Monday, August 30, 2010

தளிர் மூவர்...கொலை மூவர்.

இன்று தொலைக் காட்சியில் (பொதிகை)கேட்ட தலைப்புச்செய்தியின் அடிப்படையில் இதை எழுதுகிறேன்.சன், ஜெயா தொலைக் காட்சிகளில் இது என்ன இடத்தில் வந்ததெனத் தெரியவில்லை.

வருடம் நினைவில்லை. தி.மு.க ஆட்சியின் போதுதான் என நினைக்கிறேன்.ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு ஒன்றினால் வன்ம வசப்பட்டு கோவை வேளாண் கல்லூரி மாணவியர் மூவரை பேருந்துடன் சேர்த்து சிலர் கொளுத்தினர்.அ.தி.மு.க தொண்டர் என செய்திகளில் சொல்லப் படுகிறார்கள். அ.தி.மு.க மூடர் என்று சொல்வதற்கு செய்தி தர்மம் இடம் தராது. சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள ஊரின் பெயர் “தர்மபுரி’. கொளுத்தப்பட்ட இடம் ‘இலக்கியம் பட்டி.” எனக்கு இப்படியாக கொளுத்தினார்கள் என்றதும் அந்த ஊரின்பெயர் தீவட்டிப் பட்டி என்பதாகவே ஒரு மனத்தோணல் ஓடியது.

 கொளுத்திய சிலரில் மூவருக்கு உயர் நீதி மன்றம் மரணதண்டனை விதித்திருக்கிறது. அதை இப்போது உச்ச நீதி மன்றமும் உறுதி செய்திருக்கிறது என்பதே தலைப்புச்செய்தி.

எனது இப்போதைய நினைவில்... ‘அட... உலகம் இன்னுங் கூட இப்படி இருக்குதா?’ எனப் பதறவைத்த செய்திகளில் முதலாவது தாமிரபரணியில் 17 பேர் இறந்தது. அரசாங்கமே லத்தி எடுத்துவிட்டால் அங்கே குற்றவாளிகள் இல்லை. செய்தி கேட்ட நாளில் ஒரு தண்ணீர்த் தொட்டிக்குள் இயன்ற அளவு மூச்சுத் திணற இரண்டோ மூன்றோ முறைகள் மூச்சுத் திணற மண்டியிட்டேன். இது தற் செய்தி. நிற்க, தாமிர பரணிச்சாவுகளை விபத்தென்று முடித்துவிட்டதென நினைக்கிறேன் அரசு. அதில் யாரும் தண்டனை பெறவில்லை.

அப்புறம் மாணவிகள் எரிப்பு. பிறகு மதுரையில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் மூவர்.அந்த வழக்கு நடக்கிறதா தெரியவில்லை.

மாணவிகள் வழக்கில் இனி கொல்லப்படப் போகும் மூவரின் குடும்பங்களிலும் இளம் மாணவ மாணவியர் இருக்கக்கூடும். அவர்கள் சுமக்கப் போகும் அவமான வேதனையை நினைத்து வருத்தமாக இருக்கிறது.

தீக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள பந்தம் நெடியது. எரி தழல் கொண்டு மதுரை எரித்த சிலம்பின் நாடே இஃது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது காவலர் வாயில் சுடருந் திரவம் ஊற்றித் தீவைத்த பண்பாடெல்லாம் நமக்கு உண்டு (திருப்பூரிலா அது?).

கயவாளிகள் தொண்டர் ஆகிய மண்டர்களுக்கு நல்லது சொல்லித் தரவில்லை. அவர்களை அடி நிலையில் வைத்திருக்கவும் தலைமையர் கொழிக்கவும் சூத்திரங்கள் கண்ணியமாகக் கட்டமைக்கப் பட்டுள்ளன.

ஒன்று உறுதி... பேருந்து கொளுத்த மொத்தமாகப் போனவர்கள் மூவர் மட்டுமே அல்ல.பத்துக்கும் குறைவில்லாது போயிருந்தால்தான் அப்படியான சேதாரம் சாத்தியம். மூன்று பேர் சாவுக்கு மூன்று பேருக்கு மரணதண்டனை என்கிற நுட்பக் கணக்கு...

எளியவற்றின் நுட்பம் அளவிட முடியாததாக இருக்கிறது. அது மனச்சோர்வில் தள்ளுகிறது. நெருஞ்சி பூத்த உடைமுள்க் காட்டில் வெற்றுடம்பும் வெற்றுக் காலுமாக குளிர்க் கடும் இரவை உணர்கிறேன்.

3 comments:

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது காவலர் வாயில் சுடருந் திரவம் ஊற்றித் தீவைத்த பண்பாடெல்லாம் நமக்கு உண்டு (திருப்பூரிலா அது?)//

அண்ணா அது திருப்பூரில்தான்.
போராட்டக்காரர்களில் பத்துக்கும் மேற்பட்டவர்களை காவலர்கள் அடித்தும்,சுட்டும் கொன்று நீர் நிறைந்த (அன்று) பள்ளமொன்றில் வீசிவிட்டு தப்பியோடியவர்களின் பட்டியலில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற சம்பவம் இது.

வித்யாஷ‌ங்கர் said...

i read urs reglarly. please visit my saamakodai.blogspot.com-durai@vidyashankar

நிலாமகள் said...

தொலைக்காட்சியில் கண்ட போது எனக்கும் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களின் சந்ததி குறித்த கவலைதான்.
இறுதி வரிகளில் 'நச்' என சொல்லிவிட்டீர்கள் ... பார்க்கும் நமக்கே இப் பரிதவிப்பென்றால் அனுபவிப்பவர்களுக்கு...?!