புது இடத்துக்கு குடியேறிய முதல் நாள் இரவு வண்டி நிறுத்துமிடத்தில் பைக்கினை நிறுத்திவிட்டு இரண்டு கைகளில் இரண்டு சுமைகளை எடுத்துச்சென்றவன் ஹெல்மெட்டை கீழேயே விட்டுவிட்டு முதலாவது மாடியிலுள்ள வீட்டுக்குச் சென்றுவிட்டேன். ஞாபக மறதியை எனக்குத் தந்த இயற்கை மூன்று கைகளைத் தந்திருக்கவில்லை.
காலையில் தலைக் கவசம் நினைவுக்கு வந்து தலைபோகும் வேகத்தில் கீழே வந்து பார்த்தபோது பக்கத்துவண்டியின் இருக்கைமீது அது இருந்தது. வந்த வேகத்தில் நான் அதைக் காவியதும் வேறு ஒருத்தர் ஹெல்மெட் இருந்த வண்டியை எடுத்துச்சென்றார். ஹெல்மெட்டின் கேள்விக்கு விடை தெரியாமல் நிமிடக் கணக்கில் காத்திருந்தது போலிருந்தது அவர் தோற்றம். பச்சை குத்திக்கொள்வது அல்லது சுண்டுவிரலில் முடிச்சுப் போட்டுக்கொள்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுத்தான் என்னைச் சரிக்கட்டவேண்டும் என நினைத்தேன்.
இவ்விதமாக முதல் நாள் அமைந்து இன்றுகாலை மனைவி முதல் வசனமாக , ‘’ நான் இனி உன்னை திட்ட மாட்டேன் சிவா.” என்றாள். என்றால் ...நேற்றைய இரவின் தீவிரத்தையும் (வழக்கம் போல ) என் ஆன்மா நசுக்குண்டதையும் நீங்கள் உருவகிக்கவேண்டும்.
முந்தா நாள் பிலே ஹள்ளியில் நானும் மனைவியும் ஒரு படுக்கை விற்கும் கடைக்குப் போனோம். விலை படியவில்லை. அதே நேரம் தம்பி ஒருவன், ‘’அண்ணா! நாளைக்கு நாம வேற ஒருபக்கம் போயி எடுத்துக்கலாம்.” என்றான்.
தம்பி உடையான் பகைக்கு அஞ்சான், படுக்கைக்கும் அஞ்சான் என்று மெத்தை வாங்கும் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன்.
உண்மையில் பேனா பேப்பர் வாங்குவது சிகரெட் தீப்பெட்டி வாங்குவது - இதைத் தவிர வேறு எதுவும் இயல்பாக வாங்கத் தெரியாது. அதனாலேயே தொட்டது தொன்னூறுக்கும் நண்பர்கள் துணையுடன்தான் வாங்கச் செல்வது.
நேற்று மெத்தை வாங்குவதற்காக தம்பி ரங்கசாமியுடன் ஜெய்நகர் 4 வது பிளாக் சென்றேன். கடை மூன்றாவது பிளாக்கின் விலாசத்தில் இருந்தது.அது ஒரு சர்தார்ஜி கடை என்பது அமிர்தசரஸ் பொற்கோவில் படம் மாட்டப்பட்டிருப்பதிலும் மாலை போட்ட ஒரு புகைப்படத்திலிருந்தும் தெரிகிறது.அவர் ஸ்தாபகராகவோ ஸ்தாபகருக்கும் முந்தைய ஞாபகராகவோ இருக்கக்கூடும். கல்லாவில் இருக்கும் இருவர் உரிமையாளர் தோற்றத்தில் இருந்தாலும் வேடு கட்டிய தலை இல்லாமல் இளமைத் தோற்றத்தில் இருக்கிறார்கள். கோதுமைத் திடகாத்திரம்.
முதன் முதலாக ஒரு சர்தார்ஜிகளிடம் கொள்முதல் பண்ணப் போகிறோம் என்றதும் குஷ்வந்து சிங், ஜெயில் சிங், பிஷன் சிங் பேதி,ஹர்பஜன் சிங் (அதுவும் சமீபத்திய இரண்டு செஞ்சுரிகள்) எல்லாம் நினைவுக்கு வந்தார்கள். எனக்கு நிறைவான மனநிலை உண்டானது.
