Wednesday, January 6, 2010

சென்னைப் புத்தகக்கண்காட்சி-33

இந்த முறை கண்காட்சி மைதானத்தின் முதலாம் வரவேற்புச் செவ்வகத்தைக் கடந்ததுமே ஆனந்த அதிர்ச்சி. முதலாவது ஹோர்டிங்கிலேயே எனது புகைப் படம் இருந்தது.
வம்சி வெளியீடு சார்பான சிறுகதைத் தொகுப்புகளுக்காக வைக்கப்பட்ட அதில் நான்,பாஸ்கர் சக்தி,உதய சங்கர், எஸ்.லட்சுமணப் பெருமாள்  ஆகியோரது திருவுருவப் படங்கள்.பிற்பாடு எங்கு சுற்றியும் கவிப்பேரரசுவின் படம் கண்ணில் படாததற்கு அதுதான் காரணமென்று நினைத்துக்கொண்டேன்.

அஞ்சு ரூபாய் டிக்கெட்(இதை இளைய தலைமுறை) விற்றுக்கொண்டிருந்தார்கள். இந்தச் சுங்கம் தவிர்க்க முடியாது என்பதால் டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே போனால் வழக்கமான காட்சிகள்,கட்சிகள் அவ்வளவும் தென்பட்டன.என்ன இருந்தாலும் இது நமக்குத் திருவிழாதான்.

ஏழு ரூபாய்க் காஃபி, இடை வழிச் சந்துகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என நல்ல ஏற்பாடு. அரங்கின் பக்கவாட்டுக்கு சென்று உன்னிப்பாகப் பார்த்தவர்களுக்கே தெரியும் தண்ணீருக்கும் சேறுக்கும் ஒன்றரை அடி உயரத்தில் தாங்கள் நின்றுகொண்டும் நடந்துகொண்டும் இருக்கிறோம் என்பது.

செங்கம்பள விரிப்புகளுடன் வாசகர்களுக்கு வரவேற்பு. புத்தகங்கள் விலை அதிகம் என்பதைப் பேசுவதற்கு அறம் சார்ந்த நியாயங்கள் ஏதுமில்லை.அதுவும் என்னளவில். நான் மொத்தமாக வாங்கிய நூல்களுக்கு செலவிட்ட தொகை அரை ஆயிரத்திலும் குறைவாகும்.

காலச்சுவடு வெளியீடான ஜோ டி குரூசின் ‘கொற்கை’ நாவலை பிரேமாரேவதி வெளியிட நான் பெற்றுக்கொண்டேன்.காத்திருந்த கண்கள் அந்த முத்தைக் கவர்ந்து சென்றிருப்பினும் பின்னர் அதை மீட்டு படித்து முடித்தேவிடுவேன்.

ஜோ டி குரூஸ் எழுதித் தமிழினி வெளியிட்ட ஆழி சூழ் உலகின் கருவாட்டு வாசமும் கடல்வாசமும் உடல்வாசமும் ஏன் மூக்குப்பொடி வாசம் ஒன்றும் கூட மனதில் இருக்கிறது.

கடை திறந்த மறுநாளே நான் எழுதிய ‘உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’ சிறுகதைத் தொகுப்பு வம்சி வெளியீட்டில் விற்பனைக்கு வந்துவிட்டது. அட்டைப் படத்தில் பூனையையும், காகிதக் கட்டுக்குள் புனைவுகளையும் தேடித்தேடிக் கண்டுபிடிப்பது படிப்போர் சாமர்த்தியம்.

பாஸ்கர் சக்திக்கு அதற்குப்பிறகு நான்கு நாட்கள் கழித்து மொத்தத் தொகுப்பான ‘கனக துர்கா’ வந்தது.திருவண்ணாமலையில் ‘வம்சி’க்காக நானும் பால் நிலவனும் ரசித்து ரசித்து பிழை திருத்துதலில்(புத்தக உருவாக்கப் பொருளே கொள்ளுமின்!) ஈடுபட்ட ‘ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு’ தொழில் நுட்பக் காரணங்களால் தாமதமானது.

அடுத்து இரு நாட்களுக்குப் பின் ( தேதி நினைவில்லா மகிழ்ச்சி நிலை) உயிரெழுத்து வெளியீடாக எனது ‘நீலவானம் இல்லாத ஊரே இல்லை’ சென்னை ஃபிலிம் சேம்பரில் ஒரு முன்னிரவில் நடைபெற்றது.

