திருந்தால் உடைந்து போன கலயத்தில் ஒரு கலயம் பால் கறக்கும் என்கிற கதைதான் இப்போது...)
நட்பு அல்லது குடும்பம் ஆகியவற்றில் இருந்து வரும் சிறு சீறலும் இரண்டு தினத்துக்கேனும் எதையும் எழுதுதற்கு இல்லாமல் ஆக்குகிறது இப்போது. எழுதுவது இப்படி என்றால் வாசித்தல அதனினும் கஷ்டமாக இருக்கிறது. பயனற்ற வேலையை - பொருள் ஈட்டி உன்னை நிறுவாத இந்த மடத்தனத்தை -இன்னும் ஏன் கண்கொண்டிருக்கிறாய் என்கிற குரல்கள் பக்கவாட்டில் டீட்டிஹெச்சில் ஒலிக்கின்றன. இவை அகம் சார்ந்தவை.
புறத்தின் காரணிகள் காற்றின் ஈரப்பதத்திலிருந்து தொடங்கிகின்றன. கணினிக்கு வந்த பின் முதல் தடை , மின் தடையில் இருந்தே தொடங்குகிறது. முன்பு பெங்களூரில் வசித்து எழுதிவந்தபோது ‘அழகி’(தமிழ் எழுத்துருங்க)யைப் பயன் படுத்தி எழுதிவந்தேன். ஒலியியல் முறையில் எழுத்தடிக்கும் முறை நமக்குக் கிடைத்தது ஒருங்கே வரப்பிரசாதமும் சாபப் பிரசாதமுமே ஆகும்.கிராமத்துக்கு வந்து ஒரு அரைக்கால் வேக வில்நெட் இணைப்புடன் கணினிப்பெட்டி வந்ததும் என்.எச்.எம் மின் பதிவிறக்கம் அழகி இல்லாத குறையைக் களைந்தது.
அது தந்த உத்வேகத்தாலும் ஏற்கனவே நன்றியுரைக்கப்பட்டவர்களின் துணையாலும் என் வலைப்பூப் பயணம் களைப்பின்றித் தொடர்கிறது. தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவராக தெரிய நேர்ந்த போது அந்நாட்களில் பதிவு ஏதும் போடாத போது சிலர் என்னை ,‘கம்பராமாயணத்து இலங்கை வேந்தனாக’ கதிகலங்க வைத்தார்கள். காரும் மடிக்கணினியும் இருந்தால் தொடர் பதிவு ஒரு சோப்புப் போடும் ஸ்டைலில் சகஜம்தான். வீடு வாசலற்று அலையும் போது blog என்ன பிளாக். ஒரே black தான்.
இப்போதும் ‘புதுத் தொடுவான ஊடக’த்தின் செயலி கருவிகளில் இல்லாது போய்விட்டால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறேன். மதராசப் பட்டனம் படத்திற்கு அவ்வளவு சிறிய பதிவு போட்டதெல்லாம் அதுமாதிரிக் காரணத்தினால்தான். அப்புறம்... ஆட்டோமாட்டிக்காக இதுக்கு இவ்வளவு போதும் என்கிற மனப்பான்மை வந்துவிடும்.( என் கிருபை உனக்குப் போதும்..)
சமீபத்தில் எனது அபிமானத்திற்கினிய இந்த என்.எச்.எம் மை தமிழ் கூறுகெட்ட நல் உலகிற்கு முறையாக வழங்குகிறேன் என்று எங்கள் கொங்கு மண்ணுக்குப் போய் புறங்கண்ட மதிப்பிற்குரிய பத்ரி என்.எச்.எம் பறந்தோடிய வேகம் கண்டு மலைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இது முறையாகப் பயன்பட்டால் எவ்வளவோ மகிழ்வேன் என்று கூறியிருக்கிறார்.ஐயாயிரம் சாவிகளை மட்டும் ஒரே இடத்தில் குவித்து வைத்துப்பாருங்கள்... அவற்றுக்கு திறவுக் காடியின் குடைவுகள் எதுவும் அவசியமிருக்கவேண்டியதில்லை. அவை பத்தாம் நிமிடம் காணாமல் போய்விடும். பழைய இரும்புக்குப் போட்டு லயன் டேட்ஸ் வாங்கிவிடுவார்கள்.
நான் என்ன நினைக்கிறேன் என்றால் கிழக்கு பதிப்பகத்தாரின் அந்த மென்பொருளை (அனேகமாக அது வட்டத்தகடு) தங்கள் இல்லத்தின் விலையுயர்ந்த டீப்பாய்கள், கண்ணாடி மேஜை ஆகியவற்றின் மீது தேநீர்க்கறை படியாமலிருக்க கோப்பை தாங்கிகளாக அவர்கள் பயன் படுத்தக்கூடும். இந்தக் கற்பனை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனது இந்த மன அமைப்பின் மீது கிழக்கு பத்ரி கோபம் கொள்ளவும் கூடும்.
நவரத்தினம் திரைப்படத்தில் ஒன்பதில் ஒரு நாயகி கிராம போன் தட்டுகளை எறிந்து வில்லன்களைத் துவம்சம் செய்வாள். அப்படி ஒரு தட்டினை பத்ரி என்மீதும் எறியட்டும்.
Friday, July 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
யப்பா நவரத்தினம் படத்தை இவ்ளோ ஞாபகம் வச்சுருக்கீங்க !
உள்ளே நெருப்பு இருக்கும் உங்களைப்போன்றவர்கள் அலுத்துக் கொண்டாலும் அது அழகிய இடுகை ஆகிவிடுகிறது
//அவை பத்தாம் நிமிடம் காணாமல் போய்விடும். பழைய இரும்புக்குப் போட்டு லயன் டேட்ஸ் வாங்கிவிடுவார்கள்//
ஐயோ ஐயோ.
பெரும் மனக்காரரே... நலமா?
தற்போதைய வாசம் சென்னையா? கன்னிவாடியா?
Post a Comment