அன்பினால் விளைகிற அபத்தங்கள் மற்றும் தீங்குகள் எனக்குப் புதியதல்ல. என்றாலும் புதிதாக ஒன்று விளைகிற போதும் நேர்கிற போதும் அது புதிதேதான்.
இது அசந்தர்ப்பமாக நேர்ந்துவிட்ட (நான்கைந்து பதிவுகளுக்கு முந்தைய) ‘நேரில் பார்த்திராத கனவன்’ பதிவு பற்றிய நனவு நிலை விளக்கங்களும்... பின்னூட்டங்கள் (கண்டனங்கள்) ஆகியனவற்றுக்கான பதிலுமாகும்.
அந்தப் பதிவுக்காக சுரேகா அவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். அய்யா நெல்லைக் கண்ணன் அவர்கள் இதைப் படிக்கும்போது மேலும் சிலதை என் தரப்பில் சொல்லுதல் தகும் என்றே மேற்செல்கிறேன்.
அவரது பேச்சுக்காக காத தூரங்கள் பேருந்திலும் பைக்கிலும் பயணித்து பேச்சைக் கேட்கிற ரசிகன் நான். (தமிழ்ப் பேச்சாளர்கள் பற்றிய முந்தைய பதிவு ஒன்றில்... கடையிலே பொருளில்லை கஜானாவுக்காக அடித்துக்கொள்கிறார்கள் என காங்கிரசில் இருந்துகொண்டே காங்கிரசைக் கடிந்துகொண்டதைக் குறிப்பிட்டிருக்கிறேன்).
தவிரவும் அவரது சமகாலப் பிரக்ஞையும் பழைய கால ஞாபகங்களும் சம எடை வைத்த தராசுத்தட்டுகள். (தேர்தல் அறிக்கையை கதாநாயகி என கருணாநிதி வர்ணித்த காலத்தில் - கலைஞரின்து மேடைப் பண்பாடு பற்றிய விளாசல் ஒரு நல்ல உதாரணம். எனக்கு தினமலரில் படித்ததாக ஞாபகம்).
எனது பிசகு என்னவென்றால், எனது வலைப்பக்கத்தைப் படிக்கும் சம காலத்தவர் அவர் என்பதை மறந்துவிட்டேன். நிச்சயமாக இதை அவர் படிக்கப் போவதில்லை என்பதாகத்தான் என் நம்பகமும் புரிதலுமிருந்தது.
இது நிற்க,,, பதிவிடும் நாளுக்கு முன்னதாக நெல்லையிலிருந்து எழுத்தாளர் கணபதி அவர்கள் காலமானதைக் கேள்விப்பட்டிருந்தேன். துஷ்டியில் கலந்துகொள்ள முடியாத வருத்தமும் இருந்தது. ஒரு ஒளிவு மறைவு வேண்டாமே என இப்போது அதைக் குறிப்பிடுகிறேன்.
பதிவில் அதைக் குறிப்பிடாத நான் ஒரு கனவினை அப்படியே எழுதியிருக்க வேண்டியதில்லை. குறிப்பாக ஜீவியவந்தராக ஒருவர் இருக்கையில் அவரது மகனைப் பற்றி அவ்விதமாக எழுதினால்... படிக்கும் தந்தையின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை உணரத்தவறிவிட்டேன்.
பதிவின் கனவில் அல்லது கனவின் பதிவில் ‘கண்ணன் அவர்கள்’ வருந்துகிற விதமான தோற்றத்தில் சுரேஷ் இல்லை. மரத்தில் கிடந்த சால்வையை எனக்கு முன்னமே எடுக்கிற துடிப்புடன் இருந்தார். அப்புறமும் ‘மகா பாரதத்தைப் பற்றிப் பேச ஆட்கள் அழைத்தபோதும்’ அந்த ஆள் மாதிரியே கொண்டுபோய்யா என்றதும் அசல் நெல்லைக் குசும்புதான்.
காட்சி முடிவதற்கு முன்னாக என்னோடு சுரேஷ் தேநீர் அருந்திக்கொண்டு நலமாகத்தான் இருந்தார். நலமாகத்தான் இருப்பார். சுகாவைக் கனவில் பார்த்தபோதும் கண்ணனை நான் நினைத்தது ‘வார்த்தை’கள் படித்த ஆதிநாளில் கண்ணனின் மகன் சுகா எனக்கேட்டதும் ஏற்பட்ட புளகாங்கிதத்தின் மிச்சம்.
கனவில் ராஜேந்திர சோழனைப் பார்த்திருந்தாலும் ராஜராஜ சோழனை நினைத்துத்தான் இருப்பேன். தர்க்கங்களற்ற கனவில் சிலவேளை தர்க்கம் ஒளி(ர்)கிறது.