உடன் முருகேச பாண்டியன்,சக்தி ஜோதி,தாணு பிச்சையா ஆகியோரது நூல்களும் வெளியாயின. எனது பத்தி எழுத்துக்களின் தொகுப்பு இந்த ‘நீலவானம் இல்லாத ஊரே இல்லை’. ஆனந்த விகடனில் என்னை அவர்கள் வேலைக்கு வைத்திருந்த நாட்களில் எழுதியது.

நீங்கள் வாங்கிப்படிக்கலாம்தான் என்றாலும் அதன் எழுத்துப் பிழைகளை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.  புத்தகத்தை புரட்டிப் பார்க்க ஆரம்பித்ததும் தோன்றிய உணர்வு, ‘வடை போச்சே’ என்கிற விதமாக இருந்தது. என் புத்தகத்தை நான் ஒரு தடவையாவது பிழை திருத்தியிருக்கவேண்டும்.

சில அத்யாயங்களில் ஆங்கில எழுத்துக்கள்  ஞிஙி ஜி என்று அச்சாகியிருந்தன. அது ஆங்கிலம் பிடிக்காமல் நான் குழந்தைக் காலத்தில் மூக்கால் அழுத மொழி போலும்.தமிழ்  ‘டி’ க்கள் ‘ழ’க்களாக தழைந்திருந்தன. வாசகர்கள் ஒரு எழுபது ரூபாய் செலவு செய்து மருந்து எடுத்துக்கொண்டால் இந்தப் பிழை கண்ணுக்குத் தெரியாது.

அப்புறம் பருவாயில்லை... புத்தகம் பருவாயில்லை பிழைகளும் பருவாயில்லை... என்று நீங்கள் ரசிக்கிற உதித்நாராயணத் தனமான பிழைகள் சில உள. பிரிண்டர்ஸ் டெவில் மாதிரி பிரிண்டர்ஸ் ஏஞ்சல்.

 ‘பரிதி புணர்ந்து படரும் விந்து’ என்கிற பிரமிளின் வரி ‘பிரதி புணர்ந்து படரும் விந்து’ என்று வந்துவிட்டது. அட... வா.மு. கோமு அளத்திக்கு நாம ஆளாகிப்போயிட்டமான்னு நெனச்சனுங்க.

ஆனால் தமிழில் யாரும் எழுதாததை நான் அந்நூலில் எழுதியிருக்கிறேன் என்பதை (அதை என்னைத் தவிர யாரும் எழுதியிருக்கவும் முடியாது) அந்நூல் வாயிலாக மெய்ப்பித்திருக்கிறேன். ரொம்பவும் தன்னடக்கமாகவே சொன்னாலும் அப்படித்தான் சொல்லவருகிறது. நச்சுத் தேர்வுக்குத் தயாராக இல்லாதவர்களும் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.

  நூல் வெளியான பிறகு  ஒரு பகல் இரு இரவுகளை வானமே பார்க்காமல் கழித்து மீண்டும் நீலவானின் விதானத்தின் கீழ் அடியெடுத்து நடந்தும் கடந்தும் இருப்பிடம் என்று சொல்லத்தக்க ஒரு இடம் வந்தடைந்தேன்.

11 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பகிர்வு.....உங்கள் புத்தகங்களை படிக்க ஆவலாக இருக்கின்றேன். விரைவில் படித்துவிட்டு தொடர்பு கொள்கிறேன்.

அன்புடன்
ஆரூரன்

க. சீ. சிவக்குமார் said...

நன்றி ஆரூரன்!

Unknown said...

நீங்கள் சென்னை செல்லும் முன் உங்களுடன் பேசியபோது கூட உங்கள் நூல் வெளியீட்டைப் பற்றி பேச்சுவாக்கில் கூட கூறவில்லை. ஒருவேளை வெளியீட்டிற்கு பின் வலைப்பூவில் அதைப் பற்றி படிக்கும் போது ர(ரு)சிக்காமல் போய்விடும் என்றே ரகசியம் காத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். ஆனால் உங்களிடம் பேசிய பிறகு அப்போதே வேறு ஒரு வலைப்பூவில் நூல் வெளியீடு பற்றிய தகவல் கிடைத்து விட்டது. நானும் உங்களது இந்த புதிய பத்தி எழுத்துக்களை படிக்க ஆவலாகவே உள்ளேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் 'குண சித்தர்களு'க்குப் பிறகு உங்கள் படைப்பு எதையும் நான் உருப்படியாக படிக்கவில்லை- விகடனில் 'குமார சம்பவம்' வெளிவந்து கொண்டிருந்தபோது கூட கூறினீர்கள்- ஆனால் என்னால் தான் படிக்க முடியாமல் போய் விட்டது. நிச்சயம் விட்டுப் போனவற்றை படித்து விடுவேன் எண்ணுகிறேன். நன்றி.

