Tuesday, November 9, 2010

ஐராவதம்....

பெங்களூரிலிருந்து வத்தலக்குண்டு வந்துவிட்டு திரும்பவும் பெங்களூரு போகும்போது மனைவி நல்லாளையும் அழைத்துச் செல்லவேண்டிய கடப்பாட்டுக்கு ஆளாகிவிட்டேன். இப்போது கடப்பாடு என்கிற சொல்லே இக்கட்டு என்பதான தொனியை உள்ளடக்கிவிடும்.

தீபாவளி விடுமுறை முடிந்ததும் தமிழ்மக்களின் சஞ்சார விதிகள், வீதிகள் பற்றி உத்தேச அறிவு இருப்பினும் ஒரு மடப்போக்கில் முன்பதிவுக்கு முயற்சிக்காமல் விடுவிட்டேன். வதிலையிலிருந்து திண்டுக்கல் வரும்போது பேருந்து நெரிசலில் மனந்தளர்வுற்ற மனைவி வேறு ஏற்பாடு எதாவது பண்ணு! என்றாள். நண்பர் உடையார் நலிவுக்கு அஞ்சார்.

நண்பனுக்குத் தொலைபேச அவர் திண்டுக்கல்லில் பிறிதொரு நண்பரிடம் சொல்லிவைத்தார்.திண்டுக்கல் நண்பரின் அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே டிராவல் ஏஜெண்டுகளின் ஊடலும் ஊடாடலும் மிகுந்த கூடாரம் இருக்கிறது.திண்டுக்கல்லிலிருந்து பெங்களூருக்கு ரயில்கள் உண்டு என்கிற வரலாற்ர்று உண்மையை முதன்முதலாக அறிந்தேன்.ஆனால் அந்த உண்மையால் தற்கணத்தில் உபயோகமில்லை.

ஏஜெண்டுகளிடம் நட்பின் செல்வாக்கைச் செலுத்துமாறு ஜெயக்குமாரைப் பணித்தேன். கேப்பி(எ)ன்னா பரவாயில்லையா ? என்றார்.

கே.பி,என்னா தாராளமா....

கே.பி.என் அல்ல கேபின்.

தேவை நிமித்த மிசை அளபெடையில் எனக்கு கேபின் கே.பி.என்னாக கேட்டிருக்கிறது.

அதற்கு ஒப்புக்கொண்டு பதினொரு மணிக்குப் பேருந்து ஏறுகிற வரை பெண்களை முன்னால் அனுமதிப்பார்களா எனக்கிலியாக இருந்தது. டிரைவருக்குப் பின்னிருக்கையில் மட்டும் ஐந்து பயணிகள். இடது ஓரம் என் துணைவிக்கு அடுத்து நான். அதையடுத்து மூன்று தூங்குகிறவர்கள். அதிலும் வெள்ளைவேட்டி சட்டைப் பெரியவரின் முழங்கால் மூட்டும் கியர் ராடின் வெள்ளிக் குமிழும் இரண்டு அங்குல இடைவெளியிலேயே கடைசி வரை இருந்தது. எதாவது ஒரு தடவையேனும் கிளட்சை மிதித்துவிட்டு டிரைவர் பெரியவரின் முட்டியை நெம்புவார் என்றே எதிர்பார்த்தேன்.

அப்படி நடக்கவில்லை. டிரைவர் ஏழாவது சிகரெட்டைப் பிடித்து முடித்ததும் சேலத்து முகப்பு வந்திருந்தது. அங்கே தேநீர் குடிக்க எத்தனித்தார்.  கிளீனர் அடுத்து நான் சொல்ற கடையில நிறுத்து என்று விரட்டினார்.  அடுத்த கடை சேலத்தை அடுத்து வந்தது. அங்கே ஒரு காவல் வண்டி நின்று போக்குவரத்தை ஒழுங்கு செய்ய அங்கேயும் தேநீருக்கு நிற்காமல் வண்டி தர்மபுரியை நோக்கி ஓடியது. தொப்பூரில் தேநீர் நேரத்துக்குப் பின் ஓட்டுனர் மாறும் நேரத்தில் ஒரு பட்ரோல் வாகனம் வண்டியைச் சமீபித்து ஓட்டுனர  அழைத்தது. அவர் காக்கிகளிடம் உரையாடிவிட்டு வந்து டீக்குக் காசு கேக்கறாங்க என்றார்.

கிளீனர் ஒரு பத்து ரூபாயைக் குடுங்க என்றார்.

பத்து இருபது நாற்பது என்று போய் விடை கூறுதல் ஐம்பது ரூபாயில் முடிந்தது. ஐந்து அல்லது ஆறு காவலர்கள் வந்த அந்த வண்டிக்கு பத்து ரூபாய் தரச்சொன்ன கிளியை நினைத்து வியந்தேன்.

உலகம் இன்னும் தைரியத்தை முழுக்கவும் இழந்துவிடவில்லை. கேபினில் அருகில் உட்கார்ந்திருக்கிற பெண்வேறு டைட்டானிக் கப்பல் நுனியில் நிற்கிற வின்ஸ்லெட்  போலக் காட்சியளிக்கிறாள். வீர உலகு வாழ்க!

5 comments:

காமராஜ் said...

kpn இல்லயா அது. ரொம்ப நல்லா இருக்கு சிவா.

Anonymous said...

என்னாமா எழுதறீங்க!!!!!

எனக்கும் ஒரே ஒரு ‘கேபின்’ பயண அனுபவம் உண்டு.அதன்பிறகு வாழ்வில் எந்நாளும் பஸ் (முக்கியமாகத் தனியார் பஸ்) ஏறுவதில்லை என முடிவெடுத்தேன். இன்றுவரை ரயில் முன்பதிவு அல்லது அன்ரிசர்வ்ட் பெட்டிதான் கதி!

- என். சொக்கன்,
பெங்களூரு.

கென் said...

அருமைங்க :)

Pa Raghavan said...

class.

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

:-))) Superb!!!!