விலை பேசி கூடுதலாக இரண்டு தலையணைகளுக்கு உத்தரவாதம் பெற்று மொத்தப் பணமும் முதலிலேயே கட்டி,மாலைக்குள் அனுப்பிவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு நானும் தம்பியும் விடைபெற்றோம்.டெலிவரி என்பது மாலைக்கு மேல பல பெட்டுகளை எடுத்துப்போட்டுக் கொண்டு சப்ளை செய்வார்கள் என்கிற புரிதல் இருந்ததால் இரவு 7 மணி வாக்கில் அனுப்பிவைக்கும் படி கடைக்காரரிடம் சொல்லிக்கொண்டு வந்தேன். ( எப்போதும் பிறரை முன்னிட்டு நாம் சிந்திக்கிற வேலையை நிறுத்திக்கொள்ளவேண்டும்)
மாலை ஆறு மணிக்கு முதலாவது நினைவூட்டும் போனை கடைக்குச் செய்தபோது எட்டு எட்டரைக்கு மெத்தை வரும் என்றார்கள். போன் போடும் பொறுப்பை என் மனைவிடம் விட்டுவிட்டேன். எனக்கு லைன் கிடைப்பதில்லை என்பது ஒரு புறம் இருக்க பேச்சு மொழியில் எனது அறுமொழி அறிவும் எதிர்ப்பலன்களை விளைவிக்க வல்லன.
எட்டரை என்பது ஏற்புடையதே என்றேன் நான். நகரின் அகலம் மக்கட் தொகைப் பெருக்கம் வாகன ஏற்பாடுகள் நெரிசல் இவை பற்றிய புரிதல் நமக்கு உண்டுதானே.
மணி எட்டே முக்காலுக்குள் எனக்கு முதலாம் ‘துயில் நீக்கி’ முடிந்துவிட்டது. ( துயில் நீக்கி என்றால் பள்ளி எழுச்சியின் எதிர்.) உருப்படியாக ஒரு பொருள் வாங்கியதுண்டா, எதுக்குப் பாத்தாலும் எவனையாவது துணைக்குக் கூட்டிப் போவேண்டியது.... சொந்தமா ஒரு காரியமுமே பண்ணத் தெரியாதா.... என்று கடிதலின் நீட்சி ‘இனியும் நாம் வாழ வேண்டுமா? - என்கிற (அடிக்கடி தோன்றுகிற) உணர்வு நிலைக்குக் கொண்டு தள்ளியது. நாலில் விளையாதது நாற்பதில் விளையாதல்லவா.
ஒன்பது மணிக்கு மனைவி கடைக்குப் போன் செய்தார். ஆங்கில விசாரிப்புக்கு ஹிந்தியில் பதில். நாளைக்குத் தருகிறோம் என்பதான பதில்.(கல்... கல்... என்கிறார்கள் போல. நல்லாப் போட்டீங்கப்பா கல்லை. ஒருத்தன் படுக்கைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வந்து உயிர் நிலையாமை பத்தி யோசித்துக்கொண்டிருக்கிறான்.)
‘’ஒன்லி இங்க்லீஷ் ஆர் கன்னடா... டோண்ட் ஹிந்தி...” என்றார் மனைவி கோபமாக. அறிஞர் அமரர் அண்ணாவின் அமைவிடத்தில் அணையாவிளக்கு அல்பநேரம் சுடர்கூடிப் பிரகாசித்திருக்கக் கூடும் அந்நேரம். பிறகு மனைவி பேசிய பேச்சில் அடுத்த அரை மணிநேரத்தில் வீட்டுக்கு மெத்தை வந்துவிடும் என்றார்கள். மனைவி தாளித்தது நர்சிங் ஸ்டேஷன் ஆங்கிலத்தில்.சம்ஹார கடவுள்களின் கடுமை தெரியும் மொழிஅது . எனக்கு பயம் மேலிட்டு இப்போது நவ்ஜோத் சிங் சித்து நினைவுக்கு வந்தார். லாஃப்ட் சாட்டுகளில் அழகு சிக்சர் அடிக்கிற சித்துவோ ஸ்டுடியோவில் வர்ணனை புரிகிற சித்துவோ அல்ல கார்ச் சண்டையில் நடுரோட்டில் நள்ளிரவில் ஒருத்தனைப் போட்டெறிந்த சித்து.
போன் செய்துவிட்டு அடுத்த பாட்டம் துயில் நீக்கப் பாட்டு. உடனே தூங்கிவிட்டார். இருநூறு டிகிரி செல்சியசில் கொதித்துவிட்டு உடனே உறங்க பெண்களால் முடியும். நான் தூங்காமல் படிக்க ஆரம்பித்தேன். இரவு பதினொன்றே முக்காலுக்கு ஒரு போன் வந்து பலவழியாக வழி சொல்லி ஒருவழியாக மெத்தை வந்து சேர்ந்தது.
வண்டியில் வந்த இருவர் நான் மாடி என்று சைகை காட்ட மெத்தையை எடுத்துக் கீழே வைத்தனர். நான் வண்டியில் இருந்த இரண்டு தலையணைகளை எடுத்தேன். டிரைவர், ‘’ இது வேற பார்ட்டிக்கு போறது’’ என்றார்.