Unknown said...

நீங்கள் சென்னை செல்லும் முன் உங்களுடன் பேசியபோது கூட உங்கள் நூல் வெளியீட்டைப் பற்றி பேச்சுவாக்கில் கூட கூறவில்லை. ஒருவேளை வெளியீட்டிற்கு பின் வலைப்பூவில் அதைப் பற்றி படிக்கும் போது ர(ரு)சிக்காமல் போய்விடும் என்றே ரகசியம் காத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். ஆனால் உங்களிடம் பேசிய பிறகு அப்போதே வேறு ஒரு வலைப்பூவில் நூல் வெளியீடு பற்றிய தகவல் கிடைத்து விட்டது. நானும் உங்களது இந்த புதிய பத்தி எழுத்துக்களை படிக்க ஆவலாகவே உள்ளேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் 'குண சித்தர்களு'க்குப் பிறகு உங்கள் படைப்பு எதையும் நான் உருப்படியாக படிக்கவில்லை- விகடனில் 'குமார சம்பவம்' வெளிவந்து கொண்டிருந்தபோது கூட கூறினீர்கள்- ஆனால் என்னால் தான் படிக்க முடியாமல் போய் விட்டது. நிச்சயம் விட்டுப் போனவற்றை படித்து விடுவேன் எண்ணுகிறேன். நன்றி.

selventhiran said...

ரமேஷ் வைத்யாவை சந்தித்தீர்களா?!

கண்ணகி said...

ஆனந்தவிகடனில் நிறைய உங்களைப் படித்திருக்கிறென், வலையுலகம் வந்ததற்கு மகிழ்ச்சி சார்.,

Nathanjagk said...

புத்தகக்கண் அநேகமாக கண்ணீர் விட்டிருக்கும்.. ஆனந்தத்தில் தான்.
படைப்புகளை புத்தகமாக்கிய அனைத்து படைப்பாளிகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்!

புத்தகங்கள் வாங்கப்படவும் ​வேண்டுமல்லவா?
பிரதி புணரும் வேட்கையுள்ள வாசகர்கள் சித்திப்பார்களாக!

Unknown said...

நண்பரே ஒட்டஞ்சத்திரம் தாண்டி கன்னிவாடிக்குள் நுழையும்போது என் எழுத்தாளான் சிவகுமார் இந்த ஊரில்தான் இருக்கிறார் என்று என் நண்பனிடம் சொல்லுவேன்
அடுத்தமுறை நீங்கள் இருந்தால் சொல்லவும்.
இருந்தாலும் நீங்கள் ஈரோடு பதிவர் சங்கமத்துக்கு வருவீர்கள் என்று நாங்கள் அனைவரும் காத்திருந்தோம்
எங்களின் கால்கலிள் வேர்கள் முளைத்து விட்டன
அன்புடன்
சந்துரு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\\அப்புறம் பருவாயில்லை... புத்தகம் பருவாயில்லை பிழைகளும் பருவாயில்லை... என்று நீங்கள் ரசிக்கிற உதித்நாராயணத் தனமான பிழைகள் சில உள. பிரிண்டர்ஸ் டெவில் மாதிரி பிரிண்டர்ஸ் ஏஞ்சல்.//

:)பர்வாயில்லையே

KKPSK said...

I have seen you in Vijay TV "நீயா நானா". u r comments were so apt..many a times i was looking at ur smiling face. In ur row, there was one more gentle man sat in end(he also looked familiar! (with unshaven face!) may i know who is he? he also spoke very well! u writers also should participate in patti manram..or some equivalent form!

manjoorraja said...

ஆரம்பக்காலத்தில் நீங்கள் ஆனந்தவிகடனில் எழுதியப்போது படித்திருக்கிறேன். பிறகு எதுவும் படித்ததில்லை. ஆனால் உங்கள் ஆரம்பக்கால எழுத்திலேயே உங்களின் திறமை பளிச்சிட்டது. விரைவில் உங்கள் புத்தகங்களை வாங்கி படிக்கிறேன்.
வாழ்த்துகள்.