தலைப்பு,சேர்க்கை மற்றும் ஓசை அடிப்படையில் வேறு ஏதேனும் வாசகத்தை நினைவு படுத்தினால் நான் பொறுப்பேற்க முடியாது. நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கான சம்பளம் ஐம்பதாயிரமாக உயர்வதை வரவேற்றே இது எழுதப்படுகிறது.
பழைய ஒரு ரூபாய் நோட்டுகளில் மன்மோஹன் சிங்கின் கையெழுத்து ( h களில் இடைவெளி விட்டு ) காணக்கிடைக்கும். அவரது அறிவு தோன்றும் அதில். இன்னும் அவரது கையெழுத்து மாறியிருக்காது என்றே கருதுகிறேன். சம்பளத்தை விட ஓய்வூதியம், பயணப் படி,உபசரிப்பு அலவன்ஸ் ஆகியவை நாளது தேதிக்கும் ஸ்திதிக்கும் தக்க உயர்த்திக்கொடுக்கப்பட்டிருக்கிறது.
எத்தனை விடலைப் பையன்கள் ‘ எங்க சம்பளம் எம்.பியை விட அதிகம் எனக் கெக்கலித்திருப்பார்கள். ஒரு சட்ட மன்றத் தொகுதி தமது மையப் பிரதிநிதிக்கு மாதாந்திரம் பத்துப் பதினைந்து செலவிடுவதால் க்ஷீணித்துப்போகாது. வீழ்ச்சியின் விவர நிலைகள் வேறு ரூபங்களில் வருகின்றன. உறுப்பினர்களுக்கான சம்பளத்தை முன்னமே கூட்டியிருக்கவேண்டும்.
பரிந்துரைத்த குழு எண்பதாயிரம் வரை தரலாம் என்று சொன்னதால் ‘எண்பதைத் தா’ எனச் சிலர் கோஷமிட்டு அவையை முடக்கினார்கள்.விண்ணவப் புன்னகையுடன் சபையை அமைதி காக்க ஹஸ்த முத்திரை செய்துவிட்டு பிறகு வழக்கம் போல சபையை ஒத்திவைத்தார் மீரா குமார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் பாபு ஜகஜீவன் ராமின் மீது எனக்குப் பிரியம் மிகுகிறது. அவரும் ஜெமினி கணேசனும் வாரிசுகளுக்கு கன்னக் கதுப்பை மரபுவழியாகக் கொடுத்ததில் இன்றும் நினைவில் வாழ்கிறார்கள்.நிற்க.
எண்பதாயிரம் கோருகிறவர்கள் முந்தைய சம்பளத்தைக் காட்டிலும் சில மடங்கு எம்.பிக்கு உயர்த்துவதால் அரசு சம்பளம் பெறும் அனைவரும் உடனடியாக ஒப்புமைக் கணக்குப் போட்டு போராட்டத்துக்கு மனத்தை ஆயத்தம் செய்வார்கள் என்பதையாவது எண்ணிப்பார்க்க வேண்டும். ஆனால், அவர்கள் என்ன செய்வார்கள். இல்லத்தில் இல்லி தூர்ந்த வறுமார்புகளுடன் மனைவிகள் காத்திருக்கிறார்கள். இவர்களது இந்தக் காசில்தான் முதல் வேலையாக விறகு வாங்கிப்போய் அடுப்பில் உறங்கும் பூனையை விரட்ட வேண்டி இருக்கிறது.
இவர்களைப் பார்த்தால் சிங்க முத்து அண்ணன் (வடிவேலு புகழ்) போலத்தான் கேட்கவேண்டும்.
‘என்ன தாய்யா வேணும்?’
Saturday, August 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உஞ்ச விருத்தி செய்து கஷ்ட ஜீவனத்தில் வாழும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது சற்று ஆறுதலாக இருக்கும்
///இவர்களது இந்தக் காசில்தான் முதல் வேலையாக விறகு வாங்கிப்போய் அடுப்பில் உறங்கும் பூனையை விரட்ட வேண்டி இருக்கிறது.
////
சரியா கேட்டிங்க போங்க ! பதுக்கியது போதாது என்று இதுவேறையா .என்ன கொடுமையோ போங்க
எவ்வளவு கொடுத்தாலும் இவர்கள் அடங்க மாட்டார்கள்...
Post a Comment