மதிப்பிற்குரிய அய்யா கண்ணன் அவர்களே! நீங்களும் சுகாவும் எனது பல மணி நேரங்களை இன்பமாக்கி அருளியிருக்கிறீர்கள்.
இனியும் ஒரு சுகமான நினைவுகளுடன் கனவில் வர தமிழ்த்தாய் அருளுவாள். அதை எழுதாமலிருக்க வாழ்க்கையும் இருப்பும் போதித்திருக்கிறது. இந்தப் பதிவிற்கு நீங்கள் பதிலிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் இது பற்றி எழுத நேரிடினும் அதன் பெயரும் அனு பந்தம் என்றே இருக்கும்.
கொஞ்சம் தமிழாலும் நிறைய நரம்புத் தளர்ச்சியாலும் இது விளைந்துவிட்டது.
11 comments:
உம்மை யாம் அறிவோம்!
நீங்கள் இப்போது சோகாப்பராக மாறிவிட்டிருப்பது வருத்தப்பட வைக்கிறது.
விடுங்கள் அடுத்த முறை அவர்கள் முறையே பாரத ரத்னா மற்றும் ஞான பீட பரிசு பெறுவதாகக் கனவு கண்டுவிடுங்கள் - எப்படியாவது!
.
உங்கள் நேர்மைக்கும் பண்புக்கும் மிக்க நன்றி க.சீ..!
கனவாகவே இருந்தாலும், இதுபோன்றவை மனம் வருத்தும் என்பதால், என் கருத்தையும் பதிவுசெய்தேன். மேலும் அய்யா அவர்களின் திறமையும் அன்பும் உங்களுக்கே தெரிந்திருக்கும்போது என் வார்த்தைகளுக்கு இடமில்லை.
உங்கள் நற்பண்பைக் காட்டியிருக்கிறீர்கள்.ஆனால், என்னிடம் மன்னிப்புக்கேட்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அது இன்னும் தர்மசங்கடமாக இருக்கிறது. எனினும் தங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி!
என் வார்த்தைகளில் ஏதேனும் கடுமை தென்பட்டு உங்களை வருத்தியிருந்தால் அதற்கு என்னை மன்னித்துக்கொள்ளவும்.
அன்புடன்..
நட்புடன்..
அன்புள்ள அய்யா வாழ்க தமிழுடன். ஒரு தந்தையின் உள்ளம் உணர்ந்த தங்களைப் போற்றுகின்றேன். பாருங்கள் உங்களின் சிறந்த திறந்த மடல் மனிதர்கள் இருக்கின்றனர் என்பதனை எனக்குச் சொல்கின்றது. ஒரு நண்பர் ஜெகநாதன் என்பவர் எழுதுகின்றார் நான் பாரத ரத்னா விருது பெறுவதாகவும் எனது மகன் விருது பெறுவதாகவும் கனவு காண் வேண்டும் என்று தங்களை வேண்டுகின்றார். விருதுகள் வாங்குகின்ற (ஆமாம் விருதுகள் வாங்கப் படுகின்ற நாடுதானே) கலை எல்லாம் எங்கள் குடும்பத்திற்குத் தெரியாது. அதில் விருப்பமும் கிடையாது. அய்யா எனக்கு தமிழகத்தின் இரண்டு பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் தர முன்வந்து மிகவும் வற்புறுத்தின. டாக்டர் பட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள மரியாதை தெரியாதவனா நான்.உங்களின் உயர்ந்த பண்பாடு அந்த நண்பருக்குப் பிடிக்கவில்லையே. இது தான் இன்றையத் தமிழ்நாடு. எனக்கு 67 வயதாகின்றது.மாதம் தோறும் ஏதேனும் வெளிநாட்டிற்குப் போய் வருகின்றேன். உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள் என் மீது காட்டுகின்ற அன்பு என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. உங்கள் கனவின் வாயிலாக என்மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கின்ற ஒரு நல்ல பிள்ளையை இறைவன் எனக்கு அடையாள்ம் காட்டியிருக்கின்றான். இறைவனுக்கு நன்றி. ஒரு தகப்பன் தானே அய்யா நான். உங்களை யாரேனும் இப்படி எழுதினாலும் நான் ஒரு தகப்பன் இடத்தில் இருந்து கண்டிப்பேன். அய்யா உண்மையின் மீது கொண்ட பற்றே எனது அரசியல் வாழ்க்கையை முடிக்கின்ற சூழலை ஏற்படுத்தியது. தொடர்ந்து எழுதுங்கள். வெல்லுங்கள். வையத் தலைமை கொள் என்கின்ற பாரதியின் வார்த்தையை உண்மையாக்க முயலுங்கள். திருநெல்வேலியில் கணபதி என்றால் பெரியவர் தி.க.சி.யின் மகன் தானே அய்யா. எனது வழி குறள் வழி. அன்பின் வழியது உயிர் நிலை என்றார் அந்தப் பெருமகன். அதையேதான் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்றான் பாரதி. அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே என்றார் திருமூலர். உடல் நலம் பேணுங்கள். அண்ணன் ஜெயகாந்தன் ஒரு முறை எழுதினார் தான் யாரிடமாவது மனம் புண்படும்படி நடந்ததை உணர்ந்தவுடன் அவர்கள் வீடு தேடிச் சென்று மன்னிப்புக் கோருவேன் என்று.சுகா அவரின் அன்பிற்கு உரியவன். ஜெகநாதன் சொன்னது போல கனவு கண்டீர்களெனில் நான் உங்கள் மீது வழக்குத் தொடுக்க வேண்டி வரும். பெரியவர்க்கு எனது வணக்கங்களையும் இளையவர்க்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும். என்றும் தங்கள் அன்பின் அடிமை நெல்லைக்கண்ணன்
ஒரு அனுமதி தர வேண்டும் நான் தங்களை எனது பிள்ளை என்று அழைக்க அனுமதிக்க வேண்டும் வாழ்க பல்லாண்டு நெ.க.