இரவு பன்னிரெண்டு மணிக்கு இரண்டு தலையணைகளுக்கு ஆட்கள் இருக்கிறார்களா? என வியந்தேன். பில்லில் வேறு மெத்தை ஒரு பீசஸ் என்றுதான் இருந்தது. கிரில் கேட்டில் சாய்ந்திருந்த மெத்தை உள்ளில் பாதி தெருவில் பாதியாக திரிசங்கு போலவும் சிவகுமார் போலவும் பாவப்பட்டு நின்றிருந்தது.
‘’உங்களுக்கான இரண்டு தலையணைகளை நாளை கொண்டுதருகிறேன் ‘’ என்றார் டிரைவர்.இது ஆவறதில்லை. ‘’ இந்த மெத்தையை இப்ப திருப்பி எடுத்துக்கிட்டுப் போங்க. நாங்க கட்டின காசை இப்பக் குடுங்க...” என்றார் மனைவி சாந்தி.
அடுத்த தேர்டு அம்பயராக செல்ஃபோன் வந்தது. கடையில் இருந்தவர்கள், வந்தவர்கள் மற்றும் மனைவிக்கு இடையிலான போன் ஆங்கிலம், ஹிந்தி,கன்னடம், தமிழ் என நவ சாரமாக இருந்தது.உலக மயமாக்கம் வேகத்துக்கு ஓரிரு நூற்றாண்டுகளில் பொதுமொழி அமலாகிவிடும் போலிருக்கிறது.
தலையணையை அவர்களிடம் ஒப்படைத்து விடு என்று கடையில் சொன்னார்கள்.
டிரைவர், ‘’இந்தத் தலையணைகள் விலை கூடியவை.” என்றார். ‘’இது தெரியுதல்ல இதுக்கான தலையணைகளை ஏன் எடுத்து வரலை? ‘’ என்றார் மனைவி. அப்போது அவரது கையில் சுருட்டப்பட்ட வெண் தாள் கற்றை கையில் இருந்தால் பொருத்தமாயிருக்கும். எங்கள் தரப்புக்கு செக்யூரிட்டி துணைக்கு வந்தார். அப்புறம் மெத்தையும் தலையணைகளும் மேலே வந்தன. உறங்கினோம். மெத்தை வாங்கினேன் தூக்கத்த வாங்கல... என்கிற வரி ஞாபகத்துக்கு வந்தது.
இன்று மெத்தைக் கடையில் இருந்து ஃபோன் வந்தால் விலை உயர்ந்த தலையணைகளைப் பற்றி என்ன செய்வது,சொல்வது, முடிவெடுப்பது.. மற்றும் நேற்றிரவில் கைப்பற்றிய தலையணைகளின் மெய்- யான சொந்தக்காரர்களின் தார்மீகம் ஆகியன பற்றி யோசிக்கும் போது...
பகல் தூக்கம் போச்சே!
ஹெலிகாப்டர் தவிர அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் கிடைக்குமொரு மையம் அது. தம்பி
Friday, November 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
க்ளாஸ் !
உங்களால் மட்டுமே எழுத முடிகிற எழுத்து !
இடுக்கண் வருங்கால் ...
அது சரி ஏன் மன்மோகன் சிங் ஞாபகம் வரல?
சேம் டவுட் பத்மா மேடம்.
செமயான எழுத்துங்க சார்...
//தொட்டது தொன்னூறுக்கும் நண்பர்கள் துணையுடன்தான் வாங்கச் செல்வது// :))))
// ( எப்போதும் பிறரை முன்னிட்டு நாம் சிந்திக்கிற வேலையை நிறுத்திக்கொள்ளவேண்டும்)// :)
// உருப்படியாக ஒரு பொருள் வாங்கியதுண்டா, எதுக்குப் பாத்தாலும் எவனையாவது துணைக்குக் கூட்டிப் போவேண்டியது// :)
//ஆங்கில விசாரிப்புக்கு ஹிந்தியில் பதில்.//
//ஒன்லி இங்க்லீஷ் ஆர் கன்னடா... டோண்ட் ஹிந்தி//:))))))
//சம்ஹார கடவுள்களின் கடுமை தெரியும் மொழிஅது . எனக்கு பயம் மேலிட்டு இப்போது நவ்ஜோத் சிங் சித்து நினைவுக்கு வந்தார்// :)
//உடனே தூங்கிவிட்டார். இருநூறு டிகிரி செல்சியசில் கொதித்துவிட்டு உடனே உறங்க பெண்களால் முடியும்.// :)
மொத்தத்தில் ROTFL :))))))))
//இது தெரியுதல்ல இதுக்கான தலையணைகளை ஏன் எடுத்து வரலை? ‘’ என்றார் மனைவி//
Made for each other.
Post a Comment