அன்பிற்கினிய அய்யா நெல்லைக் கண்ணன் அவர்களுக்கு,
தங்களை நேரில் சந்தித்திராவிட்டாலும் உங்களை நானறிவேன். தமிழை நேசிப்பவர்களும் நேர்மையை சுவாசிப்பவர்களும் உங்களை அறியாமல் இருக்க முடியுமா என்ன? என்னை நீங்கள் அறிவீர்கள் என்பதையும் நான் அறிவேன். க.சீ.சிவக்குமார் எந்த வம்புதும்புக்கும் போகாதவன்(நட்பின் மிகுதியால்தான் இந்த 'ன்'). யாருடைய மனத்தையும் அவன் வருத்தி நான் பார்த்ததில்லை. நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாக இருக்கும் அவனிடம். அது சிலசமயம் நக்கல்போல தோன்றிவிடும்; அது நகைச்சுவையின் ஒரு தன்மைதான். நண்பர் சுரேகாவிடம் இது சம்பந்தமாக க.சீ. மன்னிப்பு கேட்டுக்கொண்டதை சுரேகாவைப் போல நானுமே எதிர்பார்க்கவில்லை. என்றாலும் சிவக்குமார் என் நண்பன் என்பதில் எனக்கு பெருமிதமே ஏற்படுகிறது. மேலும், இணையத்தில் எழுதுபவர்கள் சிறிதளவாவது பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டுமென்பதை இந்தச் சிறிய உரையாடல்கள் உணர்த்துகின்றன.
ஜெகநாதன் என்கின்ற அன்பர் கூறியதையும் தாங்கள் தவறாக எடுத்துகொள்ள வேண்டியதில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அதுமட்டுமல்லாமல் அத்தகைய விருதுகளுக்கு தாங்கள் தகுதியானவர் என்பதில் எவருக்கும் ஐயம் இருக்க முடியாது. தகுதியானவர்களுக்கு விருதுகள் வழங்கினால் நல்ல வரவேற்பு கிடைப்பதை அணைவரும் தற்போது உணர்ந்துள்ளார்கள்.
தங்களை நேரில் சந்திக்கும் எண்ணம் பல நாட்களாக என் மனத்தில் இருக்கிறது. நேரம் வாய்க்க வேண்டுமே.
அய்யா, நீங்கள் நலமுடன் பல்லாண்டு வாழவேண்டும்.
அன்புடன்
சுதீர் செந்தில்
நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் கூறியதில்... அப்படியிப்படி விருதுக் கனவு கண்டால் வழக்குத் தொடர்வேன் என்று கூறியிருந்ததை ரொம்பவும் ரசித்தேன்.
சரியான அளவில் புரிந்துகொண்டது மிக நெகிழ்வாயிருக்கிறது. அவரது பாசத்துக்குக் கட்டுப்பட்ட மைந்தனாகவேயிருக்கிறேன்.
ayya..nellai kannan avrkale. sivavai avar nanparkal vikramathiththiyan,rameshvaiththiya,pontravarkalutan.veettukku azhaiththu virunthu kodunkal.athukku pinpu eluthunka unka madalai.
ayya..nellai kannan avrkale. sivavai avar nanparkal vikramathiththiyan,rameshvaiththiya,pontravarkalutan.veettukku azhaiththu virunthu kodunkal.athukku pinpu eluthunka unka madalai.
jaganathan sonnathu correct.siva sir, subramaniyansaami c.m.aanamaathiri,ampani aadumekkiramaathiri,vijaymallaiya viraku polakkura maathiri nirya kanavu kaanunkal. suntv.nijam pakuthikku matter kidaikkum. innoru
periyaar vanthaalum unkala maaththa mudiyaathu saami.
vivakaaramaana kanavu.
vivakaramana kanavu...
by...pallelakka balu..
Post a Comment